மனைவி - 26
கணவனைப் பிரிந்து விட வேண்டும் என்கிற வைராக்கியத்தோடு, கல் நெஞ்சைச் சுமந்து கொண்டு வந்த ராதை கூட, அவன் அப்படி நிலைகுலைந்து விழுந்தது கண்டதும் தன் சபதங்களை மறந்து துடித்துப் போனாள். அவளையும் அறியாமல் ஒரு பதற்றம் அவளைத் தொற்றிக்கொண்டது.
அவள் ஓடி வந்து தன் கணவனை தொட முயன்ற அந்த வேளையில்,
"ஏய்! என் புள்ள பக்கத்துல வராத... தள்ளி போடி!" என்று கலை கத்தினார். அந்த இக்கட்டான சூழலிலும் தன் பிடிவாதம் இம்மியும் குறையாமல், அவளை ஒரு தெரு நாயைப் போல மிகக் கேவலமாக விரட்டினார்.
சட்டென்று முன்னே வந்த பிரபாகரன், ராதையின் கையை அழுத்திப் பிடித்து தடுத்து, அவளைத் தன் பக்கம் இழுத்து நிறுத்தினான்.
"நீ அமைதியா இருடா. ராதை... அவனுக்கு ஒன்னும் ஆகல. பெரிய அதிர்ச்சியில மயங்கிட்டான், அவ்வளவுதான். தேவையே இல்லாம இவங்க கிட்டப் போய் அசிங்கப்படணும்னு உனக்கு எந்த அவசியமும் இல்லை," என்று பிரபாகரன் கரகரப்பான குரலில் சொன்னான்.
அலர், எதையும் கவனிக்காமல் பிரபாகரன் ராதையின் கையைப் பிடித்திருந்த அந்த இடத்தையே ஒருவித வெறி கொண்டு பார்த்தபடி சிலையாக நின்றிருந்தாள்.
சிறிது நேரம் கழித்து, ஸ்ரீராம் மெல்லக் கண் விழித்துப் பார்த்தான்.
ஒரு குறுகிய அறைக்குள், பழக்கப்பட்ட அந்தக் கட்டிலில் தான் கிடக்கிறோம் என்பது விழித்த அடுத்த நொடியே அவன் மண்டைக்குள் உரைத்தது.
சுவர்களில் பெயிண்ட்கள் எல்லாம் உரிந்து போய் அசிங்கமாகக் காட்சியளித்தன. போதிய காற்று கூட வராமல் மூச்சு முட்டும் அந்தச் சிறிய அறை.
"இதுதானா என் வாழ்க்கை? இதற்காகவா நான் இத்தனை ஆண்டுகள் அந்நிய தேசத்தில் மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்தேன்?" - நினைக்கும்போதே அவன் கண்கள் குளமாயின.
படுத்திருந்தவனின் இரு விழிகளிலிருந்தும் கண்ணீர் தாரை தாரையாகக் கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தது.
மெல்லத் தன் கண்ணீரைத் துடைத்துவிட்டு, ஒரு நிமிடம் அந்த வெறிச்சோடிய அறையைப் பார்த்து விட்டு எழுந்து அமர்ந்தான்.
அறைக் கதவு லேசாக திறந்திருந்தது. அவன் எழுந்திருப்பதைப் பார்த்ததும், மலர் பதறியடித்துக் கொண்டு அவனை நோக்கி ஓடி வந்தாள்.
"அண்ணா... எழுந்துட்டியா? உனக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு தெரியாம நாங்க எல்லாம் பதறிப் போயிட்டோம் அண்ணா. மனசே துடிச்சுப் போயிருச்சு. அம்மா அங்கே அழுதுட்டே இருக்காங்க. வா... வந்து அம்மாவைப் பாரு அண்ணா," என்று மலர் தன் கண்களில் இல்லாத கண்ணீரை வரவழைக்க முயன்று, பொய்யாகக் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
ஸ்ரீராம் தன் தங்கையின் முகத்தை இமைக்காமல் கூர்மையாகப் பார்த்தான். உண்மை எது, பொய் எது என்று அவனுக்குப் புரியத் தொடங்கிய அந்த நிமிடத்தில், அவள் பூசியிருந்த அந்தப் பாச முகமூடி கழன்று சாயம் வெளுத்துப் போனது.
