Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 16

Advertisement

lekha_1

Active member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

இதோ கதையோட அடுத்த பதிவு. சென்ற பகுதிக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி. இனி வரும் இரண்டு மூன்று பதிவுகள் சிலரை வருத்தம் கொள்ள செய்யலாம். அவர்களை கதை முடியும் வரை பொறுத்திருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...


காதல் 16

1269

அமிர்தசரஸ், ஜூன் 1947

பதினாறாம் நூற்றாண்டில் ஸ்ரீ குரு ராம்தாஸ் என்னும் சீக்கிய தலைவரால் நிறுவப்பட்டது. அப்போதைய நகரின் பெயர் ராம்தாஸ்பூர் என்பதாகும். அதன்பின், அம்பர்சர் என மறுவியது, தற்காலத்தில் அமிர்தசரஸ் என்றழைக்கப்படுகிறது. நம் தாய்த்திருநாட்டின் பக்கங்களை புரட்டிப்பார்த்தால், இந்நகரின் பெயரும் அவசியம் இருக்கும்.

இந்த பொற்கோவில் நகரத்தின் ஒரு பக்கத்தில் இரவின் அமைதியில் இரு இதயங்கள் காதல் மொழி பேசிக்கொண்டிருந்தன. அந்த இரண்டு மாடி குடியிருப்பின் மாடிக்கு அந்நேரத்தில் யாரும் வரமாட்டார்கள் என்று நன்கு அறிந்திருந்தவர்கள், சுற்றம் மறந்து மற்றவரை கண்ணுக்குள் நிரப்பும் வேலையை செவ்வனே செய்துகொண்டிருந்தனர். அடுத்து அவர்கள் சந்திக்க மாதங்கள் கூட ஆகலாமே!

கடந்த ஒரு வருடமாக இருவரது சந்திப்பும் இவ்வாறுதான் நடந்துகொண்டிருக்கிறது.

ராவல், அமிர்தசரஸிலிருந்து கிட்டத்தட்ட ஆயிரம் கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ஒரு ஊரை சேர்ந்தவன். இங்கிருக்கும் கல்லூரியில் படிக்க வந்திருந்தான். நுஸ்ரத்தோ அமிர்தசரஸில் வாழ்ந்து வருபவள்.

ராவலின் தந்தை அங்கே தொழில் புரிய, அவருடன் தொழில்ரீதியாக நுஸ்ரத்தின் தந்தைக்கு பழக்கம் இருந்தது. இருவருமே அருகருகேயான ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்து நுஸ்ரத்தின் தந்தை தொழிலுக்காக அமிர்தசரஸ் வந்திருக்க, சொந்த ஊர் பாசம் என்று வளர்ந்த அந்த பழக்கம் நட்பாக இரு குடும்பங்களுக்கும் விரிய, வருடம் ஒருமுறையாவது மீத்தியில் இருந்து ராவல் குடும்பத்தினர் இங்கு வந்து தங்குவதும், நுஸ்ரத்தின் குடும்பம் அங்கு சென்று வருவது என இரண்டு குடும்பத்திற்கும் நல்லதொரு நெருக்கம் ஏற்பட்டிருந்தது.

ராவலின் குடும்பத்திலோ, அவனுக்கடுத்து ஒரு தங்கை. நுஸ்ரத்திற்கடுத்து இரண்டு பெண் குழந்தைகள். அதனால், இவ்வாறு குடும்பங்கள் கூடும் நேரங்களில் பெண்கள் அனைவரும் ஒன்றாக விளையாட, இவன் மட்டும் தனித்து திரியவேண்டி வரும். அதில் ஒருமுறை இவனை பார்த்த நுஸ்ரத் அவனிடம் அந்த குழுவிற்கு தலைவி என்ற முறையில் உதவிக்கரம் நீட்ட, அதில் ஆரம்பித்தது அவர்கள் நட்பு.

