Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ -30

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம் -30

இவன் தாயை போல இல்லாமல் எப்படி பேதம் பார்க்காமல் நடந்து கொள்கிறான் என்ற எண்ணமே மனதை ஆக்கிரமிக்க...

அவளது பிரமித்த பார்வையை கண்டு அவள் அருகே வந்தவன் முகத்தின் முன்பு சொடக்கிட்டு 'என்னாயிற்று ?' என்று சைகையால் கேட்க ..ஒன்றுமில்லை என்பதாய் தலை அசைந்தாலும் இதழ்களோ மந்தகாச புன்னகையை சிந்தின .

குழந்தையை வேலுவிடம் கொடுத்தவன் இவளை உள்ளே அழைத்துக் கொண்டு வர.. "பசிக்குது ப்ரித்வி " என்றாள் வயிற்றை பிடித்துக் கொண்டு.

"வா.. என்ன இருக்குன்னு பாப்போம்.." என்று சமையலறைக்கு அழைத்து சென்றான். பொருட்களை பார்வையிட்டவன் "உப்புமா செய்யட்டுமா ?" என்றதும் அவள் முகம் மருந்து குடித்தது போல் ஆகியது.

"உப்புமாவா ? அப்படின்னா நான் இன்னிக்கு விரதம் ப்ரித்வி" என்று அவள் முறுக்கிக் கொள்ள ... சிரித்துக் கொண்டவன் குளிர்சாதன பெட்டியை ஆராய, தோசைக்கு அரைத்த மாவு இருந்தது.

மின்சாரம் இல்லாவிட்டாலும் ..அந்த குளிருக்கு அதிகம் புளிக்காமல் இருந்த மாவை எடுத்து தோசை ஊற்றியவன் அருகில் மேடை மேல் சம்மணமிட்டு தட்டோடு அமர்ந்தவளை பார்க்க மேலும் சிரிப்பு பொங்கியது.

"ஹேய் போய் டைனிங்கில் உட்கார்.. " என்றான் ப்ரித்வி

" வேண்டாம் ப்ரித்வி..இங்கேயே இருக்கேன். நீ வேற எதுக்கு இங்கெக்கும் டைனிங்குக்கும் நடக்கணும் ? இப்படியே சுட்டு சுட்டு குடுப்பியாம் ..நான் இப்படியே கடகடன்னு சாப்பிடுவேனாம் " என்று ராகம் இழுக்க ..

"உனக்கு சீக்கிரமா தோசை தட்டுக்கு வரணும் ..அதுக்கு இப்படி ஒரு சாக்கா ? பொழச்சுக்குவ"

மட மடவென்று ஆறு தோசைகளை பொடியுடன் சேர்த்து உள்ளே தள்ளியவள் "அப்படியே உனக்கும் சுட்டுடு ப்ரித்வி.." என்று ஆணையிட .. இவளை முறைத்தபடி நின்றான் ப்ரித்வி.

"என்னாச்சு ப்ரித்வி? மாவு காலியா ?" என்று மாவு பாத்திரத்தை எட்டி பார்க்க .. கொஞ்சம் போல இருந்தது.

"ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டே " என்றான் நக்கலாய்.

"சாரி ப்ரித்வி.. உனக்கும் இருக்குன்னு நினைச்சேன்" குரலில் சுருதி இறங்கிவிட சொன்னவள் .. அவன் இரு தோசைகள் ஊற்றியதும் மாவு காலியாவதை பார்த்ததும் 'அட மக்கே! இப்படியா பகாசூரி மாதிரி சாப்பிட்டு வைப்பே ? என்ன நினைச்சிருப்பான்? சரியான சாப்பாட்டு ராமின்னு நெனச்சிருப்பான்.' என்று மானசீகமாக தன்னை குட்டிக் கொண்டவள் "நான் வேணும்னா ..உனக்கு பிரெட் ஆம்லெட் போட்டு தரவா?" என்றாள் உற்சாகமாய்.

"அம்மா தாயே நேத்து நீ அடுப்பை பற்ற வச்ச அழகிலே நான் வாயடைச்சு போய்ட்டேன். உன்னோட கைமணத்தையெல்லாம் தாங்கற சக்தி எனக்கில்லைமா . " என்றவன் மடமடவென்று ரவையை வறுத்து உப்புமா கிண்ட .."பரவாயில்லை ப்ரித்வி.. நீ கிண்டுற உப்புமா கூட வாசமா இருக்கே ? எங்கே இதெல்லாம் கத்துகிட்ட ?"

" கத்துக்கணும்னு நெனச்சா எங்கே வேண்ணா கத்துக்கலாம்.எப்பவும் யாரையாவது டிபென்ட் பண்ணி இருக்க கூடாதுன்னு சிலது கத்துக்கிட்டேன். அதுவும் நாங்க பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ட்ரெக்கிங் ..கேம்பிங் எல்லாம் போவோம்.. அப்போ எல்லாரும் சேர்ந்து சமைச்சி சாப்பிடுவோம். அந்த அனுபவம்தான்."

