Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நள(ன்)தமயந்தி - 5

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் 5
திறப்புவிழா மிக சிறப்பாக நடந்துகொண்டிருந்தது.. திறப்புவிழாவிற்கு சுந்தரமும் தமயந்தியும் கலந்துக்கொண்டனர்.

தமயந்திக்கு நளன் யார் என்று தெரிந்ததால் சிறிது புன்னகைத்து நளனிடம் வாழ்த்து சொல்ல முடிந்தது. (அது அவனுக்காக அல்ல, அவளின் தர்மா மாமாவுக்காக)
அவர்களை அன்னைக்கு அறிமுகப்படுத்திவிட்டு மற்ற விருந்தினர்களை வரவேற்க சென்றான் நளன்.

தமயந்தியிடம் சற்றே உரிமையாக பேச ஆரம்பித்தார் விசாலாட்சி. தமயந்தி என்ற பெயரே அவரை உரிமையுடன் பேச வைக்க பெரிதும் உதவியது.

நளன் ‘எனக்கேற்ற தமயந்தி கிடைச்சா டும் டும் கொட்டிட வேண்டியது தான்’ என்று சொல்லும் போதெல்லாம் விசாலாட்சி கிண்டல் செய்வார்.

“ஏன்டா, உனக்கு வரவப் பேரு தமயந்தியா இல்லன்னா என்ன பண்ணுவ?” என்ற கேள்விக்கு “ம்மா, அவ பேரு எதுவா இருந்தாலும் நான் தமயந்தின்னு செல்லமா கூப்பிட்டா போச்சு!!” என்ற பதிலில் விசாலாட்சி பெருமிதம் அடைந்தாலும், “ஆமா நீ கூப்பிட்டா அவளுக்கு உடனே பிடிச்சுடுமாக்கும், எவ அவ? ன்னு உன் கொமட்டுலேயே குத்துவா.!!” என்று மேலும் அவனின் வாயை பிடுங்குவார்.

அதற்கும் சிரித்துக்கொண்டே, “ம்மா, அவளுக்கு பிடிக்கலன்னா விட்டுட வேண்டியது தான். இதுல என்ன இருக்கு! இதுக்காகல்லாம் உங்க பிள்ளை சண்டை போட மாட்டான். நான் யதார்த்தவாதி.!!” என்று சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொள்வான்.

ஆம்..!! நளன் அவன் கூறியது போல மிகவும் யதார்த்தவாதி. அவனைப் பற்றி வர்ணிப்பது என்றால், வாழ்க்கையை அதன் போக்கிலேயே எதிர் கொள்பவன்.
மிகுந்த உழைப்பாளி. அன்னையை நேசிப்பவன். வருவதை எதிர்கொள்ளும் ரகம் அதற்காக முன் யோசனையின்றி எந்த ஒரு விஷயத்தையும் செய்ய மாட்டான்.
படத்தில் வருவது மாதிரி ‘ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’ என்றெல்லாம் இருக்க மாட்டான். யாராவது நீ செய்வது தவறு என்றுசொன்னால், அது நியாயமாகவும், உண்மையாகவும் இருக்கும் பட்சத்தில் அதை நிச்சயம் திருத்திக்கொள்வான்.

நிச்சயம் இவன் தமயந்திக்கேற்ற நளன் தான்.. அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இதற்கு மேலும் அவனை வர்ணிப்பதென்றால், நீங்கள் (பெண்கள்) உங்களுக்கு பிடித்த ஆண் மகனின் உருவத்தை மனதில் நினைத்து மேற்கொண்டு கதையைப் படிக்க ஆரம்பியுங்கள்.

தமயந்தியைப் பற்றி அன்னையிடம் ஏற்கனவே சொல்லியிருந்தான். அவருக்கு அவளிடம் உரிமையாக பேச அவளின் பெயரே ஏதுவாகியிருந்தது.

“எப்படிம்மா இருக்க?” என்று தமயந்தியின் மோவாய்கட்டையில் கைவைத்து கொஞ்சியபடியே வினவினார் விசாலாட்சி.

முதல் முறை பார்க்கும்போதே இப்படி கொஞ்சி பேசியது தமயந்திக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அதனால் ‘நன்றாக இருக்கிறேன்’ என்பது போல தலையை ஆட்டி வைத்தாள் தமயந்தி.

சுந்தரத்திடமும் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தார். மீனாட்சியை பற்றி விசாரித்து விட்டு தர்மாவைப் பற்றியும் சில நிமிடங்கள் பேசினார். இவையெல்லாம் கேட்பதற்கு மிகவும் கஷ்டமாக உணர்ந்தாள் தமயந்தி.

