Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மழைக்கால மேகங்கள்!-2

Advertisement

praveenraj

Well-known member
Member
மழைக்கால மேகங்கள்!

பேருந்தில் ஏறியதும் 'தூதுவள இலை அரைச்சு...' என்ற பாடல் அவன் செவிகளில் தீண்டியது. அப்போதே அவன் முகம் அஷ்டகோணலாகியது. ஜஸ்டின் பெய்பர், டெய்லர் ஸ்விப்ட், ரிஹானா, செலீனா கோமஸ் முதலியோரின் பாப் பாடல்களை மட்டுமே தன் பிளே லிஸ்டில் வைத்திருப்பவனுக்கு இதெல்லாம் பிடித்தால் தானே ஆச்சர்யம். பத்தாவது முடித்ததும் என்று அவன் தந்தை வண்ணனை நாமக்கல்லில் இருக்கும் பிரபல பள்ளியில் சேர்த்தாரோ அப்போது தொடங்கி கல்லூரி வேலை பார்க்கும் அலுவலகம் என்று அனைத்திலும் மேற்கத்திய வாழ்க்கையைப் பின்பற்றியே வாழ்ந்து பழகியவன் அவன். ஆங்கிலப் படங்களைப் பார்ப்பது, கொரியன் வெப் சீரியஸின் விசிறியாக மாறியது, கிரிக்கெட்டில் இருந்து யூரோ கோப்பை லா லிகா என்று தன்னை ஒரு கால்பந்து ரசிகனாக மாற்றிக்கொண்டது வரை தன்னை ஒரு முழுநேர 'எலைட் அர்பன் யூத்தாக' (மேல்தட்டு நகர்த்திய இளைஞன்) மாற்றிக்கொண்டான் பொன்வண்ணன். இதில் இன்னுமொரு வேடிக்கை என்னவெனில் அவனுடைய அலுவலக நண்பர்கள் மத்தியில் அவன் 'வேன்'(van heusen என்னும் வார்த்தையில் வரும் வேன் என்னும் உச்சரிப்பில்) என்றே மாறியிருந்தான்.

நல்லவேளையாக அவன் சிவில் இன்ஜினியரிங் படித்தான். ஒருவேளை சாஃப்ட் வேர் இன்ஜினீயராக இருந்திருந்தால் இந்நேரம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்போடும் உரிமையையும் பெற்றிருப்பான்.
'நான் இந்நேரம் எங்க எப்படி இருக்கவேண்டியவன்?' என்ற கவுண்டமணி செந்திலின் பிரபல நகைச்சுவை வசனத்தைப்போல் எப்படியெல்லாமோ வாழ வேண்டும் என்று கனவு கோட்டை கட்டியிருப்பவன் எப்படி வெள்ளிமலை போன்ற குக்கிராமத்தில் வாழப்போகிறானோ?
அதிகாலை வேளையில் பேருந்தின் ஜன்னல் ஓரமாக அமர்ந்து ஹேர்பின் வளைவு சாலையில் மலைகளுக்கிடையில் பயணிக்கும் போது வீசும் குளிர் காற்றுக்கு இதமாக தன் உடலை மேலும் குறுக்கிக்கொண்டு கைகளில் ஏற்படும் மயிர் கூச்செரிதலை (goosebumps) அடக்கவும் முடியாமல் ரசித்தவாறு பயணித்தான்.

அவன் எண்ணமெல்லாம் கடந்த காலத்திலே இருந்தது. இரவு நேரத்தில் பயணம் செய்வது என்பது சிறு வயது முதலே அவனுக்குப் பிடித்தமான செயல். பொதுவாக இரவைக் கண்டால் அஞ்சும் பிள்ளைகளுக்கு மத்தியில் தினமும் இரவில் சாப்பிட்டவுடன் தந்தையுடன் காற்றாட சிறிது நடை பழகுவான். அந்நேரங்களில் ஒரு திகில் கதையோ இல்லை அமானுஷ்ய விஷயத்தையோ பேசுவதை அவன் அதிகம் விரும்புவான். அவனுக்கு சற்றும் சளைக்காமல் அவன் தந்தையும் சிறுவயதில் அவரறிந்த பேய்கதைகளைப் பற்றி உரைப்பார். அவனொரு அட்வென்சரஸ் சிறுவன். அதாவது புதியவற்றையும் மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தும் நிகழ்வுகளையும் முயற்சித்துப் பார்க்க எண்ணுபவன்.
அவனது தேடல்களுக்கு நல்ல தீனி போடுவதைப்போலவே அவன் ஊரும் இருந்தது. வெள்ளிமலையை ஒட்டி ட்ரெக்கிங் செல்வதற்கும் அங்கிருக்கும் காடுகள் மலை முகடுகள் அருவிகள் ஆகியவற்றை கண்டுகளிக்கவும் அவனுக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தது. சிறுவயதில் எல்லாம் அவன் குறும்பு செய்தால் ஹாஸ்டலில் சேர்த்துவிடுவதாக கிரிஜா மிரட்டுவார். இந்த ஊரின் மீது இருந்த பற்றுதல் மோகம் ஆகியவற்றால் கிரிஜாவின் மிரட்டலுக்கு பயந்தவன் போல் நடிக்கவும் செய்வான். அப்படிப் பட்டவன் கடந்த ஒன்பது ஆண்டுகளில் இங்கே வந்து சென்ற நாட்களை விரல் விட்டே எண்ணிவிடலாம்.

