Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 02(B)

Advertisement

lekha_1

Active member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்....
சென்ற பதிவுக்கு ஊக்கம் தந்தவர்களுக்கு நன்றி. இதோ அடுத்த பதிவு. கொஞ்சம் பிடித்தமின்மை சிலருக்கு இருக்கலாம் இந்த பதிவைக் கண்டு. பட், இனி இவ்வாறு இருக்காது என்று கூறிக்கொள்கிறேன்... ஒரே ஒரு இடத்தில் மட்டும் நம்ம சந்தோஷ் கொஞ்சம் வாலாட்டுவான்.




காதல் 02(B)

658collage.jpg

அந்த க்ளப்பினுள் அமர்ந்திருந்தான் முகில். அவன் அருகே தீபக் மற்றும் அவர்களின் தோழன் சந்தோஷ். சந்தோஷ் மதுபானக் கோப்பையை கையில் ஏந்தியிருக்க, அவன் அருகில் இருந்த இருவரும் தங்கள் கைகளில் மோக்டைல்களை வைத்திருந்தனர். இருவருக்குமே மது அருந்துவது பிடிக்காது. இருந்தும் சபை நாகரீகம் கருதி தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டவர்கள் ஒரு சிப்பிற்கு மேல் அருந்தாமல் வைத்திருந்தனர்.

அவர்கள் அருகில் இருந்த சந்தோஷோ, போதையில் முக்குளித்திருந்தான். சந்தோஷ், இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவன். கர்நாடகாவின் ஷிமோகா பகுதியை சேர்ந்தவன். விதவிதமான மதுபானங்களை சுவைப்பதில் அலாதியான பிரியம் கொண்டவன், மாதுக்களையும் தான். இவை எல்லாம் சந்தோஷிடம் பிடித்தம் இல்லை என்றாலும் இவ்விரண்டையும் தவிர்த்துவிட்டு பார்த்தால் நல்ல மனிதன், மிகவும் நல்ல நண்பன். ரஞ்சியில் தோழமையாக இருந்தது, போட்டிக்கான பயிற்சி காலத்தில் இருவர் கூட்டணி மூவர் கூட்டணியாக மாறிவிட்டது. அதற்கு மற்றொரு காரணம், மூவரும் ஒத்த வயதுடையவர்கள். இன்றும் மறுநாள் மேட்சை வைத்துக்கொண்டு மதுகச்சேரியை நடத்திக்கொண்டிருந்தான் அவன். அருகில் வேறு வழி இல்லாமல் தொடுப்பாக இருவர்.

“டேய் மச்சான்! ஏன்டா இப்படி இருக்கீங்க? இங்க பாரு, இவன் ஒரு டோர்டுகா வெச்சுட்டு இருக்கான். நீ ஒரு ரோய் ரோகர்ஸ் வெச்சுட்டு இருக்க. இதெல்லாம் நல்லாவா இருக்கு? இந்த விடுதில உலகத்துல பிரபலமான எல்லா சரக்கும் கிடைக்கும். இப்படி ஒரு சேன்ஸை மிஸ் பண்ணீட்டு இருக்கீங்களே!” என்றவன், அவர்களுக்கு அறிவுரை சொன்ன களைப்பில் மற்றொரு மதுவை உள்ளே தள்ளினான்.

“வேணாம்டா… முதலிலேயே நீ நிறைய குடிச்சுட்ட. இதுல ரெண்டு வகையான மதுவை கலக்காதே. நாளைக்கு மேட்ச் இருக்கு” என்று தீபக் அவனை தடுக்க,

“ஹே மேன், எப்படி என் போதையை இறக்கனும்னு எனக்கு தெரியும். லா ஓஃப் கண்சர்வேஷன் ஓஃப் எனர்ஜி தெரியுமா? சேம் திங் அப்ளைஸ் ஹியர். ஒரு போதை இன்னொரு போதையாக மாறினா முடிஞ்சது” என்றவன், அங்கே இருந்த ஒரு பெண்ணை நோக்கி சென்று,

