
‘அகத்தினையில் தலைவனுக்கும், தலைவிக்கும் இடையிலான காதலை தோழன், தோழி உதவியுடன் சந்திக்கும் நிகழ்வு.’
பாங்கற், பாங்கி கூட்டம் – 27
சென்னையில், வழமை மாறாத தன் தியானத்தில் இருந்த ஸ்ரேயா, இரு மலர்களின் வாக்குவாதத்திற்கிடையே புன்னகையுடன் கண் திறந்தாள். தன் முன்னால் மணம் பரவ இரு மொட்டுகளோடு மலரத் தயார் நிலையில் நின்றது மல்லிகைச் செடி. அதன் அருகில் சென்று பூவை முகர்ந்தவளுக்கு, தன்னவன் குறும்பு வதனம் நினைவிடுக்கில் ஒளிர, அதே புன்னகையை சுமந்து கொண்டு மல்லுக்கட்டும் தோழிகளின் எதிரில் தேநீரோடு சென்று அமர்ந்தாள்.
“ரே.. என்னனு கேக்க மாட்டியா?” ஹரிதா தொடங்க.
“என்ன?” பட்டும் படாமல் பதில் தந்தாள் ஸ்ரேயா.
“இன்னும் ஒரு நாள் இருக்குல..?” மாளவிகா கேட்க.
“இல்லவே இல்ல.. இரண்டு நாள் இருக்கு, உன்னையெல்லாம் யாருடி பேங்க் வேலைக்கு எடுத்தது?” ஹரிதா தோழிக்கு மறுப்பாக நின்றாள்.
“அத ஆபிஸ் புராஜக்ட்ட சேட் ஜிபிடி பாத்து காபி, பேஸ்ட் பண்ற நீயெல்லாம் சொல்லக் கூடாது.”
“இங்க பாரு ரே, என் சீக்ரெட்ட லீக் பண்றதும் இல்லாம சொல்லிக் காட்டுறா..” ஹரிதா புகார் படிக்க.
“இரண்டு பெரும் என்ன பிரச்சனைனு சொல்ல போறீங்களா இல்லையா?” ஸ்ரேயா ஆதங்கத்துடன் கத்தினாள்.
முகத்தை சோர்வாக வைத்தபடி மாளவிகா, “நூறு நாள் முடிய இன்னும் ஒரு நாள்தான் இருக்கு.”
“இல்ல ரே.. இன்னும் இரண்டு நாள் இருக்கு.”
“அப்டியா.. சூப்பர்ல..!” என்றவளின் பார்வையோடு இதழ்களும் பூரிப்பில் பிரகாசித்தன.
“ஏய்.. உனக்கு தெரியாத மாதிரி கேக்குற.. இன்னேரம் காலண்டர்ல ஒரு பக்கம் விடாம எண்ணிக்கிட்டு இருப்பேன்னு பாத்தா, அப்படியானு ரொம்ப கேசுவலா கேக்குற?” தோழியின் மெத்தனத்தில் சந்தேகம் எழும்பியது,
“நீங்க கவுண்ட் பண்றது எல்லாம் வேஸ்ட்.. நூறு நாள் முடிஞ்சு போய் நானா பாக்கலாம்னு நினைச்சாலும் அவன பாக்க முடியாது, என்மேல பயங்கர கோபத்துல இருப்பான், அவனே கோபம் போய் மலை இறங்கி வந்தாதான் உண்டு! அதுவரைக்கும் வெயிட் பண்ண வேண்டியதுதான்..!” அமர்நாத்தின் மனபோக்கை கண்டிருந்தாள்.
“இருக்கு.. வாய்ப்பு இருக்கு..!” மாளவிகா ஒப்புக்கொண்டாள்.
“அமர்கிட்ட சொல்லாம கொள்ளாம நீயும் இப்படி பண்ணிருக்க கூடாது..” ஹரிதா வருத்தம் கொண்டாள்.
“நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல.. அவங்க அம்மா ஒரு மாசம் போட்ட ஒப்பந்தத்த நான் நூறு நாளா மாத்துனத்துக்கு கோபமா இருப்பான்” என மிக சரியாக கணித்தாள் ஸ்ரேயா.
“அது.. உங்க லவ் மேல உள்ள நம்பிக்கையிலதான நீ அப்படி சொன்ன!”
“இவ பெரிய ராமபிரான் பக்தை..! மத்தவங்க நம்பிக்கையை சம்பாதிக்க கிளம்பிட்டானு வரைமுறை இல்லாம பேசுவான். அவனே வருவான், நீங்க எதுக்கு தேவையில்லாம நாள் கணக்கு பாத்துக்கிட்டு இருக்கீங்க..”
இருமலர்களும் ஸ்ரேயாவின் தெளிவில் உள்ளார்ந்த மகிழ்ச்சி கொண்டாலும், “எங்களுக்கு மூட் அவுட் ஆயிருச்சு.. சோ ஷாப்பிங் கூப்பிட்டு போ..” என்று அலும்பு செய்தனர்.
“ஒகே.. என்ன வாங்கணும்?” ஸ்ரேயா கேட்டாள்.
“அதலாம் தெரியாது, அங்க போய்தான் டிசைட் பண்ணுவோம்..”
“மூட் அவுடுக்கு காசு செலவழிச்சா டென்ஷன் வருமா.. போகுமா?” அவளின் நிதர்சனத்தில், இருமலர்களின் பார்வை சோர்வை பிடித்துக்கொள்ள,
“சரி.. கிளம்புங்க போகலாம்..!” என கிளம்பி இப்போது மிகப் பிரம்மாண்டான ஷாப்பிங் மாலில் கால் பதித்திருந்தனர்.
இருமலர்களின் கைச்சிறையில் மென்மையாக சிக்கியிருந்தாள் ஸ்ரேயா. ஆளுக்கு ஒரு பக்கம் என அவளை இழுத்துக் கொண்டு இருந்தார்கள். “இந்தப் பக்கம் போனா செகண்ட் ப்ளோர் ஈசியா போயிறலாம்..”
“இல்ல.. இந்த கடைக்கு பர்ஸ்ட் போகலாம்..” இருவரின் இழுப்பையும் இழுத்துக் கொண்டு நேரே நடந்தவளுக்கு கால் அசைய மறுத்து நிற்க, இருதயம் மட்டும், படுவேகமாக துடித்தது.
ஸ்ரேயா நிற்பதை கண்ட தோழிகள், “என்னாச்சு ரே, வா!” என, அசைவேனா என்று நின்றாள்.
மெல்லிய சத்தம் காற்றோடு கலந்து அவள் காதுகளை மட்டும், தீண்டிச் சென்றது.
‘நீ என்னை பார்க்காமல்
நான் உன்னை பார்க்கிறேன்
நதியில் விழும் பிம்பத்தை நிலா
அறியுமா!
கண்மூடி திறக்கும் போது கடவுள்
எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி
அவளே வந்து நின்றாளே!
ஸ்ரேயா நிற்பதைக் கண்டு, “ஏய்… அமர் வந்துட்டான் போல..!”
“இது அமர் வாய்ஸ் தானே...!” என்று தோழிகள் இருவரும் பரபரப்பாக பேசிக்கொண்டனர்.
ஸ்ரேயா, நான்கு பக்கமும் சுற்றி அமரைத் தேடினாள். எவரின் பார்வைக்கும் அவன் தென்படவில்லை. அவனை பார்க்கும் ஆவல் உந்தித் தள்ள மணாளனைத் தேடி மாலில் ஓடத் தொடங்கினாள்.
‘கண்ணே உன்னை காட்டியதால்
என் கண்ணே சிறந்ததடி
உன் கண்களைக் கண்டதும்
இன்னொரு கிரகம் கண்முன் பிறந்தடி
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ!’
“டேய்.. பாடினது போதும் அமரா.. முன்னாடி வாடா..!” என இறைஞ்சம் பார்வை சிந்தினாள்.
