மனைவி 33

Advertisement

Nivi Ammu

Well-known member
Member

மனைவி - 33​

மகா மட்டுமே தன்னிடம் நெருங்குவதைக் கவனித்த ஸ்ரீராம், மெல்ல அவளைக் கீழே இறக்கிவிட்டு, தன் பக்கத்திலேயே அணைத்து வைத்துக் கொண்டு சீதாவைப் பார்த்தான். அவளை நோக்கித் தன் கைகளை நீட்டி, "அப்பாகிட்ட வரமாட்டியா குட்டி?" எனக் கேட்டான்.​

ஆனால் சீதா மறுப்பாக தலையசைத்துவிட்டு சில அடிகள் பின்னோக்கி நகர்ந்தாள். அந்த நொடி, சின்னவள் கொடுத்த அத்தனை சந்தோஷமும் ஸ்ரீராமுக்குப் பறிபோனது போல இருந்தது. பிரபாகரன் அதிர்ச்சியுடன் சீதாவைப் பார்த்தான். "ஏன் தங்கம்? அப்பா வேண்டாமா உனக்கு?"​

"அப்பா வேணும்... ஆனா எனக்கு அம்மாவும் வேணும்," என்றாள் சீதா.​

அவள் குரலில் அத்தனை வலி இருந்தது. அவளது அந்த ஒற்றை வாக்கியம், அதுவரை தன்னைத் தேற்றிக் கொண்டிருந்த பிரபாகரனை நிலைகுலைய வைத்தது. அவனும் அழத் தொடங்கினான்.​

ஸ்ரீராமின் நெஞ்சம் பாரமானது. வேதனையை அடக்கிக் கொண்டு, "எனக்கும் நீங்க ரெண்டு பேரும் வேணும், உங்க அம்மாவும் வேணும். நம்ம எல்லாரும் ஒண்ணா வாழணும்டா," என்றான் குரல் தழுதழுக்க.​

"இல்ல... நீங்க எங்களை, அம்மாவைத் தனியா விட்டுட்டுத் திரும்பவும் உங்க அம்மா வீட்டுக்கே போயிடுவீங்க. அவங்களுக்கு எங்களைப் பிடிக்காது, அம்மாவையும் பிடிக்காது. அங்க அம்மாவை ரொம்ப கொடுமை படுத்துவாங்க. நீங்கதானே அம்மாவை டைவர்ஸ் பண்ணப் போறீங்க?" என அவள் ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லச் சொல்ல, அந்தப் பிஞ்சு மனதில் ஆழமாக பதிந்திருந்த ரணங்கள் ஸ்ரீராமைச் சுட்டெரித்தன.​

ஸ்ரீராம் தன் மூத்த மகளின் முன்னே மண்டியிட்டு கெஞ்சினான்.​

"அப்பா உங்களை விட்டுட்டு இனி எங்கேயும் போக மாட்டேன். அம்மாவை டைவர்ஸ் பண்ண மாட்டேன். நம்ம எல்லாரும் இனி ஒண்ணாத்தான் இருப்போம். அந்த வீட்டுக்கு உங்களைக் கூட்டிட்டுப் போக மாட்டேன், நானும் போக மாட்டேன். இனி யாரும் உங்களைக் கஷ்டப்படுத்த முடியாது. நான் உங்களை மகாராணி மாதிரிப் பார்த்துப்பேன். அப்பாவை நம்பு குட்டி..." எனக் கையேந்தினான். பிஞ்சு மனம் அழுதாலும், பழைய வடுக்கள் அவளை நெருங்க விடாமல் தடுத்தன.​

"அம்மா சொல்லட்டும்..." என ஒற்றைச் சொல்லில் நின்றாள் சீதா.​

இவ்வளவு சொல்லியும் தன் மகள் தன்னை ஏற்க மறுக்கிறாளே எனத் துடித்தவன், அவளைத் தன் மகளாகப் பார்க்காமல், ஒரு தெய்வமாகப் பார்த்தான். அவள் பாதங்களைப் பற்றினான்.​

"அப்பா தப்பு பண்ணிட்டேன்டா. உங்களைப் பத்தி தெரிஞ்சுக்காம இருந்தது நான் செஞ்ச பெரிய தப்பு. உங்களைப் பிரிஞ்சு இருந்தது நான் செஞ்ச பாவம். என்னை மன்னிச்சு ஏத்துக்கோ குட்டி. இனிமே அப்பா எந்தத் தப்பும் பண்ண மாட்டேன். சத்தியமா சொல்றேன்... இனி உங்களை விட்டுப் பிரிய மாட்டேன்..."​

