Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் - 19

Advertisement

TNWContestWriter098

Well-known member
Member

தன் கூட்டாளிகளோடு தோப்பிற்குள் நுழைந்த அஜித்திற்கு உடைந்து கிடந்த பூட்டும் .திறந்து கிடந்த கதவும் அதிர்ச்சியூட்ட உள்ளே அவனில்லை என்பதை அறிய வெகு நேரமாகவோஇல்லை .

அப்போது ஒருவன் தரையை சுட்டிக் காட்ட அங்கு இரு சக்கர வாகனத்தின் தடங்கள் தெரிய யாரோ வந்து அவனை கூட்டி போயிருக்கிறார்கள் என்று புரிந்தது.. எல்லாரையும் ஒவ்வொரு திசையில் தேட சொன்னவன் தன வண்டியில் ஏறி ஊர் எல்லை நோக்கி புறப்பட்டான்.

தன் பின்னே கதிர் ஏறி உட்காரவும் வண்டி தடுமாறியது கண்மணியின் கைகளில்.

அதனை உணர்ந்தவனாய் முன் சாய்ந்து அவள் தோளில் முகம் பதித்து த்ராட்டிலை பிடித்துக் கொண்டு ஓட்ட ஆரம்பிக்க .. உலகமே மறந்து போனது கண்மணிக்கு .

ஸ்வாதியின் வண்டியின் கண்ணாடியில்.. பின்புறம் வரும் கண்மணியும் கதிரும் தெரிய .." ஏய் பாத்தியாடி நம்மள நண்பன் படத்துல வர ஆம்புலன்ஸ் சர்விஸ் மாதிரி ஆக்கிட்டு இவ மட்டும் 'பார்த்த முதல் நாளேன்னு' பாடிட்டு வரா பாத்தியா .. ? இந்த ரணகளத்திலும் உன் உடன் பிறவா சகோதரிக்கு இந்த கிளுகிளுப்பு தேவையாடி தன்னு?"

"ஏய்.. நீ முன்னால பார்த்து ஓட்டுறி .. யாராவது பாத்தாங்க நாமளும் சேர்ந்து செத்தோம் .. வேற ஜாதி பையனோட ஒரே வண்டியில போனீங்களானு நம்மள எண்ணெய் சட்டிக்குள்ள போட்டு வருத்துருவாங்க ..அப்புறம் கும்பிபாகம் தான் "

"இவன் மேலெல்லாம் ஒரே ரத்தமா இருக்குடி ...எனக்கு வேற ரத்தம்னா ஒரே பயம் .. அதனால தான் டுவேல்த் ல கூட சைன்ஸ் குரூப் எடுக்கல தெரியுமா?"

"ஏண்டி அவ்வளோ ரத்தம் வெளியே போயிருக்கு ..அவனே பயப்படாம காதலுக்காக தாங்கிக்கிறான்..உனக்கென்ன ?"

"ட்ரெஸ்ஸெல்லாம் ரத்தமாகிடுச்சிடி ..உவ்வே "

"அதுக்குதான் ரெட் கலர் டிரஸ் போட்டுக்கிட்டு வர்ந்துருக்கோம்.. புரியுதா ?"

"ஓஹ்.. பிளான் பண்ணி பண்றீங்கடி .. நல்லா வருவீங்க .. இவ எப்போ இருந்தடி இவ்வளவு விவரமா ஆனா .. நம்மள இவன் கூட கோர்த்து விட்டுட்டு ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கா? லவ் பண்ணாலே இப்படி ஆயிருவாங்களோ "

"லவ் பண்ணி பாத்துட்டு சொல்றேண்டி "

"இவன் நிலமையை பாத்தும் லவ் பண்ண தோணுதா?"

"இப்போ தாண்டி தோணுது .. லவ் பண்ணதுக்காக ஒருத்தன தீத்துக்கட்டவே பாக்கிறாங்க ..ஒருத்தி உயிரையே விட்டுட்டா ..அப்படி என்னதான் இருக்கு அந்த லவ்வுலன்னு பார்க்க வேணாமா?"

"அப்படியா .. உங்கண்ணன் அந்த அஜித்து இருக்கானே ..அவன் கிட்ட கேட்டு பாப்போமா ?"

"அவனை ஏண்டி ஞாபக படுத்துற ..அவன் மட்டும் இப்போ நம்மள பாத்தான் ..அவ்வளவுதான்.. 'வீரம்' அஜித்துன்னு நெனப்பு அவனுக்கு "

"ஆமாண்டி எங்க தல பெற வச்சிட்டா தல ஆயிட முடியுமா ?" என்றாள் தன்னு .. அவள் தலையின் தீவிர ரசிகை.

