Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 20

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கண் விழித்தேன் உன் நினைவில்
--செசிலி வியாகப்பன்


அத்தியாயம் 20


சென்னை மாநகரின் நடுவில் இருக்கும் அந்த பிரம்மாண்டமான திருமண மண்டபம் விருந்தினர்களால் நிரம்பி வழிந்தது.

ரஞ்சித் பூரணி இருவரும் தொழில்துறை நண்பர்களையும், தங்கள் பக்க உறவினர்களையும் இன்முகமாய் வரவேற்று கொண்டிருக்க, மற்றொருபுறம் யாழினியும் பிரகாஷ்ம் தங்கள் உறவினர்களை வரவேற்று கொண்டு இருந்தன.

இனியனை கனலிக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இரு நாள் விடுமுறையில் விஷ்வா இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்து வந்திருந்தான். நீண்ட நாள் கழித்து தாயகம் திரும்பிய மகிழ்ச்சியுடன் தனக்கு பிரியமான தமக்கையின் வரவேற்பு நிகழ்ச்சியில் இனியன் பம்பரமாக சுழன்று கொண்டு இருந்தான்.

உலக அதிசயமாக திலகவதியும், கவிதாவும் தங்கள் பக்க நெருங்கிய உறவினர்களை பந்தி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்வது, தங்கள் மருமகனுக்கு அறிமுகம் செய்வது என ஒற்றுமையுடன் நின்றுகொண்டு இருந்தனர்.

கனலி அன்று தன் தாயிடம் மனம் திறந்து பேசும் பொழுது கூட இந்த அளவு பெரிய மாற்றம் நடைபெறும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் தன்னுடைய கண்ணீர் தாயின் மனதில் இந்த அளவு மாற்றத்தை கொண்டு வந்தது பெரியது என்று உணர்ந்து முகம் புன்னகையை தத்தெடுக்க அவள் மனம் கடந்த சில நாட்களில் நடந்த நிகழ்வுகளை நினைத்து பார்த்தது.

அவள் அருகில் நின்று கொண்டு இருந்த விஷ்வா அவள் காதருகே குனிந்து

"கனல் பேபி இனி நீ இந்த விஷ்வா மட்டும்தான் சைட் அடிக்கணும். அத விட்டுட்டு உங்க அம்மா பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி." என கனலி கவனத்தை தன் புறம் திருப்ப நினைக்க

"உன்னை எப்ப வேணாலும் பாத்துக்கலாம், ஆனா இன்னைக்கு நான் பார்த்துகிட்டு இருக்கிற காட்சி 'இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக' அப்படின்னு சொல்ற மாதிரி கனலி வாழ்வில் முதல் முறையாக நடக்கிற விஷயம், அதை எப்படி நாம் மிஸ் பண்ணுவேன்."

தாய் மற்றும் சித்தியின் ஒற்றுமையை ரசித்துக்கொண்டே கனலி கூற, தன்னை விடுத்து தாயை ரசிக்கும் கவனத்தை தன் புறம் திருப்ப என்ன செய்யலாம் என்று யோசித்த விஷ்வா தனக்கு வலப்புறம் நின்றவளின் பின்புறமாக தன் கையை கொண்டு சென்று அவள் இடையை பற்றி தன்னிடம் நெருக்கமாக நிற்க வைத்துக்கொண்டான்.

வரவேற்பு நிகழ்ச்சிக்கு என்று கனலி அணிந்து இருந்த காக்ரா சோளி விஸ்வா கைகளுக்கு வழிவிட அவள் வெற்றிடையில் அவன் கைகள் பதிந்தது.

அவன் திடீர் செய்கையில் அதிர்ந்த கனலி கூச்சத்தில் நெளிந்த வண்ணம், அவன் கைகளை தன் இடையிலிருந்து எடுக்க நினைக்க, அவனோ சிறிதும் அசைந்து கொடுக்காமல் வருபவர்களை பார்த்து புன்னகைக்கும் முகமாகவே நின்று கொண்டு இருந்தான்.