அவள் பேசுவதைக் கேட்க பிடிக்காமல் ஸ்ரீராம் திரும்பி நிற்க, மலரின் அந்தப் பதற்றமான முகம் அடுத்த நொடியே சாதாரணமாக மாறியது.
"அண்ணா... அம்மாவ வந்து பாரு. உனக்காக அம்மா துடிச்சுப் போய் இருக்காங்க. இப்ப கூட அம்மா அங்கே படுத்த படுக்கையா இருக்காங்க," என அவள் மிகச் சாதாரணமாகப் பேசினாள்.
அவளுடைய வினாடிக்கு ஒரு முறை மாறும் முகபாவனைகள் அனைத்தையும், சுவரில் மாட்டியிருந்த அந்தச் சிறு கண்ணாடி வழியாக ஸ்ரீராம் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.
அவன் ஏதும் பேசவில்லை. கனத்த இதயத்தோடு அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.
அங்கே அலர் ஒரு நாற்காலியில், சூடு கண்ட பூனையைப் போல ஒருவித படபடப்புடன் அமர்ந்திருந்தார். ஸ்ரீராம் வெளியே வருவதைப் பார்த்ததும், தன் மனதிற்குள் இருந்த குழப்பங்களை அவசர அவசரமாக ஒதுக்கி வைத்தவள்,
"அண்ணா... உனக்கு இப்போ ஒன்னும் இல்லையே? உனக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம கொஞ்ச நேரத்துல நாங்களும் அம்மாவும் பைத்தியமே பிடிச்ச மாதிரி ஆயிட்டோம் தெரியுமா?" என்று அலரும் தனக்கு எதுவுமே தெரியாதது போன்ற பாவனையில் பேசினாள்.
அவர்கள் ஒவ்வொருவரின் முகத்தையும் பார்க்கப் பார்க்க, ஸ்ரீராமுக்குள் அவனது மனம் ஒரு கண்ணாடிச் சில்லுகள் போலச் சுக்குநூறாக உடைந்து சிதறியது. அவனுக்குப் பக்கத்தில் இருந்த ரத்த பந்தங்களே அவனுக்குச் செய்த அந்தப் பெரும் துரோகம் அவனை நிலைகுலையச் செய்தது.
அவனுக்குள் இதயம் சுக்குநூறாக உடைந்து சிதறியது. ஒவ்வொரு துகளும் கூர்மையான சில்லுகளாக மாறி அவனது ஆன்மாவைக் கீறி ரத்தத்தைச் சொட்டவிட்டது.
இவ்வளவு பெரிய உண்மை... அப்பட்டமான ஒரு நிஜம் நடுத்தெருவில் வந்து நின்ற பிறகும், இவர்கள் எப்படி ஒன்றுமே தெரியாதது போல் இத்தனை இயல்பாக நடிக்கிறார்கள்? இத்தனை வருடங்கள், ஒரு ஜென்ம காலத்தையே அல்லவா என்னிடம் மறைத்துத் தொலைத்திருக்கிறார்கள்! அந்த வஞ்சகத்தை நினைக்கும்போது அவர்களுக்குக் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி ஏற்படவில்லையா? "ஐயோ, உண்மை தெரிந்து நாம் மாட்டிக்கொண்டோமே" என்கிற நடுக்கம் கூடவா அவர்கள் கண்களில் இல்லை?
இவர்களுக்கு நான் நல்லது மட்டும் தான் செய்தேன். என் வியர்வையை, ரத்தத்தை, உழைப்பை எல்லாம் இவர்களுக்காகத் தானே கொட்டினேன்? இவர்கள் ஏன் எனக்கு இப்படி ஒரு கொடுமை செய்து வைத்திருக்கிறார்கள்?
அப்படி என்ன பாவம் செய்தேன் நான்? பெற்ற தாய்க்கும், கூடப் பிறந்த தங்கைகளுக்கும் அவர்கள் சுகமே பெரிதென்று வாழ்ந்தேனே...
ஒரு சொந்த அண்ணனுக்கு, தன் ரத்தமான மகனுக்கு இப்படித் துரோகம் செய்ய இவர்களுக்கு எப்படி மனம் வந்தது? இந்த ரணமான கேள்விகள் ஒவ்வொன்றும் அவனுக்குள் ஓராயிரம் இடிச்சத்தங்களாக வெடித்துக் கிளம்பின.