அவள் தன் பாதங்களிலிருந்து அவன் கைகளை மெல்ல விடுவித்தாள்.​

"நீங்க என்னோட காலைப் பிடிக்கக் கூடாது ப்பா. எங்களுக்கு அப்பா வேணும் தான், நான் உங்களைக் கூப்பிடணும் தான். ஆனா எனக்குப் பயமா இருக்கு. அம்மா உங்களை நம்புனா... அம்மா உங்களை ஏத்துக்கிட்டா... அப்போ நானும் உங்களை 'அப்பா'ன்னு கூப்பிடுறேன்," என்றாள் அந்தப் பிஞ்சுப் பெண், முதிர்ச்சியான குரலில்.​

அந்த வார்த்தைகள் ஸ்ரீராமின் இதயத்தில் ஒரு பெரிய பாரத்தைச் சுமத்தினாலும், ஒரு நம்பிக்கையைத் தந்தன.​

சுற்றியிருந்த உலகம் அவர்களை ஒரு விசித்திரக் கண்காட்சியைப் பார்ப்பது போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அந்தப் பார்வைகளில் கேலியும், கிசுகிசுப்பும், அர்த்தமற்ற இரக்கமும் கலந்திருக்க, ஸ்ரீராம் கூனிக் குறுகி நின்றான். அப்போது அவர்களைத் தேடி வந்த வகுப்பு ஆசிரியை, முகத்தில் கடுமையைத் தேக்கிக் கொண்டு குறுக்கே நின்றார்.​

"சீதா! லஞ்ச் டைம் முடிஞ்சு போச்சு, இங்க என்ன எல்லாரும் கூட்டம் கூட்டிட்டு இருக்கீங்க?" என்று அதட்டியவர், ஸ்ரீராமை ஒரு அந்நியனைப் பார்ப்பது போல் ஏறிட்டார்.​

"சார், நீங்க யாரு? சின்ன குழந்தைகளுக்கு முன்னாடி இப்படி அழுதுகிட்டு என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என்று கேட்டபடியே, ஒரு தாய்க்குரிய எச்சரிக்கை உணர்வோடு இரு பிள்ளைகளையும் தன் பக்கம் இழுத்து அரவணைத்துக் கொண்டார்.​

அவருக்குள் ஒரு தார்மீக பயம். இரண்டும் பெண் பிள்ளைகள் அல்லவா? தற்காலத்துச் சூழலில், முன்பின் தெரியாத ஒரு மூன்றாம் மனிதன் தன் பள்ளிப் பிள்ளைகளிடம் நெருங்குவதைக் கண்டால் எந்தவொரு ஆசிரியருக்கும் வரும் அதே பதற்றம் அவருக்கும் வந்தது.​

ஆசிரியை கேட்ட அந்த 'நீங்க யாரு?' என்ற கேள்வி ஸ்ரீராமின் நெஞ்சில் ஈட்டியாய்ப் பாய்ந்தது. அவன் மேலும் மேலும் அவமானத்தால் சுருங்கிப் போனான். தன் கண்ணீரைத் துடைத்து கொண்டு, தள்ளாடும் கால்களோடு நிமிர்ந்து நின்றவன், உடைந்த குரலில் சொன்னான்...​

"மேம்... சீதாவுக்கும் மகாவுக்கும் நான்தான் அப்பா. இவங்க என் பொண்ணுங்க மேம்..." அவன் குரல் மெல்லியதாக இருந்தாலும், அதில் ஒரு தந்தையின் பல ஆண்டுகால ஏக்கமும் வலியும் தேங்கி நின்றது.​

ஒரு தகப்பன் தன் வாழ்நாளில் இப்படியொரு நிலையைச் சந்திக்கவே கூடாது.​

தன் சொந்தக் குழந்தைகளிடமே 'நான்தான் உங்கள் அப்பா' என்று அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய அந்தத் துயர நிலை, ஸ்ரீராமை உள்ளுக்குள் சிதைத்துக் கொண்டிருந்தது. பிரபாகரன் இதைப் பார்த்தும் பார்க்காதவன் போல் மௌனம் காத்தான். அவனுக்கு உதவ அவன் முன்வரவில்லை.​

இவன் செய்த பாவங்கள், தெரியாமல் செய்திருந்தாலும், உண்மையை அறிய முற்படாமல் இருந்தது பெருந்தவறு. அந்தத் தவறுக்கான தண்டனையையும் வலியையும் அவன் அனுபவிக்கட்டும்; ஸ்ரீராம் தன்னுரிமையை அவனே போராடிப் பெறட்டும் என்று பிரபாகரன் அமைதி காத்தான்.​