ஒரு பெருமூச்சை வெளியிட்டாள் ஸ்வாதி "நல்ல வேளைடி ..என் ஜாதகம் அவனுக்கு பொருந்தலை ..இல்ல மொத பலி நானா தான் இருந்துருப்பேன். கிரேட் எஸ்கேப்பு .எங்கிருந்தோ வந்து அந்த கஸ்தூரியக்கா மாட்டிக்கிச்சு டி "

இப்படியாக இவர்கள் வழக்கடித்தபடி வண்டியை ஓட்ட ..ஊர் எல்லை வந்திருந்தது.

அங்கு சிலர் நின்றிருந்தனர்.. பார்த்ததுமே இவர்களது ஊர்க்காரர்கள் இல்லை என்று புரிய ..இதற்குள் கதிரும் வந்து விட அவர்களிடம் சென்று பேசி சுரேஷை அவர்களிடம் ஒப்படைத்தான்.

பெண்களை முதலில் அனுப்பி வைத்தவன் தானும் அவர்களிடம் விடைபெற்று கிளம்ப ..தூரத்தில் ஒரு புல்லெட் வரும் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க ..தூரத்தில் அஜித் புல்லட்டில் வந்து கொண்டிருந்தான். வேகமாக காரை கிளப்ப சொன்னவன் அவர்கள் தூரம் சென்றதும் ஏதும் அறியாதவன் போல மெல்ல ஊரை நோக்கி நடந்தான்.





அன்று இரவு அடித்து போட்டாற்போல் இருந்தாலும் தூக்கம் வரவில்லை பெண்கள் மூவருக்கும். பதை பதைப்பாகவே இருந்தது மூவருக்கும்.


தாங்கள் செய்து விட்டு வந்த காரியத்திற்கான எதிரொலி எப்படி இருக்குமோ என்பதாக மனம் பதைத்தது.
வெகு நேரம் கழித்தே மூவரும் உறங்க ..இது எதுவும் அறியாமல் வீட்டின் மற்ற உறுப்பினர்கள் காலையின் இயல்பான வேலைகளில் ஆழ்ந்திருந்தனர்.

குளித்து முடித்து கண்மணி கீழே இறங்கி வர சிங்காரவேலன் அப்போது தான் அமர்ந்து உண்டு கொண்டு இருந்தார்.

அவரை பார்த்ததும் இரண்டு நாட்களாக ஏற்பட்டிருந்த குழப்பத்தில் தயங்கி நின்றாள் கண்மணி.

இவளை பார்த்ததும் எப்போதும் போல் மென்னகையோடு "வா கண்ணு" என்றார்.

"பக்கத்துல வந்து உக்காரு கண்ணு " என்று அவர் அழைக்கவும் சென்று அவர் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் .. எப்போதும் செய்வது போல் ஒரு கவளம் உணவை எடுத்து அவளது வாயருகில் கொண்டு வர கண்கள் கலங்கியது கண்மணிக்கு. இதுவே அவரது இயல்பாக இருக்கக்கூடாதா என்று ஆற்றாமையாக இருந்தது.

வாயை திறந்து உணவை வாங்கி கொண்டவள் உள்ளமோ தான் கதிரை விரும்புவது அறிந்தால் இதே அன்பும் பரிவும் தன் மீது இருக்குமா என்ற எண்ணம் தோன்ற ..உணவு தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது.

"ஏன் கண்ணு ? உன் முகமே வாடிப்போயிருக்கு. என்ன சங்கதி ? காலேஜ்ல ஏதும் பிரச்சனையா கண்ணு ?" என்றார் வாஞ்சையாய்.

"ஒன்னும் இல்லீங்கப்பா .. " தயக்கமாய் சொன்ன மகளை ஏறிட்டவரின் விழிகளில் சிந்தனை!

"அந்த லட்சுமி புள்ளய பத்தி யோசிச்சுகிட்டு கிடக்கியாக்கும்.. அது கிடக்குது விடும்மா ..வீட்டுக்கு அடங்காத புள்ள ..போய் சேர்ந்ததே நல்லது. அவன் அப்பனாத்தாளுக்கு அதால கெரகம் தான் .. இதோட அது விட்டு ஒழிஞ்சிதுன்னு நெனைக்கோணும் .." என்றார் ஆங்காரமாய்.

அவர் அப்படி பேசியது கண்மணிக்கு மிகவும் அதிர்ச்சியாய் இருந்தது.

"ஏம்பா ..இத்தனை வருஷம் பாத்து பாத்து வளத்து போட்டு இப்போ புடிக்காத காரியம் ஒன்னு செஞ்சிட்டா அந்த புள்ள வேண்டாதவளா ஆகிடுவாளா ?"

