Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் - 45 ( நிறைவு )

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம் -45
ன் மகனையும் மருமகளையும் தூர நின்று ரசித்த சத்யபாமாவுக்கு ..தான் கணவரிடம் மன்னிப்பு கேட்ட தினம் நினைவு வந்தது.

தாய் தந்தை இருவரும் இணக்கமாக பேசுவதை கண்டு அவர்களது சண்டை முடிவுக்கு வந்துவிட்டது என்று புரிந்து கொண்ட ப்ரித்வி தன் பெற்றோர் அருகே வந்து அமர்ந்தான்.

"நானே அம்ரிதா வீட்டில் போய் அவங்க அப்பா அம்மா கிட்ட பேசறேங்க .." என்று சத்யபாமா கூறவும் நவநீ மறுத்துவிட்டார்.

"வேண்டாம் சத்யா .. மோகன் ரொம்ப கோபமா இருக்கார். அதுக்கு காரணம் நாம்தான். இப்போ நீ நேர்ல போய் பேசினாலும் அதுக்கு மதிப்பிருக்காது. அவர் மேல மேல கோபப்படதான் செய்வார்.. பிள்ளைகள் ரெண்டு பேரும் மனசு மாறி வரணும். அவங்களுக்குள்ள மொதல்ல ஒரு தெளிவு ஏற்டபடட்டும். அதுவரைக்கும் பொறுத்து இரு."

"அப்பா சொல்றது சரிதான் மா .அத்தை புரிஞ்சிப்பாங்க ஆனால் இப்போ நீங்க போய் மன்னிப்பே கேட்டாலும் வீம்புக்காகவே மாமா ஒத்துக்க மாட்டார். அதனால் அவரை வேற விதமா தான் டீல் பண்ணனும். அவர் பொண்ணு சொன்னால் மட்டும் தான் அவர் ஒத்துப்பார். அது மட்டுமில்லை.. உங்களாலே அவங்களுக்குள்ள சண்டைன்னு இல்லை.. வெவ்வேறு விஷயங்களால் ரெண்டு பேருக்கும் நிறைய தவறான புரிதல்கள் இருக்கு.அதை நீங்க பெருசு படுத்திட்டீங்க அவ்வளவு தான். அதை அவங்க ரெண்டு பேரும் சரி செஞ்சிக்கணும் முதல்ல. அதனால நீங்க எதுவும் அவங்க கிட்ட போய் பேச வேண்டாம்.. ஆனால் அத்தையையும் மாமாவையும் மீட் பண்ற நேரம் வரும்போது தன்மையா .. உங்க தவறை சரி செய்யற மாதிரி பேசுங்க போதும் " என்று விட்டான்

சத்தியபாமாவுக்கு கண்ணை கரித்துக் கொண்டு வந்தது.

தன் கணவனும் பிள்ளைகளும் எப்படி தன்னை விட்டுக் கொடுக்காமல் இருக்கின்றனர். தான் மட்டும் வெகு சுயநலமாய் இருந்து விட்டோமே என்றிருந்தது.

"சரிப்பா.. உமைக்கிட்ட வேற இப்போ ரஞ்சித்தை கல்யாணம் பண்ண சொல்லி ஆசை காட்டிட்டேனே . அவளுக்கும் உங்க மங்கை அத்தைக்கும் என்ன பதில் சொல்றது?" என்று கலங்க..

"அம்மா ..அவள் மனசுல ஏற்கனவே வேற ஒரு ஆண் இருக்கான். அவனை பத்தி பேசி அவங்க வீட்டிலேயும் சம்மதம் வாங்கியாச்சு. அவங்களுக்கான நிச்சய தேதியும் குறிச்சாச்சு. நான் சொன்னதுக்காக தான் அவளும் அத்தையும் ஒத்துக்கிட்ட மாதிரி நடிச்சாங்க.."

"என்ன சொல்றே ப்ரித்வி?"

"ஆமாம் அம்மா.. உமை அவ கூட படிக்கிற ஒரு டாக்டரை தான் லவ் பண்ரா ."

" அப்படியா? இது தெரியாமல் நான் வேறு ரஞ்சித்துக்கு அவளை கல்யாணம் பேசறேன்னு முட்டாள்தனம் செஞ்சிட்டேனே. அந்த பையன் வீட்டில எதுவும் தப்பா நெனச்சுடலையே !"

