Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் -முதல் பயணம்

Advertisement

TNWContestWriter098

Well-known member
Member
Chapter 1

பரீட்சையின் காரணமாக ஆறு மாதங்கள் ஊருக்கு வராமல் இருந்தவள் இன்று திடீரென்று வர நேர்ந்துவிட்டது அதுவும் அப்பாவிடம் சொல்லிக்கொள்ளாமல்!காய்ந்து கிடந்த பல சிற்றூர்களை தாண்டி செழித்து கிடந்த கணியூருக்குள் நுழைந்தது பேருந்து !

எங்கு காணினும் விதவிதமான பச்சைகளில் வயல்வெளிகளும், உயர்ந்த தென்னம் தோப்புகளும் , இதமான காலை காற்றும், விடியலின் இளம் வெயிலும் விழிகளையும் உணர்வுகளையும் நிறைத்தது.

ஆறு மாதங்களுக்கு பிறகு தன் சொந்த ஊருக்குள் நுழையும் முதல் நொடி உச்சி முதல் உள்ளங்கால் வரை தெறித்து கொண்டிருந்தது உற்சாகம். சாலையின் ஓரம் பாய்ந்து வரும் ஆற்று நீரின் கால்வாயை போல் ததும்பி நிறைந்து கொண்டிருந்தது உள்ளம்.
முதல் முதலாக தனித்த பயணம்.. அதுவும் பொது பேருந்தில் .. எப்போதும் கருப்பு கண்ணாடி கதவுகள் இறுக்கமாக மூடப்பட்டு குளிரூட்டியின் செயற்கை இதத்தில் அரைத்தூக்கத்தில் கடந்த பயணம்...
இன்று முதல் முறையாக ஆடை படபடக்கும் இளங்காற்றும் முகம் தீண்டும் இளம் வெயிலுமாய் ஜன்னலோர இருக்கையில் தூக்கம் தொலைத்து வந்த பயணம் புதுமையான அனுபவம் தந்தது கண்மணிக்கு.

ஈரோட்டில் ரயில் நிலையத்தில் இறங்கும் வரையான பயணம் வேறு விதமாக இருந்தது.
இருளுக்குள் வேகம் கொண்டு செல்லும் ரயில் பெரிதான ரசனைகளுக்கு இடம் தருவதில்லை என்று நினைத்திருந்தாள் !
இருப்பினும் கதவோரம் நின்றபடி ஆளையே தூக்கி சென்றுவிடும் காற்றில் ஆடை படபடக்க நின்றபடி இரவெல்லாம் தூக்கம் தொலைத்து வந்தது மேனியின் ஆயிரமாயிரம் கண்களுக்கும் விருந்துதான்.
அங்கிருந்து கணியூருக்கான பேருந்தில் ஏறிய பிறகே பயணத்தின் விருந்து கண்களுக்கு.அதுவரை விழித்திருந்த உடலின் ஆயிரமாயிரம் கண்களோடு மைதீட்டிய இரு மான்விழிகளும் இணைந்து கொள்ள கடந்து செல்லும் ஒவ்வொரு காட்சியுமே ததும்பி கொண்டிருந்த மனபெட்டகத்துக்குள் பொதிந்தது.
வழியெங்கும் இயற்கை அன்னையின் மார்பு சுரந்து பேரமுதமாய் ஓடிக்கொண்டிருந்தது அவ்வூர்களுக்கு நீரோட்டமான கால்வாய்..சாமரம் வீசி வரவேற்கும் தென்னை மரங்கள்...ஆங்காங்கே மல்லிகை பூ தோட்டங்களை கடக்கையில் சூழும் நறுமண காற்று ..

காற்று தான் எத்தகைய ஆற்றலை கொண்டிருக்கிறது என்று தோன்றியது கண்மணிக்கு ..
நீரோட்டத்தின் இன்னோசையை .. அதில் தவழ்ந்து வரும் ஈரத்தை .. பூக்களின் வாசத்தை .. என்று அத்தனையையும் ஒரே வீச்சில் நம் மேல் செலுத்தி விடுகிறது. மேனி தழுவி அதை உணர்த்தியது போதாது போல் ஸ்வாசம் நிரப்பி உடலின் ஒவ்வொரு அணுவுக்கும் மனதின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு சேர்த்து விடுகிறது.

