மனைவி 40

Advertisement

Nivi Ammu

Well-known member
Member
மனைவி - 40.

கலை சட்டென்று அலர் பக்கம் திரும்பினாள். "அலர், நீ என்னடி பண்ணிட்டு இருக்க? மாப்பிள்ளை கிட்ட பேசினியா இல்லையா? அவர் கூடச் சேர்ந்து வாழ்ற வழியைப் பாரு. ஒரு பொம்பள புள்ள இவ்வளவு பிடிவாதம் இருக்கக் கூடாது. தேவையில்லாம இப்படி முறுக்கிக்கிட்டு நிக்காத."

அலர் அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த எரிமலை சட்டென்று வெடித்தது. கண்கள் சிவக்க, குரல் தழுதழுக்கத் தாயைப் பார்த்து கத்தினாள்.

"அவர் கூட நான் சேர்ந்து வாழ்றதா? என்னம்மா உளறிட்டு இருக்க? அன்னைக்குக் கோர்ட்ல நீயும் தானே நேர்ல பார்த்த... அவ கையப் பிடிச்சுக்கிட்டு அந்த மனுஷன் அப்படியே சிலையா நிக்குறதை! கட்ன பொண்டாட்டி என்ன ஆனா, ஏதானான்னு ஒரு நாளைக்காவது வந்து பார்த்தாரா? ஒரு வார்த்தை விசாரிச்சாரமா? அப்படிப்பட்ட கல்நெஞ்சக்காரன் கூட இனிமேல் நான் சேர்ந்து வாழ்றதா இல்லை! இதுதான் என் முடிவு!"

சொல்லிவிட்டு, உள்ளுக்குள் பொங்கிய அழுகையைத் தடுத்துக் கொண்டு அலர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து நகர, கூடியிருந்த அனைவரும் அவள் பதிலால் பேரதிர்ச்சியில் உறைந்து போயினர்.

"அலர்... நில்லுடி!" என்று கலை கத்திக்கொண்டே அவள் பின்னால் ஓடினாள். ஆனால், அதற்குள் அலர் தன் அறைக்குள் நுழைந்து கதவை ‘டமார்’ என்று ஓங்கி மூடினாள். அந்தச் சத்தம் அந்த வீட்டின் எஞ்சியிருந்த நம்பிக்கையையும் உடைத்தது போலிருந்தது.

"அம்மா... என்னம்மா அக்கா இப்படிப் பேசிட்டுப் போறா?" மலர் திகைத்துப் போய் நின்றாள்.

அம்மாவின் முகம் இப்போது சுருங்கி இருந்தது. "அதாண்டி எனக்கும் புரியல. ஏதோ கோவத்துல கத்துறான்னு நினைச்சேன், ஆனா இப்படியே மொத்தமா வேணாம்னு சொல்றாளே! ஏற்கனவே இந்தப் பிள்ளைங்க மேல பாசம் இல்லாம அவங்களும் இவளைத் தேடி வரல. அந்தப் பக்கம் மாப்பிள்ளையும் இவளைப் பத்தி யோசிக்கல. இனி என்ன நடக்குமோன்னு எனக்குப் பயமா இருக்கு மலர். ஒருவேளை அலர் சந்தேகப்படுற மாதிரியே, அந்த ராதையும் மாப்பிள்ளையும்..." என்று சொல்லி முடிக்காமல் தன் தலையில் அடித்துக் கொண்டு விம்மி அழத் தொடங்கினார் கலை.

"அம்மா! அவ ஏதோ ஆத்திரத்துல உளறுறான்னு நீயும் உளறாதே. மாமா கனவுல கூட அப்படி ஒரு தப்பு பண்ண மாட்டான். அந்த ராதையைப் பிடிக்குதோ இல்லையோ, அவள் யாரையும் நிமிர்ந்து கூடப் பார்த்துப் பேச மாட்டா.

நீ முதல்ல அண்ணனை வீட்டுக்குக் கொண்டு வர வழியைப் பாரு. வீட்ல இருக்கிற வருமானமும் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு கிட்டே வருது. வயிறு காயப்போகுது..." மலர் எதார்த்தத்தை சுட்டிக்காட்டினாள்.

கலை பெருமூச்சு விட்டாள். "ஆமாண்டி... நானும் அதே வேதனையில தான் இருக்கேன். மாப்பிள்ளை கிட்ட மெதுவா சொல்லி, ஏதாவது கொஞ்சம் காசு கொடுக்க சொல்லேன்..."

