Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நெஞ்சுக்குள் நீ அத்தியாயம் 4

Advertisement

parvathi

Active member
Member
HERE WE GO WITH THE 4TH EPISODE. PLEASE LIKE COMMENT N SHARE UR THOUGTS.THANKS TO ALL READERS FOR UR GENUINE SUPPORT.





.அத்தியாயம் 4


மதுரா தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டாள்.

அருகிலிருந்த கட்டிலில் படுத்திருந்த கார்த்திகாவோ மார்பில் விரித்திருந்த

மைக்ரோபயாலஜி புத்தகத்துடன் அப்படியே தூக்கத்தில் ஆழ்ந்து விட்டாள். என்ன முயன்றும் தூக்கம் மதுராவை நெருங்குவேனா என்றது.

'படிப்பு, மருத்துவப் பணியின் மூலம் மக்கள் சேவை என்று ஒருவாறாக மதுரா தன் மனதை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் மீண்டும் அவள் வாழ்க்கையில் சலனத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த ராஜீவ் ஏன் வரவேண்டும்?'

ராஜீவின் வார்த்தைகள் மதுராவை சித்ரவதை செய்தது. நெருங்கி வர முயற்சி செய்தவனை தூரத்திலேயே நிறுத்தி வைக்கும் முனைப்போடு அவள் தன் ஸ்பாவத்திற்கு மாறாக கடினம் காட்ட, அது பூமராங்காக திருப்பி அவளையே தாக்கி விட்டது.

'மனசைக் கூறு போடுவதிலும் நீ மகா வல்லவள் என்று உன் சினேகிதிக்குத் தெரியுமா மது?'

ராஜீவின் வார்த்தைகள் இன்னும் அவளைத் தூங்கவிடாமல் சித்ரவதை செய்தன.

'கடவுளே! விதி அவள் வாழ்க்கையைக் கூறு போட்டது போதாதா? ஆதார சுருதியாய் ஆதரவாய் அவள் பற்றிக் கொண்ட கல்வியைக் கூட கவனத்துடன் படிக்க விடாமல், ஊழ்வினை வந்து உறுத்தும் அளவிற்கு அவள் செய்த பாவம் தானென்ன?'

மெதுவான அழுகையில் தலையணை நனைந்த பொழுது, நல்லவேளை கார்த்திகா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். இல்லையென்றால் இந்நேரத்திற்கு அழும் மதுவை அவள் விவரம் கேட்டு உலுக்கி எடுத்திருப்பாள்.

எவ்வளவு முயற்சி செய்தாலும் விழிகள் இரண்டும் தூக்கத்தில் பொருந்த மறுத்தன. மூடிய விழிகளின் ஊடே ராஜீவ் தான் கனகம்பீரமாய் உலாவினான்.

அந்த நட்டநடுநிசியிலும் செல்லமாய் சிணுங்கிய செல்லை எடுத்து திரையில் பார்வையைப் பதித்தாள். வனிதா என்ற பெயரைப் பார்த்தவுடன் மனம் பதைத்தாள்.

'அர்த்தராத்திரியில் தங்கை அவளை செல்லில் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் என்ன? ஒருவேளை அப்பாவிற்கோ இல்லை அம்மாவிற்கோ உடம்பிற்கு எதாவது சீரியசாய்........கடவுளே!'

பதட்டம் மாறாமலேயே பட்டனை அழுத்தி "ஹலோ" சொன்னவளை எதிர்முனையில் வனிதாவின் "இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மது" என்ற உற்சாகமான குரல் வரவேற்றது..

"கடவுளே ஒரு நிமிஷம் கலங்கடிச்சுட்டயேடி வனி. பிறந்த நாள் வாழ்த்து சொல்ல நல்ல நேரம் பார்த்தே போ........நான் கூட அப்பா அம்மாவுக்குத் தான் ஏதோ ஆயிடுச்சோன்னு ரொம்ப பயந்து போயிட்டேன் தெரியுமா? வயசாச்சே தவிர இன்னும் விளையாட்டுத்தனம் போகலேடி வனி உனக்கு......."

"முதல் வாழ்த்து என்னுடையதாயிருக்கனும்னு எவ்வளவு ஆசையா நடு இரவு வரை முழிச்சிருந்து சரியாய் பன்னிரண்டு மணிக்கு உனக்கு போன் பண்ணினேன் தெரியுமா? நீயானால் எரிஞ்சு விழறே........ம் நல்லதுக்கு காலமில்லேன்னு சும்மாவா பெரியவங்க சொன்னாங்க..."