மற்றவர்களின் கவனத்தை கவராத வண்ணம் கனலி விஸ்வாவிடம்,

"விஜி ப்ளீஸ் கைய எடு." என்று கேட்க அவனோ

"சாரி பேபி இனி சில விஷயத்தில உன்னுடைய பேச்சை கேட்கப் போவதில்லை, இனி என்னுடைய இஷ்டம் தான்." என்று கூறிவிட்டு பழையபடி சிரித்த முகமாக நின்று கொள்ள கனலி என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டு இருந்தாள்.

மேடைக்கு வந்து செல்லும் சிலர் கண்களில் இந்தக் காட்சி விழுந்தாலும் கண்டுகொள்ளாமல் சிரித்த வண்ணம் இறங்கி சென்றனர். அவர்களின் சிரிப்பே 'நான் பாத்துட்டேன்' என்னும் செய்தியை உணர்த்த கனலி முகம் அந்திவானமாக சிவந்தது. அந்நேரம் மேடைக்கு வந்த இந்திரஜித்

"ம்மா பாட்டி இத உங்களுக்கு கொடுக்க சொன்னாங்க." என்று குளிர்பானத்தை தர கனலி ஒன்றை அவள் கையில் எடுத்துக்கொண்டு மற்றொன்றை விஷ்வாவை எடுத்துக் கொள்ளும்படி கூற,

சிறு பையன் முன்பு தன் விளையாட்டை காட்டக்கூடாது என்று எண்ணி வேறு வழியில்லாமல் கனலி இடையிலிருந்து கையை எடுத்தான்.

'இரு அவன் போனதுக்கப்புறம் உனக்கு இருக்கு.' என்று மனதுக்குள் விஸ்வா நினைத்துக் கொள்ள,
'உன்னை நான் அறிவேன்.' என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்ட கனலி அதன் பின்பு இந்திரஜித் கீழே அனுப்பவில்லை. தங்கள் இருவருக்கும் நடுவில் நிறுத்திக்கொண்டாள்.

'இப்போ என்ன செய்வ.' என்பதுபோல் கனலி விஷ்வாவை பார்க்க அவனோ
'எப்படினாலும் இன்னைக்கு என்கிட்ட மாட்டாமலா போக போற.' என்று பார்த்து வைக்க
'பாக்கலாம் பாக்கலாம்.' என்பதுபோல் எதிர் பார்வை பார்த்து வைத்தாள்.

விஷ்வா கனலி மௌன நாடகத்தை கீழே இருந்து கவனித்துக் கொண்டு இருந்த பூஜாவிற்கு பொறாமையால் வயிறு எரிய ஆரம்பித்தது.

இறுதியில் தங்கள் நிலை இலவு காத்த கிளி போல ஆனதை நினைத்து மனதில் வன்மம் எழுந்தாலும் இப்பொழுது கனலி மீது காட்ட முடியாது என்பதால் அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

மற்றொருபுறம் கவிதாவிடம் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்த திலகவதியை பார்த்ததும்

'எல்லாம் இந்த கிழவியை நம்பியதால் தான் இந்த நிலைமை. மருமகளே மருமகளேன்னு எனக்கு நல்ல ஜால்ரா தட்டிட்டு இருந்த கிழவி கடைசி நேரத்துல மக கூட சேர்ந்து அந்தர்பல்டி அடிச்சுட்டா."

விஸ்வா வீட்டார் வந்து சென்ற இரண்டு நாட்களுக்கு பின்பு திலகவதி கனலியிடம்

"கனலி நம்ம ஊர்ல நமக்கு இருக்கிற இடத்தை ஒருத்தர் நல்ல விலைக்கு கேட்டு இருக்கிறதா பிரஸிடெண்ட்ஸ் சொன்னாரு. நாம எதிர்பார்க்க விலையைவிட அதிகமா தருவதாகவும் சொல்லி இருக்காரு, நீ என்ன சொல்ற."

