Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பேராண்மை 5

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
இருண்ட வானில் வான்மீன் கண்சிமிட்ட, நிலாமகள் ஊர்வலம் செல்ல தயாராக...
மேக ரதத்தை தன் ஒளி உடன் பூட்டிய இருள் சூழ் வேளை.


கைப்பையை தோளில் மாட்டிக் கொண்டு, வழியில் காண்போரிடம் எல்லாம் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டு,
ஒவ்வொருவரின் வாழ்த்திற்கும் நன்றிகளை நவிழ்ந்து கொண்டே வாகன தரிப்பிடம் நோக்கி சென்று கொண்டிருந்தாள் ரித்து.

அவளின் செய்கையில் என்றும் இல்லாத அவசரம் விரவியது இன்று.


காரணம் இரவு வேளையிலும் தன் வேலையை முடித்துக் கொண்டு அவள் தோழியின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அவளுக்கு.


அவசரமாக அவள் சென்று கொண்டிருக்க, சுகமான வேகத் தடை ஒன்று பஞ்சு பொதியாய் இவளை வந்து மோதியது.
மோதிய பஞ்சின் உரு கொண்ட பிஞ்சோ, இவளின் முகம் பார்த்து பயந்து நிற்க.

பிள்ளையை பெற்ற அன்னை தன் கையை தட்டிவிட்டு ஓடி சென்ற பிள்ளையை கண்டிக்கும் பொருட்டு அவ்விடம் வர.


குண்டு கன்னமும், முட்டை விழியும், பாப் கட்டில் முடியை வெட்டி இருந்த மொட்டு அன்னையைக் கண்டு இப்பொழுது மோதியவளின் பின் சென்று ஒழிந்தது.

"அன்னைக்கு இவளே தேவையில்லை!" என்று 'எண்ணியதோ என்னவோ?'

"சஷ்டி இங்க வா உனக்கு சேட்டை அதிகமாயாச்சு.எல்லாம் உங்க அப்பா குடுக்கற செல்லம்!" அன்னையாய் மகளை கண்டிக்க

மகளவளோ அன்னையின் வசவை கேட்டு இதழை பிதுக்க

'அவசரம்' என்று விரைந்தவள் பிஞ்சின் முட்டை விழியில் தேங்கிய நீரும், பிதுங்கிய இதழும் என்று நிற்பதை கண்டு மனம் பொறுக்காது அப்பஞ்சு பொதியை அள்ளி எடுத்தாள் தன் கரங்களில்.

"சஷ்டி குட்டி எதுக்கு அம்மா கையை விட்டுட்டு ஓடி வந்திங்க அது பேட் பிஹேவியர் இல்லைங்களா பேபி !?"

முதலில் அன்பாய் தொடங்கினாலும்; குழந்தையின் மனம் நோகாது அவளுக்கு புரியும்படி தன் கீச்சுக் குரலில் அவளுக்கு பாடம் புகட்ட.

"சாரி மிஸ் நான் இனி மம்மி கைய விடாம குட் கேர்ளா இருக்கேன்!" என்று உடனே ஒப்புக்கொண்டது சஷ்டி குட்டி.

தான் கேட்டதற்கு அழுக துவங்கிய மகள்,அடுத்தவரின் சொல்லில் அடங்கி தன் தவறை ஒப்புக் கொண்டது அன்னைக்கு பொறாமையாக இருந்தாலும் மகளின் குரலில் வெளிப்பட்ட 'மிஸ்'எனும் வார்த்தை புரிய வைத்தது எதிரில் நிற்பவள் 'ஆசிரியர்' என்று.

"நீங்க சஷ்டி கிளாஸ் டீச்சர் இல்லையே! நீங்க எந்த ஸ்டாண்டர்ட்க்கு எடுக்குறீங்க மேம்!?" சஷ்டியின் தாய் கேள்வி எழுப்ப.

ஆசிரியையை முந்திக்கொண்டு தாயின் வினவலுக்கு மகளே பதிலுரைத்தாள்

"மம்மி இவங்க ரினிஷா கிளாஸ் மிஸ் மம்மி !"