"எங்கப்பாதான் ..படிப்புல மட்டும்தான் கவனம் இருக்கணும்னு வேற எதையுமே கத்துக்க விடமாட்டார் " என்றாள் சோகமாய்."ஆனால் அம்மா செய்றதே ரொம்ப நல்ல இருக்கும். அதனால் நாங்களும் அப்படியே விட்டுடுவோம் " என்று காரணம் சொல்ல ..
"உன் சோம்பேறித்தனத்துக்கு நல்லா சாக்கு சொல்றே " என்று அவளை வம்பிழுத்தவன் "அப்போ மறுவீட்டுக்கு வரும்போது மாமியார் சமையலை ஒரு பிடி பிடிக்கலாம்னு சொல்லு " என்றவன் "என்னது ?" என்று அவள் அலெர்ட்டாக "எங்கண்ணனை சொன்னேன்மா " என்று மழுப்பினான்.

'எமகாதகி ' என்று மனதுக்குள் செல்லமாய் வைது கொண்டான் தன்னவளை.
பாதி உப்புமாவையும் இரு தோசைகளையும் ஒரு தட்டில் வைத்தவன் வாசல் அருகே வந்து "வேலு " என்று குரல் கொடுக்க .. ஓடிவந்து முன்னின்றவனிடம் உணவு பாத்திரத்தை கொடுத்தான் "உனக்கு கொஞ்சம் உப்புமாவும்.. குழந்தைக்கு தோசையும் இருக்கு . சாப்பிடுங்க " என்றான்வஜ்ரவேலு சற்றே தயங்கியவன் "நீங்க எதுக்குங்க செஞ்சீங்க .. நானும் பிள்ளையும் ஒரு கஞ்சியை காச்சி குடிச்சுப்பிட்டு படுத்துக்கிடுவோமுங்க. நீங்க சாப்பிடுங்க " என்று சொல்ல "உங்களுக்கும் சேர்த்து தான் செஞ்சேன். வாங்கிக்கோ " என்று கட்டளையாய் சொல்லி அவன் கையில் திணித்தான்.

உள்ளே வந்து அவன் அமர்ந்து உண்டுமுடிக்கும் வரை அவன் மேலிருந்து அவள் பார்வையை திருப்பவில்லை. அதை உணர்ந்திருந்தாலும் உணராததுபோல் உண்டுகொண்டிருந்தவனுக்குள் ஒரு சந்தோஷ ஊற்று.

உண்டு முடித்தவன் "நான் கொஞ்சம் ஃபாக்டரி வரை போய் வர்றேன் சம்யு" என்று கிளம்ப .. "நானும் வரேன் ப்ரித்வி ' என்று அடம் பிடித்தாள் சம்யுக்தா.

அவளுக்கு அவனோடு இருக்கும் நொடிகள் ஒரு உற்சாகத்தை கொடுக்க .. அவற்றை தவறவிட அவளுக்கு விருப்பமில்லை.

"வேண்டாம் . வழியெல்லாம் மரமெல்லாம் விழுந்து கிடக்குன்னு சொன்னாங்க . நீ பத்திரமா வீட்டில இரு " எனவும் கெஞ்சலாய் பார்த்தவள்.."ப்ளீஸ் ப்ளீஸ் " எனவும் மறுக்க முடியவில்லை அவனால்.

"பரவாயில்லையே உனக்கு கெஞ்ச எல்லாம் கூட தெரியுமா ?" என்று லேசாக அவளது தலையில் தட்டியவன் "சரி வா" என்றுவிட "ஹே.." என்று சிறுபிள்ளையாய் குதித்தவள் தன்வரிப்புலி ஸ்வட்டரை எடுத்து அணிந்து கொண்டு கிளம்பிவிட்டாள்.

"ஹேய் யாராவது புலி வந்திருச்சின்னு நெனச்சி துரத்த போறாங்க " என்று நக்கலடித்தான்.

"ஹீ '" என்று பற்கள் அனைத்தையும் காட்டியவள் “சோக்கு.... சிரிச்சுட்டேன் " என்று அழகு காண்பிக்க ..

"சொல்லிட்டு செய்மா ..அத்தான் பயந்துட்டேன்ல" எனவும் அவன் தோளில் ஒரு அடி வைத்தாள் சம்யு.

இப்படியாக வழக்கடித்து இருவரும் கிளம்ப ..போகும் வழியெல்லாம் பாதை சிதைந்திருந்தது பல இடங்களில். சில இடங்களில் மரங்கள் சரிந்து கிடைக்க .. இரண்டு கிலோமீட்டர் நடந்ததும் தேயிலை தொழிற்சாலை கண்ணுக்கு தெரிய .. சில பெண்களும் குழந்தைகளும் இருக்க ..ஆண்கள் எல்லாம் தங்கள் வீடு வாசல் நிலை குறித்து அறிந்து வர சென்றிருந்தனர்.