சில வருடங்கள் சென்று, ராவல் பள்ளிப்படிப்பை முடிக்கும்போது அவனுக்கு முன் இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று, லாகூரில் அல்லது அமிர்தசரஸில் உள்ள கல்லூரியில் சேர்ந்து படிப்பது, அல்லது தந்தைக்கு துணையாக தொழிலில் இறங்குவது. தில்லியில் பல்கலைக்கழகங்கள் இருந்தாலும், அங்கே இடம் கிடைக்கவில்லை அவனுக்கு.

அன்றைய காலகட்டத்தில் அவர்கள் வீட்டிற்க்கு அருகில் கல்லூரிகள் என பெரியதாக எதுவும் இல்லாததால் அவன் படிக்கவேண்டும் என்றால் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்தாக வேண்டிய கட்டாயம் இருந்தது. என்னதான் அவன் தந்தைக்கு மகன் தன்னுடன் சேரவேண்டும் என ஆசை இருந்தாலும், படிப்பின் மீது அவனுக்கு இருக்கும் ஆர்வத்தை அறிந்தவர் அவனை இஷ்டம்போல் படிக்க அனுமதித்தார்.

அதில் மகிழ்ச்சியடைந்தவன், அமிர்தசரஸை நோக்கி பயணப்பட்டான். அங்கே தானே அவன் மனதிற்கினியவள் இருக்கிறாள்?

ராவலின் முடிவை கேட்டவர்களுக்கும் ஆனந்தமே! கண்காணாத தூரத்தில் வசிப்பதற்கு நுஸ்ரத்தின் வீட்டின் அருகில் வசிக்கட்டும் என அவன் தந்தை கேட்க, அவர்களோ, அவனை தங்கள் வீட்டிலேயே குடி வைத்துக்கொண்டனர்.

அவன் அங்கு வந்து சேர்ந்த சில நாட்களிலேயே இருவரும் நெருங்கிய நண்பர்களாக, ஒரு நாள் நுஸ்ரத்திடம் பேசிக்கொண்டிருக்கும்போது தான் ஒருவரை காதலிப்பதாக கூற, நுஸ்ரத்தோ ‘அந்த பெண்ணிற்கு தெரியுமா?’ என்று கேட்டாள்.

அதற்கு, ‘நீ தெரிஞ்சுக்கிட்டா என் காதலியும் தெரிஞ்சுக்கிட்ட மாதிரிதான்’ என்று அவன் கூற, ராவலின் கூற்றை கிரகிக்க அவளுக்கு சில நொடிகள் ஆனது. அதன்பின், ‘அந்த பொண்ணுக்கும் உன்ன பிடிச்சிருக்காம்’ என்றவள், அங்கு நிற்காமல் ஓடிவிட்டாள்.

இருவருக்குள்ளும் இருந்த நேசம் மலர்ந்து மனம் வீச, அதனை ஆழ்ந்து அனுபவித்தார்கள் அந்த காதலர்கள். பகல் நேரம், வயல்வெளிகளில் காதல் வளர்த்தார்களானால், இரவில் அவர்கள் காதலுக்கு பார்வையாளராக மதியவன் வந்துவிடுவான். இவ்வாறு காதல் பாடமும் கல்லூரிப் பாடமும் என்று நாட்கள் கடக்க, ஒரு கட்டத்தில் கல்லூரிப்பாடம் முடிவடைந்த்து அவர்கள் படித்த காதல் பாடத்திற்கும் காற்புள்ளி வைக்க வைத்தது.

நாளையோடு ராவல் மீத்திக்கு கிளம்ப வேண்டும். அதனால், அடுத்து சந்திக்கும்வரை தாங்குமாறு ஒருவர் மற்றவரை பார்வையாலேயே பருகிக்கொண்டிருந்தனர். இருப்பதிலேயே பொல்லாதது பிரிவுத்துயர் கொண்ட காதலர்களின் பசி போலும். அள்ள அள்ள குறையா அமுதசுரபியாக அவள் முகம் நொடிக்கு நொடி அழகுற, அது எதனால் என்னும் ஆராய்ச்சியில் ஈடுபடலானான் ஆணவன். இறுதியில் அந்த வான்நிலவையும் அவளையும் ஒப்பிட்டு பார்த்தவனுக்கு, அவள் முகமே அழகாகத் தெரிந்தது. அதனையே அனைத்தையும் மறந்து கண்டிருந்தவனை கலைத்தது அவள் குரல்.

