Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ -33

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம் -33

கோகுலம் இல்லம்!
அந்த பெரிய ஹாலில் இரு குடும்பத்தினரும் குழுமியிருக்க ... வேலையாட்கள் அனைவரும் வெளியே அனுப்பப்பட்டிருந்தனர்.

பெற்றோர் இருவரும் எதிரெதிரே அமர்ந்திருக்க .. பிள்ளைகள் இருபுறமும் நின்றிருக்க .. அம்ரிதாவும் ரஞ்சித்தும் ஒருவரை ஒருவர் முறைத்தபடி இருக்க ..சம்யுவும் ப்ரித்வியும் காதலும் கவலையும் மாறி மாறி மனதில் நிலைகொள்ள , என்னாகுமோ என்று தவித்தபடி நின்றிருந்தனர்.

சத்யாவோ மனம் குதூகலிக்க அமர்ந்திருக்க , நவநீயோ மிகுந்த மனவருத்தத்தில் இருந்தார்..

தாயிடம் எதுவும் சொல்லிக்கொள்ள வில்லை என்றாலும் அவன் கிளம்பும் முன்னே ட்ராவல் ஏஜெண்டிடமிருந்து தகவல் வந்துவிட்டது சத்யபாமாவிற்கு ,ரஞ்சித் அமேரிக்கா செல்கிறான் என்று.
அதை கேட்டதும் சத்யபாமாவிற்கு உள்ளுக்குள் கோபமும் ஆத்திரமும் பொங்கியது.
மகனை விட வேலை முக்கியம் என்று அம்ரிதா போனது, ஏற்கனவே அவர் மனதில் இருந்த துவேஷத்தை அதிகரித்தது.

அதையேல்லாம் பொருட்படுத்தாமல் இப்போது மகனும் பின்னோடு போக .. கோபம் எல்லை மீறி விட்டது.
பல்லை கடித்தபடி பொறுத்திருந்தவருக்கு திரும்பி வருகையில் கூம்பிப் போயிருந்த மகனின் முகம் ஏதோ ஒரு வகையில் ஆறுதல் அளித்தது.

பெரும்பாலான தாய்மார்களின் பிரச்சனை இதுதானே! மகன் மீது மலையளவு பாசம் இருப்பினும் அதை பங்கு போட்டுக்கொள்ள ஒரு பெண் வந்துவிட்டாலோ எப்படிதான் அது கோபமாக மாறுமோ தெரியாது.

மகனின் சோகமான முகம் ஏதோ சரியில்லை என்று உணர்த்தினாலும் .. அவனிடம் பதிலில்லாமல் போகவே அமைதியாக ஹாலில் அமர்ந்திருந்தார்.

சின்ன மகனும் அந்நேரம் ஊட்டி சென்றிருக்க கையை பிசைந்து அமர்ந்திருந்தவருக்கு ..மகனின் சோர்ந்த முகம் ஒருபுறம் வருத்தத்தை தந்தாலும் இன்னொருபுறம் தன் எண்ணம் நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கையும் தோன்றியது .

ரஞ்சித் அமெரிக்காவில் இருந்து வந்தவன் ஒன்றும் சொல்லாமல் அறைக்குள் சென்று அடைந்து கொண்டான் .
சற்று நேரம் சென்று வந்த இளைய மகன் சொன்ன செய்தியில் அவர் உள்ளம் குளிர்ந்துவிட்டது .

மகனும் அம்ரிதாவும் பிரிந்து விட்டார்களா ?

உடனே தன் மகளுக்கு அழைத்தவர் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள .. நவநீயோ மிகுந்த மனவருத்தத்தில் ஆழ்ந்தார்.

தனுஜாவிற்கு அம்ரிதாவும் ரஞ்சித்தும் சரியாக பேசிக்கொள்வதில்லை என்பதில் இருந்தே ..இப்படி ஏதும் நடந்து விடுமோ என்ற பயம் உள்ளுக்குள் இருக்க, அதன் படியே நடந்துவிடவும் .. என்ன செய்வது என்று புரியாத நிலை!

மோகனோ கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தார். என் பெண்ணை எப்படி வேண்டாமென்று சொல்வார்கள்.. அதுவும் நிச்சயம் செய்துவிட்டு.. என்று அவர் ஒரு புறம் புகைந்து கொண்டிருக்க ..அம்ரிதாவும் ரஞ்சித்தும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க கூட விரும்பாமல் முகம் திருப்பி நின்றனர்.

