மனைவி 32

Advertisement

Nivi Ammu

Well-known member
Member
மனைவி - 32

"நான் போய் குழந்தைகளைப் பார்த்துட்டு வரவா?" ஏக்கம் கப்பிய குரலில் அவன் கேட்க, பிரபாகரன் கலங்கிப் போனான்.

"உனக்கு உன் பொண்ணுங்க யாருன்னு தெரியுமா?"

ஸ்ரீராம் மெல்லத் தலை குனிந்து கொண்டான். அவனுக்குத் தெரியாது.

ஒரு தகப்பனாக இதை விட அசிங்கம் என்ன இருக்க முடியும்? இதை விடப் பெரிய ஆயுட்கால வலி என்ன இருக்க முடியும்?

"நீ என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்கன்னு உனக்கு இப்போ புரியுதா? நீ பெத்த புள்ளைங்க யாருன்னு உனக்குத் தெரியல. அடையாளம் கூடக் கண்டுபிடிக்கத் தெரியாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்க..."

"நான் பிறந்ததே சாபம்தான். சாபமான வாழ்க்கையைத் தான் வாழ்ந்திருக்கேன். ஆனா இனிமே என் வாழ்க்கையைச் சரி பண்ணணும், என்னைத் திருத்திக்கணும்னு நினைக்கிறேன். எனக்குக் கொஞ்சம் உதவி செய்யுங்க... நான் என் பிள்ளைகளைப் பார்க்கணும். இதுவரைக்கும் நான் அவங்களை நேர்ல பார்த்ததே இல்லை... ப்ளீஸ்... எனக்குக் காட்டுறீங்களா?" என்று பிரபாகரன் கையைப் பிடித்து அழுது கொண்டே அவன் கெஞ்சிய விதத்தில், அவனிடம் மிச்சமிருந்த கோபமும் கரைந்து போனது.

"சரி... லஞ்ச் பீரியட்ல நீ பார்க்கலாம். வா, உன்னை அழைச்சிட்டுப் போறேன்," என்று அவனைத் தன் காரில் ஏற்றித் தள்ளிக் கொண்டு சென்றான்.

தன் மகள்களை முதன்முதலாகப் பார்க்கப் போகும் அந்தப் படபடப்பில், ஸ்ரீராம் தன் நகத்தைக் கடித்துக் கொண்டும், வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டும், அடக்க முடியாத தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். அவனது இதயம் ஒரு புது ராகத்தை முதன்முதலாக இசைக்கத் தொடங்கியது.


ஒரு ஆண்மகன் தனக்கு மனைவியாக வர போகிறவளை முதன் முதலில் காணும் அந்தப் பரவச தருணத்தில் ஒரு தனி அழகு இருக்கும்.

அதே போல், தான் பெற்ற உதிரத்தை, தன் பிஞ்சுப் பிள்ளையை முதன் முதலில் பார்க்கும் அந்தத் தருணம் இருக்கிறதே... அது இந்த உலகத்தின் எந்தச் செல்வத்திற்கும் ஈடு இணையற்றது. ஒரு பேரதிசயம்!

அத்தனை ஆண்டுகால வாழ்க்கையில் ஸ்ரீராம் அந்த உன்னதமான செல்வத்தை இழந்து நின்றான். காலம் கடந்து, அவள் வளர்ந்து செழித்து நிற்கும் வேளையில், தன் மகள்களைப் பார்ப்பதற்காக இன்று வந்து நிற்கிறான். கடந்த கால நினைவுகளும், தான் செய்த தவறுகளும் நெஞ்சில் நிழலாட, தன் நிலையை எண்ணி தன்னுள் தானே கூனிக் குறுகி வெட்கம் கொண்டான்.

அவன் முகத்தில் வினாடிக்கு வினாடி தோன்றி மறையும் குற்ற உணர்ச்சியையும், தவிப்பையும் கண்ட பிரபாகரன், அவன் வேதனை புரிந்து மெல்லிய குரலில் பேசினான்.