நாம் ஒரு இடத்தையோ பொருளையோ விரும்பினோம் என்றால் நாம் உயிரற்ற அந்த அஃறிணை பொருட்களை மட்டும் நேசித்தோம் என்று அர்த்தமில்லை. அந்த இடத்திலோ பொருளிலோ நம் பிரியத்துக்குரியவர்களின் நினைவுகளும் சுவடுகளும் இன்னும் வசிக்கிறதென்றும் மீண்டும் அந்த இடத்தை அவர்தம் துணையின்றி தனியாக ரசிக்க மனமில்லை என்பதே நிதர்சனம்.

பேசி போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா?
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா?

என்ற நா. முத்துக்குமாரின் வரிகள் காதலிக்கு மட்டும் தான் பொருந்த வேண்டுமா என்ன? தந்தைக்கும் பொருந்தலாம். நாம் அதிகம் நேசித்தவர்கள் நம்மை விட்டுப் போனால் இரண்டு வகையான எக்ஸ்ட்ரீம் முடிவுகளை நாம் எடுக்கலாம். ஒன்று அவருடைய நினைவுகளில் வாழ்ந்து நம் எதிர்காலத்தை கடத்துவது. அல்லது அவருடைய நினைவுகளை அடியோடு மறக்க வேண்டும் என்று அவர் நினைவுகளை மீட்டெடுக்கும் செயல்களை முற்றிலும் துறப்பது. பொன்வண்ணன் தேர்ந்தெடுத்ததோ பின்னதை.

வெள்ளிமலையில் அவன் தந்தையோடு சேர்ந்து அவன் கால்பதிக்காத இடமே இல்லை எனலாம். பெற்றவர்களுக்குப் பிறகு கிரிஜாவுக்கு உடன் பிறந்தவர்கள் என்று யாருமில்லாத காரணத்தால் ஜெயசீலனையே அந்தாதியாய்(அந்தம் + ஆதி ஒன்றின் முடிவே மற்றொன்றின் தொடக்கம் என்னும் பொருள். இங்கு, பெற்றவர்களுக்குப் பிறகு கணவன் ஒருவனே என்ற அர்த்தம்) எண்ணி வாழ்க்கையை ஓட்டினார். ஜெயசீலனின் பூர்விகம் விழுப்புரத்துக்குப் பக்கம். அவர் தந்தை காலத்திலே வெள்ளிமலைக்கு குடிவந்தவர்கள் அங்கிருந்த எஸ்டேட்டில் வேலை செய்து தங்கள் பிள்ளைகளை ஆளாக்கினார்கள். சில காலத்திற்குப் பிறகு சொந்தமாக நிலம் வாங்கி உழுதுண்டு வாழ்ந்து வந்தார்கள். வண்ணனுக்கு அண்ணன் தம்பிகள் என்று யாருமில்லை என்றாலும் பெரியப்பா பிள்ளைகள் என்று இரண்டு அண்ணனும் ஒரு தங்கையும் உண்டு. ஆனால் ஜெயசீலன் காலத்திலே மனஸ்தாபத்தில் பேச்சு வார்த்தை நின்றுவிட ஜெயசீலன் இறந்ததும் ஏதாவது தேவை என்றால் மட்டும் எட்டிப் பார்க்கும் படியான உறவு இருக்கிறது. அதனாலோ என்னவோ கிரிஜா தன் மூத்தாரின் குடும்பத்தோடு தள்ளியே இருப்பார். போதாக்குறைக்கு அவர் மகன்கள் இருவரும் சரிவர படிக்காமல் நல்ல வேலைக்கும் போகாமல் இருக்க இங்கே பொன்வண்ணனோ கைநிறைய சம்பாதிக்கிறான் என்ற வயிற்றெரிச்சல்.
ஏதேதோ நினைவுகளில் இருந்தவனுக்கு அன்னையின் செல் போன் அழைப்பு நிகழ் காலத்திற்கு அழைத்து வர அவரோ தூக்கத்தில் இருந்து விழித்து அழைப்பவரைப் பார்த்ததும் முகத்தில் ஒரு சின்ன நம்பிக்கை துளிர்விட,

