மனைவி - 34

Advertisement

Nivi Ammu

Well-known member
Member
மனைவி - 34

மெல்ல மகாவைத் தூக்கிக்கொண்டு ராதையின் முன் வந்து நின்றான் ஸ்ரீராம்.

"ராதை..." என்று அவள் பெயரை முதல் முறையாக அந்த அறையில் உச்சரித்தான். அந்த ஒற்றைப் பெயரில் பல வருடங்களின் ஏக்கமும், தவிப்பும், கண்ணீரும் அடங்கியிருந்தது.

ராதை மெல்ல நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். அவள் பார்வையில் ஆயிரம் கேள்விகள், ஆயிரம் குற்றச்சாட்டுகள். பெயர் சொல்லவே இத்தனை காலம் வேண்டுமா? என்ற அவளது மௌனக் கேள்வி அவனை நிலைகுலையச் செய்தது. அவன் தன் தவற்றை உணர்ந்து அந்தப் பார்வையைத் தாங்கிக் கொண்டான்.

"அம்மா... அப்பாவை மன்னிச்சு ஏத்துக்கோமா... அப்பா வேணும்மா..." என்று மகா விம்மி அழுதபடி சொல்ல,

"ஏன் மகா இப்படிப் பண்ற?
அக்கா தான் அப்பாவை கூப்பிட மாட்டேன்னு சொல்லிட்டாளே..." என்று ராதை கசப்போடு கூறினாள்.

"நீ அக்காகிட்ட சொல்லுமா... அப்பாவும் பாவம் தானே..." என்று அந்தச் சிறுமி தந்தைக்காகப் பரிந்து பேசியது அங்கிருந்தவர்களின் ஈரலை கசக்கிப் பிழிவது போல் இருந்தது.

தந்தை பட்ட கஷ்டம் எதையும் அறியாத அந்த பிஞ்சு மனதிற்கு, தன் தந்தையின் கண்களில் தெரிந்த ஏக்கம் மட்டும் புரிந்திருந்தது. ராதை தன் மூத்த மகள் சீதாவை பார்த்தாள். அங்கே ஒரு பெரிய போர்க்களமே அவளது மௌனத்திற்கு பின்னால் ஒளிந்திருந்தது.

இந்தக் குடும்பம் ஒன்று சேருமா அல்லது பிரிவின் வடு இன்னும் ஆழமாகுமா?

ராதை தன் மூத்த மகள் சீதாவின் முகம் பார்த்தாள். அந்தப் பிஞ்சு முகத்தில் எத்தனை கேள்விகள்? எத்தனை பயங்கள்? சீதா மெல்லத் தன் தாயின் கைகளைப் பற்றிக் கொண்டு கேட்கத் தொடங்கினாள்.

"அம்மா... இப்போ அப்பா கூட போயிட்டா, கொஞ்ச நாள் கழிச்சு அவர் திரும்பவும் நம்மள விட்டுட்டுப் போயிட்டா நம்ம என்ன பண்றது? ஒருவேளை உங்க மாமியார் வந்து நம்ம கிட்ட பழையபடி சண்டை போட்டா நம்ம என்னம்மா பண்றது? இத்தனை வருஷம் எங்களுக்கு அப்பா யாருன்னு கூட தெரியாது... ஆனா 'அப்பா'ன்னு ஒருத்தர் இந்த உலகத்துல எங்கேயோ இருக்காருங்கிற பிடிப்போடயே நாங்க வளர்ந்துட்டோம். நீங்க தான் அவருக்காக, எங்களுக்காக ஒவ்வொரு நாளும் அந்த வீட்ல நரகத்தையே அனுபவிச்சீங்க. ஆனா இன்னைக்கு வந்து திடீரென நம்ம வேணும்னு அப்பா சொல்றாங்களே..." சீதாவின் குரல் தழுதழுத்தது.

