சிதறாத முத்தங்கள் - 8

Advertisement

Sastika

Active member
Member
1775996349305.jpeg

அண்ணலும் நோக்க, அவளும் நோக்க - 8



‘எண்ண அரு நலத்தினாள்

இனையள் நின்றுளி.

கண்னோடு கண் இணை

கவ்வி. ஒன்றை ஒன்று

உண்ணவும் நிலைபெறாது

உணர்வும் ஒன்றிட

அண்ணலும் நோக்கினான்

அவளும் நோக்கினாள்’.


பண்பில் ஏது ஒருவர் முன்னே மற்றவர் பின்னே..! சிறந்த குணங்களை உடைய இருவரும் கண்ணோடு கண் கவ்வி, ஒன்றோடு ஒன்று ஒன்றி, தடுமாறும் நிலை மாறி உணர்வுகள் கலந்திட, அவளும்.. அவனும்.. ஒரு சேர நோக்கினர்.

இதிகாச காதலர்களுக்கு மட்டும் படைக்கப்பட்ட சொல் ஓவியம் அல்ல, இங்கு காவியம் படைக்கவிருக்கும் அமரன் மற்றும் ஸ்ரேயா இடையே மலரும் காதலுக்கும் கம்பரின் கவிகள் பொருந்தும்.

அவளுக்கு காதல் என்ற வார்த்தை புதிதல்ல, ஆனால் இமை சிமிட்டாத பார்வையும், அதன் வழி உயிருக்குள் இடம் பெயரும் உணர்வும் புதிதே. அவனுக்கு இந்த காதலும் புதுசு, அது தந்த மயக்கமும் புதிய வரவு. இரு உள்ளங்களும் திக்குமுக்காடிப் போனார்கள். முகிலின் மீது ஏற்பட்ட ஊடலில், இடி பெரும் சத்தமிட்டது. அச்சத்ததில் மூளை விழித்துக் கொள்ள, இருவருக்கும் ஆழ்ந்த மயக்கம் தற்காலிகமாக நகர்ந்தது.



மாதவனுடன் வந்த அலுவல் நண்பர்களுடன் ஹரிதாவும், மாளவிகாவும் கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தனர். மாதவனின் அசத்தியமான பார்வையில் தெளிந்த மாளவிகா, அவனின் பார்வையை பொருட்படுத்தாமல் ஹரிதாவிடம் சென்றாள்.

“ஹரிமா.. நத்திங் ஓரி, எக்ஸ்ட்ரா டூ டேஸ் நம்ம ப்ளானுக்கு கிடைச்சுருக்குனு நினைச்சுக்குவோம், இன்னைக்கு டின்னர் வேற பிரியாம் போய் கலெக்ட் பண்ணிட்டு வந்துருவோம் வா..” என அமர்ந்திருந்தவளை கிளப்பினாள்.

“ஆமால்ல..! இப்படி நான் யோசிக்கவே இல்ல பாரேன்..” ஸ்ரேயா அங்கு போடப்பட்டிருந்த மரத்திலான சோபாவில் அமர்ந்திருக்க, தனித்து மாதவனிடம் விட்டு சென்றனர் இருமலர்கள்.

மாலத்தீவு செல்ல இருக்கும் விமானம் பழுது காரணமாக அன்றைய பயணம் ஒத்திவைக்கப்பட்டது. மாலத்தீவு செல்லவிருக்கும் பயணிகள் அங்கேயே தங்க வேண்டிய சூழல் அமைந்தது. அன்றைய இரவு உணவு விமான நிலையத்தில் பயணிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டது.

அருகில் அமர்ந்து வளவளத்து கொண்டிருப்பவனின் பேச்சில் ஈடுபாடு இல்லாமல், தன் முதுகை துளைக்கும் பின்னிருக்கையில் அமர்ந்திருக்கும் அமரனின் விதிர்விதிர்க்க வைக்கும் பார்வையில் உடலை குறுக்கி வீற்றிருந்தாள். அவளின் செய்கையால், “உங்களுக்கு குளிருதா ரே இருங்க..” என்றவன், அவனின் ஜெர்கினை தந்தான் மாதவன்.

“தேங்க்ஸ் மேடி..” என்றவள், அதை வாங்கி அணியாமல் ஓரமாக வைத்தாள்.