சடசடவென அவளைச் சுற்றி சில பொம்மை மனிதர்கள் வந்து நின்றனர். தோழிகள் இருவரும் மிரண்டு நிற்க, ஸ்ரேயா வதனமோ மோனகை தாங்கியிருந்தது.
மாலத்தீவில் தன்னை வரவேற்ற உருவங்களைப் போல், இன்றும் அந்த பொம்மைகள் மத்தியில் மறைந்திருக்கும் தன் மாயவனை காண விழிகளோ கொள்ளை அழுகுடன் விரிந்து துளாவியது.
“பயர் ப்ளை.. என்ன கண்டு பிடிச்சுருவியா?” குரல் எங்கோ ஒலித்தது,
ஆமோதிப்பாக தலையை மேலும் கீழும் அசைப்பதைக் கண்டு, “அவ்வளவு ஈசியா டாஸ்க் கொடுத்துருவேனா, நோ வே..” மறைந்து இருந்து மாயம் நிகழ்த்துபவனை முறைத்துப் பார்த்தாள்.
“நூறு நாள் உன்னை பாக்கவிடாம பண்ணல்ல.. வெயிட் பண்ணு.. பண்ணலாம்.. லாம்..” குரலும், மொழியும் முரடனாக வெளிவந்தது.
“இப்ப ஏன்டா வில்லன் மாதிரி பேசுற, நீ முகத்த மட்டும் காட்டுடா.. உன்னோட சக்கரக்கட்டி பாவம்ல..!” மனதை கவ்வும் குரலில் சுண்டி இழுத்தாள்.
அவள் குரலில் தடுமாறியவன், “சரி.. சீக்கிரம் கண்டு பிடிக்கிற மாதிரி ஒரு ஐடியா சொல்லவா..?”
“ம்..” தனக்காக ஏங்குபவளைக் கண்டு அமரோ தவித்துப் போனான்.
“ரொம்ப ஆர்வமோ..!”
“அங்க உன்ன சுத்தி மட்டும் இல்ல, இந்த மால் முழுக்க நூறு பேர் இந்த பொம்மை வேஷத்துல இருக்காங்க, என்னையும் சேர்த்து, அரைமணி நேரம் டைம் தாரேன் முடிஞ்சா உன்னோட அமராவ கண்டுபிடிச்சுக்கோ.! யுவர் டைம் ஸ்டார்ட் நவ்..”
சில நிமிடங்கள் அசையாமல் நின்றாள்.
“அமரா.. உன் முகத்த உருவத்த வச்சு மறைக்கலாம், ஆனா உன்னோட ஹார்ட் பீட்ட என்கிட்ட இருந்து மறைக்க முடியாது! ஜஸ்ட் நூறு பேர்.. சில்லி பாய்..!” துணிச்சலாக பேசினாள்.
எப்படி கண்டு பிடிக்க போகிறாள் என ஆச்சரியமாக பார்வை மொத்தத்தையும் அவள் மேல் பதித்தான்.
“எப்படி கண்டு பிடிக்க போற ரே..?” சிந்திக்க முடியாமல் ஹரிதா கேட்க,
“இந்த பொம்மைக்கு நடுவில கை, கால் ஏதாவது தெரிஞ்சாகூட பரவாயில்ல, புல் கவர்ட்..!” மாளவிகா புலம்ப,
“நீங்க இரண்டு பேரும் இங்க இருக்க எல்லோரையும் க்யுல நிக்க வைங்க, ஒவ்வொருத்தரையும் ஹக் பண்ணி அவங்க ஹார்ட் பீட் கேட்டா, தெரிஞ்சுரும்.. யார் என்னோட அமரானு..” என சுற்றிலும் பார்வை பார்த்து மெல்ல நடையை பொம்மை மனிதர்கள் நோக்கி போக,
எங்கு இருந்தோ தடபுடவென ஓடி வரும் பெரும் ஒலி கேட்க, மெல்ல அர்த்தம் பொதிந்த புன்னகையை வழங்கினாள்.
