Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 07

Advertisement

lekha_1

Active member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

இதோ அடுத்த பதிவு. சென்ற பகுதிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி....


காதல் 07

1181


தென்னைக்கு பெயர் போன அந்த ஊர், ஒரு காலத்தில் சினிமா ஷூட்டிங்கிற்கும் பெயர் பெற்று விளங்கியது. ‘கிராமத்து கதையா, வண்டியை இங்கே விடப்பா’ என்று சொல்ல வைத்த பசுமை நிறைந்த ஊர் இன்றும் அதனை தனக்குள் வைத்து காலத்தின் நவீனத்தை தாங்கி நிற்கின்றது. சுற்றுலா பயணிகளின் கண்களைக் கவர எண்ணற்ற இடங்கள் இருந்தாலும், ஏனோ, சிலவை மட்டுமே அதிகம் ஈர்க்கின்றன. அவ்வாறு வருபவர்களை இங்கு உள்ள சில இடங்களும், சுற்றியுள்ள மலைகளும் வசப்படுத்தும் அளவுக்கு ஆங்காங்கே ஓடும் ஆழியாற்றுக்கு ஆணைக்கட்டைத் தவிர்த்து வசப்படுத்த தெரியவில்லை போலும். இருந்தாலும், அதன் மடியில் தவழவென்றே ஓடி வருபவர்கள் ஏராளம். கொட்டமடிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு சில இடங்களையும் ஒதுக்கித் தான் தந்திருக்கிறாள் அவள்.

அதில், மற்றவர் கவனத்தை இன்னும் அதிகம் கவராமல் இருக்கிறது அந்த மயிலாடுதுறையும். ஆனைமலையைத் தாண்டி இருக்கும் கோவிலும், அருகிலேயே இருக்கும் ஆறும், சுற்றியும் இருக்கும் வயல்களும் அழகோ அழகு.

ஊருக்கு வந்திருந்த முகிலை ‘வாடா மாப்ளே ஒரு குளியல போட்டுட்டு வரலாம்’ என்று கூறி இழுத்து வந்திருந்தான் அவன் உற்ற தோழன் சக்தி.

அதன்படி, அருகிலேயே தங்கள் உடைமைகளை வைத்துவிட்டு நீரில் இருவரும் மூழ்க, சக்தி அதனோடு ஆதினியின் நினைவிலும் மூழ்கினான். அவன் முகத்தில் இருந்த பரவசத்தைக் கண்ட முகில், “யாரு மச்சி அது, உன் மனச கொள்ளையடிச்ச பச்சைக்கிளி?” என்று கேட்க,

“அவ பச்சைக்கிளி இல்ல மச்சி, பச்சமொளகா… இன்னும் வெரப்பா தா திரியுறா” என்றவன் அது யாரென்றும் சொல்ல, சில நிமிடங்கள் அமைதியாக இருந்த முகில்,

“டே! அந்த புள்ள நெசமா ரொம்ப கஷ்டப்பட்டுருச்சுடா… நீ அத நல்லபடியா பாத்துப்பல்ல?” என்று கேட்டான்.

அவன் கண்களைப் பார்த்த சக்தி, அதில் இருந்த தவிப்பைக் கண்டு, “நீ கவலையே படாத மாப்பு… அவள நல்லபடியா பாத்துக்கறது என்ற பொறுப்பு… நீ மட்டும் அடிக்கடி வந்து என்ன நல்லா பாத்துக்கறாளான்னு கவனிச்சுக்கோ” என்றான் பீதியோடு.

“உன்ற தலவிதி அப்படியிருக்க ஆரால மாத்தமுடியும்?” என்றவன் தன் கைப்பேசி அழைக்கும் சத்தம் கேட்டு உற்ற நண்பனை அந்த நீர்நிலையில் எருமையென ஊறப்போட்டுவிட்டு கரையேறினான்.

அதற்குள் இரண்டாவது முறை அலைபேசி அடிக்க, யாரென்று பார்த்தவன் அனிலா என்பதை அறிந்ததும் மகிழ்வுடன் அதனை எடுத்து காதில் வைத்தான்.

