நேசத்தூறல் -05

Advertisement

TNWContestWriter039

Active member
Member
எவ்வளவு நேரம் அவளது புகைப்படத்தை அவன் வருடிக் கொண்டு நின்றிருந்தானோ, மனம் அவள் நினைவில் மூழ்கிக் கிடந்தது.

அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த அவன் நண்பன், “உன் மனசுல என்னடா நெனச்சிட்டு இருக்க" என்று கோப குரலில் கேட்ட போதும் கூட கூலாக தான் இருந்தான்.

“வேற என்ன அவளைத் தான் நெனைச்சுக்கிட்டு இருக்கேன். அது தெரிஞ்சும் லூசுத்தனமா கேள்வி கேட்கிறியேடா.." நக்கலாகப் பதில் சொன்னான் இவன்.

“நீ மட்டும் நெனச்சிட்டு இருந்தா போதுமா, அந்த பொண்ணு மனசுலையும் நீ இருக்க வேண்டாமா?"

“நான் அவ மனசுல இருக்கேன் இல்லேங்கிறது இரண்டாவது விஷயம். எனக்கு அவளை ரொம்ப புடிச்சிருக்கு, அதனால அவளைப் பத்தியே நெனைச்சுக்கிட்டு இருக்கேன். அவளைப் பார்க்க பிடிச்சிருக்கு, தள்ளி நின்னு ரசிக்க புடிச்சிருக்கு அதனால அதோட நிறுத்திக்கிட்டேன். கிட்ட போய் அவளை டிஸ்டர்ப் பண்ணனும்னு தோணல. அவ முன்னாடி போய் அவளைக் காயப்படுத்தணும்னோ, கஷ்டப்படுத்தணும்னோ இல்ல ஸ்மூத்த போயிட்டு இருக்க அவங்க லைஃப்ல என்னால எதுவும் பிரச்சனை வரணும்னோ நான் நினைக்கல. அதனால தான் தள்ளி நின்னு அமைதியா அவளைப் பாத்துட்டு இருக்கேன், இதுல உனக்கு எங்க குத்துது குடையுது..
எதுக்காக தேவை இல்லாம வந்ததும் வராததுமா இந்த டாப்பிக்கை எடுத்துட்டு இருக்க. பிஸ்னஸ் ட்ரிப் போனியே, பிஸ்னஸ் ட்ரிப் என்ன ஆச்சு ஓகேவா? அந்த ப்ராஜெக்ட் நமக்கு கிடைச்சுதா? அதப்பத்தி மட்டும் பேசு, தேவையில்லாததை எல்லாம் எதுக்குடா பேசுற..”

“என்னடா பண்றது உயிர் நண்பனாச்சே. நீ தேவையில்லாத விஷயத்துல நுழைஞ்சு, தேவையில்லாத வேலையெல்லாம் பார்க்கும் போது அந்த விஷயத்தை பத்தி நானும் பேசித்தானே ஆகணும்.."

“நான் என்ன தேவையில்லாத விஷயத்த பண்ணி வச்சேன். எதுக்காக வந்ததும் இப்படி ஒரு ஆர்கியூமென்ட்."

“அந்த பையனை போய் எதுக்கு பார்த்த?” என்றதும் இவன் திகைக்கவெல்லாம் இல்லை.

“அதைப் பத்தி உனக்கென்ன வந்துச்சு நரேன். எதுக்கு தேவை இல்லாம அதை பத்தி பேசுற. நான் யாரை பார்க்குறேன், யார் கூட பேசுறேன், யார்கூட பழகுறேங்குற வரைக்கும் நீ வாட்ச் பண்ணிட்டு இருக்கியா? எனக்கு பின்னாடி ஸ்பை வச்சிருக்கியா?"

“உனக்கு பின்னாடி ஸ்பை வைக்கணுங்குற எந்த அவசியமும் எனக்கு இல்லடா. உன்னோட லைஃப்ல எந்த நல்லது கெட்டது நடந்தாலும் ஒரு பிரண்டா நான் உன் கூட நின்னு இருக்கேன், அப்ப எல்லாத்தையும் அலசி ஆராயத்தானே செய்வேன்.. இன்னும் கொஞ்ச நாள்ல உன் பேமிலி மெம்பராவும் மாற போறேன், அப்படி இருக்கும் போது உன்னோட நலன்ல எனக்கு அக்கறை இருக்க தானே செய்யும்..”