"சொல்லுமா தூரி... ஊருக்கு பஸ் ஏறிட்டோம் டா. இன்னும் அரைமணிநேரத்துல வந்துடுறோம்" என்று சொல்ல,

"அப்போ நான் வெந்நீர் போட்டு வெக்கட்டுமா அத்த? தண்ணீ வேற வருது. அதையும் பிடிச்சு வெச்சிடுறேன். நீங்க வரதுக்குள்ள நின்னாலும் நின்றும்..."

"உனக்கு வேற சிரமம் கொடுக்கறேனில்ல?"

"இதுல என்னத்த சிரமம் இருக்கு? சரி நான் ஆகுற வேலையைப் பார்க்குறேன்..." என்று வைத்ததும் பொன்வண்ணன் யாராக இருக்கும் என்ற யோசனையில் இருந்தான். இதற்கு காரணமும் இருக்கிறது. கோவையில் இருக்கும் போது கிரிஜாவிடம் பேசுகையில் அடிக்கடி இந்தக் குரலுக்குச் சொந்தக்காரியைப் பற்றி யோசித்து இருக்கிறான் தான். ஒருமுறை கிரிஜாவாக அவளைப் பற்றிக் கூற வரும் வேளையில் இவன் ஏதோ கடுப்பில் எரிந்து விழ அத்துடன் சரி. அதன் பின் ஒருநாளும் கிரிஜா அவளைப் பற்றி இவனிடம் பேச முயற்சித்ததே இல்லை. இவனும் காலப்போக்கில் அதை மறந்தே விட்டான். இவன் ஊருக்குப் போகும் வேளையில் கிரிஜாவின் வீட்டிற்கு வழக்கமாக வரும் எவரும் எட்டிகூடப் பார்க்க மாட்டார்கள். கிரிஜாவுக்கு ஊரிலிருந்து வந்த மகனை கவனிக்கவே நேரம் சரியாகிவிடும்.

ஊருக்கே போனாலும் அவன் இருக்கும் இரண்டு மூன்று நாட்களில் அவன் வீட்டை விட்டு எங்கேயும் செல்ல மாட்டான். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் அவனது அறை அல்லது ஹால் இரண்டைத் தவிர்த்து எங்கேயும் அவன் கால்கள் அசையாது. கிரிஜாவுக்கு வேலைக்குச் செல்லும் பிள்ளை ஊருக்கு வந்திருப்பதால் அவனுக்குப் பிடித்த பதார்த்தங்களைச் செய்யவும் மகனை சாப்பிட வைத்து அழகு பார்க்கவுமே நேரம் சரியாக இருக்கும். பொன்வண்ணன் ஊரிலிருந்து மறுபடியும் கோவைக்குச் சென்ற நாளின் மாலையில் அங்கே வரும் தேன் அரசி தூரிகா ஆகியோர் இரண்டு நாட்கள் தங்களைக் கண்டுகொள்ளாத கிரிஜாவை கிண்டல் செய்தே ஒரு வழி செய்து விடுவார்கள். ஆனால் அந்தக் கிண்டல் எல்லாம் அடுத்து கிரிஜா பேசுவதில் காணாமல் போய்விடும். அவனாக அன்னையிடம் ஆசையாகப் பேசாவிட்டாலும் கிரிஜா சொல்ல வருவதையாவது வண்ணன் கேட்டிருக்கலாம். தேனுக்கு கிரிஜாவை விட நான்கைந்து வயது அதிகம் தான். அரசிக்கு நாற்பதுகளின் தொடக்கம் நடக்க தூரிகாவுக்கோ இருபத்தி ஆறு ஆகிறது.

"விடுத்தா எல்லாம் சரியாப்போயிடும். டவுன்லேயும் சிட்டியிலும் வளர்ந்த பையன். அதெல்லாம் உன்ன பத்திரமா பார்த்துக்குவான்..." என்று தேனு ஆறுதல் உரைப்பார்.

"நீ ஏன் க்கா இங்கனயே இருக்க? போய் பிள்ளைகூட கொஞ்ச நாள் தங்கலாம் இல்ல?" என்று அக்கறையாக மொழிவார் அரசி.