"ஸ்ரீராம், இன்னைக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருப்பா. ராதையை நீ மறைந்திருந்து பார்த்த மாதிரி, உன் பொண்ணுங்களையும் மறைந்திருந்து பார்க்காதே. அது வெளி உலகத்துக்குத் தப்பா தெரியும். ஏன்னா, இப்ப அவங்க ரெண்டு பேரும் ஒன்னும் சின்னப் பசங்க கிடையாது... 12 வயசு ஆகுது அவங்களுக்கு. விவரம் தெரிஞ்ச வயசு!"

பிரபாகரன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் ஸ்ரீராமின் மனச்சாட்சியைச் சாட்டையால் விளாசுவது போல் இருந்தது. அவனுக்கு வலிக்கும் என்று தெரிந்தேதான் பிரபாகரன் அப்படிப் பேசினான். நிதர்சனத்தை சுட்டிக்காட்டினான்.

"நான் நேர்ல போய் நின்னா அவங்களுக்கு என்னைத் தெரியுமா? என்கிட்ட பேசுவாங்களா?" உதட்டை இறுகக் கடித்து, தன் அழுகையைத் தொண்டைக்குள்ளேயே அடக்கிக் கேட்டவனுக்கு, மேற்கொண்டு பேச வார்த்தைகள் வர மறுத்தன. விழிகளில் நீர் முட்டியது.

"உன்னைத் தெரியாதுன்னு சொன்னா, அப்படியே திரும்பி ஓடி வந்துடுவியா என்ன?" பிரபாகரன் விளையாட்டுப் போலக் கேட்டாலும், அவனுள் இருந்த உண்மையான அக்கறை அக்கேள்வியில் தெரிந்தது.

ஸ்ரீராம் பதில் சொல்லத் திராணியற்று மௌனமாக இருக்க, பள்ளி வாசலுக்கு முன்னே பிரபாகரன் காரை நிறுத்தினான்.

அது ஒரு சிறிய அரசுப் பள்ளி. அந்தப் பள்ளியின் தோற்றத்தைப் பார்த்ததுமே ஸ்ரீராம் அப்படியே உறைந்து போய் நின்றான். ஒவ்வொரு நாளும் தன் குடும்பத்திற்காக ஓடி ஓடி உழைத்தவன் அவன். ஆனால், தன் குழந்தைகளும் மனைவியும் அவன் சம்பாதித்த ஒரு ரூபாய் பணத்தில் கூட வாழவில்லை, தங்களை இந்த எளிய நிலையிலும் தற்காத்துக் கொண்டார்கள் என்று நினைக்கும் பொழுது, அவன் இதயத்திலிருந்து ரத்தம் கசிவது போன்ற வேதனை உண்டானது.

பள்ளியின் சிறு மைதானத்தில் ஆங்காங்கே பிள்ளைகள் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்க, ஸ்ரீராம் தேடல் மிகுந்த கண்களோடு அலைபாய்ந்தது.

"ரொம்ப தேடாதே... இத்தனை வருஷம் கழிச்சு வந்து பார்த்தா உன்னால கண்டுபிடிக்க முடியாது. வா என் கூட," எனப் பிரபாகரன் முன்னால் நடக்க, ஸ்ரீராம் ஒரு இயந்திரத்தைப் போல அவனைப் பின்தொடர்ந்தான்.

"மாமா!" என ஆச்சரியம் பொங்க ஒரு மெல்லிய குரல் ஒலித்தது. அது மகாவின் குரல்.

"மகா குட்டி... சாப்டீங்களா?"

"சாப்பிட்டேன் மாமா. கொஞ்சம் முன்னாடி வந்து இருந்தா எங்க கூட சேர்ந்து சாப்பிட்டு இருக்கலாம். என்ன இந்த நேரத்துல இங்க வந்துருக்கீங்க?" பிரபாகரனைக் கண்டதும் குதூகலமாக ஓடி வந்தவள், அவனுக்குப் பின்னால் இடிந்து போய் நின்றிருந்த ஸ்ரீராமைப் பார்த்ததும் அப்படியே திகைத்து நின்று விட்டாள்.

ஒரு முறை மட்டுமே கண்ட முகமானாலும் தந்தையை எப்படி அவர்களால் மறக்க முடியும்.. மறக்க கூடிய ஏக்கமாக அவர்களுக்கு..