“என்ன அப்படி பார்க்கற?”

“உன்னை இப்படி என்னைக்கு நம்ம வீட்டு மாடில இப்படி அமர்த்தி பார்க்கப்போறேன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்”

அதில் நாணமுற்ற மங்கையவளோ தரை தாழ்த்தினாள். பின், அவனை நோக்கியவள், “இது நடக்குமா?” என்று கேட்டாள், கண்களில் ஐயத்தை தேக்கி.

“கண்டிப்பாக நடக்கும். அப்போது அந்த நிலவை எடுத்து உனக்கு அளிக்கப்போகிறேன். இப்போது, அதனிடம் இருந்து ஒளியை மட்டும் உனக்கு எடுத்து தரேன்” என்றவன் தன் இரு கைகளையும் விரித்து நிலவின் புறம் ஏந்தினான். பின், அவள் புறம் நீட்ட, அவன் கரங்களை தன் கன்னத்தோடு பொருத்திக்கொண்டாள்.

அவளையே சிரிது நேரம் பார்த்திருந்தவன், “நீ வேணா பாரேன்… நம்ம குழந்தை சுதந்திர பாரத இந்தியாவின் குழந்தைகளாக வளரப்போகிறார்கள்” என்று அவன் கண்களில் கனவோடு கூற,

“எனக்கும் நாம் எப்போது சுதந்திரமடைவோம் என்று இருக்கு. அதன்பின் மற்றவர்களுக்கு அடிமைப்பட்டு வாழவேண்டாம் இல்ல? நம்மை புரிந்துகொள்ளக்கூடிய ஒருத்தர், நமக்காக வருவாங்க. அவர்களோடு சேர்ந்து முடிந்தளவு நாட்டை முன்னேற்ற பாடுபடவேண்டும்” என்று கூறியவளை ஆசையோடு பார்த்தான் ராவல்.

“ஆனாலும், இருவருமே வெவ்வேறு மதம் அல்லவா? நீ ஹிந்து. நானோ முஸ்லிம். எப்படி சாத்தியப்படுத்தப்போகிறோம்?”

“கவலைப்படாதே நுஸ்ரத். நம் இந்தியாவில் கனவுகளுக்கு தடை கிடையாது, அராஜகம் கிடையாது, சாதி மத பேதமும் கிடையாது. எந்தவொரு பேதமும் இல்லாத ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கவே நம் தலைவர்கள் போராடுகிறார்கள். அங்கே நம் கனவுகள் நிறைவேறும்” என்று அவள் கைகளைப் பற்றி உறுதியளிக்க, “கண்டிப்பாக ராவி” என்றவள் அவன் தோள்களில் சாய்ந்தாள்.

“ஏன் தான் என்னை ராவின்னு கூப்பிட்றியோ? என் பேரே நல்லா தான இருக்கு” என்று அவன் கிண்டலாக கேட்க, பொய்யாக முறைத்தாள் அவள். உணர்ச்சிவசப்பட்ட நேரங்களில் மட்டுமே அவள் இவ்வாறு அழைப்பது. அதனை அவன் மிகவும் விரும்பினாலும், சில சமயம் வருந்தி அழைக்கும்போது ஏதேனும் செய்து அவளை திசைதிருப்பி விடுவான் அந்த காதலன்.