“ஹே முகி… என்ன ஊருக்கு போனதும் ஒரு ஃபோன் கூட இல்ல. அவ்வளவு பிஸியோ?” என்று கேட்டவளின் குரலில் சிறு பொறாமை எட்டிப் பார்த்ததோ?

“இல்லம்மா… இங்க ரொம்ப நாள் கழிச்சு வந்தேனா. அதான் எல்லாரையும் பார்த்து நலம் விசாரிக்க நாளாகிருச்சு” என்றான்.

அவன் பதிலில் சமாதானமடைந்தவள், “முகி… நான் இதுவரைக்கும் அங்க இருக்க ஊர் எல்லாம் எப்படி இருக்கும்னு பாத்ததே இல்ல. நான் வீடியோ கால் வரவா?” என்று ஆவலுடன் கேட்டாள்.

அதில் தன்னையே குனிந்து பார்த்துக்கொண்டவனுக்கு தன் நிலை புரிய, இரு நிமிடங்கள் கழித்து அழைப்பதாக கூறிவிட்டு சரியாக அழைத்தான்.

அவன் அழைப்பிற்காக காத்துக்கிடந்தவளும் அதனை உடனே ஏற்க, சில பேச்சுகளுக்குப் பிறகு அவள் கண்டு ரசிப்பதற்கு ஏற்றவாறு அனைத்தையும் சுற்றிக்காட்டி விளக்கிக்கொண்டிருந்தான்.

அதிலேயே இருவரும் லயித்திருக்க, திடீரென்று வீடியோவில் வந்து நின்றான் சக்தி.

நீண்ட நேரம் கழித்து முகில் தன்னோடு இல்லை என்பதை உணர்ந்த சக்தி திரும்பிப் பார்க்க, அவனோ கைப்பேசியோடு உரையாடிக் கொண்டிருந்தான். ‘யாரோடு இவன் பேசிட்டு இருக்கான்?’ என்று யோசித்தவன் செவியில் ஒரு பெண்ணின் குரல் விழ, ‘அடப்பாவி மச்சான்! என்ற காதல விசாரிச்சியே! உன்ற காதலப்பத்தி கோடிட்டு காட்டுனியா?’ என்று வருத்தெடுத்தவன் அனிலாவைக் கவராமல் முகிலை தன்னை நோக்கித் திருப்ப முயற்சிகளை செய்ய, அவன் கண்டுகொண்டால் தானே!

இதில் கடுப்பானவன், ‘இது வேலைக்காவறதில்ல… குதிச்சிருடா கைப்புள்ள!’ என்று வாண்ட்டடாக அந்த வீடியோவில் எண்டரி கொடுத்திருந்தான்.

‘ஜங்க்’ என்று முன் வந்து விழுந்தவனைக் கண்டு அதிர்ந்து இருவரும் நோக்க, சக்தியோ, முகிலைக் கண்டுகொள்ளாமல் அனிலாவை நோக்கி பாசமுடன் “தங்கச்சி!” என்று விளித்திருந்தான்.

அவனது அந்த அழைப்பிலும் செய்கையிலும் தன்னிலை அடைந்த அனிலா சிரிக்க ஆரம்பித்திருக்க, முகிலோ, “டே! அவளுக்கு தமிழ் தெரியாது” என்றான்.

அப்போது தான் முகில் இருப்பதை கண்டுகொண்டவன் போல், “இங்க ஆரும் என்னோட பேச வேண்டாம். ஃபிகரு வந்தவுடன ஃப்ரெண்ட கழட்டி விட்டுட்டான்” என்று முன்னதை சத்தமாகவும், பின்னதை மெதுவாகவும் சொல்லிக்கொண்டான்.

இருந்தும், அது கேட்கவேண்டியவனுக்கு கேட்டிருக்க, “அடேய்… ஃப்ரெண்ட்டுடா” என்றான். அவனை நம்பாத பார்வை ஒன்றை வீசியவன், முகில் கையில் இருந்த கைப்பேசியை கைப்பற்றி, “தங்கச்சி… நல்லாருக்கியாம்மா?” என்று பாசமலர் பார்ட் டூக்கு ப்ரோமோ எடுத்தான்.