"அப்பாவா?" ஆசிரியை குரலில் ஆச்சரியத்தை விட அதிர்ச்சி அதிகமாக இருந்தது.​

"இந்த ரெண்டு குழந்தைகளும் ஸ்கூல்ல சேர்ந்ததுல இருந்து ஒரு முறை கூட 'அப்பா'ன்னு சொல்லி யாரும் வந்ததே இல்லையே... நிஜமாவே நீங்கதான் இந்த குழந்தைகளோட அப்பாவா?" என்று அவர் நம்பிக்கை இல்லாமல் சந்தேகத்தோடு கேட்க...​

"மேம்! இவங்கதான் என் அப்பா!" என்று மகா, சட்டென்று ஸ்ரீராமின் கையைப் பற்றிக்கொண்டு சந்தோஷத்திலும் பெருமையிலும் திளைத்தபடி கூறினாள்.​

குழந்தையின் அந்த ஒற்றை வார்த்தை ஸ்ரீராமின் காயப்பட்ட மனதிற்கு மருந்தாக அமைந்தது.​

ஆனால் ஆசிரியர் விடவில்லை. "சீதா, மகா... நீங்க சொல்றது சரியா தப்பான்னு எனக்குத் தெரியல. திடீர்னு ஒருத்தர் வந்து நின்னு 'அப்பா'ன்னு சொன்னா நாங்க எப்படி ஏத்துக்க முடியும்? இத்தனை வருஷமா இவரை நாங்க பார்த்ததே இல்லையே. நாளைக்கு உங்க அம்மா வந்து கன்பார்ம் பண்ணட்டும்," என்று கறாராகச் சொன்னார்.​

நிலைமை கைமீறி போவதைக் கண்ட பிரபாகரன் முன்னே வந்தான். "மேம், என்னை உங்களுக்குத் தெரியும் தானே?"​

"நல்லா தெரியும் சார், ஆனா இவரை அப்பான்னு சொல்றாரே... எந்த விதத்துல நாங்க நம்புறது?"​

"நம்பிதான் ஆகணும் மேம். ஸ்ரீராம் தான் இவங்க அப்பா. இத்தனை வருஷம் சில சூழலால் பிரிஞ்சு இருந்தாங்க. இதுக்கு மேல இதைப் பத்தி இங்க ரோட்டுல வச்சுப் பேச நான் விரும்பல. குழந்தைகளுக்காக லீவு தரீங்களா? நாங்க இப்போ வீட்டுக்குக் கிளம்பணும்," என்று அழுத்தமாகக் கூறினான்.​

ஆசிரியரின் பயம் நியாயமானது தான். ஒரு தாயாக, இரு பெண் பிள்ளைகளை இந்த மோசமான உலகத்தில் யாரோ ஒருவரிடம் ஒப்படைக்க அவர் தயங்கினார்.​

"இருந்தாலும் ஒருமுறை சீதா அம்மாவிற்கு கால் பண்ணிடுங்க," என்றார்.​

அவர் சொல்வதிலுள்ள நியாயத்தைப் புரிந்துகொண்ட பிரபாகரன், உடனே ராதைக்கு தொடர்பு கொண்டான். ஸ்ரீராம் அங்கே இருப்பதை சொன்னால் அவள் வரமாட்டாள் என்று தெரிந்தவன்,​

"ராதை, நான் பிள்ளைகளை அழைச்சிட்டு வர்றேன்," என்று மட்டும் மொட்டையாக கூறிவிட்டு, ஆசிரியரிடம் போனை நீட்டினான். ராதை பேசிய பின்புதான் ஆசிரியரின் முகம் சற்றுத் தளர்ந்தது.​

"ஓகே சார், நான் சீதா அம்மா கிட்ட பேசிட்டேன். தப்பா நினைச்சுக்காதீங்க, சின்ன வயசுல இருந்து இவங்க இங்கதான் படிக்கிறாங்க, ஆனா இதுவரை உங்களைப் பார்த்ததே இல்லை. அந்த பயம் தான். இப்போ கூட்டிட்டுப் போங்க," என்று கூறி அனுப்பி வைத்தார்.​

காரில் ஏறியபோது ஸ்ரீராமின் இதயம் கனத்துப் போயிருந்தது. சீதா ஜன்னல் வழியாக வெளியையே பார்த்துக் கொண்டிருந்தாள்; தந்தை பக்கத்தில் இருப்பதை உணர்ந்தும் அவள் மௌனம் காத்தது அவனை வதைத்தது.​