“ஒத்துக்குறேன்டா என்னோட தங்கச்சியை நீ கல்யாணம் பண்ணிக்க போற தான். அதுக்காக என்னோட பர்ஷனல்ல தலையிடுவியா?”

“அப்ப நீ மத்தவங்க பர்ஷனல்ல தலையிடும் போது நல்லாருக்கோ? உனக்கு ஒரு ஞாயம் மத்தவங்களுக்கு ஒரு ஞாயமா?”

“எதுக்குடா மச்சான் வந்ததும் வராததுமா என்னை போட்டு இப்படி தாளிக்கிற. உனக்கு என்ன தெரியணும், தெளிவா கேளு..”

“அதான் முதல்லையே கேட்டுட்டனே. அந்த பையனை எதுக்கு நீ போய் பாத்துட்டு வந்த?"

“இது என்னடா கேள்வி பாக்கணும் போல இருந்துச்சு பார்த்துட்டு வந்தேன்.."

“ஆனா இவ்வளவு நாள் தள்ளி இருந்தே பார்த்தவன், இன்னைக்கு நேர்ல போய் பார்க்க வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு..”

“ஏன் நேர்ல போய் பாக்குறதுக்கான அவசியமும், அவசரமும் இருந்தா மட்டும்தான் போய் பார்க்கணுமா என்ன?”

“நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல மச்சி. நீ பண்ற விஷயம் அந்த பொண்ணுக்கு தெரிஞ்சா சாமி ஆடிடும். அந்த பொண்ணைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டும் இப்படி எல்லாம் பண்றது நல்லாவா இருக்கு. வேணான்டா, அவங்கள நெருங்கி போகாத. இவ்வளவு நாளும் விலகி தானே இருந்த, அதே போல இப்பவும் விலகி இருந்திரு..” என்று நரேன் சொன்னதும்,

தான் அமர்ந்திருந்த சூழல் நாற்காலியை ஒரு சுற்று சூழல விட்டு மெதுவாக எழுந்து அங்கிருந்து பெரிய விண்டோவை நோக்கி சென்றவன், ஸ்கிரீனை இழுத்து விட்டு கீழே தெரிந்த காட்சிகளை விழிகளால் அலசி ஆராய்ந்தவாறு, “நீ என்ன நினைக்கிற நரேன் இவ்வளவு நாளும் நான் விலகி இருந்தேன்னா? எனக்கு எந்த விஷயமும் தெரியாதுன்னா? ” என்று கேட்டவாறு தன் இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டின் இருபுறமும் நுழைத்துக் கொண்டு ஸ்டைலாக திரும்பி ஜன்னல் கண்ணாடியின் மீது சாய்ந்து நிற்க, எதிரில் இருந்த நரேனுக்கு உள்ளுக்குள் திகில் பிறந்தது.

“எ..என்ன என்னடா சொல்ற.‌ நீ என்ன சொல்ல வர்றேன்னு என்னால புரிஞ்சுக்க முடியலடா..”

“நான் சொன்னது உனக்கு புரிஞ்சதுனால தான் இவ்வளவு பதட்டப்படற. நீ என்ன நினைக்கிறியோ அதுதான் உண்மை. இதோட என்னை கேள்வி கேட்கிற வேலையை விட்டுடு..."

“தேவா வேண்டாம்டா. இது பெரிய பிரச்சனையாகிடும். நாம யாருக்கு வேணாலும் நல்லது செய்யலாம், ஆனா அந்த ஃபேமிலிக்கு வேணாண்டா. நம்ம வீட்டுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனையாகிரும். அதுவும் முக்கியமா உங்க அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா ஐயோ அவ்வளவு தான் என்ன நடக்கும்னு கூட என்னால யோசிக்க முடியல. வேணாண்டா இந்த விளையாட்டை இதோட நிப்பாட்டிக்கோ. முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கிறது தான் நல்லது, புதுசா நீ எதையும் ஆரம்பிச்சு வைக்காத..” என்று பதற்றத்தோடும், பதட்டத்தோடும் நண்பனிடம் கெஞ்சுதலாய் அவன் சொல்ல,

