Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 04(A)

Advertisement

lekha_1

Active member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

இதோ கதையின் அடுத்த பதிவு. இதில் ஒரே ஒரு சீன் தான் என்றாலும் கொஞ்சம் நீளம் அதிகம். நம்ம அனிலாவை பற்றி சில விஷயங்கள் சொல்லியிருப்பேன். யாருக்காவது சோகக்கதைகள் பிடிக்காது என்றால் அனிலா கதை சொல்லும் இடத்தை மட்டும் விட்டுவிடவும்.


காதல் 04(A)

775

இரண்டு வாரம் கடந்திருந்தது. இந்திய அணி முத்தரப்பு போட்டியை முடித்து வெற்றி வாகை சூடி தங்கள் நாட்டிற்கு திரும்பியது. அதில் சூப்பர் என்று சொல்ல முடியாவிட்டாலும், மோசம் என்று சொல்லி ஒதுக்க முடியாதபடி நன்றாகவே விளையாடியிருந்தான் முகில். அது அவனை அடுத்த போட்டியில் அணியில் சேர்க்க வைத்தது.

இதனை அறிந்ததும் அனிலாவிற்கு தெரியப்படுத்தியிருந்தான் அவன். இருவரும் பேசிய தினத்தில் இருந்து மூன்றாம் நாள் தன் நாட்டை நோக்கி பறந்திருந்தாள் அவள்.

இருவரும் அதன் பின்னரும் வாட்ஸ்ஆப், ஸ்கைப் என்று தங்கள் நட்பை வளர்த்துக்கொண்டனர்.

ஊருக்கு திரும்பியதும் தீபக்கின் ஆலோசனை படி அவன் வீட்டின் அருகிலேயே ஒரு வீட்டைப் பார்த்து அவன் வீட்டினரை அழைத்து கிரகப்பிரவேசமும் செய்துவிட்டான். அந்த படங்களை அனிலாவிற்கு அனுப்பவும் மறக்கவில்லை.

ஒரு நாள் அனிலாவுடன் ஸ்கைப்பில் வருவதாக வாக்களித்திருந்தான். சொல்லியிருந்தபடியே அவளுக்கு அழைக்க, அதனை எடுத்தவளோ, தன்னை சுற்றி ஒரு பக்கம் நோட்பேட், மறு பக்கம் கிடார் என அமர்ந்திருந்தாள். ஆனால், அவள் முகமோ, வழக்கத்தை விடவும் கவலையுடன் இருந்தது.

என்றுமே அனிலா இவ்வாறு அமர்ந்திருந்தால் அவள் பயிற்சி செய்கிறாள் என்று அர்த்தம். அவ்வாறான தருணங்களில் அவன் அமைதியாக அவள் பயிற்சி செய்வதை பார்த்துவிட்டு அமர்ந்திடுவான், அவள் அனுமதித்தால். சில சமயம் அப்படியே தூங்கி விடுவதும் உண்டு.

ஆஸ்திரேலியா இந்தியாவை விட நான்கரை மணி நேரம் முந்தியிருந்தாலும் இருவரும் பேச ஆரம்பிப்பது அவள் இரவு உணவு சாப்பிட்டபின் தான். ஒன்பது மணியளவில் பேச ஆரம்பித்தால், அவர்களின் பேச்சு இருவரில் ஒருவர் தூங்கும்போது தான் முடியும். அவ்வாறு என்ன பேசுவார்களோ, இருவருக்குமே தெரியாது.

சில சமயங்களில் அவள் சங்கீதத்தைப் பற்றியோ, அவன் கிரிக்கெட்டைப் பற்றியோ பேசும்போது அவர்கள் கண்களில் மின்னும் ஒளியை மற்றவர் ரசித்துப் பார்த்திருப்பர். இத்தனைக்கும் ஒருவருக்கு மற்றவரின் துறையைப் பற்றி ஒன்றுமே தெரியாது.

இன்று முகில் அனிலாவிற்கு அழைக்கும்போது அவன் கண்டதென்னவோ, சுரத்தே இல்லாமல் கிடாரை கட்டிக்கொண்டு ஹாய் சொன்னவளைத்தான்.

“ஹாய்! என்னவாச்சு அனி? உன் குரலிலும் சரி, முகத்திலும் சரி, துள்ளல் இல்லையே?” என்று அவன் விசாரிக்க,

“புது மாஷ்அப் (mashup) செய்வதற்கு சாங் சரியாக கிடைக்கவில்லை முகி!” என்றாள் அவள்.