பக்கத்து வகுப்பில் பயிலும் தன் தோழியை உதாரணமிட்டு ஆசிரியையை அறிமுகம் செய்தாள் குழந்தை.

மாணவியின் சொல்லை கேட்டு புன்னகை உடன் அவளின் அன்னை முகம் பார்த்தவள் "பேபிய பார்த்துக்கோங்க மேம் நான் கிளம்பறேன்!" என்றிட

சிறியவளோ ஆசிரியையின் புடவை முந்தானையை விடாது பிடிக்க, அன்னையவள் கண்டிப்புடன் விழியை உருட்டி மகளை முறைக்க.

அங்கே மீண்டும் ஓர் போர்க்களம் மூலாது காக்கும் பொருட்டு ஆசிரியை அவள் தானே முன்வந்து சமாதானக் கொடியை பறக்கவிட்டாள் .

"என்ன சஷ்டி? என்ன ஆச்சு!?" என்று வினவ

குட்டி குறும்பையோ ஆசிரியை முகம் கண்டு தன்னை நோக்கி குனியக் கோரியவள் அவசரமாய் கன்னத்தில் ஓர் முத்தம் பதிக்க.

பிஞ்சு இதழில் படிந்திருந்த உதட்டு சாயம் இவளின் முகத்தில் அச்சாரம் இட்டுக் கொண்டது.

"ஹேய் பேபி"

என்று உவகை கொண்டவள் தானும் பதிலுக்கு கன்னம் வழித்து முத்தமிட.

குட்டிக்கு உற்சாகம் பீறிட வெட்கத்தில் இப்பொழுது அன்னையின் சுடிதார் ஷாலுக்குள் முகம் புதைய நிற்க.

மகளின் பிரியமான ஆசிரியை இவர் தான் என்பதைப் புரிந்த அன்னையும்; இப்பொழுது புன்னகையுடன் மகளின் ஷேஸ்டையை வேடிக்கை பார்த்திருந்தார்.

அன்னையும் மகளும் காத்திருந்த நபரானவர்,

"சாரிடா பாப்பா.. சாரிம்மா!" என்று இருவரிடமும் மன்னிப்பை கோரிக்கொண்டே அவ்விடம் வந்து சேர்ந்தார் சஷ்டியி்ன் தந்தை.

வந்திருக்கும் நபர் அவளின் தந்தை என்பது சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லாது சஷ்டி அவரின் பிரதியாக இருந்தாள்.


மனைவியோ,"வருவதற்கு இவ்வளவு நேரமா!?" என்று விழியால் கேள்வி கணை விடுக்க, மன்னிப்போடு கூடிய சிறு கெஞ்சலையும் விழியால் கடத்தினான்.

கணவனின் கண்கள் கெஞ்சிய அழகில், மனையாளுக்கு தன் கோபம் மறைய சிறு முகை மலர்ந்தது இதழ் கடையில்.

மகளுக்கு அப்படி ஒன்றும் தந்தையின் மீது கோபமில்லை போல; அவளுக்கு தந்தையிடம் ஒப்பிக்க ஆயிரம் கதைகள் விரவி கிடந்தது.

ஆசிரியருக்கு ஒரு பெரிய டாட்டாவும், இரவு வணக்கமும் கூறி மகள் தந்தையின் கையை இறுக பற்றிக் கொண்டு விடை பெற.

தாயானவளோ விரிந்த புன்னகையுடன், சிறு தலை அசைப்பும் காட்டி அவளை கடக்க.

மகளை கரங்களில் தந்தை பிடித்து கொண்டு முன்னால் சென்றவன் ஒரு முறை திரும்பி இவளைக் கண்டான்.

மகள் இவளை பற்றி கூறி இருப்பாள் அதற்காக திரும்பி பார்த்திருப்பான் போல,மகளின் உடைமைகளை சுமந்து கொண்டு கணவனையும்,மகளையும் சஷ்டியின் தாய் பின் தொடர்ந்தாள்.