‘ரேனா, ரேணுகா, இல்ல ரேஷ்மா? என்னவா இருக்கும்’ பின்னால் இருந்தவனின் சிந்தனை இதுவாக இருந்தாலும், முதல் முறையாக ஓர் பெண்ணுக்காக ஆணிடம் பொறாமை எழுந்தது. அவளுக்காக மாதவனின் ஜெர்கினையும் முறைத்துப் பார்த்தான்.

ஹரிதாவின் அலுவல் நண்பர்களில் இரு ஆண்கள், மூன்று பெண்கள் மட்டும் தனித்து வர, மற்ற சிலர் குடும்பமாக பயணத்தைக் குதூகலிக்க வந்திருந்தனர்.

இரவு மற்றவர்கள் அனைவரும் வெளியே சென்று கொச்சின் ரிசார்ட் ஒன்றில் ஒய்வெடுக்க திட்டமிட்டனர். ஆனால் ஸ்ரேயாவுடன் அவளது இருமலர்களும் அந்த இரவுப் பொழுதை அங்கேயே போக்கிவிட நினைத்தனர்.

வெளிநாட்டு பயணிகள் அங்கேயே தங்கியிருந்தனர். பருவ மாற்றத்திற்கு இடம் பெயரும் மைக்ரேஷன் பறவைகள் போல, தாங்கள் இருக்கும் இடத்தை தங்களுக்கு வசதியாக மாற்றிக் கொள்ளும் சகலகலா வல்லவர்களாக வெளிநாட்டார் இருந்தனர். ஆகவே அவர்கள் இருப்பிடத்தை அங்கேயே அமைத்துக் கொண்டனர். மாதவனுடன் வந்த நட்புகளில் குடும்பமாக வந்த நபர்கள் மட்டும் தங்கள் மனைவி, குழந்தையை கருத்தில் கொண்டு ரிசார்ட்டில் தங்க சென்றுவிட்டனர்.

இதில் உள்ளூரில் வில்லாவை வைத்துக் கொண்டு இருப்பிடத்தை நோக்கி செல்லாமல் அமர்ந்திருந்தான் அமரன். அவனுக்கோ திடுதிடுப்பென முளைத்த நேசத்தில், அவளை தனியே விடுத்து எப்படி செல்வது? என யோசித்தான்.

‘தனியாவா..? அவக்கூட தான் இத்தனை பேர் வந்திருக்காங்களே...! அப்புறம் என்ன? அவக்கூட ப்ரெண்ட்ஸ் இருந்தா நான் இருக்க வேண்டாமா இருக்கணுமே.! அதை அந்த பொண்ணு சொல்ல வேண்டாமா? கூடிய சீக்கிரம் சொல்லுவா.!

அது எப்படிடா பார்த்தவுடனே லவ் வரும்..? அட வருதே..!’ என காதலின் அரிச்சுவடி அறியாதவனை காதல் கிறுக்கனாக மாற்றத் தொடங்கினாள் அவனின் காரிகை.

‘பாத்த பாரு. ஒத்த பார்வை. முழுசா ஆறடி ஆள தூக்கி சாப்பிடற மாதிரி. அப்பப்பா..! அப்படியே அந்த கண்ணு ஃபயர் பிளை மாதிரி மின்னுச்சு. விழியால பேசி என்னை இப்படி ஒருத்தி கவுக்கிறதுக்காகவே இத்தனை வருஷம் காத்திருந்தேன் போல, இட்ஸ் அமேசிங் பீல். டேய் லிங்கா உன் சாபம் ரிவர்சா பலிக்குதுடா.!’ என மூளைக்கும், மனதிற்கும் இடையே வம்பு செய்தவனுக்கு தெரியவில்லை அவன் தம்பியின் சாபமே பலிக்கும் என்று..!!

வெளியே இருந்து போன் பேசிவிட்டு வந்தவனுக்கு மாளவிகா, ஹரிதா பேச்சு காதில் விழ, அவர்கள் விழிகள் பதித்திருந்த நபரிடம் சென்றது. அங்கு ஸ்ரேயா, மாதவன் சகஜமாக பேசிக் கொள்வதையும் கண்டான்.

“வாழ்க்கையிலே நீ உருப்படியா செஞ்சது இதான்டீ..” என்றாள் மாளவிகா.

“ஆமால.. ஐ ப்ரவுட் அபவுட் மை செல்ப்..” தன் நெஞ்சில் உள்ளங்கை வைத்து பாராட்டிக் கொண்டாள் ஹரிதா.