"அண்ணா… அம்மாவ பாரு... நீ வந்து பேசினாத்தான் அம்மா சாதாரணமா மாறுவாங்க. மொத்தமா உடைஞ்சு போயிட்டாங்க. பயத்துல அவங்க அவங்களாவே இல்லை. உனக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு எங்களுக்குள்ள துடிச்ச அந்தத் துடிப்பு இருக்கு பாத்தியா..." என்று அலரும் மலரும் ஒரே குரலில், முன்னரே ஒத்திகை பார்த்தது போல பேசினார்கள்.
'இவ்வளவு நேரம் உள்ளே உட்கார்ந்து கொண்டு, எப்படிப் பேசினால் இவனை வீழ்த்தலாம் என்று இரண்டு பேரும் கோடி கோடியாய் ஒத்திகை பார்த்தது இதற்குத்தானா?' அசோக் தனக்குள் கசப்புடன் நினைத்துக் கொண்டான்.
அவர்களின் அந்த மிகையான நடிப்பு அவனுக்கே வெறுப்பை கொடுத்தது. அருவருப்பாக இருந்தது.
தன் கையைத் தங்கைகள் இருவரும் பற்றிக் கொண்டிருப்பதை ஒருவித மரத்துப் போன உணர்வுடன் பார்த்தவன், அவர்களை விடுவித்துவிட்டு தாயின் அறைக்குள் சென்றான்.
கலை, உடலைக் குறுக்கிக் கொண்டு சுருண்டு கட்டிலில் கிடந்தார்.
கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்து தலையணையை நனைத்துக் கொண்டிருந்தது.
அந்த அறையில் மெல்லிய விசும்பல் சத்தம் கேட்டது. ஆனால், இம்முறை ஸ்ரீராமின் மனதை அந்தத் தாயின் கண்ணீர் துளி கூட பாதிக்கவில்லை. தாயை ஒரு தாயாகப் பார்க்க முடியாமல், உணர்ச்சியற்ற ஒரு கற்சிலையாகவே அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
"அண்ணா... பேசுண்ணா... அம்மாவைக் கூப்பிடு. நீ பேசினாதான் அம்மா எழுந்து வருவாங்க..."
ஏதோ தன் தாய் கோமாவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது போல் பேசிக் கொண்டிருந்த தங்கைகளைத் திரும்பிப் பார்த்தான். அந்தப் பேச்சில் இருந்த போலியான அக்கறை அவனுக்குள் அருவருப்பைக் கூட்டியது.
இவர்களின் குரல் தாய்க்கு நன்றாகக் கேட்கும் என்று அவனுக்குத் தெரியும். அவன் இங்கே வந்து நிற்கிறான் என்பதும் அவருக்குத் தெரியும். மகன் வந்துவிட்டான் என்று தெரிந்தும் அவர் மௌனம் காக்கிறார் என்றால், அவர் எதிர்பார்த்தது அவனது சமாதானத்தை.
'இவரைப் போய் நான் சமாதானம் செய்ய வேண்டுமா?' என்கிற கசப்பான யோசனையோடு,
"அம்மா தூங்கட்டும்" என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு அறையை விட்டு மின்னலென வெளியே வந்தான்.
கலை ஏமாந்து போனார். மகன் தன் காலடியில் விழுந்து கதறுவான் என்று எதிர் பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவன் போவதையே தங்கைகள் இருவரும் பார்த்துக் கொண்டிருக்க, அவனோ வீட்டை விட்டு வெளியேறி வெட்ட வெளியில் வந்து நின்றான்.
கலை மெதுவாக நிதானத்தோடு எழுந்து அமர்ந்தார்.
"அம்மா... என்ன அண்ணன் பேசாமலே போறான்?" அலர் குரலில் ஒருவிதக் கடுப்பு தெரிந்தது.
"அவன் பேசாம போறது நல்லதுதான்டி. என்கிட்ட அவன் எந்தக் கேள்வியும் கேட்கலையே... அப்படின்னா என்ன அர்த்தம்? நான் அவன்கிட்ட இதைப்பற்றிச் சொல்லலைங்கிறதுக்காக அவன் நம்ம மேல கோபப்படல. அதுவே இப்ப நமக்கு சாதகமான விஷயம். வேற எதைப் பத்தியும் இப்ப நம்ம யோசிக்க வேண்டாம்," என்றார் கலை, ஒரு தந்திரமான புன்னகையோடு.