இரவு நேரம் ஒரு அழகிய குடும்பத்தை கண் நிறைய கண்டு தன் தோழி விடுத்த கோரிக்கையை மறந்து நின்றவள்;

அன்பான சிறு கூடாய் இருந்த குடும்பம் கண்களில் இருந்து மறைந்ததும் நிகழுலகம் வந்து பின்னந்தலையில் ஒரு தட்டினை தன் மறதிக்கு பரிசாக வழங்கிக் கொண்டு வாகன தரிப்பிடம் சென்றாள்.

"இவளுக்கு..." என்று ஆரம்பித்தவள் மனதிற்குள் தோழியை அர்ச்சிக்க தவறவில்லை

எல்லாம் சிறு வயது தோழி கிறிஸ்டியால் தான்.

இருவரும் ஒன்றாக சென்று கிறிஸ்டியின் காதலனை காண்பதாக இருந்தது.


இப்பொழுது தோழியானவள் அவளின் பெற்றோருடன் வெளியில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட.

தான் மட்டும் தனியே செல்ல வேண்டிய சூழல்.

"அடி கிறிஸ்டி நான் போகலை!"

"என்னடி ரித்து இப்படி சொல்ற அவனுக்கு எல்லாம் லீவ் கிடைக்கிறது எல்லாம் பத்தாவது அதிசயம்டி செல்லம் பிளீஸ் எனக்காக போய்ட்டு வந்துடு!"

"இல்ல கிறிஸ்டி இதுவரை பார்த்தே கிடையாது அதுதான் யோசனையா இருக்கு!"

"உனக்கு பாதுகாப்பு இல்லாத இடத்துக்கு உன்னை நான் அனுப்புவேனா எருமை.
அவன் உண்மையா நல்லவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் என் தளபதி!" என்று ஆயிரம் சமாதானம் கூறி.


தனியே செல்ல மனம் இல்லாது இவள் செல்வதை தவிர்க்க முயற்சிக்க.

தோழி பெண்ணோ தன்னவனுக்கு விடுமுறை கிடைப்பதே அரிது என்றும்; இன்றைய விடுமுறையை வீண் செய்ய மனமில்லை என்றும் கூறியவள்; ஒன்றிரண்டு முறை கைபேசி அழைப்பில் மட்டுமே குரலை கேட்டிருக்கும் ஆணவனை காண தன்னை தனியே செல்லுமாறு கேட்டிட.

அவளின் கோரிக்கையை ஏற்க மனம் மறுக்க,

இவளின் மறுப்பை தோழி மறுக்க பெரும் போராட்டத்தின் முடிவில் வென்றது என்னவோ தோழியின் கோரிக்கை தான்.


"பிளீஸ்டி எனக்காக..!" என்று பாவமாக கெஞ்சிட

"உனக்கு வேலை ஆகனும்னா உடனே பாவமா முகத்தை வச்சுப்பியே இதுதான் லாஸ்ட் டைம்டி.இனி இது போல எம்பரசிங்கான சிட்சுவேஷன கிரியேட் பண்ணாதடி!"

எனும் எச்சரிக்கையுடன் தான் ஒப்புக்கொண்டாள் கடைசியாக.

நட்புடன் நடந்த உரையாடலை எண்ணிக் கொண்டே சாலையை காண, சற்று நெரிசலாக தான் இருந்தது.

இரவு ஒன்பது மணிக்கும் இவ்வளவு நெரிசல் இருக்க காரணம் இன்று அப்பகுதியில் இருக்கும் உலக அளவில் பிரபலமான அறக்கட்டளையின் கீழ் இயங்கும் இவர்கள் பள்ளியின் ஆண்டு விழா தான் அதற்கு பெரும் காரணம்.


பள்ளி ஆண்டு விழா ஏழு மணிக்கு நிறைவு பெற.

மாணவர்களை பெற்றோருடன் பத்திரமாக அனுப்பி வைப்பது,பிற ஆசிரியருடன் இணைந்து மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு வருவதற்கு நேரமாகியது இவளுக்கு.