"அத்தை, இதுக்கெல்லாம் நீங்க மனசுடைஞ்சு போலாமா? அதான் நாங்கல்லாம் இருக்கோமில்ல? அவங்களே எப்பயாவது தான் ஊருக்கு வராக. அவங்க சோலில என்ன சிக்கலோ? விடுங்க..." என்று கிரிஜாவை எப்படியேனும் பேசி தேற்றிவிடுவாள் தூரிகா.
பிடிவாதமாக ஊருக்கு அழைத்துச் செல்லப்படும் வண்ணனால் ஊரில் தனக்கிருக்கும் நட்புகளுடன் பிணக்கு ஏற்படப்போகிறதென்று பாவம் கிரிஜா அறியவில்லை போலும்!

அவர்கள் பயணம் செய்த பேருந்து சிறிது நேரத்தில் கூட்டம் குறைய அந்த நடத்துனர் கிரிஜாவை நோக்கி வந்து,

"எப்படி ம்மா இருக்கீங்க?" என்றார்.

அப்போது தான் அவரை மீண்டுமொரு முறை பார்த்த கிரிஜா நினைவு வந்தவராய்,

"திருநா அண்ணா?" என்று கேள்வியெழுப்ப அவரும் ஆமோதித்து,
"பரவாயில்லையே மா. என்னை இன்னும் ஞாபகம் வெச்சு இருக்கியே? அப்பறோம் எப்படிம்மா இருக்க?" என்றவர் அருகிலிருந்த வண்ணனைக் கண்டு,

"நம்ம தம்பியா மா?" என்று கேட்க,

"ஆமாங்க அண்ணா. அண்ணி பிள்ளைங்க எல்லாம் எப்படி இருக்காங்க? நீங்க திருவண்ணாமலை பக்கம் குடிபோயிட்டதா கேள்விப்பட்டேன். ஆனா உங்களை கான்ட்டேக்ட் செய்ய வழி இல்லாமலே போச்சு..." என்று பேச இங்கே வண்ணனோ இதுவரை இருந்த நிலை மாறி ஏதும் புரியாமல் விழித்தான்.

கிரிஜாவுக்கு திருநாவுக்கரசை இந்த நிலையில் பார்ப்போம் என்று துளியும் எண்ணவில்லை. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை தொழில்களைச் செய்ய முடியும்? இரண்டு. இல்லை மூன்று. சமயங்களில் ஐந்து வரை கூடச் செய்யலாம். ஆனால் திருநாவுக்கரசோ இரும்பு சாமான் கடை, உணவகம், பானிபூரிக் கடை, கறிக்கடை, காஃபி எஸ்டேட்டில் தினக்கூலி, மரமேறி(தென்னை மரம் ஏறி தேங்காய்த் தள்ளும் வேலை), ட்ராக்ட்டர் ஓட்டுநர் என்று அவருக்குத் தெரிந்தே பல அவதாரங்களை மேற்கொண்டு இன்று ஒரு நடத்துனராக அவர் முன் நிற்கிறார்.

மூன்று பெண் பிள்ளைகள் இருந்ததால் அவர்களைக் காப்பாற்ற அவரும் செய்யாத தொழில் இல்லை. அவர் காணாத நஷ்டமில்லை. அவரைத் தெரிந்த யாரவது ஒருவரை அழைத்துக் கேட்டால்,"எந்தத் தொழில் செஞ்சாலும் நட்டம் தான். ராசியில்லாதவன்..." என்று முடித்துவிடுவார்கள்.
ஒவ்வொருமுறை அவர் கீழே விழும் போதெல்லாம் அவரைத் தூற்ற தயாராகும் மனிதர்கள் யாரும் ஒவ்வொருமுறையும் அவர் மீண்டும் எழுவதைப் பற்றிப் பேச தயாராக இல்லை. கேட்டால், இந்த உலகம் வெற்றியாளர்களை மட்டுமே நினைவில் வைத்து கொண்டாடும் என்று ஒரு வியாக்கியானம் வந்து விழும்.

