Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீயின்றி வாழ்வேனோ 4

Advertisement

Admin

Admin
Member

பகுதி – 4


ரிஷி கோபமாக வீட்டிற்குள் நுழைந்த போது... அங்கே ஜோஷியரை அழைத்து அவரிடம் திருமணதிற்கு நாள் குறித்துக்கொண்டு இருந்தனர். அவன் வந்தது தெரிந்தும் தெரியாதது போலவே அவன் பெற்றோர் இருந்தனர்.

ரிஷி அமைதியாக நின்று அவர்களைப் பார்த்துக் கொண்டு இருந்தான். ஜோஷியர் கிளம்பியதும்தான் அவனைப் பார்ப்பது போல் “வா ரிஷி எப்ப வந்த?” என ஜோதி இலகுவாகக் கேட்க....

“இப்ப அது ரொம்ப முக்கியமா.... இங்க என்ன நடக்குது?” என்றான் ரிஷி கோபமாக...

“உனக்கும் உன் தங்கச்சிக்கும் கல்யாணம் ஏற்பாடு நடக்குது. இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு.... உங்க ரெண்டு பேர் கல்யாணமும் நல்லபடியா நடந்து முடிஞ்சிட்டா.... எங்களோட கடமையும் முடிஞ்சிடும்.”

“உங்க கடமை முடிஞ்சா போதும், என் விருப்பம் முக்கியம் இல்லை... அப்படித்தான....”

இதுவரை தாய் மகன் இருவரும் பேசுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ராஜ்மோகன் இப்போது தன் மகனின் கேள்விக்குப் பத்தி அளித்தார்.

“உன் விருப்பத்தைக் கேட்கிற நிலமையில நீ எங்களை வச்சிருக்கியா என்ன? உன்னையும் அந்தப் பெண்ணையும் சேர்த்து வச்சு பேப்பர்ல வந்த பின்னாடி நாங்க என்ன பண்றது? கட்சில வேற ஒரே தொந்தரவு....”

“அப்பா, இதெல்லாம் ஒரு காரணமா சொல்லாதீங்க. நீங்க நினைச்சா இந்தக் கல்யாணத்தை வேண்டாம்னு சொல்லி இருக்க முடியும்.”

“கண்டிப்பா முடியும்தான். ஆனா நான் ஏன் அப்படிச் செய்யணும்? எனக்கு அந்தச் சாதனா பொண்ணைப் பிடிச்சிருக்கு... நல்ல பொண்ணு, டாக்டர் வேற... குடும்பமும் நல்ல குடும்பம்.”


“என் வீட்டுக்கு வர்ற மருமகள் எப்படி இருக்கனும்னு ஆசைபட்டேனோ அப்படி இருக்கிறப்போ... நான் எதுக்கு வெளிய பெண் தேடி அலையணும்.”

“உங்களை யாரு எனக்குப் பொண்ணு தேடி அலைய சொன்னா....”

“யாரு சொல்லணும்? எங்க பையனுக்குப் பொண்ணு பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்க எங்களுக்கு உரிமை இல்லையா....” ஜோதி கேட்க....

“உங்களைப் பத்தி மட்டும் யோசிக்றீங்க. என்னைப் பத்தி யோசிக்க மாட்டீங்களா.... எனக்கும் ஒரு விருப்பம் இருக்கும் இல்லையா....” என்ற தன் மகனை பார்த்த ராஜ்மோகன் “அப்ப உனக்குச் சாதனாவை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லைன்னு சொல்றியா...” என்றார்.

“என்னப்பா எதுவும் தெரியாது போலக் கேட்கறீங்க? நான் வேற ஒரு பொண்ணை விரும்புறது உங்களுக்குத் தெரியாது.” ரிஷி தன் தந்தையைப் பார்த்து கேட்க....

“தெரியாது... நீ எப்பவாவது என்கிட்டே அதைச் சொல்லி இருக்கியா என்ன?” என ராஜ்மோகன் திருப்பிக் கேள்வி கேட்க.... ரிஷி மௌனமானான்.

ஆம் அவர் சொல்வது உண்மை தான். அவன் நேகாவை விரும்புவதைப் பற்றி யாரிடமும் சொன்னது இல்லை....

