Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நெஞ்சுக்குள் நீ அத்தியாயம் 1

Advertisement

parvathi

Active member
Member
என் மனம் கவர்ந்த நாவல் நெஞ்சுக்குள் நீ இன்றிலிருந்து சைட்டில் பதிவு பண்ணுகிறேன் நட்பூக்களே.வழக்கம் போல் ஓய்வில் வாசித்து சைலண்ட் ரீடர்ஸ் எனற பெயரை மெய்ன்டெய்ன் செய்வீர்களா இல்லை கருத்தை பகிர்ந்து கொள்வீர்களா என்று பார்க்கலாம்.என் மீதும் தவறிருக்கிறது.டிஸ்கஷனுக்கு அழைத்த சைட் வாசகர்களுடன் நான் நேரமின்மை காரணமாக கலந்து கொள்ளவில்லை.கருத்து பகிர்ந்த ஒன்றிரண்டு தோழமைகளுக்கும் உடனடியாக ரெஸ்பான்ட் செய்யவில்லை. சாரி ப்ரெண்ட்ஸ்.

NOW HERE WE GO WITH THE FIRST EPISODE.THANK U N WELCOME ALL FOR THE READING JOURNEY 💖🙏🏻


அத்தியாயம் 1

அந்த மருத்துவக் கல்லூரி கலைநிகழ்ச்சிகளும் பரிசளிப்புகளுமாய் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களில் களை கட்டியிருந்தது. மின்னும் முழு நிலவுகளாய் மாணவிகளும் அவர்களைச் சுற்றி கண்சிமிட்டும் நட்சத்திரங்களாய் மாணவர்களும் இந்திரலோகமோ என்று பார்த்தவர்கள் பிரமித்துப் போகும் அளவிற்கு இளமைத் திருவிழா ஒன்று கோலாகலமாய் அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

"சுமி.....தெரியாத்தனமாய் நான் சேலையைக் கட்டிட்டு வந்துட்டேன். பயமாயிருக்குப்பா எந்த நிமிஷம் இடுப்பிலிருந்து விழுந்துடுமோன்ற தவிப்பிலேயே இருக்க வேண்டியிருக்கு சே....சுரிதாரோ ஜீன்ஸோ போட்டுட்டு வந்திருக்கலாம். குறைந்தபட்சம் டென்ஷன் இல்லாமலாவது இருக்கலாம்."

நிவேதா சலித்துக் கொண்டதைக் கேட்டு சுற்றியிருந்த தோழியர் கூட்டம் கலகலத்துச் சிரித்தது.

"ஏய் என் அவஸ்தை உங்களுக்கெல்லாம் சிரிப்பாயிருக்கா?....."நிவேதா சீறினாள்

"ஹய்யோ....நாங்க சிரிச்சது உன்னை நினைச்சு இல்லப்பா. நூற்றியெட்டுப் பின் குத்தி ரொம்ப பாதுகாப்பா சேலை கட்டியிருக்கற நீயே பயப்பட்டா, பின்னே குத்தாமல் லோ ஹிப் கட்டி ரொம்ப தெனாவெட்டா வளைய வர்றாளே நம்ம நிம்மி அவளெல்லாம் என்ன பண்ணுவா சொல்லு? அனேகமா நம்ம காலேஜ் பசங்களுக்கு இன்னிக்கொரு ஃப்ரீ ஷோ காத்திருக்கு."

கார்த்திகா கிண்டலடிக்க, வசந்தி சலித்துக் கொண்டாள்.

"அடி போடி இவளே.....பெரிசா நிம்மியைச் சொல்ல வந்துட்டா. நம்ம பையோகெமிஸ்ட்ரி மேம் சாதனாவைப் பார்த்தியா? ஜாக்கெட்ல எல்லாரும் ஜன்னல் தான் வைப்பாங்க. நம்ம மேம்முக்கு ரொம்ப தாராள மனசு இல்லையா? அதான் வாசலே வெச்சுத் தெச்சிருக்காங்க. பெரிய வாசல்...."

