Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

போய் வருகிறேன்

Advertisement

Vasantham

New member
Member
கல்லூரி அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. நான் என் இளைய மகளைப் பார்க்க சென்றிருந்தேன் அவள் இதே பெண்கள் கல்லூரியில் எம்எஸ்சி படிக்கிறாள். விடுதியில் தங்கியிருக்கும் அவளை வாரம் ஒருமுறை நான் பார்த்து செல்வது வழக்கம்.

"அம்மா! இந்தக் கல்லூரியில் என்ன விசேஷம்?"

"இன்று கல்லூரி விழா. நீங்கள் சுகந்தியின் அப்பா தானே!"

"ஆம். அவளை எங்கே அம்மா?"

" அதோ போகிறாள். நான் சென்று அவளை வரச் சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் போய் விட்டாள். அவள் சுட்டிக்காட்டிய திசையைப் பார்த்தேன்.

ஒரு பெண் ஒரு ஆடவனோடு ஒட்டி உரசி வந்துகொண்டிருந்தாள். எனக்கு வயது 50 க்கு மேல், கண் பார்வையும் கொஞ்சம் மங்கல் தான். எனவே கூர்ந்து கவனித்தேன். என் மகளைப் போலவே இருந்தது. கழிந்த மாதம் நான் எடுத்துக் கொடுத்த பச்சைப் பட்டை கட்டி இருந்தாள். அந்த பட்டும் அவள் நடையும் என் மகள் தான் என்பதை அடையாளம் காட்டின. அவளோடு கூடவா அந்த ஆடவன் செல்கிறான், ஆண்டவனே! அப்படி எல்லாம் இருக்கக் கூடாது, மனம் பிரார்த்தித்தது.

. என்னோடு பேசிய பெண் இப்போது அவளிடம் சென்று ஏதோ கூறினாள். உடனே அந்தப் பெண் (என் மகள் தான்) என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள் அந்த ஆடவனை வேறு வழியாய் அனுப்பிவிட்டாள்.

“அப்பா எப்படி இருக்கீங்க? அம்மா நலமா?”

தான் ஒரு ஆடவனோடு வந்து, பின் அவனை வேறு வழியாக அனுப்பிவிட்டு தான் மட்டும் இங்கு வந்து இருப்பதை நினைத்தோ, நான் அவளைப் பார்த்து விட்டேன் என்ற பதற்றமோ இல்லாமல் இயல்பாக கேட்டாள்.

“ உன்னோடு வந்தானே ஒருவன் அவனை எங்கே? உன் சகோதரன் என்று பொய் சொல்லித் தானே இந்த விடுதியில் நுழைந்து இருப்பான்? ஒரு நாளும் நீ இவ்வளவு அலங்காரம் செய்ததை நான் பார்த்ததில்லை. அவனோடு ஒய்யார நடை நடந்து வந்தாயே! உனக்கு வெட்கமாயில்லை?”

மனதினுள் இந்தக் கேள்விகள் எல்லாம் ஆரவாரித்தன. ஆனால் நானும் இயல்பாகவே சொன்னேன்.

“ அம்மா நலமாக இருக்கிறாள்”

அவளுடைய விழிகள் அவன் சென்ற வழியை அடிக்கடி நோக்கின. உடனடியாக அங்கே செல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவள் கண்களில் பிரதிபலித்தது. என்னைக் கோபமும் துக்கமும் கலந்து வருத்தியது. இப்போது ஒன்றும் கேட்க வேண்டாம். வீட்டிற்கு வரச் சொல்லி விசாரிக்கலாம் என்று நான் அதைப்பற்றி ஒன்றும் கேட்கவில்லை.

“ நன்றாக படிக்கிறாயா சுகந்தி ?"

அப்பா!. எங்கள் வகுப்பில் எனக்கு தான் முதல் மதிப்பெண். அப்பா! முன்னரே வந்து விட்டீர்களா?

“ ஆம். நீ உன் காதலனுடன் நடந்து வரும் போதே வந்து விட்டேன்” என்று மனம் கூறியது.

“ இல்லை. இப்பொழுது தான் வந்தேன்”

“ அப்பா, அடுத்த வாரம் நடக்க வேண்டிய கல்லூரி விழா ஏதோ காரணத்தால், முன்னரே இன்று வைத்து விட்டார்கள். நான் ஒரு நாடகத்தில் மணப்பெண்ணாக நடிக்கிறேன். தோழி நளினி மணமகனாக நடிக்கிறாள்.

இருவரும் விடுதியிலிருந்து ஆடை அலங்காரங்களை முடித்துவிட்டு விழா மேடைக்கு வந்து கொண்டிருந்தோம். அப்போது தான் மாலதி 'உன் அப்பா வந்திருக்கிறார்' என்று சொன்னாள். உடனே ஓடி வந்துவிட்டேன்"

ஏதோ ஒரு பெரிய விடுகதைக்கு விடை கிடைத்தது போல் மனம் துள்ளியது.

" அப்பா நீங்களும் நாடகத்தைப் பார்த்து விட்டுச் செல்லுங்களேன்" "வேண்டாம் அம்மா. நேரம் ஆகின்றது. போய் வருகிறேன்" மனது கூறியதையே வாயும் இப்போது கூறியது. என் மனதில் இருந்த சந்தேகப்பேயும் 'போய் வருகிறேன்' என்று சொல்லி விட்டு போய்விட்டது.
 
மிகவும் அருமையான சிறுகதை,
வசந்தம் டியர்

சந்தேகப் பேய் போயிட்டு வர வேண்டாம்
போயே போய் விடட்டும்ப்பா
 
மிகவும் அருமையான சிறுகதை,
வசந்தம் டியர்

சந்தேகப் பேய் போயிட்டு வர வேண்டாம்
போயே போய் விடட்டும்ப்பா
Thanks
 
Top