Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 04(B)

Advertisement

lekha_1

Active member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

இதோ, அடுத்த பகுதி... கடந்த அப்டேட்க்கு ஆதரவளித்த அனைவருக்கும் ரொம்ப ரொம்ப தோங்க்ஸுங்கோ! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! (லேட்டா சொன்னாலும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கப்பா...!) இந்த புத்தாண்டு நமக்கு ஒரு நல்ல தொடக்கத்தை அளிக்கட்டும்!

காதல் 04(B)

794

“அடியே! சீக்கிரம் வாடி! ஆளுங்க வர ஆரம்பிச்சா யாராவது பார்த்து திட்டுவாங்க” என்று தோழி கெஞ்சிக்கொண்டிருக்க, மங்கையவள் கேட்டால் தானே!

“இருடி! இப்போ யாரு வரப்போறா? இன்னும் கொஞ்ச நேரம் குளிக்கலாம். பம்புசெட்டுல குளிச்சு எவ்வளவு நாளாச்சு!” என்றவள்,

தண்ணீர் படாமல் தள்ளி வைத்திருந்த சோப்பை எடுத்து தேய்த்தவாறே மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தாள்.


உனக்காக உயிர் பூத்து நின்றேன்

உனக்காக காத்து காத்து நின்றேன்

ஆதினி தன் தேன் தடவிய குரலில் கச்சேரி நடத்த, அதற்கு தவளை கத்துவது போல் கூட சேர்ந்து கவுண்டர் கொடுத்துக்கொண்டிருந்தாள் அவள் தோழி. “ஆஹான்… பூத்து நிக்குறியாக்கும்!” என்று அவள் சொல்ல, இது வழக்கமாக அவள் செய்வது தான் என்பதால், அதனை கண்டுகொள்ளாமல் மேலும் தொடர்ந்தாள் வரிகளை.

இன்னும் நானும் சிறுமி தான்

எப்போதென்னை பெண் செய்வாய்!

“உன்ன சிறுமின்னு சொன்னா அந்த ஆண்டவனுக்கே அடுக்காது புள்ள!”

வந்து மூன்று முடிச்சு போடு

பின்பு முத்த முடிச்சு போடு

என்னை மொத்தமாக மூடு மூடு

“அட அட அட! இத கேட்க உன்ன பெத்த ஆத்தா, என் அத்த இங்க இல்லாம போயிருச்சே இத கேட்க!” என்று அவள் அங்கலாய்க்க, ‘இது என்ன பிரமாதம்! ஒரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு பாரு!’ என்பதைப் போல புருவத்தை உயர்த்தியவள், அதற்கடுத்த வரிகளை பாடினாள்.

நீ எனக்குள் புதையல் எடுக்க,

நானும் உனக்குள் புதையல் எடுக்க,

உயிரின் ஆழம் சென்று தேடு தேடு!!

“ஆத்தாடி ஆத்தா! உன்னோட சுத்துனா என்ற ஐயனும் (அப்பா) ஆத்தாலும் என்ன சீமாத்த வெச்சு இல்ல, ஒலக்கைய வெச்சே நொறுக்கி எடுத்துறுவாங்க போலயே! என்னடி, காலைல இருந்தே ஒரு மார்க்கமா இருக்க! உன் ஆத்தா உன்ன வெச்சு சடவு எடுக்க முடியலன்னு (தொந்திரவு தாங்க முடியவில்லை என்று) ஒன்ன தொரத்த முடிவு பண்ணீருச்சோ?” என்று கேட்டவள், ‘அப்படி இருந்தா என் ஆத்தாவுக்கு அந்த நியூஸ் வந்துருக்குமே! அதுதான் ஆல் இந்தியா ரேடியோவாச்சே!’ என தாடையில் கைவைத்து யோசிக்க, அவளது அந்த நோபல் பரிசு பெற வேண்டிய நினைப்பு தடைப்பட்டது திடீரென்று தன் பக்கவாட்டில் இருந்து விழுந்த மழையால்.

‘என்னடா இது! மழை இந்த சைட்-ல இருந்து அடிக்குது!’ என்று அவள் பார்க்க, எதிரே அவள் மீது தண்ணீரை இறைத்துக்கொண்டிருந்தாள் ஆதினி.

