திசை மாறா காதல்
பகுதி - 2 
அழகிய குடும்பம்
அழகிய குடும்பம்
ஒரு கனவு இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துமா.. ! என்று நினைத்தவளாகவே சுடர் மீளாத் துயரத்தில் ஆழ்ந்து இருக்க..
தன் போல் சுடர் ஒளியின் இடக் கரம்.. அவளுடைய வலது தோளை பற்றிக் கொண்டு , " யாரு அவன் ? அவனா.. இல்லேனா அதுவா.. ? அய்யோ, தெரியலையே.. கொஞ்ச நாளாவே டெரர்ராவே கனவு வருது.. என் தோளை யாரு பிடிச்சது.. அண்ணாவா.. ச்சே.. ச்சே.. இவ்வளவு ரஃப்பா.. எப்பவும் என்னை இழுக்க மாட்டான் . அப்போ, அது யாரு.. ? ஸ்.. ஸ்.. ", என்று அந்நினைப்பிலேயே உடல் சிலிர்த்தவள்..
" சுடர்.. அது எது வேணா இருந்திட்டு போகட்டும்.. முதல்ல , நீ தெளிவுக்கு வா... ", என்று அவளுக்கு அவளே பேசியவளாய் ஆள்காட்டி விரால் நெற்றிப் பொட்டை வேகமாக தட்டிக் கொண்டே பிதற்ற ,
" என்னது வெளில வரதா.. எப்படி அல்லுவிட்டது தெரியுமா..? பார்ப்பியா.. உதார் விட கண்ட பேய் படம் பார்ப்பியா.. ", என்று வேகமாக கன்னத்தை தட்டிக் கொண்டவளாக தன்னைத்தானே திட்டிக் கொண்டவளுக்கு , அதற்கு மேல் படுக்கையில் இருக்கவும் விருப்பமற்று போக ,
தங்கி இருந்த அறையின் சன்னல் திரைசீலையை மெதுவாக விலக்கினாள். இளவேனிற் காலமாக இருக்கவே.. சூரியனும் நன்கு புலர்ந்திருந்தான்.
அதன் இதமான வெளிச்சமும் தென்றலின் வருடலும்.. கீச்.. கீச்.. சென்று கேட்ட பறவைகளின் சத்தமும் , சுடரின் மனதை மெது மெதுவாக, இருளில் இருந்து வெளிச்சத்திற்கு திருப்பியதோடு இளைப்பாறவும் செய்து இருந்தது .
********
தன் அலைபேசியில் அடித்த அலாரத்தை நிறுத்திய ரித்தன்யா படுக்கையறையின் கதவை திறந்து கொண்டு வெளியே வர , தினமும் அவளது பார்வை பதியும் இடம் , நடுவறையில் நேராக மாட்டப்பட்டிருக்கும் ஓவியத்தின் மீதுதான்.
அது ஒரு எழில் மிகு நவீன ஓவியம் . தாய் தன் ஐந்து வயது சிறுமியை வயிற்றில் அமர வைத்த நிலையில் இதழ் பதித்துக் கொண்டு இருக்கும் காட்சி . அதன் கீழ் ,
" இருப்பவன் மறப்பது
இழந்தவன் தவிப்பது
தாய் அன்பு "
- கிறுக்கனின் கிறுக்கல்
இழந்தவன் தவிப்பது
தாய் அன்பு "
- கிறுக்கனின் கிறுக்கல்
என்று சிறு கையெழுத்தோடு மாட்டியிருக்கும் . கவிதையுடன் கூடிய , அப்படத்தின் மீது பார்வை பதிக்காத நாட்கள் என்பதே அவளுக்கு இல்லை.
அது கிறுக்கனின் கிறுக்கல் அல்ல.. கோர்த்திருக்கும் சொற்களால் மட்டுமல்லாது வரைப்படத்தின் மூலமாகவும் பளிச்சிடும் இருவருடைய இழப்பின் வெளிப்பாடு .
ரித்தன்யாவிற்கு மட்டும் பிடித்தமான ஓவியம் அல்ல.. சன்னலின் வழியாக கோடாய் விழும் சூரியனுக்கும் , அப்படத்தின் மீது அலாதி பிரியம் உண்டு .