“நம்ம ரேக்கு இந்த மேடிதான் பெர்பெக்ட் மேட்ச், இனி இவங்க லவ் பண்ணனும், பண்ணுவாங்களா..?” என வினா எழுப்பினாள் மாளவிகா.

“பண்ணுவாங்கனு நினைக்கிறேன், இல்லாட்டி நாம எதுக்கு இருக்கோம், பாத்து பக்குவமா கோர்த்து விட்டிருவோம்..” இரு உள்ளங்கைகளை பிசைந்து சொன்னாள் மாளவிகா.

“ம்.. ஆனா இந்த டிரிப் ப்ளான் தெரிஞ்சதுல இருந்து அவ ரொம்ப ஹேப்பியா இருக்கா, இவ்வளவு பொலிவா இப்பதான் இவள பாக்குறோம்..” தன் தோழியின் ஆனந்தத்தை மையமிட்டு இருவரின் மகிழ்வையும், ஆசையையும் கொண்டாடினார்கள்.

“பீல் ப்ரி.. இனி எப்பவும் இப்படியே இவள பாத்துக்குவோம்..” ஒருவருக்கு ஒருவர் ஆதரவாய் கைக் கோர்த்து ஸ்ரேயாவை நோக்கிச் சென்றனர்.

இரு பெண்கள் மீது தீ ஜீவாலையை கொட்டிவிட காத்திருந்தான். ஆனால் தன் மனதைக் கவர்ந்தவளுக்காக தோழிகளின் கரிசனத்தில் இளகியும் விட்டான். அன்றைய பொழுது முழுவதும் அவளின் பின்னிருக்கையில் அமர்ந்தவன், இப்பொழுதும் அந்த இடத்தையே இருக்கையாக பிடித்துவிட்டான்.

மாதவனின் பேச்சு எரிச்சலாக இருந்திருந்தால், எப்போதோ அவனுடனான பேச்சை கத்தரித்திருப்பாள் ஸ்ரேயா. இவனின் பேச்சு மிக இயல்பாக சுவாரஸ்யமாக அமைந்து அவனுடன் ஓர் ஒட்டுதல் ஏற்பட்டிருந்தது.

மாதவன் எழுந்து சென்றிருக்க, தோழிகள் வந்து அமரவும் சரியாக இருந்தது.

“எங்க போய் சுத்திக்கிட்டு இருக்கீங்க இரண்டு பேரும் ஒழுங்கா ஓரிடத்தில உட்கார மாட்டிங்களா?” என்று கண்டிப்பைக் காட்டினாள்.

“ஒரே இடத்தில உட்காரவா வந்திருக்கோம்.. என்ஜாய் திஸ் மொமன்ட்ஸ் ரே..” என்று அவள் தோளில் சலுகையாக சாய்ந்து கொண்டாள் ஹரிதா.

“ரே.. இங்க பாரு வெளிநாட்டு பிகர்லாம் வந்திருக்கு, அவங்களெல்லாம் சைட் அடிக்காம எப்படி இருக்கிறது?” என்று ஹரிதா அருகில் அமர்ந்த மாளவிகா அவள் தோளில் சாய்ந்தாள்.

ஸ்ரேயாவின் அருகில் அமர்ந்த தோழிகள் இருவரும் வரிசையாக தோள் சாய்ந்து இருந்ததை பின்பக்கம் இருந்து பார்த்த அமரனுக்கு மிகவும் நிறைவாக இருந்தது.

“அதான.. அதுவும் இந்த மேடி பாக்க.. பாக்க கண்ணுக்குல்ல அப்படியே புதைஞ்சு போயிறான். அவனோட ஜிம் பாடியும், அந்த மீசையோட தாடியும் சேர்ந்த லுக்கு இருக்கு பாரேன்.. அப்படியே இழுத்துட்டு போய் கல்யாணம் பண்ணிறலாம், அப்..படி இருக்கான்..” ஸ்ரேயாவை உசுப்பேற்ற வேண்டும் என்றே மாளவிகா அவனை புகழ்ந்தாள். இது அவள் அறியாமல் மனதில் அவனிடம் ஈர்த்தவற்றை பொழிந்து விட்டாள்.

