மனைவியே மந்திரமாய்

Advertisement

மனைவியே மந்திரமாய்!

மனைவி - 1

அதிகாலை மூன்று மணி. அந்த ஊரே ஆழ்ந்த உறக்கத்தில் நிசப்தமாக இருக்க, ஒருவள் மட்டும் அந்த வீட்டுக்குள் பம்பரமாக சுழன்று வேலை செய்து கொண்டிருந்தாள்.

அவள் பெயர் ராதை. மாநிறத்தில், வட்ட வடிவமான முகத்தைக் கொண்டவள். சற்று குட்டையான உருவம் தான் என்றாலும், பார்ப்பதற்கு அத்தனை நேர்த்தியாக இருப்பாள். தலைக்குக் குளித்துவிட்டு வந்திருந்ததால், அவளது ஈரமான தலைமுடி ஒரு துண்டால் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது. வெயில்
வகிட்டில் பளிச்சென்ற குங்குமப் பொட்டும், இரு புருவங்களுக்கு மத்தியில் ஒரு சிறிய வட்ட வடிவ பொட்டும் மின்னின.

கழுத்தில் ஒரு மஞ்சள் சரடில் கோர்க்கப்பட்ட தாலி மட்டுமே அவளது அணிகலன். ஒரு சாதாரண காட்டன் புடவையை உடுத்தி கொண்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தவள்

முகத்தில், ஏனோ தீராத சோகம் மட்டுமே அப்பி இருந்தது.

இப்பொழுதெல்லாம் அதிகாலையில் கோழிகள் கூடக் கூவுவது கிடையாது. ஆனால் ராதை இந்த வீட்டிற்கு வாழ்க்கைப்பட்டு வந்த நாளிலிருந்து, தினமும் மூன்று மணிக்கே எழுந்து விடுகிறாள்.

அந்த வீட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும் அவள் ஒரு மனுஷியாக தெரியவில்லை, இயந்திரத்தனமாக வேலை செய்யும் ஒரு வேலைக்காரியாகவே ஆகிப் போனாள்.

விறுவிறுவென வாசலில் கோலத்தை இட்டு முடித்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள். ஒரு அடுப்பில் பாலை வைத்து விட்டு, மற்றொரு அடுப்பில் பருப்பை குக்கரில் ஏற்றிவிட்டு வெளியே வந்தவள், வீட்டைப் பெருக்கித் துடைக்கத் தொடங்கினாள்.

அதற்குள் பாலும் பொங்கி வர, சமையல் வேலைகளையும் ஒரு கை பார்த்தாள். அனைத்து வேலைகளையும் முடிக்க ஐந்து மணி ஆனது.

ஐந்து மணி ஆனதை அவளுக்குத் தெரிவிப்பது அவளது வீட்டு கடிகாரம் அல்ல, அவளது மாமியார் கலையரசியின் குரல்தான். உடனே அவசரமாக அனல் பறக்க ஒரு பில்டர் காபியை எடுத்துக்கொண்டு, மாமியாரின் அறையை நோக்கிப் பதற்றத்தோடு சென்றாள்.

எச்சிலைக் கூட்டி விழுங்கியவள், மிகவும் நடுங்கிய குரலில், “அத்தை... அத்தை... காபி எடுத்துட்டு வந்திருக்கேன்,” என்று அறையின் வெளியே நின்றுகொண்டே குரல் கொடுத்தாள்.

“உள்ள வா! உனக்கு ஒரு காபி எடுத்துட்டு வர இவ்வளவு நேரம் ஆகுதா?” என்று உள்ளிருந்து அழுத்தமாக ஒலித்தது கலையின் குரல்.

கலை மருமகள்களுக்குக் கிடைக்கக்கூடிய மிகவும் மோசமான மாமியார் என்றுதான் அவரைச் சொல்ல வேண்டும்.

ராதை எப்பொழுதுமே அவர் கேட்கும் நேரத்திற்குச் சரியாகக் காபியைக் கொண்டு வந்து கொடுத்து விடுவாள். ஆனால், அவளைப் பாராட்டி அவர் பேசியதாக அந்த வீட்டுச் சரித்திரத்திலேயே கிடையாது.
அவள் எதைச் செய்தாலும் அதில் ஆயிரம் குறைகளைக் கண்டுபிடிக்கும் ஒரு சராசரி மாமியார் அவர்.

