மனைவி 41

Advertisement

Nivi Ammu

Well-known member
Member
மனைவி - 41

அத்தனை பாசம்... அத்தனை உருக்கம் அந்த அழைப்பில் இருந்தது. இந்த ஒரு வார்த்தைக்காகவும், இதுபோன்ற சின்னஞ்சிறு அரவணைப்பிற்காகவும் அந்தப் பிள்ளைகள் எத்தனை நாள் ஏங்கியிருப்பார்கள்? அவர்கள் வாய்விட்டுப் புலம்பிய நினைவுகள் ராதையின் கண்முன் நிழலாட, அவளுக்குத் தொண்டை அடைத்தது. கண்கள் கலங்க அமைதியாகத் திரும்பி அவனைப் பார்த்தாள்.

அப்பாவின் குரல் கேட்டு மகா சட்டென எழுந்தாள். அவள் கண்கள் முதலில் சந்தித்தது தன் தந்தையின் முகத்தைத்தான். அந்த ஒரு நொடி... உலகத்தையே வென்ற சந்தோஷத்தில் அவனை ஓடிப் போய்க் கட்டிக் கொண்டாள்.

"அப்பா!" அவள் குரலில் இருந்த அந்தப் புத்துணர்ச்சி ஸ்ரீராமின் ஆன்மா வரை ஊடுருவிச் சென்றது. இத்தனை வருடம் தான் இழந்த சொர்க்கத்தை அந்த ஒரு பிஞ்சு அணைப்பில் அவன் மீட்டெடுத்துக் கொண்டிருந்தான்.

மகள் நெற்றியில் முத்தமிட்டவன், "டைம் ஆகுதுடா, பிரஷ் பண்ணிட்டு வாங்க" என்று சொல்ல, சீதாவும் மெல்லக் கண்விழித்து அமர்ந்தாள்.

அவனையே ஒருவித ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்த அவளைப் பார்த்து ஒரு கையை நீட்டி அழைக்க, அவள் எந்தப் பிடிவாதமும் காட்டாமல் அந்தத் தந்தை என்ற நிழலுக்குள் புகுந்து கொண்டாள். இரு மகள்களின் நெற்றியிலும் முத்தமிட்ட ஸ்ரீராமுக்கு, அந்த விடியல் ஒரு சொர்க்கமாகத் தெரிந்தது.

"சரி, ரெண்டு பேரும் போய் பிரஷ் பண்ணிட்டு வாங்க."

"நாங்க அப்படியே குளிச்சிட்டு வர்றோம்ப்பா" என்று சீதா சொல்ல, ஸ்ரீராம் அதிர்ந்து போனான்.

"தண்ணி இவ்வளவு ஜில்லுனு இருக்கு... இவ்ளோ காலையில பச்சத் தண்ணிலையா குளிக்கப் போறீங்க?"

"ஆமாம்பா, நாங்க டெய்லி இப்படித்தான் குளிப்போம். ஒரு பத்து நிமிஷத்துல வந்துருவோம்" என்று சொல்லிவிட்டு இருவரும் ஓடினர்.

தன் பிள்ளைகள் தினமும் இந்த உறைய வைக்கும் குளிரில் பச்சைத் தண்ணீரில் குளிப்பதை அறிந்த அந்த நொடி, அவன் இதயம் சுக்குநூறாக உடைந்தது.

"ராதை... வீட்ல ஒரு ஹீட்டர் கூட இல்லையா?" ஒரு பெரும் பாவியைப் போலக் கேட்டான் அவன்.

ராதையின் பார்வையில் அத்தனை ஆக்ரோஷம் இருந்தது. பதில் சொல்லாமல் அவள் மௌனமாக இருக்க, மீண்டும் அவன் "ரதி... நிஜமாவே டெய்லி பச்சத் தண்ணிலையா குளிக்கிறாங்க?" என்று கேட்டான்.

"ஆமாம்... என்னால முடிஞ்சது இதுதான். என் வருமானத்துக்குள்ள என் பிள்ளைகளை எப்படி வளர்க்க முடியுமோ அப்படித்தான் வளர்க்க முடியும். ஹீட்டர் வாங்குற அளவுக்கு எல்லாம் என்கிட்ட காசு இல்லீங்க..." - அவள் குரல் கரகரத்தது. அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் அவள் கீழே இறங்கிச் சென்றாள்.