' நீ சொன்னா நான் கேட்கணுமா?' என்பது போலான பார்வையை அவன் புறம் வீசியவன், “வெளிநாடு போயிட்டு வந்ததுல டயர்டா இருந்தா போய் ரெஸ்ட் எடு. இல்லன்னா போய் வேலையை பாருடா. அதை விட்டுட்டு இங்க வந்து அட்வைஸ் பண்ணிட்டு இருக்காத. அப்படி எந்த வேலையும் இல்லன்னா உன்னோட பியான்சி உனக்காக வெயிட் பண்ணுவா போ, போய் அவளோட டைம் ஸ்பென்ட் பண்ணு. என் தங்கச்சியாவது ஹேப்பியா இருக்கட்டும். முதல்ல இங்கிருந்து கிளம்பு, கெளம்புடா ..” என்று அடித்து துரத்தாத குறையாக அவனை தன் அறையில் இருந்து வெளியே தள்ளியவன், கதவைச் சாத்தி விட்டு படபடவென்று துடிக்கும் நெஞ்சினோரம் கையை வைத்து பெருமூச்சு விட்டான்.

'இவன் ஒருத்தனை சமாளிக்கிறதுக்குள்ளே போதும் போதும்னு ஆகுது. இவன் போய் எதாவது அந்த பிசாசுக்கிட்ட சொல்லி வச்சா அங்கிருந்தும் ஏகப்பட்ட கேள்விகள் வருமே, எல்லாத்தையும் சமாளிக்கணுமே, எப்படி சமாளிக்கிறது..' என்று நினைத்துக் கொண்டு சட்டென்று இடது புறம் திரும்பியவன், சுவரில் ஒயிலாக நின்றிருந்த மயிலவளின் அழகில் தன்னை ஒப்புக்கொடுத்தவனாய்,

“உனக்காக எது வேணாலும் செய்ய நான் ரெடியா இருக்கேன். ஆனா எனக்காக நீ ஒரு துரும்பைக் கூட கிள்ளி போட மாட்டியே. எப்படி உன்கிட்ட வர்றதுன்னு தெரியலை. என்ன சொல்லி சமாளிச்சாலும் மறுபடியும் நீ என்னை ஏத்துக்க மாட்டேன்னு தெரிஞ்சதுனால தான் இவ்வளவு நாளும் தள்ளி இருந்தேன். ஆனா உன் அண்ணங்காரன் சும்மா இருக்க மாட்டேங்குறானே. உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறான் போல, அவ்வளவு சீக்கிரம் இன்னொருத்தனுக்கு உன்னை விட்டு கொடுக்கவா இவ்வளவு ரிஸ்க் எடுத்து எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்கேன். அப்படியெல்லாம் உன்னை விட முடியாது பேபி, உன்னோட பலம் எது பலவீனம் எதுங்கிறது எனக்கு நல்லா தெரியும். அதான் பலவீனத்துல கை வச்சிருக்கேன். உன் பலவீனத்தை எனக்கு பலமா மாத்துனா தான், உன் பலமும் என் கையில வந்து சேரும். வெயிட் பண்ணுடி என் சக்கரக்கட்டி, சீக்கிரமே அந்த அனுமான் சஞ்சீவினி மலைய தூக்கிட்டு வந்த மாதிரி உன்னைத் தூக்கிட்டு வந்து இதோ இங்க என் நெஞ்சுல குடி வைக்கிறேனா இல்லையான்னு மட்டும் பாரு..” என்று தன் நெஞ்சை சுட்டு விரலால் சுட்டிக்காட்டிக் கொண்டு தன்னை அழைத்த கடமையை செய்வதற்கு சென்று விட்டான். ஆனாலும் கூட அவன் எண்ணம் முழுவதும் அபியைத் தான் சுற்றிக் கொண்டிருந்தது. பணத்தில் புரள்பவனது மனதில் அவள் நீங்கமற நிறைந்து கிடக்கிறாள்.

ஆனால் இப்படி ஒருவன் தன்னை எண்ணி உருகிக் கொண்டிருக்க விஷயமே தெரியாமல் அரக்கபறக்க தன் கடைக்கு வந்திருந்த ஆர்டர்களுக்கான பொருட்களை பேக் செய்து அனுப்பி வைத்துக் கொண்டிருந்தாள் அபி. அனைத்தையும் அனுப்பி வைத்துவிட்டு 'அப்பாடா' என்று அவள் அமர்ந்த போது மெதுவாக மணி பேச்சுக் கொடுத்தாள்.

