Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தொலை தூரம்

Advertisement

Crazy Queen

Well-known member
Member
"உங்க அம்மாவோட 70வது பிறந்த நாளுக்கு என்ன வாங்கிக் கொடுக்கலாம்ன்னு இருக்கீங்க" என்று கணவன் ராஜாவிடம் கேட்டாள், நந்தினி.

"வழக்கம் போல ஒரு புடவை எடுத்துக் கொடுத்து விட வேண்டியது தான்" என்றான் அவன்.

"புடவையோடு ஒரு சொல்போனும் வாங்கி கொடுத்திடலாம். இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி அவங்க இருக்க வேண்டாமா. செல்போனில் பேஸ்புக், வாட்ஸ்அப் உபயோகப்படுத்த வில்லைன்னாலும் அதில் பேசுவாவது செய்வாங்க. உங்க தங்கச்சிங்க, பேரன் பேத்திகளுடன் பேசி சந்தோஷப்பட்டுக்குவாங்க. அவங்க கூட தினமும் பேசுறது உங்கள் அம்மாவின் தனிமையும் போக்கும்..." என்றாள்.

"நீ சொல்வதும் சரிதான்" என்று ஆமோதித்தான்.

ராஜா தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிகிறான். வீட்டுக்கு அவன்தான் மூத்தவன். இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் தான் வசிக்கிறார்கள். அவனது தந்தை ராகவன் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். அம்மா வசந்தி குடும்பம் நிர்வாகத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. அதனால் வீட்டை தனது உலகமாக்கி அதன் உள்ளே முடங்கிக் கொண்டார்.

ராஜாவும், அவன் மனைவியும் வேலைக்குச் சென்ற பிறகு முதியவர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருப்பார்கள். ராஜாவுக்கும் குழந்தை இல்லை . 'கொஞ்சி மகிழ பேரக் குழந்தை இல்லையே' என்று வருத்தம் அவர்களிடம் நிறையவே இருந்தது. மகளின் குழந்தைகள் அந்தக் குறையைப் போக்கிக் கொண்டிருந்தார்கள். மற்ற நேரங்களில் டி.வி. தான் அவர்களது பொழுதுபோக்கிற்கு உதவியாக இருந்தது.

இருவரும் அவ்வப்போது கோவிலுக்கு சென்று வருவார்கள். மகள்கள் இருவரும் அடிக்கடி தங்கள் பிள்ளைகளுடன் வந்து செல்வார்கள். அவர்கள் எப்போதும் வருவார்கள் என்று இவர்கள் இருவரும் காத்திருப்பார்கள்.

'மனைவி சொல்வது போல், அம்மாவிடம் செல் போன் இருந்தால் தினமும் சகோதரிகளிடம் அவளது குழந்தையுடன் பேசிக் கொள்வார்கள். அவரது தனிமையும் குறையும்' என்று நினைத்த ராஜா அம்மாவுக்காக செல்போன் ஒன்று வாங்கினேன்.

அம்மாவின் பிறந்த நாள் அன்று, "இந்தாங்கம்மா. உங்களுக்கு உபயோகமான பிறந்தநாள் பரிசு" என்று கூறி செல்போன் கொடுத்தான். அதை வாங்கிப் பார்த்த அவனது அம்மா மகிழ்ச்சி அடைந்தார். போனை எப்படி இயக்குவது என்று ராஜாவும் நந்தினியும் சொல்லிக் கொடுத்தார்கள். ஒரு வாரத்தில் போனை உபயோகப்படுத்த கற்றுக் கொண்டு விட்டார் வசந்தி. தினமும் மகள்களுடன் உற்சாகமாக பேசி வந்தார். பேரன், பேத்திகளின் மழலைக் குரல் மனதை குளிர்வித்தது. அதைப் பார்த்த ராஜா சந்தோஷப்பட்டான்.

மகள்கள் இருவரும் 'வத்தக் குழம்புக்கு என்ன மசாலா போடுவீங்க' என்று சமையல் சந்தேகம் எல்லாம் அம்மாவை போனில் அழைத்தார்கள் . குடும்ப விஷயங்களையும் போனில் பேசிக் கொண்டார்கள்.

ஒரு மாதம் கடந்தது.

அம்மா முகவாட்டத்துடன் இருப்பதை ராஜா உணர்ந்தான்.

"என்னம்மா சோகமாக இருக்கீங்க ?" என்று கேட்டான்.

"ஒன்னும் இல்லடா..." என்றபடி அமைதியாக அங்கிருந்து கடந்துவிட்டார்.

இரண்டு நாட்கள் கழித்து. "நீ வாங்கிக் கொடுத்த போனை நீயே வச்சுக்கோ இனிமே இது எனக்கு வேண்டாம்டா" என்று கொடுத்தார்.

"ஏம்மா... தங்கச்சிங்க ஏதாவது வருத்தப்படும்படியா பேசிட்டாங்களா... அவங்க வீட்டுக்கும் வரலையே. அவங்க கூட எதுவும் சண்டை போட்டியா ‌?" என்று பக்குவமாக கேட்டான்.

"எல்லா பிரச்சனையும் இந்த செல்போனால் வந்ததுதாண்டா. நான் எல்லார்கிட்டயும் பேசணும்னுதான் நீ போன் வாங்கி கொடுத்தே. இந்த போன் வந்ததுக்கு அப்புறம் யாருமே என்னை பார்க்க வீட்டுக்கு வர மாட்டேங்குறாங்கடா. எல்லாத்தையும் போனிலேயே பேசிடுறாங்க. என் பேரன் கூட முன்பெல்லாம் வாரத்துக்கு ஒரு தடவை வீட்டுக்கு வருவாங்க. இப்போ வர்றதில்லை. கேட்டா அதான் போன்லயே பேசுறேனே பாட்டின்னு அப்படின்னு சொல்லிடுறாங்க. இந்த செல்போன் எண் ரத்த சொந்தங்களை எல்லாம் தூரமாக்கிட்டுடா. இதே நீயே வச்சுக்கோ. அவங்க எப்பவும் போல என்ன நேராவே வீட்டுக்கு வந்து பார்க்கட்டும்... பேசட்டும்" என்றார், வசந்தி.

"நீ சொல்றதும் சரிதாம்மா.. என் பாக்கெட்டில் இருக்கும் அதுவும் அப்படித்தான் என் நேரத்தையும் என் நட்புகளையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.." என்றவன். செல்போனின் தேவையை படிப்படியாகக் குறைத்துக் கொள்ள முடிவெடுத்தான்.

*┈┉┅━❀•முற்றும்❀━┅┉┈*

தகவல் குறிப்பு :-

பழைய செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் சிஸ்டம்களில் இருந்து எடுக்கப்படும் மைக்ரோ கிராம் அளவிலான தங்கத்தைச் சேகரித்து பதக்கங்களுக்கு தங்க முலாம் பூசுகிறது ஜப்பான்.
 
Top