Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 06

Advertisement

lekha_1

Active member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... இதோ அடுத்த பதிவு.....


காதல் 06

1114


தன் கையில் இருந்த அலைபேசியை முறைத்துக்கொண்டிருந்தாள் அனிலா. அவள் முகிலிடம் பேசி இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. அன்று அவனோடு உணவகம் சென்றதோடு சரி, அதன்பின், பயிற்சி இருக்கிறதென்றவன் அவள் அழைப்புகளை ஏற்கவில்லை. குறுஞ்செய்திகளுக்கும் பதில்கள் ஹைக்கூ கவிதைகளாக. அதில் கடுப்பாகியவள் அவனுக்கு விடாமல் அழைத்தாள்.

திட்டுவதற்காகவேனும் அவன் எடுத்துப் பேசட்டுமே!

இதுவரை இவ்வளவு நாட்கள் அவர்கள் பேசாமல் இருந்ததே இல்லை. நடு இரவானாலும் இருவரும் அன்றைய நாளைப் பற்றி மற்றவரிடம் பகிராமல் உறங்கமாட்டார்கள். இரு வேறு நேரங்களில் உள்ளபோதே இவ்வாறென்றால், ஒரே இடத்தில் இருந்தும் பேசாமல் இருக்க அப்படி என்ன வந்துவிட்டது அவனுக்கு என்று தான் தோன்றியது.

நாளை அவனுக்கு மேட்ச் என்பதை அவள் அறிவாள் தான். அதற்காக இன்று அவனுக்கு நிம்மதியான மனநிலையும் உறக்கமும் தேவை என்பதை அவள் அறிந்திருந்தாலும், அவனோடு பேசாமல் தவித்திருக்கும் மனதிற்கு அது புரிய வேண்டுமே!

‘போடா போடா… உங்கள அலையவைக்கிற பொண்ணுங்க பின்னாடி நல்லா நாக்க தொங்கப்போட்டுட்டு சுத்துவீங்க. ஆனால், நான் தேடி வந்தேனே உன்னை பார்க்கவே, அதனால உனக்கு நான் இளப்பமாத் தான் தெரியுவேன். நீயா இனி கால் பண்ற வரைக்கும் நான் உனக்கு அழைக்க மாட்டேன்’ என்று அவனை திட்ட ஆரம்பித்து ஒரு இன்ஸ்டன்ட் சபதமும் போட்டு முடித்தவள், அதன் கால அளவை மட்டும் அரை நாழிகையாக சுருக்கிக்கொண்டு பத்து நிமிட முடிவில் அவனை மீண்டும் அழைத்திருந்தாள்.

இவ்வாறு பல சபதங்களும் அதனை விட பற்பல மீறல்களும் நிகழ, தோராயமாக பதினெட்டு அழைப்புகளுக்குப் பிறகு எடுத்தான் முகில்.

அவன் ‘ஹலோ’ என்றது தான் தாமதம், “நீ உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க? இங்க ஒருத்தி எவ்வளவு நேரமா ஃபோன் செய்ய? எத்தனை மெசேஜஸ்னு பார்த்தியா? இப்போ பேச முடியாதுன்னா அத ஒரு எஸ்.எம்.எஸ். வழியா சொல்லலாம்ல? மூன்று மணி நேரமா நான் லூசு மாதிரி உனக்கு கால் எடுத்துட்டு இருக்கேன்” என்று அவள் பொரிய, எதிர்ப்புறம் இருந்தவன் முகத்தில் இருந்த களைப்பு நீங்கி உல்லாசமான ஒரு புன்னகை குடி கொண்டது.

அவளது இந்த சோளம் டூ பாப்கார்ன் மாற்றத்திற்கு காரணம் அவனைத் தேடியதால் அல்லவா? அவள் தேடலை உணர்ந்தவனுக்கு இதயத்தில் ஐஸ்மழை. இதை அறியாதவளோ, எரிமலையாய்.