முகில் என்னதான் அவள் தோழி என்றாலும், இதுவரை எந்த பெண்ணோடும் அளவோடு நிறுத்திக்கொள்ளும் நண்பன் தற்போது ஒருத்தியுடன் மலர்ச்சியுடன் பேசும்போதே அவன் மனம் புரிந்துவிட்டது அவனது அனைத்து தில்லாலங்கடி வேலையிலும் உடனிருப்பவனுக்கு. அதனால் எந்த சுணக்கமும் இல்லாமல் பேச ஆரம்பித்துவிட்டான் அனிலாவுடன்.

“டேய்… நான் தான் சொல்றேன்ல… அவளுக்கு தமிழ் தெரியாது” என்று முகில் கூறும்போதே, “அண்ணே!” என்று விழித்திருந்தாள் அனிலா.

அதில் ஆண்கள் இருவரும் திருதிருத்தனர். ‘அடப்பாவி! இதுலையும் பொய்யா சொன்ன?’ என்பதுபோல் சக்தி முகிலை நோக்க, ‘எனக்கே தெரியாது மச்சான்!’ என்றாற்போல் ஒரு லுக்கை விட்டிருந்தான் முகில்.

பின் இருவரும் அனிலாவின் புறம் திரும்ப, அவளோ, சுவாரசியமாக பார்த்துக்கொண்டிருந்தாள்.

“உனக்கு தமிழ் தெரியுமா?” என்று ஒரு வழியாக முகில் கேட்டுவிட, “கொஞ்சம் கொஞ்சம் தெரியும்” என்று அபிநயம் பிடித்தாள் அனிலா.

“அது போதுமேம்மா…” என்ற சக்தி அவளிடம் பேச ஆரம்பித்துவிட, அனிலாவிற்கு அவனது படப்பட பேச்சில் பெரிதாக ஒன்றும் புரியவில்லை என்றாலும், அவன் தங்கையென்று அவளை அழைத்தபோதே அவன் மீது பாசம் பொங்கிவிட, அவனோடு தனக்கு தெரிந்த தமிழில் பேசத் துவங்கிவிட்டாள்.

இருவரையும் இரண்டடி தள்ளி நின்று முறைத்துக்கொண்டிருந்தான் முகில்.

அரைமணி நேரம் கழித்து, “சரிம்மா… ரொம்ப நேரம் ஆகிப்போச்சு. நா அவன்ட்ட தாரேன். என்னய மொறச்சுக்கிட்டு நிக்குறான்” என்ற சக்தி அவளிடம் விடைபெற்று முகிலிடம் ஒப்படைக்க,

“உனக்கு எப்படி தமிழ் தெரியும்?” என்று மீண்டும் அதே பல்லவியைப் பாடினான் முகில். அவன் கேள்வியில் சிறிது திருதிருத்தவள், “பொதுவா மத்த மொழி நண்பர்களிடம் அவங்க மொழியில் பேசி சிறு சிறு வாக்கியங்கள் கத்துப்பேன். ஆனா, நீ தான் எப்போப்பாத்தாலும் இங்கிலீஷ்லயே பேசுறியே! இது வேலைக்காகாதுன்னு தமிழ் படம் பார்த்தும், ஆன்லைனிலும் கத்துக்க ஆரம்பிச்சுட்டேன். பின்ன, எனக்கு தமிழ் ஃப்ரெண்டும் இருக்காங்கன்னு சொல்ல வேண்டாம்!” என்று புருவம் தூக்கி கேட்டவளைக் கண்டு சிறிது கோபம் கொண்டது அவன் மனம்.

ஏனோ அவள் தனக்காகத் தான் கற்றுக்கொண்டேன் என்று கூற வேண்டும் என ஏங்கிய மனதிற்கு அவள் இவ்வாறு கூறியது சிறிது ஏமாற்றத்தைத் தந்தது. அங்கே அவளோ, ‘நாம ஏன் மெனக்கெட்டு கத்துக்கிட்டோம்?’ என்ற சுயஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாள். ஆனால், அந்த ஆராய்ச்சிக்கு முடிவு தெரியும்முன்பே அவள் மனம் என்னும் குட்டையை குழப்பிவிடப்போகிறார்கள் என்பதை அவள் அறியவில்லை.


*********

“டேய் மச்சான்… உன்னைய எங்க எல்லாம் தேடுறது? உன்ற போனைக் குடு மச்சான்… தங்கச்சி இந்த நேரத்துக்கு பேசறேன்னு சொல்லுச்சு” என்றபடியே வந்தான் சக்தி.