சிறிது நேரம் எதோ யோசனையில் இருந்தவன் “அப்பா, நான் நேகவை விரும்புறேன். கல்யாணம் பண்ணா அவளைத்தான் பண்ணுவேன்.” என்றான் உறுதியாக.

“யாரு அந்த நடிகையவா.... உனக்கு ஏன் டா புத்தி இப்படிப் போகுது?” ஜோதி மகனை திட்ட....

“ஏன் அவளுக்கு என்ன?” ரிஷி அலட்சியமாகக் கேட்க....

“அவளுக்கு ஒன்னும் இல்லை அவ நல்லாதான் இருக்கா.... ஆனா என் குடும்பத்துக்கு அவ வேண்டாம். அவ்வளவு தான்.” என்றார் ஜோதி உறுதியாக.

“ஏன் அவ சினிமாவுல நடிக்கிறதுனாலா.... சினிமாவுல நடிச்சா இப்ப என்ன மா?”

“எனக்கு உன் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல தெரியாது ரிஷி. ஆனா அந்தப் பொண்ணு நம்ம குடும்பத்துக்கு ஒத்து வரும்னு தோணலை....”

“நான் தானே கல்யாணம் பண்ணிக்கப் போறேன். அப்ப எனக்குப் பிடிச்சா போதாதா....”

“கல்யாணம் என்ன ஒருநாள் விஷயமா.... அதுக்குப் பிறகு தான் மனுஷனோட முக்கால்வாசி வாழ்க்கையே இருக்கு.... அப்படி வாழ்க்கை முழுக்கக் கூட வரப்போற முக்கியமான உறவை உனக்குதான் சரியா தேர்ந்து எடுக்கத் தெரியலை.... அதுக்காக நாங்களும் அப்படியே விட்டுட முடியுமா....”

“அப்ப நேகாவை நான் விரும்புறேன்னு தெரிஞ்சுதான் நீங்க எனக்கு வேற பொண்ணு பார்த்து இருக்கீங்க.”

ரிஷி அவர்களைப் பார்த்துக் குற்றம் சாட்டுவது போல் பேசிவைக்க.... அது ஜோதியின் கோபத்தை மேலும் அதிகமாக்கியது.

“இங்க பாருடா... உனக்குதான் கேள்வி கேட்க தெரியும்னு நினைச்சு பேசாத..... பதிலுக்கு நான் கேள்வி கேட்டா நீ தாங்க மாட்ட...”

“சாதனாவை ஒன்னும் நாங்களா தேடி போகலை... நீ தான் இழுத்து விட்ட.... நல்ல பொண்ணா இருந்தா.... அதனால பேசி முடிச்சிட்டோம்.”

“சரி என்னை விடுங்க.... ப்ரீதாவை எதுக்கு வெற்றிக்குக் கல்யாணம் பண்றீங்க?”

“அது அவங்க வீட்ல கேட்டாங்க. எங்களுக்கும் பிடிச்சிருந்தது அதனால சரின்னுட்டோம்.”

ரிஷி மேற்கொண்டு எதுவும் பேசாமல் தன் அறைக்குச் சென்றுவிட.... ஜோதி திரும்பி தன் கணவரை பார்க்க.... அவர் ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து சென்றார்.

நேகா இப்போது படப்பிடிப்புக்கு மும்பை சென்றிருப்பதால்... ரிஷி அவளைப் பார்க்க அங்கேயே சென்றான். நேகா வடமாநிலப் பெண். பார்க்க அழகான மெழுகு பொம்மை போல் இருப்பாள். அவளுக்கு இன்னும் சரியாகத் தமிழ் பேச வராது. அதனால் அதிகம் ஆங்கிலம் கலந்தே பேசுவாள்.

“நானே உங்களைப் பார்க்க வரணும்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள நீங்களே வந்துடீங்க. என்ன ரிஷி நடக்குது? பேப்பர்ல வந்த நியூஸ் உண்மையா....”

“ஆமாம்.”

“என்ன இவ்வளவு கூலா சொல்றீங்க?”

“ம்ம்... வேற என்ன பண்ண சொல்ற? அதுக்காக மாத்தியா சொல்ல முடியும்.”

“இப்ப என்ன பண்றது ரிஷி?”