இரண்டு மணி நேரம் காக்க வைத்த சஷ்டியின் தந்தை மேல் அவளின் தாய்க்கு கோபம் வருவதில் நியாயம் உள்ளதாக இவள் எண்ணிக் கொண்டு,

சாலையில் நீந்திக் கொண்டிருக்கும் வாகனங்களுடன் தான் வந்த ஆட்டோவும் நீந்திக் கொண்டு,ஐந்து நிமிடத்தில் வரவேண்டிய தோழி கூறிய உணவகத்திற்கு வருவதற்குள் அரை மணி நேரம் கடந்திருந்தது.

கைகடிகாரத்தை ஒரு முறை திருப்பி பார்த்தவள் நேரம் கடந்தது உணர்ந்து, வாகன நெரிசலில் பூத்த சிறு வியர்வையை சிறிதாக கைக்குட்டையால் ஒற்றிக் கொண்டே; ஆட்டோ நின்றதும் கைப்பையில் இருந்து பணத்தை செலுத்திவிட்டு நிமிர.

வெளியில் இருந்து பார்ப்பதற்கு உணவகத்தின் உட்புறம் சற்று இருளில் மூழ்கி இருந்தது "என்னவாக இருக்கும்!?" யோசனையோடு உணவகத்தின் உள்ளே நுழைந்தாள்.



தோழி தன் காதலனை காணவரும் ஆவலில் இது போன்ற உணவகத்தை தேர்வு செய்திருப்பதை உணர்ந்தவள் உள்ளம் தோழிக்காக சற்று இரக்கம் கொண்டது.


"பாவம்! இவ்வளவு பிளான் பண்ணி எல்லாம் திடீர்னு ஃப்ளாப் ஆனதும் அவளுக்கு கஷ்டமா இருக்கும் இல்ல?"

தனக்குள்ளாக எண்ணியவாறு சென்றவள் வாயிலில் நின்ற வரவேற்பு சிப்பந்தி கதவை திறந்துவிட ஒரு தயக்கத்துடன் உள் நுழைந்தாள்.

"எங்கே செல்வது!?" எனும் கேள்விக்கு விடையாக அவளின் அருகே ஓர் சிப்பந்தி வந்து நிற்க.

அவரின் உதவியுடன் தோழி முன்பதிவு செய்திருந்த இருக்கை அருகே செல்ல.


அங்கே இருளில் தெளிவாக முகம் தெரியாவிட்டாலும்,ஒரு ஆண் அமர்ந்திருப்பது நிழல் வடிவாக தெரிந்திட.

வணக்கத்துடன்,தான் நேரம் தாழ்த்தி வந்ததற்கு மன்னிப்புடன் சிறு விளக்கமும் வழங்கி அவனின் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தாள்.


இருளிலும் எதிர் இருப்பவன் விழி கூர்மை கொள்ள,இவளை கண்டவன் தலை அசைப்போடு தான் மன்னிப்பை ஏற்று கொண்டதாய் சைகை செய்தவன் அமைதியாகி விட.


அவனிடம், "என்ன பேசுவது!?" என்று புரியாது பெண் அவள் தயக்கமாய் அமர்ந்திருந்த வேளை; அருகிருந்த மேசையை சூழ்ந்தது ஓர் நண்பர்கள் குழாம்.

பிறந்தநாள் விழா கொண்டாட்டம் போல அதனால் தான் உணவகம் இருட்டில் இருந்தது.

அருகில் இருந்த சிலரையும் அழைத்து அவர்கள் பிறந்தநாள் கொண்டாட,இவளும் அவர்களுடன் இணைந்து தன் வாழ்த்தை தெரிவிக்க ஆசை கொண்டாள்.

அவளால் ஆசை மட்டுமே கொள்ள முடிந்தது.ஆசையை உள்ளுக்குள் அடக்கி கண்களை கூட அவர்கள் புறம் திருப்பாது எதிர் இருந்தவன் முகம் பார்க்க.