மலர் கசப்பான ஒரு புன்னகையை உதிர்த்தாள். "காசா? சொல்றேன்மா... ஆனா இதுவரைக்கும் அந்த மனுஷன் நம்மகிட்ட ஒரு பத்து பைசா கொடுத்தது கிடையாது. இப்ப மட்டும் என்ன பெரிய மனசு வந்துடப் போகுதா என்ன?" என்று மனதுக்குள் குமைந்தபடி, தன் கணவனைத் தேடி மலர் அங்கிருந்து நகர்ந்தாள்.

"என்னங்க... கைல ஏதாவது காசு இருக்கா?"

அந்தக் கேள்வியில் ஏதிர்பார்ப்பை விட தயக்கமே அதிகமிருந்தது. ஆனால், அசோக்கின் முகம் சட்டென இறுகியது.

"என்கிட்ட ஏது காசு?" எரிச்சலும் ஏளனமும் கலந்த குரலில் அவன் அவளைக் கடுகடுப்பாகப் பார்த்துக் கூறினான்.

மலரின் கண்கள் கலங்கின. "என்னதாங்க நீங்க பண்றிங்க? மாசம் மாசம் சம்பளம் வாங்குறீங்க தான்... ஆனா ஒரு மாசம் முழுசா , என்னைக்காவது ஒரு நாள் என் கையில காசு கொடுத்துருக்கீங்களா? நாங்க தான் உங்களுக்கு இன்னும் செலவு பண்ணிட்டு இருக்கோம். ஏதாவது கேட்டா மட்டும் அது இதுன்னு காரணத்தைச் சொல்லிக்கிட்டே காலத்தைக் கடத்துறீங்க..."

அசோக் பதில் பேச முடியாமல் திருதிருவென விழித்தான். உண்மைகள் அவனைச் சுட்டெரிக்க, அந்த இடத்தை விட்டுத் தப்பிக்க வழி தேடினான்.

"மலர், இப்ப என்கிட்ட காசு இல்ல. என்னைத் தேவையில்லாமல் டென்ஷன் பண்ணாத... இருந்தா தரப்போறேன், போ இங்க இருந்து!" என்று ஆத்திரத்தில் கத்தினான்.

அவள் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல், காலடிச் சத்தம் கூட வெளியே கேட்கக் கூடாது என பூனை நடை நடந்து அங்கிருந்து நழுவினான். இல்லையென்றால், மேற்கொண்டு அவள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் மாட்டிக் கொள்வான் அல்லவா?

"இந்த மனுஷன் என்னதான் மனசுல நெனச்சுட்டு இருக்காருன்னு தெரியலையே... எனக்குன்னு ஒரு பத்து பைசா கூட எடுத்து வைக்க மாட்டேங்குறாரே..." மலர் சொல்லொணாத் துயரத்தில் புலம்பியபடி, அந்தப் கட்டிலின் ஓரமாகச் சுருண்டு படுத்து கொண்டாள். அவளது கண்ணீர் தலையணையை நனைத்தது.

அங்கே கலைக்கு தூக்கம் என்பது எட்டாக்கனியாகி போனது. அறைக்குள் ஒரு சிங்கம் போல் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார். மகனிடம் ஏதோ பெரிய மனுஷத் தோரணையில் சொல்லிவிட்டார் தான். ஆனால், அடிமனதில் ஒரு நெருடல் விஷமுள்ளாகத் தைத்துக் கொண்டே இருந்தது. இத்தனை வருடத்தில் ஒரு நாள் கூட தவறாமல் பேசும் மகன், இப்பொழுது பல மணி நேரம் பேசாமல் இருக்கிறான் என்றால் என்ன அர்த்தம்?

"ஒருவேளை புள்ள பாசத்துல அவங்களைத் தேடிப் போயிட்டானோ?" - அவர் உள்ளம் படபடத்தது.

"வராது... எவனுக்கு வரும் அந்தப் பாசம்? அது அவன் பிள்ளை இல்லைன்னு நானே சொல்லி இருக்கேனே... அவன் என்னைத் தானே நம்புவான்?" - தனக்குத் தானே ஏதேதோ சமாதானங்களை சொல்லிக் கொண்டு மனதைத் தேற்ற முயன்றார். ஆனாலும், அடி மனதின் ஏதோ ஒரு மூலையில் இருந்த அந்த வலி மட்டும் ஆறவே இல்லை.

"நாளைக்கு விடிஞ்சதும் முத வேலையா அவனைத் தேடிப் பிடிக்கணும். அவனை இப்படியே விடக்கூடாது" - கலை ஒரு தீர்க்கமான முடிவுடன், அந்த நீண்ட இரவின் விடியலுக்காகக் காத்திருந்தார்.

