Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா!-27

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -27

ஐராவதம் அந்த காபி ஷாப்புக்குள் நுழைந்து காலியாக இருந்த மேஜையொன்றை ஆக்கிரமித்து அமர்ந்தார்.

தன் கடமையை செய்ய வந்த வெயிட்டர் தந்த மெனு கார்டை புரட்டினால் புரை ஏறும் போல இருந்தது. ஏனெனில் காபி விலை குதிரை விலையாய் இருந்தது. அந்த மாப்பிள்ளையின் தந்தை குறிப்பிட்டு வரச்சொன்ன காபி ஷாப் சற்று உயர்ரக மக்கள் வந்து சாதாரணமாக காபி அருந்திவிட்டு செல்லும் இடமாக இருந்தது. தான் அந்த இடத்துக்கு பொருத்தமில்லாமல் அமர்ந்து இருக்கிறோமோ என்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு இருக்கும் போது அந்த குரல் இடை மறித்தது.

" நீங்கதானா மிஸ்டர் ஐராவதம்.."

" ஆ.. ஆமா.. நீங்க.." அந்த நபரை அடையாளம் கண்டுகொண்ட ஐராவதம் தடுமாற்றத்திற்கு உள்ளாகினார். அவருடைய கைகள் வியர்த்தன.

" என்னோட பெயர் கீர்த்தி வாசன். புரோக்கர் சொன்னாரா..?"

" புரோக்கர் சொன்னது .. நீங்களா..? நான் .. உங்களை எதிர்ப்பார்க்கலங்க.." 'வாசன் குரூப் ஒஃப் கம்பனிஸ்' எம்டீ தனக்கு முன்னால் அமர்ந்து இருப்பதை தன்னுடைய கண்கள் நம்பாமல் வம்பு செய்வதை தாங்கிக்கொள்ள தெரியாமல் தவித்தார் அவர்.

" என்னால நம்ப முடியாம இருக்கு சார்.. நீங்க.. "

" என்னங்க.. நானும் உங்களை மாதிரி சாதாரண மனுஷன் தானே.."

" இல்ல சார்.. நீங்க .. நாங்க.. உண்மைக்குமே புரோக்கர் சொல்லி தானா வந்திங்க..?" பட்டென சந்தேகத்தை கேட்டுவிட்டார் ஐராவதம்.

" உங்க ஊகம் சரி ஐராவதம். எனக்கு ஒரே பையன். பேரு நவிலன். என்னோட சேர்ந்து பிசினஸ் செய்றான். அவனுக்கு உங்க பொண்ணு மித்ராவை பிடிச்சிருக்கு. உங்க பொண்ணுக்கு பிடிச்சிருக்கானு தெரியல.. பிடி கொடுக்காம இருக்கா.. எனக்கும் என்னோட மனைவிக்கும் கூட உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. உங்க பொண்ணுக்கும் பிடிச்சு.. நீங்களும் விருப்பபட்டா இந்த கல்யாணத்தை நடத்தலாம்னு.. " படபடவென பேசி முடித்தார் வாசன்.

" என் பொண்ணை எப்படி உங்களுக்கு தெரியும்...? எப்படி பழக்கம்.. " ஐராவதம் தடுமாற, தான் சேகரித்த அத்தனை தகவல்களையும் பகிர்ந்து கொண்டார் வாசன்.

மகனும் மித்ராவும் மோதியது. தொழில் நிமித்தமாக இருவரும் எதிர்பாராவிதமாக சந்தித்தது. அவர்களுக்குள் ஒரு நட்பு இழையோடியது. அது காதலாக மாறிக்கொண்டு வருவது. இப்படியாக எல்லாமும் சொன்னார் பையனைப் பெற்றவர்.

" எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல சார். எங்க குடும்பத்தை பற்றி எல்லாம் தெரியுமா உங்களுக்கு..?" மதுபாலா நினைவுக்கு வர நடந்தது எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டார் ஐராவதம்.

அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டு இருந்த வாசன் தொடர்ந்தார்.