இந்த பத்து நாட்களில் அனிலா முகிலுடன் பேசியதைவிட சக்தியுடன் பேசியதே அதிகம். அவள் பேசும் நேரம் மதியமாக இருப்பதால், அப்போது சக்தியும் உடனிருப்பான். அதனால் முகிலுடன் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு சக்தியின் புறம் திரும்பிவிடுவாள். பின் இருவரும் அவர்களின் பாசமலருக்கு உரம் போட்டு நீரூற்றி வளர்க்கும் வேலையில் ஈடுபட்டுவிடுவார்கள். இருவரையும் பார்த்து காதில் புகை வரும் அளவுக்கு நின்றிருப்பான் முகில்.

இதில் மெல்லமெல்ல தன் மனம் புரிய, அவளுக்கும் தன்மேல் விருப்பமா என்பதை விரைவில் அறிந்துகொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வந்திருந்தான் முகில்.

தான் இவ்வாறு கேட்டால் எப்போதும் கிடைப்பதுபோல் இரண்டு திட்டாவது கிடைக்கும் என்று நினைத்திருந்தவன், அவன் ஒன்றும் கூறாமல் அமைதியாக இருப்பதைக் கண்டு ‘என்னவாயிற்று இவனுக்கு?’ என எண்ணி அவன் முகத்தைக் காண, முகிலோ, வேறு சிந்தனையில் இருந்தான்.

‘என்னத்த இப்படி யோசிக்கிறான்?’ என்று நினைத்தவன் அப்போதுதான் தாங்கள் இருக்கும் இடம் கண்டு, “மாப்பி… எதுக்கு இங்க வந்து உக்காந்துருக்க?” என்று கேட்க, அதற்கும் அமைதியாகவே இருந்தான் முகில்.

“பழைய நியாபகமா மச்சி?” என்று கேட்டவன் முகமும் வேதனையில் குளித்திருக்க, இப்போது முகிலிடம் இருந்து தலையசைப்பே பதிலாகக் கிடைத்தது.

“மறக்கப் பாரு மச்சான். எல்லாத்தையும் நம்ம மனசுல ஏத்திட்டு இருந்தா வாழ்க்க நிம்மதியில்லாம போயிடும்” என்றவனுக்கு மறுப்பாக தலையசைத்த முகில்,

“என்னால மறக்க முடியாதுடா. அப்படி எல்லாரும் மறந்துட்டே போனா, இது தொடர்ந்துட்டே தான் போகும்” என்றான்.

அவனைக் கூர்மையாக பார்த்த சக்தி, “நீ என்ன செய்யலாம்னு இருக்க?” என்று கேட்டான்.

சிரித்த முகில், “இப்போ தான முதலடி எடுத்து வெச்சுருக்கேன்… இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். அப்போ சொல்றேன்” என்றான்.

“எல்லாருமே பெரிய எடம் மச்சான். அதுவும், நமக்கு யாருன்னே தெரியாதவங்கள எப்படி கண்டுபிடிச்சு?” என்று கேட்டவனை ஒன்றும் சொல்லாமல் பார்த்தான் முகில்.

‘இவன் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறானோ?’ என்று கலக்கத்துடன் பார்த்தான் சக்தி. அவனை குழப்பியவனோ, சில நாட்களுக்கு முன்பு நடந்த அந்த சம்பவத்தை நினைத்துக்கொண்டிருந்தான்.


*********

மும்பை,

சனிக்கிழமை இரவு சிலருக்கு பப்பில் தான் முடியும். அவ்வாறு முடித்துக்கொள்பவர்களில் ஒருவன் சந்தோஷ். அவன் தீபக்கை அழைக்க, அவனோ வர முடியாது என்று கண்டிப்பாக சொல்லிவிட, முகிலிடம் வந்து நின்றான் அவன். ஏதோ அங்கே சென்று தான் பார்ப்போமே என்று தோன்றிட, சென்றிருந்தான் அந்த உயர்ரக விடுதிக்கு.