“சாரி அத்தை, கொஞ்சம் லேட் ஆயிடுச்சு,” என்று மிகவும் பவ்யமாக அவர் கையில் காபியைக் கொடுத்தாள்.

காபியை உறிஞ்சிக்கொண்டே தன் மருமகளை தலை முதல் கால் வரை ஒருவித ஏளனத்தோடு ஆராய்ந்தவர்,

“இப்ப நீ எங்க கிளம்பிட்ட? எதுக்கு இப்படி மினுக்கிட்டு நிக்கிற இவ்வளவு காலையில்?” என்று கேட்டார்.

அந்த வார்த்தையில் இருந்த விஷம் தைக்க, ராதையின் கண்கள் குளம் கட்டின. ஆனால் தன் கண்ணீரைத் உடைக்காமல் தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டவள்,

“எங்கேயும் போகல அத்தை, இன்னைக்கு வெள்ளிக்கிழமை... கோவிலுக்குப் போவேனே,” என்றாள் மெதுவான குரலில்.

“இப்ப நீ போய் சாமி கும்பிடலைன்னா கோவில் இடிஞ்சு விழுந்துடுமா? இல்ல சாமிதான் அழுதுடுமா? டெய்லி இதே பிழைப்பு தான் உனக்கு. வாராவாரம் கிளம்பிட வேண்டியது... கோவிலுக்குப் போறேன், குளத்துக்குப் போறேன்னு! உண்மையாவே நீ கோவிலுக்குத்தான் போறியா? இல்ல வேற எங்காவது போறியா? இல்ல எவனையாவது பார்க்கப் போறியா?” என்று எவ்வித மனசாட்சியும் இல்லாமல் கேட்டார் கலை.

அந்த வார்த்தைகள் அவள் இதயத்தை ரணமாக்க, ராதை மறுத்துப் போய் அங்கே நின்று கொண்டிருந்தாள். அவள் வாழ்நாள் முழுவதும் அவளுக்கென்று கிடைத்த ஒரே ஒரு ஆறுதல், ஒரே ஒரு சந்தோஷம் , அது வெள்ளிக்கிழமை தோறும் கோவிலுக்குச் செல்வது மட்டும் தான்.

அந்த ஒரு நாளும் தன் மாமியாரிடம் இது போன்ற அவமானங்களை அனுபவித்துவிட்டு தான் அவள் இந்த வீட்டை விட்டுச் செல்வாள். எதிர்த்துப் பேசினால் இந்த வீட்டில் வாழ முடியாது.

‘வாழாவெட்டி’ என்று முத்திரை குத்தப்பட்டு தாய் வீட்டிற்கும் செல்ல முடியாது; அவர்களும் இவளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்படியே அவளது இந்தத் திருமண பந்தம் வலிகளுடனேயே 13 ஆண்டுகள் ஓடிக்கொண்டிருக்கிறது.

“இல்ல அத்தை, உண்மையாவே நான் கோவிலுக்குத்தான் போறேன். காளி கோவிலுக்குத்தான் போறேன். உங்களுக்கு விருப்பம் இருந்தா நீங்க கூட வந்து பாருங்களேன்,” என்றாள் ராதை.

“சாமி தேடி நான் போகணும்னு அவசியம் இல்ல, சாமியே என்கிட்டதான் இருக்குது. முதல்ல கிளம்பிப் போ... என் கண் முன்னாடி நிக்காத!” என்றவள், தான் குடித்த காபி டம்ளரை அவள் பக்கம் விசிறி எறிந்தாள்.

மறுவார்த்தை பேசாமல் அந்த டம்ளரை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவள், சமையலறையில் நின்று குமுறி குமுறி அழுதாள்.

அவளுக்கென்று இந்த வீட்டில் இருந்த ஒரே புகலிடம் அந்தச் சமையலறை மட்டும்தான்.

“ஏய்! அங்க நின்னு அழுது சாப்பாடெல்லாம் வேஸ்ட் பண்ணிடாத. உன் கண்ணீர் கூட அங்க இருக்கிற எதிலும் படக்கூடாது. பிள்ளைகள் சாப்பிடற சாப்பாட்டில் உன் கண்ணீர் விஷத்தைக் கலக்காத,” என்று வஞ்சகமாக அவர் கத்திய குரலில், ராதையின் அழுகை கூட உறைந்து போய் மறைந்துவிட்டது.

