Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 02 (A)

Advertisement

lekha_1

Active member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

பெரிய பகுதியாக வைப்பதற்கு சிறியதாக அளித்தல் வசதியாகையால் இனி இரண்டிரண்டு பகுதிகளாக கதை வரும். இதோ, இரண்டாம் பகுதியின் முதல் பாகம்.


காதல் 02
653

“இங்க பாருங்க பொண்ணுகளா… வேலை எல்லாம் வெசையா நடக்கனும். பொழுது சாயறதுக்குள்ள இருக்குறது எல்லாத்தையும் பிரிச்சு லோடு ஏத்தியாகோனும். அதனால பேசாம வேலைய பாருங்க” என்று சக்தி கத்திக்கொண்டிருக்க, அவனை தன் வாய்க்குள் வசை பாடிக்கொண்டே சிறிது தள்ளி வேறொரு வயலில் அவன் முன்பு சொல்லி சென்றவற்றை செய்துகொண்டிருந்தாள் ஆதினி.

“அடியே! என்னடி வாயிக்குள்ளயே மொனங்குற? அவன் பார்த்தான்னா உன்ன ஏதாவது ஏசுவான்!” என்று அவள் அருகிலிருப்பவள் கூற,

“ஆமா! இவன் என்ன வந்து ஏசும்போது என் வாய் என்ன வாய்க்கால்ல போற தண்ணிய மொண்டா குடிச்சிட்டு இருக்கும்? நானும் ஒரு வழியாக்காம விடமாட்டேன்” என்று அவள் இன்னும் எகிற,

“என்னடி இவ! உனக்கு ஏன் அவன் மேல இப்படி ஒரு காண்டு?” என்று மற்றவள் கேட்க,

“அவன பாத்தாலே புடிக்கலடி! அகராதி பிடிச்சவன், எப்பப்பாரு எதையாச்சும் ஒளப்பரிட்டே இருக்கான், அதுவும் இப்போ எல்லாம் இவன் ஆட்டம் ரொம்பத்தேன் எச்சா இருக்கு” என்று ஆதினி கூற,

“அதுக்கு என்னடி? அவன் என்னமோ பண்ணிட்டு போறான், உனக்கா சொத்து கொறைஞ்சு போகுது?” என்ற மற்றவள் தன் வேலையை பார்க்கச் செல்ல, ஆதினி மட்டும் அவ்விடத்திலேயே நின்று சக்தியை முறைத்துக்கொண்டிருந்தாள்.

ஆதினியின் பெற்றோர்களுக்கு பலகாலமாக முகிலின் வயலில் தான் வேலை. சில வருடங்களுக்கு முன்பு அவள் தந்தை இறந்துவிட, தாய் மட்டுமே அவளை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்டபோது அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியது முகிலின் குடும்பமே!

ஆதினியின் படிப்பு செலவு முழுவதும் வள்ளுவரே ஏற்றுக்கொள்ள, அவள் படிப்பின் பொறுப்பை முகில் ஏற்றுக்கொண்டான், அவள் படிப்பை கெடுக்கும் பொறுப்பை சக்தி எடுத்துக்கொண்டான்.

ஆதினிக்கும் அயினிக்கும் சில வருடங்கள் மட்டுமே வித்தியாசம் என்பதால் இருவரும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய தோழிகள். தற்போது தான், அயினி வெளியூருக்கு படிக்க சென்றுவிட்டதால் இந்த நகமும் சதையும் பிரிந்து இருக்கிறது. அதில் இந்த சதைக்கு மிளகாய்த்தூள் தூவி எரிச்சல் படுத்துவது சக்திக்கு பொழுதுபோக்கு. (அவன் யார்கிட்ட தான் வம்பு வளர்க்காமல் இருக்கான்?)

தன்னால் இயன்றவரை தாயின் சுமையைக் குறைக்க வேண்டும் என்று வைராக்கியத்தோடு படித்தவள், தான் வாங்கிய மதிப்பெண்ணிற்கு பல கல்லூரிகளில் இடம் கிடைத்தாலும், கணிதம் படித்து, அத்தோடு டீச்சர் ட்ரைனிங் முடித்து தற்போது அவள் ஊருக்கு அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலை செய்கிறாள். இருந்தாலும் பள்ளி விடுமுறை நாட்களில் இவ்வாறு வயலில் வந்து வேலை செய்வது வழக்கம்.