“மாளு.. ஓர் ஆணோட அழகு அவன் வச்சிருக்க தாடி, மீசையிலோ, சிக்ஸ் பேக்லயோ கண்டிப்பா கிடையாது” என்று கண்டிப்புடன் கூறிய ஸ்ரேயாவின் வார்த்தைகளில் அழுத்தம் கூடியிருந்தது.

“அப்ப வேற எதுல இருக்கணும்..?” என்று சயனித்து இருந்த தோளில் இருந்து நிமிர்ந்து கேட்டாள் ஹரிதா.

ஹரிதா கேட்டதற்கு அசரடிக்கும் பதிலை சொல்லப் போகிறாள் என அமர்நாத் காத்திருக்க, அவளோ இதழ்களை நன்கு விரித்து மென்னகை தந்தாள். அதில் தென்பட்டது என்ன? வருத்தமா? அசுகையா? பரிகாசமா? என பிரித்தறியத் தான் முடியவில்லை.

பின்நேரம், பெண்கள் மூவரும் சுவாரஸ்யமான பேச்சுகளில் திசை மாறிருக்க, அமர்நாத் அவள் சொல்லிடாத பதிலில் சுழன்று கொண்டிருந்தான். அவள் உரைத்த தோற்றம் தன்னுடைய தோற்றத்தையா? தனக்காக என அவனின் மூளை தகிடுதத்தம் செய்து ஏமாற்று வேலை செய்ததை பாவம் அவன் அறியவில்லை.

தொலைவில் சலசலப்பு சத்தம் அதிரடியாக கேட்க, பின்பக்கம் திரும்பியவளின் பார்வை எதர்ச்சியாக அவனின் மீது பதிந்தது. தன்னை மறந்து ஒரு நொடியே அவனைக் கண்டிருப்பாள், அந்த பார்வையில் அடிவயிற்றில் ஏற்பட்ட குறுகுறுப்பு நெஞ்சைத் தாண்டி தொண்டையில் வந்து சிக்கி அழுத்தியது அவனுக்கு. அவளின் இரு விழி கவிதையில் தன்னை சரணடைந்தான்.

‘கண் இரண்டில் மோதி நான்

விழுந்தேனே

காரணம் இன்றியே நான் சிரித்தேனே

என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை

வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே

என் உயிரின் உயிரே

என் இரவின் நிலவே

உன் அருகில் வரவே

நீ தருவாய் வரமே..’




நிசப்தத்தை கிழித்துக் கொண்டு வந்தது அமரனின் இனிமையான குரல். அந்த வரிகள் அவளுக்குரியது என்று அறிந்தும் திரும்பவில்லை அவள், சுற்றி இருப்போரின் பார்வை தன்னை மொய்ப்பதை அறிந்தும் தூசியாக தட்டி விட்டவன், பாடலின் வரிகளுக்கேற்ப, முகத்தில் அதிர்வு, சிரிப்பு, வர்ணனை கொட்டி காதலை தேக்கி வைத்து கண்களில் பிரதிபலித்தான்.

இருமலர்களோ அவனை வாயைப் பிளந்து பார்த்தனர். நேர் கொண்டு அமர்ந்திருக்கும் தங்கள் தோழி, ஆடவனின் சீண்டலை ஒதுக்கித் தள்ளினாள் என்றே ஸ்ரேயாவின் செய்கையில் உணர்ந்தனர். பாவம், அவர்கள் அறியவில்லை அவளோ அவனை எதிர்க் நோக்கும் சங்கடத்தில் உழலவே செய்கிறாள் என..!

அவனின் குரல் தரும் கிறக்கம் தன்னை எதுவும் தீண்டவில்லை என மெய்ப்பிக்க, அசாதரணமாகத் தன்னைத் தேற்றிக்கொள்ளும் விதமாக, தோள்களை நெருக்கி முறுக்கிக்கொண்டு அமர்ந்து, முதுகில் பரவி விரிந்து இருந்த கூந்தலை அள்ளிக் கொண்டையிட்டாள். அவள் தூக்கி கட்டிய சிகையால் மறைந்து இருந்த பளீர் நிறத்தில் ஆணிப்பொன்னாக இருந்த முதுகை பார்த்தவனின் விழிகள் கரை தத்தி போதை கொண்ட சில்வண்டாக மொய்த்தது.