"அதற்கில்லே வனி......அர்த்தராத்திரியில் போன்னாலே கொஞ்சம் பயமாயிருக்காதா?"

தங்கையின் ஆதங்கத்திற்கு தமக்கை சமாதானம் சொன்னாள்.

"பயம் தானே? இருக்கும் இருக்கும் உனக்குத் தான் பயம்னாலே வெல்லக்கட்டியாச்சே. ஏங்க்கா நீ எதுக்குத் தான் பயப்படலே? சொல்லு. அம்மா அப்பான்னு பயந்து பயந்து உன் வாழ்க்கையையே பாழாக்கிண்டது பத்தாதா? இன்னும் வேற எதுக்கு பயப்படறே?"

"ஐயோ நான் ஏற்கெனவே நொந்து போயிருக்கேன். நீ வேற என்னைக் கொல்லாதே வனி...."

" ஏன் மது என்னாச்சு? படிப்பெல்லாம் நல்லாத் தானே போயிட்டிருக்கு. நேற்றுக் கூட உன் கல்லூரியிலிருந்து ஏதோ. கடிதம் வந்ததே. நீ அனாடமியில் முதல் மாணவியாய் தேறியிருப்பதாகவும் ஏனைய பாடங்களில் டிஸ்டிங்ஷன் எடுத்திருப்பதாகவும், நம்மப்பா தெரு முழுக்க முரசு கொட்டாத குறையாய் இப்பல்லாம் உன்னைப் பற்றி தான் சதா முழங்கிண்டே இருக்கார். இன்னும் பிட் நோட்டீஸ் தான் அடிக்கலே........அதுக்குப் பைசா இல்லே செலவு பண்ணனும்?"

தங்கையின் நக்கலில் மதுராவினுள் வருத்தம் படர்ந்தது.

வனிதா எப்பொழுதுமே இப்படித்தான். தனக்கு சரியென்று படுவதை தயவு தாட்சண்யம் பார்க்காமல் எதிராளியின் முகத்துக்கெதிரிலேயே அடித்துச் சொல்லிவிடுவாள். அதிலும் வீட்டில் அவளுக்கும் அப்பாவிற்கும் ஏழாம் பொருத்தம் தான். அப்பா எதையாவது செய்யக் கூடாது என்று சொன்னால்

வனிதா அதைச் செய்து விட்டு தான் மறுவேலை பார்ப்பாள். மதுவின் வாழ்க்கையில் ராகவன் எடுத்த முடிவுகளால் அதிகம் கோபத்தில் இருப்பவள் வனிதா தான்.

"என்னக்கா பேச்சையே காணும்? தூங்கிட்டியா?"

'தூக்கமா? என்றைக்கு ராஜீவ் கல்லூரிக்கு வந்தானோ அன்றே அவளுடைய தூக்கத்தையும் பறித்துக் கொண்டு விட்டானென்பது வனிதாவுக்குத் தெரியுமா? ராஜீவின் விஷயம் தெரிந்தால் வனிதா என்ன சொல்வாள்? அடுத்த அத்தியாயம் ஆரம்பமா என்று கேலி செய்யக் கூடும்.'

வாஸ்தவத்தில் மதுரா தங்கையிடம் எதையும் மறைத்ததில்லை. அவர்களிருவருக்கும் ஓரிரு ஆண்டுகளே இடைவெளி என்பதால் சகோதரிகளிடையே அன்னியோன்யமான நட்பும் நெருக்கமும் அதிகமிருந்தது.

இவ்வளவு ஏன்? சரியாய் மூன்று வருடங்களுக்கு முன் ராஜீவ்_ மதுரா காதலுக்குப் பிள்ளையார் சுழி போட்டவளே இந்த வனிதா தானே?

அதனால் இவளிடம் சொல்வதில் தப்பில்லை, என்ற தீர்மானத்திற்கு வந்த மதுரா மெதுவாக ஆரம்பித்தாள்.

"வனி.......அவர் மறுபடியும் வந்திருக்கார்......"

"அவர்ன்னா........என்னக்கா நீ புதிர் போடற நேரமா இது? நடு ராத்திரியில் அவர் சுவர்ன்னா எனக்கென்ன தெரியும்? விடுதியறைக்குள்ளே இந்நேரத்திற்கு யார் வரமுடியும்? கனவு எதுவும் கண்டுட்டு உளர்றியா?"

"கடவுளே படுத்தாதடி வனி.....ராஜீவ் எங்க கல்லூரிக்கு லெக்சரரா வந்து ஜாய்ன் பண்ணியிருக்கார்.."