“உன்னை ராவி ஆற்றங்கரையில் தான முதலில் பார்த்தேன்! அதனால் தான் ராவி. வேண்டுமென்றால் நாம் மீத்திக்கு சென்றதும் வேறு ஏதாவது ஆற்றங்கரையில் இறக்கிவிடு. அங்கே என்ன பெயரோ, அதையே சொல்லி அழைக்கிறேன்” என அவள் இடக்காக மொழிய, “மீத்தியில் எங்கே ஆறு?” என்று வரட்சியாக கேட்டான் ராவல். ஆம்! அவர்கள் இடம் வரட்சியான பிரதேசம். அவன் மனநிலையை நுஸ்ரத் வெற்றிகரமாக மாற்ற, அதன்பின் இருவரும் சுதந்திர இந்தியாவில் என்னென்ன செய்யவேண்டும், செய்யப்போகிறோம் என்று தங்கள் காதல் டூ கல்யாணம் வரையான கனவுகளையும் இந்திய தேசத்தின் வளர்ச்சிக்கான கனவுகளையும் ஒன்றாகவே நெய்தனர்.

மற்ற நேரமானால், காதலனை ஆற்றின் பெயர் வைத்தா அழைப்பாய் என்று கேட்டிருப்பான். இப்போது இருக்கும் மனநிலையில் அவன் வாழ்விடம் அடிக்கடி நினைவிற்கு வந்தது. இன்னும் எத்தனை காலம் அதனை தன் மண் என்று சொந்தம் கொண்டாட முடியுமோ? கல்லூரியில் விடுதலை தொடர்பான செய்திகளை அதிகம் அலசுவார்கள். அதன்மூலம் அவன் காதிற்கு வந்தவை சில அவ்வளவு உவப்பானதாக இல்லை. இருந்தும், கடவுள் துணையிருப்பார் என்று அவர் மீது நம்பிக்கை வைத்தவன், அதனை கூறி தன்னவளை கலங்கடிக்கவில்லை. எவ்வாறு இருந்தாலும், அவளை விட முடியாது என்ற முடிவிற்கு எப்போதோ வந்திருந்தான் அவன்.

மறுநாள் ராவல் அனைவரிடம் இருந்தும் விடைபெற்ற, காதலர்கள் இருவரும் விழிகளாலேயே விடைபெற்றுக்கொண்டனர், தங்கள் தேசத்திற்கு கிடைக்கப்போகும் சுதந்திரம் தங்கள் வாழ்விலும் மகிழ்ச்சியை மலரச் செய்யும் என்ற நம்பிக்கையில்.

பாவம்! அவர்கள் அறியவில்லை, இன்னும் சில மாதங்களில் இருவரும் உயிரை மட்டும் உடைமையாக எடுத்துக்கொண்டு எதிரெதிர் திசைகளில் ஓடப்போகிறார்கள் என!


******

ஜூலை 15, 1947

பிரிட்டன் அரசாங்கம் இந்திய நாட்டில் பலகாலமாக நடைபெற்றுவந்த சுதந்திரப்போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, கொண்டாட்டங்களை நம் பரந்த துணைகண்டமெங்கும் தொடங்கி வைத்த நாள்.

இரண்டாம் உலகப்போர், எண்ணற்ற நாடுகள் இருபிரிவுகளாகி, பந்தைக் கொண்டு விளையாடியது போதும், சிறிது காலம் குண்டுகளைக் கொண்டு விளையாடுவோம் என தொடங்கியது. கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் நடந்த போரானது 1945-ஆம் வருடம் முடிவிற்கு வந்தது.

இந்த போருக்காக இந்தியவீரர்களை அனுப்ப அப்போதைய ஆங்கிலேய அரசு முடிவெடுக்க, அதில் உடன்பாடு இல்லை என இந்திய தலைவர்கள் மறுத்தனர். தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்னும் எண்ணம் திக்கெங்கிலும் வேறூன்றியிருந்த நேரமது. அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு இடத்தில் இருந்து ஆதரவுக் கரம் நீண்டது ஆங்கிலேய அரசுக்கு.