கடல் நீலம் , பாசி பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் என்ற நிறங்களில் தீட்டப்பட்டு இருக்கும் உருவங்களின் மீது பட்டு தெறித்து , தன் இயற்கை ஒளியாலும் பளிச்சிட செய்து கூடுதல் அழகை சேர்த்துவிடுவான் .. அந்த அழகு ஓவியத்தை இரு நிமிடங்களாவது ரசிக்காமல் , இதுவரை அவளுடைய பொழுதுகள் புலர்ந்தது இல்லை .
மிகவும் அருமையான கவிதையை கிறுக்கனின் கிறுக்கல் என்று எழுதியவன் அவளது காதல் கணவன் அறிவழகன் என்றால் அந்த ஓவியத்தை தீட்டியவள் அவனுடைய அருமை தங்கை.. அவளது ஆருயிர் தோழி சுடர் ஒளி ..
மிகவும் அருமையான கவிதையின் கீழ் கிறுக்கன்.. கிறுக்கல் என்று எழுதியவனின் மீது கட்டுக்கடங்காத கோபமும், வருத்ததமும் ஒருங்கிணைந்து எழுந்ததாலோ என்னவோ , சுடர் , " நீ எப்படி கிறுக்கன் அது.. இதுவென்று எழுதலாம்.. ", என்று அன்று அவள் போட்ட சண்டையும் , நாள் முழுவதும் செய்த ஆர்ப்பாட்டமும் கொஞ்சம் நஞ்சமல்ல.. அவளை மீண்டும் மலை இறங்க , குடும்பமாக இரவு உணவு அருந்த ஆடம்பர உணவு விடுதிக்கு சென்று பணத்தை தீட்டி .. வகை வகையாக ருசித்து வயிற்றை நிரப்பிய பின்பே சமாதானம் ஆனாள் .
அந்த ஓவியம் , கண்ணில் படும் சமயம் எல்லாம் சுடர் ஒளி செய்த கூத்து நினைவில் எழுந்து , தன் போல் ரித்துவின் இதழ்களில் புன்னகை என்னும் பூத்து விட்டும் .
இன்றும் , குறைவில்லாததாய்.. ரித்துவின் அதரங்கள் அழகாய் அரும்பிய போதிலும்.. ஏனோ , உச்சி வெயிலில் வதங்கிய விரிந்த மலர் போலவே , அதிகாலையிலேயே அவளது பூவிதழ் வாடிய நிலையில் இருந்தது .
ரித்துவின் மனம் காரணம் தேடி அலையும் குழந்தையாக நொடிக்குள் சிந்திக்க.. ' ஒருவேளை இருவரின் ஏக்கங்களை தான் கண்டுப் பிடித்து விடக் கூடாது என்பதற்காகவே , அன்று சிறுமியை போல் ஆர்ப்பாட்டம் செய்து இருப்பாளோ..", என்று இப்பொழுது அவளுக்குத் தோன்றியது.. இத்தனை நாட்களாக தோன்றாத எண்ணித்தால் திகைத்தவள்..
" ச்சே.. இது என்ன முழிக்கும் போதே கண்ட மாதிரி நினைப்பு போகுது.. சுடர் கூட பேசவே இல்லாததால இருக்கும்.. முதல்ல , விடிஞ்சதும் டைம் கிடைக்கும் போது அவளோட பேசிடணும்.. ", என்று தனக்கு தானே கூறிக் கொண்டவள் .. வேகமாக , தலையை சிலுப்பியவளாக.. விறுவிறுவென , அவ்விடத்தில் இருந்து நகர்ந்து.. வாசல் கதவை திறந்து கோலம் போட சென்றுவிட்டாள் .
