மனைவி 2

Advertisement

Nivi Ammu

Well-known member
Member
மனைவி - 2

புடவையின் முந்தானையை மெல்ல உயர்த்தித் தன் விழியோரம் கசிந்த கண்ணீரைத் துடைத்து கொண்ட அந்தத் தாய், மனதிற்குள் குமைந்து போயிருந்தார்.

"இந்தப் பொண்ணோட வாழ்க்கை எப்பதான் மாறுமோ தெரியலையே! சுயமாகத் தனித்து வாழவும் முடியாமல், போன இடத்தில் குடும்பத்தோடும் ஒட்டி வாழ முடியாமல் இப்படித் தவிக்கிறாளே...

இந்தத் துர்பாக்கிய நிலை வேறு எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது. இறைவா! சீக்கிரம் அந்தப் பெண்ணுக்கு ஒரு நல்ல வழியைக் காட்டு. அவள் பிரிந்து வாழும் புருஷன் கூடப் போய் வாழணும்னாலும் சரி, இல்லை இங்கே நிம்மதியாகத் தன் குடும்பத்தோடாவது இருக்கட்டும்..." என்று அந்த அன்னையின் முன்னே நின்று விம்மலுடன் வேண்டுதல் வைத்தவர், அவள் முன்பாக ஆவி பறக்கும் காபியை வைத்தார்.

ஆழ்ந்த யோசனையில் கசிந்த தன் கண்ணீரைத் துடைத்து கொண்டு சட்டென நிமிர்ந்து அமர்ந்தவள், "உங்களுக்கு எதுக்கு எதுக்கு இந்தச் சிரமம்? வாராவாரம் நான் வந்தாலே இதே வேலை தான்உங்களுக்கு?" ஆதங்கமாக கேட்டாள்.

அவர் எதற்கும் பதிலளிக்காமல் ஒரு மெல்லிய புன்னகையோடு அங்கே நின்றவர், "காபி சூடா இருக்கு... ஆறிப் போகும் முன் குடி" என அந்தப் பாத்திரத்தை அவள் அருகில் மெல்ல நகர்த்தி வைத்தார்.

அதிகாலை மூன்று மணியிலிருந்து ஓடிக்கொண்டிருக்கும் கால்கள் வலித்ததோ இல்லையோ, அது அவளுக்கே தெரியவில்லை. ஆனால், அந்தச் சூடான காபி அவள் தொண்டையில் மெல்ல இறங்கும் பொழுது, அத்தனை விதமான இதத்தைத் தந்தது. வேலையின் வேகத்தில் ஒருவேளைச் சாப்பாட்டைக் கூட அவள் அடிக்கடி மறந்துவிடுகிறாள்.

"என்னம்மா... அங்க போகலையா?"

"இல்லக்கா, கொஞ்சம் லேட்டாதான் போவேன்..." எனக் பதிலளித்தாள். குருவம்மா அங்கே அவள் முன்பாகவே அமர்ந்திருந்தால், எங்கே தன் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிடுவோமோ என்ற பயத்தில் அங்கிருந்து சட்டென எழுந்து சென்றுவிட்டார்.

அந்தக் காபியை ஒரு சொட்டுக் கூட மிச்சம் வைக்காமல் ருசித்துக் குடித்தவளுக்கு, அதன் இனிப்பை உணரக்கூட முடியாத அளவுக்கு மனபாரம் அழுத்திக் கொண்டிருந்தது. இனி வரப்போகும் எதையும் தாங்கிக் கொள்ளும் ஒருவிதமான மன பக்குவத்துடன், அங்கிருந்த அம்மனை ஒரு முறை மனதாரத் தொழுதுவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

"என்னம்மா... உன் மருமக ஜாலியா கிளம்பிட்டாளா?" அலர்விழி தன் கண்களைத் துடைத்தபடி வெளியே வந்து அமர்ந்தாள்.

"அவளுக்கென்ன... ஊர் ஊரா கிளம்பிடுவா!" என அலட்சியமாக பதிலளித்தாள் கலை.

