Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 8(2)

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கண் விழித்தேன் உன் நினைவில்
-- செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 8(2)

ஒரு வருடத்தில் தன் வீட்டின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை புரிந்து கொண்ட கனலி அமைதியுடன் வீட்டின் கதவு திறப்பதற்காக காத்து இருந்தாள்.

நேரம் ஏழரையை தொடும் சமயம் வீட்டின் கதவு திறக்கப்பட எழுந்து நின்ற கனலி கதவை திறந்தது யாரென்று பார்க்க அந்த பெண்ணை யார் என்று அவளுக்கு சுத்தமாக அடையாளம் தெரியவில்லை.

திருவிழாவிற்கு வந்த உறவுக்காரர்களாக இருக்குமோ என்று எண்ணி பார்த்தாலும் இருபதுகளின் ஆரம்பத்தில் இருப்பதுபோன்ற அந்த உறவுப் பெண்ணை இதுவரைக்கும் பார்த்ததாக ஞாபகம் இல்லை.

தன் வீட்டின் கதவை திறந்தது யாராக இருக்கும் என்று யோசனையுடன் பார்த்துக் கொண்டிருக்க கதவைத்திறந்த பெண்ணும்

"யார் நீ?
எதுக்காக எங்க வீட்டு வாசல்ல உட்கார்ந்து இருக்க?" என்று கேட்க

தன் வீட்டிலிருந்து கொண்டு தன்னையே யார் என்று கேட்டதால் ஏற்பட்ட கோபத்தை அடக்கிக்கொண்டு

"நான் யாரு உங்க வீட்டுல இருக்குறவங்க சொல்லுவாங்க." என்று அந்த பெண்ணை தன் ஒரு கையால் தள்ளிவிட்டு வீட்டிற்குள் வர, அந்தப் பெண்ணோ கனலி கையை பிடித்து தடுத்து எவ்வளவு

"தைரியம் இருந்தா என் வீட்டுக்குள்ளே என்ன தள்ளிவிட்டு உள்ள வருவ, வெளியே போடி. என்று கத்த அந்தப்பெண்ணின் சத்தத்தில் வீட்டின் ஒவ்வொரு அறையில் இருந்தவர்களும் வெளியில் வர, திலகவதி சத்தமிட்டு கொண்டிருந்த பெண்ணின் அருகில் வந்து

"அம்மாடி பூஜா என்னம்மா என்ன ஆச்சு எதுக்காக இவ்வளவு சத்தமா பேசிக்கிட்டு இருக்க." என்று கேட்க அந்த பூஜாவும்

"அத்தை பாருங்க இந்த பொண்ணு என்ன தள்ளி விட்டுட்டு வீட்டுக்குள்ள வரா. யாருன்னு கேட்டா பதில் சொல்ல மாட்டீங்க." என படபடப்பாக பேச அதன்பின்பே நாற்காலியில் அமர்ந்து இருந்த கனலி பார்த்து திலகவதி

"கனலி நீ எப்ப வந்த, வந்தவுடனே எதுக்காக அண்ணிகிட்ட சண்டையை ஆரம்பிக்கிற." என்று விசாரிக்க

கனலி என்ற வார்த்தை அந்த பூஜாவிற்கும், அண்ணி என்று ஒரு வார்த்தையை கனலில் மனதில் எழுந்த அனைத்து கேள்விகளுக்கும் பதிலாக அமைந்துவிட மேற்கொண்டு எதுவும் பேசாமல்

"அம்மா நைட் முழுக்க டிராவல் பண்ணி வந்தது ரொம்ப டயர்டா இருக்கு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கறேன், அப்புறமா பேசலாம்." எனக்கூறிவிட்டு தன் அறையை நோக்கி நடக்க, அவளை தடுத்த திலகவதி

"அந்த ரூம்ல அண்ணனும் அண்ணியும் இருக்காங்க." என்று கூற

அடுத்த அறையை நோக்கி பார்வையை செலுத்த அந்த அறையின் வாசலில் கமலி தன் கணவன் கிரிதரன் மற்றும் மூன்று மாத பிள்ளையுடன் நின்றுகொண்டிருந்தாள்.

மற்றொரு அறையின் வாசலில் புதியவர்கள் இருவர் நின்று கொண்டு இருக்க முக ஜாடியை வைத்தே அவர்கள் பூஜாவின் உறவினர்கள் என்று அறிந்து கொண்டாள்.