“அத்தை, எல்லா வேலையும் முடிச்சுட்டேன், நான் கிளம்பவா?” என்று கேட்டாள்.

“என்னென்ன வேலை செய்து முடிச்சிருக்க நீ?” என்று அதட்டினார் கலை.

“வாசல் பெருக்கி கோலம் போட்டுட்டேன், எல்லா இடத்தையும் பெருக்கிட்டேன், வீட்டையும் தொடச்சிட்டேன். சமையல் வேலை முடிச்சுட்டேன், பாத்திரம் எல்லாம் கழுவிட்டேன். துணியும் வாஷிங் மெஷின்ல போட்டு எடுத்து காய வச்சிட்டேன் அத்தை.”

“மொட்டை மாடி கிளீன் பண்ணியா?”

“பண்ணிட்டேன் அத்தை.”

“எல்லாருக்கும் டீ போட்டு வச்சியா?”

“பிளாஸ்கில் ஊத்தி வச்சிருக்கேன் அத்தை.”

“மாப்பிள்ளைங்க ஷூ எல்லாம் தொடச்சி வச்சியா?”

“வச்சிட்டேன் அத்தை.”

“என் பேரப்பிள்ளைங்க ஸ்கூல் பேக் எல்லாம் ரெடி பண்ணி வச்சியா?”

“எல்லாமே ரெடியா இருக்கு அத்தை. வாட்டர் பாட்டில்ல தண்ணி கூட ஊத்தி வச்சுட்டேன்.”

“சரி கிளம்பி தொலை! இன்னைக்கு ஒரு நாளாவது என் பொண்ணுங்க நிம்மதியா சாப்பிடட்டும்,” என்று அவர் சொன்னதும் ராதையின் உள்ளம் உண்மையாகவே கதறியது.

அந்த வீட்டில் தான் ஒரு அந்நியப் பொருள் என்பதை அந்த வார்த்தை மீண்டும் ஒருமுறை உரக்கச் சொன்னது.

வேகமாக தன் அறைக்குள் வந்தாள். மூன்று அடி கட்டில் மட்டுமே அந்தச் சிறிய அறைக்குள் அடங்கியிருந்தது. ஒரு ஆள் மட்டும் நடந்து போகக்கூடிய மிகக் குறுகிய இடம் அது.

தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து கட்டில் பலகை மீது விரித்தவள், தன் ஈரக் கூந்தலை ஒதுக்கி ஒரு ரப்பர் பேண்ட் போட்டுக் கொண்டாள்.

அவள் கைகளில் வெறும் கண்ணாடி வளையல்கள்... அதுவும் சத்தம் வரக்கூடாது என்பதால் கையில் ஒன்றே ஒன்றுதான் அணிய வேண்டும் என்பது அந்த வீட்டு விதி. அதை அணிந்து கொண்டு, முகத்திற்கு லேசாக பவுடர் மட்டும் பூசியவள், தன்னை ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள்.

“நீதானா ராதை?” என்று தினம் தினம் தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்து அந்தப் பிம்பத்திடம் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.

இத்தனை வருடங்களில் ஒரு நாளும் அவளால் அவளுக்கே பதில் சொல்ல முடியவில்லை. பல நாட்கள் கண்ணாடியைப் பார்ப்பதையே அவள் வெறுத்திருக்கிறாள்.

இன்றும் கண்ணாடியில் தெரிந்த உருவம் அவளிடம் பேசவில்லை. அங்கிருந்து நகர்ந்தவள், வீட்டில் உள்ள அனைவரும் எழுவதற்கு முன்னமே கிளம்பிவிட வேண்டும் என்ற அவசரத்தில் வெளியே வந்து, செருப்பை மாட்டிக்கொண்டு வீதியில் நடக்கத் தொடங்கினாள்.

மணி ஐந்து முப்பதுதான் ஆகிறது. வீதியில் ஒருவர் கூட இன்னும் எழுந்திருக்கவில்லை. இவ்வளவு சீக்கிரமாக அவள் கோவிலுக்குச் செல்வதற்குக் காரணமே வேறு.