“ஹாய் பேப்ஸ்… ரொம்ப நேரமா என்னையே பார்த்துட்டு இருந்தியே! ஷால் வீ டேன்ஸ்?” என்று கேட்க, “வை நாட்!” என்றவள் அவனுடன் டேன்ஸ் ஃப்ளோரை நோக்கி செல்ல, இருவரும் அந்த ஆட்டத்தை எங்கே தொடரப்போகின்றனர் என்பது சிறிது நேரத்திலேயே தெரிய,

“இவன் ஏன்டா இப்படி இருக்கான்?” என்று முகில் கேட்க,

“மச்சி! இது எல்லாம் ஸ்ட்ரெஸ் பஸ்டர்ஸ் மாதிரி இவனுக்கு. நானும் எவ்வளவோ சொல்லிப்பார்த்துட்டேன். கேட்டா தானே? என்னைக்காவது அவனுக்கே புரியும். ஆனால் அது காலம் கடந்து இருக்கக்கூடாதுன்னு தான் நான் வேண்டுவது” என்ற தீபக் அறியவில்லை, அவர்கள் நண்பனுக்கு காலம் எழுதி வைத்திருப்பது அதுதான் என.

“என்னவோ போ! நான் கிளம்புறேன். மேட்ச் இருக்குல்ல. போய் தூங்கறேன்” என்ற முகில் லிஃப்டை நோக்கி சென்றான்.

அவன் ஊருக்கு அழைத்து பேசிக்கொண்டிருக்க, அவன் அருகில் ஒருவர் வந்து நின்றதையும் கவனிக்கவில்லை, அவன் பேசும் விதத்தை கூர்ந்து நோக்குவதையும் உணர்ந்தான் இல்லை.

அதற்குள் லிஃப்ட் தரைத் தளத்தை அடைந்திருக்க, பேசியவாறே உள்ளே சென்றவன் தன் அறை இருக்கும் பதிமூன்றாம் தளத்தை அழுத்திவிட்டு மீண்டும் தொலைபேசியில் மூழ்கினான். இடையில் ஒரு தளத்தில் லிஃப்ட் நிற்க, வெளியேறியது ஒரு உருவம்.

*****

“சரி அனி! வீட்டுக்கு கால் செய்து பேசிடு. பை!” என்று அழைப்பை துண்டித்தவன் தன் உடுப்பை மாற்றப்போக, அழைப்புமணி ஒலித்தது.

‘யாராக இருக்கும்?’ என்ற யோசனையினோடே அவன் கதவை திறக்க, ஒரு ரஷ்ய மங்கை ஒயிலாக நின்றிருந்தாள்.

“ஹாய் ஹாண்ட்சம்!” என்றவள் உள்ளே நுழைய அவன் அனுமதி வேண்டி நிற்க, “யார் நீ?” என்று கேட்டான் அவன்.

“உனக்காக அனுப்பிவைக்கப்பட்டவள்” என்று அவள் கூற,

புருவத்தை உயர்த்தியவன், “சாரி! தேவையில்லை” என்று கூறி கதவடைக்க சென்றான்.

அதனை தடுத்தவள், அறைக்குள் தானாக வந்து அவன் தோள்களில் கைகளால் மாலையிட்டு தன் கால் கொண்டு கதவையடைத்தவள், “அது இப்போ தெரிஞ்சிடும்” என்று அவன் முகம் நோக்கி செல்ல, அடுத்த நொடி அவன் உதறியதில் தரையில் இருந்தாள்.

“கொன்றுவேன்! யார் உன்னை அனுப்பினார்கள்?” என்று அவன் உறும, அதில் பயந்தவள், அனுப்பியவர் பெயரை சொல்ல, ரௌத்திரம் அதிகமானது அவனுக்கு.

அதே கோபத்தோடு கதவை திறந்தவன், வெளியேறும்முன் அவளை நோக்கி, “நான் வரும்போது நீ இங்கே இருக்கக்கூடாது” என்றவன் அவள் பதிலை கூட எதிர்பார்க்காமல் சென்றான்.

அதன்பின்பும் அங்கிருக்க அவளுக்கென்ன பைத்தியாமா? உடனே வெளியேறிவிட்டாள் அவள்.


*****

கோபத்துடன் சந்தோஷின் அறையின் மணியை ஒலிக்கவிட்டான் முகில். அதில் கடுப்பான சந்தோஷ் கதவை திறக்க, அங்கே ருத்ரமூர்த்தியென நின்றிருந்தவனைக் கண்டு குழப்பமடைந்தான்.