அன்றும் அவ்வாறே வர, அவள் நேரம், வள்ளுவருக்கு வெளிவேலை இருந்ததால் சக்தியை மேற்பார்வையிட சொல்லியிருந்தார். அவன் அக்கப்போரைக் கண்டுதான் ஆதினிக்கு ரத்தக்கொதிப்பு எகிறியது.

தற்போது கூட, வரப்பில் நின்று அவன் ஒவ்வொருவராக அதிகாரம் செய்து கொண்டிருக்க, அதைக் கண்டு ‘இந்த கொளுத்துற வெயில்ல தொரைக்கு கூளிங் கிளாஸ் ஒன்னு தான் கேடு’ என அவள் மனம் வசை பாடவும் தவறவில்லை.

அவள் அறிவாளா, அது முகில் மும்பையில் அவனுக்காக வாங்கிக்கொடுத்தது என்று? அன்றிலிருந்து தூங்கும் நேரம் தவிர எப்பொழுதும் அதனை அணிந்தே இருந்தான் சக்தி. (தூங்கும்போது ஏன் விட்டான்னா, அவன் சுத்துறதுல கண்ணாடி உடைந்துவிட்டால்? அந்த நல்லெண்ணம் தான்!)

அதுமட்டுமல்லாது, தற்பொழுதெல்லாம் சக்தியின் வால் சற்று நீண்டே இருப்பதால் ஆதினிக்கு அதுவும் ஒரு பிடித்தமின்மையை உண்டாக்கியது.

அனைத்தும் முடித்துவிட்டு ஒரு மரத்தை நோக்கி நடந்துகொண்டே “வெய்யில் கொளுத்திங்! வேர்த்து கொட்டிங்!” என்று தன் சட்டையில் வேர்வையை துடைத்தவாறே அவன் ஆதினியை தாண்டி செல்ல,

“அடியே இவளே! அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்தராத்திரில குடை பிடிப்பான்ன்னு சொல்வாங்கல்ல, இதோ போகுது பாரு விளக்கம்” என்று அவள் சொல்ல,

“ஏன்டி இப்படி?” என்று அவள் தோழி தலையில் அடித்துக்கொள்ள,

சக்தியோ “எவ அவ?” என்ற பாவனையில் திரும்பினான்.

“ஓஓ… நம்ம டீச்சரம்மா! வாத்தியச்சிக்கு வயல்ல வேலை செய்ய தெரியலன்னு என்னைய வம்பிழுத்து தப்பிக்க பாக்குறியோ?” என்று சக்தி அவளை குறை கூற,

அதில் கோபம் வந்தவள், “யாருக்கு தெரியல? உனக்கு தான் தெரியல. எங்க, நீ ஒழுங்க நாத்து நடு பார்ப்போம். வந்துட்டான் வக்கனையா வாய் பேச, செயல்ல ஒன்னும் கானோம்” என்று அவள் சொல்ல,

“இங்க மட்டும் என்ன வாழுதாம்? நீ பாடம் நடத்துற லட்சனத்த பசங்க வந்து சொல்லுறாங்க, நாத்து நட்ற லட்சனத்த நான்தான் பாக்குறேன்ல” என்று அவன் நக்கலாக கூற,

“ஓ… நான் ஒழுங்க செய்யுறது இல்லையோ? அப்போ நீ வந்து கத்துகொடுக்குறது” என எகிற,

“எனக்கு வேற வேலை இல்ல பாரு” – இது சக்தி.

“தெரிஞ்சா தான சொல்லி தர்றதுக்கு!” – ஆதினி.

ஆதினியின் பேச்சில் கோபம் வந்தவன், அவள் பேச்சை நிறுத்தும்பொருட்டு, “எனக்கு தெரிஞ்சது எல்லாம் சொல்லித்தர நான் ரெடிதான் புள்ள. ஆனா, மாமன் கிட்ட கத்துக்க நீ ரெடியா?” என்று தன் கூலிங் கிளாசை தூக்கி கண்ணடிக்க, அவன் கூற்றில் அவள் விழிகள் நெருப்பை கக்கின.