அபிநயத்துடன் வசந்தி சொன்ன அழகில், அத்தனை பேரும் அடக்க மாட்டாமல் சிரிக்க, இந்த கேலி கிண்டல் பிடிக்காமல் மதுரா மட்டும் சற்றே முகம் சுளித்தாள்.

"தப்பு வசந்தி .மாதா பிதா குரு தெய்வத்துக்கு சமானம். அவர்களுக்கு மரியாதை கொடுக்கலேன்னாலும் அவமதிக்காமலாவது இருக்க முயற்சி பண்ணலாமே....."

"எங்கடா அன்னை தெரஸா இன்னும் அறிவுரை சொல்ல ஆரம்பிக்கலையேன்னு பார்த்தேன் ஏய் மது உன் பெயரில் இருக்கும் கிக் உன் குணத்தில் இல்லேடி. பதினெட்டு வயசுன்றது பட்டாம்பூச்சிப் பருவம். ஆனால் நீ என்னடான்னா அத்தை பாட்டி மாதிரி அட்வைஸ் பண்ணிகிட்டும் நூத்துக் கிழவி மாதிரி நொண்டல் சொல்லிகிட்டும் இருக்கே. வயசுக்கேத்த மாதிரிப் பேசுடி ப்ளீஸ்.........."

வசந்தியின் ஆதங்கம் மதுராவை மௌனமாக்கியது.









பதினெட்டு வயசுன்றது பட்டாம்பூச்சிப் பருவம்.......

வாஸ்தவமான வார்த்தைகள் தான்.

ஆனால் எத்தனை பேருக்கு அந்த பட்டாம்பூச்சிப் பருவம் உண்மையிலேயே சிறகுகளை விரித்துப் பறக்க வைத்திருக்கிறது? பறக்க முயற்சி செய்த பருவத்திலேயே சிறகுகள் வெட்டப்பட்டு சீர் குலைந்த பட்டாம்பூச்சிகளை வசந்தி அறிவாளா?

ஏன் மதுராவே அத்தகைய ஒரு பரிதாபமான பட்டாம்பூச்சி தான் என்ற உணமை இங்கே கல்லூரியில் பலருக்குத் தெரியாது. அப்படி அவர்கள் தெரிந்து கொள்ளவும் மதுரா விட்டதில்லை.

அவள் எதிர்காலமே இந்த மருத்துவக் கல்வி தானென்று ஆன பின்னர், அதில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்ததில் இந்த இளம் வயசுக் கிண்டல் கேலி கொண்டாட்டங்களில், மதுராவால் விரும்பிக் கலந்து கொள்ள முடிந்ததேயில்லை.

முதல் வருட ஆரம்பத்தில் போட்டுக் கொண்ட மூடி டைப் என்ற முகமூடியை இன்று வரை மதுரா விலக்க முற்படவில்லை. அந்த முகமூடி அவளுக்கு ஒரு விதத்தில் சௌகரியமாகவும் போய்விட, அனைவரையும் ஒரு இடைவெளியில் நிறுத்தி வைத்துப் பழக முடிந்தது.

இவ்வளவு ஏன்?

அழகான மதுராவின் தோற்றத்தாலும் ஸ்பாவமான புத்திகூர்மையினாலும் இயல்பாய் ஈர்க்கப்பட்ட சக மாணவர்கள் கூட கூட்டுக்குள் நத்தையாய் சுருண்டு கொள்ளும் அவளுடைய ஸ்பாவம் கண்டு இன்று அவளை வெறும் புத்தகப்புழுவாய் பார்த்தார்களே தவிர மற்றபடி எல்லை தாண்டி சீண்டியது இல்லை.