“ஏதோ வாயில வந்த பாட்ட பாடினா, அதுக்கு இப்படி கேட்கிறியேடி! எனக்கெங்க கலியாணம் காட்சி எல்லாம்! இப்படியே ஆத்தாவ பாத்துட்டே அதோட இருந்துப்பேன். நான் இல்லன்னா அதுக்கு ஆருடி இருக்கா!” என்று மகிழ்ச்சியுடன் ஆரம்பித்தவள் குரல் கலங்கி முடிக்க, அதை உணர்ந்த மதி,

“அடி என்னடி இவ, உன் வைட் உனக்கே தெரியலடி. நீ வேணா பாரு, ராசகுமாரன் வந்து உன்ன கட்டிக்கிட்டு போவான்” என்க,

“ப்ச்ச்… போடி! எனக்கு எவனும் வேணா. எங்காத்தாவ விட்டு எல்லாம் இருக்க முடியாது” என்று அவள் சொல்ல, அவளை ஏதேதோ சொல்லி சமாதானப்படுத்தியவள், ஒருவாறாக அவள் எண்ணத்தை தண்ணீரில் திசைதிருப்ப, இருவரும் மகிழ்ச்சியாக அடித்து விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது,

“ஆருடி அது! என்ற தோட்டத்து பம்புசெட்டுல மோட்டார போட்டு குளிக்குறவ! இந்தா வாரேன்!” என்று அந்த தோட்டத்தின் ஒரு பகுதியில் இருந்து குரல் கேட்க,

“போச்சு! சுத்தம்! கெளவி சும்மாவே எலும்ப எண்ணும்! இதுல நாம அதோட தோட்டத்துல குளிக்குறத வேற பாத்துருச்சு! இன்னிக்கு நம்மல தோரணம் கட்டி தொங்க விடாம போவாது!” என மதி பதற, ஆதினியோ கூலாக,

“அது எங்க இருக்கு பாரு! நம்மல பாத்துருக்க சாத்தியம் இல்ல. அது வாரதுக்குள்ள எஸ்கேப்பாகி ஓடிரலாம்” என்றவள் அதற்கான வேலைகளில் இறங்க,

“உனக்கு அதப்பத்தி தெரியாதா! ஒரு முக்குல வேல செஞ்சுட்டு இருந்தாலும் அதுக்கு எல்லா பக்கமும் கண்ணு இருக்கும். தோட்டத்துல ஆரு வர்றான்னு அதுக்கு காத்துவாக்குல சேதி போகுமா என்னன்னு தெரியல! நின்ன எடத்துல இருந்து ஒரு சவுண்டு வுடும் பாரு! அப்படியே ஒரு நிமிஷம் ஆடிப்போவும்டி! நீ என்னன்னா அசால்ட்டா சொல்ற!” என்று வாய் பேசிக்கொண்டிருந்தாலும் கை அதன்பாட்டிற்கு அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டிருக்க,

அப்போது தான் இருவர் இருப்பது வந்தவர் கண்ணுக்கு தெரிய, “ஏலே எடுபட்டவளுகளா! ஊருல ஒங்களுக்கு வேற எடமே கெடைக்கலியா! இங்க வந்துதா கொட்டமடிக்கோனுமா? அய்யோ!” என்று அவர் திட்டிக்கொண்டே வர, அதற்குள் இட்டேறியில் ஓட ஆரம்பித்திருந்தார்கள் இருவரும்.

“அடியே! நில்லுங்கடி! ஆருடி அது!” என்று அவர் அவர்களை கடுப்பில் திட்டியவாறு பம்புசெட்டினருகில் வந்துவிட்டிருக்க,

“ஆஆ… உன்ற ஊட்டு மருமவ!! பரவால! நல்லா ஊருக்கே பாசனம் பன்ற அளவுக்கு ஒன்ற கெணத்துல தண்ணி இருக்குதுத்த!” என்றவாறு சொல்லியவாறே ஆதினி அவருக்கு எதிர்திசையில் ஓட, அந்த குரலிலேயே யாரென்று அறிந்தவர்,

“அடிங்க! ஆருக்கு ஆரு மருமவ! என்ற மவன் ராசானாக்கும்! அவனுக்கு நா சீமைல இருந்துதா பொண்ணு கொண்டாருவேன்” என்று அவர் சிலுப்ப,

அதனைக் கேட்ட ஆதினி நின்று திரும்பி, “ஆஆஆ…ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்… உள்ள இருக்குமாம் ஈரும் பேனும். அதுமாறி, ஒங்க புள்ளக்கு நா போதாதாமா?” என்று கேட்டவள் அவருக்கு அழகு காட்டிவிட்டு மேலும் வரிந்து கட்ட நிற்க,

சிறிது தூரம் ஓடிய மதி, பின்னால் வந்துகொண்டிருந்த ஆதினியின் குரல் தள்ளி ஒலிக்க, அவளை நோக்கி வந்து, “நீ பொறவு வம்பிழுப்பியாம்! இப்போ வாடி!” என்று இழுத்தபடியே சென்றாள்.