அவனோ கோலாகல கொண்டாட்டமாவது ஒன்றாவது அப்படி ஒன்று நிகழ்வதை உணராதவனாக அமர்ந்திருந்தான்.


கைபேசியில் பேசிய பொழுது இருந்ததற்கும், இப்பொழுது இருப்பதற்கும் ஆயிரம் வித்தியாசங்கள் கூறிடலாம் போல
அவளுக்கு சந்தேகமே வந்துவிட்டது "தான் சரியாக தான் வந்திருக்கிறோமா!? இவன் அவன் தானா!?" உறுதி செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தவள் தோழியின் எண்ணிற்கு தொடர்பு கொள்ள.

அவளது எண்ணோ,"தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது!" என்ற தகவலை கூறி பல்லை காட்டியது.

"அடுத்து என்ன செய்வது!?" என்று இவள் திருதிருத்த நேரம் அவ்விடம் வந்தான் அவன்.

அவன் தான் இவள் தோழி கிறிஸ்டினாவின் காதலன் ஜோ எனும் ஜோஸ்வா.

"ஆம்!" நாம் நேற்று பார்த்தோமே அறிவியலாளன் அதே ஜோ தான் இவன்.

ரித்துவின் தோழி கிறிஸ்டினாவின் ஆசை காதலன்.

ஏதோ ரகசிய உழவுத் துறையில் அவன் இருப்பதாக கிறிஸ்டி நம்பி இருக்க.

அவனோ இங்கே ஆய்வுக் கூடத்தில் ஆய்வாளனாக இருக்கிறான்.



"ஹாய்...!"

என்று சிறு புன்னகையுடன் வந்தவன் எதிரில் இருந்தவன் அருகே அமர.


பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து இப்பொழுது சரியாக உணவகம் மின் விளக்குகளில் ஜொலித்தது.


திடீரென வெளிச்சம் பரவ,கண்களை கரம் கொண்டு மூடிக் கொண்டாள் பூங்காரிகை.

மின் ஒளிக்கு கண்கள் பழக சிறிது நேரம் பிடிக்க,கண்களை மூடிய கரத்தை மெதுவாக விளக்க,எதிரில் அமர்ந்திருந்தவன் முகத்தை தான் முதலில் கண்டாள்.

தீர்க்கமான விழிகள் தன் தீட்சண்யத்தை உமிழ, சற்றே சிவந்த முகமும், அடர் மீசையும்,நெற்றி பரவிய முன்னுச்சி முடியும் ஆண்மையின் இலக்கணமாய் ஒருவன் அமர்ந்திருக்க, இவளின் விழிகள் தானாய் கிடைத்த வாய்ப்பை நழுவ விடாது தன்னை மறந்து அவனை ரசிக்க.

சிறு வெளிச்சத்திலே அவளை எடை போட்டிருந்தவன் விழிகள் முழு மின் ஒளியின் வெளிச்சத்தில் அவளை துளைக்க தயாராக.

அவளோ அதற்கு வாய்ப்பளிக்காது கரம் கொண்டு பாதி முகத்தை மறைத்துக் கொண்டாள்.

மொட்டு மலராக மெதுமெதுவாக மலர்வது போல அவள் கண்களை மறைத்திருந்த கரத்தினை மெல்ல விடுவிக்க.

இப்பொழுது தான் அவளின் முகத்தை தெளிவாய் கண்டான் அவன்.

ஆண்டு விழாவிற்கு சிறு மொட்டுக்களை அலங்கரிக்க இவள் முயன்றதின் அடையாளமாக இவளின் மீதும் 'ஜிகினா' துகள்களின் தீற்றல் எச்சங்களாய்.


குட்டி மைவிழியில்,இரண்டடுக்கு பாதுகாவலாய் அடர் இமை முடிகள், கருப்பு நிறமா அல்லது காப்பி கொட்டை நிறமா பிரித்தறிய கடினமான விழிப்பாவை அங்கும் இங்கும் ஆடாது தன் முகத்தில் நிலைத்திருப்பதை உணர்ந்தவன் தன் ஆழ்விழி பார்வையை மாற்றாது அவளை கூர்ந்தான்.