“அண்ணன் பார்க்குற மாப்பிள்ளைகளை எல்லாம் வேண்டாம்னு சொல்றது நல்லதா படுதாக்கா. உனக்கு ஒரு நல்லது நடந்தா தானே அதுவும் நல்லபடியா கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கும். உனக்காக இல்லனாலும் பப்ளி குட்டிக்காகவாவது நீங்க யோசிக்கலாம்ல. அவனுக்கும் அப்பாங்கிற ஒரு உறவு வேணும் தானே. அவனுக்காக நீங்க எல்லாமே பார்த்து பார்த்து செஞ்சாலும் மத்த பிள்ளைங்க அப்பாவோட போவதை பார்க்கும் போது அவனுக்கும் மனசுல ஏக்கம், ஆசை வராதாக்கா?அதுக்காகவாவது கொஞ்சம் நீங்க மனசு வைக்கலாமே..” என்றபோது கடைக்கு ஒரு சிறு பிள்ளையை தூக்கிக் கொண்டு வந்தான் ஒருவன்.

குழந்தையோ அவன் கையில் இருந்தவாறே அது வேண்டும் இது வேண்டும் என்று கை காட்டி கேட்க, அது கேட்ட அனைத்தையும் மறுக்காமல் வாங்கி கொடுத்தான் அவன். அந்த சந்தோஷத்தில் தந்தையானவனின் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்ட குழந்தை, “இந்த உலகத்துலையே நீங்க தான் பெஸ்ட். ஐ லவ் யூ பா..” என்று சொல்லி கொஞ்சிக் கொள்ள, முத்தமிட்ட குழந்தைக்கு தானும் முத்தங்களைப் பரிசளித்தவாறு வாங்கியவற்றிற்கு பணத்தை கொடுத்து விட்டு சென்றான் அவன்.

அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் அபி. அவளுக்கும் இவர்களைப் பார்த்த கணம் தன் தந்தையின் நினைவு வந்து ஒட்டிக்கொண்டது. எப்படியெல்லாம் இவர்களை சீராட்டி பாராட்டி வளர்த்தார் அவர். ஆனால் கடைசியில் எல்லாம் இப்படி ஆகிவிட்டதே என்று விழிகளில் கண்ணீர் தழும்ப, தந்தையின் நினைவில் கலங்கிப் போனாள்.

இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மணியோ, “ஏன்கா உங்களுக்கு இவ்ளோ வயசு ஆயிடுச்சு, அப்பா இறந்து கூட போயிட்டாரு. ஆனாலும் மத்தவங்க அவங்க குழந்தையைக் கொஞ்சு போது உங்களையும் அறியாம உங்களுக்கு அப்பாவோட நினைப்பு வந்துச்சு தானே. இத்தனை வயசு ஆகியும் கூட உங்களுக்கு அப்பாங்கிற உறவு தேவைப்படுது, அவரோட பாசத்தை ரொம்ப மிஸ் பண்றீங்க அப்படித்தானே. ஆனா தன்னோட லைஃப்ல அப்பாங்கற ஒரு உறவு இருக்கா? இல்லையான்னு தெரியாம, தன்னோட அப்பா யாருன்னு தெரியாம பப்ளி குட்டி வளர்றானே அவன் மனசுல ஏக்கம் இருக்காதுன்னு நினைக்கிறீங்களா? அவனுக்கு இது மாதிரி அப்பா கூட போகணும்னு தோணாதுன்னு நினைக்கிறீங்களா? தம்பி மனசுல ஏகப்பட்ட ஆசை, ஏக்கம் எல்லாம் இருக்கும்கா. ஆனா அதெல்லாம் தெரிஞ்சா நீங்க பீல் பண்ணுவீங்களோ, அது உங்களுக்கு பிடிக்காதோன்னு நெனச்சு தான் பிள்ளை வெளியே சொல்லிக்கிறது கிடையாது.