பாவி மனதுக்கு ... இனி வரும் விடியல் ஸ்ரீராமனுக்குப் பொற்காலமாகப் போகிறது என்பதும், அதுவே தனது ஆணவத்தின் அழிவுக் காலம் என்பதும் அவருக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ராதை விழிப்பதற்கு முன்பே ஸ்ரீராம் விழித்திருந்தான். வெளிநாட்டில் தனிமையில் வாழ்ந்த வருடங்கள் அவனுக்குச் சமையலைச் சொல்லிக் கொடுத்திருந்தன.

"இத்தனை வருஷம் என் பொண்டாட்டி ஒருத்தியாவே நின்னு போராடிட்டா... இனி அவளுக்கு நான் துணையா இருக்கணும். அவ கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்" என்று மனதிற்குள் நினைத்தபடி, அவளது தூக்கத்தை கலைக்காமல் சத்தமில்லாமல் எழுந்து காய்கறிகளை நறுக்க தொடங்கினான்.

இருந்தாலும், அந்தச் சின்னஞ்சிறு வீட்டில் கத்தியும் மரப்பலகையும் மோதிக்கொள்ளும் 'டக் டக்' சத்தம் ராதையின் காதுகளில் விழாமலா இருக்கும்? அந்தச் சத்தத்தில் அவள் உறக்கம் கலைந்து மெல்லக் கண் விழித்தாள்.

தன் கணவன் சமையலறையில் நின்றிருப்பதை பார்த்தவளுக்கு ஒரு நிமிடம் பிரமிப்பாக இருந்தது. அவனைத் தடுக்க வேண்டும் என்று தோன்றினாலும், பேசினால் மீண்டும் பழைய காயங்கள் வலிக்குமோ என்ற பயத்தில் அமைதியாகச் சென்று பல் துலக்கி, முகம் கழுவி விட்டு சமையலறைக்குள் வந்தாள்.

அடுப்பில் ஒரு பக்கம் சாதம் கொதித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் புளிக்குழம்புக்கு அவன் காய்களை நேர்த்தியாக நறுக்கிக் கொண்டிருந்தான். அவனிடமிருந்த கத்தியைப் பறித்து விட்டு தானே வேலையைத் தொடர நினைத்தாள்.

அவள் தன்னிடம் ஒரு வார்த்தையாவது பேசுவாள் என்று அவன் கண்கள் ஏங்கின. ஆனால், அவளது மௌனம் அவனைத் துளைத்தது. அந்த ஏமாற்றத்தைத் தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு, அவளுக்காகப் போட்டு வைத்திருந்த டீயை அன்போடு நீட்டினான்.

"என்னுடைய சமையல் ரொம்ப மோசமா இருக்காது. நல்லா தான் இருக்கும் ராதை, பயப்படாத... இன்னைக்கு நான் சமைச்சுப் போடுறேன். நீ இந்த டீயைக் குடிச்சுட்டு வேற ஏதாவது வேலை இருந்தா பாரு" - அவன் கைகள் காய்கறிகளைத் தாள லயத்தோடு வெட்டின.

அவளோ அந்த டீயைக் கூட வாங்காமல் அங்கிருந்து விலகிச் செல்ல முயன்றாள். சட்டென அவள் மணிக்கட்டைப் பிடித்து இழுத்தவன்,

"என் மேல உனக்குக் கோபம் இருக்கத்தான் செய்யும்... அதுக்காக இந்த டீயை வேஸ்ட் பண்ணாத. பிள்ளைங்க டீ குடிக்க மாட்டாங்க, நான் ஏற்கனவே குடிச்சுட்டேன். உன் கோபத்தை மனுஷன் மேல காட்டு, இந்த டீ மேல காட்டாதே" என்று தணிந்த குரலில் கெஞ்சினான்.

அந்த ஒரு வார்த்தைக்காகவோ அல்லது அவன் குரலில் இருந்த அந்தப் ஆழமான அன்பிற்காகவோ தெரியவில்லை, அவள் அந்த டீயை வாங்கிக் கொண்டு வாசற்படியில் சென்று அமர்ந்தாள்.

அந்த அதிகாலை வேளை... மெல்லிய குளிர் காற்று மேனியை வருடியது. தூய்மையான காற்றைச் சுவாசித்தபடி சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த அந்த நொடி, அவளுக்கு ஒரு வரமாகத் தெரிந்தது.