மகளின் வார்த்தைகள் தன் காயத்தை கிளறுவதை உணர்ந்து அவளைத் தடுத்த ராதை, "சீதா... நிறுத்து. இவர்தான் உன் அப்பா, அதுல எந்த மாற்றமும் இல்லை. நான் முன்னாடியே உங்க கிட்ட சொன்னது தான், ஒருவேளை உங்க அப்பா என்னைக்காவது ஒரு நாள் உங்களைத் தேடி வந்தா, நான் அவரைத் தடுக்க மாட்டேன். ஏன்னா, ஒரு அப்பாவையும் பொண்ணையும் பிரிக்கிற பாவம் என்னை வந்து சேர கூடாது. உங்களை உங்க அப்பா கூட சேர்த்து வைக்கணும் தான் இத்தனை வருஷம் அந்த வீட்ல அத்தனை அவமானங்களையும் தாங்கிட்டு அந்த வீட்டில் இருந்தேன். இன்னைக்கு அவரே உங்களைத் தேடி வந்து நிக்கிறப்போ, நீ கடந்த காலத்தைப் பத்தியோ இல்ல நடக்கப்போற எதிர்காலத்தைப் பத்தியோ நினைச்சு பயப்படக்கூடாது. எனக்கும் உங்க அப்பாவுக்கும் உள்ள விரிசல் உங்களை பாதிக்க கூடாது. நீங்க அப்பா கூட சந்தோஷமா இருக்கணும்."

ராதை உறுதியான குரலில் தொடர்ந்தாள், "என் வாழ்க்கையில என்ன மாற்றங்கள் வேணும்னாலும் வரலாம்... ஆனா உங்களுக்கு அப்பாங்குறவர் இவர்தான். அது காலத்துக்கும் மாறாது. உனக்கு மனசுக்குள்ள அப்பா இல்லைங்கிற ஏக்கம் காலங்காலமா இல்லையா... சொல்லு?"

சீதா விம்மி விம்மி அழத் தொடங்கினாள், "நிறைய இருக்குமா... ஒவ்வொரு நாளும் ஸ்கூல்ல மத்தப் பசங்க எல்லாரும் அவங்க அப்பாவைப் பத்திப் பேசும்போதோ, கிண்டல் பண்ணும் போது தனியா நின்னு அழுதுருக்கேன். நேத்து மகா கூட சொல்லிட்டு இருந்தா... எல்லாரும் அவங்க அப்பா கையப் பிடிச்சுட்டு ஸ்கூலுக்கு வராங்க, நாங்க மட்டும் தான் அப்பா இல்லாம அநாதை மாதிரி இருக்கோம்னு. அப்படி ஏக்கங்கள் நிறைய இருக்குமா... ஆனா இப்போ திடீர்னு எல்லாமே நடக்கும் போது மனசுக்குள்ள ஒரு பயம் வந்து ஒட்டிக்கிது."

இதைக் கேட்ட ஸ்ரீராம் உடைந்து போனான். தன் பிள்ளைகளின் ஏக்கத்திற்குத் தான் தான் காரணம் என்பது அவனைக் குத்திக் கிழித்தது.

"நான் எப்படி என்னை நிரூபிக்கிறது ன்னு எனக்குத் தெரியல சீதா குட்டி. இனிமேல் உங்களை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன். உங்களைத் தனியாக ஒரு நிமிஷம் கூட விட மாட்டேன். இனிமேல் உங்களுக்காக மட்டும்தான் நான் வாழப் போறேன். அம்மாவும் நானும் விவாகரத்து வாங்க போறது இல்ல, அந்த முடிவை நான் மாத்திக்கிட்டேன். ப்ளீஸ் குட்டி... அப்பாவை ஒரு முறை நம்பு. சத்தியமா எனக்கு என் பொண்ணுங்க இருக்காங்கன்னே தெரியாதுடா... தெரிஞ்சுருந்தா இத்தனை வருஷம் நான் ஒரு பிணம் மாதிரி அங்க இருந்திருக்கவே மாட்டேன், எப்பவோ உங்களைத் தேடி வந்துருப்பேன்..."

வலியும் வேதனையுமாகப் பிதற்றியவனை, அதை விட ஆயிரம் மடங்கு வேதனையோடு பார்த்தாள் சீதா.

"நீங்க ஏன் எங்களைத் தெரிஞ்சுக்க ஒரு சின்ன முயற்சி கூட பண்ணவே இல்லை? அம்மா கிட்ட ஏன் நீங்க பேசவே இல்லை?" – அவள் செருப்படியாகக் கேட்டக் கேள்விக்கு அவனிடம் மௌனத்தைத் தவிர பதில் இல்லை.