“சாரிம்மா… ஃப்ரெண்ட்ஸோட இருக்கவும், சைலண்ட்ல வைத்தது அப்படியே மறந்துட்டேன். இப்போதான் ரூமுக்கு வந்து வீட்டிற்கு அழைக்க எடுக்கவும் நியாபகம் வந்தது” என்று அவன் முடிக்க முதலுமே, “அப்போ நான் யாரு?” என்று கேட்டிருந்தாள் அனிலா.

“அத உனக்கு நீயே கேட்டுப்பாரு” என்றவன் அவள் பதில் கூறும்முன்னே அலைப்பேசியை அணைத்திருந்தான்.

‘என்ன சொல்றான் இவன்?’ என்று மிகப்பெரிய கேள்விக்குறியோடு அனிலா அலைப்பேசியை பார்த்தவாறு முழித்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு அவன் எந்த அர்த்தத்தில் அவ்வாறு கூறினான் என்பதை புரிந்துகொள்ளவே முடியவில்லை.

இங்கே முகிலோ, அலைப்பேசியிலேயே தன் தலையை தட்டிக்கொண்டான்.

‘என்னடா பண்ணி வெச்சிருக்க? உனக்கே இது லவ்வா இல்லை ஈர்ப்பான்னு தெரியல. அதுக்குள்ள அவ மனசுல கல்லெறிஞ்சு குழப்பிருக்க. இந்த கொஞ்ச நாள்ல உனக்கு அவ ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்டாகிட்டா. இதுவரைக்கும் உன் தங்கை, ஆதினி தவிர்த்து வேறு பெண்களிடம் நீ பழகியதே இல்லை. அதனால இப்படி தோன்றியிருக்கலாம். நம்மோட நெருக்கமானவங்க மேல ஈர்ப்பு வர்றது சகஜம். அப்படி ஒன்றா இது இருந்தால், வந்த வேகத்திலேயே போய்விடும். அதை வெளிப்படுத்துவது தவறாகிடும். முதலில், உனக்கு அவ மேலே இருப்பது எந்த கேட்டகிரின்னு ஆராய்ச்சி எல்லாம் செய்து முடித்து அதன் பின்பு இப்படி எல்லாம் பேசு’ என்று அவன் மனமே அவனுக்கு மிகப்பெரிய சொற்பொழிவு ஆற்றியிருக்க, அதனை ஆமோதித்தவாறே உறங்கச் சென்றவனுக்கு மனம் லேசாகவே இருந்தது.


******

மைதானம் முழுவதும் இரு நாட்டு கொடிகளும் டீஷர்ட்களும் என நிறைந்து பார்க்கவே மஞ்சள் தோட்டத்தில் பூக்கும் நீல நிறப்பூக்களாக இருந்தது. அதில் தங்களுக்கான இடம் தேடி அமர்ந்தனர் அனிலாவும். சதாஃப், அனிலாவின் மாமன் மகள். ஒத்த வயதுடையவர்களாகையால் இருவரும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய தோழிகள்.

அனிலா போட்டிக்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று முகில் கூறிவிட, அவனிடம் இரண்டு டிக்கெட் வாங்கியிருந்தாள் அவள். எப்படியும் முகிலைத் தவிர அவளுக்கு யாரையும் தெரியாது. அவன் விளையாடப்போகும் கிரிக்கெட்டிலோ அவள் அனா ஆவன்னா கேஸ். எனவே, போரடிக்காமலிருக்க சதாஃபையும் அழைத்து வந்திருந்தாள்.

இருவரும் மேட்ச் ஆரம்பிக்கும் வரை கூட பொறுமை காக்காமல் தாங்கள் கொண்டுவந்த திண்பண்டங்களை எடுத்து கொறிக்க ஆரம்பித்தனர்.

“ஏன் அனி… உனக்கு அந்த க்ரிக்கெட்டர் ஓசில டிக்கெட் கொடுக்கற அளவுக்கு பழக்கமா? அப்படியே அந்த ஸ்டோர்ஸ்ல இருக்க எல்லாத்தையும் ஃப்ரீயா தர சொல்லேன்” என்று சாண்ட்வெஜ்ஜை கடித்துக்கொண்டே கேட்க, “அவன் என்ன க்ரிக்கெட்டரா, இல்ல மெக்டி (McD) ஓனரா, நமக்கு ஃப்ரீ சர்வீஸ் பண்ண?” என்று கேட்டவள் இரண்டு அணி வீரர்களும் டாஸ் போட வர, அமைதியானாள்.