அதன்முடிவில் இறுதியாக, இந்திய வீரர்கள் போரில் பங்குகொண்டால் அவர்கள் கேட்ட சுதந்திரத்தை வழங்குவதாக உடன்படிக்கை எழுந்தது. வெற்றிபெற்றதில் இருந்து சுதந்திரத்திற்கான குரல் பலமாகவே எழுப்பப்பட, அதனோடு சேர்த்து மற்றொரு பிரச்சினையையும் பார்க்கவேண்டியிருந்தது ஆங்கிலேய அரசாங்கத்திற்கு.

உலகப்போரின் விளைவுகளை பல நாடுகள் சந்திக்கவேண்டியிருந்தன. அதற்கு பிரிட்டனும் விதிவிலக்கல்ல. அந்த போரின் முடிவில் அரசு கடனில் மூழ்க, தங்கள் காலனிகளை ஆட்சிசெய்வதற்கான பலம் அப்போது அவர்களிடம் இருக்கவில்லை. இவ்விரண்டு காரணங்களால் பாரத தேசத்தின் சுதந்திரத்திற்கான நாள் குறிக்கப்பட்டது.

ஜூலை 15-ஆம் நாள் பிரிட்டன் பாராளுமன்றத்தில் சரியாக ஒரு மாதத்தின் பின் இந்தியாவிற்கு சுதந்திரம் என்று அறிவிக்கப்பட, நம் தேசத்தில் அந்த செய்தி சென்றடைய அனைவரும் மகிழ்ச்சிக்கடலில் திளைத்திருந்த சமயம். ஆனால், அந்த மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை.

பல காலமாகவே, சரியாக சொல்லப்போனால், லாகூரில் 1940-ஆம் ஆண்டு நடந்த ஒரு கூட்டத்தில் பகிரங்கமாகவே ஒரு தலைவர் முஸ்லீம்களுக்கு தனி தேசம் வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்காக அவர் சேர்ந்திருந்த இயக்கமோ, அதற்கும் முன் கால் நூற்றாண்டிற்கும் மேலாக தனி தேசத்திற்காக போராடிக்கொண்டிருந்தது. இரண்டாம் உலகப்போரின் போது ஆங்கிலேயர்களுக்கு உதவியது அந்த தலைவர் தான்.

சில பல காரணங்களால் இந்துக்கள் அதிகமாக வசிக்கும் தேசத்தில் தங்களால் நிம்மதியாக வாழ முடியாது என்று நினைத்தனர் அக்கட்சியினர். எனவே, சுதந்திர தேசம் என்ற குரலோடு தனி தேசம் என்னும் குரலும் சேர்ந்தே ஒழித்தது.

அனைத்து இந்திய தலைவர்களும் ஒன்றிணைந்த இந்திய தேசத்தை உருவாக்குவதற்காக அத்தலைவர்களிடம் கேட்க, அவர்களோ தனி தேசமே எங்களுக்கான தீர்வு என்னும் நிலைப்பாட்டிலேயே இருந்துகொண்டனர். அதன்பின், அகிம்சாவாதியான காந்திஜியைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் அவர்களுக்கு உடன்பட்டே விட்டனர். காந்திஜி மட்டும் இதனால் நிறைய பாதிப்புகள் வரும் என்று கூறிக்கொண்டே இருந்தார். இணைந்திருந்து சண்டை போட்டுக்கொள்வதற்கு தள்ளியிருந்தேனும் நட்பு பாராட்டலாம் என்று நினைத்த மற்றைய தலைவர்கள் இதனை அறிந்தே இருந்தாலும், அவர்களால் எதுவும் செய்ய முடியாமல் போயிற்று.

விளைவு, பிரிவினை தவிர்க்க முடியாததானது!

தேசத்திற்கு சுதந்திரமளிப்பதோடு, சகோதரர்களின் பிரிவினையையும் ஆங்கிலேய அரசாங்கம் செய்துவிட்டு செல்ல நேர்ந்தது. ஆனால், பாவம் அவர்கள் அறியவில்லை போலும்! சகோதரர்களாக இருக்கும்வரை இருவருக்குள்ளும் இருப்பது செல்ல சண்டைகள் தான். பங்காளிகளானால் பகையாளிகள் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளாது என்று.

