
‘காதலரின் பிரிவு தற்காலிகமென்று அறிந்து, நல்ல காரணத்திற்காகப் பிரிவதை மனம் ஏற்று மகிழ்வது’
பிரிவுரை மகிழ்ச்சி -26
அன்றைய இரவு குளு..குளு தென்றலோடு அவன் சீண்டலுடன் பரவி இருந்த இடம், இன்று அலைகளின் மோதலின்றி மெத்தனமாக அவளைப் போல் இருந்தது. ஆனால் அவன் நினைவலையில் முகத்தில் இளநகை காட்டினாள் ஸ்ரேயா.
“ரே.. இப்ப எதுக்கு இப்படி பண்ற? யாருகிட்டேயும் சொல்லாம கிளம்பி வந்தது தப்பா இருக்கு” பயணப் பொதியுடன் மாலே ஏர்போர்டில் அமர்ந்திருந்தார்கள்.
“அதலாம் இல்ல.. பட் கிட்ட பட்டுனு சொல்லாம வந்ததுதான..!” மாளவிகா வம்பு செய்தாள்.
“அதலாம் இல்ல.. மன்னிப்பு கேட்டுகிட்டே இருந்தான்ல, பொழச்சு போடானு சொல்லிகிட்டு வந்திருக்கலாம்னு தோணுது..” ஒருவகை குற்றவுணர்வை பிடித்திருந்தாள் ஹரிதா.
“அமர்கிட்டயும் அவன் அம்மாகிட்டயும் சொல்லிக்காம வந்துட்டோம்..!” மாளவிகா பதட்டப்பட்டாள்.
“நம்ம கிளம்புனது தெரிஞ்சா கன்பார்ம் அமர் கோபப்பட போறான்.. எப்படி சமாளிக்க போறாமோ..” என்றான் மாதவன்.
எதைப் பற்றியும் கவலை இன்றி இருந்தவளுக்கு தொலைவில் புன்சிரிப்புடன் டேர்ட்டில் நெக் டீ-சர்டில் உள்ளத் தூய்மையுடன் தீரனாக நடந்து வந்தவனை பார்த்தவளின் விழிகள் அவன் விழியோடு மின்னலை தேக்கியது.
“என்னடி கோபமா வருவான்னு பார்த்தா, சிரிச்சுக்கிட்டே வாரான். அமர்கூட யார் வராங்கனு பாரு..” மாளவிகா சொல்ல, இருவரின் பார்வையும் பிரிந்து தனி தனியாக பயணத்தை தொடங்கியது.
“ராகுல் எதுக்குடி வாரான், ஒருவேளை அமர சென்ட் ஆஃப் பண்ணவா இருக்குமோ..?” என சந்தேகம் ஹரிதாவுக்கு.
“எதுக்கோ.. சீக்கிரம் மன்னிச்சுட்டு வா..” குறும்புதனமாக கூறினாள் மாளவிகா.
நெருங்கி வந்தவனின் இதழோடு வதனம் முழுமையும் ஸ்ரேயாவை கண்டவுடன் மேலும் விரிந்தது. அவனின் கள்ளமில்லா சிரிப்பில் இவளுக்கு எரிச்சலோடு கோபம் வந்தது.
“இப்ப எதுக்கு சிரிக்கிற.. சொல்லாம கிளம்பி வந்துருக்கோம், அதுக்கு கோபப்படாம ஈ.ஈ..னு இளிக்கிற..” கோபமாக வருவான், அதை வைத்து முரண் செய்து சில நாட்கள் சந்திப்பை தவிர்க்கலாம் என முடிவு செய்திருந்தாள்.
அதை வீணாக்கிய அவனின் செய்கையில் கோபம் வருவதுக்கு பதிலாக காதலே முளைத்தது. இருப்பினும் அதை வெளிகாட்டாமல் முறைத்துக் கொண்டே இருந்தாள்.
“சிரிச்சது ஒரு குத்தமா, துவாரபாலகியோடு சேர்ந்து என்னை கலாய்க்க பண்றேனு நினைச்சேன்டா..” என்றவன், அவள் காதோரோத்தில் இருந்த முடியை ஒதுக்கி விட்டான்.