“என்னடா இந்த நேரத்துல?”

“உன்னை யாருடா இந்த வேலை எல்லாம் பார்க்க சொன்னது?” என்று அவன் எகிற, சந்தோஷிற்கு என்னவென்று புரிய சிறிது நேரம் பிடித்தது. புரிந்ததும் அவன் எச்சில் விழுங்கினான்.

முன்பே சந்தோஷிடம் தீபக் சொல்லியிருந்தான், முகிலுக்கு இவை எல்லாம் பிடிக்காது என்று. அவ்வாறு இருந்தும் குடிபோதையில் விளையாடிப் பார்க்க அவனுக்கு முகில் தானா கிடைத்தான்?

‘இன்னைக்கு நான் செத்தேன்’ என்று நினைத்தவன், “அது வந்து மச்சான்…” என்று இழுக்க, அவனை தன்னால் முடிந்தமட்டும் திட்டி ஓய்ந்த முகில், அவன் மேலும் பேச வரும்போது கை நீட்டி தடுத்து,

“எதுவும் பேசாத நீ இனிமேல். ஏதாவது பேசின, என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்றவன் கோபமாக சென்று தன் அறையுள் புகுந்து கொண்டான்.

முகில் பழகுவதற்கு எவ்வளவு இனிமையானவனோ அவ்வளவு கோபம் உள்ளவன். அவனை எவ்வாறு சரிகட்டப்போகிறோமோ என்ற கவலை ஒரு புறம் இருந்தாலும், எவ்வாறேனும் அவனை சமாதானப்படுத்திவிடலாம் என்ற எண்ணத்துடன் உறங்கச்சென்றான் சந்தோஷ்.

அங்கே முகிலோ, சந்தோஷிடம் காட்ட முடியாத கோபத்தை சுவற்றில் காட்டிக்கொண்டிருந்தான்.


******

“சே!” என்று ட்ரெஸ்ஸிங் ரூமில் முகில் தன் க்ளவுஸை தூக்கி எறிய, அவன் முதுகில் ஒரு கை பட்டது.

யாரென்று அவன் திரும்ப, அவன் முன்பு சந்தோஷும் தீபக்கும் நின்றிருந்தனர்.

“சாரி மச்சான்! என்னால தான?” என்று மெய்யாகவே உணர்ந்து மன்னிப்பு கேட்டான் சந்தோஷ்.

முன்பே பேட்டிங்கில் அனைவரும் சொதப்பியிருக்க, ஃபீல்டிங்கில் ஒரு முக்கியமான கட்டத்தில் ரன் அவுட் செய்யும் வாய்ப்பை தவற விட்டுவிட்டான் சந்தோஷ்.

விக்கெட் கீப்பராக இருந்த முகில் தன்னிடம் பந்தை வீசுமாறு சைகை செய்ய, அதை கவனிக்காத சந்தோஷோ ஸ்டெம்பை நோக்கி பந்தை எறிய, அது குறி தவறி ஃபோராக எல்லையை நோக்கி ஓடியது. அந்த ஒற்றை தவறால் அன்றைய ஆட்டத்தின் வெற்றி எதிரணி பக்கம் சென்றது.

அதுமட்டுமில்லாமல் முகில் அன்று டக் அவுட்டாக, அதற்கு தான் நேற்று செய்த காரியம் தான் காரணமோ என்று குற்றவுணர்வும் தோன்றியிருந்தது அவனுக்கு. முகிலின் திறமையைப் பற்றி அறிந்தவன் அல்லவா?

முதல் நாள் ஆட்டத்தில் எந்த பதற்றமும் இருக்கக்கூடாது என்று நினைத்து அவன் செய்த செயலே மொத்தமும் மாறிப்போக காரணமாகிவிடும் என்று அவன் நினைத்தானா என்ன?

சந்தோஷ் தன்னிடம் மன்னிப்பைக் கேட்க, அவன் முகம் பார்த்தவன், “விடு மச்சி! அடுத்த மேட்சில் பார்த்துக்கலாம்” என்றவன் அவனை அணைத்துக்கொண்டான்.

முகிலுக்கு பதில் அணைப்பை தந்தவனோ, “சாரி மச்சான்!” என்க,

அவன் எதற்கு மன்னிப்பை யாசிக்கிறான் என்று அறிந்தவனோ, அவன் மனநிலையை மாற்றும்பொருட்டு, “ஒரு ரைட் போகலாமா?” என்று கேட்க, அதில் முகமலர்ச்சியடைந்த மற்ற இருவரும் ஆமோதிப்பாக தலையாட்டினர்.

அனைத்து வேலைகளையும் முடித்த மூவரும் அந்த விடுதியிலிருந்தே மூன்று இருசக்கர வாகனம் வாங்கி லண்டன் மாநகரத்தின் செயற்கை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகை அனுபவிக்க கிளம்பினர்.

இது மூவரும் வழக்கமாக செய்வது தான். பயிற்சி முடிந்ததும் தங்கள் வாகனங்களை எடுத்துக்கொண்டு எங்கேனும் சுற்றிவிட்டு வருவர். இன்றும் அதுபோலவே சென்று வந்தவர்களின் மனம் லேசாக இருந்தது. அடுத்த மேட்சில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்திருந்தது.


*****

நாளை முக்கியமான நாள் அவனுக்கு. தன் திறமையை இந்த உலகிற்கு நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். கிரிக்கெட் துறையில் திறம்பட செயல்பட்டுகொண்டே இருக்க வேண்டும். அதுவும் இப்பொழுது அதான் அவசியத்தை அவன் அறிந்தே இருந்தான். கடந்த இரண்டு போட்டிகளிலும் அணி வெற்றி பெறவில்லை. அதிலும் முகில் ஒற்றை இலக்கத்திலேயே ஆட்டமிழக்க, அவன் மீது போர்டிற்கு ஒரு அதிருப்தி ஏற்பட்டிருந்தது. அதனை களைய வேண்டியது மிகவும் அவசியம். இல்லையென்றால் அவனை அடுத்த போட்டியில் வெளியேற்றவேண்டியிருக்கும்.

இந்த யோசனைகளோடே தன் அறைக்கதவை திறந்து உள் நுழைந்தவனை வரவேற்றது அங்கே முன்பே அமர்ந்திருந்த ஒரு உருவம். அது பெண் என்பது பார்த்தவுடனே தெரிந்துவிட்டது அவனுக்கு.

'இவன அன்னைக்குதான் அவ்ளோ திட்டுனேன். இன்னிக்கு திரும்ப இப்படி செய்துருக்கான். இனி அவன்கிட்ட சொல்லி நோ யூஸ். இந்த பொண்ண திட்டுற திட்டுல இனி எந்த பொண்ணுமே என் ரூம் பக்கமே வர யோசிக்கனும்' என்று நினைத்தவன்,

"ஹலோ... உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? எனக்கு விருப்பமில்லைன்னு உங்கள அனுப்புனவன்கிட்ட ஆல்ரெடி சொல்லியும் அவன் கேட்கவே இல்ல. உங்களுக்கு பணம் தான வேணும்? இதோ!" என்று தன் பர்சில் இருந்து கத்தையாக பணத்தை எடுத்து அவள் புறம் வீசியவன், "ஜஸ்ட் கெட் அவுட்" என்று வாயிலைக் காட்டி திரும்பி நின்றான்.

தான் இவ்வளவு சொல்லியும் எந்த எதிரொலியும் இல்லையே என்று மீண்டும் திரும்பி, போய்விட்டாளா என பார்க்க, அங்கே இவனை முறைத்தவாறு கைகட்டி நின்றிருந்தாள் அந்தப் பெண்.

"நீ இன்னும் போகலியா? இன்னும் பணம் வேண்டுமா?" என்று கேட்டவனிடம் வெகு நிதானமாக உரைத்தாள் அவள், "இது என் ரூம். If someone has to leave, then it should be you!"

அவள் சொல்வது என்னவென்று புரிய, அந்த அறையின் வெளியே கதவில் ரூம் நம்பரை பார்த்தவன், 'ஐயையோ' என்று மானசீகமாக தலையில் கை வைத்தான்.


உள்ளே அவளோ, வெட்டவா குத்தவா என்று அவனை அன்போடு பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.
 
Top