“ஒன்னும் பண்ண முடியாது. நீ வா... இப்பவே நாம கல்யாணம் பண்ணிக்கலாம். வேற வழி இல்லை....”

இவர்கள் இருவரும் பேசுவதில் ஒருகாதை வைத்துக்கொண்டு தள்ளி அமர்ந்திருந்த நேகாவின் அம்மா தன் மகளைத் தனியே அழைத்தார்.

இருவரும் சிறிது நேரம் எதோ ஹிந்தியில் பேசிக்கொண்டார்கள். மெதுவாகப் பேசியதால் ரிஷிக்கு கேட்கவில்லை.... அதோடு அவன் அவர்களைக் கவனிக்கும் மன நிலையிலும் இல்லை.

“ரிஷி, இப்ப தான் எனக்கு ஹிந்தி படத்துல நடிக்கச் சான்ஸ் வந்திருக்கு... நான் இப்ப போய்க் கல்யாணம் பண்ணிகிட்டா அதுவும் போய்டும்.”

“உங்களுக்கே தெரியும் எனக்கு ஹிந்தி படத்துல நடிக்கணும்னு ரொம்ப ஆசை. எவ்வளவு பேர், புகழ் கிடைக்கும்.” நேகா கண்கள் மின்ன பேச.... ரிஷி அவளை வெறுப்புடன் பார்த்தான்.

“பேர், புகழ் மட்டுமா... பணமும் நிறையக் கிடைக்குமே... அதை மட்டும் ஏன் விட்டுட்ட....”

“உங்ககிட்ட இல்லாத பணமா ரிஷி.... பணம் மட்டும் முக்கியமா இருந்தா... நான் இப்பவே உங்களைக் கல்யாணம் பண்ணிட்டு வந்திருப்பேன்.”

“உலகம் முழுக்கு என் பேர் புகழ் அடைய நான் ஹிந்தி படத்துல நடிச்சாதான் முடியும். அதுக்கு இப்ப எனக்கு ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கு. அதைப் போய் விட்டுட்டு வர சொல்றீங்களா....”

“நீ இப்பவே பெரிய நடிகை தான் நேகா....”

“எனக்கு இது போதாது ரிஷி....”

“பணம் புகழை பத்தி தான் பேசுற.... என்னைப் பத்தி யோசிக்கலை....”

“நீங்க மட்டும் என்னவாம்? நான் ரொம்ப அழகா இருக்கேன். அதனால தான என் பின்னால சுத்துனீங்க. ஆளுக்கு ஒரு தேவை.”

“நீ நடிக்கிறதுக்கு நான் என்னைக்கும் தடை சொன்னதே இல்லை.... ஆனா இப்ப என் வீட்ல எனக்கு வேற பொண்ணு பார்த்துட்டாங்க. நிலைமைய புரிஞ்சிக்கோ நேகா....”

“நீங்களும் என்னைப் புரிஞ்சிக்கோங்க ரிஷி. என்னால இப்ப நடிப்பை விட்டுட்டு உங்களைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது. நீங்க உங்க வீட்ல பேசுங்க. நாம இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சுக் கல்யாணம் பண்ணிக்கலாம்.”

“எனக்கு அடுத்த மாசம் கல்யாணம். நீ என்னவோ அஞ்சு வருஷம் வெயிட் பண்ண சொல்ற....”

“வெயிட் பண்ண முடியாதுன்னா... நீங்க வீட்ல பார்த்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோங்க ரிஷி, எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை....”

“எப்படி நேகா என்னை இவ்வளவு ஈஸியா தூக்கி போட்டுட்ட?”

“இதுக்கு நான் காரணம் இல்லை.... உங்க வீட்டு ஆளுங்க தான்.” என்ற நேகா அங்கிருந்து உள்ளே சென்று விட.... ரிஷி அதற்கு மேல் அவளிடம் தொங்க பிடிக்காமல் உடனே கிளம்பிவிட்டான்.

அவன் கார் கிளம்பி சென்றதை ஜன்னல் வழியாகப் பார்த்த நேகாவின் அம்மா “ஹப்பா... போய்ட்டான். நானே இவனை எப்படிக் கழட்டி விடுறதுன்னு நினைச்சேன்.” என்றார்.