“உனக்காக செலக்ட் பண்ண குர்தாவ நீ ஏன் போட மாட்டற?” ஆர்வமும், ஆதங்கமும் நிறைந்திருந்தது.
“ஏய்.. சக்கரக்கட்டி, அன்னைக்கு என்னை சைட் அடிச்சுக்கிட்டே சின்ன சைஸ் ஷர்ட்டா எடுத்து கொடுத்துட்ட.. அத பத்திரமா வைச்சுக்கலாமே தவிர, போட முடியாது” அமர் அளித்த பதிலில் வெட்கம் பிடித்துக் கொள்ள தடுமாறினாள்.
ஓர் வினாடி இமை மூடி இருந்தவள், அவனது கையை பட்டென தட்டிவிட்டாள்.
“என்கிட்ட பொய் சொல்லிருக்க.. நீ ரெசார்ட் ஓனர், மேனேஜர் இல்ல..” வார்த்தைகள் உளறியே வந்தது.
“இப்பயென்ன தெரியனும்.. ஆமா, ரெசார்ட் மட்டுமில்ல நம்ம போன தீவு அதுக்கூட நம்மளோடது”
“என்ன..? என்கிட்ட உண்மையை மறச்சு, பொய்யும் சொல்லி இருக்க.” என ஆரம்பித்தவள்,
“நம்ம ரிலேஷன இப்பவே முடிச்சுக்கலாம். ஏற்கனவே பொய்யுல தொடங்கின உறவால கடந்த காலத்துல நிறைய கஷ்டப்பட்டேன், இனியும் கஷ்டப்பட விரும்பல..”
“ஏய்.. எதுக்கு ரே இப்படி பேசுற? இது அவ்வளவு பெரிய விஷயமில்ல, நமக்காகதான் அமர் மறைச்சான்..” மாளவிகா பரிந்து கொண்டு வந்தாள்.
“நீங்க கொஞ்சம் பேசாம இருக்கீங்களா..” என்றவள், அமர் கையை பிடித்து இழுத்துக் கொண்டு தனிமையை நாடி வந்தாள்.
அமரோ மறுமொழி தராமல் அலைவுறும் அவளது விழிகளை மேய்ந்தான். அவனின் பார்வையை கிரகிக்க இயலாமல் தாழ்ந்த தன்னவளின் தலையை, மோவாய் பிடித்து உயர்த்தினான்.
“என்னோட சக்கரக்கட்டில்ல.. சொல்லு என்னாச்சு?” அவனது கொஞ்சலில் நீராவியாக அவளை மாற்றினான்.
“ரெசார்ட் ஓனர்டா நீ.. உனக்கு பொருத்தமானவளா நான் இருக்க மாட்டேன், செட் ஆகாதுடா..” குரல் கொஞ்சியே வந்தது.
“உனக்கு ஓனர் வேணாம், அப்படியா?” என்றவனுக்கு, ‘ஆம்’ என அவள் தலை ஆமோதிக்கவும்,
“சரி.. இன்னைல இருந்து எனக்கும் சேர்த்தே நீ சம்பாதிச்சு போடு.. எனக்கு வேலை கிடைக்கிற வரைக்கும்..” என அதிராமல் சிரிப்பவனிடம் மயங்கியே நின்றாள்.
’என்ன சொல்கிறான்.. இந்த மாலத்தீவை துறந்து தனக்காக வருகிறானா!’ ஸ்ரேயா அமைதியாக நிற்கவும்,
“அப்ப நான் வேண்டாம்..! ரெசார்ட் மேனேஜர்னு சொன்னது பிரச்சனை இல்ல.. என்னைவிட்டு விலகனும்னு முடிவு பண்ணிட்ட..”
“நீ வேண்டாம்..!” உதட்டை கடித்து வரும் அழுகையை தடுத்தாள்.
“இப்படி கடிக்காத பயர் ப்ளை வலிக்கும்..” முறுவலோடு அவள் இதழ்களை பல்லிடுக்கில் இருந்து விலகினான்.