அனைவரும் மெளனமாக ஒருவரை ஒருவர் தயக்கமாய் பார்த்து கொள்ள .. நவநீ மெல்ல பேச்சை ஆரம்பித்தார்.

"அம்மா அம்ரிதா. எதற்கு இந்த முடிவு? உங்களுக்குள்ள என்னதான் பிரச்சினை ?"

அவள் மௌனமாகவே நிற்கவும் .. ரஞ்சித்தை பார்த்து கேட்டார்."நீயாவது சொல்லுப்பா "

"எங்களுக்குள்ள ஒத்து வரலைப்பா "

" மொட்டையா ஒத்து வரலைன்னா எப்படி ?'

இதற்குள் இடையிட்ட மோகன் .."வேறெப்படி சொல்வாரு? என் பொண்ணு இவரை விட நல்ல பேர் வாங்கினது இவருக்கு பிடிக்கலை. “

"என்னங்க இது ? சின்ன புள்ளைங்க விளையாட்டா? என்னை விட நீ அதிக பொம்மை வாங்கிட்ட .. என் பொம்மையை ஒடைச்சிட்டேன்னு சண்டை போட ?"

“அவ ஆன்சைட் போகும்போதே இவருக்கு பொறாமைதான்" என்று மோகன் கூறியதும் வெகுண்டெழுந்தான் ரஞ்சித்.

"பொறாமையா? என்ன பேசறீங்க ? அவ என்னை விட்டு பிரிஞ்சி இருக்க போறாளேங்கற ஆதங்கத்தில் தான் போக வேண்டாம்னு சொன்னேன். அதோட கல்யாண தேதி தள்ளி போவதொன்றும் சின்ன விஷயம் இல்லையே"

"அவ என்ன ஆன்சைட்டா போனா ? அங்கே போய் வேற ஒருத்தன் கூட ஊரை தானே சுத்திக்கிட்டு இருந்தா? உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா அதெல்லாம் முடியாதே" என்று சத்யா கூற.. "அம்மா " என்று ப்ரித்வியும் "அத்தை " என்று சம்யுவும் ஒரு சேர அழைத்தனர் .

தனுஜாவுக்கோ மனம் பதறியது. அருமை பெருமையாய் வளர்த்த பிள்ளைகள் இப்படி பேச்சு கேட்கும்படி ஆனதே என்று.

ரஞ்சித் அமைதியாக தலைகுனிந்து அமர்ந்திருக்க , அம்ரிதாவோ அழுத்தமான முகத்தோடு ரஞ்சித்தை உற்று நோக்கினாள்

சத்யாவோ சம்யுவை நோக்கியவர் " அத்தையா? என்னை அப்படி கூப்பிடுற தகுதி கூட உனக்கும் உங்க அக்காவுக்கும் கெடையாது. ஏதோ என் பையன் தெரியாமல் ஆசைப்பட்டுட்டான்.. அதனால இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன் . எங்களுக்கு ஈகுவலான குடும்பமா இருந்தா இந்த மானம் மரியாதை பத்தியெல்லாம் தெரியும். கோகுலம் குரூப்ஸ் மருமக வேற கம்பெனியில வேலை பாக்கிறதே எங்களுக்கு அவமானம் . நாலு கம்பெனியாவது இருக்க குடும்பத்தில தான் பொண்ணு தேடவே செய்வோம். இவ அதிர்ஷ்டம் ..என் பையன் கண்ணுல பட்டுட்டா “

"அம்மா ..அதிர்ஷ்டமாவது ஒண்ணாவது? பிளான் பண்ணி தான் அண்ணனை மயக்கியிருப்பாள் . பெரிய பணக்கார குடும்பம்.. ஜமீன் பரம்பரை .. இங்க மருமகளா வந்துட்டா குடுமபமே செட்டில்டு தான் ..காலத்துக்கும் கஷ்டம் இல்லை. இப்படியெல்லாம் யோசிச்சு நல்லா ஸ்கெட்சு போட்டு அண்ணனை கவுத்திருப்பாங்க. எந்த குடும்பத்திலயாவது பொண்ணு காதலிக்கிறான்னா .. உடனே வா வா கட்டி வைக்கிறேன்னு வருவார்களா ? இவங்க அதுக்குன்னே காத்துக்கிட்டு இருந்திருக்காங்க . வலையை விரிச்சாங்க .. வசமா அண்ணன் சிக்கிட்டான். இப்பவாவது தெளிஞ்சிட்டானேன்னு சந்தோஷப்படுங்க " என்று ஸ்ரீ கூற