அவ்வளவு பெரிய விளையாட்டு மைதானத்தில் அவர்கள் சிறு புள்ளிகளாகத் தெரிய, அங்கே என்ன நடக்கிறது என்பதனை மைதானத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த திரைகளில் தான் பார்க்க முடிந்தது. இதற்கு வீட்டில் இருந்தே பார்த்திருக்கலாம் என்று தோன்றாமலும் இல்லை.

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணித்தலைவர் பேட்டிங் செய்வது என்று முடிவெடுக்க, முகில் என்றோ சொன்னதே நினைவிற்கு வந்தது.

‘போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னால், இரண்டு கேப்டன்களும் பிட்ச்-ஐ (மைதானத்தின் மத்தியில் உள்ள புற்களற்ற பகுதியை) ஆய்வு செய்வார்கள். அந்த பிட்ச் எப்படி இருக்கு, அன்றைய வானிலை, இவை இரண்டையும் பொறுத்தே அன்று களமிறங்கப்போகும் வீரர்களை முடிவு செய்வார்கள். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி பிட்ச் இருக்கும். பிட்ச் மென்மையாக இருந்தால் அங்கே ஸ்பின்னிங் நல்லா வரும்; பிட்ச் கடினமானதாக இருந்தால், ஸ்பின்னர்ஸை தவிர்த்து வேகப்பந்து வீச்சாளர்களை முன்னிருத்துவார்கள். விளையாடப்போகும் வீரர்களின் பெயர்களை டாஸ் போடுவதற்கு முன்பே அளித்தல் வேண்டும்.

இதே போன்று தான் பேட்டிங்கிற்கும். ஒரு சில பிட்ச் பார்த்தால், ஆரம்பத்தில் நன்றாக பேட்டிங் செய்ய வரும். போகப்போக அங்கே ரன்கள் குவிக்க முடியாது. ஆனால், ஒரு சில பிட்ச்களை எடுத்துக்கொண்டால், இறுதிவரை பேட்டிங் செய்ய ஏதுவாக இருக்கும்.

இவை எல்லாம் கணக்கில் எடுத்து யோசித்து தான் டாஸ் போட வருவாங்க. டாஸில் ஜெயிப்பவர் அவர்களது அணி முதலில் பேட்டிங் செய்ய வேண்டுமா இல்லை, பவுலிங்கா என்பதை முடிவெடுப்பார். இது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பொதுவாக, டாஸ் வெல்பவர் கண்டிப்பாக வெற்றி பெறுவர் என்று சொல்லமுடியாவிட்டாலும், அது போட்டியின் போக்கை மாற்ற வழிவகுக்கும் சில சமயங்களில். அதனாலேயே டாஸ் வெல்வது முக்கிய பங்காகிறது.

பிட்ச்-ஐப் பற்றி தெரியாத பட்சத்தில் முதலில் பேட்டிங் செய்வதே சிறந்ததாகிறது. எதிரணி பவுலிங்கில் உறுதியானது என்றாலும் முதலில் பேட்டிங் செய்வதே நல்லது. மற்றும், இரண்டாவது ஆடும் அணிக்கு தான் எடுக்க வேண்டிய ரன்களை நினைத்து அழுத்தம் அதிகரிக்கக்கூடும். அதனாலும், பேட்டிங் செய்வதையே பெரும்பாலும் தேர்ந்தெடுப்பர்.

தனது டீமால் வெற்றிகரமாக சேசிங் செய்ய முடியும் என்று ஒரு கேப்டன் நம்பும்பட்சத்தில் அவர் சேசிங்கை தேர்ந்தெடுப்பார். நல்ல பவுலர்கள் இருக்க, பிட்சும் கடைசிவரை காலை வாராமல் இருக்குமானால், எதிரணியின் ரன்ரேட்டை (ஓரு ஓவரில் எடுக்கும் ரன்களின் சராசரி) கட்டுப்படுத்தி எளிதாக அடிக்கக்கூடிய ஸ்கோரில் நிறுத்த முடியும்.