இரு படுக்கை அறைகள்.. ஒரு பெரிய நடுவறை , நெருக்கடிகள் இல்லாத சற்று புழக்கத்திற்கு ஏதுவான சமையற்கட்டு என்று மிகவும் கச்சிதமான தனி வீடு . அவர்களின் சொந்த வீடும் கூட.. அவள், கணவன் அறிவழகன் , மகள் சிவா மற்றும் சுடர் ஒளி.. என்று நால்வர் வசிப்பதற்கு மிகவும் தாராளமான வீடு என்றே கூறலாம் . அவர்கள் வசிக்கும் தெருவில் பல வீடுகளில் தண்ணீர் தெளித்து கோலம் போடுவதற்கு என்று ஆட்களை நியமித்து இருக்க .. ஏனோ , இதில் ரித்தன்யாவிற்கு என்றுமே உடன்பாடு இருந்தது இல்லை .
அதற்கு காரணம், அடுத்த தெருவில் இருக்கும் அவளுடைய அன்னை ஏற்படுத்திய பழக்கமாகவும் இருக்கலாம் .
கோலம் போடத் துவங்கியதில் இருந்து மடமடவென அவளது அன்றாட வேலைக்குள் , மற்றதை மறந்து மூழ்கிவிட்டாள் . ஏழு மணியானதும் , பள்ளிக்கு ஆயத்தமாக மகளை எழுப்ப வந்தவளுக்கு.. குப்புறப்படுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் கணவனை எழுப்ப , அவளுக்கு மனம் வரவில்லை .
ஏனெனில் , மாலை வீடு வந்த பிறகும் , அவனுடைய அலுவலக வேலையில் ஈடுபட்டு இருந்தவன்.. நள்ளிரவை தாண்டிய பிறகே உறங்க வந்தான் . அதனால் , சத்தமில்லாமல் உறங்கும் மகளை தூக்கிக் கொண்டு குளியலறைக்குச் சென்று சிறுமியின் முகத்தை நீரால் துடைத்து விழிக்கச் செய்தாள்..
தூக்கக் கலக்கத்தில் சிணுங்கி , தொல்லை செய்தவளை நிதானத்திற்கு கொண்டு வருதற்குள் ரித்தன்யாவிற்கு பெரும்பாடாகிவிட்டது.
' சுடர் இங்கு இருந்திருந்தால் மிகவும் உதவியாக இருந்திருப்பாள்.. ', என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை . அந்த எண்ணத்துடனே , சிவாவை மிரட்டி உருட்டி பல் துவங்கிவிட்டவள்..
விரைவாக காலை கடனை முடித்து மகளை அழைக்கக் கட்டளையிட்டவளாய்.. அரைகுறையாக , விட்டு வந்த சமையலை கவனிக்க சென்றுவிட்டாள் .
எட்டு முப்பது மணிக்கு சிவா குட்டியை ஆட்டோவில் ஏற்றி பள்ளிக்கு அனுப்பும் வரை வீடே போர்க்களமாகிப் போனது .
" அப்பா ஒருவழியா கிளம்பீட்டா.. சாமி..", என்று முணுமுணுத்தவளாக, இரும்பு கதவினை தாழிட்டு வந்தவள்.. நொடியும் , தாமதிக்காமல் அவள் பணிபுரியும் பள்ளிக்கு தயாராக தொடங்கிவிட்டாள்.
அணிந்து இருந்த சுடிதாரில் இருந்து புடவைக்கு மாறியவள்.. கண்ணாடியின் முன் நின்று தலைமுடியை பின்னிக் கொண்டு இருக்க.. தூக்கம் கலைந்தும் , கலையாததுமாக அரைகுறையாக விழித்த அறிவு , அவனுக்கு எதிரே கிளம்புவதில் மட்டுமே கவனமாக இருந்த மனைவியின் மீது ரசனையான பார்வையை பதித்து.. படுத்த நிலையிலேயே மாற்றமில்லாமல்.. விழிகளாலேயே, அணுவணுவாய் அவளை பருகத் தொடங்கிவிட்டான் .
கொஞ்சம் சதைப்பிடிப்பான உடல்வாகு , பளிச்சென்ற மஞ்சள் நிற தேகம் . உருண்டையான வட்ட நிலவு முகம்.. அதில் , கோழிக்குண்டு கண்கள் .. கடித்து திண்ண தூண்டும் இரு மாம்பழக் கன்னங்கள் , செதுக்கிய செம்பவள இதழ்கள் என்று இதமான ரசனையை ஏற்படுத்தும் அழகு உடையவளை சலிக்காமல் ரசித்துக் கொண்டே இருக்க.. அவள் கிளம்பும் வேலையில் இருந்து வெளிவர போவதில்லை என்று மனதிற்குள் நகைத்தவனாய்..