ஆறு மணிக்குத்தான் கோவிலின் கதவை திறப்பார்கள். அதுவரை பொறுமையாக நடந்து சென்றாள். அவளைக் கடந்து சென்ற ஒரு சிலர் அவளைப் பாவமாகப் பார்த்துவிட்டுத் தங்களுக்குள் பேசிக் கொண்டே சென்றனர்.

அந்தப் பாவமான பார்வைகளும், முதுகுக்குப் பின்னால் பேசப்படும் வசைச்சொற்களும் அவளுக்கு இப்போது பழகிப் போயிருந்தது.
பொறுமையாகக் கோவிலுக்கு வந்து சேர்ந்தாள். அப்பொழுதுதான் கோவிலைத் திறந்து வாசலில் ஒரு பெண் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார் குருவம்மா.

“வாம்மா ராதை, உள்ள போய் உட்காரு. நான் கோலம் போட்டுட்டு வரேன்,” என்று கோவிலில் வேலை செய்யும் குருவம்மா அவளைச் சிரித்த முகமாக வரவேற்றார்.

அவளிடம் அன்பாக பேசும் ஒரு சில நபர்கள் இந்தக் கோவிலில் தான் இருக்கிறார்கள். இங்கேதான் அவள் தன் நிம்மதியை காண்கிறாள்.

“அக்கா, நான் கோலம் போடவா?” என்று ராதை கேட்டாள்.

“ஏம்மா... ஒரு அஞ்சு நிமிஷம் கூட உன்னால சும்மா உட்கார முடியாதா? ஏற்கனவே முகம் வாடிப் போய் தான் வர்ற... நான் கோலம் போட்டுட்டு உனக்குக் குடிக்க ஒரு காபி எடுத்துட்டு வரேன், அங்கே உட்காரு,” என்றார் குருவம்மா.

அந்த அன்பான வார்த்தைகளில் ராதையின் கண்கள் பனித்தன. இது போன்ற கனிவான வார்த்தைகளைத் தன் குடும்பத்தில் அவள் கேட்டதே இல்லை. ஏன், கட்டிய கணவன் கூட அவளிடம் இப்படிப் பேசியது கிடையாது.

கண்கள் கலங்க அம்மன் முகத்தைப் பார்த்தபடி ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்தவள், தன் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் விம்மினாள்.

“உன்கிட்ட கேட்டு கேட்டு எனக்குச் சலிச்சுப் போச்சு. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல ஆத்தா. அவர் வர்றாரு... அவர் வந்தா என் வாழ்க்கை மாறுமான்னு தெரியல, இல்ல இன்னும் மோசமாப் போகுமான்னும் புரியல. அவர்தான் அவங்க அம்மா பேச்சைத் தாண்டவே மாட்டாரே! கல்யாணம் பண்ணி 13 வருஷம் ஆகுது. கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் கூடத் தங்காம என்னை விட்டுட்டுப் போன மனுஷன், இந்த 13 வருஷத்துல ஒரே ஒரு முறை தங்கச்சி கல்யாணத்துக்காக மட்டும் வந்தாரு. அதுவும் ஒரு வாரம்... அப்போ கூட என்கிட்ட நின்னு கூட பேசல. அவரு இப்ப மட்டும் வந்து என்ன பண்ணுவாரு?” என்று வாய்விட்டு அம்மனிடம் அழுது புலம்பிக் கொண்டிருந்தவளுக்குச் சுற்றியிருந்த உலகம் மறந்து போனது.

அவளுக்குக் காபி போட்டு எடுத்து வந்த குருவம்மா
காதுகளில் ராதை பேசிய வேதனையான வார்த்தைகள் விழுந்தன. அதைக் கேட்டதும், அறியாமலேயே அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
இதென்ன கொடுமையா இருக்கே நல்ல குடும்பம் நல்ல புருஷன் வெளங்கிடும்
 
ராதை 😔😔😔😔😔
மாமியார் 🤬🤬🤬🤬🤬
மனைவியேக்கு பதில் தாயேனு வெச்சி இருக்கலாம் போல 😏😏😏😏
யாருடா அந்த புருஷன் 🙄🙄🙄
 

Advertisement

Advertisement

Back
Top