தோல் வெளுப்பாயும், புத்திதெளிவாயும் உள்ள ஒரு பெண் மனசுக்கு மட்டும் கறுப்பு அங்கி போட்டுக் கொண்டு சதா முசுட்டுப் பூனையாயிருந்தால், அவளிடம் ஒரு வாலிபனுக்கு என்ன சுவாரசியம் இருக்க முடியும்?

கலகலப்பான பேச்சில் இருக்கும் இடத்தையே கலங்கடிக்க வேண்டாம் தான். அத்தகைய ஸ்பாவம் ஒரு பெண்ணுக்கு ஆரோக்கியமானதும் அல்ல.

பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சாப் போச்சு என்று மட்டம் தட்டி விடுவார்கள். ஆனால் ஒரு புன்னகைக்குக் கூட பஞ்சமாகிப் போன மதுராவின் இயல்பை சக மாணவிகளால் ஜீரணிக்க முடியவில்லை என்பதும் வாஸ்தவம் தான்.

"ஏய்.....மது சதா படிப்பு பாடம்னு இருக்காமல் கொஞ்சம் நம்மை நாமே ரீசார்ஜ் பண்ணிக்கத் தான்டி இந்த மாதிரி விழாவும் கொண்டாட்டமும். அதைக் கூட அனுபவிக்காமல் நீ இப்படி உம்மணாமூஞ்சியாய் இருந்தால் பார்க்க நல்லாவாயிருக்கு? நீயே சொல்லு...."

கார்த்திகாவின் வாத்சல்யமான ப்ரியத்தில் மதுராவின் முகம் சற்றே மலர்ந்தது.

"ஐ ஆம் சாரி கார்த்தி..."

"ம் இது தான் நல்ல பெண்ணுக்கு அடையாளம். எங்கே எல்லாரும் ஜோரா ஒரு முறை கையைத் தட்டுங்க......."

"எதுக்குப்பா கை தட்டனும்?"

"ம் நம்ம மோனாலிசா சிரிச்சுட்டாளே. அதுக்குத் தான்......"

விழியோரம் துளிர்த்த கண்ணீரை நாசூக்காய் கைகுட்டையால் ஒற்றியபடி, மதுராவும் சிரித்தாள்.

அதற்குப் பின் மறந்தும் கூட புன்னகை தன் முகத்தை விட்டு விலகாதபடி பார்த்துக் கொண்டாள்.

கலைநிகழ்ச்சிகளின் இடையே உடற்கூறியல் பாடத்தில் முதல் மதிப்பெண் எடுத்ததற்காகவும் ஏனைய பாடங்களில் டிஸ்டிங்ஷன் வாங்கியதற்காகவும் மதுரா மேடைக்கு அழைக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்ட பொழுது எழுந்த கைதட்டல் அடங்க வெகு நேரமானது.

பரிசு பெற்றதைக் கொண்டாடும் விதத்தில் விருந்து கேட்ட தோழிகளிட்ம் பிறகொரு நாள் தருவதாகச் சொல்லி சமாளித்து விட்டு, விடுதிக்கு திரும்பிய மதுராவின் மனசு உண்மையிலேயே வெகுவாக மலர்ந்திருந்தது.



இரவு வெகு நேரம் கழித்து தூங்கியதாலோ என்னவோ, மறுநாள் அதிகாலையில் படுக்கையிலிருந்து எழுந்த கொள்ள முடியாமல், சற்று தாமதமாக விழிப்புத் தட்டியது. மதுரா எழுந்தநேரம், அவளறைத் தோழி கார்த்திகா எழுந்து விட்டிருந்தாள்.

பத்துக்கு பத்தடியே இருந்த அந்த சின்னஞ்சிறு அறையின் வலது பக்க மூலையில் இருந்த ஜன்னலின் வழியே உள்ளே நுழைந்த சூரிய வெளிச்சம் சற்றே கண்ணைக் கூச வைக்க, மதுரா பதட்டத்துடன் படிக்கும் மேஜையில் இருந்த கடிகாரத்தில் மணி பார்த்தாள்.