இரண்டு தேசங்கள் என்று முடிவெடுத்தபின் அவற்றின் எல்லைகளும் வரையறுக்கவேண்டியதாயிற்று. அங்கே தொடங்கியது சிக்கல். பல காலமாக இரண்டு மதத்தினவர்களும் ஒன்றோடு ஒன்று கலந்தே வாழ்ந்துவர, அந்த இடங்களை எந்த தேசத்தோடு இணைப்பது என இரண்டு மாகாணங்களில் (Province) பிரச்சினை எழுந்தது. அவை வங்காளம் மற்றும் பஞ்சாப். இரண்டையும் பிரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. மற்ற இடங்களை ஆண்டுவரும் ராஜா மற்றும் மக்களின் எண்ணம் பொறுத்து எந்த நாட்டில் வேண்டுமானாலும் இணைந்துகொள்ளலாம் என்னும் முடிவு எடுக்கப்பட்டது. (அதில் ஹைதிராபாத்தும் காஷ்மீரும் தனியாக இயங்குவதென முடிவெடுத்தன. இரண்டுமே பின் இந்திய தேசத்துடன் இணைக்கப்பட்டன. பாகிஸ்தானோடு பலுசிஸ்தான், மற்றும் சிந்த் சேர்க்கப்பட்டன)

எல்லைகளை வரையறுக்க மூன்றாவதாக ஒருவர் வரவழைக்கப்பட்டார். யாருடைய ஆதிக்கமும் இல்லாமல், நடுநாயகமாக முடிவெடுப்பதற்காக என்னும் காரணம் கூறப்பட்டது. அவருக்கோ, இந்திய துணைக்கண்டத்தைப் பற்றி அதிகம் தெரியாது. அவர் இதுவரை நம் தேசத்தை கண்டதுமில்லை. அங்கே வக்கீலாக பணிபுரிந்துவந்தவரான அவரை அழைத்து இந்த பணி தரப்பட, அதனை ஏற்று நம் தேசம் வந்து சேர்ந்தார். அவரிடம் கொடுக்கப்பட்டவைகளோ, அப்போதைய அந்த மண்டலங்களின் வரைபடமும், அவற்றில் உள்ள மாவட்டங்களின் மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையும். (சம்பவம் நடப்பது 1947-ல். கணக்கெடுப்பு நடந்தது 1941-இல்!) அவருக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசமோ வெறும் முப்பது நாட்கள். ஏனென்றால், ஆங்கிலேய அரசாங்கம் சில மாதங்களிலேயே அரசு சம்பந்தமான வேலைகளை முடித்துவிட்டு தன் நாட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது.

அந்த மனிதருக்கு உதவியாக இந்தியா சார்பாக இருவரும், பாகிஸ்தான் சார்பாக இருவரும் கொடுக்கப்பட்டனர். அவர்களுடன் அமர்ந்து அந்த நூற்றாண்டின் மிகப்பெரியதொரு நிகழ்வுக்கான அடிக்கல்லை தன் பேனாவைக் கொண்டு நாட்டினார் அவர்.

நால்வரும் தங்கள் நாட்டின் சார்பாகவே இருக்க, ஒரு கட்டத்தில் ஒருவர் மற்றவரிடம் பேசுவதைக்கூட நிறுத்திவிட்டனர். அதில் தலைவலி வந்ததென்னவோ அந்த வழக்கறிஞருக்குத் தான்.

இங்கே மாநிலங்கள் மொழியாலோ அதன் மண்ணின் தரத்தைக் கொண்டோ, வாழும் மனிதர்களைக் கொண்டோ பிரிக்கப்படவில்லை; மாறாக, மதங்களால் பிரிக்கப்பட்டது.