“பாவம் மா ரிஷி. என்னை உண்மையாதான் லவ் பண்ணான். நானே எத்தனை முறை அவனை நெருங்கி இருக்கேன். ஆனா கல்யாணத்துக்கு அப்புறம்னு கண்ணியமா விலகிடுவான்.”

“தெரியும், நல்ல பையன்னு தெரிஞ்சதுனாலதான் பழகவிட்டேன். இவனோட காதலின்னு கிசுகிசு பரவினதுனால தான் உன்னை வேற எவனும் தொந்தரவு பண்ணாம இருந்தான். இல்லைனா நீ நடிக்க வந்த புதுசுல.... ஒவ்வொருத்தனும் நம்மை எப்படி அவங்க தேவைக்கு வளச்சாங்க.”

“அதை என்னால இப்பவும் மறக்க முடியாது மா.... ஒன்னு பெத்தவங்க பெரிய ஸ்டாரா இருக்கணும்... இல்லைனா நிறையப் பணம் இருக்கணும். எந்தப் பின்பலமும் இல்லாம நம்மை மாதிரி வரவங்களை... முழுங்கி ஏப்பம் விட இங்க நிறைய முதலைங்க காத்திருக்கு....”

“நம்ம அதிர்ஷ்ட்டம் நீ ரிஷி கண்ணுல பட்டது. அவன் உன்னோட பேசி பழகுறதை பார்த்து தான மத்தவனுங்க விலகினாங்க.”

“நான் படம் எல்லாம் நடிச்சு முடிச்ச பிறகு ரிஷியோட கல்யாணம் பண்ணிட்டுச் செட்டில் ஆகணும்னு நினைச்சேன்.” இதைச் சொல்லும் போது... நேகாவின் குரலில் இருந்த ஏக்கம், அவள் அம்மாவுக்குப் புரியாமல் இல்லை....

“நேகா, நீ எல்லோரையும் போலக் கல்யாணம் பண்ணிட்டு சாதாரண வாழ்க்கை வாழ பிறக்கலை..... உன்னோட பேரும் புகழும் இந்த உலகம் முழுக்கத் தெரியனும். உன்னை எல்லோரும் எப்பவும் பிரமிப்பா பார்க்கணும்.”

“இதெல்லாம் ஒரு காலத்தில என்னோட கனவா இருந்தது. ஆனா என்னால இந்தச் சினிமா உலகத்தில சாதிக்க முடியலை.... நீயாவது சாதிச்சு காமி.... வீணா மனசுல வேற எந்த நினைப்புக்கும் இடம் கொடுக்காத....”

“நீ ரிஷியோட பழகினது உன்னோட பாதுகாப்புக்காகத் தான். அதை எப்பவும் மனசுல வச்சுக்கோ....இனி இதே மாதிரி வேற ஒருத்தனை தேடி பிடிக்கணும். ரிஷியோட செல்வாக்கு தென் இந்தியா வரை தான். இனி வட இந்தியாவுக்கு ஒருத்தனை பிடிக்கணும்.” என்றபடி அவள் அம்மா சென்றுவிட.... நேகா ரிஷியை பற்றியே யோசித்துக்கொண்டு இருந்தாள்.

நம்மை விரும்புபவரை திருமணம் செய்யவும் ஒரு அதிர்ஷ்ட்டம் வேண்டும். அவள் நடிகையாக வேண்டும் என்றுதான் சின்ன வயதில் இருந்தே சொல்லி வளர்க்கப்பட்டாள்.

நடிகை ஆக வேண்டும் என்பது அவள் அம்மாவின் கனவு. அதை நிறைவேற்றுவதாகச் சொல்லி ஒருவன் அவளுக்குப் பிள்ளையைக் கொடுத்துவிட்டு ஓடிவிட..... தன்னால் சாதிக்க முடியாததைத் தன் மகளை வைத்து சாதிக்க முயன்றார் நேகாவின் அம்மா.

சின்ன வயதில் இருந்தே நேகா நடிகையாக வேண்டும் என்று வளர்க்கபட்டாள். வசதி இல்லை என்றாலும் அவள் அம்மா அவளுக்குச் சத்தான ஆகாரம் கொடுத்து, அவள் உடல் அழகை பேணி பாதுகாத்தார். அதோடு எல்லா வகை நடனங்களும் அவளுக்குக் கற்றுத் தரப்பட்டது.