" குட் மார்னிங் டீச்சரம்மா.. ", என்று உறக்க கரகரப்புடன் அவளது கவனத்தை ஈர்க்கவே..
" மார்னிங் அறிவு .. முழுச்சிட்டீங்களா.. டீ எடுத்திட்டு வரேன்.. , என்று பரபரப்புடன் வெளியேற போக ,
ரித்துவின் மணிக்கட்டை பிடித்து தடுத்துவாறே எழுந்து அமர்ந்தவன் , " எதுக்கு இப்படி ஓடுற.. ? ஏன் எழுப்பலை ? சிவா குட்டி கிளம்பிட்டாளா? ", என்று மகளை பற்றி அறிந்தவனாய் , இவளிடம் மென்மையாக விசாரித்தான் .
" அப்பப்பா.. ஒருவழியா உங்க பொண்ணு கிளம்பீட்டா ப்பா.. ", என்றவளின் சலிப்பை கேட்டதில் மென்னகை புரிந்தவனாய் ,
" நானும் என் தங்கச்சியும் இல்லாமல் என் பொண்ணை சமாளிக்க முடியலையோ..", என்று அவன் பங்கிற்கு அவளது மூக்கை பிடித்து ஆட்டியவனாக கேலியை தொடர ,
" இன்னைக்கு நீங்களும் உங்க தொங்கச்சியுமா என் பொண்ணை கிளப்பிவிட்டீங்க.. ", என்று அவளும் இதழ்களை சுழித்து சிலுப்பிக் கொள்ள ,
சுழித்த கீழ் இதழை .. தன் இரு விரல்களால் அழுத்தமாக பற்றியவன் , " இப்போ.. இந்த வாய் தான டீ.. ஓவர் சலிப்பா பேசுனது.. " என்றவனாக.. மேலும் இருவரின் நெருக்கத்தை அதிகரிக்கவே ,
" ஸ்.. விடுங்க அறிவு.. உங்க பங்குக்கு வம்பு செய்யாம . சீக்கிரம் ரெஃபரஷ் ஆகிட்டு வாங்க.. நேரமாச்சு ", என்று தடைவித்தவளாக நகர்ந்துக் கொள்ள , நேரத்தை கவனித்தவன்.. தன் வம்பை தொடராது நகர்ந்துவிட்டான் .
ரித்தன்யா , வீட்டிற்கு அருகில் இருக்கும் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறாள் . அறிவு , தன்னை சுத்தம் செய்து, அறையில் இருந்து வெளியே வரவும் , " டீ.. ", என்று திணிக்க ,
" ச்சு.. இப்போ இதுக்கு என்ன அவசரம் ? அங்கே வை. வந்து குடிக்கிறேன் . டைம் ஆச்சு பாரு.. வா.. கேட் சாவி மட்டும் எடுத்திட்டு வா.. ", என்று அவள் தடுத்ததையும் கண்டுக் கொள்ளாமல் வண்டியின் சாவியை எடுத்தவனாக, தன் நடுவிரலில் சுழற்றியவாறு , வாசல் படிகளில் இறங்கி வாகனத்தை இயக்கியிருக்க ,
செங்கற் பொடி டீசார்டும் , கருப்பு நிற ட்ராகிலும்.. கச்சென்ற உடற்கட்டில் கம்பீரமாக அமர்ந்து இருப்பவனின் அழகில் எப்பொழுதும் போல் மயங்கிவளாய்.. இரும்பு கதவை மட்டுமே பூட்டி , பின்னால் ஏறி அமர்ந்ததும் ,
" டீ குடிக்க எவ்வளவு நேரமாக போகுது.. ஏன் அறிவு இப்படி செய்றீங்க.. மதியத்துக்கு சமைச்சு ஹாட்பேக்ல வச்சிருக்கேன். இட்லியும் ஹாட்பாக்ஸ்ல சூடா இருக்கும்.. காலேல சாப்பிடாமல் மதியமும் சாப்பிடாம தூங்கீட்டே இருந்தீங்க பாருங்க.. நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. இதுல கொடுத்த டீயையும் நீங்கள் குடிக்கலை.. ஒழுங்கா வீட்டுக்கு போனதும் சாப்பிடுங்க.. ", என்று அக்கறையில் துவங்கி மிரட்டலுடன் தொடர்ந்தவளிடம் ,
" போது ரித்து.. ஸ்கூல் வந்தாச்சு பாரு.. இறங்கு.. ", என்று சிரித்திருந்தான் .