"அதெல்லாம் இல்லம்மா .. அடுத்த வாரமே அவங்க ரெண்டு பேருக்கும் நிச்சயம் பண்ணலாம்னு பையன் வீட்டில கேக்குறாங்க.. இப்போ உங்களுக்கும் விஷயம் தெரிஞ்சிட்டதால உமையும் அதுக்கு ஒத்துக்குவான்னு நெனைக்கிறேன். அப்பா! உங்ககிட்ட இன்னும் தன் வருங்கால கணவனை பத்தி சொல்ல முடியலைன்னு தான் அவளுக்கு வருத்தம்.. அவளுக்கு போன் பண்றேன்.. முதல்ல அவளோட பேசுங்க " எனவும் நவநீ உமையோடு பேசினார். பின் அவள் காதலிக்கும் பையனோடும் பேச.. அவருக்கு ரொம்பவும் திருப்திதான்.

சத்யாவும் மங்கையிடமும் உமையிடமும் மன்னிப்பு கேட்க.. அவர்களுக்கோ ஒரே ஆச்சரியம்.. அத்தையிடம் இத்தனை வருடம் இல்லாத மாற்றமாயிற்றே !

அதன் எதிரொலி தான் மோகனும் தனுஜாவும் விசேஷத்துக்கு என்று வந்த போது சத்யபாமா மலர்ந்த முகத்துடன் வரவேற்றது.

மோஹனால் நம்பவே முடியவில்லை. அம்ரு ரஞ்சித்தின் நிச்சயத்தன்று கூட வேண்டா வெறுப்பாக பேசியவர் , இன்று முகம் மலர வரவேற்பது என்ன காரணம் என்று தெரியவில்லை.

ஒரு வேளை தான் விரும்பியபடி தன் மகனுக்கு வேறு பெண்ணை மணமுடிக்க போகும் சந்தோஷமா என்று நினைத்திருக்க , "வாங்க சம்மந்தி " என்று இரு கரம் கூப்பி சத்யாவும் நவனீயும் அழைக்க.. சம்யுவை முன்னிட்டு தான் அழைக்கிறீர்களோ என்று நினைத்தவராய் லேசாய் தலையசைத்து வைத்தார்.

சத்யபாமா மன்னிப்பு கேட்க வாயெடுக்க .. நவநீ விடவில்லை. இத்தனை நாட்கள் மனைவியை விட்டு கொடுக்காதவர்.. இப்போது சம்மந்தி குடும்பத்தின் முன் விட்டு கொடுத்து விடுவாரா என்ன ?

"என்னென்னவோ நடந்து போச்சுங்க.. அதெல்லாம் மனசுல வச்சுக்காதீங்க. " என்று நவநீ கூற, தனுஜாவுக்கும் மோகனுக்கும் எதுவும் புரியவில்லை.

ப்ரித்வி இவர்களிடம் வந்தவன் " அத்தை மாமா ! இப்போ நடக்க இருக்கும் நிச்சயம் எங்க உமைக்கும் அவ காதலிக்கிற பையனுக்கும் தான் "

தனுஜா "அப்போ ரஞ்சித் ?"

"அவனா? அவன் உங்க பொண்ணு ஃபாரின் போறதா நெனைச்சி ஏர்போர்ட்டுக்கு தொறத்திட்டு போயிருக்கான்"

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள.." இப்போ உங்க பொண்ணு .. இந்த நிச்சயத்தை நிறுத்தறதுக்கு ஓடி வருவாங்க பாருங்க" என்று சொல்லவும் அம்ரு வாசலில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

வாயடைத்து போனவர்தான் மோகன்... எப்படியோ தன் பெண்ணின் வாழ்வு சீராகி விட்டதே என்ற நிம்மதி அவர் முகத்தில்.

ஒரு வழியாக அம்ரிதாவும் ரஞ்சித்தும் பேசி சமாதானமாகிவிட ...

சம்யுக்தாவும் ப்ரித்வியும் அதோடு விடவில்லை... "அத்தை மாமா ! இவங்களை இப்படியே விட்டால் .. மறுபடி சண்டை போட்டுக்குவாங்க.. அதனால் இன்னிக்கே இவங்க கல்யாணத்தை நடத்திவிட்டால் நல்லாயிருக்கும்னு எங்க அம்மாவும் அப்பாவும் ஆசைப்படறாங்க. நீங்க என்ன சொல்றீங்க ?"

மோகன் தனுஜா இருவரிடமும் தடுமாற்றம் " கல்யாணம் நல்ல கிரேண்டா பண்ணனும்னு உங்கம்மா தானே விருப்பப்பட்டாங்க"

"அதெல்லாம் எதுக்கு ? அவங்க ரெண்டு பெரும் சந்தோஷமா இருக்கறது தான் முக்கியம் ." என்று சத்யா கூறவும் .. தனுஜாவுக்கு பெரும் ஆச்சரியம்..