அவனுடன் சண்டையிட அவள் ஆயத்தமாக, அதற்குள் அவள் தோழி ஆதினியை இழுத்து சென்றாள்.

அவனை முறைத்தவாறே சென்றவள் தன் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்து நின்றவன், மெல்ல சீட்டியடித்தவாறே எதிர்ப்புறம் செல்லலானான். இத்தனையும் பார்த்துநின்ற ஊர் மக்கள், ‘இதுங்க ரெண்டுக்கும் இதே பொழப்பா போச்சு!’ என்று தலையிலடித்தவாறே தங்கள் அலுவலை கவனிக்கலாயினர்.


******
“ஏன்டி… அவந்தான் எகத்தாளமா பேசுறான்னா, நீயும் அவனுக்கு ஏட்டிக்கு போட்டியா நிக்குற. இது தேவையா உனக்கு?” என்று கேட்டாள் மதி.

“உன்ன யாருடி என்ன இழுத்துட்டு வர சொன்னா? அங்கேயே இருந்துருந்தேனா நடந்துருக்குறதே வேற”

“அதனால தான்டி நான் உன்ன கூட்டிட்டு வந்துட்டேன்” என்றவளை முறைக்க மட்டுமே முடிந்தது ஆதினிக்கு.

அப்போது, இருவரையும் நோக்கி வந்த ஒருவரை கண்டவள், “கொஞ்சம் பொறுடி, வர்றேன்” என்றுவிட்டு அவரை நோக்கி சென்று,

“ஏத்தை (ஏன் அத்தை), உங்க பையனுக்கு வரன் பாத்துட்டீங்க போல” என கேட்க,

அந்த பெண்மணியோ குழப்பத்துடன், “என்ன சொல்ற அம்முணி?” என்க,

“அய்யய்யோ! மன்னிச்சுக்கோங்கத்தை… உங்க மகன் தோட்டத்துல ஒரு புள்ளகிட்ட ரொம்ப நேரமா பேசிட்டு இருந்தானா, அதான்!” என்று அவள் இன்னும் பல பிட்டுகளை சேர்த்து அள்ளி விட, அதனை உண்மை என நம்பிய அவர் தன் மகன் சக்தியை பார்க்க அவன் இருக்கும் இடத்திற்கு சென்றார்.

அவர் சென்றதும் வெற்றிப்புன்னகை சிந்தியவளிடம் வந்த அவள் தோழி, “என்னடி சொல்லி வெச்ச அவங்ககிட்ட? இப்படி கோபமா போறாரு?” என்று கேட்க,

“அவனுக்கு கொழுப்பு கொஞ்சம் அதிகமாகிடுச்சுல, அத குறைக்க வழி சொல்லி அனுப்பிருக்கேன்” என்றவள் முழுவதும் சொல்லிவிட்டு, அந்த வைத்தியத்தை நேரில் காண மதியையும் அழைத்து வயலை நோக்கி சென்றாள்.

“அடிப்பாவி! நீ இப்படி சொல்லிருக்கியே, அங்க அவன் எந்த பொண்ணு கூடயும் பேசாம இருந்தா என்ன பண்ணுவ?” என்று மதி நடந்துகொண்டே கேட்க,

அவளை பார்த்து சிரித்தவள், “நீ வேணா பாரு, அந்த மலைக்குரங்கு ஏதாவது பொண்ணுகிட்ட மொக்க போட்டுட்டு தான் இருக்கும்” என்றவள், சக்தியின் தலை தென்பட்டதால் அத்தோடு பேச்சை நிறுத்திவிட்டு ஒரு மரத்தின் பின் தஞ்சமடைந்தாள்.


******

சாளை ஓரம் இருந்த ஒரு மரத்தின் அருகே கயிற்றுக்கட்டிலை போட்டு அமர்ந்திருந்தவன் தன்னருகே இருந்த ஒரு பெண்ணிடம் களவாணி வசனமான ‘மாமன கட்டிக்கிறேன்னு மட்டும் ஒரு வார்த்தை சொல்லு’ என்று அரத பழசான வித்தைகளை அவிழ்த்துவிட்டுக்கொண்டிருக்க, அவன் பின்னே வந்து நின்றார் அவன் தாய்.