“நீ வேண்டாம்னு சொல்றேன், சிரிக்கிறடா..! இப்படி சிரிச்சுகிட்டே இருந்த என் முடிவ மாத்திக்க மாட்டேன், பாத்துக்கோ..” அனைத்தையும் விடுத்து, கடைசியாக அவள் பேசிய ஓர் வார்த்தையை மட்டும் பிடித்துக் கொண்டான்.
“பாக்கணுமா..!” என்றவனின் பேச்சில், குறும்பில் கடல் காற்றோடு மேனியும் குளிர்ந்தது.
“இப்படி சிரிச்சா நான் என்னடா பண்ணுவேன்..” அவனின் குறும்பை வெகுவாக ரசித்தாள்.
“ஒண்ணும் பண்ண வேண்டாம், ஜஸ்ட் ஒரு ஹக் குடு போதும்..”
“அதுமட்டும்தான்..” சிறுமியாக கேட்டவள், அணைப்பை கேட்டவனுக்கு முன்பாக பாய்ந்து போய் அவன் நெஞ்சில் பொதிந்து போனாள். இன்னும் அவனின் கை அவளை தழுவாமல் இருக்க, அவனை தன்னுள் மேலும் இறுக்கினாள்.
அவன் தழுவல் இல்லாத மேனி ஏங்கி நாட்டத்தை நேத்திரம் வழி அவனுக்கு காட்டினாள். அதற்கு மேல் பொறுப்பானா என்ன! அவளது முகம் முழுவதும் இதழ் கவிதை படைத்தவன், அவனின் பிணைப்பில் இறுகி கொண்டான்.
“இப்ப என்னவாம் இவளுக்கு..! பாவம், அமர கதறவிடுறா..!” என அமருக்காக பரிதாபப்பட்டாள் ஹரிதா.
“ஆமாமா.. பாவம்தான், ஆனா அமர் அத டேக் இட் ஈசியா எடுத்துட்டான்.. இனி அவங்க பாத்துப்பாங்க. நம்ம இடையுறு பண்ணாம இருந்தா சரி..” மாதவன் அறிவுரை தர,
“அதலாம் சரி, சென்ட் ஆப் பண்ண வந்தவன் நம்மகூட வாரான், நம்மகூட வர வேண்டிய ஆள் சென்ட் பண்ணிகிட்டு இருக்கான். ஏதோ நடக்குது, சரி.. சரி.. கொஞ்சம் அந்த பட் கன்சிடர் பண்ணு ஹரிமா..” மாளவிகா சொல்ல,
“நீ ஏன்டி திடீர்னு இவ்வளவு நல்லவளா மாறிட்ட..!”
“லவ்வர்ஸ் சேர்த்து வச்சா புண்ணியம் கிடைக்குமாம்.. தெரு தெருவா போகாட்டியும், ஏதோ என் கண் முன்னாடி காதலுக்கு தவிக்கிற ஜீவன்களை சேர்த்து வைப்போமே..!” என்றவர்கள் பேசிய படியே ஏர்போர்ட்டிற்குள் நுழைந்தார்கள். ஸ்ரேயாவோ அமரை திரும்பி பார்த்தபடி அப்படியே நின்றாள்.
“என்னாச்சு.. போகலயா?” என தூரத்தில் நின்றவளின் ஒரப்பார்வை தன்னை துளைப்பது கண்டு கேட்டான்.
“போகணும்...” என்றவள் பின்னோக்கி தன் நடையை எடுத்து வைக்க,
‘ஓரப்பார்வை பார்க்கும்போது
உயிரில் பாதி இல்லை மீதிப்
பார்வை பார்க்கும் துணிவு
பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும்
உரிமை உனக்கே உனக்கே..
கண்ணே உன்னை
காட்டியதால் என் கண்ணே
சிறந்தடி உன் கண்களைக்
கண்டதும் இன்னொரு கிரகம்
கண் முன் பிறந்தடி..’
எனப் பாடியவனின் இதழ் நோக முறுவல் ஒட்டிக் கொண்டது.
ஓடிச் சென்று அவனை கட்டி தழுவியவள், “அமரா.. சாரிடா, கொஞ்ச நாள் எனக்கே எனக்குனு ஸ்பேஸ் வேணும், நீ வேணும்னு நானா உன்னை தேடி வரவரைக்கும் என்னை சந்திக்க முயற்சி பண்ணாத, ப்ளீஸ்டா..”