வறுமையின் கோரப் பிடி அவனை இப்போதுதான் நிஜமாக வாட்டியது. இப்படி கொடூர வறுமை தெரியாமல் வளர்ந்தவனுக்கு, வறுமை இவ்வளவு கொடூரமானது என்பது இன்றுதான் புரிந்தது. தன் பிள்ளைகளும் மனைவியும் இத்தனை காலம் இப்படி ஒரு நரகத்தைச் சந்தித்துக் கொண்டிருப்பதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.

எல்லாவற்றையும் மாற்றிவிட வேண்டும் என்று அந்த நொடி அவன் துடித்தான். ஆனால், கைவிட்டுப் பார்த்தால் அவனிடம் ஒரு பத்து ரூபாய் கூட இல்லை. அந்த நிமிடம் தன் கழுத்தை அவனையே அறுத்துக் கொள்ளத் தோன்றியது.

"இத்தனை வருஷம் சம்பாதிச்சேனே... எனக்கென்று ஒரு பத்து ரூபாய் சேர்த்து வைக்கத் தெரியாமப் போச்சே! என் குடும்பத்துக்காக எதையாவது மிச்சம் பிடிச்சிருந்தா, இன்னைக்கு என் பிள்ளைகளோட வாழ்க்கையை மாத்திருப்பேனே!"

இப்போதுதான் அவன் மனதில் ஈட்டியால் குத்தியது போன்ற ஒரு வலி உண்டானது.

அவன் தாய் இதுவரை அவனுக்கு என்று ஒரு சின்ன மோதிரம் கூட வாங்கித் தந்தது கிடையாது. "நீ சம்பாதிச்ச பணத்தை உன் தங்கச்சிங்களுக்கு நகை வாங்கக் கொடுத்துட்டேன், குடும்பச் செலவுக்குப் போயிடுச்சு" என்றுதான் அவர் சொன்னாரே தவிர,

"உனக்காக ஸ்ரீராம் இதைச் சேர்த்து வச்சிருக்கேன்" என்று ஒரு நாளும் சொன்னதில்லை.

"அவனுக்கென்று ஒரு கிராமாவது சேர்த்து வைத்திருந்தால், இன்று அதை அடகு வைத்தாவது பிள்ளைகளுக்கு வேண்டியதைச் செய்திருக்கலாமே" என்று அவன் புத்தி அவனைச் சுத்தியலால் அடித்தது.

அதே சமயம், வறுமையின் பிடியில் இருந்தாலும் ராதையிடம் இன்னும் சில நகைகள் மிச்சமிருக்கும் என்ற நம்பிக்கையும் அவனுக்கு வந்தது.

அவர்கள் இந்த வறுமையோடு வாழப் பழகிக் கொண்டனர் என்பதை அவன் வேதனையோடு புரிந்து கொண்டான். அதற்குள், அந்தச் சிறுமிகள் இருவரும் குளித்து முடித்து, ஈரத்தலையோடு உடை மாற்றி தேவதைகள் போல வெளியே வந்து நின்றனர்.

அதிகாலை ஆறு மணி. அந்தத் தெருவின் பொட்டி கடை திறக்க தொடங்கியது. அந்த அதிகாலைப் பனியில், பிள்ளைகளுக்காகப் பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு ராதா உள்ளே வந்தாள். அடுப்பில் அவன் ஏற்கனவே போட்டு வைத்திருந்த பால் ஆவி பறக்க காத்துக் கொண்டிருந்தது. அதைச் சூடுபடுத்தி, பிஸ்கட்டுடன் தன் மகள்களுக்குக் கொடுத்தாள்.

"நைட்டு ஒழுங்கா சாப்பிடல... இப்ப இந்த பிஸ்கட்டோட சேர்த்துச் சாப்பிடுங்க. அம்மா அப்படியே சூடா தோசை ஊத்தி, சட்னி அரைக்கிறேன்," என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஸ்ரீராம் குறுக்கிட்டான்.

"ராதா, நான் சட்னி அரைச்சு வச்சுட்டேன். தோசை மட்டும்தான் சுடணும்... அதை நானே சுட்டுத் தர்றேன்," என்றான் மென்மையான குரலில்.

சீதா தன் அப்பாவை ஏறிட்டுப் பார்த்தாள். "அப்ப... நீங்க சமைச்சீங்களாப்பா?" அவளது குரலில் அத்தனை ஆச்சரியம்.