அவரைக் கண்ட பெண், “நீ உன் அம்மாகிட்ட வாங்கி கட்டிக்கப் போற” என்க,

“அடி போ புள்ள! என்ற அம்மாவ கட்டி என் அப்பனே படாத பாடு பட்றாரு… இதுல நானும் படனுமா? நீ சொல்லு, உன்னைய கட்டிக்கிறேன்” என்க,

“ம்ம்க்கும்” என்று தோள்பட்டையை இடித்து சென்றுவிட்டாள் பெண்.

அதனைக் கண்டவன், “என் அருமை இந்த ஊருல இருக்குற யாருக்குமே புரிய மாட்டேங்குது” என்று புலம்ப,

“ஏன் புரியாம? அதெல்லாம் நல்லா புரியுதே” என்ற ஒரு குரல் அவனுக்கு பின்புறம் கேட்டது.

‘ஆத்தாடி! இது எங்க வீட்டு காளியம்மா குரலாச்சே!’ என்று நினைத்தவன் திரும்பிப்பார்க்க, சாட்சாத் காளியை போலவே நின்று கொண்டிருந்தார் அவன் தாய். (வெப்பன்ஸ் மட்டும் மிஸ்ஸிங்!)

“யம்மா!!!” என்று அவன் எச்சில் விழுங்க,

“இங்க கொஞ்சம் வா மகனே! அந்த புள்ள கிட்ட என்னமோ பேசிகிட்டு இருந்தியே அது என்னய்யா?” என்று அவர் கேட்க,

“சும்மா பேசிகிட்டு இருந்தேன்ம்மா” என்றவன் இரண்டடி அவர் அறியாதவாறு பின்னால் போக,

“சும்மா பேசுனதுக்கு எதுக்கு இவ்வளவு பயம்!” என்றவர், அவன் அசந்த நேரம் அவனை நெருங்கி, சட்டையை பிடித்து

“ஏன்டா… போற வர்ற பொண்ணுகள எல்லாம் முதலில் வம்பிழுத்து திரியுவ, இப்போ லவ்வு வரைக்கும் போயிட்டியா? எவளையாவது இழுத்துட்டு வீட்டு வாசப்படிய மிதி! இந்த காலு ரெண்டையும் அடுப்புல வெச்சுடறேன்… என்ன என்ன, என்னைய கட்டி உன்ற அப்பாரு கஷ்டப்படுறாப்புலயா? உங்க ரெண்டு பேரையும் வெச்சுட்டு நான்தான்டா கஷ்டப்படுறேன்…” என்றவர் அவனை அடிக்க பொருள் தேட,

அந்த இடைவெளியில் அவர் கையில் இருந்து தன் சட்டையை விடுவித்தவன், அவரை சுற்றிக்கொண்டு கட்டிலின் மறுபுறம் சென்று நின்று,

“யம்மா… உன்ற பையன பத்தி உனக்கு தெரியாதாம்மா… நான் சொக்கத்தங்கம்” என்று அவன் கூற,

“அடிங்க… உன் வண்டவாளத்த தான் ஒருத்தி இவ்வளவு நேரமா எனக்கு சொன்னா… இன்னைக்கு நான் உன்ன வெளுக்குறதுல இனி நீ என்றகிட்ட பேச கூட யோசிக்கோனும்” என்றவர் அவனை பிடிக்க வர,

“அடியாத்தி! அடேய் சத்தி! ஓட்றா…” என்றவாறு கட்டில் மீது ஏறி குதித்து ஓடினான்.

“பொழுது சாய வீட்டுக்கு வருவல்ல, அப்போ பாத்துக்குறேன் உன்னைய” என்று கருவிக்கொண்டு அவன் தாய் நிற்க,

இவை அனைத்தையும் கண்டவள் வாய்விட்டு சிரிக்கலானாள். இனி தாய்க்கும் மகனுக்குமான சண்டை ஒரு வாரத்திற்கேனும் செல்லும். அதனை நினைத்து சந்தோஷமாக அந்த இடத்தை விட்டு அகன்றாள் ஆதினி.




collage.jpg
 
Last edited:
Top