இதனைக் கண்டவரோ, ‘போடி போ! என்னாட்ட எப்போவாச்சும் மாட்டாமயா போயிருவ? அப்போ இருக்குடி ஒனக்கு” என்று நினைத்துக்கொண்டவர், மோட்டார் ரூமை நோக்கி சென்றார் தண்ணீரை நிறுத்த.


*****

“யம்மோவ்… யம்மோவ்… சோத்தப் போடும்மா!” என்று சமையலறையை நோக்கி குரல் கொடுத்த சத்திக்கு அதற்கான எந்த எதிரொலியும் வராமல் போகவே, மறுபடியும் குரல் கொடுத்தான், இம்முறை சிறிது சத்தமாகவே.

“ம்மோவ்… பசிக்குதும்மா… சோத்தப் போடு! பசிக்குதும்மோவ்! எனக்கு வேல இருக்கு!” என்று நீளமாக முழங்க, அதற்கு எதிரொலியாக வந்தது அவன் அம்மா அவனை நோக்கி வீசிய தட்டு.

அது சரியாக அவனை குறிபார்த்து ஏவுகனையென வர, நூலிழை இடைவெளியில் நகர்ந்ததால் அடியில் இருந்து தப்பித்து தன் மீசையை முறுக்கிக்கொண்டான் அந்த மாவீரன்.

‘ஆத்தாடி! காலைலயே காளி அவதாரத்த எடுத்திருச்சு போலயே! டே சத்தி! உசுரு முக்கியமா? சோறு முக்கியமா?’ என்று அவன் தன் மனசாட்சியிடம் கேட்க,

‘வீரத்தழும்போட உசுரு போனுமே தவிர சோறு இல்லாம செத்தான் இந்த சத்தின்னு ஒரு சொல் வரப்புடாதுடா! என் ஓட்டு சோறுக்கே!’ என்று நான் சத்தியின் மனசாட்சி என அது தன் வேலையை சரியாக செய்ய,

“சோறே சரணம்!” என்று தாய் வீசியிருந்த தட்டை கையில் எடுத்துக்கொண்டு அவனே சமையலறையினுள் நுழைந்தான்.

அங்கே அவன் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது, தன் தாய் வாணலியில் கடுகு, சீரகத்தோடு தன்னையும் சேர்த்து தாளிக்கிறார் என்று. (நம்ம அம்மாங்க எல்லாம் நம்மல திட்டிட்டு சமைக்கும்போது கொஞ்சம் எட்டிப்பார்த்தா தெரியும்! அவங்க சமைக்குற ஸ்டைல் என்ன, ஒவ்வொரு பொருளையும் வாணலியினுள் போடும் ஸ்டைல் என்ன! அட அட அட! கண்கொள்ளா காட்சியா இருக்குமே!)

அதனைக் கண்டதுமே எதுவும் சொல்லாமல், ‘சுடுசோத்துக்கு ஆசப்படாதடா! ஆத்தா அடுத்தவேள சோத்த உன் வாய் சாப்பிட முடியாம பண்ணீரும்’ என அவன் மனசாட்சி நடப்பை எடுத்துரைக்க, அதன் பேச்சைக் கேட்டவன், அவருக்கு தெரியாமல் பழைய சாதம் இருக்கும் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வெளியில் செல்ல எத்தனிக்க,

“இங்க ஒரு மனுஷி பொழம்பிட்டு இருக்கேன்! அப்பனுக்கும் மவனுக்கும் ஒரு கவலையுமில்ல. ஹ்ம்ம்ம்… எல்லா நா வாங்கி வந்த வரம் அப்படி! வாச்சதும் சரியில்ல, பெத்ததும் சரியில்ல!” என்று நீட்டி முழங்கியவர் தன் சேலையிலேயே கண்ணைத் துடைத்து மேலும் கலங்க,

“ம்மோவ்! என்னம்மா உன் பிரச்சன? காலைல இருந்து சாடையா பேசிட்டு இருக்க!” என்று அவன் அங்கலாய்க்க,

“உன்ற ஐயனென்னடான்னா, எனக்கு எந்த கவலையுமில்லன்னு வெளிவேலைய பாக்க போயிடுறாரு. நீயு, முகிலு ஐயனுக்கு ஒத்தாசைக்கு போயிடுற. நம்ம ஆத்தா இங்க கஷ்டப்படுவாளே! அவளுக்கு கொஞ்சம் ஒதவுவோம்னு ரோசன இருக்கா? நீ இப்படியே இரு, பொறவு நம்ம நெலமெல்லா ஒன்னு தரிசா போவும், இல்லயா, எவளாச்சும் வந்து ஒறவு கொண்டாடிருவா” என்று அவர் தன் மனச்சுமையைக் கொட்டினார்.