"அம்மா .. ரொம்ப யோசிக்காதீங்க. தாத்தா பாட்டியெல்லாம் கூட வந்தாச்சு " என்று சம்யு வாசலை காண்பிக்க ... எல்லோரும் முன்னேற்பாடோடு இருப்பது புரிந்தது தனுஜாவுக்கு. உமையின் நிச்சயம் என்பதால் ஏற்கனவே ரஞ்சித்தின் நெருங்கிய உறவினர்கள் அங்கே இருக்க.. மடமடவென வேலைகள் நடந்தன .
முகூர்த்த புடவை தாலி எல்லாம் தயாராக சத்யபாமா வாங்கி வைத்திருக்க .. காயத்ரி அம்ருவை அழைத்து சென்று தயாராக்கினாள். சித்து ரஞ்சித்தின் பட்டு வேஷ்டி சட்டையை எடுத்து வர .. ஒரு புரோகிதர் வந்து யாகம் வளர்க்க, அனைத்து சம்ப்ரதாயங்களோடும்.. அம்ரிதா ரஞ்சித் திருமணம் முறைப்படி நடந்தது.

தன்னவளின் கழுத்தில் மங்கல நாணை பூட்டியபின்னர் அக்னியை வலம் வந்து அவள் கரம் பற்றியவன்.. ஜோடியாக பெற்றோர் காலில் பணிய .." எல்லா செல்வங்களும் பெற்று நீடூழி வாழுங்கள் " என்று பெரியவர்கள் வாழ்த்தினர் .

மோகனோ "சீக்கிரம் ரெண்டு ஜோடிகளுக்கு ஒரு ரிசப்ஷன் வெச்சுடுவோம் " என்று கூற , சம்யு ப்ரித்வி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள், சாஷ்டாங்கமாக பெரியவர்கள் காலில் விழுந்து விட ..

"கல்யாணத்தன்னிக்கு ஆசீர்வாதம் வாங்கலைன்னு இப்போ வாங்குறீங்களா? எழுந்திருங்க " என்று நவநீ கூறி இருவரையும் எழுப்பி விட "எங்களை மன்னிச்சிடுங்க " என்றனர் இருவரும் கோரஸாக.

தன் பெண்ணை உற்று நோக்கிய தனுஜாவோ "ஏய் சம்யு! என்னடி தில்லுமுல்லு பண்ணி வச்சிருக்க ? உன் முழியே சரியில்லையே " என்று தன் பெண்ணை அதட்ட.." அதும்மா .. " என்று இழுத்தவள்.."எங்களுக்கு இன்னும் கல்யாணமே ஆகலை.." என்று மெல்லிய குரலில் தலை குனிந்தபடி சொல்ல.. அனைவரும் வாய் பிளந்து நின்றுவிட்டனர்.
"அடிப்பாவி .. தனியா யார் பிளெஸ்ஸிங்க்ஸும் இல்லாமல் கல்யாணம் பண்ண வேண்டியதா போச்சுன்னு அப்படி கண்ணீர் விட்ட .. நானும் என் பொண்ணு பொய் சொல்ல மாட்டாளேன்னு நெனைச்சு நம்பினேனே “என்றார் தனுஜா.


"நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு சொன்னதால் தான் உரிமையா ஒருத்தர் வீட்டுக்கு ஒருத்தர் போக முடிஞ்சுது. அக்காகிட்ட அத்தான் பத்தியும் , அத்தான் கிட்ட இவளை பத்தியும் பேச முடிஞ்சுது. இல்லைனால் ரெண்டு குடும்பமும் ஒருத்தர் முகத்தில ஒருத்தர் முழிக்க கூட விருப்பப்பட்டிருக்க மாட்டோம் . அதுக்காகத்தான் இப்படி பொய் சொன்னோம் ம்மா. "

இதுகளுக்கு இருக்க தைரியத்தை பாரேன் .. என்பதாக தான் அனைவரின் எண்ணமும் இருந்தது.

சம்யுவின் காதை திருகிய தனுஜா "நெனச்சேண்டி.. அன்னிக்கு தாலி எங்கேன்னு கேக்கும்போதே திரு திரு ன்னு முழிச்சிகிட்டு நின்ன ..அப்பவே எனக்கு சந்தேகம் தான் " என்றார் . கரங்கள் மகளின் காதை திருகினாலும் பார்வையோ பெருமையாய் தன் பெண்ணை பார்த்தது..எப்படியோ தக்கி முக்கி அக்காவின் வாழ்வை சீராக்கி விட்டாளே!