பகல்-இரவு ஆட்டமாக இருக்கும் பட்சத்தில், பந்தில் பனித்துளிகள் படர்ந்து அது பவுலர்களுக்கு பிடிப்பதற்கு வாகாக இருக்காது. இதனால் எளிதாக ஸ்கோர் ஏறும்’

இவை அனைத்தும் அன்று அவன் சொன்னபோது புரியவில்லை தான். இருந்தாலும், போட்டியின் ஆரம்பநிலை இந்த டாஸ் போடுவது என்பது மட்டும் புரிந்திருக்க, அதனை அவளும் கூர்ந்து கவனிக்கலானாள்.

சிட்னி மைதானம் கிட்டத்தட்ட 160 ஆண்டுகள் பழமையானது. கிரிக்கெட் ரசிகர்கள் சர் டான் பிராட்மேனை அறியாது இருக்க மாட்டார்கள். அவரது அதிகபட்ச ஸ்கோர் 452-ஐ ஒரு டெஸ்ட் மேட்ச்சில் அடித்தது இங்கேதான். இந்த மைதானம் ஆரம்பித்த போது பேட்டிங் செய்ய ஏதுவான களமாக இருந்தது, ஆண்டுகள் செல்ல செல்ல, மாற்றங்கள் கொண்டு தற்போது ஸ்பின்னர்ஸ் மற்றும் மெதுவான பந்து வீச்சாளர்களுக்கு ஏதுவாக இருக்கிறது.

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே அடித்து ஆட, ஐந்து ஓவர்களுக்குள்ளாகவே ஐம்பது ரன்களைத் தொட்டுவிட்டது. பவுலர்களை மாற்றிப்போட்டும் முடியவில்லை. தற்போது ஆடும் பேட்ஸ்மேன்களை பிரித்தே ஆகவேண்டும். மீன மேஷம் பார்த்து திருமணம் செய்து வைத்தாலும் வாழ்வது எவ்வாறு கணவன் மனைவி கையிலோ, அதேபோல் என்னதான் தனித்தனியாக சிறந்த வீரராக இருந்தாலும், இருவரும் சிறந்த பார்ட்னர்ஷிப் கொடுக்கும்பட்சத்தில் ரசிகர்களுக்கு வானவேடிக்கையும் எதிரணிக்கு தலைவலியும் வந்துவிடும். அவ்வாறு பார்ட்னர் அமைவது வரம் என்று தான் சொல்லவேண்டும். எத்தனை எத்தனையோ போட்டிகள் சில வீரர்களின் பார்ட்னர்ஷிப்பிற்காகவே பார்க்கப்படுகின்றன. அன்று அமைந்தது அந்த அணிக்கு.

எல்.பி.டபில்யூவில் முதல் விக்கெட் எடுக்க, அப்பாடா என்று ஆசுவாசப்படவும் விடவில்லை அவர்கள். பெவிலியன் சென்றவரே கூடுவிட்டு கூடு பாய்ந்து இறங்கியது போல களமிறங்கிய மூன்றாவது வீரரும் விளாச, அடுத்த விக்கெட்டை எடுக்கவும், அவர்கள் ரன் ரேட்டை கட்டுப்படுத்தவும் மூளைக்கு ஓவர்டைம் வேலை கொடுத்தனர் வீரர்கள்.

அவ்வாறு வந்த ஒரு பால் சிக்ஸாக செல்ல, பவுண்டரியின் அருகே ஃபீல்டிங் செய்த முகில் அதனை பிடிக்க பின்னால் நகர்ந்துகொண்டிருந்தான். பவுண்டரி கோட்டினருகே அவன் அதனை பிடித்தும் விட, வந்த வேகத்தில் தடுமாறி பந்தை ஆகாயத்தை நோக்கி வீசியவன் பவுண்டரியினுள் கால் வைத்து குதித்து அந்த பந்தை தன்னை நோக்கி வந்த இன்னொரு ஃபீல்டரை நோக்கி வீச, அவரிடம் அழகாக தஞ்சமடைந்தது அந்த பந்து.