பாவம், அவரும்தான் என்ன செய்வார்? இருக்கும் சிறிதளவு நிலத்தில் ஒரு பக்கம் பூக்கள் பயிரிடப்பட்டிருக்க, மற்றைய பக்கம் காய்கறிகளும் தானியங்களும் பயிரிட்டிருந்தனர். கணவனும் மனைவியும் சேர்ந்து செய்தபோது ஒன்றும் பெரியதாக கஷ்டம் தெரியாமல் இருந்தது. சில மாதத்திற்கு முன்பு அவர் கணவர் தொழில் விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று வர, விடிவதற்குள் பூப்பறித்து மார்க்கெட்டுக்கு அனுப்பும் வேலை இவரை வந்து சேர்ந்தது. ஆட்கள் வந்தாலும், முன்பு போல் ஓடியாடி வேலை செய்ய முடிவதில்லை அவரால். ஆளுயர மகன் இருந்தும் அவன் உதவ மாட்டேன் என்கிறானே என்ற கவலையில் இருந்தவருக்கு காலையில் நடந்த சம்பவமும் சேர்ந்து கொள்ள, வீட்டுபெண்மணிகளுக்கு அடிக்கடி தோன்றும் ‘நானே ஒத்த மனிஷியா எத்தன வேலைய பாக்குறது?’ என்றொரு எண்ணம் தோன்றிவிட்டிருந்தது. அதன் வெளிப்பாடே இது.

“ம்மோவ்! நம்ம வாழ வெக்குற தெய்வத்த பேச்சுக்கு கூட அப்படி சொல்லாதம்மா… உனக்கு என்ன, நா நம்ம வயல பாக்கனும். அவ்வளவுதான? பாத்துட்டா போச்சு” என்றவன் தன் தாயை கொஞ்சி கெஞ்சி வழிக்கு கொண்டுவர, அதில் சமாதானமானவர்,

“நீ அண்ணனுக்கு ஒத்தாச பண்ணு ராசா! நா ஒன்னுமே சொல்ல மாட்டேன்! ஆனா, கொஞ்சம் நம்ம தோட்டத்தயும் பாரு கண்ணு! காலைல வெள்ளன எந்திரிச்சு பூவு பறிக்க போவ முடியலைய்யா… அத தெரிஞ்சுட்டு கண்ட கண்ட சிறுக்கியெல்லா உள்ள வந்து கொட்டமடிக்குறா” என்று அவர் தன் கவலையை பகிர்ந்து கொள்ள,

“அப்படி எவளுக்கு என்ற தோட்டத்துக்குள்ள வர தெகிரியமிருக்கு?” என அவன் கேட்க,

“வேற ஆரு! எல்லாம் அந்த அன்னம்மா மவதா! இன்னைக்கு என்ன பேச்சு பேசுனா தெரியுமா?” என்றவர் இன்று நடந்ததை சொல்ல,

‘ஏது, நா உனக்கு வேண்டாமா? நா மட்டும் தா வேணும்னு உன்ன சொல்ல வெக்குறேன்டி’ என்று ஒரு சபதமே போட்டுக்கொண்டான் சக்தி தன் மனதில்.

“ஏய்யா சத்தி! சரியான ராங்கியா இருக்காய்யா! அந்த புள்ள உன்னப்பத்தி போன வாட்டி என்னென்னவோ சொன்னாய்யா எங்கிட்ட… பாத்து சூதானமா இருந்துக்கோ ராசா!” என அவனுள் ஓடும் நினைப்பு தெரியாமல் தன் மகனுக்கு அறிவுரை வழங்கிக்கொண்டிருக்க,

அவனோ, எதைப் பற்றியும் காதில் வாங்காமல் ஆதினியை கரெக்ட் செய்வது எப்படி? என்ற புத்தகத்தை எங்கே வாங்குவது என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

‘ஆ… இவரு படிச்சா மட்டும் அப்படியே கிழிச்சிருவாரு!’ என்று அவன் மனம் கவுண்ட(ர்)மணியாக மாறி கவுண்டர் கொடுக்க,

‘கிழிச்சு காட்டுறேன்’ என அதற்கு பதிலளித்தவாறே தன் தாய் சுட்டுத்தந்த தோசையை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தான்.
 
Last edited:
Top