" பொண்ணை பெத்தவரா நீங்க என்ன நினைப்பிங்கனு என்னால புரிஞ்சிக்க முடியும். என்னடா இவங்க.. நம்ம பொண்ணை தேடி வந்து பொண்ணு கேட்கிறாங்களே.. மாப்பிள்ளைக்கு ஏதாவது பிரச்சினையா இருக்குமோ..? குடும்பத்துக்குள்ள ஏதாவது குளறுபடியா இருக்குமோ? கல்யாணத்துக்கு பிறகு பொண்ணை கொடுமைபடுத்துவாங்களோனு பலவிதமான சந்தேகங்கள் வருவது சகஜம் தான். ஆனால் அந்த மாதிரி எதுவும் நடக்கப்போவது இல்ல.. எங்களுக்கு எல்லாமே எங்க பையன் தான். அவனோட சந்தோஷம் தான் எங்க சந்தோஷம். அவன் ஒரு பொண்ணு மேல இவ்வளவு அன்பு வச்சது இதுதான் முதல் தடவை. அவ்வளவு அன்பு அவனுக்கு மித்ரா மேல ஏன் வந்திச்சுனு அவ கூட பேசின முதல் நாளே எனக்கு புரிஞ்சு போச்சு. அவ குணம் அவ்வளவு அற்புதம். பொண்ணை ரொம்ப நல்லா வளர்த்திருக்கிங்க ஐராவதம். அவ எங்க வீட்டுக்கு வந்து விளக்கேற்றுனா எங்க ஒட்டுமொத்த குடும்பத்தோட சந்தோஷமும் பல மடங்காக அதிகரிக்கும்னு நம்பி தான் உங்ககிட்ட அவளை எங்க வீட்டு மருமகளா அனுப்ப சொல்லி கேட்கிறேன்.. "

கீர்த்தி வாசன் பேசப் பேச ஐராவதத்துக்கு கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. மகளை சரியாக வளர்த்திருக்கிறோம் என்ற பெருமிதம் எழுந்தது. அப்போதே அவர் முடிவு செய்து விட்டார் மகள் இவர்கள் வீட்டுக்கு தான் மருமகளாக போக வேண்டும் என்று. அவர்களுடைய காசு பணத்தை பார்த்து அந்த முடிவை அவர் எடுக்கவில்லை. கீர்த்தி வாசன் குரலில் உண்மை இருந்தது. அவர் கண்களில் ஒரு நேர்மை இருந்தது. அது அவருடைய மகனிடத்தில் நூறு மடங்காக இருக்கும் என்று உறுதிபட நம்பினார். இருந்தாலும் ஒரு தயக்கம் இருந்தது.

" உங்களை சந்திச்சது ரொம்ப சந்தோஷம். நான் வீட்ல பேசிட்டு சொல்றேன்.." என்று அவரிடம் விடைப்பெற்றார் ஐராவதம். போகும் போது அவர் நிச்சயமாக நல்ல பதிலையே தருவார் என்று நம்பிய கீர்த்தி வாசனுக்கு மகனுடைய திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது.

பலதரப்பட்ட சிந்தனைகளுடனேயே அன்று தங்கை மங்களாதேவியை காண அவர் வீட்டுக்கு சென்றார் ஐராவதம். பொதுவாக பேசிக்கொண்டு இருந்துவிட்டு நவிலன் பற்றி பேச்சு எழவே முதலில் தங்கையிடமே இந்த விடயத்தை பகிர்ந்து கொண்டார்.

" நவிலன் மாதிரி ஒரு பையன் கிடைக்க நம்ம கொடுத்து வச்சிருக்கனும் அண்ணா.."

" நீ சொல்றதை வச்சி பார்க்கும் போது அந்த பையன் நல்ல பையன்னு தான் தெரியுது. ஆனா அவங்க தகுதிக்கு நம்ம சரிப்பட்டு வருவோமா மங்களா..?"

" தகுதினு எதை சொல்றிங்க அண்ணா? பணத்தை வச்சா? அது இன்னைக்கு இருக்கும் நாளைக்கு இருக்காது. அவங்களுக்கு நாம எந்த விதத்துலயும் குறைஞ்சவங்க கிடையாது. அவங்களா நம்ம பொண்ணை தேடி வாறாங்கங்கிற தயக்கமா?"

" ஆமா மங்களா.. எதுக்கு தேடி வந்து நம்ம பொண்ணு தான் வேணும்னு கேட்கிறாங்க.."

" என்ன பண்ண.. அவங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்களே.. அதான் நம்மளே கல்யாணத்தை பண்ணி வச்சிடலாம்னு நினைச்சிருப்பாங்களா இருக்கும்.."