ஒரு மூதாட்டி வந்து "நீங்க குடுத்தனுப்பின அரிசி பருப்புல தான் எல்லாரும் பசியாறியிருக்கோம்.. உங்க அப்பாவோட நல்ல மனசு உங்களுக்கு அப்படியே இருக்கு தம்பி" என்று வாழ்த்தி சென்றார்.

தொழிற்சாலை நல்ல பாதுகாப்புடன் கட்டப்பட்டிருந்தது. வெளிப்புறம் இருந்த ஒரு ஷெட் மட்டும் சற்று சேதப்பட்டிருக்க .. மற்றபடி நிமிர்ந்து நின்றது.

"உங்க வீடெல்லாம் சரியாகும் வரை தேவைப்பட்டால் இங்கே தங்கிக்கோங்க . " என்றான் ப்ரித்வி.

அங்கு மீட்டிங் நடக்கும் ஹால் திறந்து விடப்பட்டிருக்க அங்கு தான் எல்லாரும் தங்கியிருந்தனர்.

அவன் குடும்ப தொழிலில் இன்னும் பொறுப்பெடுத்திருக்காவிட்டாலும் அவனுக்கு எல்லா நிறுவனங்களையும் பற்றிய அடிப்படை அறிவு இருந்தது. பொழுது போக்குக்காக ஊட்டி வந்தாலும் கட்டாயம் தொழிற்சாலைக்கு வந்து அனைத்தையும் பார்வையிட்டு செல்வான்.

சம்யுவுக்கும் சுற்றி காண்பிக்க .. அவளும் ஆர்வமாக பார்த்தாள்.

இருவரும் அங்குள்ள நிலவரம் தெரிந்து கொண்டிருக்க .. இவளது மொபைல் ஒலித்தது.

இப்போது சற்று சிக்னல் நன்றாகவே வந்திருக்க ..அழைத்தது இவளது தந்தை தான்.

" அப்பா "

" சம்யும்மா . எப்படி இருக்க சேஃபா இருக்கியா ?"

" இங்கே ப்ரித்வி அத்தான் வீட்டில தங்கியிருக்கோம்ப்பா . மழையினால் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கு. அதனால வெளிய வரமுடியாமல் மாட்டிக்கிட்டிருக்கோம். மத்தபடி வேறெதுவும் பிரச்சனையில்லை. சேஃபா தான் இருக்கோம்"

" நாளைக்குள்ள சாலைகள் சரி பண்ணிடுவாங்க . அதுக்கப்புறம் சென்னை வந்துடுறோம் . அம்மா எப்படி இருக்காங்கப்பா ?"

" நேத்தெல்லாம் புலம்பல் தான். உன் போனுக்கு தொடர்பு கிடைக்கலையே. அப்புறம் உன் கூட வந்த ஷாந்தினி போன் பண்ணாங்க. நீங்க ரெண்டு பெரும் அங்கே மாட்டிக்கிட்டிங்கன்னு சொன்னாங்க . அதை கேட்டதும் இன்னும் டென்சன். . ப்ரித்வி தம்பி கூட இருக்கறதால தான் தெம்பா இருக்கா . அவகிட்ட பேசு." என்று போனை தனுஜாவிடம் தந்தார்.

தாய்க்கே உரிய தவிப்பு இருந்தாலும் அதை அடக்கிக் கொண்டு " என்னடி ? பத்திரமா தானே இருக்கீங்க ?' என்று வினவ..

"பத்திரமா இருக்கோம்மா " என்ற மகளின் குரலே அவள் உற்சாகத்தை சொல்ல, “ப்ரித்வியிடம் போனை கொடு " என்றார்.

"சொல்லுங்க அத்தை " என்றவனிடம் சில வார்த்தைகள் சம்பிரதாயமாக விசாரித்தவர் " ரொம்ப தேங்க்ஸ் " எனவும் " எதுக்கு அத்தை தேங்க்ஸ் எல்லாம் ? நம்ம தான் நெருங்கிய உறவாகிவிட்டோம் .இனி நன்றியெல்லாம் தேவையா ?"

"கட்டாயம் தேவை " என்றவர்" புயலை விட அதிகமா என் பொண்ணு உங்களை சுழட்டியடிச்சிருப்பா... அதையெல்லாம் கண்டுக்காம உதவி செஞ்சிருக்கீங்களே ..அதுக்குதான் " என்று கூற .. போன் ஸ்பீக்கரில் தான் இருந்தது.

"அம்மா " என்று பல்லை கடித்தாள் சம்யு.
 
Top