அந்த ஒரு வினாடி ஸ்ரீராம் அப்படியே உறைந்து போய் நின்றான். அவளது பிஞ்சு இதழ்களிலிருந்து வெளிவந்த அந்த 'அப்பா' என்ற ஒரு வார்த்தை, அவன் இதயத்தின் ஆழம் வரை சென்று உயிரை உருக்கியது. அந்த ஒரு நொடி, தன் மூத்த மகள் தன்னைத் தந்தை என அங்கீகரித்த அந்தத் தருணம், அவன் செய்த பாவங்கள் எல்லாம் கரைந்து மோட்சம் கிடைத்தது போன்ற ஒரு உணர்வைத் தந்தது.

மீண்டும் மீண்டும் அந்த நெகிழ்ச்சியைப் பெரிதுபடுத்திக் காட்டி அவளைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பாதவன்,

"அப்பா நல்லா சமைப்பேன்டா... இன்னைக்கு நீங்க சாப்பிட்டுப் பாருங்க, இது முழுக்க அப்பா சமையல்தான்!" என்றான் உற்சாகத்தை வரவழைத்துக்கொண்டு.

"அம்மாவே எப்பவும் சமைப்பாங்களே... நீங்க ஏன்ப்பா இன்னைக்கு எழுந்து வேலை செய்றீங்க?" என்று மகா தன் சந்தேகத்தைக் கேட்டாள்.

"அம்மா செய்வாங்க தான்... ஆனா எப்ப பார்த்தாலும் அம்மாவே செஞ்சு கொடுத்தா அவங்களுக்கு டயர்டா இருக்கும்ல? பாவம், அம்மா தூங்கட்டும்னு, அம்மாவுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்னு நான் செஞ்சேன்," என்று அவன் சொல்லும்போது அவன் குரலில் ஒரு குற்ற உணர்வும், அதே சமயம் ஒரு பொறுப்பான கணவனின் அக்கறையும் கலந்திருந்தது.

தன் தந்தை எந்தப் பாகுபாடும் காட்டாமல் சமையலறை வேலைகளைச் செய்ததை அந்த இரு சிறுமிகளும் வியந்து ரசித்தனர்.

ஏனென்றால், அவர்கள் வளர்ந்த மாமன் வீட்டில், 'ஆண்மகன்கள் வீட்டு வேலை செய்யக்கூடாது' என்ற எழுதப்படாத சட்டங்கள் பாறையில் செதுக்கியது போல் உறுதியாக பொறிக்கப்பட்டிருந்தது. அந்தச் சட்டங்களை இன்று அவன் உடைப்பதைப் பார்த்தபோது அவர்களுக்குள் ஒரு பெருமிதம்.

"சூப்பர் அப்பா! நீங்க அம்மாவுக்கு ஹெல்ப் பண்றீங்க... இதே மாதிரி தினமும் ஹெல்ப் பண்ணுங்க. அம்மா பாவம், நிறைய வேலை செய்றாங்க, ரொம்பக் கஷ்டப்படுறாங்க," என்று சீதா தன் தாயின் வலியை உணர்ந்து பரிந்து பேசினாள்.

அவர்கள் பேசுவதை எல்லாம் காதில் வாங்கிக்கொண்டே, ராதா எதுவும் பேசாமல் தோசை சுட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் உள்ளுக்குள் ஏதோ ஒரு போராட்டம்.

"சீதா... உங்க அப்பாவைப் போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடச் சொல்லு," என்று நேரடியாகப் பேசாமல் மகளைத் தூது அனுப்பினாள்.

ஸ்ரீராம் சினத்துடன் தன் மனைவியைப் பார்த்தான். "இதை என்கிட்டயே சொல்ல வேண்டியதுதானே? என் பிள்ளைகளைச் சாக்கா வச்சுப் பேசுறாளே!" என்று எரிச்சல் வந்தாலும், அவள் அருகில் மெல்லச் சென்றான். அவள் காதோரம் மட்டும் கேட்கும் ரகசியக் குரலில், "என்கிட்ட நேரடியா சொன்னா என்ன?" என்று கேட்டான்.

அவனின் அந்த நெருக்கம், அவனது மூச்சுக்காற்று அவள் கழுத்தில் பட்டதுமே ராதாவுக்குள் ஒரு மின்னல் தாக்கியது போன்ற அதிர்வு. அவள் பதில் பேசாமல் அமைதி காத்தாள். அவளது அந்த மௌனம், கூர்மையான வாளைப் போல அவனைத் தாக்கியது. வேறு வழியின்றித் தனக்குத் தேவையான ஆடைகளை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றான்.