" மித்ராவும்..அந்த பையனை..?"

" ஆமா அண்ணா.. அவளும் விரும்புறா.. ஆனா அவ்வளவு இலகுவா ஒத்துக்க மாட்டாளே .."

" ஓ..." என்று இழுத்தார் ஐராவதம்.

" என்ன அண்ணா யோசனை. நீங்களே வலைவீசி தேடினாலும் இப்படி ஒரு பையன் நம்ம மித்ராவுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. "

" அதில்ல மங்களா... காசை கண்டதும் பொண்ணை கட்டிக்கொடுத்துட்டம்னு பேசுவாங்க.."

" பேசுறவங்க பேசிட்டு போகட்டும். அதெல்லாம் கண்டுக்காம வாழ பழகிக்கனும்ண்ணா.. அத பற்றியெல்லாம் யோசிச்சுக்கிட்டு இருந்தா இந்த உலகத்துல வாழவே முடியாது... நம்மளை பற்றிய விமர்சனங்களை கடந்து போய்க்கிட்டே இருக்கனும். அப்பதான் எதையாவது சாதிக்க முடியும்..."

தங்கை சொல்ல சொல்லத்தான் அவளும் எத்தனை கஷ்டங்களை அனுபவித்து வந்து நிற்கிறாள் என்று ஐராவதத்துக்கு புரிந்தது. அவரும் ஒரு முடிவுக்கு வந்தார். பாமாவிடம் உடனடியாக இந்த விடயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடு கிளம்பியவரை தான் அந்த லாரி அவர் மீது மோதி தடுத்தது.

இவையனைத்தையும் நினைவு கூர்ந்து மனைவியிடம் பகிர்ந்த ஐராவதம் நவிலனை மானசீக மருமகனாக ஏற்று பல மாதங்கள் ஆயிற்று.

அவர் ஹாஸ்பிடலில் இருந்த போது கண் விழித்து பார்த்து அவன் தான் தன்னுடைய வருங்கால மருமகன் என்று வருண் அழைத்த பெயரை கொண்டு கண்டு கொண்டார். அதற்கு பிறகு அவனோடு பேசி அவனது குணங்களை அறிந்து கொண்டார். இவர்கள் யாரும் இல்லாத போது தன்னை பார்க்க வந்த கீர்த்திவாசனிடம் சம்பந்தியாக விருப்பம் என்று அப்போதே தெரிவித்திருந்தார். இது தெரிந்தும் நவிலனும் எதுவும் தெரியாதது போல இயல்பாக இருந்தான். தந்தை அவனை வேவு பார்க்க, அவன் தந்தையை வேவு பார்த்து வைத்திருந்தான். ஆனால் அமைதியாகவே இருந்தான். அவனுக்கு மித்ராவை தன்னுடைய வழியில் ஜெயித்துவிட வேண்டும் என்ற வெறி. ஜெயித்தும் விட்டான்.

அவளாகவே அவனைத் தேடி வந்து காதலை சொல்லியும் விட்டாள். எல்லாமே சரியாக போய்க்கொண்டு இருக்கையில் இப்போது புதிதாக பாமா குட்டையை குழப்பவும் மறுபடியும் எங்கிருந்து ஆரம்பிப்பது என்ற கவலை அவனுக்கு. அதோடு நாட்களை கடத்த வெகு சிரமப்பட்டான். கீர்த்திவாசனும் ரோகிணியும் இன்னும் இரண்டு நாட்களில் திரும்பி விடுவார்கள். அதன் பிறகு உடனே வீட்டில் பேச வாய்ப்பிருக்கும் என்று சொல்ல முடியாது. தாங்கள் இன்னும் காத்திருக்க வேண்டும் என்று மனதை தேற்றிக்கொண்டான்.

அன்று ஆபிஸில் ஏகப்பட்ட வேலை. குளித்துவிட்டு படுக்கையில் படுத்தான். படுத்த கொஞ்ச நேரத்திலேயே தன்னை மறந்து தூங்க ஆரம்பித்திருந்தான். ஆனால் தூக்கத்தையும் மறந்து அவன் முகம் காதலின் பொலிவோடு இருந்தது. அதற்கு காரணம் இருந்தது. அன்று மாலை அவனுடைய ஆபிஸ் வாசலில் மித்ரா அவனுக்காக காத்திருந்தாள்.