இப்படித் தனக்காகவே பாடுபட்ட அம்மாவின் பேச்சை மீறி ரிஷியை திருமணம் செய்து கொண்டு செல்வது நேகாவால் முடியாதது. அவளுக்குமே சினிமாவில் பெரிய நட்சத்திரம் ஆக வேண்டும் என்ற கனவு இருக்கிறது.

ரிஷியை ஆரம்பத்தில் அவள் காதலிப்பது போல் நடிக்கத்தான் செய்தாள். ஆனால் ரிஷி அவளுடன் பழகிய விதத்தில் அவளுக்கு அவனை மிகவும் பிடித்து விட்டது. அதனால் அவனைத் திருமணம் செய்து, அவனோட சேர்ந்து வாழவேண்டும் என்று ஆசைப்பட்டது உண்மைதான். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அவன் திருமணம் செய்யக் கேட்பான் என்று எதிர்பார்க்கவில்லை....

இப்படி ஒரு இக்கட்டான நிலையில் அவனைக் கொண்டு வந்து நிறுத்திய சாதனா மீது அவளுக்கு நிறையவே கோபம் வந்தது. இவளுடைய கோபம் சாதனாவை பாதிக்குமா....

மதுரை திரும்பிய ரிஷி நேராக அவன் வீட்டிற்குச் செல்லாமல் அவனுடைய பாட்டி அமிர்தாவை தேடி சென்றான். அவர் அவனுடைய தந்தையைப் பெற்றவர். கிராமத்தில் பெரிய வீட்டில் தனியாக வசிக்கிறார்.

ரிஷி என்றால் அமிர்தாவிற்கு உயிர். அவன் என்ன சொன்னாலும் கேட்பார். அவரிடம் சென்ற ரிஷி தனக்கு வீட்டில் விருப்பம் இல்லாத திருமணம் செய்ய நினைப்பதாக வத்திவைக்க.... அமிர்தா அவனை அழைத்துக்கொண்டு உடனே தன் மகனிடம் சண்டை போட கிளம்பிவிட்டார்.

“ஏன் டா அவன்தான் இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்றான் இல்ல.... பிறகு ஏன் அவனை வற்புறுத்துற?”

“அம்மா, அவனுக்கு நீங்க பரிஞ்சிட்டு பேசாதீங்க. அவன் யாரை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறான் தெரியுமா.... அந்த நடிகை நேகாவை. அந்தப் பொண்ணு நம்ம குடும்பத்துக்கு ஒத்து வருமா...”

“நாம நம்ம வீட்டுப் பொம்பளைங்களை நாலு பேரு வர்ற இடத்துக்குக் கூடக் கூடிட்டு போக மாட்டோம். ஆனா அந்தப் பொண்ணு எவ்வளவு பேர் பார்க்க சினிமாவுல நடிக்குது.”

“நான் அந்தப் பொண்ணைத் தப்பு சொல்லலை... நடிக்கிறது அதோட விருப்பம். ஆனா நம்ம குடும்பத்துக்கு அதெல்லாம் ஒத்துவராது. நீங்களே உங்க பேரனுக்குச் சொல்லி புரியவைங்க.” என்ற ராஜ்மோகன் வெளியே சென்றுவிட....

மகன் சொல்வதில் இருந்த நியாயம் புரிந்தாலும். பேரனை விட்டுக்கொடுக்க முடியாமல்... அதோடு மருமகளை வம்பிழுக்க ஆசைப்பட்ட அமிர்தா....

“ஏன் நடிகையா இருந்தா என்னவாம்? அவங்க நடிச்ச படம் மட்டும் வாயத் தொறந்திட்டுப் பார்க்கிறோம். நம்ம வீட்டுக்கு மருமகளா வந்தா ஆகாதா....” என்றதும், இதுவரை மாமியாரிடம் அடங்கியே போகும் ஜோதிக்குக் கோபம் வந்துவிட்டது.

“அப்படி நினைக்கிறவங்க உங்க மகனுக்கும் எதாவது நடிகையைப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சிருக்க வேண்டியது தான.... நீங்க மட்டும் உங்க மகனுக்கு அடக்க ஒடுக்கமா பொண்ணு பார்த்தீங்க.”