தாய் கலை பேச விடவில்லை என்று சாக்குச் சொல்வது ஒரு ஆணுக்கு அசிங்கம். ஒரு ஆண் மகனாகத் தன் தாயின் வார்த்தையை மதிக்கலாம், அதற்காகத் தன்னுயிராக வந்த தாரத்தை இப்படி அநியாயமாக ஒதுக்கலாமா என்று இப்போதுதான் அவன் புத்திக்கு உறைத்தது.

"அப்பா என்ன காரணம் சொன்னாலும், அது இத்தனை வருஷ ஏக்கங்களுக்கு ஈடாகாது. நான் ஒரு முட்டாளா, ஒரு பொம்மையா வாழ்ந்துட்டேன். இனிமேல் அப்படி இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன். நம்ம எல்லாரும் ஒண்ணா சேர்ந்து வாழணும்னு ஆசைப்படுறேன். மனசார சந்தோஷமா வாழணும்னு துடிக்கிறேன்..." என்றவனின் கண்கள் குளமானது.

ராதை மௌனமாக தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். "சீதா, நீ கண்டதையும் போட்டு குழப்பிக்காத. அப்பாவே இவ்வளவு தூரம் இறங்கி வந்து கெஞ்சிச் சொல்றாரே, இன்னும் என்ன பயம் உனக்கு?"

சீதாவின் கேள்விகளை விட ராதாவின் இந்த 'அந்நியமான' வார்த்தைகள்தான் அவனைக் கொன்று போட்டது.

அவள் தன் பிள்ளைகளுக்கு தந்தையாக மட்டுமே அவனை ஏற்றுக் கொள்கிறாளே தவிர, அவளின் கணவனாக அவனை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. அந்தப் பார்வைக்கும் தகுதி இல்லாதவனாகத் தன்னை உணர்ந்தான்.

"ராதை... எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க. இதுக்கு மேலயும் நான் தப்பா நடந்துகிட்டா, நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்குறேன்..."

இப்போது சின்னவள் மகா குறுக்கிட்டாள். "அம்மா... அப்பா இவ்வளவு தூரம் சொல்றாங்களே, ப்ளீஸ்மா. அப்பாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். அப்பாவை நம்ம கூடவே கூட்டிட்டு போகலாம். நம்ம கூடவே வச்சுக்கலாம், நம்மளே பார்த்துக்கலாம். ப்ளீஸ் அம்மா... எனக்கு அப்பா வேணும், அப்பாவை நாம விட்டுட வேண்டாம்." மகாவின் கண்கள் கெஞ்சின.

பிள்ளைகளின் பிஞ்சு மனதின் ஆசையை மறுக்கும் அளவிற்கு ராதை கல்நெஞ்சம் கொண்டவள் இல்லை. தந்தை கிடைத்து விட்ட அந்தப் பேருவகை அவர்கள் முகத்தில் பிரகாசித்தது. அந்தச் சின்னஞ்சிறு சந்தோஷத்தை மீண்டும் ஒருமுறை சிதைக்க அவளுக்குத் துணிவில்லை.

"சரி... அப்பாவை நம்ம கூடவே அழைச்சிட்டுப் போகலாம். அம்மாவுக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது, சந்தோஷமா?" என்றாள் ராதை.

"லவ் யூ மம்மி!" மகா கத்திக்கொண்டே தாயை இறுக்கமாகக் கட்டி அணைத்து, அவளது கன்னங்களில் மாறி மாறி முத்தங்களை மழையென பொழிந்தாள். மகாவின் அந்தப் பரவசத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அப்பாவின் ஏக்கம் அவளது ஆழ்மனதில் வடுவாகப் படிந்து கிடந்தது, இப்போது அந்த உறவு கைக்கெட்டும் தூரத்தில் வந்ததும் அவள் தன்னை மறந்த நிலையில் இருந்தாள்.

"அப்பா வாங்க வீட்டுக்குப் போகலாம்!" ஸ்ரீராமின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓட முயற்சி செய்த மகளைத் தடுத்த ராதை,

"அங்கே ஒரு குட்டிப் பொண்ணு இருக்கா பாரு, அவ கூட போய் விளையாடுங்க ரெண்டு பேரும். நான் அப்பாகிட்ட கொஞ்சம் தனியா பேசணும், அப்புறம் நம்ம எல்லாரும் வீட்டுக்குப் போகலாம்" என்றாள்.

