காதல் நதி 05

Advertisement

brabasrimahi

Member
Member
இரவு சாப்பாட்டுக்குப் பிறகு, மொட்டைமாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். வசுமதியின் படிப்பு மற்றும் வேலையைப் பற்றி விசாரித்துக்கொண்டு இருந்தார் பிச்சை வாத்தியார்.
“மாமா, நீங்க பார்க்குறதுக்கு தாத்தா மாதிரி இருக்கீங்க. ஆனா அம்மா உங்களை மாமான்னு கூப்பிடச் சொல்றாங்க!” என்று சிரித்தான் பிரபு.
“அதுக்கென்ன செய்ய? நீ வேணும்னா என்னை தாத்தான்னே கூப்புடு. உங்கம்மாவும் எனக்கு மகதானே.சொந்தம்கிற முறையில நீங்க எல்லாம் என்னைக் கூப்பிட்டாலே எனக்கு சந்தோஷம்தான்.” பிரபுவின் தலையைக் கோதியபடி சொன்னார் வாத்தியார்.
ரமணியைப்பற்றி அவராகப் பேசமாட்டாரா என்று காத்திருந்தார் சரவனன். அவருக்கென்னவோ மச்சான் இன்னும் சகஜமாக ஒட்டாமல், எப்போதும் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருப்பதுபோல தோன்றியது.
சாப்பிட்டபின் சிறிது நடந்துவிட்டு வருவதாகச் சொல்லி வெளியே போயிருந்தான் துரைப்பாண்டி.
திரும்பி வரும்போது சிகரெட் நாற்றத்தோடு வந்தான். வசுமதி முகத்தைச் சுளித்தாள்.
“துரைப்பாண்டிக்கு இந்தப் பழக்கமெல்லாம்கூட இருக்குதா?” சிரித்தபடி கேட்டாள் மலர்.
“அதை விடுங்க அத்தை, இனிமேல இதையெல்லாம் ஒண்ணும் பண்ணமுடியாது.”
என்றபடி அசடு வழிந்தான்.
இதை எதுவும் கண்டுகொள்ளாததுபோல பேச்சை ஆரம்பித்தார் சரவனன்.
“என் துரைப்பாண்டி, தோள்ல ஒண்ணும் கைல ஒண்ணுமா பிள்ளைகளை கொஞ்சுற வயசல இப்படி ஒத்தையா இருக்கியே ... ஒரு கல்யாணம் காட்சின்னு பண்ணி செட்டிலாக வேண்டியதுதானே?”
“என் மச்சான் இவனுக்கு ஒரு வழி பண்ண வேண்டியதுதானே?”
“அதெப்படி பண்ணுவாக ? அவருக்கு யாரையும் பிரிச்சி வச்சித்தானே பழக்கம், என்னைக்கு சேர்ந்து வச்சாரு?”
அதுவரை தலையாட்டிக் கொண்டிருந்த பிச்சை வாத்தியார் குன்றிப்போய் தலையைப் கவிழ்ந்து கொண்டார்.
“இப்படிதான் மாப்ளை.. பழசை எல்லாம் மனசுல வச்சிக்கிட்டு என்னை தெனம் தெனம் கொத்திக் குடிக்கான்.” சூழ்நிலையின் விபரீதத்தைப் புரிந்த சரவணன் பேச்சிழந்து நின்றார் .
“பெரியவங்களை அப்படி எல்லாம் பேசக்கூடாது துரை. இது தப்பு.”
அவனை கண்டித்து சூழ்நிலையை இலகுவாக்கினாள் மலர். அவள் துரை என்று அழைத்ததில் துரைப்பாண்டி இளகிப் போனான்.
“பின்ன என்ன அத்தை .... எனக்கு ஒரு புள்ளையைப் படிச்சிருக்குன்னு சொன்னேன். அதெல்லாம் நமக்கு சரிப்படாது. என் கெளரவம், பாரம்பர்யம்தான் முக்கியம்னுட்டாரு. உம்ம கௌரவத்தை கட்டி அழுதுக்கோரும்ணு விட்டுட்டேன். என்ன பண்ண? சொந்த பந்தம்னு சேர்ந்து இருந்தா, யாராச்சும் இவருக்கு எடுத்துச் சொல்லி இருப்பாங்க. அந்த ஊர்ல அப்படி யாரும் இல்லையே!”
“ஒண்ணுமில்லாத பய கூட ஊர்ல நல்ல நாளு, திருவிழான்னு வந்துட்டா, சாதி சனம், ஒறவு முறைன்னு சொந்தக்காரங்களோட செட்டா திரியுவானுக. எனக்கு அப்படி வாய்க்கலையே! எங்கம்மா இருந்தா என்னை இப்படி விட்ருப்பாங்களா?” அவன் குரல் உடைந்தது.
“எப்படிப் பேசுதான் பார்த்தியா சரவணா? நான் என்னவோ வேற ஒருத்தியக் கட்டிக்கிட்டு இவனைத் தெருவுல விட்ட மாதிரியில்ல பேசுதான்.”
மலருக்கு கண்கள் கலங்கின. “அப்படி எல்லாம் பேசக்கூடாது துரை. நாங்க எல்லாம் இல்லியா? இன்னொருவாட்டி அப்படிச் சொல்லாத!”