சிக்ஸர் என்று நினைத்து ஆரவாரம் செலுத்திய கூட்டம் ஹோ… என்று அமைதியாகிட, பார்த்துக்கொண்டிருந்த அனிலாவோ டென்ஷனில் நகத்தை கடிக்கத் துவங்கிவிட்டாள். முதலில் என்ன செய்வது என்பது போல் பார்க்க ஆரம்பித்தாலும், போகப்போக அவளும் ஒன்றிவிட்டாள் தான். இது அவள் நேரடியாக பார்க்கும் இரண்டாவது மேட்ச் என்றாலும், முதலாவதில் பெரிதும் ஆர்வம் இல்லாமல் இருந்ததால் அவள் இன்று மிகவும் ரசித்துக்கொண்டிருந்தாள். அதுவும், அந்த திரையில் முகிலை பார்க்கும்போதெல்லாம் அவளுள் ஒரு பரவசம்.

கடைசி பந்து அவுட்டா இல்லையா என்று சலசலப்புகள் எழ, அது அவுட் என்று அறிவித்தபின்பு அது சரியா தவறா என்று மாறியது. இவை ஒரு பக்கம் இருக்க, இங்கே மேட்ச் தொடர்ந்துகொண்டு தான் இருந்தது. அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் பெரியதாக ரன்கள் அடிக்காமல் போக, கொஞ்சம் நின்று அடித்தால் வென்றுவிடலாம் என்னும்படியாக ஒரு ஸ்கோர் வந்திருந்தது.

(அந்த சிக்கலான கேட்ச் அவுட் என்று தான் அறிவிக்கப்படும். பவுண்டரியின் முன்னேயே பந்தை பிடித்திருந்தால் பவுண்டரியின் வெளியே இருந்து அதே ஃபீல்டர் பந்தை தள்ளிவிடலாம். அதன்பின், அவரோ மற்றவரோ பவுண்டரியின் உள்ளே வந்து அந்த பந்தை கைப்பற்றலாம். இதில் பந்து தரையில் படாமல் இருத்தல் அவசியம்)

சிறிது இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி பேட்டிங் செய்ய ஆரம்பிக்க, முதலில் திணறினாலும், பின்பு வரும் பந்துகளுக்கு ஏற்றவாறு ரன்களை எடுத்தனர். அதனால், அன்னநடை என்று சொல்ல இயலாவிட்டாலும், மிதமான நடையுடன் ஏறிக்கொண்டிருந்தது ஸ்கோர்கார்ட்.

‘என்ன இது, இப்படி மெதுவா ஏறுது? சிக்ஸ், ஃபோர்ன்னு அடிங்களேன்…’

‘சே! அந்த பால் ஜஸ்ட் மிஸ்… அவுட் ஆகியிருந்தா?’

‘அந்த பக்கம் தான் ஆள் இருக்குல்ல… அங்கேயே பந்த அடிக்கிறாங்க பாரு…!’

‘போச்சு… விக்கெட் கீப்பர் பிடிச்சுட்டாங்க’

இவை எல்லாம் அனிலாவின் மனப்புலம்பல்கள். முகில் மட்டும் அருகே இருந்து அவள் முகம் காட்டும் வர்ணஜாலங்களைக் கண்டிருந்தால், இன்றே அவன் இருக்கும் நிலைக்கு


‘கரு கரு விழிகளால் ஒரு கண் மை என்னை கடத்துதே

ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே

இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே

எழுந்திட நினைக்கையில் ஒரு மின்னல் வந்து சாய்க்க!’

என்று பாடியிருப்பான்.

பேட்டிங்கை விடவும் சேசிங் பிடித்திருந்தது அவளுக்கு. என்றுமே எவ்வளவு தூரம் ஓட வேண்டும் என்று தெரியாமல் ஓடுவதற்கும், இவ்வளவு போதும் என்று வரையறுத்து ஓடுவதற்கும் வித்தியாசம் உண்டல்லவா?