தாய் தன்னிடம் பேசும்பொழுது அருகில் நின்ற பூஜா கார்த்திக் இருவரின் முகம் மாற்றங்களை கனலி கவனித்தாலும், ஏனோ இந்த ஒருமுறை தாயின் பேச்சைக் கேட்டு நடப்பது தனக்கு நல்லது என கனலிக்கு என்ன தோன்றியது.

"சரி ம்மா பிரசிடெண்ட் மாமாவை நல்லா விசாரிக்கச் சொல்லுங்கள். சரியா வரும்னா திங்கள்கிழமை ரிஜிஸ்ட்ரேஷன் வச்சிக்கலாம்.

பாதி அமௌன்ட் அக்கவுண்டுக்கு டிரன்சாக்சன் பண்ற மாதிரியும் மீதி நம்ம கையில் கிடைக்கிற மாதிரியும் பேச சொல்லுங்க." என்ற கனலி மனதுக்குள் ஏதோ பிசைவது போன்று தோன்றியது. நடப்பது நல்லதாக இருக்கும் பட்சத்தில் பிரச்சனை இல்லை.

ஆனால்.......?
கனலி முகபாவனைகளை கவனித்துக்கொண்டிருந்த திலகவதி

"அப்படியே பத்திரம் பதிவு பண்ற அன்னைக்கு உங்க சித்தப்பா வீட்டுல இருக்கிற எல்லாரையும் வர சொல்லிரு. அவங்களுக்கு சேர வேண்டியத பிரித்து கொடுத்துவிடலாம்." என்று கூறி முடிக்கும் பொழுது காற்றடித்தாலும் ஓசை கேட்கும் அளவுக்கு ஒரு கனத்த அமைதி அங்கு நிலவியது.

தன் அம்மாவா இப்படி பேசுவது என்று கனலி இன்ப அதிர்ச்சியில் மௌனம் காக்க, நடப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாத கார்த்திக்

"அம்மா புத்தியுடன்தான் பேசுறியா? யாரு வீட்டுச் சவகாசமே இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறோமோ அவங்களுக்கு நிலத்தை வித்து கிடைக்க போற பணத்தை பங்கு பிரித்து கொடுக்க போறேன்னு சொல்றே. எங்கள பத்தி கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியா?" என்று குரலை உயர்த்திப் பேசிய மகன் புறம் திரும்பிய நிதாரணமாக

"இதுநாள் வரைக்கும் என்னையும் உன்னையும் மட்டும்தான் யோசிச்சு எல்லாத்தையும் செய்தேன். இனியாவது என்னுடைய பொண்ண பத்தி யோசிக்கலாம் என்று முடிவு பண்ணிட்டேன்."

"அதுக்கு எல்லாத்தையும் தூக்கி அவங்க கிட்ட கொடுக்கப் போறியா." என்று கார்த்திக் கோபமாக கேட்க திலகவதி பொறுமையுடன்

"எல்லாத்தையும் தூக்கி தியாகம் பண்ற அளவுக்கு நான் ஒன்னும் அவ்வளவு நல்லவ கிடையாது. இதுநாள் வரைக்கும் உங்க அப்பா கனலி அந்த குடும்பத்துக்கு எவ்வளவு செலவு பண்ணாங்களா அதை அதற்கு ஈடாக ஊரில் இருக்கிற வீட்டை என்னோட பெயருக்கு மாற்றிக்கொண்டு மிச்சத்த மட்டும்தான் கொடுக்க போறேன்.

எல்லார விடவும் உனக்கு பத்து லட்சம் அதிகமா தர சாெல்றேன். எதிர்காலத்தில் நீதான் தாய்மாமா முறைக்கு நின்னு செலவு செய்ய வேண்டியது இருக்கும், அதுக்காகத்தான் இந்த 10 லட்சம்.