" ம்ச்சு.. சிரிச்சு ஏமாத்தாதீங்க அறிவு.. முதல்ல போனது சாப்பிடணும்.. என் பேச்சை நீங்கள் கேட்கலேனா.. கண்டிப்பா சொல்றேன்.. உங்க கூட நான் பேசவே மாட்டேன்.. ", என்று கூறிக் கொண்டே பள்ளிக்குள் நுழைந்து மறைந்துவிட்டாள் .
மனைவியின் பேச்சை ரசித்தவனாகவே.. வீடு திரும்பிய அறிவு , சென்னையில் இருக்கும் மிக பெரிய ஐடி நிறுவனம் ஒன்றில் மேனேஜராக பணிப் புரியும் முப்பத்தி நான்கு வயது கொண்ட ஆண் மகன். திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிறது . இன்று அவனுக்கு வார விடுமுறை.. வாரத்தின் இறுதி நாட்களை தவிர யாதொரு நாளிலும் விடுமுறையாக இருந்தால் , அவன் செய்யும் ஒரே வேலை தூங்குவது.. உணவையும் மறந்து தூங்குவது . அதனாலேயே , இத்தனை கண்டிப்பு ரித்துவிடமிருந்து பிறந்துள்ளது என்பது தெரியாதவனில்லை .
வீட்டிற்குள் நுழைந்ததும்.. மனைவியின் அதட்டலை நினைத்து மலர்ந்தவனாகவே , அவள் செய்திருந்த உணவை எடுத்த தட்டில் வைத்தவாறே , வேலை நிமித்தமாக சேலத்திற்கு சென்றிருக்கும் தங்கைக்கு அழைக்க ,
" சொல்லு அண்ணா.. சிவா குட்டி , ரித்து ரெண்டு பேரும் கிளம்பீட்டாங்களா? ", என்று சகோதரனின் அழைப்பால் உண்டான உற்சாத்தில் , துள்ளலாகவே சுடர் ஒளியின் குரல் ஒலித்தது.
" ம் .. ஆச்சு டா.. உனக்கு வேலை எப்படி போகுது.. நீ தங்கியிருக்கும் ரூம் சேஃப்டியா.. கம்ஃபர்ட்டபுளா இருக்கா.. எப்போ வேலை முடியும்.. ஊருக்கு எப்போ வர.. ", என்று அக்கறை மிகுந்தவனாக அவள் பதிலையும் எதிர்பார்க்காமல் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக ,
" ஷப்பா.. கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ ண்ணா.. இப்படி , குவஷின் பேப்பர் மாதிரி கேள்வியா கேட்டா எப்படி..? ", என்று சுடர் கிண்கிணியாக சிரிக்க ,
" பதில் சொல்லு ரவுடி.. ", என்று அறிவு செல்ல அதட்டலிட ,
" என்ன சொல்ல சொல்ற.. நான் இங்கே வந்து தங்கி ரெண்டு நாளாச்சு.. இதோ இப்போ ரூமையே வெகேட் செய்ய போறேன்.. இப்பவும் சேஃப்டியா இருக்கா கம்ஃபர்ட்டா இருக்கான்னு கேட்கிறயே ண்ணா.. இதுல நான் ஸ்டாப் வேற.. வேலை சக்சஸ் அண்ணா.. பதினொரு மணிக்கு ஜஸ்ட் ஃப்ரெண்லி மீட்.. , மறுபடியும் சைட்ட ஒரு விசிட் பண்ணீட்டு கிளம்பீட வேண்டியது தான் . அநேகமாக , நைட் வீட்டுக்கு வந்திடுவேன் .. ", என்று பதில் அளித்திருந்தாள் சுடர் .