இறுதிக்கட்டத்தை ஆட்டம் நெருங்கிக்கொண்டிருக்க, களத்தில் இருந்தனர் ஒரு மூத்த வீரரும் முகிலும். கடைசி ஓவர், தவழ்ந்தே கூட வெற்றிபெற்றுவிடுவார்கள் என்ற நிலை. ஆனால், நினைப்பது போலவே நடப்பதில்லையே!

அந்த ஓவரில் முதல் ஐந்து பந்துகளில் பெரியதாக ரன்கள் எடுக்கப்படாமல் இருக்க, கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க வேண்டும்.

முகில் தன்னை நோக்கி வந்த பந்தை தனக்கு பின்புறமாக அடிக்க, அது தரையில் பட்டு விக்கெட்கீப்பரின் கையில் விழுந்தது. அவர் அதனை தரையில் உருண்டு பிரண்டு பிடித்திருக்க, விழுந்த வேகத்தில் ஸ்டம்பை நோக்கி வீசியிருந்தார். அப்போது முகில் க்ரீசினுள் இருந்ததால் அது அவுட்டாகாமல் இருக்க, மறுபுறம் இருந்த வீரரோ, ஒரு ரன் ஓடுமாறு சைகை செய்தார். இருவரும் மறுபுறம் நோக்கி ஓட, அதுவரை மற்றவர்கள் யாரும் பந்தினருகில் வரவில்லை. இதனைக் கண்டவர்கள் இரண்டாவது ரன்னுக்கு ஓட, நிலைமையைப் புரிந்த விக்கெட்கீப்பர் ஓடி வந்து பாலை எடுத்து ஸ்டம்ப் செய்வதற்குள் இரண்டாவது ரன் எடுக்கப்பட்டிருந்தது.

கடைசி பந்தில் ஓட மாட்டார்கள் என்று மற்ற வீரர்கள் நினைக்க, அதுவே இரண்டு ரன்களை கொடுத்து ஆட்டத்தின் வெற்றி தோல்வியை மாற்றிவிட்டது.

முகில் முதலாவது ரன் ஓடும்போதே எழுந்து நின்று தன் வாயில் கைவைத்த அனிலா, அவன் இரண்டாவது ரன்னுக்கு ஓடும்போது அவுட்டாகி விடுவான் என்றே நினைத்திருந்தாள். ஆனால், விக்கெட் ரீப்ளேயில் அவன் முன்பே க்ரீசினுள் வந்தது தெளிவாகத் தெரிய, ‘அப்பாடா!’ என்று ஆசுவாசம் கொண்டாள்.

அதன்பின் கொண்டாட்டத்துடன் ரசிகர்கள் களைய, அதற்கு மேலும் இருக்க வேண்டாம் என்று அனிலாவை இழுத்து வந்திருந்தாள் சதா.

அன்று இரவு முகில் அழைக்க, அவனிடம் தனது அனுபவம் பற்றி அவளுக்கு நியாபகம் இருந்தவரையில் அனைத்தையும் சொன்னாள்.

‘முகி… அந்த பால் வரும்போது நீ கண்டிப்பா பிடிச்சிடனும்னு நினைச்சேன்’

‘என்னடா… இவன் பாலோட கபடி ஆடுறான்?’

‘எப்படியாவது அடிச்சிருடா’ என்று அனைத்தையும் சொல்லிக்கொண்டிருக்க, அதனை ஆர்வமுடன் கேட்டிருந்தான் அவன். அவள் அன்று முழுவதும் இருந்தது அவனுக்காக அல்லவா? அது ஒரு இதத்தை கொடுத்திருக்க, அதனை கண்மூடி ரசித்திருந்தான் அவன். ‘டே மடையா! டேமையும் மனசையும் க்ளோஸ் பண்ணு!’ என்று தன் சுயத்தில் இருந்த மூளை கூறிய அறிவுரை ஏதோ ஒரு மூலையில் அமுக்கப்பட்டது.

அந்த கடைசி பால் ஹார்ட் அட்டாக் பற்றி சொல்லி, ‘இனிமேல் நான் க்ரிக்கெட் மேட்ச் பார்க்கவே போவதில்லை’ என்று அவள் சூளுரைக்க, ஹா ஹா ஹா என்று வாய் விட்டு சிரித்திருந்தான் அவன்.
 
Top