"பெத்தவங்களுக்கு பிரச்னை குடுக்குற புள்ளைக எல்லாம் வேண்டாதவங்க தான்மா " ஆணித்தரமாக சொன்னவரின் பதிலில் திக்கென்றது கண்மணிக்கு .

"அப்போ அவ அண்ணன் போன வருஷம் எவனையோ வெட்ட போய் கோர்ட்டு கேஸுன்னு அலைஞ்சாங்களே அந்த குடும்பம் ..ஏன் இன்னும் அவன் ஜெயில்ல தான இருக்கான் .. அவனும் பெத்தவங்களுக்கு பிரச்னை குடுக்கறவன்தானே .."

" ஏன் கண்ணு புரியாம பேசுற ? அவனும் இவளும் ஒண்ணா ? அவன் நம்ம ஊருக்காக..ஊர் மானத்துக்காக பக்கத்துக்கு ஊர்காரனை கைய வெட்டிப்போட்டான் .. நம்ம ஊர் பொண்ண தொட்டா சும்மா விட்டுருவோமா ? "

அவன் உங்க அடியாள்னு சொல்லாம சொல்றீங்க என்று நினைத்தவளுக்கு லக்ஷ்மியின் அண்ணன் செய்த காரியம் நினைவில் ஆடியது. அவளுடன் பள்ளி பயின்ற மாணவன் ஒருவன் வேற்றூரை சேர்ந்தவன் சக மாணவியுடன் எதேச்சையாய் கை குலுக்கியதை பார்த்தவன் அவன் கையையே வெட்ட போக போலீஸ் கேஸாகிவிட்டது.இப்போது அவன் ஊர் மானத்திற்கான காவலனாகிவிட்டான் .. லக்ஷ்மியோ துரோகியாகி விட்டாள்.

"ஏம்பா .. ஒரு பொண்ணு தனக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழ கூடாதா? அது தப்பா ?"

"என்ன கண்ணு ..பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு.. அப்பனாத்தாளுக்கு தெரியாதாக்கும் தன் புள்ளைக்கி எது நல்லது கெட்டதுன்னு.. அது தெரியாமலா இத்தனை வருசமா வளத்துருக்காக? நாளப்பின்ன ஒரு பிரச்னைன்னா அவங்கதான் வந்து அந்த புள்ளைக்காக நிக்கணும் ?"

" ஏன்பா ? நல்லா வாழுவாங்கன்னு நம்பி கல்யாணம் பண்றீங்களா இல்ல பிரச்னை வரும்னு நினைச்சே கல்யாணம் பண்றீங்களா ?"

தன் மகளா தன்னை இத்தனை கேள்வி கேட்கிறாள் ? எதற்கும் 'சரிங்கப்பா' என்று தலையாட்டும் தன் மகளா என்றிருந்தது சிங்காரவேலனுக்கு.

இருந்தும் மகள் மீதிருந்த பாசம் அந்த கேள்வியை மிஞ்சி நிற்க பொறுமையாகவே பதிலளித்தார்.


" வாழ்க்கைன்னா நல்லதும் வரும் கேட்டதும் வரும்மா. சண்டை சச்சரவு எல்லாம் இருக்கத்தான் செய்யும் .. உங்கம்மாவுக்கும் எனக்கும் எத்தனை அடிபுடி வந்திருக்கு தெரியுமா ஆரம்பத்தில ? கொஞ்சம் கொஞ்சமா ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு சமாளிச்சிக்கிட்டோம் .. பெரியவங்க வழிகாட்டுதலா இருப்பாங்க ..அவங்க சொல்றபடி நடந்தா சரியா போகும் ."

" வீட்ல பாத்து கட்டி வச்ச நீங்களே ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டப்போ காதலிச்சு கட்டிக்கிட்டவங்க புரிஞ்சிக்க மாட்டாங்களாப்பா?"

தன் மகள் முதல் முறையாக தன்னிடம் இத்தனை வார்த்தையாடுவதை கண்ட வேலனின் மனம் சிந்தனையில் ஆழ ..அதை கலைப்பது போல் அப்போது மற்ற பெண் பிள்ளைகளும் உணவு உண்ண கீழே வர ..அதன் பிறகு ஒரே பேச்சும் சிரிப்பும் தான்.. அதில் சற்று நடந்தவைகளை கண்மணி மறந்திருக்க ..அந்நேரம் உள்ளே நுழைந்தான் அஜித்.
 
அச்சோ !அஜித் பய வாறானே ..?
என்ன பத்தவைக்கப் போறானோ..?
சூப்பர் 😀
 
Top