வாழ்நாளில் ஒருபோதும் அவன் குளிர்ந்த நீரில் குளித்ததே இல்லை. முதல்முறையாக அந்தக் குளிர்ந்த தண்ணீரை எடுத்துத் தன் உடம்பில் ஊற்றியபோது, ரத்தம் உறைந்து போவது போல் இருந்தது. உடல் நடுங்கியது. ஆனால் அடுத்த நொடியே, 'இதே தண்ணீரில் தானே என் மனைவியும் பிள்ளைகளும் தினமும் குளிக்கிறார்கள்... அவர்களுக்காக நான் என்னையும் மாற்றிக்கொள்ள வேண்டும்' என்று வைராக்கியம் கொண்டான்.

குளித்துவிட்டு அவன் வெளியே வந்தபோது, ராதா அன்பின் அடையாளமாகச் சுடச் சுடத் தோசையைத் தட்டில் வைத்துத் தந்தாள். அவளுக்கு அவன் மேல் எத்தனை கோபம் இருந்தாலும், அவனைக் கவனிக்கும் அந்தத் தாய்மை கலந்த அன்பில் அவன் மொத்தமாகத் தோற்றுப்போனான்.

"அப்பா எங்களுக்கு எக்ஸ்ட்ரா கிளாஸ் ஆரம்பிக்கப் போறாங்க," என்று சீதா சாப்பிட்டுக்கொண்டே சொன்னாள்.

"எப்போதிலிருந்துடா?"

"நெக்ஸ்ட் வீக் ஸ்டார்ட் பண்றாங்க... இனிமேல் நாங்க 7:00 மணிக்கெல்லாம் ஸ்கூலுக்குப் போகணும்."

"ஏழு மணிக்கேவா?" ராதா பதட்டத்துடன் கேட்டாள்.

"ஏழரை மணிக்கு ன்னு தானே உன் டீச்சர் சொன்னாங்க?"

"ஆமாம்மா... முதல்ல ஏழரைன்னு தான் சொன்னாங்க. ஆனா மேத்ஸ் மிஸ் டைம் பத்தாதுன்னு சொல்லிட்டாங்க. அதனால 7:00 மணிக்கே வரச் சொல்லிட்டாங்க," என்று மகா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள்.

ஸ்ரீராம் அவர்களைப் பார்த்து மெல்லச் சிரித்தான். "கவலைப்படாதீங்கடா... நீங்க நல்லா படிச்சு பெரிய வேலைக்குப் போகணும். இப்பக் கஷ்டப்பட்டா தான் பின்னாடி சந்தோஷமா இருக்க முடியும். அப்பா இருக்கேன்ல? டெய்லி காலையில நானே கொண்டு போய் விடுறேன், ஈவினிங் கூட்டிட்டு வர்றேன்... ஓகேவா?" என்று அவன் ஒரு முழுமையான தந்தையாகப் பேச, அவர்கள் இருவரும் உற்சாகமாகத் தலையசைத்தனர்.

"ரதி... கிளம்பிட்டியா?" என்று அவன் கேட்டபடி பிள்ளைகளின் பைகளைத் தூக்கித் தோளில் மாட்டிக்கொண்டு நின்றான்.

அவனது அந்தப் புதிய தோற்றமும், அவன் காட்டிய அதீத அக்கறையும் ராதாவுக்குள் சிரிப்பை வரவழைத்தது. ஆனால், அதை வெளியே காட்டாமல் இதழைக் கடித்துக் கொண்டு, பிள்ளைகளுடன் கீழே இறங்கினாள்.

"தெரியிற மாதிரி சிரிச்சா இன்னும் அழகாத் தான் இருப்ப..." என்று அவன் பின்னால் இருந்து கிசுகிசுக்க,

"பிள்ளைகள் முன்னாடி இப்படியா பேசுவது?" என்று அவள் தன் பற்களை கடித்துக் கொண்டு கோபத்தை அடக்கினாள். ஆனால் அவன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவளைத் தொடர்ந்தான்.

நால்வரும் ஒன்றாக வண்டியில் ஏறிச் செல்வதை, ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த பிரபாகரனின் கண்கள் கலங்கின.

தொடரும்...
 

Advertisement

Advertisement

Back
Top