மறுமுனையில் ஒரு நிமிடம் பேச்சேயில்லை. அடுத்துப் பேசிய வனிதாவின் குரலில் உற்சாகம் கொப்பளித்தது.

"கடவுளுக்கு கண்ணில்லேன்னு இத்தனை நாளா நான் கோபப்பட்டது அவருக்குத் தெரிஞ்சிடுச்சோ என்னவோ? அதான் ரோஷப்பட்டு ஆண்டவனாப் பார்த்து ராஜீவை உன் காலேஜ்க்கு உனக்கே பாடமெடுக்கறவரா அனுப்பியிருக்கார். அதிர்ஷ்ட தேவதை வலிய வந்து கதவைத் தட்டுறப்போ, அதை பயன்படுத்திக்கறது தான் புத்திசாலித்தனம். முட்டாள்தனமா முன்னால

கை தவற விட்ட வாய்ப்பை இப்பவாவது கெட்டியாப் பிடிச்சுக்கோ......அவ்வளவு தான் சொல்வேன்.."

'கடவுளே! இவள் என்ன சொல்ல வருகிறாள்? விட்டால் எனக்கும் அவருக்கும் அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை நடத்தி வைத்து விட்டு தான் மறு வேலை பார்ப்பாள் போலிருக்கிறதே. என் மனநிலையைக கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் என்ன பேச்சு இது?'

தங்கையின் பேச்சில் மனம் நொந்து போனாள் மதுரா.

"உளறாதே வனி......நான் எந்த மாதிரி சூழ்நிலையில் இங்கே படிக்க வந்திருக்கேன்னு தெரிஞ்சும் நீ இப்படிப் பேசினால் நான் என்ன பண்ணுவேன் சொல்லு? படிப்பும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்னு உதறித் தள்ளிட்டு வீட்டுக்கு வந்துடலாமான்ற மனநிலையில் நானிருக்கேன். நீ என்னடான்னா........."

மேலே பேச முடியாமல் மதுரா விசும்பவும், வனிதா அவசரமாய் குறுக்கிட்டாள்.

"ப்ளீஸ் மது நிதானமாய் யோசி. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதே. நீ ராஜீவை இடைஞ்சலா நினைச்சு ஒரு மருத்துவரா வரனும்ங்கற உன் லட்சியத்தைக் கோட்டை விட்டுடாதே. அவர் மேல உனக்கு தனிப்பட்ட விதத்தில் எந்தவிதமான எண்ணங்களும் இல்லை என்றால் அவரை வெறுமனே ஒரு ஆசிரியரா மதிச்சுப் பழகிட்டுப் போ......அவ்வளவு தானே?"

வனிதா சுலபமாகச் சொல்லி பேச்சை முடித்து விட்டாள். ஆனால் நடைமுறையில் அது எவ்வளவு கஷ்டமென்று அனுபவித்த மதுராவிற்குத் தான் தெரியும்.

பாடவேளையில் மட்டுமின்றி, கல்லூரியில் பார்க்கும் இடங்களிலெல்லாம் ராஜீவின் பார்வை அவளைச் சுற்றி சுற்றி வருவதை மதுரா உணர்ந்து தானிருந்தாள்

"என்ன மது ராஜீவ் சார் க்ளாஸ் எடுக்க வந்தார்ன்னா பார்வையை உன் மேலயே ஆணியடிச்சாப்ல. நட்டு வெச்சுக்கறார். என்னம்மா சம்திங் சம்திங்கா உங்களுக்குள்ளே?"

தோழிகள் கிண்டலாய் கலாய்க்கும் அளவிற்கு விஷயம் விஸ்வரூபம் எடுக்க, மதுரா கோபத்துடன் முறைத்தாள்.

"என்னவோ நான் அவரை சைட் அடிக்கறா மாதிரி என்னிடம் என்னடி கேள்வி? நான் இங்கே படிக்கத் தான் வந்திருக்கேன். அவரோட பார்வையில் கோளாறுன்னா அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? தைரியமிருந்தால் அவரிடமே போய் கேள்........"

மதுராவே ஒரு வேகத்தில் சொல்லிவிட்டாளே தவிர, அதை அப்படியே வேதவாக்காக எடுத்துக் கொண்டு இந்தப பெண்கள் ராஜீவிடமே போய் கலாய்ப்பார்கள் என்று அவள் கண்டாளா என்ன?

"என்ன சார் பாடத்தை மதுரா ஒருத்திக்கு மட்டும் நடத்தினால் போதுமா? நாங்களும் உங்க மாணவிகள் தான் சார். எங்களையும் கொஞ்சம் கவனிக்கறது..........."