அவர்கள் இருவரும் உள்ளே நுழைந்ததைக் கண்ட சில பெண்கள் இருவரையும் வட்டமிட, அவர்களுடன் சந்தோஷ் ஐக்கியமாகிவிட, பிறர் கண்களைக் கவராமல் பார்டெண்டரிடம் தனக்கான பாணத்தை சொல்லிவிட்டு திரும்பியபோது தான் கண்டான், ஒருவர் சந்தோஷை பார்த்துக்கொண்டிருப்பது.

இவர் ஏன் இவ்வாறு பார்த்துக்கொண்டிருக்கிறார்? என்று எண்ணியவன் பார்வை அவரையே வட்டமிட, அவர் யாரென்று அவனுக்கு அந்த இருட்டில் தெளிவாக பார்க்கமுடியவில்லை.

அதற்குள் சந்தோஷும் அவனுடன் வந்து சேர, சிறிது நேரம் கழித்து அந்த நபர் அவர்களை நோக்கி வந்தார். இப்போது அவர் முகம் தெளிவாகத் தெரிய, ‘எங்கேயோ பார்த்த முகமாக இருக்கிறதே!’ என்று நினைத்தவன் அவரையே ஆராய, அவரோ, இருவரையும் பார்த்து, “அளவுக்கு அதிகமாக ஆடின பலர் இருந்த இடம் தெரியாம போயிருக்காங்க” என்று எள்ளலாக கூறிவிட்டு நகர்ந்தார்.

அவரையே பார்த்துக்கொண்டிருந்தவனை, “திமிரு… ஒன்னுக்கும் வழியில்லாம இருந்தாலும் இந்த திமிரு மட்டும் குறையவே இல்ல… இதனால தன் இப்போ இந்த நிலைமைல இருந்தும், அது மட்டும் வண்டி வண்டியா ஏறியிருக்கே தவிர…” என்று கோபமாக இரைந்த சந்தோஷ் தன் பக்கம் திருப்பினான்.

‘இவன் ஏன் இப்படி கத்தறான்?’ என்று நினைத்தவனுக்கு அவர் யாரென அறியும் ஆர்வம் மேலிட, “யாருடா அவரு? நம்ம எதுக்கு இப்படி சொல்லிட்டு போறாரு?” என்று கேட்டான். அவர் ஆங்கிலத்தில் கூறியதால் முகிலுக்கும் அது புரிந்துதான் இருந்தது. ஆனால், தங்களைக் கண்டு எதற்காக அவ்வாறு சொன்னார் என்று தெரியாததால் சந்தோஷிடமே அதனை அறிய விழைந்தான்.

இன்னும் தன் சினத்தில் இருந்து இறங்கி வராதவன், அதே கோபத்தோடு அது யார் என்பதை உரைக்க, அதிர்ச்சியடைந்த முகில் அந்நபரை அந்த கூட்டத்தில் அலசினான். ஆனால், அவர் அவன் கண்களில் அகப்படவே இல்லை. அவர்தான் எப்போதோ வெளியேறியிருந்தாரே!


*********

இதனை இன்று நினைத்துப் பார்த்த முகிலுக்கு வேறு சில நினைவுகளும் வந்து தாக்க, அதன் கணம் தாங்காமல் தன் இரு கைகளிலும் தலையை தாங்கிக்கொண்டான்.

“மச்சான்… வாடா ஊட்டுக்கு போயிறலாம்” என்று கேட்ட சக்தியிடம் அவன் மறுத்தாலும், கையோடு அவனை அழைத்து வீட்டில் தூங்க வைத்துவிட்டே தன் வீட்டிற்கு சென்றான் சக்தி.

சிறிது நேரம் தூங்கி எழுந்தவன் மனம் தெளிவுற்றிருக்க, தனக்குள்ளேயே சில திட்டங்களை வகுக்க, அவற்றை செயல்படுத்த தான் மிகவும் கஷ்டப்படவேண்டும் என்பதை புரிந்திருந்தாலும், அனைத்தையும் தாண்டி இதில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்று உறுதிகொண்டான்.

ஆனால், அது அவ்வளவு எளிதா? தற்போது அவனுள் முளைவிட்டிருக்கும் இந்த காதலாலேயே அவன் லட்சியத்திற்கு பங்கம் வரும் என்று முன்பே அறிந்திருந்தால்?
 
Top