Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நெஞ்சுக்குள் நீ அத்தியாயம் 14

Advertisement

parvathi

Active member
Member
HERE WE GO WITH THE 14TH EPISODE. PLEASE BREAK UR SILENCE N LET ME KNOW UR FEEDBACK FRIENDS. THANK U.





அத்தியாயம் 14



நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்-பெண்ணே

நெற்றிப் பொட்டில் தீயை வைக்கிறாய்

கட்டிக் கொண்டு காதல் செய்கிறாய்- முதுகில்

கட்டெறும்பைப் போல ஊர்கிறாய்

காதல் தானே- இது காதல் தானே

உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால்

நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை

எண்ணம் யாவையும் அழித்து விட்டேன்

இன்னும் பூமுகம் மறக்கவில்லை

காதலிக்காத சிடுமூஞ்சியைக் கூட காதலிக்கத் தூண்டும் அளவிற்கு குழைந்து பாடியிருந்த அந்தப் பாட்டு மதுராவிற்கு மட்டும் எரிச்சலை மூட்டியது.

" ப்ளீஸ் கார்த்தி அந்த சிடியை ஆஃப் பண்றியா?"

கண்களை மூடி பாட்டில் லயித்திருந்த கார்த்திகா வியப்புடன் விழிகளைத் திறந்தாள்.

"ஏய் உனக்கென்ன பைத்தியமா? நல்ல பாட்டை நிறுத்தச் சொல்றே? கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனைன்றது சரியாத் தானிருக்கு. சரியான சாமியார்டி நீ......."

"கழுதை சாமியார்னு இன்னும் என்ன வேணாலும் சொல்லிக்கோ. ஆனால் முதல்ல தயவு செய்து அந்தப் பாட்டை நிறுத்து ப்ளீஸ்..."

காதுகளைப் பொத்திக் கொண்டு மதுரா கத்தவும், வேறு வழியில்லாமல் கார்த்திகா பாட்டை நிறுத்தினாள். எழுந்து வந்து மதுராவின் அருகில் அமர்ந்து அவள் முகத்தை நிமிர்த்தினாள்.



"என்னடி ஆச்சு உனக்கு? நானும் கொஞ்ச நாளாய் கவனிச்சுக்கிட்டு தான் வர்றேன். கூட்டுக்குள்ளே நத்தையாய் மறுபடியும் சுருங்கிட்டே. காயூ வீட்டு விசேஷத்திலிருந்தே நீ சரியாயில்லை. எதையோ பறி கொடுத்த மாதிரி வளைய வர்றே. என்கிட்ட சொல்லலாம்னா சொல்லு"

"ஒண்ணுமில்லே........."

மதுரா கார்த்திகாவின் பார்வையை கவனத்துடன் தவிர்க்க, கார்த்திகாவிற்கு சலிப்புத் தட்டியது

"சே நாலரை வருஷமா ஒரே அறையில் இருக்கோம்னு தான் பேரு. ஆனால் நீ மட்டும் என்னவோ தனித் தீவுல தான் இருக்கே. எப்பத் தான் வெளியே வரப் போறியோ தெரியலே

சரி உன்கிட்டப் பேசி புண்ணியமில்லை. வீணா என் தொண்டை தான் வரளும். நான் டிஃபன் சாப்பிடப் போறேன். வர்றியா இல்லியா?"

"எனக்குப் பசிக்கலே....."

"உன்னைத் திருத்தவே முடியாது....."

கார்த்திகா எழுந்து கோபத்துடன் வெளியேற, அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை மதுராவிற்கு இப்பொழுது பொத்துக் கொண்டு வந்தது.

கார்த்திகாவின் பார்வையும் புத்தியும் கூர்மையானது. அதனால் தான் மதுராவைப் பற்றி சரியாய் கணித்து விட்டாள். உண்மையில் காயத்ரியின் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிறகு தான் மதுரா முன்னிலும் அதிகமாய் கூட்டுக்குள் நத்தையாய் சுருங்கி விட்டாள்.

அன்று தோட்டத்து இருட்டும், தனிமையும், அருகிலிருந்த மதுராவின் அழகும், சூழ்நிலையின் தூண்டுதலுமாய்ச் சேர்ந்து ராஜீவ்வை அத்து மீற வைத்தாலும், சரியான சமயத்தில் சுதாரித்துக் கொண்டாள் மதுரா.

ஆனால் அந்த சுதாரிப்பு அவளுக்கு சாமான்யத்தில் வந்ததா? இல்லையே.

பூவில் தேன் குடித்த வண்டு மயங்கிப் போவதென்னவோ இயற்கை தான். ஆனால் அன்று பூவே வண்டு தேன் குடிக்க வாகாய் வளைந்து கொடுத்ததே.

இன்று நினைத்தாலும் ஆறவே ஆறாத விஷயம் இது தான் மதுராவிற்கு.