என்னுடைய காலத்திற்கு அப்புறமா அந்த வீடும் உனக்குத்தான். கனலி உனக்கு நான் சொல்லவில்லை எந்த சொல்வதில் எந்த எதிர்ப்பும் இல்லையே." என்று மகனிடம் ஆரம்பித்து மகளிடம் முடிக்க கனலி,

இனி எல்லா விஷயத்துலயும் உன்னுடைய பேச்சைக்கேட்டு நடக்கலாம் முடிவு பண்ணிட்டேன் மா." என்று நல்ல பிள்ளையாக கூற திலகவதி சிரித்துக்கொண்டே தன் அறைக்கு திரும்பினார்.

அடுத்து வந்த நாட்களில் கார்த்திக் பூஜா இருவரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேசி திலகவதி மனதை மாற்ற நினைக்க அவரோ எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.

இரு தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் ஊருக்கு சென்று நிலத்தை விற்று கிடைத்த பணத்தில் யாழினி இனியன்க்கு அவர்கள் பங்கை தங்கள் ஊர் பெரியவர்கள் முன்பே கொடுத்துவிட்டு, தன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைத்துவிட்டு திரும்பினார்.

இத்தனைநாள் கவிதா திலகவதி இருவருக்கும் இடையில் பெரிதாக பேச்சுவார்த்தை எதுவும் இருந்தது இல்லை. இப்பொழுது பல லட்ச ரூபாய் பணத்தை திலகவதி தங்களிடம் தந்ததே பழைய கசப்புகள் அனைத்தையும் மறக்கச் செய்து, கவிதா குடும்பத்தை இயல்பாக திலகவதி இடம் பேசச் செய்தது.

திலகவதியின் முடிவில் நியாயம் இருப்பதாகவே அனைவருக்கும் தோன்ற, யாரும் அவருக்கு எதிராகப் பேசவில்லை. ஏனெனில் பல வருடம் பெரும்பாலான இரு குடும்ப பொறுப்புக்களை திலகவதி கணவனே ஏற்று நடத்தியதால் அதற்கு ஈடாக பரம்பரை வீட்டை கொடுப்பதில் கொடுப்பது நியாயமாகவே பட்டது.

அதிலும் கவிதாவின் தந்தை தாங்கள் இருக்கும் வீட்டை பேரப் பிள்ளைகளுக்கு என்று கூறிவிட்டதால் அவர்களுக்கு மேற்கொண்டு எதுவும் பிரச்சனை இல்லை.

அனைத்தும் நன்றாக நடந்துவிட்ட சந்தோஷத்தில் அனைவரும் மகிழ்ச்சியாகவே விஷ்வா கனலி வரவேற்பில் கலந்து கொண்டனர்.

மேடையில் இருந்து இந்திரஜித் அதன் பின்பு கீழே இறங்காமல் அங்கே நின்று கொள்ள, அதை கீழிருந்து கவனித்த இனியன் இந்திரஜித் கீழே அழைக்க, கனலி அவன் தன்னுடனே இருக்கட்டும் என்பதுபோல் தம்பியுடன் கூறிவிட்டாள்.

விஷ்வா என்ன நினைப்பானோ என்று இனியன் தன் தமக்கையின் கணவனின் முகம் பார்க்க, விஸ்வா சிரித்துக்கொண்டே எனக்கும் இதில் சம்மதமே என்று பார்வையால் தெரிவிக்க இனியன் அடுத்த வேலையை கவனிக்க சென்றான்.

உறவினர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த தீபா ரூபா இருவரும் தங்கள் அண்ணன் மேடையில் தாயுடன் இருப்பதை பார்த்து வேகமாக சென்று தங்கள் அண்ணன் அருகில் நின்று கொண்டனர்.