நிமிட முள் ஏழைத் தாண்டி பதினைந்து நிமிடங்கள் கடந்திருந்தது.

அவசரமாய் போர்வையை உதறிவிட்டு எழுந்து நின்றாள் மதுரா.

"ஏய்....கார்த்தி என்னை எழுப்பி விட்டிருக்கக் கூடாதா? மணியாச்சுல்ல?"

"அம்மணி அசந்து தூங்கிட்டிருந்திங்க. தினம் தான் மாய்ஞ்சு மாய்ஞ்சு படிக்கறே. இன்னிக்கு ஒரு நாளாவது நல்லா தூங்கட்டுமேன்னு விட்டேன். தப்பா?"

"நல்லா விட்டே போ.....கொஞ்சம் விட்டா என்னை விட்டுட்டு காலேஜ்க்குக் கூட போயிருப்பே நீ"

"சே சே அப்படியெல்லாம் போயிடுவேனா? இன்னியிலருந்து நமக்கு க்ளினிக்கல்ஸ் ஆரம்பம். ஞாபகம் இருக்கில்லையா? அரக்கப் பரக்க அவசரமா காலேஜ்க்கு ஓடவேண்டாம். காலையில் ஹாஸ்பிட்டல் போய் க்ளினிக்கல்ஸ் முடிச்சுட்டு, மதிய சாப்பாட்டுக்குப் பின் கல்லூரிக்குப் போனால்

போதும்.....இன்னும் நேரமிருக்கு அதனால நிதானமாகவே கிளம்பி வா......"

காலையில் க்ளினிக்கல்ஸில் பலதரப்பட்ட நோயாளிகளைப் பார்த்த அனுபவம் சுவாரசியமாகவே இருந்தது. எண்சாண் உடம்பை மைக்ரோமில்லிமீட்டர் அளவேயுள்ள வைரஸ்கள் ஆட்டிப் படைத்து பலவகை நோய்களை அதற்குப் பரிந்தளிப்பது மனித மூளைக்கு மாபெரும் சவாலாக பிரமிப்பை

அளித்தது.

மதியம் கல்லூரி வகுப்பறையிலும் நோய்களைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்த மதுராவை அவளருகில் அமர்ந்திருந்த கார்த்திகா உசுப்பி எழுப்பினாள்.

"மது......பார்மகாலஜிக்கு புது லெக்சரர் வந்திருக்கார் பார்த்தியா? ஆள் ரொம்ப ஸ்மார்ட்டா கம்பீரமா இருக்கார்."



கார்த்திகாவின் பேச்சில் கலைந்து நிமிர்ந்த மதுரா அனைவருடனும் வணக்கம் சொல்வதற்காக எழுந்து நின்றவள் புது லெக்சர்ரைப் பார்த்து பிரமிப்பில் அப்படியே நின்று விட்டாள்.

அனைவரும் அமர்ந்த பின்னரும் அமராமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மதுராவைப் பார்த்த அந்த இளைஞனின் பார்வையில் சட்டென்று ஒரு பரவசம் பறந்து வந்து அமர்ந்தது.

"மது.......நீயா?"

உதட்டுக்குள்ளேயே இதை உச்சரித்துக் கொண்டான் ராஜிவ் என்ற அந்த இளம் விரிவுரையாளர்.


 
"மது.......நீயா?"


So, so.......ஹீரோ என்ட்ரி கொடுத்தாச்சு......அசத்தலான ஒரு ஆரம்பம்.....💞
 
ஆமாம் .மா. ஏற்கெனவே படிச்சிருக்கிங்களா
இது எந்த வருடம் எழுதிய கதை என்று சொல்ல முடியுமா ஜி 🙏🙏

சாரி...கதை மறந்துடுச்சு... இன்னும் இரண்டு மூனு எபிசோட் படிச்சா ஞாபகத்துக்கு வரும்னு தோணுது 🤔🤔🤔
 
Top