பிறந்த வீட்டில் இருந்தவரை மாடாய் உழைத்தாள்; புகுந்த வீட்டிற்குச் சென்றும் முதல் ஆளாக விழித்து ஓயாமல் உழைத்தாள்; பிள்ளைகளுக்காகத் தனித்து வந்த பின்பும் அந்த உழைப்பைப் பாரமாக நினைக்காமல் சுகமாகச் சுமந்தாள்.

ஆனால், இத்தனை வருடத்தில் ஒரு நாள்கூட இப்படித் தனக்கென்று ஒரு நிமிடம் ஒதுக்கி, அமைதியாக அமர்ந்து ஒரு டீயைக் கூட அவளால் குடிக்க முடிந்ததில்லை.

இன்று முதல் முறையை அவள் கண்கள் பனிக்க அனுபவித்துக் கொண்டிருந்தாள். சாலையோர மின் விளக்கின் வெளிச்சம் அவள் முகத்தில் விழ, அவளது இத்தனை கால வேதனையும், இன்றைய சிறு நிம்மதியும் அந்த வெளிச்சத்தில் ஜொலித்தன. அதை ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டே ஸ்ரீராம் குழம்பைத் தாளித்து மூடிவைத்தான்.

அவனிடம் துளிகூட ஆணவமோ, கர்வமோ இல்லை. "என் பொண்டாட்டிக்காகச் செய்யுறேன், என் புள்ளைங்களுக்காகச் செய்யுறேன்" என்ற உன்னதமான உணர்வு தான் அவன் ஒவ்வொரு செயலிலும் தெரிந்தது.

"ராதை... வேற எதுவும் காய் இல்லையே? பிள்ளைங்களுக்குத் தொட்டுக்க என்ன கொடுக்கிறது?" அவளை எப்படியாவது பேச வைக்க அவன் போராடினான். ஒரே நாளில் எல்லாம் மாறிவிடாது என்று அவனுக்குத் தெரியும், ஆனாலும் முயற்சியைக் கைவிட அவனுக்கு மனமில்லை.

அவள் பதிலே சொல்லாமல் எழுந்து வந்து, பரணில் இருந்த அப்பள டப்பாவை எடுத்து மேலே வைத்தாள்.

"என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேச மாட்டியா ராதை?" அவன் குரல் ஏக்கத்தில் விம்மியது. அவள் முகம் திருப்பிக் கொண்டு வீட்டைச் சுத்தம் செய்யத் தொடங்கினாள். பிள்ளைகள் தூங்கும் இடத்தை மட்டும் விட்டுவிட்டு, வீட்டின் மூலை முடுக்கெல்லாம் பெருக்கித் துடைத்தாள். அதற்குள் ஸ்ரீராம் சமையலை முடித்து, பிள்ளைகளின் லஞ்ச் பாக்ஸையும் எடுத்து அடுக்கி வைத்தான்.

மணி ஆறு ஆனது. தன் மகள்கள் அருகில் அமர்ந்த ஸ்ரீராம், "சீதம்மா... மகாமா... எழுந்திருங்கடா, டைம் ஆகுது செல்லம்" என்று மிக மெல்லிய, வாஞ்சையான குரலில் அழைத்தான். அந்தத் தந்தை
குரலைக் கேட்டதும், வேலை செய்து கொண்டிருந்த ராதையின் கைகள் அப்படியே உறைந்து போயின.

தொடரும்.....
 
அப்பாடி கலை&கோவுக்கு அழிவ காலம் ஆரம்பம் ஆகப்போகுது, நினைத்தாலே சந்தோசமாக இருக்கிறது 🥳🥳🥳🥳🥳
 
Last edited:
அப்பாடி கலை&கோவுக்கு அழிவ காலம் ஆரம்பம் ஆகப்போகுது, நினைத்தாலே சந்தோசமாக இருக்கிறது 🥳🥳🥳🥳🥳
கண்டிப்பா அழிவு தான் sis
 
அப்பாடி கலை&கோவுக்கு அழிவ காலம் ஆரம்பம் ஆகப்போகுது, நினைத்தாலே சந்தோசமாக இருக்கிறது 🥳🥳🥳🥳🥳
கண்டிப்பா அழிவு தான்
very nice💞💞💞💞 kalai, alar, malar ini neenga anupavika vendiya kalam nalla anupavinga 😂 konja nanjama radhai kasta paduthuninga innum varum wait and watch me🧐🧐🧐🤓🤓
நிறைய இருக்கு sis
 
அம்மா மகளுக அனுபவிக்க
வேண்டியது நிறைய இருக்கு
 

Advertisement

Advertisement

Back
Top