“இப்ப நாங்க மட்டும் எங்க மகனுக்குப் பொண்ணு பார்க்கும் போது.... தாராளமா இருக்கனுமாக்கும். நல்ல விவரம் தான்.” என்று தாடையைத் தோளில் இடித்தபடி ஜோதி உள்ளே சென்றுவிட....

“உங்க அம்மாவுக்கு மாமியார் ஆகபோறோனதும் திமிரு வந்துடுச்சு டா...” என்றபடி அமிர்தா பேரனை சோகமாகப் பார்த்தார்.

அன்று இரவு தன் தந்தை வந்ததும், ரிஷி மீண்டும் பேச்சை ஆரம்பித்தான்.

“அப்பா, ரெண்டு கட்சியும் சேர உங்களுக்கு ஒரு கல்யாணம் நடக்கணும் அவ்வளவு தான.... வெற்றிக்கும் ப்ரீதவுக்கும் மட்டும் கல்யாணம் பண்ணுங்க என்னை விட்டுடுங்க.”

“என்னைப் பத்தி ரொம்ப உயர்வா நினைச்சு வச்சிருக்க ரிஷி. நான் அந்தக் காரணத்துக்காக மட்டும் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கலை... அந்தப் பெண்ணை நீ கல்யாணம் பண்ணிகிட்டா சந்தோஷமா இருப்பேன்னு தோனுச்சு....அதனால தான் சம்மதிச்சேன்.”

“இனி உன் விருப்பம். நான் உன்னை வற்புறுத்த மாட்டேன். எதுக்கும் ஒரு கொடுப்பினை வேணும்.”

“சந்தானம் வெற்றிகிட்ட இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதமான்னு கூடக் கேட்கலை.... என்கிட்டே தான் முதல்ல கேட்டான். ஆனா அவன் அவங்க அப்பா பேச்சை மறுத்து பேசவேயில்லை.... இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான். பெத்தவங்களை மதிச்சு நடக்கிற பிள்ளைங்க கிடைக்கிறதும் வரம்தான்.”

ராஜ்மோகன் வெற்றியை புகழ்ந்து பேசியதும், ரிஷிக்குக் கொதித்துக் கொண்டு வந்தது.

“அவனுக்கு வேற எவனும் பொண்ணு குடுத்திருக்க மாட்டான். அதனால இருக்கும். அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு அவனைப் பத்தி புகழ்ந்து பேசுறீங்க. சரியான காலிப்பைய....” ரிஷி கடுப்புடன் சொல்ல....

“இங்க பாரு ரிஷி... இதுவரை இருந்தது வேற... இப்ப நிலைமை வேற....நீ நம்ம வீட்டு மாப்பிள்ளையை மரியாதை குறைவா பேசக்கூடாது.” ஜோதி மகனை அதட்ட....

அந்த நொடி ரிஷிக்கு எல்லோரின் மீதும் கட்டுக்கடங்காத ஆத்திரம் வந்தது. தன் விருப்பத்தை மதிக்காத பெற்றோர் மீது.... சந்தானம் மீது.... வெற்றி மீது.... தன் கனவே முக்கியம் என்று நினைத்த நேகா மீது.... இவர்கள் எல்லோரையும் விடச் சாதனா மீது இன்னும் அதிகமாக ஆத்திரம் வந்தது.

அவள் மட்டும் அன்று இரவு வராமல் இருந்திருந்தால்.... இப்படி ஒரு சம்பவமே நடக்க வாய்ப்பு இருந்திருக்காது. அவன் தந்தைக்கும் அவனுக்கு இப்போது திருமணம் செய்யும் எண்ணம் வந்திருக்காது... எல்லாவற்றிற்கும் காரணம் அவள்தான் என நினைத்தான்.

“இருடி உனக்கு இருக்கு.... உன்னையும் உன் அண்ணனையும் ஒரு வழி பண்ணாம விட மாட்டேன்.” என மனதிற்குள் வெஞ்சினம் கொண்டான்.

“என்ன தான் டா உன்னோட முடிவு? சொல்றதை சீக்கிரம் சொல்லு.... நான் மத்தவங்களுக்குப் பதில் சொல்லணும்.” ராஜ்மோகன் கேட்க....

“நான் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறேன்.” என்றான் ரிஷி.
 
Top