"சரிமா இப்ப நான் எங்க ரெஸ்ட் எடுக்கிறது." என்று கேட்க

"நீ இன்னைக்கு வருவேன்னு எங்களுக்கு தெரியாது. தெரிந்திருந்தால் ஏதாவது ஏற்பாடு பண்ணி இருப்பேன்." என்ற தாயின் முகத்தை பார்த்த கனலி

"கோவில் திருவிழா ஆரம்பிக்குது அதுக்கு நீங்க என்ன வர சொன்னதா பாதர் என் கிட்ட சொன்னாரு. அப்போ நான் வருவேன்னு எதிர் பாக்கலன்னு நீங்க சொல்றீங்க." என கூறி விட்டு அவர்களிடமிருந்து பதில் வரப்போவதில்லை என்பதை புரிந்து கொண்டு தன் தாயர் அறைக்குள் சென்று

"அம்மா தயவு செஞ்சு யாரும் என்னை தொந்தரவு பண்ணாதீங்க. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன் அப்புறமா எதனாலும் பேசிக்கலாம்."

கட்டிலின் விழுந்த கனலி தேவையில்லாத நினைவுகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு

"நான் இங்க ஒரு வாரம் தங்க மட்டும்தான் வந்திருக்கேன். வேற எந்த பிரச்சனைகளையும் தலையிடக்கூடாது ஒருவாரம் முடிஞ்சதுக்கு அப்புறம் இங்க இருந்து சீக்கிரமாக கிளம்பிடனும்." என நினைத்துக்கொண்டு அப்படியே உறங்கிப் போனாள்.

♥♥♥♥♥♥♥♥♥

காலையில் படுத்ததும் உறங்கிய கனலி விழித்துப் பார்க்கும் பொழுது மணி மதியம் 12:30 என காட்டியது. எழுந்து தன் டிராவல் பேக்கில் இருந்து மாற்று உடை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு பின்னே இருந்த குளியலறையில் குளித்து விட்டு வர, வீட்டில் உள்ள அனைவரும் உணவருந்திக் கொண்டு இருந்தனர்.

கனலியை பார்த்ததும் கமலி உணவருந்த அழைக்க கனலி அமைதியாக சென்று உணவருந்தி விட்டு எழுந்து கொண்டாள்.

அவள் உணவருந்தும் பொழுதே புதிதாக அண்ணி என்று அறிமுகமான பெண்ணுக்கும் அண்ணனுக்கும் இடையில் இருந்த பார்வை பரிமாற்றத்தை கவனித்தாலும் அதில் என்ன இருந்தது என்பதை அவளால் அறிந்து கொள்ள முடியவில்லை.

எதுவாக இருந்தாலும் அதில் தனக்கு எந்தவித அக்கறையும் இல்லை என்பதுபோல் கனலி செய்து ஒவ்வொன்றும் இருந்தது.


அதன் பின் வந்த நாட்களில் கனலி தூங்குவதற்காக மட்டுமே வீட்டிற்குள் வந்தாள். மற்ற நேரங்களில் எல்லாம் தம்பி தங்கையுடன் ஊர் சுற்றுவது, தன் பழைய தோழிகளுடன் அரட்டை அடிப்பது, கோவில் திருவிழாவில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்வது என்று தன்னை பிஸியாகவே வைத்திருந்தாள்.

ஊரிலுள்ள பெரும்பாலனவர்களுக்கு கனலி தெரியும் என்பதால் அனைவரும் நெடு நாளுக்கு பின் பார்க்கும் கனலி வீட்டிற்குள் அழைத்து, அவளின் நல விசாரிப்புகள் எல்லாம் முடித்து, பெங்களூர் அவள் படிப்பு முதற்கொண்டு அனைத்தையும் கேட்டு அறிந்து கொண்டு, அவர்கள் வீட்டில் ஏதாவது உணவருந்த வைத்துவிட்டு அனுப்பினர்.

திருவிழாவிற்காக உறவினர்களின் கூட்டம் வருவதும் போவதுமாக இருக்க வீரபாண்டி ஊரே சொர்க்கமாக காட்சியளித்தது.

வைகை நதியின் கரையில் இருக்கிற காட்டுப் பகுதியில் அசுரன் ஒருவனை வெல்ல கௌமாரி ஒரு சிவலிங்கம் செய்து அதன்முன் தவ செய்து வந்தார்.

இதையறிந்த அசுரன் கௌமாரியைத் தூக்கிச் செல்ல முயற்சி செய்ய, இதைத் தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த கௌமாரி அருகிலிருந்த அருகம்புல்லை எடுத்து அவனை நோக்கி வீசினாள்.

அந்த அருகம்புல் முக்கழுப்படையாக (ஆயுதமாக) மாறி அசுரனை இரண்டாகப் பிளந்து கொன்றது. இதைப் பார்த்த தேவர்கள் வானிலிருந்து மலர்களைத் தூவினர்.

அவள் பூஜித்து வந்த சிவலிங்கத்திற்கு "திருக்கண்ணீசுவரர்" எனப் பெயரிட்டாள்.

நெடுநாட்களுக்கு பின் வீரபாண்டியன் தனது இரண்டு கண்களின் பார்வையை இழந்த பாண்டிய மன்னன் தனக்கு கண் பார்வை வேண்டி பல கோயில்களுக்குச் சென்றான்.