வேலை முடிந்து செல்போனில் " மிஸ்டர் சங்கர் லால்.. இந்த டீல் சரியா வரும்னு எனக்கு தோனலை.. நான் யோசிச்சு ..." பேசிக்கொண்டே வந்தவன் ரிசப்ஷனில் அவளைக் கண்டதும் அதிர்ச்சியோடு நின்று விட்டான்.

நீல நிற சேலையின் அவளுடைய மூடப்படாத பாகங்கள் அவனை திக்குமுக்காட வைத்தன.

" நீ எங்க.. இங்க..?"

" ம்.. காய்கறி வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்.."

ஒரு செக்கன் புருவங்களை சுருக்கி அவளது கிண்டல் புரிந்து, " ஓ.. அப்படியா.. என்ன காய்கறி வேணும்?" என்றான்.

" ம்.. போற வழியில சொல்றேனே.." என்று அவனோடு வருகிறேன் என அவனுக்கு குறிப்பு கொடுத்தாள்.

காரை கிளப்பிக்கொண்டே கேட்டான்.

" ம்.. எதுல வந்த மித்ரா.."

" அதுவா.. கப்பல்ல.." என்று தன் கூந்தலை ஒதுக்கி விட்டாள் அவள். நவிலன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். வண்டி கிளம்பாமல் இருக்கவே திரும்பி அவனைப் பார்த்தாள்.

" இன்னைக்கு நக்கல் ரெண்டு ஸ்பூன் ஜாஸ்தியா இருக்கே..."

" சும்மா... " என்று சிரிக்க அவள் சிரிப்பில் தன்னை தொலைந்தான் நாயகன். அவன் பார்வையை திசை திருப்பும் வகையில் அவனுடைய கேள்விக்கு பதில் சொன்னாள்.

" பஸ்ல தான் வந்தேன் நவி.."

" ஏன்.. உன் ஸ்கூட்டி என்னாச்சு? வேணாம்.. நீ எதுவும் சொல்லாதே.. யாரை இடிச்ச..?" என்று அவளை அறிந்தவனாய் கேட்டான்.

" அது.. அது.. வந்து.. ஒரு பையன்.."

" அடிகிடி படலயே மித்ரா.."

" ச்சே..ச்சே.. எனக்கு எதுவும் இல்ல.."

" நான் கேட்டது ஸ்கூட்டிக்கு.." என்று சொல்லி அவளிடம் செல்லமாய் ஒரு அடியும் வாங்கிக்கொண்டான்.

" சரி.. சரி சொல்லு.. அப்புறம் என்னாச்சு.."

" அப்புறம் என்னவாக... மணிகிட்ட வண்டியை கொடுத்து ..நீயே வச்சிக்கப்பானு சொல்லிட்டேன்.."

" சும்மாவா கொடுத்த.." மறுபடியும் கிண்டல்.

அந்த இடத்தில் மணி சொன்ன டயலாக் அவளுக்கு ஞாபகத்துக்கு வந்தது.

" யக்கா.. இனி இந்த பக்கம் வரக்கூடாது. இத பழைய இரும்புக்கு போட்டுட்டு நான் எதாவது வாங்கி தின்னுக்கிறேன்.."

அதற்கு அவள் பதிலே சொல்லவில்லை. இனி வண்டியே ஓட்டக்கூடாது என்று ஒரு முடிவு எடுத்துக்கொண்டாள்.

" ஹேய் மித்ரா..! என்ன யோசனை ...?"

" ஒன்னுமில்ல.."

" ஆமா.. உனக்கு யாரு வண்டி ஓட்ட சொல்லி தந்தது..?" அவனும் கிண்டலாக கேட்க அவள் அவனை கண்களை கூர்மையாக்கி கோபமாய் பார்த்தாள்.

" நீ வண்டி ஓட்டுனா எதிர்ல வாறவங்க உயிருக்கு உத்தரவாதம் தாறது கஷ்டம் தானே.. அதான்.. சரி சரி கோவப்படாத மித்ரா.."

" நீங்களும் என்னை கலாய்க்கிறிங்கல.. நான் இனி வண்டியே ஓட்ட மாட்டேன்னு முடிவு எடுத்து இருக்கேன்.."