தன் சொந்த ஊரின் காற்றை ஆழ்ந்து நுகரும் போது எல்லோருக்குள்ளும் போல் அன்னையின் நினைவு கண்மணிக்குள்ளும் ஏற்பட்டு தானே ஆக வேண்டும் .. சற்றே மாறுபாடாக அவளுக்கு தந்தையின் நினைவு தான் வந்தது.
அதில் வியப்பேதும் இல்லை .. ஏனெனில் அவளுக்கு அவள் தந்தையே எல்லாம் ! ஒற்றை பிள்ளையாதலால் அவருக்கும் இவள் தான் எல்லாம்!

அவள் அப்பா சிங்காரவேலன் அந்த ஊரின் மிக முக்கிய பிரமுகர்.
சிங்காரவேலனை பற்றி சொல்லவேண்டுமெனில் அமைதி, பொறுமை, பாசம் எல்லாம் சரிவிகிதத்தில் கலந்த ஒரு தகப்பன் . அவரது இரு கண்களும் தான் தான் என்பதில் கண்மணிக்கு பெரும் பெருமிதம் எப்போதுமே!
பரம்பரையாகவே அவர்களது ஊரின் பெரிய குடும்பம் .. அக்குடும்பத்தின் முதல் மற்றும் ஆண் வாரிசான அவரிடமே ஊரின் மொத்த அதிகாரமும் இருந்தது.. வழி வழியாக அவரது முன்னோர்கள் வழி வந்த பாரம்பரியமாக ஊரின் அனைத்துகாரியங்களிலும் அவர்கள் குடும்பத்திற்கே முன்னுரிமை! இப்போது முறைப்படி உள்ளாட்சி தேர்தலில் நின்று போட்டியின்றி தன் தலைமையை தக்க வைத்து கொண்டார். அவரோடு போட்டியிட யாரும் இல்லை என்று சொல்வதை விட யாரும் போட்டியிட மாட்டார்கள் ..
உடன் பிறந்தோர் யாருமில்லாவிட்டாலும் அவரது சித்தப்பாவின் பிள்ளைகள் அறுவர் இருக்க .. அதில் மூன்று பெண்கள் மூன்று ஆண்கள்...அதில் ஒவ்வொருவருக்குமே பெரிய குடும்பம் தான்..
சரியாக கணக்கிட்டால் கண்மணிக்கு அண்ணன்கள்,தம்பிகள், தங்கைகள், அத்தைமகன்கள் , மகள்கள் ..என்று மளிகை கடை லிஸ்ட் போல் நீளமான உறவினர் கூட்டம்

சிங்காரவேலனுக்கும் வடிவுக்கும் மனம் முடிந்து வெகு நாட்கள் கழித்தே கண்மணி பிறந்தாள். அதற்கு முன்னமே அவரது இரு தம்பிகளுக்கும் இரு தங்கைகளுக்கும் பிள்ளைகள் பிறந்திருந்ததால் கண்மணியை விட வயதில் பெரியவர்களும் இளையோரும் என்று அவளுக்கு முன்னும் பின்னுமாய் ஒரு பட்டாளமே இருந்தது. ஒரு குடும்பத்தை தவிர அனைவருமே அதே ஊரில் வாழ்ந்ததால் பெரும்பாலும் இவர்கள் வீடு ஜெ ஜெ என்று இருக்கும். எல்லா நாட்களுமே ஏதோ பண்டிகை தினம் போல இருக்கும். என்ன சமையல் என்றாலுமே கொல்லைப்புறம் உள்ள பெரிய விறகடுப்பில் தான் செய்வர். பதார்த்தங்களும் இனிப்புகளும் பெரிய சம்படங்களில் செய்தாலும் இரண்டே நாட்களில் தீர்ந்து விடும்.இவளது செட் அனைவரும் ஒருங்கிணைந்துவிட்டால் அரட்டையும் தீனியும் வாயில் அறைபட்டுக்கொண்டே இருக்கும்.
கண்மணிக்கும் எல்லாரோடும் சேர்ந்து பொழுதை கழிப்பது மிகவும் பிடிக்கும் .