இதை எதேச்சையாக கவனித்த நளன், வளவனிடம் கண் ஜாடைக் காட்டி அவளிடம் சென்று பேசுமாறு செய்தான். வயதான இருவருடன் பேசிக்கொண்டிருப்பது தான் அவளின் கஷ்டத்திற்கு காரணம் என்று நினைத்து வளவனை அனுப்பியிருந்தான்.

ஆனால் தமயந்தியோ அவளின் வாழ்வில் நடந்த பிரச்சினையால் தன் அன்புக்குரிய மாமாவை இழந்தது குறித்து தான் மன கஷ்டத்துடன் நின்றிருந்தாள் என்பது பாவம் நளனுக்கு தெரியுமா, என்ன?

வளவன் தமயந்தியின் அருகில் வந்து தன்னை தானே அறிமுகப் படுத்திக்கொண்டான். கூடவே மனைவி மகளையும் அறிமுகப்படுத்தினான்.
வளவனின் மகள் என்று சொல்வதை விட குழந்தை என்று சொல்லலாம். ஏனென்றால் அவளுக்கு வயது ஆறு மாதங்கள் தான் ஆகியிருந்தது. இன்பா என்று பெயரிட்டு இருந்தான்.

அது தன் பொக்கை வாய் சிரிப்பினை தமயந்தியை நோக்கி வீசியதும் அவளின் கைகள் அவளை அறியாமலேயே குழந்தையை தூக்கியது.
அவர்களை விட்டு சிறிது தூரம் சென்றதும் அக்குழந்தைக்கு அங்கிருந்த வண்ண விளக்குகளையும், கட்டப்பட்டிருந்த அழகழகான பலூன்களையும் காட்டி ஏதேதோ கதை பேசி குழந்தையை சிரிக்க வைத்துக்கொண்டிருந்தாள் தமயந்தி..

குழந்தையின் சிரிப்பில் தன்னையே மறந்திருந்தாள் தமயந்தி. அதனால் அவள் முகத்தின் புன்னகை சற்று பெரிதாகவே விரிந்திருந்தது.

இவற்றை சிறிதுநேரம் கவனித்துவிட்டு அவளருகே சென்றான் நளன். “குழந்தை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும்.. அதற்கு நீங்களும் விதிவிலக்கல்லப் போல.. பாருங்க உங்களையே சிரிக்க வச்சுடுச்சே!!” என்றான் சிறு புன்னகையுடன்.

மிக அருகில் அவனின் குரல் கேட்டதும் தூக்கிவாரிப் போட்டதால் குழந்தையை நழுவவிட, சட்டென்று நிதானித்து குழந்தையை இறுக்கிப் பிடித்தாள். பின் அவனைப் பார்த்து முறைக்கவும் செய்தாள்.

“சாரிங்க, நான்..” என்று சொன்னவனிடம் ‘பரவாயில்லை’ என்பது மாதிரி தலையை ஆட்டி காண்பித்து விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

போகும் அவளையே பார்த்திருந்த நளனிடம் வந்த வளவன், “என்னடா, மனசுக்குள்ள மணி அடிச்சு, பல்பு எல்லாம் எரிஞ்சுடுச்சா?” என்றான்.

“வளவா கிண்டல் செய்யாதே.. அவங்களுக்குள்ள ஏதோ சோகம் இருக்குன்னு நினைக்கிறேன். அந்த சோகம் அப்படியே கண்கள்ல தெரியுது. கூடவே ஒரு மயக்கமும் தெரியுது.”

“பார்றா.. ம்ம்ம் எங்க கண்ணுக்கு தெரியாததெல்லாம் உனக்கு மட்டும் தெரியுதோ? சோகமாம்.. மயக்கமாம்.. பரவாயில்லை நல்லா தான் டையலாக் விடற நீ.. எப்படியோ நல்ல விதமா முடிஞ்சா சரி. ஹோட்டல் வாங்கறது, அதை ரெனோவேட் பண்றதுன்னு எதுக்குமே எங்க உதவியை ஏத்துக்கலை... இன்னும் பணம் சேர்க்கிறேன்னு சொல்லிக்கிட்டு கல்யாணம், குழந்தை எல்லாம் தள்ளிப் போட்டுடாத. அம்மா பாவம் உன் கிட்ட சொல்லி சொல்லி அலுத்துப் போய்ட்டாங்க.
இப்போ தமயந்தியைப் பார்த்ததும் அவங்க தான் மருமகள்ன்னே முடிவு பண்ணினமாதிரி நடந்துக்கிறாங்க. அதுல எனக்கு ஒண்ணும் தப்பா தெரியலை. என்னை கேட்டா உனக்கேத்த தமயந்தி இவங்க தான் தோணுது. சீக்கிரம் யோசிச்சு முடிவு பண்ணு.” என்று அவனின் கையைப் பிடித்து இழுத்து உள்ளே அழைத்து சென்றான்.

