காதல் நதி 02

Advertisement

brabasrimahi

Member
Member
நட்புறவுகளே, இது எனது முதல் படைப்பு. பிழை இருந்தால் பொறுத்துக்கொள்ளவும். நன்றி.
*****
இளஞ்சிவப்பு டி ஷர்ட்டும் கடமுடா ஜீன்ஸும் அணிந்த ஒரு இளம்பெண் ரோட்டின் குறுக்கே கைகாட்டியபடி நிற்க, முகத்தில் ஆயிரம் கேள்விக்குறிகளுடன் தனது பல்சரை நிறுத்தினான் சங்கர்.
என்னவென்று கேட்பதற்குள் அவனை சட்டை செய்யாமல் பில்லியனில் ஏறிக் கொண்டாள் அந்தப் பெண்.
“சீக்கிரம்... சீக்கிரம் போங்க, அந்த பஸ்ஸை பிடிக்கணும்.”
மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவனாய் சங்கர் வண்டியைக் கிளாப்பினான்.
என்ன பேச எப்படிப் பேசுறது? கூச்சமும் தயக்கமுமாய் யோசித்துக் கொண்டிருக்கும்போதே..
“நிறுத்துங்க நிறுத்துங்க.. இங்கதான்.”
மறுபடியும் பற்ற வைத்த திரி போல பரபரத்தாள்.
பைக்கை நிறுத்தும் முன்னரே குதித்து ஓடி, அந்த பஸ் ஸ்டாப்பிலிருந்து கிளம்பத் தயாராக இருந்த பஸ்ஸில் ஏறிக் கொண்டாள்.
“ஹலோ.. உங்களுக்கெல்லாம் அரசு பஸ்லதான் ஃப்ரீ. என் பைக்குல கிடையாது.”
சத்தமாக சீறினான் சங்கர்.
அவன் சற்றும் எதிர்பார்க்காத கணத்தில் அவள் குனிந்து பஸ்ஸின் பின்புற கண்ணாடி வழியே பார்த்தாள்.
கையை அசைத்தவாறு ஒரு சிக்கனமில்லாத சிரிப்பைச் சிதறவிட்டாள்.
அதை அள்ள முடியாமல் தானும் சிதறிப்போய் நின்றான் சங்கர். அவளின் பர்ஃபியூமோ, சோப்பின் வாசமோ ஏதோவொன்று அந்த பல்சரோடு சேர்த்து அவனையும் விழுங்கிவிட்டிருந்தது.
*****