" நிஜமாவா. ?"

" நிஜமாத்தான். என்னோட ஸ்கூட்டி மேல சத்தியம்.." அவள் சொல்ல அவன் சிரித்தான்.

" சரி.. கோவப்படாத.. நீ கிழவியாகுறதுக்குள்ள உனக்கு நான் வண்டி ஓட்ட சொல்லி தந்துடுவேன்.."என்று அவள் கன்னத்தை கிள்ளினான்.

" ஹ்ம்..." அவள் சிணுங்கினாள்.

" ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டுங்க.. இல்லனா நீங்க யார் மேல சரி இடிக்க வேண்டியதா இருக்கும்.."

" சரி மகாராணி.."

" மகாராணி யா? யாரு நானா?"

" ம்.. என்னோட சமஸ்தானத்துக்கு நீதானே மகாராணி.."

" ஓ.. அப்போ மகாராணி என்ன கேட்டாலும் செய்விங்களா?" அவன் கண்களைப் பார்த்து கேட்டாள்.

" நீ உத்தரவு மட்டும் போடு.. உடனடியா நிறைவேற்றுகிறேன் தேவி.."

" உங்க கைகோர்த்து கொஞ்ச தூரம் பீச்ல நடக்கனும்.."

" வாழ்க்கை முழுக்க நடக்க நான் தயார் தேவி.." என்று வண்டியை கடற்கரை நோக்கி செலுத்தினான்.

மித்ராவின் நீல நிற சேலையை அலைகள் வந்து மோதின. அடுத்து அவளது கால்களை முத்தமிட முண்டியடித்தன. அவள் குழந்தையை போல அலைகள் பின்னோக்கி செல்ல முன்னோக்கி சென்றும், அலைகள் முன்னோக்கி வர பின்னோக்கி சென்றும் அலையரசனுக்கு போக்கு காட்டிக்கொண்டு இருந்தாள். மணலில் அமர்ந்து அவள் விளையாட்டை ரசித்த நவிலன் அவளையே இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான்.

எதேச்சையாக திரும்பியவள், ' என்ன?' என்பது போல தலையசைத்து கேட்டாள். பதிலுக்கு அவன் ' ஒன்றுமில்லை ' என்று தலையசைத்தான் .

வந்து அவனுக்கு அருகில் அமர்ந்தாள். அப்போது அவன் தோளில் அவளது தோள் உரச அங்கு தீப்பொறி பறந்தது.

" நடக்கனும்னு சொல்லி கூட்டிகிட்டு வந்து அலையோடு விளையாடுற..." முன் நெற்றியில் வந்து விழுந்த அவளது கூந்தலை ஒதுக்கிக்கொண்டே கேட்டான்.

" நடப்போம்.. வாங்க.. " என்று எழுந்து அவனையும் எழுப்பினாள்.

சிறிது தூரம் இருவரும் இணைந்து கைகோர்த்து நடந்தார்கள். அவளை மோத முயற்சித்த அலைகளுக்கு அரணாய் அவன் இருந்து கூடவே நடந்தான்.

" வா.. கொஞ்ச நேரம் உட்காருவோம்.." ஒரு படகின் அடியில் அமர்ந்தார்கள். அன்று நடமாட்டம் குறைவாகவே இருந்தது.

" என்ன அப்படி பார்க்கிறிங்க நவி?" அவன் பார்வையை திசை திருப்பும் வகையில் கேட்டாள்.

" ஏன்.. நான் பார்க்க கூடாதா?"

" பார்க்கலாம். தப்பில்ல.. ஆனா எனக்கு ஒரு மாதிரி கூச்சமா இருக்கு.." என்று அந்தப்பக்கம் திரும்பி நாக்கை பல் நுனியால் கடித்தாள். அந்த செய்கையை அவன் ரசித்தான்.

அந்த மாலை நேரத்தில், சாயங்கால சூரியனின் மயக்கும் வெளிச்சம் அவள் மூக்குத்தியில் பட்டு தெறிக்க, அவன் முகத்தில் காதலின் ரேகைகள்.

" நீ ஏன் இவ்வளவு அழகா இருக்க?"

" யாரு நானா? என்னை விட அழகான பொண்ணை பார்த்தது இல்லையா?"