“கூறுகெட்டத்தனமா பேசாத துரைப்பாண்டி. நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம்.” என்று சரவனனும் சத்தம் போட்டார். பேச்சு சீரியஸாகப் போவதை அறிந்த வசுமதி, தம்பியை அழைத்துக்கொண்டு கீழே போய்விட்டாள்.
“இங்க பாரு சரவணா, நான் இனிமே வாயே தெறக்கமாட்டேன். அவன் யாரை வேணும்னாலும் கட்டிக்கட்டும். எவளை வேணா இழுத்துட்டு ஓடட்டும். எனக்குக் கவுரவமும் வேண்டாம், ஒண்ணும் வேன்டாம். அவன் நல்லா இருந்தா போதும். என்னமோ நான் செய்த வினைக்கு இதெல்லாம் கேக்கணும்னு இருக்கு.”
“இதென்ன பேச்சு. எதையாவது போனது வந்ததை எல்லாம் நெனைச்சிக்கிட்டு பேசிக்கிட்டு இருக்காதீங்க மச்சான். வாங்க.. போய்த் தூங்குங்க. நேரமாச்சி. காலையில பேசிக்கலாம்.”
அவரை எழுப்பி அறைக்கு அழைத்துச் சென்றார் சரவனன்.
**************
இப்போதெல்லாம் சங்கருக்கு அடிக்கடி மித்ராவைப் பார்க்க முடிந்தது. அவள் சகஜமாக மெக்கானிக் ஷாப்புக்கு வந்து போனாள். ஒருவரையொருவர் ஒருமையில் பேசிக்கொள்ளும் அளவுக்கு நண்பர்களாகிவிட்டார்கள். வாரத்தில் நான்கு நாட்கள் அவளோடு காபி ஷாப் போவதும், ஹோட்டலில் டிபன் சாப்பிடுவதும் சகஜமாகிவிட்டது. அடிக்கடி மித்ராவின் நினைவுகளில் மிதப்பது, சங்கருக்கு அலாதியான இன்பத்தைக் கொடுத்தது. அவள் வந்தபிறகு மதன் கூட ரொம்பவும் டீஸண்டாக மாறிவிட்டான்.
“என்ன சார் கனவு உலகத்துல இருக்கீங்களா? ஆட்டத்தையும் பாருங்க.” என்றபடி முகத்துக்கு நேரே கைகளை அசைத்தான் மதன்.
“அது ஒண்ணுமில்லை, உன்னை எப்படி ஜெயிக்கிறதுன்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்!” மொக்கையாய் சமாளித்தான் சங்கர்.
அன்று ஞாயிற்றுக் கிழமையானதால், மதன் வீட்டு பால்கனியில் அமர்ந்து செஸ் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். இருவருக்கும் டீயும் பிஸ்கட்டுகளும் கொண்டு வந்து வைத்தார் மதனின் பாட்டி.
“ஏன் பாட்டி.. ஒரு சத்தம் கொடுத்தா, நானே வந்து எடுத்துருப்பேன்ல. நீ கொண்டு வரணுமா?
எதுலயாச்சும் தடுக்கி, விழுந்து வெச்சா என்ன பண்றது?” செல்லமாகக் கோபித்துக் கொண்டான் மதன்.
“என்னைக் கிழவின்னு சொல்றே,, அப்படித்தானே? உன்னைவிட நான் ஸ்ட்ராங்குதான்.” என்றபடி அவன் தலையில் ஒரு குட்டு வைத்தாள் பாட்டி.
“நீ காலாகாலத்துல ஒரு வேலையைப் பார்த்து, உனக்குன்னு ஒருத்தியக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, நான் ஏண்டா உனக்கு தொண்டு வேலை பார்த்துட்டு இருக்கப் போறேன்? ..ஏம்ப்பா சங்கரு, ஒன் வெட்டியாபீசரு ஃப்ரெண்டுக்கு கொஞ்சம் புத்தி சொல்லக்கூடாதா?”
“நீங்க வேற பாட்டி... அவனுக்கு அளவுக்கு அதிகமா புத்தி இருக்குறதாலதான் இன்னும் வேலை கிடைக்கலைன்னு நான் நினைக்கேன்.”
“நான் இதை நம்பமாட்டேன்!”
“ஏன் அப்படி?”
“ஏன்னா.. என் பேரன் ஒரு முட்டாள்ன்னு நானே சொல்ல முடியுமா?” என்றபடி அங்கிருந்து நகர்ந்தார் பாட்டி. சங்கருக்கு ஒரே சிரிப்பு.
“கெழவிக்கு சேட்டையப் பார்த்தியா?” பாட்டி போன திசையில் அக்கினிப் பார்வை பார்த்த மதன், சங்கரின் பக்கம் திரும்பினான்.
‘கனவெல்லாம் மித்ரா’- அப்படீன்னு ஒரு கதை எழுதலாம்ன்னு இருக்கேன் எப்படி இருக்கு தலைப்பு?
சங்கர் முறைத்தான். அந்த முறைப்பு ஒரு புன்னகையாக முடிந்தது.
 

Advertisement

Advertisement

Back
Top