“அடடா.. உங்க வீட்டு காபியே காபி. இதுக்காகவே அடிக்கடி வரணும் போல இருக்கும்.”
“நிஜமாவே நீங்க அதுக்கு மட்டும்தான் வர்ற மாதிரி இருக்கு தாகரே. உருப்படியா ஒரு வரனும் அமையற மாதிரி தெரியலை.” - வெடுக்கென்று கேட்டு விட்டாள் சரசு.
மாணிக்கத்துக்குத்தான் தரகரைப் பார்க்க்வே பரிதாபமாக இருந்தது.
ஆனால், தரகர் அதற்கெல்லாம் சளைத்தவரில்லை.
“என்ன பண்ணச் சொல்றீங்க.. உங்க சமூகத்துல பொண்ணுக்கு அவ்ளோ கிராக்கியா இருக்கு. நான் கொண்டு வர்றது உங்களுக்கு பிடிக்க மாட்டேங்குது.”
“யாரோ ஒரு நெல்லு புரோக்கர் பொண்ணு சொன்னீங்களே, அது எண்ணாச்சி?”
“அவங்களுக்கு மெக்கானிக்குன்னா வேண்டாங்குறாங்க. கொஞ்சம் பொறுங்க, கூடிய சீக்கிரத்துல நல்ல சேதி வரும்.”
டீப்பாயில் இருந்த காபியை எடுக்காமல் போனையே பார்த்துக் கொண்டிருந்தான் சங்கர்.
“அம்மா பிஸ்கட் எதுவும் இல்லையா?” என்றான் மதன்.
“ஆங்.. போயி வாங்கிட்டு வா. தவழ்ற கொழந்தை பாரு.. இப்படியிருந்தா எப்படிடா உங்களுக்கெல்லாம்
பொண்ணு கிடைக்கும்?”
“அம்மோவ்.. உங்க பையனுக்குத்தான் பொண்ணு கிடைக்கலை. பார்க்குறது அமைய மாட்டேங்குதுன்னா, இந்த வயசுல யாரையும் லவ் பண்ணக்கூட உங்க பையனுக்குத் துப்பில்லை.”
“ஏன் அங்க மட்டும் என்ன வாழுதாம்?”
“அப்படி மட்டும் சொல்லாதீங்க.. எப்பா.. நீங்களும் சாட்சி. எனக்கு ஒரு வேலை மட்டும் கிடைக்கட்டும்..அடுத்த ஒரே மாசத்துல தேவதை மாதிரி ஒரு பொண்ணைப் பார்த்து, லவ் பண்ணி, உங்க தலைமையிலயே கல்யாணம் முடிக்கிறேனா இல்லையான்னு பாருங்க.”
சிரிப்பை அடக்கிக்கொண்டு தலையை ஆட்டி வைத்தார் மாணிக்கம்.
“நிஜமாத்தான்பா.. இன்னைக்குக்கூட ஒரு பொண்ணைப் பார்த்தேன். எதோ பெரிய கம்பெனியில நல்ல வேலையில இருக்காம். அதுகிட்ட கூட சொல்லி வச்சிருக்கேன். உங்க கம்பெனியில வேகண்ட் இருந்தா சொல்லுங்கன்னு. தெரியுமா?”
“சரிப்பா.. இப்ப உனக்கு பிஸ்கட் வேணும், அவ்வளவுதான?” மாணிக்கம் அப்பாவியாகக் கேட்டதில் சிரித்துவிட்டாள் சரசு.
தரகர் எழுந்தார். “ஒரு நண்பர்கிட்ட சொல்லியிருக்கேன். அடுத்த வாரம் ஒரு ஏழெட்டு ஜாதகம் கைக்கு வரும். எப்படியும் அதுல அமைஞ்சிடும். அப்ப நான் வரட்டுங்களா?”
“மதன் தம்பி, நீங்க வேலையை மட்டும் தேடுங்க. உங்களுக்கும் சேர்த்தே பொண்ணு பார்த்துடலாம்.சரியா?”-என்றபடி கிளம்பினார்.
“அடுத்த வாரம் காபிக்கு இப்பவே ரிசர்வ் பண்றாராம்!” சிரித்துகொண்டே சொன்னான் மதன்

லவ் என்றதும் காலையில் கண்ட ஜீன்ஸ் அணிந்த தேவதை, சங்கரின் மனக்கண்ணில் வந்தாள்.
******