நளனுக்கு தனது திருமணத்தைப் பற்றி யோசிக்க வேண்டியிருந்தது. தமயந்தியைப் பார்த்ததுமே பிடித்ததா என்றால் அதற்கு அவனிடம் பதில் கிடையாது. தமயந்தியின் அழகு அவனை ஈர்த்ததா என்றும் தெரியவில்லை.
நளன் என்றுமே அழகிற்கு முக்கியத்துவம் அளித்தது இல்லை. நல்ல குடும்ப வாழ்க்கைக்கு நல்ல மனமும், குணமும் இருந்தாலே போதும் என்று நினைப்பவன்..

தனது திருமணத்தைப் பற்றி யோசிக்க சிறிது காலம் ஆகும் என்று அவனுக்கே தெரியும். நினைத்தவுடன் வாழ்க்கை அமைத்துக்கொள்ள இது ஒன்றும் திரைப்பட வாழ்க்கை இல்லை என்ற நிதர்சனத்தை புரிந்துக்கொண்டதால் தமயந்தியைப் பற்றி சிந்திப்பதை தள்ளிப் போட்டான்.

இதெல்லாம் சில நொடிகளில் யோசித்தவன், பிறகு தற்பொழுது நடந்துக்கொண்டிருக்கும் திறப்புவிழாவிற்கு தன் மனதை திருப்பினான்.

விழா சிறப்பாக நடந்து முடிந்ததும் அனைவரும் இன்முகத்துடன் அவனை வாழ்த்தி விடைப்பெற்றனர்.

இது நடந்து சில நாட்கள் கழித்து ஒரு நாள் நளனைப் பார்க்க சுந்தரம் அவனின் நளாஸ் கடைக்கு சென்றிருந்தார்.

“வாங்க அங்கிள்” என்று வரவேற்றவனிடம் புன்னகைத்தப்படியே அவனிடம் பேசத்தொடங்கினார்.

“நளா தம்பி உன் கிட்ட கொஞ்சம் பேசணும்.. இப்போ நீ ப்ரீயா இருந்தா கொஞ்சம் வீட்டுக்கு வரமுடியுமா?, உன் அம்மா கிட்டயும் மீனு சொல்லிட்டா.. அவங்களும் வந்துடறேன்னு சொல்லியிருக்காங்க..”

நளனுக்கு இவர் என்னப் பேசப்போகிறார் என்று சற்று குழப்பமாக இருந்தது. தமயந்தியை கல்யாணம் செய்வதுப் பற்றி பேசினாலும் அவன் வீட்டுக்கு தானே இவர்கள் வருவார்கள் என்று நினைத்தாலும், அவர் என்ன தான் சொல்கிறார் என்றுப் பார்க்க, தன்னுடைய வேலையை ஒதுக்கி அவருடன் கிளம்ப முடிவு செய்தான்.

“அங்கிள் ஒரு டென் மினிட்ஸ்ல நான் வீட்டுக்கு வந்துடறேன்.. நீங்க என் கூடவே வரீங்களா, இல்லை முன்னாடியே கிளம்பரீங்களா?”

“கடையில கொஞ்சம் வேலை இருக்குப்பா நளா, பத்து இருபது நிமிஷம் ஆகும். நீ வேலையை முடிச்சுட்டு கடைக்கு வந்துடுப்பா நாம சேர்ந்தே போகலாம்.” என்று சுந்தரம் சொல்லிவிட்டு சுந்தரதர்மாவிற்கு கிளம்பினார்.

நளனின் வீடு சுந்தரத்தின் வீட்டின் அருகிலேயே இருந்தது. திறப்புவிழாவுக்கு வந்த நளனின் அம்மா விசாலாட்சி, தமயந்தியின் வீட்டிற்கு மீனாட்சியைப் பார்க்க அன்றே சென்றிருந்தார்.

அப்பொழுது வாடகை வீடுப் பற்றி பேச்சு வந்த போது, அடுத்த தெருவில் இருக்கும் தோழியின் வீட்டைப் பற்றி சொல்லி அங்கேயே குடியேற வைத்தார் மீனாட்சி. வீடு அருகருகே இருப்பதால் தான் சுந்தரத்தை தானே அழைத்து செல்வதாகக் கூறினான் நளன்.

சிறிது நேரத்தில் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பி சென்றனர் இருவரும்.
 
கதையை தொடர்ந்து படித்து கருத்துக்கள் மற்றும் விருப்பங்களை பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி. உங்கள் கருத்துக்களுக்கு தனி தனியே பதில் அளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன். சில சொந்த வேலையின் காரணமாக என்னால் பதில் தர முடியவில்லை. கூடிய விரைவில் அனைவருக்கும் பதில் தருகிறேன். அதுவரை கதையை தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவும்.
நன்றி
சத்யாஶ்ரீராம்
 
Top