சற்று நீண்ட நாசியில் ஒற்றை அரசனாய் கிரீடம் தரித்து வீற்றிருந்த ஒற்றைக் கல் மூக்குத்தி.

சற்று முன் சஷ்டி குட்டி கொடுத்த இலவச இணைப்பாக கிடைத்த மென் முத்த அச்சாரத்தின் வரிவடிவம் கன்னத்தில் ஒட்டி இருந்தது.

கோட்டோவியம் கண்டு ஓர் கண புன்னகை வந்து மறைந்தது அவனுடைய வன் இதழில்.

அதனையும் இமை பொழுதில் மறைத்துக் கொண்டான் மாயன் அவன்.

ஆசிரியை என்பதன் அடையாளமாம் நீள் முடிகள் கொண்டைக்குள் அடக்கமாக, மேசை மீது இருந்த கைப்பையும் இடது கையில் கைக்கடிகாரம்,வலது கையில் ஒரு மெல்லிய வளையலும், காதுகளில் சிறு கல் வைத்த ஜிமிக்கியும், கழுத்தில் மென் சங்கிலி கண்களை மட்டுமல்ல அவளின் மென் கழுத்தை உறுத்தாது கிடந்தது.


கால்களில் குதிங்கால் உயர்த்தி காட்டக்கூடிய காலணிகள் அணியும் கலியுகத்தில் தரையை ஒட்டிய காலணி அணிந்திருந்தாள்.

அதன் ஓரம் ஒயிலாய் எட்டிப்பார்த்தது அவள் போட்டிருந்த பாத கொலுசின் வெள்ளி சலங்கைகள்.

இவற்றை எல்லாம் ஓர் நொடி பார்வையில் அவன் அளவிட்டு முடித்திருக்க, அவளோ இவனை வைத்த விழி மாற்றாது பார்த்திருந்தாள்.

"தனக்கு துணை!" என அழைத்து வந்த நண்பன் காதலியின் தோழியை பார்க்கும் பார்வையில் படர்ந்திருந்த ஆராய்ச்சியையும்,காதலியின் தோழி விழியில் தோன்றிய ஆர்வத்தையும் கண்டவன் இருவரையும் இவ்வுலகம் கொண்டுவரும் நோக்கோடு

"இம்கும்...." சத்தமாக செரும.

பெண்ணவள்," முதன்முதலில் பார்க்கும் ஓர் ஆணை இவ்வாறு ஆர்வமாக காண்பது தான் தானா!?" என்ற பிரமிப்பு தோன்றினாலும்;



வெட்கம் பிடுங்கித் தின்றது அவளுக்கு. நிமிர்ந்து ஆண்கள் இருவரையும் பார்க்க தயங்கி குனிந்து கொண்டாள்.

"ஐயோ! என்னடி பண்ணி வச்சிருக்க அவன் உன்னை என்ன நினைப்பான்!?போச்சு நீ ஒரு வழிஞ்சான் கேசுன்னு நினைக்க போரானுங்கடி இவனுங்க!"

புதியவனை வைத்த கண் வாங்காது பார்த்த தன் மடத்தனத்தை எண்ணி தனக்குள் திட்டி தீர்த்தாள்

ஆனால் ஆண்கள் இருவரும் ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை போல.

புதியவன் இரவு உணவை ஆடர் கொடுக்க தோழியின் காதலன் ஜோஸ்வா தான் இவளுடன் சகஜமாக பேசத் தொடங்கினான்.

பேச்சின் போக்கிலே இவளை மனம் நோகாது திசை திருப்பி,"இவளுக்கு என்ன வேண்டும்!?" என்று கேட்டு ஆடர் செய்தவன்; தனக்கு வேண்டியதையும் சேர்த்தே குறிப்பிட்டு சிப்பந்தியிடம் கூறி அனுப்பி இருந்தான்.

அவனுக்கு,"நன்றி" எனும் வார்த்தையை உண்மையாகவே மனதார வழங்கினாள்.