அலர்விழி, கலையின் இரண்டாவது மகள். திருமணமாகி பதினாறு வருடங்கள் உருண்டோடிவிட்டன. இந்த பதினாறு வருடங்களும் தன் பிள்ளைகளுடன் தாய் வீட்டிலேயேதான் தஞ்சம் புகுந்திருக்கிறாள். புகுந்த வீட்டிற்குச் செல்லவே அவளுக்கு விருப்பமில்லை. தன் கணவனையும் எப்படியோ பேசி இங்கேயே தங்கிவிட செய்துவிட்டாள். திருமணம் ஆனவுடனேயே அவர்கள் செய்த முதல் வேலை, அதுவரை ராதை தங்கி இருந்த அந்தச் பெரிய அறையைத் தன் வசப்படுத்திக் கொண்டதுதான்.

அரவிந்த், சத்யன் என்று தோளுக்கு உயர்ந்த இரு பிள்ளைகள் வளர்ந்திருந்தும், அந்தப் பிள்ளைகள் இதுவரை தன் அப்பாவின் சொந்தங்களை நேரில் பார்த்ததும் இல்லை; அந்த வீட்டு வாசற்படியை மிதித்ததும் இல்லை.

"உங்களுக்குத்தான் ஆக வேண்டிய காரியம் எல்லாம் முடிந்துவிட்டதே? அப்புறம் என்ன? அவங்க எங்கயாவது கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்கட்டும். எதுக்குத்தான் நீங்க இப்படிப் பதற்றப்பட்டுப் பறக்கிறீங்க?" என அவர்கள் மீது எரிந்து விழுந்த படி கேட்டான் அலர்விழியின் கணவன் பிரபாகரன். ராதை கலந்து வைத்திருந்த தேநீரைத் தானாகவே கப்பில் ஊற்றியபடி அவன் இதைச் சொன்னான்.

அவன் பேச்சைக் கேட்டதும் அலர்விழி மற்றும் கலை இருவரின் முகமும் சுளித்தன.

"அவளை ஏதாவது ஒரு வார்த்தை சொன்னா போதும், இவருக்கு உடனே எங்கிருந்துதான் கோபம் வருமோ தெரியல! என்ன மாயமோ தெரியல, எப்பப் பார்த்தாலும் அவளுக்கே சப்போர்ட் பண்ணிட்டே இருக்காரு இந்த மனுஷன். எனக்குப் புருஷன் தான், ஆனா எனக்கு ஒரு நாளாச்சும் இப்படி ஆதரவாப் பேசினது உண்டா?" என அலர்விழி மீண்டும் எரிந்து விழுந்தாள்.

"சப்போர்ட் பண்ற மாதிரி நீ என்னைக்காவது உருப்படியா நடந்திருக்கணும். எப்பவும் யாருமே நல்லா இருக்கக் கூடாது, சொந்த அண்ணனா இருந்தாலும் அவன் நாசமாப் போயிடணும்னு நினைக்கிற ஆட்கள் நீங்க. நடத்துங்க... என்னைக்காவது ஒரு நாள் அவன் உண்மையை நிதானமாகப் புரிஞ்சுப்பான். அன்னைக்கு உங்க மொத்தப் பேரும் தெருவில் வந்து நிக்க போறீங்க. உன்கிட்ட எல்லாம் பேசி நேரத்தை வீணாக்குறதே வேஸ்ட்!" என்று அவளின் முகத்துக்கு நேராகத் திட்டித் தீர்த்து விட்டு விறுவிறுவென வெளியே சென்றுவிட்டார் பிரபாகரன்.

பிரபாகரன் அடிப்படையில் ஒரு மிகச் சிறந்த மனிதர் தான். ஆனால், அலர்விழியைத் திருமணம் செய்த பிறகு அவளின் அதிகப்படியான மிரட்டல்களுக்கும் பிடி வாதங்களுக்கும் கட்டுப்பட்டு போய் இங்கேயே தங்கிவிட்டார். அவர் தன் வாழ்வில் எடுத்த சில ரகசிய முடிவுகள் இவர்களுக்குத் தெரிய வரும் பொழுது, காலம் வெகு தூரம் சென்றிருக்கும்.

அலர்விழியை அவர் மனதார வெறுத்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், இங்கே தங்கி இருப்பதற்குக் காரணம் தன் இரு மகன்கள் மட்டுமே என்பது அவளுக்குத் தெரியாது. ஏதோ தன் கணவன் தனக்குக் கட்டுப்பட்டுத்தான் தன்னோடு இருக்கிறான் என்று வெளியில் வீணாகப் பெருமை பீற்றிக் கொள்கிறாள்.