ராஜீவ் ஆண்மகன் என்பதால் அவசரப்பட்டான் தான். ஆனால் பெண்ணாய் பிறந்த மதுராவிற்கு பொறுப்பு வேண்டாமா? ஊர் விட்டு ஊர் படிப்பதற்காக வந்தவள், கட்டுப்பாட்டையெல்லாம் காற்றில் பறக்க விட்டு உணர்ச்சிகளின் உத்தரவிற்கு கீழ்ப்படியலாமா?

'எத்தனை வருஷக் காத்திருப்பு மது? என் மேல் இரக்கமே இல்லையா? 'என்று பரிதாபமாய் கெஞ்சியே பாதி காரியத்தைச் சாதித்துக் கொண்டானே. மோகத் தீயில் மூழ்கித் தவித்தவன் அவன் மட்டும் தானா? காதல் வேட்கையில் அவன் மட்டுமா கரையைத் தாண்டத் துடித்தான்? அவளும் தானே?

. இன்னும் வெட்கத்தை விட்டு உண்மையைச் சொன்னால் ராஜீவ்வின் தாபத்திறகுக் கொஞ்சமும் குறையாததாய் தானே அவளுடைய உணர்வுகளும் இருந்தன. அவனுடைய அணைப்பிற்குத் தோதாய் வளைந்து கொடுத்து பிரமாதமாய் ஒத்துழைத்த அவளுடைய உடல்மொழியின் பரிபாஷை மதுராவிற்கு இன்று வரை புரிபடவில்லை.

இன்னும் கொஞ்ச நேரம் அந்த மயக்க நிலை நீடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

ராஜீவ்வின் காதல் வேட்கை மூட்டிய மோகத்தீயில் எரிந்து கரைந்து போயிருப்பாளே

பயத்தில் இன்று நினைத்துப் பார்த்தாலும் மதுராவிற்கு உடல் சிலிர்த்தது.

தூரத்தில் கேட்ட ஆளரவமும் பேச்சுச் சத்தமும் கேட்டு மதுரா மயக்கத்திலிருந்து விடுபட்டவளாய் அவன் அணைப்பை உதறி தன்னை விடுவித்துக் கொண்டதால் அன்று தப்பித்தாள். இல்லை என்றால்?

மதுராவின் நாசி ஒரு நீண்ட பெருமூச்சில் விடைத்துக் கொண்டது.

ஆனால் ராஜீவ்வின் அணைப்பைத் தான் அவளால் உதற முடிந்ததே தவிர, இன்று வரை அவன் நினைப்பை மனதிலிருந்து உதற முடியவில்லையே.

முன்னைப் போல் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. பாலும் கசந்ததடி படுக்கை நொந்ததடி என்று புராண காலத்துப் பெண்கள் பசலை நோயில் துடித்தது போல் மதுரா வெளிப்படையாக துடிக்கவில்லையே தவிர, மற்றபடி ராஜீவ்வின் அண்மைக்காக அவளுடைய உடலின் ஒவ்வொரு நரம்பும் துடித்துக் கொண்டிருப்பது தானே உண்மை.

ருசி கண்ட பூனையாய் அவன் கரங்களின் அணைப்பிற்கு அவள் உள்ளூர ஏங்கிக்கொண்டிருப்பது தானே நிஜம்.

இறுதிப் பரீட்சை இன்னும் சில தினங்களில் வர இருக்க, கல்லூரி மொத்தமும் அவள் யூனிவர்சிட்டி ரேங்க் எடுத்து, கோல்ட் மெடல் வாங்க வேண்டும் என்று பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருக்க, அவளானால் காதலனின் கையணைப்பிற்கு ஏங்கிக் கொண்டிருந்தால், காரியம் ஆகுமா?

படிக்கும் காலத்தில் காதல் கத்தரிக்காய் என்று கவனத்தை சிதற விடுவது எவ்வளவு பெரிய தப்பு என்று இப்பொழுது தானே தெரிகிறது?

'கடவுளே! என் லட்சியப் படிப்பை சிறப்புட்ன முடிக்க உதவி செய். வேண்டாத எண்ணங்களை என் மனதிலிருந்து நீக்கி விட்டு, ஒரு முகமாய் நான் படிப்பில் கவனம் செலுத்த நீ தான் அருள் புரிய வேண்டும்...'

அவள் பிரார்த்தனை ஆண்டவனின் காதுகளுக்கு எட்டியதோ இல்லையோ, அப்பொழுது தான் அறைக்குள் நுழைந்த கார்த்திகாவின் காதுகளில் விழுந்தது.

"என்னடி ரேங்க் ஸ்டூடன்ட் நீயே சராசரிப் பொண்ணுங்க மாதிரி ஆண்டவனுக்கு அப்ளிகேஷன் போட ஆரம்பிச்சுட்டே. பரீட்சை பயம் உனக்கும் வந்தாச்சா?"

"கார்த்தி எதாவது ஒரு கோயிலுக்குப் போய்ட்டு வரலாமா? மனசு அமைதிக்காக ப்ளீஸ் வரமாட்டேன்னு சொல்லிடாதே....."

சின்னக் குரலில் கெஞ்சியவளை ஆச்சரியமாய் பார்த்தாள் கார்த்திகா.