"அப்பாவைத் திட்டக்கூடாது... கோபப்படக்கூடாது... அப்பாவை வெளியே போகச் சொல்லக்கூடாது..." அதற்குள் மகாவின் முகம் சுருங்கிப் போனது.

"நான் எதுவும் பண்ண மாட்டேன். அப்பா கிட்ட கொஞ்ச நேரம் பேச தான் போறேன். நம்ம எல்லாரும் கண்டிப்பா ஒண்ணா வீட்டுக்குப் போகலாம். அம்மா மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?"

"இருக்கு!" என்றவாறு மகா தன் அக்கா சீதாவின் கையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து சென்றாள்.

அதேநேரம் ரேணுகாவும் பிரபாகரனும் சற்றுத் தள்ளி நின்றிருந்தனர். கணவன் மனைவிக்குள் நடக்கும் உணர்வுப் போராட்டங்களுக்கு இடையே தாங்கள் இருப்பது சரியாக இருக்காது என்பதால் அவர்கள் ஒதுங்கி நின்றனர்.

இப்போது அங்கே ஸ்ரீராமும் ராதையும் மட்டுமே. இத்தனை வருட பிரிவுக்குப் பிறகு, ஒரு மரண அமைதிக்கு மத்தியில் அவளுக்கு அருகில் நிற்கும் அந்த நிமிடம் அவனுக்கு ஏதோ ஒரு நிம்மதியைக் கொடுத்தது.

அவன் தன் மனைவியைத் தலை முதல் கால் வரை ரசித்துப் பார்த்தான். அந்தப் பார்வையில் ஏக்கமும், குற்ற உணர்ச்சியும் கலந்திருந்தது. அவள் இப்போது ஓங்கி அறைந்தால் கூட வாங்கிக் கொள்ளும் நிலையில் தான் அவன் இருந்தான்.

"இத்தனை வருஷம் அப்பா இல்லாம வளர்ந்த ஏக்கத்துல இருக்காங்க, அதனால்தான் உங்களை விட மாட்டேங்குறாங்க. அவங்க செஞ்சதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்..." என்றாள் ராதை.

அவனது முகத்தில் இருந்த சிறு புன்னகையும் வடியத் தொடங்கியது.

"ராதை... நீ என்கிட்ட மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை. நான் உயிரோட இருக்கிற கடைசி நிமிஷம் வரைக்கும் உனக்குச் சேவை செஞ்சாலே என் பாவம் என்னை விட்டுப் போகாது. ஒரு மன்னிப்பு மட்டும் எல்லாத்தையும் மாத்திடாது."

"நீ என்ன சொல்லப் போறன்னு எனக்குத் தெரியும் ராதை. என்னுடைய அம்மா, என் தங்கச்சி எல்லா உறவுகளையும் விட்டுட்டு தான் நான் இங்கே வந்துருக்கேன். எனக்கு இப்போ என்னுடைய குடும்பம் முக்கியம்... நீயும் குழந்தைகளும் தான் என் உலகம். உங்க கூட வாழணும்னு என் வாழ்க்கையையே மறுபடியும் முதல்ல இருந்து தொடங்க வந்துருக்கேன்.

நீதான் எனக்கு ஒரு வாய்ப்பு தர்றதா சொல்லிருக்கயே, அந்த வாய்ப்பை நான் உயிர் போனா கூட விடமாட்டேன். நீ என்னைக் குழந்தைகளுக்குத்தான் ஏத்துக்கிட்டேன்னு எனக்கு நல்லாத் தெரியும். நீ ஒரு தாயா மட்டும் தான் யோசிக்குற, என் மனைவியா இல்லை.

என்னை ஏத்துக்கிட்டதே இப்போதைக்கு அதுவே எனக்குப் போதும். உன் மனசு மாறும் வரைக்கும் நான் காலம் பூரா காத்துகிட்டு இருப்பேன். இனிமேல் முடிஞ்சு போன அசிங்கங்களை பத்திப் பேசி எதையும் மாத்த முடியாது. ஆனா இனிமேல் உன்னையும் குழந்தைகளையும் நான்
ராஜகுமாரி மாதிரி பார்த்துப்பேன். என் பொண்ணுங்க எதுக்காகவும் இனிமேல் ஏங்க கூடாது." என்றான் நல்ல தந்தையாக.

தொடரும்....
 

Advertisement

Advertisement

Back
Top