இப்பொழுது நடுவில் இந்திரஜித், அவன் இருபுறம் தீபா மற்றும் ரூபா, அவர்களின் அருகில் விஷ்வா கனலி என்று அனைவரும் மேடையை அலங்கரிக்க இவற்றையெல்லாம் கீழே இருந்து பார்த்துக் கொண்டு இருந்த திலகவதி மனதுக்குள் சந்தோஷமாக உணர உணர்ந்தார்.

மற்றொருபுறம் கிருபா அபராஜித் தங்கள் அருகில் அமர வைத்துக் கொண்டு இருந்த பைரவியின் பெற்றோர் மேடையில் நிற்பவர்களை கவலையுடன் பார்த்துக்கொண்டு இருந்தனர். பைரவியின் அம்மா தன் கணவரிடம்

"பாத்தீங்களா இப்பமே அந்த பொண்ணு இப்பமே நம்ம பேத்தியை ஒதுக்கிவிட்டு அவளுடைய அக்கா புள்ளைங்கள பக்கத்துல வச்சிக்கிட்டா.

இவ்வளவு நாளா விஷ்வா இந்த இரண்டு பிள்ளைகளையும் நல்லா பாத்துக்கிட்டு இருந்திருக்கலாம், இனிமேல் இவ எப்படி கிருபாவ பாத்துக்க நினைப்பா." என்று தன் மனதின் ஆதங்கத்தை கணவனிடம் இறக்கிவைக்க,

அருகில் அமர்ந்திருக்கும் இரு பிள்ளைகளும் கவனிப்பதை பார்த்து பைரவியின் தந்தை மனைவியை அடக்க நினைக்க அவரோ

"நீங்க வேணா பாருங்க இன்னும் கொஞ்ச நாளில் விஷ்வா மனச கொஞ்சம் கொஞ்சமா மாத்தி நம்ம பேத்தியை வீட்டைவிட்டு வெளியே அனுப்பினாலும் அனுப்பிடுவா."

"அப்படியெல்லாம் நடக்காது நீ ஏன் தேவையில்லாமல் எதையும் கற்பனை பண்ணிக்கிட்டு பேசாதே. நீ நினைக்கிற மாதிரி நடக்க கிருபா தாத்தா பாட்டி விடமாட்டாங்க." என்று எவ்வளவு சமாதானம் கூறினாலும் அதை மருத்து பைரவியின் அம்மா பேச இவையெல்லாம் கிருபா மனதில் ஆழமாக பதிந்தது.

அதுவரை அனைத்தையும் விளையாட்டாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த கிருபா கண்களுக்கு கனலி தன்னிடமிருந்து தனக்கு பிரியமான விஷ்வாவை பிரிக்க வந்த அரக்கியாக தெரிந்தாள்.

கோபத்துடன் தன் தம்பியை அழைத்துக்கொண்டு மேடைக்குச் செல்ல, அதே நேரத்தில் தன் தமக்கையின் திருமண வரவேற்புக்கு என்று யாழினி தயார் செய்த கேக்குடன்வர கிருபா பிரகாஷ் யாழினியை தாண்டி விஷ்வாவிடம் செல்ல முடியவில்லை.

சுற்றி இருந்த அனைவரும் கேலி செய்தாலும் அவை எல்லாம் அந்நாளின் கொண்டாட்டம் என்பது போல கனலி விஷ்வா இருவரும் ஏற்றுக் கொண்டனர்.

யாழினி கொண்டுவந்த கேக்கை வெட்டி முதல் துண்டை விஸ்வா கனலிக்கு ஊட்டிவிட கிருபாவிற்கு இதையெல்லாம் பார்க்கும் பொழுது அழுகை வருவது போல் இருந்தது.

ஏனெனில் இத்தனை நாட்களில் தங்கள் வீட்டில் எப்பொழுது யாருடைய பிறந்தநாளுக்கு கேட் வெட்டினாலும் முதல் துண்டு கிருபாவிற்கு தான் அனைவரும் ஊட்டி விடுவார்கள்.