பரீட்சையின் காரணமாக ஆறு மாதங்கள் ஊருக்கு வராமல் இருந்தவள் இன்று திடீரென்று வர நேர்ந்துவிட்டது அதுவும் அப்பாவிடம் சொல்லிக்கொள்ளாமல்!

அவர்கள் கல்லூரி இருந்த பகுதியில் ஒரு சாதி கலவரம் வெடித்தது .. இதை அறிந்த உடன் கல்லூரி நிர்வாகம் அனைவரையும் உடனே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியிருந்தது .விடுதி இருக்கும் பகுதியில் உச்ச பட்ச கலவரம் சூழ்ந்திருக்க கையில் கொண்டுவந்த புத்தக பையோடு ரயில் நிலையம் சென்று காத்திருந்த ரயிலில் ஏறி வந்தாயிற்று .. கலவரம் பற்றி தெரிந்தால் தந்தை கவலை கொள்ளவாரென்பதால் ஏதும் சொல்லாமல் வந்துவிட்டாள்.

நல்லவேளையாக தந்தையும் முந்தைய நாள் இவளை அலைபேசியில் அழைக்கவில்லை !

கண்மணி மிகுந்த சிரமப்பட்டு தந்தையிடம் கெஞ்சி கூத்தாடி தான் தலைநகரில் படிக்க சம்மதம் வாங்கியிருந்தாள்.கற்க போகும் கல்வியைவிட பயணப்படும் தூரமே அவளை கிளர்ச்சியூட்டியது.
அதற்குத்தான் எத்தனை போராட்டங்கள் ?
"ஏண்டி ... அப்படியென்ன இது ஊர்ல இல்லாத படிப்பா? மூலைக்கு மூலை இன்சினீரிங் காலேசு இருக்குது ..பக்கத்தூருல இல்லாத காலேசா ? மெட்றாசுல போய் படிச்சாதான் ஆகுமா? இந்த படிப்பே உனக்கு ஒண்ணுத்துக்கும் ஆக போறதில்ல .சரியா நாலு வருஷம் முடிஞ்சதும் உன்ர கலியாணம்னு பேசி முடிச்சாச்சு..பேசாம வீட்ல இருந்து வீட்டு வேலைய கத்துக்கிடு.. உன் ஆசைக்கு ஏதோ ஒரு படிப்பு இங்கனயே படி " தாய் வடிவு பிடிவாதமாய் கூற "உன்ன பாக்காம எப்படி பாப்பா நான் இருக்க ? மூணு மாசத்துக்கு ஒருக்கா தான் ஊருக்கு அனுப்புவாங்களாமே" என்று அங்கலாய்த்த தந்தையையும் சரிக்கட்டி கல்லூரியில் சேர்வதற்குள் போதுமென்றாகிவிட்டது.
அவ்வளவு கஷ்டப்பட்டு சென்னை சென்று படிப்பை தொடங்கியவளுக்கு கல்லூரி புது அனுபவங்களையும் புது மனிதர்களையும் அறிமுகப்படுத்தியிருந்தாலும் பயணம் மட்டும் கை வராமலே இருந்தது.

இன்று தான் முதல் முதலாக பெற்றோரோ தோழியரோ இன்றி தனித்த பயணம் !அதுவும் ரயிலில் !பிறகு பொது பேருந்தில் !

இதுவரை இவள் ஊர் வர வேண்டுமென்றால் இவள் வீட்டு பெருங்கூட்டத்தில் இருந்து அண்ணன்களோ தம்பிகளோ தாய் தந்தையோ யாராவது உடனின்றி இவள் பயணம் மேற்கொண்டதேயில்லை ..அதுவும் ஆடாமல் அசையாமல் தங்கள் சொகுசு கார்களில் கருப்பு கண்ணாடிகளின் மறைப்பில் குளிரூட்டியின் இதமற்ற காற்று மேனி தழுவ உள்அமர்ந்திருக்கும் பார்த்து பழகிய முகங்களையே பார்த்து சலித்தபடி வரும் ஒன்றை பயணம் என்றா சொல்ல முடியும் ?
இயற்கை அழைப்புகளுக்கு பசி தீர்த்தலுக்கும் கூட பெரு உணவகங்களில் மட்டுமே நின்று அவசிய அனாவசிய பேச்சுகளின்றி அரை தூக்கத்தில் ஊர் வந்து சேர்வது கண்மணிக்கு போதும் போதும் என்றாகிவிடும்.

