Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நள(ன்)தமயந்தி - 6

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்:6

மீனாட்சியின் வீட்டிற்கு மிகவும் மகிழ்ச்சியாகவே வந்திருந்தார் விசாலாட்சி.

தமயந்தியின் பெற்றோர் எதைப் பற்றி பேசினாலும் முடிவில் நள – தமயந்தியின் கல்யாணம் குறித்து இன்றே பேசிவிட வேண்டும் என்ற நிச்சயத்துடன் வந்ததால் ஏற்பட்டிருந்த மகிழ்ச்சி. கூடுதலாக தமயந்தியும் அங்கே இருந்ததால் இரட்டிப்பு மகிழ்ச்சி அவருக்கு.

“வாங்க ஆன்ட்டி” என்று வரவேற்ற தமயந்தியின் கன்னத்தில் கை வைத்து கொஞ்சினார் விசாலாட்சி.

“வாங்க விசாலம்.. நளனும், இவரும் இப்போ தான் கிளம்பியிருக்காங்க.. சீக்கிரம் வந்துடுவாங்க.” என்றார் மீனாட்சி.

அவரின் பின்னாலேயே அன்னம்மாள் லெமன் ஜூசுடன் வந்தார்..

அவரிடமிருந்து பானத்தைப் பெற்றுக்கொண்ட விசாலாட்சி, அவரிடமும் சிறிதுநேரம் அளவளாவினார்.

“ம்மா நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன்.. கமலினி போன் செஞ்சா.. அவ வீட்டுக்கு தான் போயிட்டு சீக்கிரம் வந்துடறேன். சாரி ஆன்ட்டி நான் கிளம்பறேன். இன்னொரு நாள் நான் வீட்டுக்கே வரேன்.”

“என்ன கண்ணம்மா நீ! இதுக்கெல்லாமா சாரி கேப்பாங்க? நீ போயிட்டு வாடா ராஜாத்தி..!!” என்றவருக்கு என்ன தெரியும் இந்த மாதிரியெல்லாம் கொஞ்சி பேசுவதினால் தான் தமயந்தி ஒதுங்கி ஒதுங்கி போகிறாள் என்று.

தமயந்தி கிளம்பி சிறிது நேரத்திற்கெல்லாம் நளன், சுந்தரத்துடன் வீட்டினுள் நுழைந்தான்.
அவர்களுக்கும் ஜூசைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்றார் அன்னம்.

“தம்பி ஹோட்டல் எல்லாம் எப்படி போகுது?”

சில நொடிகள் அவரைப் பார்த்தவன், “அதெல்லாம் நல்லாத்தான் போகுது அங்கிள்.” என்றான்.

“நளன் தம்பி, உங்க கிட்ட முக்கியமான விஷயம் சொல்லத்தான் இங்க வர சொன்னேன்.”

“அண்ணா, நீங்க எதுக்கு அவனை நீங்க, உங்கன்னு மரியாதையாய் கூப்பிடறீங்க? சும்மா நீ, வா, போ ன்னே சொல்லுங்க.” என்றார் விசாலாட்சி.

சுந்தரத்தை விட ஒன்றரை வயது குறைவாக இருந்ததினால் அவரை ‘அண்ணா’ என்று அழைத்தார் விசாலாட்சி. மீனாட்சியை மட்டும் பேரை சுருக்கி ‘மீனு’ என்பார். மீனாட்சி தான் அவரை அப்படி அழைக்கப் பழக்கியிருந்தார் .. (கட்டாயப்படுத்தியிருந்தார்)

“சரிம்மா விசாலம்..!!” என்றவர் நளனிடம் திரும்பி “நளா..!, உங்க சித்தப்பா தர்மாவைப் பற்றி தான் பேசணும்.”

இதைக் கேட்டதும் விசாலாட்சிக்கு முகம் சற்றே வாடியது. சுந்தரம் திருமணத்தைப் பற்றி தான் பேசுவார் என்று மனதின் ஓரத்தில் இருந்த நப்பாசையே அவரின் முக வாட்டத்திற்கு காரணமாகியது.

“அவரைப் பற்றி பேச என்ன இருக்கு அங்கிள்?”

சற்று தள்ளியிருந்த அலமாரி பக்கத்தில் அமர்ந்திருந்த மனைவியிடம் “மீனு அதை கொஞ்சம் எடுத்து தாம்மா.” என்றார் சுந்தரம். மீனாட்சி இப்பொழுது யாரின் உதவியும் இல்லாமல் நடக்க தொடங்கியிருந்தார்.

நடை சற்றே சாய்ந்து இருந்தாலும் அவரால் யாரின் உதவியின்றியும் நடக்க முடிந்தது. இதற்கு முழுக்க முழுக்க அவரின் மன உறுதியே காரணம்.

“இந்தாங்க..” என்றவர் அவரின் அருகிலேயே அமர்ந்தார் மீனாட்சி.

அதை வாங்கிய சுந்தரம், “நளா இதைப் பிடி, படிச்சுப் பாரு என்றவர், விசாலாட்சியிடம் திரும்பி, “தர்மா அவனோட சொத்துக்களை நளனின் பேரில் எழுதி வச்சிட்டான்ம்மா.. அதோட பத்திரங்கள் தான் இது. இதை கொடுப்பதற்காக உங்களை தேடாத இடம் பாக்கியில்லை.
என்ன ஒன்று என்னால் நேரடியா வந்து தேட முடியலை. ஆட்களை வைத்து தான் தேட சொல்லியிருந்தேன்.
மீனாட்சியின் உடல் நிலை தான் அதற்கு காரணம். பிறகு நளன் வந்து பத்திரிகை வைத்தபோது தான் உங்களைப் பற்றியெல்லாம் தெரிந்துக்கொண்டேன்.வீடு, ஹோட்டல் எல்லாம் செட்டில் ஆகி, நீங்க கொஞ்சம் ப்ரீயா இருக்கும் போது இதைப் பற்றி பேசிக்கலாம் என்று தான் இவ்வளவு நாள் பேசாம இருந்தேன். இப்போ தான் அதுக்கு வேளை வந்திருக்கும்மா.” என்று சொல்லிய சுந்தரம் தன மனைவியைப் பார்த்தார்.

“ஆமா விசாலம், தர்மாண்ணா நளனைப் பத்தி சொல்லிக்கிட்டே இருப்பார். அவருக்கு நளனை ரொம்பப் பிடிக்கும்.” என்ற மீனாட்சியை பார்த்துக்கொண்டிருந்தான் நளன்.

தன் பேரில் இத்தனை சொத்துக்களையும் எழுதியது மிகவும் ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது நளனுக்கு. அதே சமயம் தர்மா சித்தப்பாவை கூடவே இருந்து கவனித்து கொள்ளாவிடினும், ஒரு முறை கூட வந்துப் பார்க்காமல் இருந்தது குறித்து மிகவும் வருத்தமாக இருந்தது.

சித்தப்பாவை பார்த்து விட்டு வரலாம் என்று நிறைய முறை விசாலாட்சி அவனிடம் சொல்லியிருக்கிறார். அந்த சமயங்களில் எல்லாம் அவன் மறுக்காமல் இருந்தாலும், வேறெங்கும் செல்ல முடியாமல் அவனை ஏதாவது ஒரு வேலை இழுத்துக் கொள்ளும். ஆனால் அவரை சந்திப்பது என்பது மட்டும் நடக்கவேயில்லை.

இன்றைய அவசரயுகம் மற்றும் இயந்திரத்தனமான வாழ்க்கையில் அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் கூட நட்பு பாராட்ட முடிவதில்லை. இதில் சொந்த பந்தங்களை தக்க வைத்துக் கொள்வது முடிகின்ற விஷயமா, என்ன?. எல்லாம் கலி (காலம்) செய்த கோலம் தான்.

நிழல் உருவமாக மட்டுமே நினைவு இருக்கும் ஒருவரைப் பார்க்க எந்தவித முயற்சியையும் சரியாக எடுக்காமல் விட்ட நளனையோ, அல்லது கணவர் காசிநாதன் இறந்ததும், புகுந்தவீட்டினரின் ஒதுக்கத்தாலும் மற்றும் சில மனித மிருகங்களின் வழிசலினாலும் தன்னுடைய பிறந்த வீட்டினருடன் செல்வது என்று முடிவெடுத்த விசாலாட்சியையும் இங்கே குற்றம் சொல்ல முடியாது.

அதே போல் நண்பருடன்(சுந்தரம்) இணைந்து வியாபாரத்தை பெருக்குவதிலேயே இருந்து விட்டு கடைசியாக இறுதி மூச்சு விடும் போது, தன் பேரில் உள்ள சொத்துக்களை மட்டும் நளனின் பெயரில் எழுதி வைத்த தர்மாவையும் குற்றம் சொல்ல முடியாது.

இவை எல்லாவற்றிற்கும் காலத்தையே குற்றவாளி ஆக்கி விட்டு கதையை மேற்கொண்டு தொடரலாம்.

சுந்தரம் கொடுத்த பத்திரத்தையே வெறித்திருந்தவன் சில நொடிகள் கழித்து பேச தொடங்கினான். “அங்கிள், உண்மையா சொல்லணும்ன்னா எனக்கு சித்தப்பாவைப் பார்த்த ஞாபகம் கூட நிழல்போல தான் இருக்கு.” என்று சொல்லிவிட்டு பின் தன்னாலும் அம்மாவாலும் அவரைப் பார்க்க வர முடியாததற்கான காரண காரியங்களையும் விளக்கி சொன்னான்.

“அம்மா நீங்களே சொல்லுங்க.. சித்தப்பாவை நான் ஒரு தடவை கூட வந்து பார்க்கல, பேசல.., ஒண்ணுமே அவருக்குன்னு நான் செய்யல.. அப்படி இருந்துவிட்டு அவரோட சொத்தை மட்டுமே நான் எடுத்துக்கறது நியாமா?” என்று தன் அன்னையிடம் நியாயம் பேசினான் நளன்.

“நீ சொல்றது சரி தான் நளா..” என்ற விசாலாட்சி, சுந்தரத்துடன் பேச ஆரம்பித்தார். “அண்ணே! இந்த சொத்துக்கள் எல்லாம் எங்களுக்கு வேண்டாண்ணே..!”

“இங்க பாரும்மா விசாலம், நளனுக்கு வேணும்ன்னா மறந்து போயிருக்கலாம்.. ஆனா உனக்கும்மா நினைவில்லை..! தர்மா உங்க வீட்டுக்கு வரும் போதெல்லாம் நளனை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு, இவன் தான் தனக்கு வாரிசு என்று சொல்லிட்டே இருப்பானே..!
நானும் அவன் கூட சேர்ந்து உங்க வீட்டுக்கு வரும்போதெல்லாம் இதை நிறைய தடவைப் பார்த்திருக்கேனே..!” என்றவர் மேலே தொடர்ந்தார்.

“தர்மாவுக்கு திருமண வாழ்விலே நாட்டமே இல்லையே என்று நான் ரொம்ப வருத்தப் பட்டிருக்கேன். அப்போதும் அவன் சொல்லுவான், ‘சுந்தரம் எனக்கு என்னன்னே தெரியலை திருமண வாழ்வு பிடிக்கவே இல்லை.. நாளைக்கே எனக்கு ஏதாவது ஆகிட்டா என்னோட காரியம் எல்லாம் நளன் தாண்டா செய்யணும்.. அதே போல எனக்கு வாரிசா அவனைதாண்டா போடணும்’ ன்னு சொல்லிட்டே இருப்பான்.
அவன் இறந்த போது உங்களை ரொம்ப தேடினோம். என்னோட சூழ்நிலை சரியில்லாததால என்னால ஒரு நாளுக்கு மேல உங்களை நான் தேடல. அவனோட இறுதி காரியத்தை நானே செஞ்சுட்டேன். இப்போ இந்த சொத்துக்களையும் உங்க கிட்ட சேர்க்காம போயிட்டா என்னோட மனசாட்சியே என்னைக் கொன்னுடும்.” என்ற சுந்தரத்தின் கண்கள் கலங்கியது.

“அங்கிள் இதுல உங்க தப்பு எதுவுமே இல்லை. ப்ளீஸ் இப்படியெல்லாம் பேசாதீங்க.”

சுந்தரம், “இல்லப்பா நளா, தர்மா அவனுக்குன்னு என் கிட்ட கேட்டது அவனோட இறுதி காரியத்தை நீ வந்து செய்யணும்னு சொன்னது மட்டும் தான்..! என்னால அதை கூட நிறைவேற்ற முடியல.. அந்த குற்ற உணர்ச்சியே என்னை கொன்னுட்டு இருக்கு.. இந்த சொத்துக்களை உன் கிட்ட ஒப்படைச்சுட்டா நிம்மதியா இந்த ஊரை விட்டு புறப்படுவோம்.” என்று அவனைப் பார்த்து கை கூப்பினார்.

அதுவரை இவர்கள் பேசுவதையே கவனித்திருந்த விசாலாட்சி, “என்னங்கண்ணே சொல்றீங்க? இந்த ஊரை விட்டு போறீங்களா, எதுக்குண்ணே?” என்றவர் மனதினுள் ‘நான் மனசுல வேற நினைச்சேனே அதெல்லாம் நல்லபடியா நடக்கணுமே கடவுளே!’ என்று வேண்டிக்கொண்டார்.

சுந்தரம் கை கூப்பியவுடனேயே அவரின் கைகளைப் பிரித்து விட்டு ‘வேண்டாம்’ என்பது போல தலையை ஆட்டினான் நளன்.

“அங்கிள் எனக்கு இதைப் பற்றி யோசிக்க எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க ப்ளீஸ்.. அதுவரை இந்தப் பத்திரத்தை நீங்களே வைத்திருங்கள்.” என்ற நளனை முறைத்துப் பார்த்தார் விசாலாட்சி.

சுந்தரம் ஊரை விட்டு செல்கிறேன் என்று சொன்னதுமே மிகுந்த பதட்டத்துடன் கேள்வி கேட்டு விட்டு, சுந்தரத்தின் பதிலுக்காக ஆவலாக காத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், குறுக்கே வந்து நளன் பேசியது விசாலாட்சியின் கோபத்தை தூண்டி அவனை முறைக்க வைத்தது.

பத்திரத்தை கையில் வாங்காமல் இருந்த சுந்தரத்தின் கைகளைப் பிடித்து, அதில் பத்திரத்தை வைத்தான். “அங்கிள் ப்ளீஸ் ஒரு ஒன் வீக் டைம் கொடுங்க.. இதைப் பற்றி பேசலாம். நீங்க ஏன் இந்த ஊரை விட்டு போகணும்? அதைப் பற்றி மட்டுமே இப்போ பேசலாம். ப்ளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டான்ட் அங்கிள்.”

‘சரி’ என்பது போல் தலையை ஆட்டிய சுந்தரம், “நாங்க சென்னைக்கு போகலாம்ன்னு இருக்கோம்..! நம்ம ‘சுந்தரதர்மா’ வை சென்னையிலும் தொடங்கலாம் என்று தான் இந்த முடிவு.” என்றார்.

நளன், “இங்க இருக்கிற கடையை யாரு அங்கிள் பார்த்துக்கிறது?.”

“அதை நான் அப்போ அப்போ வந்து பார்த்துப்பேன் நளா. தர்மாவும், நானும் இந்த கடையை ரொம்ப ஆசைப்பட்டு நடத்த ஆரம்பிச்சோம். என்னோட காலம் முடிஞ்சாலும், தமயந்தி இந்த கடையைப் பார்த்துப்பா.. இந்த கடையை விற்காம இருக்க எங்களால எவ்வளவு உழைக்க முடியுமோ அவ்வளவு உழைப்போம். அது கண்டிப்பா கடவுளின் அருளால் கண்டிப்பா நடக்கும்..! இந்த வீட்டை விற்க தான் ஏற்பாடு பண்ணிட்டு இருக்கேன்.!” என்று ஏதேதோ சொல்லிக்கொண்டே போனார் சுந்தரம்.

“நீங்க சென்னையில் கடை திறப்பது நல்ல விஷயம் அங்கிள், ஆனா நீங்க எல்லாம் ஏன் ஊரை விட்டு போகணும்? வீட்டையெல்லாம் எதுக்கு அங்கிள் விற்கறீங்க? இதெல்லாம் கேட்க எங்களுக்கு உரிமையில்லை தான்.. ஆனா, பழகின கொஞ்ச நாட்களிலேயே என் சொந்த தாய்மாமனாகவே உங்களை நினைக்க ஆரம்பிச்சுட்டேன். உங்க மருமகனாக தான் இவையெல்லாம் கேட்கிறேன் அங்கிள்.” என்ற நளனை மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்தார் விசாலாட்சி.

ஏனென்றால், அவருக்கு ‘மருமகன்’ என்ற வார்த்தைக்கு நளன் சற்று அதிகமாகவே அழுத்தம் கொடுத்தது போலிருந்தது.

“என் தர்மாவுக்கு நீ மகன் என்றால், எனக்கு நீ மருமகன் தான் ந ளா.., உனக்கு என்னிடம் நிறையவே உரிமை இருக்கிறது. ஆனால் நீ கேட்ட முதல் கேள்விக்கு இப்போதைக்கு என்னால் விளக்கம் அளிக்க முடியாது. இந்த வீட்டை விற்றால் தான், சென்னையில் தொடங்க இருக்கும் கடைக்கு பாதி பணமாவது கொடுக்க முடியும். நான் இடத்தை வாடகைக்கு எடுக்க நினைக்கவில்லை.. இதுவரை சொந்த இடத்திலேயே புழங்கிவிட்டதால் தானோ, என்னமோ தெரியவில்லை. என்னால் வாடகைக்கு கடை எடுப்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.
நீ இத்தனை நாட்கள் சென்னையில் தான் இருந்திருக்கிறாய், சிட்டியில் சொந்தமாக ஒரிடத்தை வாங்கி அதில் தொழில் ஆரம்பிப்பது சுலபமில்லை என்பதை உனக்கு நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை. மீதி பணத்துக்கு வங்கியில் கடனுக்கும் ஏற்பாடு செய்துவிட்டேன். இன்னும் சில மாதங்களில் அங்கே சென்று விடுவோம்.”

“அங்கிள் நீங்க சொல்கிறது எல்லாமே ஒத்துக்ககூடிய விஷயம் தான்..” என்று சில நொடிகள் யோசித்தவன், “அங்கிள் இப்போ நான் சொல்றதை கேட்டு தப்பா நினைச்சுக்காதீங்க ப்ளீஸ்.!”

“நீ சொல்லுப்பா நளா?”

“அது வந்து அங்கிள்.. இப்போ நீங்க என்கிட்ட கொடுத்த பத்திரத்தில் இருந்த சொத்துக்களை நீங்களே எடுத்துக்கிட்டா இந்த வீட்டை விற்க வேண்டியது இல்லையே! என்னை தப்பா நினைக்காதீங்க..! என்னடா இவன் சொத்துக்களைப் பற்றி பேச ஒரு வாரம் டைம் கேட்டுவிட்டு இப்போ இப்படி மாத்தி பேசறானே என்றும் நினைத்துவிடாதீர்கள்.. இந்த சொத்துக்களை எல்லாம் நீங்களே எடுத்துக் கொண்டால் வங்கி கடனும் கணிசமாக குறைய நிறைய வாய்ப்பிருக்கிறது.. ப்ளீஸ் அங்கிள்.”

“நீ கேட்டதுல தப்பில்லை நளா.. ஆனா எங்களுக்கு அதில் விருப்பம் இல்லை. தர்மா தன் சொத்துக்களை உனக்கும், தமயந்திக்குமாக இரு பங்குகளாக பிரித்து சரி சமமாக தான் எழுதி வைத்தான். தமயந்தி அதை ஏற்க பிரியபடாததால் அந்த சொத்துக்களையும் உன் பேருக்கே மாத்தி எழுதி விட்டாள். இதோ அதன் பத்திரம்.” என்று அந்தப் பத்திரங்களையும் காண்பித்தார் சுந்தரம்.

தமயந்தி பெயரில் இருக்கும் சொத்துக்களை புதிதாக கடை திறக்க பயன்படுத்தலாம் என்று சுந்தரம் நினைத்தபோது, தமயந்தி மறுத்து விட்டாள். தர்மா இறந்ததற்கே அவள் தான் காரணம் என்று உறுதியாக நம்பும் தமயந்தியை ஓரளவிற்கு மேல் சுந்தரத்தால் சமாளிக்க முடியாததால் அவளின் பெயரில் இருக்கும் சொத்துக்களை நளனின் பெயருக்கே மாற்றினார். அதற்காக தன் மனதினுள் நண்பனிடம் மன்னிப்பை யாசிக்கவும் அவர் மறக்கவில்லை.

சில பல விஷயங்களை அவரால் நளனிடம் சொல்ல முடியாததால் பத்திரத்தை காண்பித்ததுடன் மௌனமானார் சுந்தரம்.

“என்ன அங்கிள் இது? உண்மையா சொன்னா இப்போ எனக்கு என்ன பேசறதுன்னே தெரியல! எனக்கு குற்ற உணர்ச்சி தான் அதிகமாகுது.. உங்க கண்களிலே நான் பட்டிருக்கவே கூடாது..” என்று உணர்ச்சியின் வேகத்தில் கூறியவன் மேலும் தொடர்ந்தான்.

“அங்கிள் தர்மா சித்தப்பா எழுதி வைத்திருக்கும் சொத்துக்களை பற்றி பிறகு பேசிக்கலாம்.. ஆனா தமயந்தி என் பெயரில எழுதி வச்சதை உடனடியா அவங்க பெயருக்கே மாத்தணும். உங்க லாயரை நாளைக்கே பார்க்கலாம்.. ரெடியா இருங்க அங்கிள்.. இப்போ நாங்க கிளம்பறோம். ம்மா வாம்மா போகலாம்.”

“கொஞ்சம் இரு நளா. நான் அண்ணன் கிட்ட கொஞ்சம் பேசிட்டு வரேன்.” என்ற விசாலாட்சி, மீனாட்சியின் அருகில் சென்று நின்றுக் கொண்டு, “அண்ணே, இந்த சொத்து சம்பந்தமா நீங்க ரெண்டு பேரும் என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம். அதனால இப்போ சொத்துக்களைப் பற்றின பேச்சை விட்டு விட்டு, சொந்தங்களை பற்றி பேசலாம் என்று நினைக்கிறேன்.” என்றார்.

புரியாத பாவனையுடன் அவரைப் பார்த்தனர் அங்கிருந்த மூவரும்.

“எனக்கு சுத்தி வளைச்சு எல்லாம் பேச தெரியாதுண்ணே, நேரடியாவே கேட்கிறேன்.. உங்க பொண்ண எங்க வீட்டுக்கு மருமகளாக அனுப்பி வைப்பீங்களாண்ணே? நளன் ரொம்ப பொறுப்பான பையன்.. உங்க பொண்ண நாங்க ரெண்டு பேரும் கண்ணுக்குள்ள வச்சு தாங்குவோம்.. நளனுக்கு தமயந்தியை கல்யாணம் செய்து கொடுங்கண்ணே!” என்றார் விசாலாட்சி.

இதை கேட்டு சுந்தரமும், மீனாட்சியும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். மீனாட்சிக்கு கால்கள் வலுவிழந்ததை போல் இருக்கவும் தொப்பென்று கீழேயே விழுந்தார். இதை எதிர்ப் பார்க்காத விசாலாட்சியும் நளனும் வேகமாக அவரின் அருகில் சென்றனர். நளன் அவரை கையில் தூக்கி சோபாவில் உட்கார வைத்தான்.

வாசற்கதவின் பக்கத்தில் யாரோ விழும் சத்தம் கேட்கவும் எல்லோரும் திரும்பி பார்த்தனர். அங்கே தமயந்தி மயங்கி கிடந்தாள்.
 
அன்பு வாசக தோழமைகளே!!!
கதையை தொடர்ந்து படித்து கருத்துக்கள் மற்றும் விருப்பங்களை பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி. உங்கள் கருத்துக்களுக்கு தனி தனியே பதில் அளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன். சில சொந்த வேலையின் காரணமாக என்னால் பதில் தர முடியவில்லை. கூடிய விரைவில் அனைவருக்கும் பதில் தருகிறேன். அதுவரை கதையை தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவும்.
நன்றி
சத்யாஶ்ரீராம்
 
Top