“என்னை பாக்காம இருந்துருவியா..?” புருவத்தை மொத்தமும் சுருக்கினான்.
“ம்... உன்னோட இருந்த நாட்கள நினைச்சுக்கிட்டே ஆயுசு முழுக்க இருக்க சொன்னாலும் இருப்பேனே..!”
“என்னால் முடியவே முடியாது..” அவளை இறுக்கி அணைத்தவன்,.
“ஆனா, காரணம் தெரிஞ்சுச்சு நீயே நினைச்சாலும் என்னை கன்ட்ரோல் பண்ண முடியாது, துண்டுக்கட்டா தூக்கிட்டு போயிருவேன்” அவள் நெற்றி முட்டி மிரட்டவே செய்தான்.
“உனக்கு நான்தான் வேணும்னு தோணுச்சுனா, வாடா பாத்துக்கலாம்..” அமர்நாத் மூக்கில் சிறு முத்தம் தந்து விடைபெற்றாள்.
என் அருகாமை இன்றி வாடப்போகும் அவனை நினைத்து, இவள் வாடினாள்.
இம்முறை கொச்சின் செல்லாமல் நேரடியாக சென்னை வந்து இறங்கியவர்கள் அவர்கள் அன்றாட வாழ்வை தொடங்கி இருந்தார்கள்.
ஸ்ரேயாவிடம் தனிமையோ, சோர்வோ இல்லை, முன்னைவிட இப்போது சுறுசுறுப்பாக உலா வந்தாள். அவளைக் கண்ட இருமலர்கள்தான் ஆதங்கத்திலும், கோபத்திலும் அவளிடம் மாறுபட்டு நடந்து கொண்டனர். அதை உணர்ந்த ஸ்ரேயா, “என்ன புரிஞ்சுக்குவீங்கனு சொல்லாம மறச்சது தப்புதான்..” என்றவள் திரிபுரசுந்தரியிடம் பேசிய விவரங்களை பகிர்ந்திருந்தாள்.
அமரின் நினைவில் வாட்டம் எழும் தினங்களில் கண்ணாவை பார்க்க செல்பவளுக்கு கண்ணாவின், ‘அமரப்பா.. அமரபா..’ என்கிற விழிப்பு மனச்சோர்வை மிஞ்சியது.
அமர்நாத் தன் இணையானவளை சந்திக்கவில்லையே தவிர கண்ணா, சாஸ்ருதி குடும்பத்தினரை நேரில் சென்று சந்திப்பதும் அடிக்கடி தொலைத்தொடர்பு வாயிலாக உறவை வலுப்படுத்தவுமாய் இருந்தான்.
‘மா.. அமர..பா.. வந்தப்ப எனக்கு நிறைய சாக்லேட் வாங்கி கொடுத்தாங்க, நான் ஜாபிட்டேனே..! அப்பறம் ஐஸ்கீம் கொடுத்தா... நா..ன்னு வேண்மனு சொல்லிட்ட, நீ வரப்ப வாங்கிகலானு சொன்னா.. அமர..பா.. குட் பாய் சொல்லி நோஸ்ல கிஸ் பண்ணா..’ அவன் தீண்டிய மூக்கை மென் பஞ்சுவிரல்களால் நீவியவளுக்கு, பொறாமை எழுந்தது.
‘எனக்கு மட்டும்தான் மூக்குல கிஸ் பண்ணனும்னு சொல்லி வார்ன் பண்ணனும்..’ என சிறுமியாக பொறாமை எழும்பியது.
‘மா.. அமரப்பா வீடியோ கால்ல பிக் பிஸ், டால்பின், அப்புறம் புளு கலர் சீ.. எல்லாம் காட்டினாங்க.. கண்ணா ஹேப்பி..!’ என குதூகலமாக குதித்தான்.
அடுத்த சில நாளில், ‘அமரப்பா.. மொட்ட போட்டு இருக்காங்கமா.. நானும் போடனும்னு சொன்னா.. ஸ்ருதிமா சொன்னா.. அம்ராபா நம்ம பேமிலிக்கு வந்தபிறகு எல்லாரும் போய் மொட்ட போடலாம்னு சொன்னாங்களே! நானும் அமராபா..வும் ஷேம்.. ஷேம்.. இப்போம்’ என அழகாக அமர் செய்து காண்பித்த சிவாஜி த பாஸ் இமிடேட் செய்து காட்டினான் குட்டி கண்ணன்.