"ஆமாம்மா... நீ சொல்றதும் ஒரு விதத்துல நல்லதுதான். இவ்வளவு பெரிய விஷயம் தெரிஞ்சும் அண்ணன் இவ்வளவு சாதாரணமாக இருக்கார்னா, அவர் அந்த ராதாவை முழுசா வெறுக்கிறார்னுதான் அர்த்தம். இனிமேல் நமக்குக் கவலை இல்லை," என்று மலரும் நிம்மதியோடு கூறினாள்.
வெளியே... ஸ்ரீராம் அந்த உச்சி வெயிலில், கொதிக்கும் சிமெண்ட் தரையில் உயிர் பிரிந்த உடல் போல உடைந்து போய் அமர்ந்திருந்தான்.
அப்படியே வெளியே வந்த அசோக், அவனைப் பார்த்தபோது ஒரு கணம் பாவம் என்று தோன்றியது. ஆனால், அடுத்த கணமே கோபம் தலைக்கேறியது
'இவன் எல்லாம் என்ன மனுஷன்? இவனுக்குக் குழந்தைகள் இருக்குன்னு இத்தனை வருஷம் தெரியாம இருந்திருக்கான். இப்ப தெரிஞ்சு போயும், ஒரு ரோஷமே இல்லாம இந்த வீட்டு வாசல்ல வந்து உட்கார்ந்து இருக்கானே... அப்படி என்னதான் அம்மா மேல இவனுக்குப் பாசமோ தெரியல!' என்று சலித்துக் கொண்டு தன் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
பைக் ஸ்டார்ட் ஆகும் சத்தத்தில் சுயநினைவு பெற்ற ஸ்ரீராம் மெல்ல நிமிர்ந்தான்.
சுட்டெரிக்கும் அந்தச் சூரியனோ, அனல் கக்கும் தரையோ அவனுக்குப் பொருட்டாகத் தெரியவில்லை. அவன் வாழ்க்கையில் நடந்திருக்கும் அந்தப் பெரும் துரோகத்தோடு ஒப்பிடும்போது, இந்த வெப்பம் ஒரு துளிதான்.
ஏன் இந்த மௌனம்? எதற்காக இந்த அமைதி? இந்நேரம் அவன் கொதித்து எழுந்து ஒரு பிரளயத்தையே உருவாக்கியிருக்க வேண்டாமா? இல்லை என்றால், தன் ரத்தமான பெண் பிள்ளைகளைத் தேடியாவது ஓடியிருக்க வேண்டாமா? எதுவுமே செய்யாமல் ஒரு ஜடத்தைப் போல அமர்ந்திருக்கிறானே... 'என்னை மாதிரி ஒரு மனிதன் உண்டா?' என்று அவனுக்கே தோன்றியது.
அப்போது ஸ்ரீராமின் முன்னே, கலை ஒரு போலி அழுகை முகத்தோடு வந்து நின்றார்.
"ஏம்பா... என்னாச்சு உனக்கு? எதுக்கு இப்படி வந்து உட்கார்ந்து இருக்க? நீ ஏற்கனவே கோர்ட்ல மயங்கி விழுந்துட்ட... அப்பவே என் உயிர் பாதியாப் போயிடுச்சு. இப்ப வந்து இப்படி வெயில்ல உட்கார்ந்து இருக்கியே... எழுந்து வாப்பா," என்று அவன் கையைப் பிடித்து இழுத்தார்.
அவன் நிமிர்ந்து தன் தாயைப் பார்த்தான். அந்தப் பார்வையில் அத்தனை வெறுப்பு அப்பியிருந்தது.
அந்தப் பார்வையின் வீச்சை உணர்ந்த கலை, "உன்னோட கோபம் நியாயம் தான் ஸ்ரீராம். குழந்தைங்க இருக்குன்னு நான் உன்கிட்ட சொல்லல தான். ஆனா அதுக்கு ஒரு காரணம் இருக்குப்பா... அது உனக்குப் பிறந்த குழந்தைங்க கிடையாது. அதனால்தான் நான் சொல்லல..." என்றார் மிகச் சாதாரணமாக.
தொடரும்......