"அலர், உன்கிட்ட பல முறை சொல்லியிருக்கேன். மாப்பிள்ளை கிட்ட மரியாதை இல்லாம இப்படி எரிஞ்சு விழுந்து பேசாதே. கொஞ்சமாவது அன்பா நடந்துக்கோ. மாப்பிள்ளையை எப்படி கைக்குள்ள வச்சுக்கணும்னு கத்துக்கோ. இப்படிப் பேசிட்டே இருந்தா அது நமக்கு நல்லதுக்கில்ல," எனத் தன் மகளைக் கண்டித்த கலை, பின் "மாப்பிள்ளை, முகம் கழுவிட்டு வாங்க, சாப்பாடு எடுத்து வைக்கிறேன்," என்றார்.

"எனக்கு பசிக்கும் போது நானே சாப்பிடுகிறேன். அதை யாராவது எடுத்து வைத்து தான் நான் சாப்பிடணும் என்கிற அளவுக்கு என் கை ஒன்றும் விளங்காமல் போய்விடவில்லை. நீங்க ஏதோ வேலை செஞ்ச மாதிரி நடிக்கிற லட்சணம் தான் தெரியுமே!" என்று குத்தலாக பேசிவிட்டு மீண்டும் அறைக்குள் சென்று விட்டான்.

கலையின் முகம் அப்படியே கருத்துப் போனது. மூடிய கதவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு தன் மகள் மீது தான் கடும் கோபம் வந்தது. 'புருஷன் கிட்ட அன்பா நடந்துக்க. ஒரு நாள் கூட என் பேச்சைக் கேட்க மாட்டேங்கறாளே... இவளை என்னதான் பண்றதுன்னே தெரியலையே!' என்று யோசனையோடு மீண்டும் தன் மகள் அருகிலேயே அமர்ந்து கொண்டார்.

ஆனால் அலர்விழியோ இதைப் பற்றி எள்ளளவும் கவலைப்படவில்லை. மிக நிதானமாகத் தன் கால் நகங்களுக்கு நெயில் பாலிஷ் வைத்துக் கொண்டிருந்தாள். அந்தச் சமயம், "அம்மா, அவருக்குக் காபி வேணுமாம்..." எனக் கேட்டபடி அங்கே வந்தாள் கலையின் இரண்டாவது மகள் மலர்விழி.

"டீ அங்கே இருக்கு பாரு, அதை ஊத்தி எடுத்துட்டு போய்க் கொடு."

"இல்லைம்மா, அவர் காபி தான் வேணும்னு கேட்கிறாரு. நீயே போய் சூடா போட்டுக் கொடு," என்று மலர்விழி பிடிவாதமாகக் கத்தினாள்.

"இப்படி கத்தித் தொலையாதே, கொஞ்ச நேரம் அமைதியா இரு. நானே போய் போட்டு எடுத்துட்டு வரேன்," என்று அலுத்துக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்த கலையை, அந்தச் சமையலறை ஒரு கணம் மிரட்டியது. அது அவருக்குக் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது.

ராதை அந்த வீட்டிற்கு மருமகளாக வந்த நாளிலிருந்து ஒரு சுடுதண்ணி வைப்பதற்கு கூட அவரும் அவர் மகள்கள் இந்தச் சமையலறைக்குள் நுழைந்ததே கிடையாது. ஒரு முழுநேர சமையல்காரியும், கைக்கு அடக்கமான வேலைக்காரியும் கிடைத்துவிட்டாள் என்ற மமதையில் இருந்த கலையம்மாவுக்கு, இப்போது காபி போட கூடத் தெரியவில்லை; காபி பவுடர் எங்கே இருக்கிறது என்பதும் தெரியவில்லை.

எதையோ தட்டித் தடுமாறி எப்படியோ ஒரு காபியைப் போட்டுக் கொண்டு வந்து மகளிடம் கொடுக்க, "ஒரு காபி போடுறதுக்கே இவ்வளவு நேரமா ஆக்குவ? உனக்கு ஒரு காபி கூட சீக்கிரமாப் போட்டுத் தரத் தெரியல... என்ன பொம்பளையோ நீ!" என்று தன் பெற்ற தாயையே திட்டித் தீர்த்து விட்டு, மலர்விழி அந்தப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள்.

'தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை' என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்? கலை தன் குணத்திலேயே தன் பெண்களையும் வளர்த்துவிட்டார். அதனாலேயே இரு பெண்களும் மாமியார் வீட்டில் வாழ முடியாமல், அம்மா வீட்டிலேயே அண்ணன் பணத்தில் உண்டு கொழுத்துத் தங்கிவிட்டனர்.

கலைக்குத் தன் மகன்கள் குறித்து வருத்தமே இல்லை. தன் மாப்பிள்ளைகள் இருவரும் தன் மகள்கள் கட்டுப்பாட்டில் 'வீட்டோடு மருமகனாக' இருப்பதையும், மகள்கள் தன்னைப் பிரிந்து செல்லாமல் தன் கண்ணெதிரே இருப்பதையும் நினைத்துப் பெருமையாக மார்தட்டிக் கொள்கிறார். ஆனால், நிதர்சனம் ஒரு நாள் தலைகீழாக மாறும் என்ற உண்மை பாவம் அவருக்குப் புரியவில்லை.

மலர்விழியின் கணவன் அசோகன் ஒரு வங்கியில் மேலாளராக இருக்கிறான். அவன் நல்லவன் என்று சொல்லிவிட முடியாது, அதே சமயம் கெட்டவன் என்றும் முத்திரை குத்தி விட முடியாது. திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகியும் இதுவரை அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. ஆனால், அதற்காக இருவருமே பெரிதாக வருத்தப்பட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை.

ராதை இரவு பத்து மணி போல் வீட்டிற்குள் நுழையும் போது அங்கே சுடுகாட்டு அமைதி நிலவியது. அலர், மலர் இருவரும் அறைக்குள் முடங்கித் தங்கள் தொலைபேசியில் வீடியோ பார்த்துக் கொண்டிருக்க, மாமியார் கலையம்மாளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

சலிப்பான ஒரு பெருமூச்சுடன் சமையலறையை எட்டிப் பார்த்தவளுக்கு மீண்டும் ஒருமுறை வெறுப்பு மேலிட்டது. காலையில் அந்தச் சமையலறையை ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி போல பளபளவென துடைத்து வைத்துவிட்டுத்தான் சென்றிருந்தாள். ஆனால், சமைத்த உணவுகளை போட்டுச் சாப்பிட்ட தட்டுகளை கூடக் கழுவாமல் அப்படியே போட்டு இருந்தது அந்த இடம் அலங்கோலமாகக் கிடந்தது. பாத்திரம் கழுவும் தொட்டி முழுவதும் எச்சில் பாத்திரங்கள் நிரம்பி வழிந்தன. கலை போட்ட அந்த ஒரே ஒரு காபிக்கு, அந்த அடுப்படி முழுவதும் போர்க்களம் போல நாசம் செய்யப்பட்டிருந்தது.

'இதை நான் தான் மீண்டும் செய்தாக வேண்டும். இங்கிருப்பவர்கள் யாரும் எனக்காக இதைச் செய்யப் போவதில்லை. என் தலையெழுத்து அப்படி... நான் வாங்கி வந்த வரமே இதுதான்!' என்று தனக்குள்ளே சமாதானம் சொல்லிக் கொண்டு, தன் புடவை முந்தானையை எடுத்து இடுப்பில் இறுக்கச் சொருகிவிட்டு, மீண்டும் ஒரு பம்பரமாகச் சுழன்று வேலை செய்யத் தொடங்கினாள்.​

அவள் அன்று காலை முதல் சாப்பிட்டாளா? அவளுக்குத் தேவையான சாப்பாடு அங்கே இருக்கிறதா? என்று கேட்பதற்குக் கூட அந்த வீட்டில் ஒரு ஜீவன் கூடக் கிடையாது.

அதற்காகக் கூட இன்று அவளிடம் கண்ணீர் வரவில்லை. பதிமூன்று வருடங்களாக அழுது அழுது அவள் கண்கள் வற்றிப் போயிருந்தன. இனிமேல் மட்டும் அவளது தலையெழுத்து மாறிவிடுமா என்ன? இல்லை, காலம் காலமாக அவள் சிந்தும் கண்ணீரை அந்த ஆண்டவனாவது வந்து துடைத்துவிடுவானா என்ன
 
அலர், மலர் யாரு இரண்டாவது மகள், ரெண்டு பேரையும் ரெண்டாவது makalnnu சொல்லி இருக்கீங்க
 

Advertisement

Advertisement

Back
Top