" ரீச் ஆகும் போது சொல்லுடா.. பிக் பண்ண அண்ணா வரேன்.. ", என்றதும் ,
" ம்ஹூம் வேண்டா ண்ணா.. கூட நவீன் இருக்கான் . அவனோட வீட்டுக்கு வந்திடுவேன்.. ", என்றாள் .
" லேட் நைட்ல ரீச் ஆகிற மாதிரி வராம சீக்கிரம் கிளம்புங்க.. ", என்று பொறுப்புடன் எச்சரிக்கை விடுக்க ,
" ஓகே.. ஓகே.. ஓகே பாஸ்.. அப்புறம் எங்க உன் பொண்டாட்டி புள்ளகுட்டி ரெண்டு இம்சைகளும் கிளம்பீடுச்சா.. இவ்ளோ , ரிலாக்ஸாக பேசீட்டு இருக்க.. ", என்று வம்பு அளந்தவளிடம் ,
" என் பொண்டாட்டிக்கு தெரிந்தது.. ", என்று அவனும் அவளை போலியாக விரட்ட ,
" அய்யோ பாசக்கார ண்ணா.. போட்டுக் கொடுத்திடாத டா.. புண்ணியமா போகும் .. ", என்று பயப்படுபவள் போல் விளையாட ,
" ம்.. அந்த பயம்.. ", என்றான் அவளுக்கு இணையாய்..
" எல்லாம் என் தலையெழுத்து.. நண்டு சிண்டுகெல்லாம் பயப்பட வேண்டியதா இருக்குது.. " என்று மூத்தவனோடு தொடர் கதைப்பில் இருந்த சுடருக்கு மனதின் அயர்ச்சி , வெகுதூரம் தொலைந்தது போலவே உணர்ந்தாள் .
அதனால் அறிவுடன் , அவளும் கிடைத்த ப்ராஜெக்ட்டை பற்றி பெருமிதமாகவே பகிர்ந்தவளாக , தொடர் கதைப்பில் ஈடுபட்டிருந்தவளின் அலைபேசிக்கு , இரண்டாம் அழைப்பில்... அவளுடைய தோழியான கௌசிகா விடாமல் தொடர்பு கொண்டேயிருக்க ,
" ம்.. அண்ணா கௌசி செகண்ட் லைன்ல விடாம கால் பண்றா.. எதுவும் முக்கியமானதா இருக்கும்.. பாய் அண்ணா .. ", என்றவள் அறிவின் அழைப்பை துண்டிக்கவும் தோன்றாதவளாக .. தோழியின் அழைப்பை ஏற்றுழள்
"சொல்லு கௌசி..", என்று வினவவே ,
" ஏய் சுடர்.. ரூம்ல இன்னும் என்னடி பண்ற. தண்டதை ( தண்டபாணி ) பற்றி தெரிஞ்சும்.. இவ்வளவு அலட்சியமா இருந்தா என்ன டீ அர்த்தம்... நாங்கள் எல்லோரும் வந்தாச்சு.. உன்னை தவிர.. சீக்கிரமா கீழ வா.. அந்த ஆளு வரதுக்குள்ள.. ", என்று பொறிந்து தள்ளியவளுக்கு , சுடரை அவர்களின் உயர் அதிகாரி திட்டுவதை விரும்பாதவளாக அவசரப்படுத்தினாள் .
கடந்த மூன்று ஆண்டுகளாக வசீகரன் , கௌசிகா , நவீன் மற்றும் சுடர் ஒளி என்று நால்வரும் ஒரே குழுவில் சேர்ந்து பணி புரிபவர்கள் . இதில் , வசீகரன் மூத்த உறுப்பினன். அதுமட்டுமின்றி , மற்ற மூவருக்கும்.. எவ்வித பந்தாவும் இல்லாமல் மிகவும் தன்மையாகவே, அவர்களுக்கு வேலையில் ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதோடு.. மிகச் சிறந்த வழிக்காட்டியாக கடந்த மூன்று ஆண்டு காலமாக இருக்கிறான் . அவனின் பொறுமையான பாங்கும் செயல்பாடுகளுமே , அந்த நிறுவனத்தின் மிகச் சிறந்த குழுவில் ஒன்றாகவும் அவர்கள் இருக்கிறார்கள் .