மாஷ்அப் என்பது இரு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட பாடல்களின் சில வரிகளை மட்டும் எடுத்து அவற்றில் இருந்து ஒரு பாடலை தயாரிப்பது. முதலில் இது அந்தந்த வீடியோ அல்லது ஆடியோவை வைத்து மட்டுமே செய்து வந்தார்கள். இப்போது அனிலாவைப் போன்ற independent singers சிலர் பாடல்களுக்கு தாங்களே இசையமைத்தோ அதற்கு வேறு பாடல் அல்லது அதே பாடல்களின் இசையைக் கொண்டுஅமைத்திடுவர். இத்தகைய பாடல்களுக்கு சமீப காலங்களில் வலைதளத்தில் நல்ல வரவேற்பு உண்டு.

“ஓ…” என்பதோடு முடித்துக்கொண்டான் முகில்.

“ஒரு ஹிந்தி சாங் கிடைத்தாயிற்று. ஆனால், அதோட வேறு மொழியில ஒரு பாடல் சேர்க்கலாம்னு பார்த்தால், அதற்கான பாடல் தான் கிடைக்கல” என்று மேலும் புலம்பினாள் அனிலா.

அவள் சோகம் தீர்க்க, அது என்ன பாடல் என்று கேட்டு யூடியூப் உதவியில் அதன் பாடல் வரிகள் மற்றும் மொழியாக்கத்துடன் கேட்டும் புரியவில்லை அவனுக்கு.

“அனி, அந்த பாடல் கேட்டேன். டியூனே ரொம்ப சோகமா இருக்கு. ஆனால், அதுல என்ன சொல்ல வர்றாங்கன்னு தான் எனக்கு புரியல” என்று உதட்டை பிதுக்கினான் முகில்.

“இது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல்தான். வரி எல்லாம் பஞ்சாபி”

“ஓரளவுக்கு புரியுது. அதுல முதல் இரண்டு வரி?” என்று அவன் கேட்க, அதற்கு சிரித்து வைத்தாள் அனிலா.

“உனக்கு கண்டிப்பா புரியாது முகி” என்க,

“ஏன்?” என்று கடுப்போடு கேட்டான் முகில். அவள் சிரித்ததனால் கோபமாம்.

“அதற்கு பஞ்சாபியில் இரண்டு காதல் கதைகளைப் பற்றி உனக்கு தெரிந்திருக்கனும்” என்றவள் அவற்றைப் பற்றி விளக்க ஆரம்பித்தாள்.

“ஒவ்வொரு ஊருலயும் ஒரு காதல் கதை கண்டிப்பாக இருக்கு. அதில் காதலர்கள் சேரலாம், சேராமையும் போகலாம் இல்லையா? அப்படி பஞ்சாபிலும் நான்கு காதல் கதைகள் இருக்கு. அவை, ஹீர்-ராஞ்சா, மிர்சா-சாஹிபா, சாசி-புன்ஹுன், மற்றும் சோஹ்னி-மஹிவால். (Heer-Ranjha, Mirza-Sahiba, Sassi-Punnhun, Sohni-Mahiwal). இதில் இரண்டு கதைகளை வைத்து தான் இந்த பாடல் எழுதிருக்காங்க.

முதலில், ஹீர்-ராஞ்சா. ஹீர் என்று ஒரு பெண் பஞ்சாபின் மேற்கு பகுதில இருக்குற ஒரு கிராமத்துல வாழ்ந்து வருவா. அவ ரொம்ப அழகா இருப்பா. குஜராத்ல ஒரு கிராமத்துல ராஞ்சான்னு ஒரு பையன் இருப்பான். அவனுக்கு மூன்று அண்ணா. ஒரு சில காரணத்தினால் அவன் வீட்டை விட்டு வெளியேறி பல இடங்களில் சுற்றி ஹீரோட வீட்டுக்கு வந்து சேருவான்.

ஹீரோட அப்பா, அவனுக்கு கால்நடைகளை மேய்க்கற வேலையை கொடுப்பாரு. ராஞ்சாவும் அதனை ஏற்றுக்கொண்டு மேய்த்து வருவான். அவனுக்கு புல்லாங்குழல் நல்லா வாசிக்க வரும். அதைக் கேட்டு ஹீர் அவனை லவ் பண்ணுவா. ஹீர் மேல ராஞ்சாவுக்கும் லவ் இருக்கும். ரெண்டு பேரும் காதலிச்சுட்டு இருப்பாங்க. ஆனால், காதல் ஒரு நாள் இல்லை ஒரு நாள் மத்தவங்களுக்கும் தெரியத்தான் போகும் இல்லையா? இவங்க காதலும் அவளோட மாமா கண்ணுல பட்டு, வீட்டுக்கு நியூஸ் போயிருச்சு”

“அச்சச்சோ! அப்புறம் என்னாச்சு?”

“அப்புறம் என்ன? அவங்க வீட்டுல ஒத்துக்கவே இல்ல. ஹீருக்கு திருமணம் செய்து வேற ஊருக்கு அனுப்பி வைச்சுட்டாங்க”

“ரொம்ப பாவம் இல்ல இரண்டு பேரும். ராஞ்சா என்ன ஆனான்?” என்று முகில் வருத்தப்பட,

“இன்னும் கதை முடியல. ராஞ்சா காதல் தோல்வில சன்னியாசியா மாறி பஞ்சாப் முழுக்க சுத்துவான். கடைசில அவன் ஹீரை சந்திக்க, ரெண்டு பேரும் ஹீரோட அண்ணி (கணவனின் மனைவி) துணையோட அங்கே இருந்து எஸ்கேப். இந்த விஷயம் தெரிஞ்ச கணவன் அவங்களை கொண்டு வந்து மன்னரிடம் நிறுத்த, அவர் ரெண்டு பேரோட காதல் கதையைக் கேட்டு ஹீரோட கணவனை அவளை விவாகரத்து செய்யவைத்துவிடுவார். அப்போ தான இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்க முடியும்!”

“அதே மாதிரியே அவங்க கல்யாணம் செய்து அதுக்கப்புறம் ஹேப்பிலி எவர் ஆஃப்டர்-ஆ?” என்று முகில் மகிழ்வுடன் கேட்க, ‘எவன்டா இவன்!’ என்பது போன்று பார்த்துவிட்டு,

“ஹேப்பிலி எவர் ஆஃப்டர் எல்லாம் நடந்தால் அது வீட்டோட முடிஞ்சுருமே! பிரிந்தால் மட்டுமே உலகம் முழுவதும் பேசப்படும். நம்ம மனுஷங்களுக்கு யாரை நினைத்தாவது கவலை பட்டுக்கொண்டே இருக்கனும் போல. அதனால தான் கதைகளில் கூட காதலர்களை பிரித்தே வைத்து விடுகிறார்கள்” என்று சலித்துக்கொண்டவள் மேலே சொல்லலானாள்.

“ஹீரும் ராஞ்சாவும் ஹீரோட சொந்த ஊருக்கே வர, ஹீரோட அப்பாவும் அம்மாவும் அவங்களுக்கு திருமணம் ஏற்பாடு செய்யறாங்க. ஆனால், திருமணத்தன்று ஹீரோட மாமா அவள் சாப்பிட்ட இனிப்புல விஷம் கலந்து வைக்க, இதை சாப்பிட்ட ஹீர் இறந்து போயிட்றா. இந்த விஷம் கலந்த விஷயம் தெரிந்த ராஞ்சா அதை தடுக்க வருவதற்குள் அவள் இறந்திருப்பாள். ஸோ, ராஞ்சாவும் அந்த ஸ்வீட்டை சாப்பிட்டு இறந்துவிடுவான்” என்று கதையை முடித்தாள் அனிலா.

மறுபக்கம் கேட்டுக்கொண்டிருந்தவனோ, தன் தலையில் கைவைத்தபடி, “புரியலைன்னு கேட்டதுக்கு இப்படி பத்து பக்கத்துக்கு கதை சொல்றியே!” என்று சலித்துக்கொள்ள,

“இதுவரைக்கும் 'ம்ம்ம்' கொட்டி கதை கேட்டுட்டு இப்போ இப்படி சொல்ற! இன்னும் மிர்சா-சாஹிபா இருக்கே!” என்று சிரித்தாள் அனிலா.

“அம்மா தாயே! நீ கதையே சொல்ல வேண்டாம்! பாட்டுக்கு விளக்கம் மட்டும் கொடு போதும்” என்று கையெடுத்து கும்பிட, அதற்கேற்றவாறு விளக்கம் மட்டும் கொடுக்க ஆரம்பித்தாள் அனிலா.

“இதில் ஒரு பெண் தன் தோழிகளை பார்த்து சொல்றா, ‘என்னை ஹீர்ன்னு சொல்லி கூப்பிடாதீங்க, அதுல அவளோட காதலன் வேற ஒருவனை அவள் மணக்க நேரும்போது எதுவும் செய்யாம போய்விடுவான். என்னை சாஹிபான்னு கூப்பிடுங்க. ஏன்னா, அவளை மிர்சா (சாஹிபாவின் காதலன்) வந்து தூக்கிட்டு போயிடுவான்’ என்று. மிர்சாவும் சாஹிபாவும் கடைசில இறந்து தான் போவாங்க. இருந்தாலும் அடுத்தவனை திருமணம் செய்ய விட்ட ராஞ்சாவை விட என் காதலன் மிர்சாவா இருக்கிறது தான் எனக்கு வேண்டும் என்று அவள் நினைத்து பாடுவாள்.அதற்கடுத்து அவள் பாடுவதெல்லாம் அவள் காதலனின் புகழைத்தான்”

“ரொம்ப நல்லா இருக்கே! இந்த மாதிரி நீயும் உனக்கு இப்படியான காதலன்/காதல் வேணும்னு நினைச்சுட்டு இருக்கியா?” என்று அவன் கேட்க,

“அதெல்லாம் இல்லாமையா? எங்க அம்மா எங்க ஊரு கதை எல்லாம் நான் சின்ன பொண்ணா இருக்கும்போது சொல்வாங்க. இந்த வகையான கதைகள் எல்லாம் நம்ம இடத்தோட பழக்கவழக்கம் எல்லாத்தையும் தாங்கி வரும் என்று சொல்லியிருக்காங்க. அதில் ஒரு கதை எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று அவள் கண்ணில் மின்னலோடு சொல்ல,

“ஓ… இதில் எப்படி மேடம் இறப்பாங்க அந்த இரண்டு காதலர்களும்?” என்று முகில் நக்கலாக கேட்க,

அவனை முறைத்தவள், “எங்க ஏரியால சொல்ற நாட்டுப்புற காதல் கதைகள் மொத்தமா ஏழு. அதில் இந்த ஒன்றில் மட்டும்தான் நீ சொல்ற அந்த ஹேப்பிலி எவர் ஆஃப்டர் இருக்கு. அந்த பெண்ணுக்கு எங்க ஊருல ஏரிக்கு நடுவில் சமாதி கூட கட்டி வைத்திருக்கிறான் அந்த காதலன்” என்று அவள் சிரித்தபடி கூற,

“பரவாயில்லையே! அப்பப்ப சேர்த்தும் வைக்கிறாங்க” என்றவன், அந்த கதையின் பெயரை மட்டும் கேட்டுவிட்டு இணையத்தின் உதவியுடன் அதனை படிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். ஆனால், அவன் அன்றே படித்திருந்தால் பிற்காலத்தில் தெரிய வரவேண்டியதை அப்போதே கண்டுபிடித்திருப்பான்; சிறிதளவேனும் அவன் அதனைப் பற்றி யோசித்திருப்பான். இதுவரை அவனுக்கு அவள் பூர்வீகத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாதே!

பின்பு, கவனம் அவளது தற்போதைய கவலையான சங்கீதத்தில் திரும்ப, மீண்டும் புலம்ப ஆரம்பித்தாள் அனிலா, பிறமொழிகளில் சோகமாக ஏதேனும் பாடல் வேண்டும் என்று.

“எனக்கு தமிழை தவிர எந்த மொழியிலும் பாட்டு எல்லாம் தெரியாது அனி. நான் வேணா உனக்கு தமிழில் தேடி சொல்றேன்” என்றவன், தன் ப்ளேலிஸ்டில் தேட ஆரம்பித்தான். விரைவில் அவனுக்கு ஒன்று கிட்ட, அந்த பாடலினை அவளுடன் பகிர்ந்து கொண்டான், தன் மனதையும் தன்னையறியாமல் பகிர்ந்தவாறு.

அடுத்த நாள், அவனிடம் மகிழ்ச்சியுடன் தான் இசையமைத்த அந்த மாஷ்அப்பை பாடிக்காட்டினாள் அனிலா.

அந்தப் பாடல், சோகமே உருவான ஹீரையும், காதலையும் சோகத்தையும் சரிவிகிதத்தில் கொண்ட கதைப்போமா என்று சமீபத்தில் வெளியான படத்தின் பாட்டையும் கொண்டிருந்தது.


அதிகாலை வந்தால் அழகாய் என் வானில் நீ
அணையாத சூரியன் ஆகிறாய்
நெடு நேரம் காய்ந்து கதகதப்பு தந்தவுடன்
நிலவாய் உருமாறி நிற்கிறாய்



கதை சொல்லி ரொம்ப மொக்கை போட்டுவிட்டேன் என்றால் மன்னித்துக்கொள்ளவும்!???



For those who may need the links to the songs:


 
Last edited:
Top