"சத்யா ..ஸ்ரீ .. நீங்க பேசுறது கொஞ்சம் கூட சரியில்லை. ஒரு பெண்ணை பற்றி இவ்வளவு கீழ்த்தரமாக யோசிக்கவும் பேசவும் எப்படி உங்களால முடியுது ?" நவநீ கோபத்தோடு கேட்டார்.

அனைவருக்குமே சத்யா இப்படி பேசியது அதிர்ச்சிதான். அவர் அப்படி நினைப்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான் என்றாலும் நேரடியாக இப்படி பேசுவார் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை சம்யு..

சம்யு கோபத்தில் குமுறிக் கொண்டிருக்க ..ப்ரித்வி பார்வையாலேயே அவளை கெஞ்ச .. கை முஷ்டிகளை இறுக்க மூடியபடி பொறுமை காத்தாள் சம்யு .

இப்போது தான் பேசாவிட்டால் தன் வாழ்வையும் சேர்த்தே அன்னை கெடுத்து விடுவார் என்பது தெளிவாக புரிந்ததுப்ரித்விக்கு

"அம்மா .. எதுக்காக இப்போ இப்படி பேசுறீங்க ? அண்ணி வெளிநாட்டில வேலை செய்யற வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டாங்க . அதுக்காக ஒரு மூணு மாசம் கல்யாணத்தை தள்ளி போட வேண்டியதா போச்சு . அண்ணா.. இதெல்லாம் பெரிய விஷயமேயில்லை.. பெரிய விஷயமா நினைக்கிற அளவுக்கு நீ பிற்போக்கு வாதியுமில்லை. இதெல்லாம் வாழ்க்கையில் ரொம்ப சின்ன விஷயம் .. இதை விட பெரிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கு .. இன்னிக்கே எல்லா விஷயத்தையும் பேச வேண்டாம் ...அண்ணி நீங்களும் கொஞ்சம் யோசிங்க. கொஞ்ச நாள் கழிச்சு பேசுவோம் "

"சாரி ப்ரித்வி . உங்கம்மாவும் தங்கையும் இவ்வளவு பேசின பிறகு இனியும் என்ன யோசிக்க ? வெரி சாரி " என்றபடி அம்ரிதா அங்கிருந்து வெளியேறினாள்.

மோகனோ கடும் சீற்றத்தில் இருந்தார். தான் கண்ணுக்கு கண்ணாக வளர்த்த பெண்ணை எப்படி சுலபமாக குற்றம் சாட்டி விட்டார்கள் ? கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் அவளை கேவலப்படுத்தி விட்டார்களே.. என்ற கோபத்தோடு " இதுக்கெல்லாம் ஒரு நாள் நல்லா அனுபவிப்பீங்க ! " என்று சாபமிட்டபடி வெளியேறினார்.

தனுஜாவோ மிகவும் மனம் நொந்திருந்தார்.. இதற்க்காகத்தானே அவர் முதலில் இருந்தே பயந்தது. அது இன்று நடந்தே விட்டது.

வேறு எதுவும் பேசவில்லை அவர் .. ரஞ்சித்தை நேராக பார்த்தவர் " உங்களை மட்டுந்தான் என் பொண்ணு நம்பினாள். அவள் செய்தது சரியா தப்பா தெரியாது. ஆனால் எது வந்தாலும் நீங்க கூட இருப்பீங்கன்னு நினைத்தாள்..நம்பினாள்.. அந்த நம்பிக்கையை கொன்னுட்டீங்க " என்றவர் சம்யுவை அழைத்துக் கொண்டு வெளியேற .. பின்னோடு ப்ரித்வியும் நவனீயும் வந்து சமாதானப் படுத்த முயல ..மோகன் எதையும் காதில் வாங்கி கொள்ளும் நிலையில் இல்லை.
 
Top