காரில் போகும்போதே வாத்தியாரிடம் போனில் பேசிவிட்டார் மாரிமுத்து, கூட சரவணன் வருவதை சொல்லவில்லை.
“என்னத்தையோ கெடைச்ச வேலையப் பார்த்து நாலு காசு சம்பாதிச்சிட்டீனா பொசுக்குன்னு வந்து பொண்ணு கேப்பியா? தராதரம்னு ஒண்ணு இருக்குல்ல.. வந்தியா, அக்காளைப் பார்த்தியா.. வயித்துக்குச் சாப்புட்டியான்னு போயிக்கிட்டே இருக்கணும்.”
சரவணன் எழுந்துவிட்டான்.
என்ன நடக்குது இங்க, ஏன் இப்படிப் பேசுறாரு எதுவும் புரியாமல் விழித்தாள் பார்வதி.
“போங்க மாப்ள, ஒங்க தரத்துக்கேத்த நலல பொண்ணு கிடைக்காமலா போகும்.
நல்லா படிக்கிற புள்ள, மேல மேல படிச்சி பெரிய லெவலுக்கு வரவேண்டியவ. அது மனச கெடுத்துப்புடாதிக.”
இதை ரமணி கேட்டிருந்தால் ரொம்பவும் அசிங்கமாப் போயிருக்கும். விடுவிடுவெனத் தெருவுக்கு வந்துவிட்டான் சரவணன்.
“என்னண்ணாச்சி.. வாத்தியாரா இருக்கீங்க, இப்படியா சடக்குன்னு பேசுவீங்க? இப்ப யாரு உங்ககிட்ட பொண்ணு கேட்டு வந்துட்டாங்க? அவன் மனசுல அப்படி ஒரு எண்ணம் இருக்குன்னு தெரிஞ்சி, நான்தானே உங்க அபிப்ப்ராயம் கேட்டேன். அதுக்குள்ள தரம் பிரிச்சிட்டீங்களே.”
சுரேஷ் ஆதங்கமாய்ப் பேசியது பின்னால் சன்னமாகக் கேட்டது.
முப்பது வருஷத்துக்குமுன் நடந்த அந்த சம்பவத்தோடு இரு குடும்பத்துக்குமான பேச்சுவழக்கும் போக்குவரத்தும் அற்றுப்போய்விட்டது. பார்வதி அக்கா இறப்பில்கூட சரவணன், பிச்சை வாத்தியாரிடம் முகம் கொடுத்துப் பேச வில்லை. பெற்ற தாய் போல வளர்த்து ஆளாக்கிய அண்ணி பார்வதியின் தலைமாட்டில் உட்கார்ந்து அன்று ரமணி அழுதது, சரவனனுக்கு இப்பவும் கண்ணுக்குள் நிற்கும் சித்திரமாக நிரந்தரமாகத் தங்கிவிட்டது.
அவர்களுக்காக பார்க்கிங்கில் காத்திருந்த பிச்சை வாத்தியார்,
“வா மாரிமுத்து, இங்கதான் இருக்கப்புலயா?” என்றபடி நெருங்கி வந்தார்.
வந்தவர், மாரிமுத்துவைத் தொடர்ந்து இறங்கிய சரவணனைக் கண்டதும் பேச்சிழந்து நின்றார்.

பழைய கம்பீரம் குலைந்து, தளர்ந்து போயிருந்த பிச்சை வாத்தியாரின் உருவம் சரவணனை உலுக்கியது.
“வரவே மாட்டேன்னுட்டாப்புல. நான்தான் தனியா வர முடியாம வம்படியாப் புடிச்சி இழுத்துட்டு வந்தேன்.”
சிலையாய் நின்றிருந்த வாத்தியாரிடம் சரவணனைக் காட்டிப் பேசினார் மாரிமுத்து.
“வாங்க.. நல்லாருக்கீங்களா?” தனது குரல் தனக்கே கேட்காதபடிப் பேசினார் பிச்சை வாத்தியார்.
“இப்படி வாங்க போங்கன்னு பேசி இன்னும் என்னைப் பிரிச்சி வைக்காதீங்க மச்சான்.”
“மச்சான் மாப்ள உறவெல்லாம் உங்க அக்காளோடப் போயிருச்சோனு நினச்சம்யா”
அக்கா இருந்தாலும் இல்லேன்னாலும் எங்களுக்கும் குடும்பத்துல பெரிவரு நீங்கதான் மச்சான்.
நிதானமாக அமைதியாய்ப் பேசிய சரவணனை நெருங்கி அவரது கைகளைப் பற்றிக்கொண்டார் பிச்சை வாத்தியார்.
“மாப்ள..?”

கரகரவென வழிந்த கண்ணீர், அவரது சோடாபுட்டிக் கண்ணாடியையும் மீறி கன்னங்களில் இறங்கியது.
****
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top