வங்காளத்தை இரண்டாக பிரித்து ஒரு பகுதி இந்தியாவுடனும் மற்றொன்றை பாகிஸ்தானின் பகுதியாக்கவும் முடிவெடுத்தனர். பின், பிரிக்கப்பட்டது பஞ்சாப் மாகாணம்.

அந்த மாகாணத்தின் நடுவே ஐந்து நதிகள் ஓடியது. அதில் ஒன்று கூட இரு தேசத்தின் எல்லைகளாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. அனைத்து மாவட்டங்களையும் தனித்தனியாக ஆராய்ந்து, அவற்றின் மக்கள்தொகை கொண்டு பிரித்தார் அவர். இந்திய தேசத்தினைப் பற்றி அடிப்படை அறிவு கூட அற்றவர் அவர் என்பது ஒரு கட்டத்தில் நன்கு வெளிப்பட்டது.

இன்றைய பாகிஸ்தானின் பெரிய நகரமான லாகூரை இந்திய தேசத்தோடு வருமாறு பிரித்திருந்தார் அவர். இந்தியாவைப் பற்றி அறிந்திருந்த அவரது உதவியாளர் வந்து, பாகிஸ்தானிற்கு எந்தவொரு பெருநகரையும் அவர் அளித்திருக்கவில்லை என்று சுட்டிக்காட்டும்போது தான் தன் தவறே புரிந்தது அவருக்கு. பின், வரைபடம் திருத்தியமைக்கப்பட்டது.

குறிப்பிட்ட நேரத்தில் அவர் தன் அறிக்கையை சமர்ப்பிக்க, இரண்டு தேசம் உண்டு என்பது மக்களுக்கு தெளிவாகிவிட்டது. அதன் காரணமாக இடமாற்றமும் நடைபெறத் தொடங்கியது.

தெளிவாக தங்கள் இடம் எந்த தேசத்தினுள் வரும் என்று அறியாத மக்கள், தாங்கள் எந்த தேசத்தில் வாழ வேண்டும் என்று விருப்பப்பட்டனரோ, அந்த தேசத்தின் பகுதிக்குள் சுதந்திரம் முடிவதற்கு முன் சென்றுவிட வேண்டும் என்று நினைத்தனர். அதனால் அப்போதே இடம்பெயர ஆரம்பித்தும் விட்டனர். ஆனால், பெரும்பான்மையானோர், தங்கள் வாழ்விடத்திலேயே இருந்திட விரும்பினர்.

1947, ஆகஸ்ட் 14-15

14-ஆம் தேதி பாகிஸ்தானிற்கு சுதந்திரம் வழங்கப்பட, அதற்கடுத்த நாள் இந்திய தேசத்திற்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. தோன்றிய புதிய தேசம் கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தான் என்று வழங்கப்பட்டு, நடுவில் பல்லாயிரம் மைல்களை உடைய இந்திய தேசத்தால் பிரிக்கப்பட்டிருந்தது.

நாட்டின் எல்லைகளை அப்போதைய வைஸ்ராய் 17-ஆம் தேதி அறிவித்தார். அதில் காத்திருந்தது மக்களுக்கான அதிர்ச்சி.

இந்திய தேசத்தில் வரும் என்று நினைத்த இடங்கள் சில அவற்றில் இல்லை, புதியதாக தோற்றுவிக்கப்பட்டிருந்த நாட்டில் சேர்க்கப்பட்டிருந்தது. அதே நிலை தான் அங்கேயும். இதனால் மக்களிடையே மிகப்பெரிய அளவிலான இடமாற்றம் துவங்கியது. அதனோடு வன்முறையும்.

நினைத்துப்பாருங்கள்! நம் வீட்டின் முன் யாரோ ஒரு மனிதர் ஒரு கோட்டினை இட்டு, இனி இருவரும் தனித்தனி என்றால்? அந்த கோட்டின் மறுப்பக்கம் நம் வேண்டப்பட்டவர் இருந்தால்? இருவரில் ஒருவர் மற்றவர் இடத்திற்கு வந்தாக வேண்டுமல்லவா?
 
Top