‘என்னடி.. இப்படி இம்சிக்கிற..! என்னோட இத்தன வருஷ தவத்தையும் சுலபமா மூட்டக்கட்டி போட்டுட்டல்ல..!’

யோகியைப் போன்று திரிந்தவனை, ‘இப்படி காதல் பித்தனாக மாற்றி விட்டோமே?’ என்ற சிந்தனையின்றி, தோழிகளுடன் தூங்கச் சென்றாள் ஸ்ரேயா. கீழே தரையில் விரிப்பு விரித்து, ஸ்ரேயா சம்மனமிட்டு அமர்ந்தவளின் தோளில் சாய்ந்த மாளவிகா உறக்கத்திற்குச் சென்றாள்.

ஹரிதா, கொலிக்சை சந்தித்துவிட்டு வந்தவள், ஸ்ரேயாவின் மடியில் தலை பாரத்தை இறக்கி இரவு ஓய்வுக்குச் சென்றாள். இருவரின் சுமையை தாங்குவது சுகமே என்று நினைத்தாள் அமரனின் மனம் கவர்ந்த காரிகை.

தூக்கம் மறந்து மெல்லிய வெளிச்சத்தில் ஜொலிக்கும் அவளையே இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தான். அவ்வப்போது தூக்கத்தில் உடல் வலியில் ஸ்ரேயாவின் முகம் சுருங்குவதைக் கண்டு இவன் துடித்தான். இதோ, அதோவென அதிகாலை மூன்றைத் தொட, முதலில் மொபைல் சத்தத்தை அதிகப்படுத்தி வைத்துவிட்டு தூக்கத்தில் இருந்தவர்களை முழிக்கச் செய்தான், மற்ற பயணிகளின் மிச்சம் இருந்த அரை தூக்கத்தையும் கையில் இருந்த பொருட்களை எதர்ச்சியாக கை நழுவ விடுவதைப் போல் ஒலியெழுப்பி தூக்கத்தை துரத்தியே விட்டான்.

இவன் செய்யும் குரங்கு சேட்டை அனைத்தும் தன்னவள் உடலை நோகச் செய்து அதில் துயில் கொள்ளும் இரு பெண்களையும் எழுப்பி விடவே தான். இதில் மற்ற பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்கிற கிஞ்சித்தும் எண்ணமற்று அவளுக்காகவே செய்தான். ஆணின் துணிச்சல் அவன் காதலையும், பெண்ணவளையும் அவனிடம் கரைசேர்க்கும்.

ஸ்ரேயாவுக்கு தூக்கத்தில் அவனது பார்வை உறுத்தலைத் தந்தாலும், நேரடியாக அவனைப் பார்க்கவில்லை, உணர்ந்தாள். அந்த ஈர்ப்பை கட்டுப்படுத்த அவள் பழகிய தியானத்தை கையாண்டாள். அமர் எழுப்பிய ஒலியால், சத்தம் வந்த திசை நோக்கி தூக்கத்தில் இருந்தஅனைவரின் பார்வையும் அவனை நோக்கிப் பாய்ந்தாலும், இவள் விழிகளை திறவாமல் இமைகளை மூடினாள்.

முழித்துக் கொண்ட மாளவிகா மடியில் படுத்திருக்கும் ஹரிதாவை எழுப்பினாள். உசும்பிய ஹரிதா கண்களை திறக்காமல் ஸ்ரேயா அருகில் அமர்ந்தாள். ஸ்ரேயாவின் சம்மணமிட்ட கால்களை நீட்ட வைத்து இரு கால்களையும் பிடித்துவிட்டாள் மாளவிகா. இப்பொழுது ஹரிதா மடியில் மெல்ல தலை சாய்த்தாள் ஸ்ரேயா. மாளவிகா நீவி விட்டதும் சொக்கி தூங்கிப் போனாள். அவர்கள் இருவரின் தூக்கத்தை தொந்தரவு செய்யாமல் எழுந்து ரெப்ரெஷ் செய்து கொள்ள போனாள் மாளவிகா.

ஸ்ரேயாவின் இருமலர்களிடையே உள்ள நேசத்தைக் கண்டவனுக்கு அதிசயமாக இருந்தது. இவ்வளவு அன்பைப் பொழியும் தோழிகளிடையே பேச்சு வார்த்தைக்கு வறட்சி வரும் என அறியாமல் போனான். இவனின் கண் திருஷ்டியோ, என்னவோ!










 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top