பயணம் என்பது ஆண்களை போல பெண்களுக்கு சுலபமானதல்ல. அதுவும் தனித்த பயணம் ?
தனித்து பயணிக்கும் போது ஆயிரம் பத்திரங்கள் சொல்லியனுப்பும் இச்சமூகம் .
அறிமுகமற்றவரிடம் பேச கூடாது என்று சொல்லும்.... தெரியாத ஊர்களுக்கு போக வேண்டாமென்னும் ....
தனித்து தங்குதல் அதைவிட சாத்தியமற்றது. பெரும் ஐந்து நட்சத்திர விடுதியென்றால் பரவாயில்லை .. அது எல்லோராலும் முடியுமா?
சாதாரண நடுத்தர விடுதிகளில் தங்கிவிட்டாலோ கழுகுக் கண்கள் வட்டமிட்டபடியே இருக்கும். சிறு அஜாக்கிரதை கூட கூடாது! இரையை எப்போது கொத்தி விழுங்கலாம் என்று துடிக்கும்.
பயணத்தின் ஆனந்தமே அற்று போய்விடும்!

கணவனோடோ உறவினரோடோ மட்டுமே பயணிக்க முடியும் .உறவற்ற ஒரு ஆணோடு ஒரு பெண் பயணித்து விட்டால் அவள் எல்லாவற்றுக்கும் தயாராக இருப்பதற்கான சங்கேதமாக அது கொள்ளப்படும்.
அதுவும் கண்மணி போன்று பெரிய கட்டுக்கோப்பான குடும்பங்களில் பிறந்த பெண்களுக்கு இந்த ஒருநாள் பயணமே பெரும் பாக்கியம் தான்.
ஊரின் எல்லையில் பேருந்தில் இருந்து இறங்கிய கண்மணிக்கு கால்கள் தரையில் பாவாத துள்ளலே நடையானது. ஊருக்குள் நுழைந்து சென்றால் ஐந்தே நிமிடங்களில் வீடு வந்துவிடும்.. அதைவிட விரைவாக முதல் வீட்டை கடக்கும் போதே கடைக்கோடியிலுள்ள இவள் வீட்டிற்கு தகவல் போய்விடும். ஆகையால் சுற்றிக்கொண்டு வயல்களையும் தோப்புகளையும் கடந்து செல்வது என்று முடிவெடுத்தபடி நடந்தாள்.
முதல் பேருந்திலேயே வந்து விட்டதால் லேசாக கிழக்கு வெளுத்திருக்க புலர்ந்து கொண்டிருந்த காலையின் ஈரப்பனித்துளிகள் காலணியின் இடைவெளியூடே பாதங்களை சிலிர்க்க வைக்க .. நடப்பதே பெரும் சுகமாக இருந்தது.

அறுவடைக்கு சற்றே பிந்தைய நாட்களானதால் இவ்வேளையில் ஊர் விழித்திருக்கவில்லை. வயல்கள் ஆள் அரவமற்று கிடந்தன. தோப்புகளில் மட்டும் ஒரு சிலர் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருக்க .. யாரும் இவளை கண்டுகொள்ளவில்லை.
ஒரு பெரியவர் மட்டும் இவளை அடையாளம் கண்டு நெற்றி மீது கை குவித்து கூர்ந்து நோக்கினார் " பெரிய ஊட்டு பொண்ணுதானேம்மா நீ.. ஏன் நடந்து போற கண்ணு ?உங்கப்பாருக்கு போன் போட்டா வண்டி அனுப்புவாருல்ல? " என்றார்.