முதலில் நின்ற பொம்மை மனிதரை கட்டிபிடிக்கப் போக, இடையோடு அவளை இழுத்து தன்னோடு இறுக்கி கொண்டான்.
ஜடமாய் இருந்தவனை அடமாய் தன்னருகில் இழுத்துக் கொண்டாள். “ஏன்.. சக்கரகட்டி இப்படி இறங்கிட்ட.. உன்னை செய்யலாம்னு பாத்தா நீ என்னை வச்சு செஞ்சுட்டியே..! எவ்வளவு மெனக்கட்டு இத ரெடி பண்ணேன் தெரியுமா?” அவனின் கண்களிலோ காதல் விரிந்தது.
“வருத்தமா..?!” செல்ல புன்னகை தந்தாள்.
“ம்ஹீம்.. எவ்வளவு நேக்கா உன்கிட்ட என்ன இழுத்துட்டல்ல!” அவளின் போக்கிரி செயலில் தன்னை இழந்து நின்றான்.
தன் கைவளைவில் அவளை
வைத்தபடியே மெல்ல நகர்ந்து லிப்ட்டுக்குள் சென்றான்.
அவர்களை பின் தொடர்ந்து அமராவின் துவாரபாலகிகள் பின்னே செல்ல முயல, “ஹேய்.. நில்லுங்க! எங்க போறீங்க?” என மாதவன் வர, அவனுடன் ராகுலும் வந்து நின்றான்.
“நீங்க எங்க இங்க?” மாளவிகா கேட்டாள்.
“அப்படியா! எங்கள மால் வரச்சொல்லி இதுக்குதான் உசுப்பேத்தினீங்களா?” ஆண்களின் கூட்டணியை ஹரிதா கண்டுகொண்டு கேட்டாள்.
“அறிவுக்கட்டி..!” என ராகுல் செல்லம் கொஞ்சினான்.
“அந்த அளவெல்லாம் இல்ல..” என்று மாதவன் சொல்ல,
“ஏன்? அப்படி எந்த விதத்துல நாங்க முட்டாளா தெரியுறோம்?” மாளவிகா எகிறிக் கொண்டு வந்தாள்.
“அப்படி இருந்தா ஏன் அவங்க பின்னாடி போகப் போறீங்க?” ராகுல் சாடினான்.
“அது.. அது..” ஆண்கள் இருவரும் கேட்ட பின்னே செய்ய இருந்த செயல் உரைக்க ஹரிதா தயங்கினாள்.
“அத.. அமர சாக்கு வச்சு தங்களுடைய லவ்வ சக்ஸஸ் பண்ணிக்கிட்டவங்க எல்லாம் பேசக் கூடாது” மாளவிகா சீண்ட.
“அப்படி பாத்தா நாங்க புத்திசாலிதான், ஹரிதாவ சமாதானம் பண்றேன்னு சொல்லி சொல்லி 5 ஸ்டார் ஹோட்டல் உணவு விதவிதமா சாப்பிட்டா நாங்களும் தான் புத்திசாலி..” ஹரிதாவை சமாதானம் செய்ய வந்தவனிடம் நட்சத்திர ஹோட்டல் உணவுகளை ருசிபார்த்தனர் தோழிகள்.
“சரி, அறிவாளி பொண்ணே, அமர், ஸ்ரேயா கல்யாணம் சீக்கிரம் நடக்கப் போகுது. அப்போ நமக்கு எப்ப?”
“ஸ்ரேயா பிரிந்து போறதையே ஏற்றுக்கொள்ள முடியல… அடுத்தடுத்து நாமும் அப்படின்னா கஷ்டம். இன்னும் ஒரு இரண்டு வருஷம் போகட்டும்…”
“இதெல்லாம் நடக்குற கதை இல்ல, ப்ரோ… நீங்க உங்க ஆளோட செட்டில் ஆயிடுங்க!” என்று ராகுல் பட்டென்று ஹரிதாவை தூக்கிக் கொண்டு, காதல் பாதையை தொடர்ந்து நடந்தான்.