"அத்தை .. நீங்க ரொம்ப புத்திசாலின்னு தெரியும்..ஆனால் எப்படி எங்க மாமா கிட்ட சிக்குனீங்க ? " என்று ப்ரித்வி வாரவும், தனுஜாவின் முகத்தில் வெட்கம் தெரிய..."என் பேச்சிலே மயங்கி தான் என்னை கட்டிக்கிட்டா மாப்பிள்ளை" என்று மோகன் பெருமையாய் கூறவும் சம்யுவின் காதில் "மைக் மோஹனை ஏத்தி விட்டதே என் மாமியார் தான் போலவே " என்று கூற .. சம்யுவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.




எட்டு வருடங்களுக்கு பிறகு..

சம்யு ப்ரித்வியின் வாரிசு இப்போது வெளி வர காத்திருக்க .. மொத்த குடும்பமும் பிரசவ அறையின் முன் கூடியிருந்தது.

ரஞ்சித்தும் அம்ரிதாவும் தங்கள் சொந்த முயற்சியில் மென்பொருள் நிறுவனம் ஒன்றை 'கோகுலம் குரூப்ஸின்' கீழ் தொடங்கியிருந்தனர் . அது மெல்ல மெல்ல வளர்ச்சி பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது. அவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் ஆறு மற்றும் நான்கு வயதில் இருக்க ..

அவர்கள் இருவரும் இன்னும் போர்ட் மீட்டிங் முதல் , பேரண்ட் டீச்சர்ஸ் மீட்டிங் வரை சண்டையிட்டுக் கொண்டு தான் இருந்தனர்.

ப்ரித்வி வக்கீலாக ப்ராக்டிஸ் செய்யவில்லை என்றாலும் , தன் சட்ட அறிவை தொழிலில் பயன்படுத்திக் கொண்டிருந்தான்.
இயல்பாகவே இருந்த நிர்வாக திறமையில் அவனது தந்தையோடு சேர்ந்து மற்ற நிறுவனங்களை நிர்வாகம் செய்து கொண்டிருக்க.. சம்யுவோ அவள் விரும்பியபடி .. ஜூடிசியல் மேஜிஸ்ட்ரேட் ஆகிவிட்டாள்.

ஆனால் இன்னும் தன் மாமியாரோடு தினம் வம்புதான்..

சத்யபாமாவும் விட்டுக்கொடுக்க மாட்டார்.. "அவ ஜட்ஜா இருந்தால் என்ன இல்லை கலெக்டரா இருந்தா என்ன .. நாந்தான் இங்க மாமியார் " என்பார் கெத்தாய்.

நவநீக்கோ வெகு திருப்தியான வாழ்வு பல வருடங்கள் கழித்து. அதை ஆற அமர அனுபவித்துக் கொண்டிருந்தார்.

"உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு " என்று செவிலியர் வந்து குழந்தையை தர .. யார் முதலில் வாங்குவது என்ற போட்டி நடக்க.. இது வேலைக்காகாது என்று அவர் குழந்தையை உள்ளே தூக்கி சென்றுவிட்டார்.

அனைவரும் ஏமாந்து நிற்க.. ப்ரித்வியை உள்ளே அழைத்தவர் குழந்தையை தர .. தன் பிள்ளையை கையில் ஏந்திய நிமிடம் .. "தெய்வம் என்பது இதுதான்" என்று தோன்றியது.. கடவுளை நம்பாத அந்த நாத்திகவாதிக்கு!

தன் கடலும், அதில் நீந்தி களைத்து சோரும் போது தன்னை தாங்கி கொள்ளும் கரையுமாக இருக்கும் தன்னவளை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ப்ரித்வி.


நிறைந்தது!!!

 
Nice story Geetha. Samyu and Prithvi were more impressive than Amru and Ranjith. Best wishes for the competition.💐💐💐
 
வணக்கம் நட்புக்களே!
ப்ரித்வி சம்யு , அம்ரு ரஞ்சித் இரு ஜோடிகளின் இந்த காதல் கதையை படித்து.. தங்கள் எண்ணங்களை என்னோடு பகிர்ந்து கொண்டால் மிகுந்த மகிழ்ச்சி !
காத்திருக்கிறேன்.
 
Top