ஆனால் மகாவோ, அவன் தோளில் சாய்ந்து கொண்டு, "அப்பா... அப்பா..." என்று ஏதேதோ மழலையில் பேசிக் கொண்டே வந்தாள். அவளது ஒவ்வொரு சொல்லும் ஸ்ரீராமின் காயங்களுக்கு ஒத்தடம் கொடுத்தது. அவன் தன் வலிகளை மறைத்து புன்னகையோடு அவளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.​

ஸ்கூலில் நடந்த ரகளை போதாதென்று, சூப்பர் மார்க்கெட் வாசலில் வைத்து ராதையைச் சந்தித்தால் மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள் என்று கருதிய பிரபாகரன், ராதையை வெளியே வரச் சொன்னான். அவள் காரில் ஏறியதுமே, "அண்ணா என்னாச்சு? பசங்களை அழைச்சிட்டு வர்றேன்னு சொன்னீங்க, என்னைய வேற வரச் சொல்றீங்க... ஏதாவது பிரச்சனையா?" என்று பதற்றமாகத் திரும்பியவள், அங்கே ஸ்ரீராமைத் கண்டதும் சிலையாக உறைந்து போனாள்.​

மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வு.​

அவள் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன. தன் மகள் மகா, அந்த மனிதனின் தோளில் அவ்வளவு அந்நியோன்யமாக சாய்ந்திருப்பதைப் பார்த்ததும் அவளுக்குள் ஏதோ ஒன்று உடைந்தது. கண்கள் குளமாக, வெடுக்கென்று முன்னே திரும்பி அமர்ந்து கொண்டாள்.​

காரில் நிலவிய அந்த அமைதி ஒரு சூறாவளிக்கு முந்தைய நிசப்தம் போல் இருந்தது. ஸ்ரீராம் தன் ஏமாற்றத்தை மறைக்காமல், கண்ணாடியின் வழியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தங்கியிருந்த இடம் தூரம் என்பதால், தன் வீட்டிற்கே அனைவரையும் அழைத்துச் சென்றான் பிரபாகரன்.​

வீட்டின் முன் கார் நின்றதும், ராதை அவனை ஒரு கேள்விக் குறியோடு பார்த்தாள்.​

"இறங்கி வாங்க, இது நம்ம வீடு தான்," என்று உரிமையோடு அழைத்துவிட்டு உள்ளே சென்றான்.​

உள்ளே ரேணுகா கண்களைக் கட்டிக் கொண்டு விளையாட, அவளைச் சுற்றி ஐஸ்வர்யாவும் குழந்தைகளும் ஓடிக் கொண்டிருந்தனர். விளையாட்டின் ஊடே பிரபாகரனிடம் சிக்கிய ரேணுகா,​

"புடிச்சிட்டேன்! புடிச்சிட்டேன்!" என்று கத்திக்கொண்டே கட்டை அவிழ்த்தவள், அங்கே நின்ற கூட்டத்தைப் பார்த்துத் திகைத்தாள்.​

பிரபாகரன் அமைதியாக அறிமுகம் செய்தான். "ரேணுகா, இவன்தான் ஸ்ரீராம். இவள் ராதை. இவங்க அவங்க பொண்ணுங்க..."​

ரேணுகா இன்முகத்துடன் அவர்களை வரவேற்றாள். அரவிந்த் தன் தந்தையின் கசங்கிய சட்டையைச் சரி செய்தபடி நின்றான். அந்தப் பெண்ணைப் பார்த்தபோது ராதைக்கும் ஸ்ரீராமுக்கும் ஏனோ ஒரு இனம் புரியாத தயக்கம் எழுந்தது.​

"முதல்ல உங்க பிரச்சனையைப் பேசித் தீருங்க. ரோட்டுல நிக்கக் கூடாதுன்னுதான் இங்க கூட்டிட்டு வந்தேன். நீங்க என்னடான்னா சாவி கொடுத்த பொம்மை மாதிரி நிக்கிறீங்க," என்று பிரபாகரன் அதட்டவும், அரவிந்த் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மேலே சென்றான்.​

இப்போது அங்கே நிலவிய மௌனம் இதயத்தைத் துளைப்பதாக இருந்தது. ஸ்ரீராம் ராதையையே பார்த்துக் கொண்டிருக்க, ராதையோ தன் மகளை அணைத்தபடி தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.​

தொடரும்....​

 
Last edited by a moderator:
என்ன ஸ்ரீராம் எப்படி ராதை காலுல விழறதுனு தெரியலையா? அதெல்லாம் யோசிக்காத கபாருனு விழுந்துரு.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top