அப்படியிருக்க இன்று தனக்கு பிரியமான விஷ்வா தனக்குத் கேக் தராமல் கனலிக்கு ஊட்டிவிட்டது மிகப்பெரிய தவறாகவே தோன்றியது.

இதுபோன்று சிறுசிறு பொறாமை உணர்வு சின்ன பிள்ளைக்கு வருவது சாதாரண விஷயமே. எப்பொழுதும் வீட்டில் இரண்டாவதாக ஒரு பிள்ளை வரும்பொழுது முதல் பிள்ளைக்கு தனக்குரிய முதன்மையான இடம் பெற்றோரிடம் கிடைக்காது என்ற எண்ணத்திலேயே மனவருத்தம் ஏற்படும்.

பெற்றோரிடம் தன்னை முதன்மைப் படுத்த சில காரியங்களை அந்த குழந்தை செய்யும். அதுபோலவே இன்று கிருபா மனதில் இன்று கனலி விஷ்வா இருவரின் உறவுக்கு எளிதாக எதிராக முதல் எண்ணம் விதையாக விழுந்தது.
காலம் அந்த விதையை அழித்து விடுமா...?


இனி நினைவின் நிஜங்களுடன்........
 
Last edited:
இந்த கிருபாலியால்தான் பிரச்சனை வரும்ன்னு ஏற்கனவே நான் நினைத்தேன்
இங்கே வந்து சொல்லத்தான் முடியலை
அதே போல சாந்தியின் அம்மா குழந்தையின் மனதில் விஷத்தை இறக்கிட்டாள்
இந்த கனலியும்தானாச்சு
அக்கா குழந்தைகளை பக்கத்தில் வைத்து கொள்பவள் விஷ்வஜித்தின் அண்ணன் பிள்ளைகளையும் கூப்பிட்டு பக்கத்தில் வைச்சுக்க வேண்டியதுதானே
இப்போ கனலியின் மீது வன்மம் கொண்ட கிருபா என்ன வினையை இழுத்து வைக்கப் போறாளோ?
 
Last edited:
என்னடா எல்லாம் சந்தோஷமா போகுதேனு நினைச்சேன்...

அதுக்குள்ள கிருபா கண்ணுக்கு கனலி அரக்கி ஆகிட்டாளா..இந்த முள்ளை எப்டி கனலி சரிபன்ன போறா...

சின்ன புள்ளைங்க மனசைக் கெடுக்கிறதே பெரியவங்க தான்....பக்கத்தில யாரு இருக்கானு பாத்தே பேசுறதில்ல...
 
இந்த கிருபாலியால்தான் பிரச்சனை வரும்ன்னு ஏற்கனவே நான் நினைத்தேன்
இங்கே வந்து சொல்லத்தான் முடியலை
அதே போல சாந்தியின் அம்மா குழந்தையின் மனதில் விஷத்தை இறக்கிட்டாள்
இந்த கனலியும்தானாச்சு
அக்கா குழந்தைகளை பக்கத்தில் வைத்து கொள்பவள் விஷ்வஜித்தின் அண்ணன் பிள்ளைகளையும் கூப்பிட்டு பக்கத்தில் வைச்சுக்க வேண்டியதுதானே
இப்போ கனலியின் மீது வன்மம் கொண்ட கிருபா என்ன வினையை இழுத்து வைக்கப் போறாளோ?
சில சமயம் நான் எதிர்பார்க்காத பல மாற்றம் குழந்தைகள் கிட்ட நடக்கும்.
சரிய கையாண்டால் அனைத்தும் நல்லதாக முடிவடையும்.

சாரி பானு மா நான் டைப் பண்ணும் பாேது மிஸ்டேக்கா பைரவிக்கு பதிலா சாந்தின்னு டைப் பண்ணிடேன்.
 
Top