" இருக்கலாம்... ஆனால் உன்னைப்போல் ஒருத்தியை இதுவரை பார்த்தது இல்ல.."

அந்த இடத்தில் அவள் வெட்கப்பட்டதில் அவளது கண்மணிகள் அங்குமிங்கும் அலைபாய்ந்தன.

" என்னை விட அழகா எத்தனையோ பொண்ணுங்க இருக்காங்க.. போதும் உங்க டயலாக்.."

" ம்.. இருக்கலாம். ஆனா நான் அழகுனு சொன்னது உன் மனசை.."

" டயலாக் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. அப்படி என்ன அழகை கண்டிங்களாம் என்கிட்ட?" அறிந்து கொள்ளும் ஆர்வம் அவளுக்குள்.

" அதை இப்ப சொல்ல மாட்டேன்.. நம்ம ..." என்று நிறுத்தினான்.

அவன் எதுவோ சொல்லப் போகிறான் என்று ஆர்வமாய் அவனை நோக்கி அடுத்த கணம் ஏமார்ந்தாள்.

" ஏன் .. இப்ப சொன்னா என்னவாம்..?" கொஞ்சம் கோபம் அவள் குரலில்.

" கண்டிப்பா சொல்லியே ஆகனுமா?"

" சொன்னா.. சந்தோஷப்படுவேன்.."

" சொல்ல மாட்டேன். "

" ஏன் நவி..இப்படி பண்றிங்க..?" அவனை முறைத்தாள்.

" உனக்குத் தெரியத் தேவையில்லை. கடலின் ஆழம் கடலுக்கு தெரியவேண்டியதில்லை.. நீ தேவதை. அது மட்டும் உண்மை." என்று நிறுத்தினான்.

என்ன நினைத்தாளோ, சற்றும் யோசிக்காமல் அவன் கன்னத்தை உள்ளங்கையில் தாங்கி ஈரம் செய்தாள். அந்த முத்ததில் அவன் நிலைகுலைந்தான்.

" ஐ லவ் யூ நவி.." மார் சாய்ந்தாள். அவளை அணைத்துக்கொண்ட அவனுக்குள் ஏக சந்தோஷம்.

அவளது உச்சந்தலையில் முத்தமிட்டு காதலை கடத்தினான். அந்த முத்தம் அவளை என்னென்னவோ செய்ததில் இன்னும் இறுக்கி அணைத்தாள் அவளுக்கு மட்டுமே சொந்தமான அவனை.

" இப்படியொரு காதலை எனக்கு தந்ததுக்கு லவ் யூ நவி.." அவள் நன்றியை தவிர்த்து அந்த இடத்தில் 'லவ் யூ..' சொன்னது அவனை இன்னும் பைத்தியமாக்கியது.

" லவ் யூடீ.. "

இடம் பொருள் ஏவல் மறந்தார்கள் இருவரும்.

அதே நேரம் பாமாவின் வீட்டு காலிங் பெல் சத்தமாக ஒருதரம் கூவிவிட்டு ஓய்ந்தது. கதவை திறந்த போது மங்களாதேவி கையில் பழங்களோடு நின்றுக்கொண்டு இருந்தார்.

" வாங்க அண்ணி.. உள்ள வாங்க.."

" ப்பா.. படியேறி வாறதுக்குள்ள மூச்சு முட்டுது . மறுபடியும் லிஃப்ட் வேலை செய்யலயா?"

" எங்க அண்ணி.. மெயின்டனன்ஸ்னு காசு மட்டும் வாங்குறாங்க. பாதி நாள் இந்த லிஃப்ட் வேலை செய்றது இல்ல.. " என்றவாறு தண்ணீர் கொடுத்தவாறே சொன்னார் பாமா.

" ம்... அண்ணா எங்க.. உள்ளயா இருக்காரு.. "

" ஆமா அண்ணி.. இவ்வளவு நேரம் டீவி பார்த்துக்கிட்டு இருந்துட்டு இப்பத்தான் உள்ள போனாரு. நீங்க போய் பாருங்க.. நான் காபி போட்டு எடுத்துட்டு வாரேன்.."

மித்ரா சொல்லிக்கொடுத்தது படி பாமாவை மடக்கவே அன்று விஜயம் செய்திருந்தார் மங்களாதேவி.




ஆட்டம் தொடரும் ❤️?








 
Top