அமரை மறக்க எண்ணவில்லை, ஸ்ரேயாவை சுற்றிலும் அவன் பேச்சு மந்திரம் போல் ஒழித்தது. இந்த துவாரபாலகிகள் அவள் அருகில் இருக்கும்போதே அவனுடன் வீடியோ காலில் அளவளாவினார்கள். அதில் அவ்வப்போது அவனின் குரலை கேட்க முடிந்தது.
இதோ நாட்கள் மெல்ல நகர்ந்து நூறு நாட்களை எட்டும் தொலைவில் சென்று விட்டது. மாலத்தீவை பிரிந்த சில நாட்களில், ஸ்ரேயா அவனை விலகிய காரணத்தை கணித்து விட்டான்.
அடுத்து.. அடுத்து தாயின் பெண் பார்க்கும் படலம், வீட்டில் அமரின் இருப்பை குடும்பாத்தருடனே எந்நேரமும் வைத்திருப்பதை பார்த்தவனுக்கு, ஸ்ரேயா பிரிவின் ஆணி வேரை விளங்கிக் கொள்ள முடிந்தது.
திரிபுரசுந்தரியாக வந்து சொல்லும் வரை அமராக சென்று விளக்கம் கேட்கவில்லை. பெண் குடும்பத்தார்கள் வீட்டிற்கு வரும் அன்று மொட்டை அடித்து வந்து நின்றவனிடம், இதற்கு மேல் அமரிடம் மறைப்பது பிசகு என அஞ்சியவர், ஸ்ரேயாவுடன் நடந்த சவாலை கூறினார்.
அடுத்த வந்த நாட்களில் திரிபுரசுந்தரி உணர்ந்து கொண்டார், அமரின் காதலை பிரிக்க எண்ணி பிழை செய்ததாக கவலை கொண்டார்.
ஸ்ரேயா உரைத்தது தாமதமாக புரிந்தது அவருக்கு, தன்னவர்கள் மனம் காயம்படும்படி அமர் நடந்துக் கொண்டதும் இல்லை, இனி நடக்கப்போவதும் இல்லை என்பதே.!
‘எங்க அம்மாவே ஒரு மாசம் போதும்னு சொல்லிருக்காங்க..! இவளுக்கு இருக்க கள்ளம்.. ஹ்ம்ம் கவனிச்சுக்குறேன்..!!’ என அமர்நாத் ஏகத்துக்கும் கடுப்பானான்.
அகிலன் தலைமையில் அப்ஸரா முன்னெடுத்து அமர்நாத் வீட்டாரிடம் சம்மந்தம் பேசி அடுத்து வரும் சுபமூகூர்த்தத்தில் கல்யாணத்தை வைத்தக் கொள்ளலாம் என்பதை ஸ்ரேயா அறியாமல் முடிவு செய்தனர். அமரின் நிபந்தனை படி நூறு நாள் முடியவும் திருமண தேதியை வைத்திருந்தனர்.
“ஏன் அபி..? இந்த பையன பெத்தவங்க எல்லாம், காதலுக்கு இடைஞ்சலாவே வராங்களே, நாளைக்கு குகனுக்கு கல்யாணம் வயசு வந்தா இந்த சில்லி சாஸ் வில்லி அவதாரம் எடுத்துருவாளோ..!”
“ஆமாடா.. என்னமோ அவங்க பசங்களுக்கு ஒண்ணுமே தெரியாத மாதிரியும், பொண்ணுங்க ஏமாத்தி தெருவுல நிக்க வைக்க போற மாதிரியும், இந்த மதர்ஸ் ஓவர் ப்ரொடக்டிவ்ல..! நீ சொல்ற மாதிரி சாஸ் செய்யுற ஆளுதான், அதுக்கும் வாய்ப்பு இருக்குடா..!” என தன்னுடன் வந்த துணையை வம்பு செய்து சீண்டினர் அகிலனும், அப்ஸரவும்.