நிவேதாவின் குரலில் இழையோடிய கிண்டலில் ராஜீவின் முகத்தில் அசடு வழிந்தது.

'அடக் கடவுளே! இவர்களெல்லாம் கவனிக்கும் அளவிற்கா நான் என் மனசை முகத்தில் வெளிப்படையாகக் காட்டியிருக்கிறேன்? கஷ்டகாலம் என்னசொல்லி சமாளிப்பது இவர்களை?'

"அது சரி, நான் நடத்தற பாடத்தைக் கவனிக்காமல் என்னையே கவனிக்கற உங்களுக்கு பாடம் நடத்தி புண்ணியமென்ன? அது தான் பாடத்தை கவனிக்கற மதுரா மேல ஒரு அபிமானம்.......வெயிட் வெயிட் உடனே தவறான ஊகங்களுக்குப் போக வேண்டாம். நல்லா படிக்கற ஒரு புத்திசாலி மாணவிங்கற அபிமானம் தான். போதுமா விளக்கம்?"

ராஜீவ் நன்றாகவே சமாளித்தான். உடனேயே மாணவிகள் அனைவரும் கோரஸாக குரல் எழுப்பினார்கள்.

"ஐயோடா.......அப்போ நாங்கல்லாம் மக்குன்றிங்களா? நாங்களும் மெரிட்ல தான் சார் மெடிகல்சீட் வாங்கியிருக்கோம்."

"ப்ளீஸ் கர்ல்ஸ்....ஆளை விடுங்க. நீங்க எல்லாருமே புத்திசாலிகள் தான். உங்களிடம் மாட்டிக் கொண்டு முழிக்கற நான் தான் உலக மகா முட்டாள். சரியா?"

தப்பித்தால் போதுமென்று அவசரமாய் வெளியேறிய ராஜீவ் அதற்குப் பின் தன் பார்வைக்கும் மனசுக்கும் கடிவாளம் போட முயற்சி செய்தான். ஒரளவு அதில் வெற்றியும் பெற்றான் என்றாலும் சமயங்களில் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அவன் நடவடிக்கையே அவனைக் காட்டிக் கொடுத்து விடுகிறதே.

அன்று திருத்திய டெஸ்ட பேப்பர்களை வினியோகித்தவன், மதுரா தான் அதிக மதிப்பெண் எடுத்திருப்பதாகச் சொல்ல, ஓ....என்று கூச்சலிட்ட மாணவகூட்டம், பெண்களுக்கு அவன் சலுகை காட்டுவதாக குறை சொல்ல, மாணவிகள் பதிலுக்கு வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்குச் செல்ல,

அந்தக் களேபரத்தில் கலந்து கொள்ளாமல், தன் விடைத்தாளைப் பிரித்த மதுரா அதில் அழகாய் பின் செய்யப்பட்டிருந்த சிறு வாழ்த்து அட்டையில் இருந்த வாசகங்களைக் கண்டு பயத்தில் வியர்த்தாள்.

இன்னும் எத்தனை காலமடி நான்

தனிமையில் தவித்திருப்பது?

நெஞ்சத்து ஏடுகளில் நினைவுப் பதிவுகளாய்

நிறைந்திருப்பதா காதல்?

சம்சார சாகரத்தின் சந்தோஷ சங்கமத்தில்

மூழ்கி நாம் முத்தெடுக்க

மதுரா நீ மனமிரங்க மாட்டாயா?

அவசரமாய் அதைத் தன் புத்தகத்தில் யாருமறியாமல் சொருகியவள் நிமிர்ந்த நாழிகையில் ராஜீவின் பார்வை அவள் மீது நங்கூரமிட்டிருந்தது.

'என்ன துணிச்சல்? கவிதை எழுதுகிறானா கவிதை? கடவுளே! வெட்டிக் கொண்டு எட்ட எட்டப் போனாலும் கிட்ட வருவதிலேயே குறியாய் இருக்கும் இவனை என்ன செய்ய முடியும்?

வாஸ்தவத்தில் மதுரா முதலில் மயங்கியது அவன் கவிதைகளில் தான். அந்த நம்பிக்கையில் இப்பொழுது மீண்டும் கவிதைத் தூது விடுகிறானா?'

அவனை முறைத்துப் பார்க்க முயன்று முடியாமல் தவித்தாள் மதுரா.

சரியாய் மூன்று ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற ஒரு வாழ்த்து அட்டையைக் கையில் வைத்துக் கொண்டு வனிதாவும் தானுமாய் மலங்க மலங்க முழித்தது மதுராவிற்கு நினைவில் ஓடி அவளை மேலும் மருட்டியது
 
Top