வசீகரனுக்கு முற்றிலும் மாறுபட்டவனாக இருப்பவன். புதிதாக அவர்களுக்கு மேல் அதிகாரியாக சேர்ந்திருக்கும் தண்டாயுதபாணி . இவர்களோடு அவன் பணிப் புரியத் துவங்கி ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது . ஆனால் , அது என்னவோ , ஆரம்பம் முதலே.. சுடர் ஒளி என்றால் அவனுக்கு வேப்பங்காய் போல் கசக்கக் கூடியவளாக இருக்கிறாள் . எப்பொழுதும் காரணமின்றி , அவளை காய்ச்சி எடுத்து விடுவான். அவனை பற்றி நன்கு தெரிந்தும் சுடர் இவ்வளவு சாவகாசமாக நடந்துக் கொள்வதால் உண்டான கோபத்தில் கௌசிகா , அவளிடம் அவளது ஆதங்கத்தை வெளியிட்டவள்.. அவளையும் அவசரப்படுத்த ,
" பீ கூல் கௌசி டார்லிங்.. லாக் பண்ணீட்டு இருக்கேன். அந்த பம்கின் தலையன் வரதுக்குள்ள.. அங்கே , நான் இருப்பேன் டார்லிங்..", என்று கவலையற்றவளாக வளவக்க ,
" நீ அடங்கவே மாட்டியா.. டார்லிங்ன்னு என்னை கலாய்ச்சது போதும்.. உன் டங்குவார் கிழியறதுக்குள்ள வந்து சேரு.. ", என்றவளாக துண்டித்து இருந்தாள் .
கௌசிகாவிற்கு டார்லிங் என்றால் அவ்வளவு கோபம் வரும்.. அது தெரிந்தே , சுடர் அழைத்து வெறுப்பேற்றியதும்.. அந்த கடுப்பை வெளியிட்டவளாக வைத்துவிட்டாள் .
அந்த அறையில் மீண்டும் தன் பொருட்களை சரி பார்த்து , பையை தன் தோளில் மாட்டியவளாய்.. அறையை பூட்டியவள்.. அதன் சாவியை விரலால் சுழற்றியவாறே நடந்து வர , லிஃப்ட்டின் கதவு திறப்பது போல் தெரிய , வள வளப்பான கற்களை பதித்திருந்த தரையில் , அவசரமாக அடி எடுத்து நடந்தவளின் கால்கள் வழுக்கி விட ,
" தான் அவ்வளவு தான்.. ", என்று முடிவிற்கு வந்தவள்.. இறுக்கமாக கண்களை மூடிக் கொண்டு , புவியீர்ப்பு விசைகேற்ப ஏற்ப கீழே அவளது உடல் முன்னால் சரிய ,
சுடர் ஒளியின் வலது தோளைப் பின்னிருந்து அழுத்தமாக பிடித்திழுத்து.. அவளை கீழே விழாமல் காப்பாற்றியது.. ஓர் ஆணின் வலிமையான கரம் .
கனவில் , சுடர் ஒளியை கிடுகிடுக்கச் செய்த , அதே அழுத்தமான தொடுகை.. ! அதே வலிமையான ஆணின் கரம்..!
கீழே விழ இருந்ததையும் மறந்தவளாக , இழுத்து பிடித்த மூச்சுடன்.. அவன் யார் என்று அறிய திரும்பி பார்த்தவள்.. தனக்கு எதிரே நின்று இருந்தவனைக் கண்டு முற்றிலும் திகைத்து விட்டாள் .
" நீயா..? ", என்று ஆச்சரியம் தாளாது வாய் பிளந்தவளாக அவனிடம் கேட்டிருந்தாள் .
கனவுகள் தொடரும்...
Last edited: