Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன் வசந்தன்-அத்தியாயம் 36

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 36
ரம்யா ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக வளர்ந்தவள்,ஏராளமான சொத்திற்கு ஒரே வாரிசு ,பணத்தால் வாங்கக்கூடிய அனைத்து வசதிவாய்ப்புகளும் அவளுக்கு கிடைத்தது,ஆனால் இவ்வளவு இருந்தும் சிறு வயது முதலே தன்னிடம் இல்லாத விஷயங்களுக்காக ஏங்குவதே அவளது வழக்கமாக இருந்தது.

படிப்பு சரியாக வரவில்லை ,அதனால் நன்றாக படிக்கும் மற்றவர்களைக் கண்டு பொறாமை கொள்வாள்,சிலருக்கு இயற்கையாகவே இருக்கும் புத்தி கூர்மையோ , கண்கவர் அழகோ ,நளினமான உடல்வாகோ தனக்கில்லை என்று நிராசை கொள்வாள்.அவளுக்கு சின்ன வயதிலிருந்தே அருணை பிடிக்கும், பருவவயதை எட்டியதும் அவன் மேல் கொண்ட அன்பு காதலாக மாறியதை உணர்ந்தாள்..இருப்பினும் அவனிடம் சொல்லும் தைரியம் இல்லை, ஒருவேளை மறுத்துவிட்டால்..?அதன் பிறகு அவனை மாற்றவே முடியாது ,அங்கிளே அவனை பிஸ்னஸில் புகுத்த எவ்வளவு முயன்றார் அவன் பிடிவாதமாக இருந்து சாதித்து விட்டானே..

எப்போதும் அவனை கவருவதற்காக அவன் செய்வதை பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ தனக்கும் அது தான் இஷ்டம் என்பது போல காட்டிக்கொண்டு அதையே செய்வது அவள் வழக்கம் ..அவன் படித்த பள்ளியில் தான் படிப்பேன் என்று அடம் பிடித்து படித்தாள் ,பின்னர் பன்னிரெண்டாவது முடித்த பின்னரும் அருண் போல தானும் எஞ்சினியரிங் சேரவேண்டும் என்று விரும்பினாள்,ஆனால் அவள் வாங்கிய சொற்ப மதிப்பெண்ணிற்கு அருண் படிக்கும் கல்லூரியில் இடம் கிடைக்காமல் கடைசியில் அவளது தந்தையின் நண்பர் ஒருவரது கல்லூரியில் பணம் கொடுத்து சீட் வாங்கினார் .

அங்கே சேர்ந்த பிறகுதான் புரிந்தது இன்ஜினியரிங் படிப்பது அவ்வளவு எளிதில்லை என்று ..அதனால் நன்றாக படிக்கும் அபியின் நட்பை நாடினாள்…அவள் மூலமாக அரியர் பேப்பர்ஸையும் க்ளியர் செய்து டிகிரி முடித்தாள்…அதன் பின்னும் அவளுக்கு வேலைக்கு போக வேண்டும் என்ற எண்ணம் இல்லை ,ஆனால் அருண் வேலைக்கு போவதால், தனக்கும் அப்பாவின் தொழிலில் ஆர்வம் இல்லை என்று காட்டிக்கொள்வதற்காக பெயருக்கு ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாள்..
இவை எல்லாம் செய்தும் அருணுக்கு தன் மீது ஈர்ப்பு வராததைக் கண்டு அதற்கு ஒரே ஒரு காரணம் தான் அழகாக இல்லாது தான் காரணம் என்று நினைத்தாள்..அதற்காக பட்டினி கிடந்து உடல் இளைத்து ,பல அழகு சிகிச்சை எல்லாம் எடுத்து சினிமாவில் வரும் கதாநாயகியற்கு சற்றும் குறைவில்லை என்று சொல்லும் அளவிற்கு தன்னைத் தானே வடிவமைத்துக் கொண்டாள்.

அப்போது தான் அவளது கல்யாணம் பற்றிய பேச்சு வீட்டில் எடுத்தார்கள்..அவள் முன்னே பின்னே தெரியாத வீட்டுக்கு மருமகளாக போகவே மாட்டேன் என்று அடம் பிடிக்க ,,அவள் எதிர்பார்த்தபடியே அவளது தந்தை தன் உயிர் நண்பனிடம் தன் மகளின் பிடிவாதத்தை பற்றி கூற, அவரும் ரம்யா சின்ன வயசுல இருந்து நாங்க பார்த்து வளர்ந்த பொண்ணு , அவள் அவர்கள் வீட்டு மருமகளாக வருவது தான் சரியாக இருக்கும் என்று கூறிவிட்டார்.

எப்படியும் தொழிலில் இருவரும் கூட்டாளிகள் இப்போது சம்பந்திகளும் ஆகிவிட்டால் தொழிலும் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் அடுத்த தலைமுறையிலும் தொடரும் என்ற நிம்மதி வேறு..

அருண்தான் என்ன சொல்லுவானோ என்று ரம்யாவிற்கு உள்ளுக்குள் உதைப்பு ,அப்போது தான் அருணின் பிறந்த நாள் பற்றிய பேச்சுவரவே ,அவள் இந்த நிச்சயம் பற்றிய அறிவிப்பை அன்றே சொல்லலாம் அருணுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்று சொல்லிப்பார்த்தாள்.

வியக்கதக்க வகையில் அருணின் பெற்றோருக்கும் அந்த ஏற்பாடு பிடித்துபோனது, பெற்றவர்களுக்குத் தெரியாதா பிள்ளையின் குணம் ?ஒன்றை வேண்டும் என்றாலும் ஓரே பிடிதான் வேண்டாம் என்றாலும் அதே பிடிவாதம் தான் .ரம்யாவை கல்யாணம் செய்ய கேட்டு ஒரு வேளை மறுத்துவிட்டால் அவனை மாற்ற முடியாது, ஆகவேஅவன் எதுவும் மறுத்து கூறமுடியாதபடி பொதுவெளியில் உற்றார் உறவினர் முன் ஒருவித நிர்பந்தத்தில் நிறுத்திக்கேட்டால், அவனால் கட்டாயம் மறுத்துப்பேசமுடியாது என்ற நம்பிக்கையில் அவர்களுக்கும் ரம்யாவின் யோசனை வசதியாகவே இருந்தது.இப்படியாக தன் நெடுநாள் கனவு நனவாகப்போகிறது என்று சந்தோஷமாகவே வளையவந்தாள் ரம்யா.

முதலில் அருணின் நண்பர் வட்டத்தில் அபியை பார்த்த போது ஆச்சரியமாகவும் ஒருவகையில் நிம்மதியாகவும் உணர்ந்தாள்.தன் மனதில் இருப்பதையெல்லாம் பகிர்ந்து கொள்ள ஒரு ஆள் கிடைத்து விட்டது என்று அகமகிழ்ந்துபோனாள்.
தன்னை அலைபவள் என்று நினைத்துக்கொள்ளபோகிறாள் என்ற பயத்தில் ஏதோ எல்லாம் பெரியவர்கள் செய்த ஏற்பாடு என்பது போல் பிம்பத்தை தோற்றுவித்தாள்.
எல்லாம் நல்லபடியாக அவள் எதிர்பார்த்தபடியே நடந்தது.ஆனால் அருண் அபிக்கு மோதிரத்தை விரலில் நுழைத்ததையும் அபி அவனை வைத்த கண்எடுக்காமல் பார்ப்பதையும் பார்க்கும் வரை,அவள் தங்களது நிச்சயதார்த்ததில் நடக்கவேண்டும் என்று கற்பனை செய்து வைத்த காட்சியை கண் முன் பார்ப்பது போல் இருந்தது.அதன் பிறகு இருவரையும் நன்றாக கவனித்துப் பார்த்தாள் ரம்யா…

வெளிப்படையாக தெரியாவிட்டாலும் அருணுக்கும் அபிக்கும் இடையே இருந்த நெருக்கம் இணக்கம் எல்லாம் சற்று கவனித்துப் பார்த்தாள் நன்றாக தெரிந்தது. அந்த பந்தம் எந்த அளவிற்கு உறுதியானது என்று தெரியாவிட்டாலும் இருவருக்குள்ளும் நேசம் இருப்பது புரிந்தது.அபி பார்க்காத போதும் அருண் அவளை பார்க்கின்ற பார்வை ,கண்ணாலேயே பேசி செய்தி கடத்துவது. அபி அருணின் பார்வையிலேயே முகம் சிவப்பது, எல்லாமே ரம்யாவை பொறாமைத்தீயில் பொசுக்கியது..இவனுக்காக்க கஷ்டப்பட்டு நான் இங்கு அழகாகி அதிரூப சுந்தரியாக நிற்கிறேன் இவன் அந்த அபியைத் தவிர உலகத்தில் பெண்களே இல்லாதது போல அவளைவிட்டு பார்வையை நகர்த்தமாட்டேன் என்கிறானே..

இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டது வீணாகிவிடக்கூடாது.. அவர்களுக்குள் உறுதியான நேசம் இருந்திருந்தாள் அபி நான் நிச்சயதார்த்ததைப் பற்றி சொல்லும் போதே அதை தடுத்திருக்கலாமே,அவளுக்கே சிறு தயக்கம் இருக்கப் போய்தானே இப்போதுவரைக்கும் மௌனம் காக்கிறாள்.அருணுக்கு தெரிந்திருந்தால் இந்நேரம் வீட்டில் பிரளயமே வெடித்திருக்கும், அவனுக்கு தெரியவில்லை ,அபி வேறு யாரிடமும் சொல்ல வாய்ப்பும் இல்லை,ஒருவேளை அந்த பைத்தியக்காரி தன்னிடம் செய்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டு அமைதியாக இருக்கிறாளா?அப்படி இருந்தாள் எனக்கு நல்லது தான் .எப்படியோ ஊர் அறிய நிச்சயம் நடந்துவிட்டால் அதன் பிறகு அருணை வளைப்பது எளிது,அதுவரை அபி அவனிடம் உண்மையை சொல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.. என்று முடிவெடுத்தாள் ரம்யா..

அதன் பிறகு நொடிப்பொழுதும் நீங்காமல் அடைக்கும் பறவைப் போல் அபியுடனே சுற்றித்திரிந்தாள். ஒருவழியாக ஷாப்பிங் முடித்து திரும்பி வந்ததும் அபியை தன்னுடைய வீட்டுக்கு கூட்டிச் சென்றாள்..அருணின் வீடும் ரம்யாவின் வீடும் அருகருகே இருந்தது..அருணின் வீடு போலவே அவளதும் பிரம்மாண்டமாக இருந்தது.. அபியை தன் பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு வீட்டை சுற்றிகாட்டுகிறேன் என்று அவளை அழைத்துப்போய் சுற்றிகாட்டினாள்..ஒவ்வொன்றாக காட்டும் போதே எப்படி அந்த பொருட்களை வாங்கினார்கள்,அதனோடான நினைவுகள்..என்று இரு குடும்பமும் எப்படி ஒன்றோடொன்று பின்னிபிணைந்திருக்கிறது ,எவ்வளவு நெருக்கமானவர்கள் என்பதை அழுத்தந்திருத்தமாக பறைசாற்றினாள்..

கூடவே தான் அருணை எவ்வளவு விரும்புகிறேன் ,இந்த கல்யாணம் நடந்தால் இரு குடும்பமும் மகிழ்வார்கள்,ஒருவேளை நடக்கவிட்டால் தொழில்முறை பார்ட்னர்களின் உறவு முறியும், மேலும் சிறுவயது முதல் பழகிய தோழமை பகைமையாக மாறும் ,இப்படியாக இந்த நிச்சயதார்த்தம் நடப்பது இருகுடும்பத்திற்கும் எவ்வளவு முக்கியமானது என்பதை பதியவைத்துக்கொண்டே இருந்தாள்.
ஒருவழியாக ஏற்கனவே குழம்பியிருந்த அபியின் மனதை மேலும் நன்றாக குழப்பி , மாலை பார்ட்டிக்கு தயாராக வேண்டும் என்னும் போது தான் அபியை அருணின் வீட்டுக்கு அனுப்பிவைத்தாள்..

அபியைப் பார்த்தும் பூர்ணா நிம்மதி பெருமூச்செரிந்தாள்..

“அப்பாடா ஒருவழியா வந்தியே,நானே உன்கூட பேச முடியாது போல் ,அட்டை மாதிரி கூடவே ஒட்டிகிட்டு திரியறா..?என்னதான் காலேஜ் ஃப்ரெண்ட்ஸா இருந்தாலும் இதெல்லாம் ஓவர் ..”என்றாள் பூர்ணா எரிச்சலாக..

“விடு பூர்ணா.. ரொம்ப நாள் கழிச்சி பார்க்கறதால அவ அப்படி இருக்கா..மத்தபடி நல்ல பொண்ணு தான்..”என்றாள் அபி

“நீ தான் மெச்சிக்கணும்..எனக்கு அவளை பிடிக்கலை “என்று பூர்ணா அலட்சியமாக தோளைக் குலுக்கிவிட்டு ,தாங்கள் வாங்கி வந்த ஷாப்பிங் பைகளில் தேடி ஒன்றை எடுத்து அபியிடம் கொடுத்தாள்.

“என்ன இது ?”என்றாள் அபி

“உனக்கு கிஃப்டு, அருண் குடுக்க சொன்னான்..உனக்காக வெயிட் பண்ணிபார்த்துட்டு இப்ப தான் போறான்....” என்றாள் பூர்ணா.

பையின் உள்ளே அழகாக கிஃப்ட் பாக்கிங்க் செய்யப் பட்டஒரு அட்டைப்பெட்டி இருந்தது.

மேலே “என் இதயம் கவர்ந்த இனியவளுக்கு”என்று எழுதியிருந்தது.
எட்டி பார்த்த பூர்ணா..

“பார்றா கவிதைஎல்லாம் பின்னுது?”என்று நகைத்தாள்

“போ பூர்ணா.கிண்டல் பண்ணாத..”என்று முகம் சிவந்தாள் அபி..

“சரி பிரிச்சி பாரு என்ன இருக்குன்னுபார்க்கலாம்..” என்றாள் ஆர்வமாக

“ஹே இது சம்திங் பர்சனல் நீ என்ன பார்க்குற போ ..”என்று விரட்டினாள் அபி

“இந்த டகால்டி வேலையெல்லாம் வேணாம் எதுவா இருந்தாலும் என் கண்ணு முன்னாடியே பிரி..” என்றாள் பூர்ணா கராராக..

அபி பெட்டியை திறந்து பார்த்தால் அதில் அழகான வெள்ளைநிற புடவை ,உடல் முழுவதும் தங்க ஜரி இழைகள் கொடியாக ஓட, பலவண்ண கற்கள் ஆங்கங்கே பதிக்கப்பட்டு கண்ணைப்பறித்து..அபி மென்மையாக புடவையை கையில் வருடும் போது ,

புடவையின் கூடவே ஒரு சிறு வாழ்த்து அட்டை இருந்தது .. “ இந்த புடவையில் காட்சிதந்தால் என் கண்கள் பாக்கியம் பெறும்”என்ற குறிப்புடன் ..

பூர்ணாபார்த்துவிட்டு ..”ம்ம்ம் நாட் பேட்..உன் ஆளு ரசனையானவன் தான் ..” என்றாள்.

அபி ஏதோ யோசனையில் ஆழ்ந்திருக்க

“அபி உங்கிட்ட ஒன்னு கேட்கலாமா?”என்றாள் பூர்ணா

“என்ன கேள்வி இது ,பூர்ணா..?நீ என்ன வேணா கேட்கலாம் ..”என்றாள் தன் சிந்தனையிலிருந்து விடுபட்டு..

“நீ நல்லா தானே இருக்க ?”

“ஏன் இப்படி கேக்குற பூர்ணா?”

“இல்லை நேத்துல இருந்து உன் முகமே சரியா இல்லை?என்ன பிரச்சனை அபி,என் கிட்ட சொல்லாம் இல்லையா..?”என்றாள் அக்கறையாக

“அப்படிலாம் ஒன்னும் இல்லை பூர்ணா, உனக்கு ஏன் அப்படி தோனுது?”

“எனக்கு தோனலை,அருணுக்கு தான் அப்படி தோனியிருக்கு ,அவன் தான் உங்கிட்ட கேட்க சொன்னான் ..உனக்கு என்ன பிரச்சனைனாலும் எங்கிட்ட சொல்லலைனா கூட பரவாயில்ல அருண் கிட்டயாவது சொல்லு ..”என்றாள் பூர்ணா.

அபிக்கு சட்டென்று கண்கலங்கிவிட்டது இத்தனை அன்பு என்மேல் ஏன் வைத்தாய் அருண்? பூர்ணா சொல்லுவதும் சரிதானே அருணிடம் சொல்லிவிட்டால் அவன் எல்லாம் பார்த்துக்கொள்வான் ..அவனது பெற்றோரிடம் புரியும் வித்தில் சொல்லி இந்த நிச்சய ஏற்பாட்டை நிறுத்திவிடுவான் ..”என்று முடிவெடுத்தபின்னர் தான் கொஞ்சம் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது.
.
அபி அருண் பரிசளித்த புடவையை கட்டிக்கொண்டு கண்ணாடி முன் அலங்காரமெல்லாம் முடிந்து கடைசியாக கண்களுக்கு மையிட்டு கொண்டிருந்தாள்..

“மை போடாமலேயே மயங்கி போய் தான் இருக்கோம் ..இதுல மை வேற போட்டா எங்க நிலமை என்ன ஆகுறது?” என்று கேட்டபடி அருண் வந்து பின்புறமாக நின்றான்.

“ஹூக்கும்ம்..”என்று தொண்டையை செருமிக்கொனடு பூர்ணா..”ஹல்லோ நாங்களும் இங்க தான் இருக்கோம்” என்றாள்.

முகத்தில் ஆச்சரியத்தைக்காட்டி..”அப்படியா?நான் இருக்க சொல்லலியே?ஏன் அபி நீ சொன்னியா?”என்று அபியைப் பார்த்து வினவ..

பூர்ணா சிரித்துக்கொண்டே.. “இதுக்குமேல இங்க இருந்தா எனக்கு மரியாதை இல்லை நான் கிளம்புறேன்..” என்று எழுந்து வெளியே சென்றாள் பூர்ணா..

அருண் அபியைப் பார்த்தான் அவளும் கண்ணாடிவழியாக பின்னால் தெரிந்த அவனது உருவத்தைதான் பார்த்துக்கொண்டிருந்தாள்.அருண் விழிகளிலேயே அவளது அழகைப் பருகியபடி இன்னும் நெருங்கி நின்று
“அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது..” என்றான் ..

அருண் வெள்ளை நிற சூட் டில் வலிமையும் யௌவமும் உருவெடுத்த அர்ஜனனாய் இருந்தான் ,இருவரது உடையும் ஓரே நிறத்தில் ஒன்றுக்கொன்று பொருத்தமாக அமைந்திருக்க கண்ணாடி பிரதிபலித்த பிம்பத்தில் ,தேக்குமரத்தில் படரும் கொடியை போல பொருத்தமாக இருந்தனர். கண்ணாடியில் அவள் மீது நிலைத்த அவன் பார்வை தீவிரமடைந்ததைக் கண்டு அபியின் நெஞ்சுதடதடக்க தொடங்கியது.
பின்னாலிருந்து திருடனைப்போல் கள்ளத்தனமாக ஒரு கரம் நீண்டு அவளது வெற்று இடையில் பதிந்து மெதுவாக ஊர்ந்து சென்று வயிற்றில் பதிந்து அவன் புறமாய் இழுத்து அணைத்தது.

அவன் கைப்பட்ட இடம் தீயாய் தகிக்க அபியின் மூச்சு நின்று போனது அதன் மேலும் அவன் கைகள் விஷம சேட்டைகள் செய்யும் முன்னர் சட்டென்று திரும்பி அவனை அணைத்து தோளில் சாய்ந்து கொண்டாள்.வேடனிடமே தஞ்சம் புகும் மான் குட்டிப் போல்..

பின்னால் தாராளமாக கண்ணுக்கு விருந்தாகிய அவளுடைய முதுகு அவனை மேலும் வதைத்து
“நீ என்னை என்ன பண்ணிட்டு இருக்கேன்னு தெரியுமா?”என்றான் அருண் அவள் அருகாமையில் ஹார்மோன்கள் ஹார்மோனியம் வாசிக்க

அபிக்கு அப்படியே இருந்துவிடலாம் போல இருந்த து..எந்த கவலையும் இல்லாமல் அருணின் தோள்களில் சாந்திருக்கும் சுகம் ஒன்றே போதும் என்று நினைத்தாள்.

“இப்ப நீ எதுக்கு இங்க வந்த ?”

“என்னோட பர்த்டே ப்ரசென்ட் இன்னும் வரலைன்னு நியாபகப்படுத்த தான் வந்தேன்..”

“அதை சொல்ல தான் வந்தியா?”

“ஆமா..”

“சரி அதான் சொல்லிட்டல கிளம்பு ..”

“எங்க கிளம்பறது நீ விட்டாதானே..” என்று இன்னும் அவள் அவனைவிடாமல் அணைத்திருப்பதை சுட்டிக்காட்டி

“விட முடியாது போ..” என்று இன்னும் இறுக்கி அணைத்தாள்.

“இந்த விளையாட்டுக்கூட நல்லா இருக்கே..” என்று சிரித்தான் அருண்

அபி சீரியஸான குரலில் “அருண் நான் உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் “

“சொல்லு..”

“இது கொஞ்சம் சீரியஸ்..”

“ம்ம்..”

“அது வந்து”

“எப்பவோ வந்தாச்சு சொல்லு..”

“இந்த டை உன் ஷர்ட்க்கு மேட்ச்சாவே இல்லை..”என்று உளறினாள்..

அருண் பொய்க்கோபத்துடன்.. “விடு நான் கோபமா கிளம்பறேன் ..” என்றான் ..விரைந்து அவனைத்தடுத்து

“சாரி சாரி..சொல்றேன் இரு..”என்றாள்.

“அருண் நேத்துல இருந்து ஒரு விஷயத்தை உங்கிட்ட சொல்லமுடியாம தவிக்கறேன்...”

“தெரியும் ..நீயா சொல்லுவேன்னு நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்…”

“அருண் அது வந்து..” என்று அவள் தொடங்கும் வேளையில் அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டவே இருவரும் அவசரமாக விலகி நின்றனர்…

கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த ரம்யா..இருவரும் நண்பர்கள் என்பற்கும் மேலாக கூறுமளவிற்கு நெருக்கத்தில் நிற்பதைக் கண்டு உள்ளம் கொதித்தாள்..இருப்பினும் வெளியில் எதையும் காட்டிக்கொள்ளாமல்..

“சாரி கதவை தட்டாம வந்துட்டேன்...ஏதோ முக்கியமா பேசிட்டு இருந்தீங்க போல..” என்றவளின் குரலில் ஏளனம் தொனித்ததோ அபி விலுக்கென்று முகம் நிமிர்த்தி அவளைப் பார்த்தாள்..ரம்யாவின் முகத்தில் ஒருகணம் தோன்றி மறைந்த குரோதம் அடுத்த கணம் கண்டதே காட்சிப்பிழை என்பது போல் அவள் முகம் சாதாரணமாக காட்சியளித்தது.

அங்கு நிலவிய ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலையை முதலில் கலைக்க எண்ணி அருண் முதலில் பேசினான்

“என்ன ரம்யா நீ இங்க ?” என்றான் முயன்று வரவழைத்த சாதாரணகுரலில்

“அதை நான் கேட்கனும் .. நீ இங்க என்ன பண்ற?அங்க உன்னை காணோம்ன்னு அங்கிள் தேடுறாரு போ..” என்று விரட்டாத குறையாக அருணை அனுப்பி வைத்தாள்..

அவன் சென்றதும் அபியிடம் திரும்பி "என்ன வரக்கூடாத நேரத்துலவந்துடேனா? என்றாள் ஒரு மாதிரியான குரலில் .. “ரம்யாவின் குரல் குற்றம் சாட்டுகிறதா?என்று திகைத்து நோக்கும் போது அவள் முகம் எந்தவித உணர்சியும் காட்டாமல் இருந்தது..

“அப்படிலாம் ஒன்னும் இல்லை நானும் அருணும்..” என்றவளை இடைமறித்து..

“போதும் அபி ,உன்னை பத்தியும் அருண் பத்தியும் எனக்கு எதுவும் கேட்க வேணாம் ..இனிக்கு எங்களோட நாள்..நானும் அருணும் இந்த உலகத்துக்கு முன்னாடி முறைப்படி நிச்சயம் பண்ணிக்கபோறோம் ..எங்க பக்கதுல்லலாம் நிச்சயம் நடந்தாலே பாதி கல்யாணம் ஆன மாதிரி ,இன்னிக்கே அருண் என்னுடையவன் ஆக போகிறான்..”என்று வார்த்தைகளில் அபியை அமில மழையில் நனைத்துவிட்டு தன்னுடைய ஹை ஹீல்ஸ் டக் டக் கென்று ஒலியெழுப்ப மிடுக்காக நடந்து சென்றாள்..

அவள் கூறிய வார்த்தைகள் காதில் மீண்டும் மீண்டும் எதிரொலிக்க,அப்போதுதான் அபிக்கு தான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்பது உறைத்தது..

ரம்யா எப்படி எடுத்துக்கொள்வாள்…?அருண் அப்பாவை எப்படி எதிர்த்துபேசுவான்..? என்று ஏதேதோ நினைத்து ,கடைசியில் எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டாள் என்பது புரிந்தது ,அதுவும் அருண் எனக்கு உண்மை தெரிந்தும் அவனிடம் கூறாமல் மறைத்தேன் என்று அறியும் போது எப்படி என்னை மன்னிப்பான்..?ரம்யாவின் பேச்சும் போக்கும் கண்ணிமைக்கும் நேரத்தில் மாறித்தெரிகிறதே…ஏதோ பெரிய தவறு நடக்கப் போவதாக உள்ளுணர்வு சொல்ல..

எப்படியாவது அருணிடம் கூறிவிடவேண்டும் என்று அருணின் மொபைலுக்கு முயன்றால் அது பக்கத்தில் ஒலிஎழுப்பியது அருண் மறந்து மொபைலை அங்கேயே விட்டுச் சென்றிருந்தான் ..

பதற்றம் அதிகரிக்க ..அபி விழா நடக்கும் இடத்திற்கு விரைந்தாள்..அவர்கள் வீட்டு தோட்டத்தில் தான் மேடை அமைத்து பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவள் சென்ற போது விருந்தினர்கள் பலர் வந்திருந்தனர்.. செல்லும் வழி எங்கும் ஆடி, பென்ஸ், பீஎம்டபள்யூ கார்கள் அணிவகுத்து நிற்க…நகரத்தின் பெரும்புள்ளிகள் பலரும் வந்திருப்பதற்கு அறிகுறியாக ஆங்காங்கே சீருடையில் பாதுகாப்பு பணியாளர்கள் இருந்தனர்..

டீஜே மேற்கத்திய இசையை ஒலிக்க விட காலையிலிருந்த அமைதிக்கு நேர்விரோதமாக அந்த இடமே பரபரப்பும் ஆர்ப்பாட்டமுமாக மாறி இருந்தது.. இவ்வளவு பேருக்கு மத்தியில் அருணைக் கண்டுபிடிப்பதே பெரும்பாடாய் இருக்கும் போல..என்று தவித்தாள் அபி.. அவசரமாக கூட்டத்தை கண்களால் அலசும் போதே
உறவினர் நண்பர்கள் மட்டுமல்லாமல், தொழில் முறை பழக்கத்தினர் ,வி ஐ பி கள் என்று பல உயர்மட்ட மக்கள் இருந்தை காண முடிந்தது..

இது இத்தனைப் பெரிய விமரிசையான விழாவாக இருக்கும் என்று அருண் சொல்லாவே இல்லையே.ஏதோ சிறிய அளவில் நண்பர்கள் மற்றும் உறவுகள் மட்டும் கூடும் நிகழ்ச்சி என்று தானே கூறி இருந்தான் ..?

நகரும் ஒவ்வொரு நொடியும் இதயத்துடிப்பு பன்மடங்காக எகிற அபி அவசரமாக அருணைத் தேடினாள்…ஒருவழியாக அவனை அவள் கண்டுபிடித்தபோது அவன் மேடையில் சிரித்த முகமாக அவனது அப்பாவுடன் நின்றிருந்தான்..

அப்போது அருணுமே ஒருவித குழப்பத்தில் தான் இருந்தான்,வெறும் பிறந்த நாள் பார்ட்டி இவ்வளவு விமரிசையாக நடத்தவேண்டுமா?
வந்திருக்கும் விருந்தினர்களைப் பார்த்தால் வெறும் பிறந்தநாள் கொண்டாடுபவர்கள் போல தெரியவில்லையே..அதுவும் அமைச்சர் ,காவல் துறையில் உயர்அதிகாரி ..மேலும் பல பிரபலங்கள்..அவனுக்கு ஏதோ சரியாக படவில்லை..மனதிற்குள் பலவிதமான சந்தேகங்கள் எழுந்து குழப்பியபோதும் வெளியே முகம் மாறாமல் காத்தான்..
அப்பா ராஜாராம் மைக்கில் பேசி, வந்திருந்த விருந்தினர்களை முறையாக வரவேற்றார்.

“இது என்னோட பையன் ,மை ஃப்ரெண்ட்,மை ப்ரைட் அருண் ,இப்பதான் அவனை கையில வாங்கின மாதிரி இருக்கு ,அதுக்குள்ள வளர்ந்து பெரியவனா நிக்குறான் ..இருபத்தஞ்சி வருஷம் ஆச்சு ..இந்த விழாவ இன்னும் சிறப்பாக்க நான் ஒரு முக்கியமான அறிவிப்பு வச்சிருக்கேன் ..அது அருணுக்கே தெரியாது…எங்களோட சர்ப்ரைஸ் கிஃப்ட்…

இந்த காலத்துல எத்தனை பிள்ளைகள் அப்பா அம்மா பார்க்கற பொண்ணையே கட்டிக்கறேன்னு சொல்லுவாங்க..எங்க அருண் அப்படி சொல்லி,அவனுக்கு பொண்ணுபார்க்கற பொறுப்ப எங்க தலையில கட்டிட்டான்..ஆனா சின்ன வயசுல இருந்து அவனுக்கு ஒவ்வொண்ணும் பார்த்து பார்த்து பெஸ்ட்டா பண்ண நாங்க அவனுக்கு லைஃப் பார்ட்னரா வரப்போற பொண்ண எவ்வளவு பெஸ்டா செலெக்ட் பண்ணி இருப்போம்..?

அருணுக்கும் எங்க குடும்பத்துக்கும் எல்லாவிதத்துலையும் பொருத்தமான பொண்ணா நாங்க தேர்ந்தெடுத்திருக்கறது ரம்யா .. என் பார்ட்னர் உயிர் நண்பன் திவாகரோட ஓரே பொண்ணு ..இப்ப நாங்க சம்பந்தியும் ஆகப் போறோம்…

இந்த நல்ல நாள்ல உங்க எல்லாரோட ஆசீர்வாதத்தோட இப்ப இவங்களுக்கு எங்கேஜ்மென்ட் நடக்கப் போகுது..என்று அறிவித்தும் கூட்டத்தில் பலத்த கரகோஷமும் ஆரவாரமும் எழுந்தது.

“ரம்யா மேல வாம்மா..” என்று அவர் அழைக்க ரம்யா எளிழாக நடந்து மேடை ஏறினாள்..

அருணுக்கு நடப்பது எதுவும் ஒன்றுமே புரியவில்லை.அப்பா அவனிடம் விளையாடுகிறார் என்றே அவனுக்கு நினைக்கத்தோன்றியது..ஆனாள் ரம்யாவை மேடைக்கு அழைத்து அவன் கையில் ஒரு மோதிரப்பெட்டியைத் திணித்தபோது தான் அவனுக்கு தன்னை அப்பா திட்டமிட்டு பொறியில் சிக்க வைத்திருக்கிறார் என்பது புரிந்தது..

ஆனால் இவ்வளவு பெரிய முடிவை அவனுக்கு தெரியாமல், தெரிவிக்காமல் எப்படி எடுக்க முடியும்?அதுவும் இப்படி ஒரு இடியை தலையில் இறக்கும் போது அவனுக்கு எப்படி இருக்கும் என்று கூட யோசிக்காமல்..

அவன் செய்வதறியாது திகைத்து நிற்கையில் அவனது அப்பா ,
லேசாக அவன் தோளைத் தொட்டு ..”ரம்யா வெயிட் பண்றா பாரு ரிங்க்க அவ கைல போட்டுவிடு ..”என்றார்.

திடுக்கிட்ட அருண் ,ரம்யா நாணப் புன்னகையுடன் அவன் மோதிரம் அணிவிப்பதற்காக காத்திருப்பதைக் கண்டான்.

கையிலிருந்த மோதிரம் காலையில் ரம்யா வாங்கியது ..
எல்லாரும் சேர்ந்து என்னை முட்டாளாக்கியிருக்கிறார்கள்..

சட்டென விழி உயர்த்தி கூட்டத்தில் அபியை தேடினான் ..
அங்கே அபி மயங்கி சரிய பூர்ணா அவளைத் தாங்கிப்பிடித்துக் கொண்டிருந்தாள்.
தொடரும் ..
 
Last edited:
ஹார்ட் பீட் எகிறிடுச்சு...அடுத்த எப்பி சீக்கிரம் தந்திடுங்க ப்ளீஸ்
 
Top