'அதுக்காகத்தான் சொல்லலை ' என்று மனதுள் நினைத்தபடி "போன் தொலைஞ்சிருச்சு தாத்தா.. அதான் தகவல் சொல்ல முடியல " என்றபடி அவர் மேலும் கேள்விகள் எழுப்பும் முன் வேக நடையில் கடந்தாள்.
அடுத்தது அவர்களது தோப்பு தான் .. சற்றே பசிப்பதுபோல் இருக்க காலையில் ஈரோடு ரயில் நிலையத்தில் குடித்த தேநீர் இந்நேரம் ஆவியாகியிருக்க தன பையிலிருந்த தனக்கு மிகவும் பிடித்த 'லிட்டில் ஹார்ட்ஸ்' பிஸ்கட்டை எடுத்து கடித்தாள்.
தங்கள் தோப்பிற்குள் நுழைந்தவள் தென்னை மரங்களூடே நடந்தாள்.
காலையிலேயே மோட்டார் போடப்பட்டு பம்பு செட்டு மூலம் தண்ணீர் பொங்கி பாய்ந்து கொண்டிருந்தது .எப்போதுமே அதில் குளிப்பது அவளுக்கு மிக பிடித்த ஒன்று .. இப்போதும் அதே உந்துதல் தோன்றியது.. ஆனால் சொல்லாமல் கொள்ளாமல் வந்ததற்கே தன் தாயிடம் எவ்வளவு மண்டகப்படி காத்திருக்கிறதோ.. இதில் முழுக்க நனைந்த ஆடைகளோடு சென்றால் ருத்ர தாண்டவம் தான் என்ற எண்ணம் ஆவலை தணிக்க ...

தன்னை கண்டவுடன் வியப்பும் ஆவலுமாய் தன்னை அணைக்க விரியும் தந்தையின் கரங்களை உணர்ந்தபடி அவரது "வா கண்ணு " என்ற மென்மையான குரல் காதில் ஒலிக்க நடந்தவளை தடை செய்தது "ஐயோ" என்ற தீனக் குரல் .
தங்கள் தோப்புக்குள்ளிருந்து அந்த அதிகாலை வேளையில் எழுந்த அவல குரல் திகிலை கூட்ட எங்கிருந்து வருகிறது என்று சுற்றி நோக்கினாள்.

மேலும் மேலும் கதறலாக ஒலித்த அக்குரல் மோட்டார் அறையின் பின்புறமிருந்து வருவது புரிந்து பூனை பாதம் வைத்து நடந்தவள் மெல்ல சுவருக்கு அப்புறம் எட்டி பார்க்க .. தலை முதல் பாதம் வரை குருதி வழிய குற்றுயிராய் ஒருவன் கதற சுற்றிலும் ரத்தம் தோய்ந்த ஆயுதங்களுடன் ஒரு சிலர் நிற்க .. தன் கன்னத்தில் இடியென இறங்கிய கரங்களின் வேகத்தில் பேச்சு மூச்சின்று சரிந்து விழுந்தான் அவன்.

மறுமுறை ஓங்கிய கையோடு கீழே சரிந்து விழுந்தவனை ரௌத்திரத்தோடு பார்த்தபடி நின்றிருந்த சிங்காரவேலனை கண்டு விதிர்த்து நின்றாள் கண்மணி.

அவள் கைகளிலிருந்து கீழே விழுந்த 'லிட்டில் ஹார்ட்டும்' நொறுங்கியிருந்தது அவள் இதயத்தை போலவே!
 
Last edited:
Wow suthamana kongu tamil. Padikkave apdi irruku? adhuvum Chennai to Erode train travelling vera level tha ponga sangagiri varumbodhey amma station varapogudu sappadu ready aah yeduthu vainga nnu 10 phone call panniduvom.
Ippo adhu yellam romba miss pandromenu feel aachu.
Idhoo vaa daa rajathinu neenga kai pidicha kootitu pogura madiri oru imagines pannikaren.
Story success aagha vazhthukal thozhi??????
 
Congrats.... அப்பாயின் முகம் நிஜத்துக்கும் தனக்கும் வேற வேறனு கண்மணி உணர்ந்த நேரம் போலவே
 
அருமையான பதிவு ரைட்டர் ஜீ . வாழ்த்துக்கள் ஜீ. கண்மணியின் குட்டி இதயம் உடையக் காரணம் என்னவோ?.
 
அப்பா சிங்காரவேலனுக்கு
ஆறுமுகம் வில்லமுகம்
கண்மணி கண்ணில் பட்டு இருக்கு
 
Top