"மகா, எங்க போற?" தங்கை ஓடுவதைத் தடுத்து நிறுத்தி, வேகமாக பின்னால் ஓடி வந்த சீதா, மகா மீது மோதி நின்றாள்.

"மாமா... நீங்க இப்போ இங்க என்ன பண்றீங்க?" என அவளும் ஆனந்த அதிர்ச்சியில் கேட்கத் தொடங்கினாள். சட்டெனப் பிரபாகரன் சற்று விலகி நிற்க, அவர்களுக்குப் பின்னால் நின்றிருந்த தன் தந்தையைக் கண்டதும் சீதா அப்படியே அதிர்ச்சியில் உறைந்தாள்.

ஸ்ரீராமின் பார்வை தன் இரு மகள்களை விட்டு நகரவே இல்லை. அப்படியே ராதையை அச்சுப் பிசகாமல் உரித்து வைத்திருந்தார்கள் அந்தப் பிஞ்சுகள். ராதையின் முகச்சாயல், அதே கண்கள்... ஸ்ரீராம் ஒரு சிலையைப் போல அசைவற்று நின்றான். அவன் நிலை கண்டு பிரபாகரன் அறிமுகம் செய்தான்.

"ஸ்ரீராம், இவங்க ரெண்டு பேரும் தான் உன்னோட பொண்ணுங்க. இவ பெரியவ சீதாலட்சுமி, இவ சின்னவ மகாலட்சுமி. ரெண்டு பேரும் டிவின்ஸ். இப்போ இவங்களுக்கு 12 வயது முடியுது." தந்தைக்கு அவன் மகள்களை அறிமுகம் செய்யும் மூன்றாவது மனிதன். ஒரு உன்னதமான நிகழ்வு.

சீதாவும் மகாவும் ஒருவரை ஒருவர் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டனர். சீதா தயக்கத்துடன் பிரபாகரனைப் பார்க்க, ஸ்ரீராமின் மனதுக்குள் ஒரு பெரிய போரே நடந்தது.

'ஒரு பெத்த தகப்பனுக்குத் தன் சொந்த மகள்களை அடையாளம் தெரியவில்லை... ஒரு மூன்றாவது மனுஷன் அடையாளம் காட்டித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா? என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே!' என உள்ளுக்குள் கூனிக் குறுகிப் போனவன், பெரும் பிரயத்தனத்துடன் தன் மகள்களை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான்.

சீதாவுக்கு அவர் தந்தை என்று தெரிந்தாலும், அவர் நெருங்கி வராமல் தான் எப்படிச் செல்வது என்கிற தயக்கத்தில் அப்படியே நின்றாள். ஆனால் மகா அப்படி இருக்கவில்லை. அவளுக்குத் தந்தை பாசம் என்பது மற்ற எல்லோரையும் விட ஒரு பெரிய ஏக்க மழையாக உள்ளுக்குள் பொழிந்து கொண்டிருந்தது. தந்தை ஒரு அடி முன்னோக்கி வந்ததைப் பார்த்ததும், மகா மடைதிறந்த வெள்ளமென இரண்டு அடி முன்னோக்கி ஓடி வந்தாள்.

மகள் தன்னை நோக்கி ஓடி வருவதைக் கண்ட ஸ்ரீராம் உடல் நடுங்க, மீண்டும் முன்னேற முயன்றான். "அப்பா..." என அந்தச் சிறுமி தழுதழுத்த குரலில் கூப்பிட, ஸ்ரீராமின் கண்கள் குளம் போலத் தேங்கின.

சீதா மட்டும் பயந்து போய் ஓரிடத்தில் நின்றிருந்தாள். ஒருவேளை தந்தை கோபப்பட்டு திட்டி விடுவாரோ என்கிற அச்சம் அவளுக்கு.

அந்த 'அப்பா' என்கிற ஒற்றைச் சொல், ஸ்ரீராமின் உயிர் அணுக்களை ஊடுருவிச் சென்று இதயத்தை வெடிக்க வைத்தது.

கண்களில் அருவியாய் நீர் சொரிய, தன் மகள்களின் உருவத்தை மறைத்துக் கொண்டிருந்த கண்ணீரைத் தன் கரங்களால் துடைத்தவன், அந்தப் பிஞ்சு மகளின் முன்னே பொத்தென்று மண்டியிட்டு விழுந்தான்.