எல்லாம் அவளின் வெறிக்க வெறிக்க பார்த்த மடத்தனத்தை பெரிதாக எடுக்காது, கேலி செய்யாது, பெரிய மனதுடன் கடந்ததால் வந்த நன்றி உணர்வு தான் 'வேறு என்ன!?'

பின்தான் நியாபகம் வந்தவனாக நண்பன் புறம் திரும்பியவன்," ஷ்ரவன் இவங்க தான்டா கிறிஸ்டி ப்ரெண்ட் ரித்து!" என்று அறிமுகம் செய்தவன்

இவளின் புறமும் திரும்பி,"ரித்து இவன் என் நண்பன் ஆஜித் ஷ்ரவன்!" பரஸ்பர அறிமுகம் செய்தான்.

சம்பிரதாயமாக நிமிர்ந்து இவள் முகம் கண்டவன் நண்பனுக்கு பதிலாக தலை அசைப்பை கொடுத்து விட்டு கைபேசியில் வந்திருந்த அழைப்பை ஏற்க.

இவள் இதழ் மலர்ந்த புன்னகை காற்றோடு கரைந்தது தான் மிச்சம்.

"உனக்கு இந்த அசிங்கம் தேவைடி ரித்து!" என்று உள்ளாடி உணர்ந்த நேரம் தான் எதிரில் இருந்தவனின் மாறுபாடு அவளின் கண்களில் விழுந்தது.

அதுவரை அவன் முகம் மட்டுமே கண்டவள் இப்பொழுது தான் அவனை முழுதாய் காண்கிறாள்.

இவள் அவனை கண்ட நேரம் அவனும் இவள் விழியை கண்டவன் எதையோ தேடி அவன் எதிர்பார்த்தது நடக்காது போன ஏமாற்றம் இல்லாது போக சிறு மூரல் கொண்டான்.

நண்பன் புறம் திரும்பிய ஜோ சாதாரணமாக அவனை காண நண்பன் கண்கள் பிரதிபலித்த அதே அக்கறையை புதியவளின் கண்கள் பிரதிபலிப்பது கண்டு ஆச்சயம் கொண்டான்.

"ஆம்! விபத்தில் இரு கால்களும் செயல் திறன் இழந்தவன் அவன்!"

இருளில் ஒன்றும் அறியாது இருந்தவள், பின் வெளிச்சத்தில் அவன் வசீகர முகம் மட்டுமே கண்டவள், அலைபேசி அழைப்பை ஏற்க தன் தானியங்கி சக்கர நாற்காலியை சிறிது நகர்த்திய பொழுது தான் கண்டிருந்தாள்.

அவனின் நிலையை முதன்முதலில் காணும் யாவரும்,"இந்த ஆணழகனுக்கு இப்படி ஒரு குறையா!?" என்று அனுதாபமாகவோ அல்லது குதிரை அறிந்து தான் ஆண்டவன் கொம்பை படைக்கவில்லை என்று குறையாகவும் பொறாமையை வெளிப்படுத்தும் பார்வை பார்ப்பர்.

அதனால் தான் இவளின் விழி வெளியிட போகும் உணர்வு 'இவ்விரண்டில் எதுவாக இருக்கும்!?' என்று அறிய புதிதாய் தோன்றிய ஆவலில் இவன் பார்க்க.

இவனின் எதிர்பார்ப்பை ஏமாற்றமாக்கி கடந்தாள்.

'ஏனென்றா
ல்!?'

இவள் பாடம் கற்பிக்கும் பள்ளியில் பலர் இத்தகைய அபூர்வ மனிதர்களாகவே இருந்தனர்.

ஆதலால் தான் அவளால் இவன் நிலையை உடனே கடக்க முடிந்தது.

அத்துடன் சேர்ந்து நண்பன் விழியில் வழியும் நட்புடன் கூடிய அக்கறை இருக்க,
அவள் கண்களிலும் அதே அக்கறை இருந்தது.

அதுதான் அவனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
 
Top