அப்பாெழுது அவனது கனவில் தோன்றிய சிவபெருமான் வீரபாண்டியில் தவமிருக்கும் கௌமாரியம்மனை வணங்கி அதன்பிறகு கண்ணீசுவரமுடையார் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கண் பார்வை கிடைக்கும் என்று சொன்னார்.

அதன்படி அந்த பாண்டிய மன்னனும் வீரபாண்டிக்கு வந்து கௌமாரியை வணங்கி ஒரு கண்ணின் பார்வையும், கண்ணீசுவரமுடையாரை வணங்கி மற்றொரு கண்ணின் பார்வையையும் பெற்றான்.

அதன் பின்பு கண்ணீசுவரமுடையாருக்கு கற்கோயிலும், கௌமாரியம்மனுக்கு சிறிய கோயில் ஒன்றையும் அமைத்து வழிபாடு செய்தான்.

இந்தக் கோயிலுக்கு சித்திரைத் திருவிழாவின் போது மட்டும் 24 மணி நேரமும் கோயிலில் வழிபாடு நடத்தப்படும்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை இங்கு நடைபெற்ற திருவிழாவில் தன் தந்தையுடன் வந்து ஒவ்வொரு நாள் நடைபெறும் சிறப்பு பூஜைகளையும், ஆராதனைகளையும், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செலுத்தும் நேர்த்திக் கடன்களையும் பார்த்த கனலி, இன்று தான் மட்டும் தனியாக நின்று பார்ப்பது வருத்தமாக இருந்தாலும், தன் தந்தையின் நினைவுகள் இன்னும் இந்த மண்ணில் தான் இருக்கின்றது என்ற எண்ணம் ஆறுதல் தர அங்கு நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் கவனத்துடன் பார்க்க ஆரம்பித்தாள்.

கெளரி அம்மனிடம் நேர்த்திக் கடனாக வேண்டிக் கொண்டவர்கள் அக்கினிச் சட்டி எடுத்து காணிக்கை செலுத்துகின்றனர்.
சிலர் நாக்கில் அலகு குத்துதல் எனும் சிறிய வேலைக் குத்திக் கொண்டு அக்கினிச் சட்டி எடுக்கின்றனர்.
சிலர் ஆயிரம் கண் பானை எடுத்து காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
சிலர் உடல் முழுவதும் முல்லை ஆற்றின் கரையில் உள்ள சேற்றைப் பூசிக் கொண்டு கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்கின்றனர்.

அனைத்துப் பக்தர்களும் முல்லை ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்துச் சென்று அம்மன் கோயிலில் இருக்கும் முக்கொம்புவிற்கு ஊற்றிவிட்டுஅதன்பிறகு அம்மனை வழிபட, கனலியும் யாழினி, இனியனுடன் இணைந்து தீர்த்தத்தை முக்காெம்பில் ஊற்றி வணங்கிவிட்டு வந்தாள்.

திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளாக அம்மன் அன்ன வாகனம், சிம்ம வாகனம், காமதேனு வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம் போன்றவற்றில் பக்தர்களுக்குக் காட்சி அளித்தார்.

சித்திரைத் திருவிழாவில் வெள்ளிக் கிழமையன்று பூவால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் ஊர்வலமாகக் கொண்டு வரப்படுகிறார். அன்று இதைக் காண அதிக அளவில் மக்கள் கூட, கனலி கூட்டத்தாேடு இணைந்து காெண்டாள்.

திருவிழாவில் பொழுது போக்கிற்காக அமைக்கப்பட்ட ராட்டினங்கள், சர்க்கஸ் மற்றும் பல வேடிக்கை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் அனைத்திலும் கனலி தன் தாேழிகளுடன் ஆர்வத்துடன் சுற்றி திரிந்தாள்.

அனைத்தும் நல்லபடியாக முடிந்து நாளை தான் பெங்களூர் கிளம்ப வேண்டும் என்று நிம்மதியுடன் உறங்கிய கனலி தனக்காக அடுத்த நாள் விடியலில் காத்திருந்த பூகம்பத்தை அவள் உணர்ந்திருக்கவில்லை.

நினைவு நிஜமாகுமா......


மக்களே ஏதோ எனக்கு தெரிஞ்ச வரையிலே பாண்டி கௌரி அம்மன் கோவில் திருவிழா பத்தி எழுதியிருக்கேன்.
இதுவரைக்கும் நான் அந்த ஊர் திருவிழாவை நேரில் பார்த்தது கிடையாது. என் தாேழி சாென்னத வச்சு எழுதிட்டேன், அதனால தப்பு ஏதாவது இருந்தா என்ன மன்னிச்சிடுங்க.
மறக்காமல் படித்த உடனே உங்களுடைய கமெண்ட் காெடுங்க.


மீ வெய்டீங்
 
Last edited:
Top