அவளைத் தொட்டு அணைக்க நீட்டிய கைகள் கட்டுப்பாடின்றி நடுங்கின. பிரபாகரன் தன் கண்களைத் துடைத்தபடி அந்த உணர்ச்சிகரமான காட்சியைக் கண்டு நெகிழ்ந்து நின்றான். தன் தந்தை இப்படித் தவிப்பதை கண்ட மகாவின் உயிர் துடித்தது. அவள் மெல்லச் சிரித்தாள்.

"நான் உங்களைக் கட்டிப் பிடிச்சுக்கவா ப்பா?" என ஏக்கமும் பயமும் கலந்த குரலில் கேட்ட அந்தப் பிள்ளையைக் கண்டு ஸ்ரீராம் மொத்தமாக உடைந்து போனான். தேம்பித் தேம்பி அழ தொடங்கினான்.

பிரபாகரன் எவ்வளவோ முயன்றும் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தான் சத்தமாக அழுது விடுவோமோ என்கிற பயத்தில் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு வானத்தை பார்த்தபடி நின்றான்.

ஸ்ரீராம் இப்போது எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. "மகா... என் மகா குட்டி..." என விம்மல்களுக்கு இடையே தன் மகளை வாரி அணைத்து, அவளது பிஞ்சுத் தோள்களில் முகம் புதைத்து கதறி அழுதான்.

தகப்பன் தன்னை அணைத்துக் கொண்டது, அவளுடைய அத்தனை காலத் துக்கங்களையும், ஏக்கங்களையும் ஒரு நொடியில் துடைத்து எறிய, மகாவும் தன் தந்தையை ஆசையோடு இறுக்கிக் கட்டிக்கொண்டாள். ஆனால், மூத்தவளான சீதா மட்டும் இன்னும் விலகியே நின்றிருந்தாள்.

"ஸ்ரீராம்... ஸ்கூல் பசங்க எல்லாரும் உங்களைத்தான் பார்க்குறாங்க. கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கோ," எனப் பிரபாகரன் மெல்லிய குரலில் எச்சரித்தான்.

ஸ்ரீராம் தன் அழுகையை சிரமப்பட்டு அடக்கி, கண்ணீரை துடைத்துக் கொண்டான்.

மகளைத் தன் மார்போடு அணைத்தபடி, "இன்னொரு தடவை 'அப்பா'ன்னு கூப்பிடு தாயே..." எனப் பிச்சை கேட்பது போலக் கேட்டான். மகா அழுதுகொண்டே சந்தோஷமாகச் சிரித்தாள்.

"அப்பா... அப்பா!" எனக் கத்தினாள்.

இத்தனை வருடங்களாக அந்தப் பிஞ்சுகள் தவம் கிடந்தன. தன் அப்பாவை 'அப்பா' என்று உரக்க அழைப்பதற்கே அவர்களுக்கு பன்னிரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு தகப்பனாகி, அந்த மழலை ஒலியைக் கேட்காமல் பன்னிரண்டு வருடங்களை வீணடித்து விட்டானே இந்த ஸ்ரீராம்!

மகாவைத் தூக்கியபடி அவன் எழுந்து நின்றான். அவள் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டான். தந்தை என்கிற அந்த உயர்ந்த ஸ்தானத்தின் பெருமை அவன் முகத்தில் இப்போது ஒரு ஒளியாகத் தெரிந்தது.

தந்தையின் எச்சில் பட்ட கன்னங்களைத் துடைக்க அந்தப் பிஞ்சு உள்ளம் நினைக்கவே இல்லை. தனக்கும் ஒரு தந்தை கிடைத்துவிட்டார் என்கிற சந்தோஷமும், இனி பள்ளியில் யாரும் நம்மைக் கிண்டல் செய்ய மாட்டார்கள் என்கிற நிம்மதியும் அவளுள் ஆழமாக பதிந்தது.

தொடரும்....
 
என்ன மாதிரி ஒரு நிலை
வருத்தமா இருக்கு
இப்படி ஒருத்தன் வாழ்ந்து
இருக்கானே
 

Advertisement

Advertisement

Back
Top