அன்று கோவிலில் அதிகம் கூட்டமில்லை. கருவறையில் வீற்றிருந்த ஈசனும் அம்மையும் தெயவீகப் புன்னகையுடன் அருள் புரிந்த கோலத்தின் அழகில் மதுரா மெய் மறந்து போனாள்.

மனம் லேசாகிக் காற்றில் பறப்பது போல் ஒரு உணர்வு. இந்த அமைதிக்காகத் தானே அவள் கோவிலுக்கு வர ஆசைப்பட்டாள்

மதுராவின் முகத் தெளிவு பார்த்து கார்த்திகா கிண்டலடித்தாள்.

"என்னம்மிணி, யுனிவர்சிட்டி ரேங்குக்கு சாமி உத்தரவாதம் கொடுத்துட்டாரா? என்ன லஞ்சம் கொடுக்கறதா ஒத்துகிட்டிருக்கே?"

"எல்லாம் விளையாட்டாய் போச்சுடி உனக்கு. சாமி காரியத்தில் கூடவா கேலி பேசுவே? நாம நல்லாப் படிக்கறதுக்கு வேணா சாமி உதவி பண்ணுவாரே தவிர பரீட்சை பேப்பரைத் திருத்த சாமி வர மாட்டார். "

பிரகாரத்தைச் சுற்றி வந்து மண்டபத்தில் காற்றாட அமர்ந்திருந்தபொழுது, யாரை மறப்பதற்காக மதுரா கோவிலுக்கு வந்தாளோ, அந்த ராஜீவ்வே உள்ளே நுழைந்தான். அருகில் அவன் அம்மா லலிதா.

அவர்களிருவரும் அவளை கவனிக்கவில்லை. நேராய் சன்னதிக்குள் நுழைந்தார்கள்.

"ஏய் மது.....அது நம்ம ராஜீவ் சார் இல்லே? பக்கத்தில் இருப்பது தான் அவர் அம்மாவா? வாவ் ! இந்த வயசிலும் எவ்வளவு அழகாய் இருக்காங்க பாரேன். வர்றியா போய் அறிமுகப்படுத்திக்கலாம்......."

"வேணாம் அந்த மாமி கையில் அர்ச்சனைக் கூடை இருக்கு பார். அவங்க அர்ச்சனை பண்ணிட்டு வெளியே வரட்டும். அப்புறம் போய் பார். இப்போ தொந்தரவு செய்யாதே."

"எல்லாம் சரி தான் ஆனால் அதென்ன என்னை மட்டும் போய் பாருன்றே? நீ அவங்களைப் பார்க்க வரப் போறதில்லையா?"

மதுரா பதிலே சொல்லவில்லை. உள்ளே குருக்கள் அர்ச்சனை யார் பெயருக்கு என்று விவரம் கேட்டுக் கொண்டிருந்தார்.

"மதுரா.......திருவோண நட்சத்திரம் மகர ராசி சிவ கோத்திரம்"

லலிதா மாமி விவரம் சொன்னது வெளியே மதுராவிற்கும் கார்த்திகாவிற்கும் துல்லியமாய் கேட்டது

'கடவுளே! மகனை மகளை ஏன் கணவரைக் கூட விடுத்து மாமி ஏன் அவள் பெயரைச் சொல்ல வேண்டும்?'

மதுராவே ஒன்றும் புரியாமல் குழம்பிப் போனாள் என்றால் கார்த்திகாவைப் பற்றி என்ன சொல்ல?

"சாரோட தங்கை பேரு கூட வித்யான்னு தானே நம்ம காயூ சொன்னா. மதுரான்னு உன் பேரில் வேறு யாரும் அவங்க குடும்பத்தில் இருக்காங்களா என்ன?"

"பொண்ணுக்கு கல்யாணம் முடியறதுக்காக வேண்டுதலாம்மா?"

உள்ளே அர்ச்சகர் அன்புடன் விசாரிக்க லலிதா புன்னகைத்தாள்.

"அப்படியும் வெச்சுக்கலாம் சாமி. ஆனால் இப்போ இவ பெரிய பரீட்சை எழுதப் போறா. அதில் யுனிவர்சிட்டி ரேங்க் எடுத்து சிறப்பா தேர்ச்சி பெறனும்னு வேண்டுதல். இந்த அம்மன் சக்தி வாய்ந்தவள்னு சொன்னாங்க. அதான் வேண்டிக்கலாம்னு வந்தோம். "

"திருவோணம் பெருமாள் நட்சத்திரமில்லையோ? சீரும் சிறப்புமாய் பாஸ் பண்ணுவா உங்க பொண்ணு. கவலையே படாதிங்க. கேட்ட வரம் தர்ற கர்ப்பகாம்பிகை இவள். உங்க வேண்டுதலை நிச்சயமாய் நிறைவேற்றுவாள்."

அம்மாவும் பிள்ளையுமாய் விழிகளை மூடி மானசீகமாய் அம்மனிடம் வேண்டுவதை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர் கார்த்திகாவும் மதுராவும். விழிகளில் கரை கட்டிய கண்ணீரைத் துடைக்கவும் மறந்தவளாய் மதுரா தன்னையே மறந்து அமர்ந்திருந்தாள்
 
Top