ஆனா அவனுக்குள்ள ஆசை கண்டிப்பா இருக்கும்கா. வேணா நீங்க டெஸ்ட் பண்ணி பாருங்க, அவனோட உண்மையான பதில் என்னன்னு தெரிய வரும். இவ்வளவு ஏன் நீங்க கூட கேட்க வேண்டாம் நான் கேட்குறேன், அவனோட பதில் என்னன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் உங்களுக்கு புரியும் அவன் மனசுல என்ன இருக்குன்னு. நம்ம பிள்ளைங்க எது கேட்டாலும் வாங்கி கொடுக்க வேண்டாம், ஆனா அவங்களுக்கு கிடைக்க வேண்டிய இந்த மாதிரி நியாயமான ஆசைகள் நிச்சயம் கிடைக்கணும் தானே. அதைக் கூட கொடுக்கலைன்னா நாமெல்லாம் என்ன பெத்தவங்களா இருப்போம் சொல்லுங்க பாக்கலாம். இப்ப அவனுக்கு இதெல்லாம் தெரியாட்டியும் நாளைக்கு வளரும் போது இது ஒரு குறையாவே அவனுக்குள்ள இருந்துடாதாக்கா, கொஞ்சம் யோசிச்சு பாருங்க..” என்று தன்னால் முடிந்தவரை அவள் மண்டையை கழுவி விட்டு வேலையை பார்க்க போய்விட்டாள் மணி.

அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்த அபி நேரம் போனதைக் கவனிக்கவில்லை. பிள்ளையை போய் அழைத்து வரவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்க, அதை கவனித்து விட்டு மணி தான் 'போய் தம்பியை கூட்டிட்டு வாங்க' என்று நினைவு படுத்தியதும் அடித்து பிடித்து ஓடினாள்.

சரியாக அவள் அந்த ப்ளே ஸ்கூலின் அருகில் வந்த போது இவளைக் கண்டு விட்ட குழந்தை வேகமாக வெளியே ஓடி வந்து விட்டான்.

இவளோ மகனைக் கண்டுவிட்டு, “வராத வேந்தா வண்டி வருது. அங்கையே இரு..” என்று கத்திக் கொண்டே ஓடி வர, அதற்குள் கேட்டைத் தாண்டி வெளியே ஓடிவந்த குழந்தை கால் இடறி கீழே விழப்போக, நெடுநெடுவென்று வளர்ந்திருந்த அவன் பிள்ளையைக் கீழே விழாமல் தாங்கிக் கொண்டான்.

“லிட்டில் சாம்ப் பார்த்து வாங்க. கீழே விழுந்துடாதீங்க, எவ்வளவு அறிவாளி நீங்க, கீழே விழுற மாதிரி ஓடி வரலாமா? பாத்து கவனமா போகக்கூடாதா? கீழே விழுந்தா அடிபட்டுரும், இனிமே இப்படி ஓடி வராதீங்க, பார்த்து போகணும் சரியா.” என்று கொஞ்சும் குரலில் சொன்னவாறு அவன் கன்னம் தட்டி கொஞ்சியவன், வேந்தனின் கையில் பெரிய சாக்லேட் பார் ஒன்றை திணித்து விட்டு அபி அவர்களை நெருங்கும் முன் அங்கிருந்து விலகிப் போயும் விட்டான்.

அவனது முதுகு புறம் மட்டுமே காட்சிக்கு தென்பட்டதால் அவன் யார் என்று அவளால் பார்க்க முடியாமல் போனது. மகன் கீழே விழுந்து விட்டானோ என்ற பயத்தில் இருந்தவள் அவன் விழவில்லை என்றாலும் கூட விழப்போய் விட்டானே என்ற பயத்தில் ஓடி வந்து மகனை அணைத்துக் கொண்டு சில கணங்கள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அப்படியே குத்துக்காலிட்டு அமர்ந்திருக்க, அந்த காட்சியை தன் காரில் அமர்ந்தவாறு பார்த்துக் கொண்டிருந்தவனின் உள்ளம் தவித்தது. அணைத்துக் கொண்டிருந்த இருவரையும் ஒருசேர தன் அணைப்பிற்குள் புகுத்திக் கொள்ள வெகுவாய் பேராவல் கொண்டது உள்ளம், ஆனால் நெருங்கினால் அவனுக்கு கிடைக்கும் பரிசை எண்ணி உடல் சில்லிட்டது. அவனையும் அறியாமல் அவன் கரம் கழுத்திலிருந்த தழும்பை மெல்ல வருடி கொடுத்தது..

- நேசத்தூறல் தொடரும்...
 
இவன் அவ குடும்பத்துல
கும்மியடிக்கத் தான்
போறானோ
 

Advertisement

Advertisement

Back
Top