"திரும்ப இங்கேயே குடி வந்துட்டீங்களா?" என்ற கிரிஜாவுக்கு,

"திருவண்ணாமலை போனேன். அந்த ஈசன் கடைசியா கண்ணைத் திறந்துட்டான். அங்க ஒரு தியேட்டர்ல வேலைக்குச் சேர்ந்தேன். அந்த முதலாளி தான் இந்த பஸ்ஸும் வெச்சு இருக்கார். அங்க இருந்து இங்க பார்த்துக்க முடியலைன்னு என்கிட்ட பொறுப்பைக் கொடுத்திருக்காரு. நான் மேனேஜர் மாதிரி இருக்கேன். இன்னைக்கு வரவேண்டிய கண்டக்டர் லீவ். அதான் நானே பையை மாட்டிட்டேன். பெரிய பொண்ணுக்கு கல்யாணம் முடிஞ்சது. ரெண்டாவது பொண்ணுக்கு முடிவாகிடுச்சு. அதை விடு பையனுக்கு கல்யாணம் முடிச்சிட்டயா?" என்றதும் கிரிஜா தயங்க அதைப் புரிந்துகொண்டவர்,

"ஈசன் மேல பாரத்தைப்போடு. எல்லாம் அவன் பார்த்துப்பான்..." என்னும் வேளையில் வெள்ளிமலை வந்துவிட தாயும் மகனும் அவரிடமிருந்து விடைபெற்று இறங்கினார்கள்.

கல்யாணம் என்ற வார்த்தை தாய் மகன் இருவருக்கும் இருவேறு உணர்வைத் தந்தது.

கோவையில் வண்ணன் பணிபுரிந்த கட்டுமான நிறுவனத்தின் கிளை அங்கிருக்கும் ஒரு பிரபலமான வணிக வளாகத்தில் இருந்தது. சுமார் பதினைந்து அடுக்குகளைக் கொண்ட அந்த கட்டிடத்தில் ஏழாவது தளத்தில் அவன் அலுவலகம் இருந்தது. தினமும் தன்னுடைய அறையிலிருந்து எட்டரைக்குப் புறப்படுபவன் சரியாக ஒன்பது பத்துக்கு அந்த வளாகத்தின் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு லிஃட் பிடிக்க ஓடுவான்.

அன்றும் அந்த லிஃடில் ஏற வந்தவனுக்கு என்றுமில்லாத திருநாளாய் லிஃட் காலியாக அவனை வரவேற்றது. அது உண்மையிலே ஒரு திருநாள் தான். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெரும்பாலான நிறுவனங்கள் விடுமுறையாக இருக்க சஞ்சீவி கன்ஸ்ட்ரக்சன்ஸ் மட்டும் தங்களுடைய ஒரு ப்ராஜெக்டின் டெட்லைனை நோக்கி கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தது. வழக்கமான பரபரப்பு ஏதுமின்றி லிஃட் நோக்கி வந்தவன் அதில் ஏறி தன் தளத்தின் பொத்தானை அழுத்தவும் அந்த வளாகத்திற்குள் ஒரு பெண் நுழையவும் சரியாக இருந்தது. என்ன தான் இந்த நிறுவனத்தில் கடந்த இரண்டு வருடங்களாக பணியில் இருந்தாலும் ஒருநாள் கூட அவளை இதற்குமுன் வண்ணன் சந்தித்ததில்லை. அவள் வேகநடை இடவும் புரிந்தவன் லிஃட் மூடும் முன் கைநீட்டித் தடுத்தான். அவளுக்கோ அந்த லிஃட்டில் பயணிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் வழக்கம் போல் அருகிலிருந்த படிக்கட்டை நோக்கிச் செல்ல,
"எக்ஸ்கியூஸ்மீ நீங்க வரலையா?" என்ற குரல் தீண்டவும் திரும்பியவளின் கண்களில் ஒரு எதிர்பார்ப்பு தெரிய அந்த எதிர்பார்ப்பு எதிர்பாராமல் அவன் எதிர்பார்ப்பையும் கூட்ட இதை எதிர்பார்க்காதவள் பின்விளைவுகளை எதிர்பார்க்காமல் எதையோ எதிர்பார்த்து முன் சென்றவள் தன் தளத்தின் பொத்தானை அழுத்தும் வேளையில் தான் எதிர்பாராமல் தான் செய்த செயலின் பின் விளைவுகளை எதிர்பார்த்தாள்.(நானும் இத்தனை எதிர்பார்ப்பை எதிர்பார்க்கவே இல்லை. இருந்தாலும் எதிர்பாராமல் நிகழும் சம்பவங்கள் தானே நம் எதிர்பார்ப்பையும் கூட்டும். எப்போதும் எதிர்பாராததை எதிர்பார் என்பது தானே பழமொழி?)
லிப்டின் கதவுகள் மூடியதும் அவள் கண்களை ஒருகணம் இறுக்கி மூடிக்கொண்டாள். அவள் கைகளோ அங்கிருந்த கம்பியை கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. அவளது இந்தச் செய்கை வண்ணனுக்கு குழப்பமளிக்க அவன் சுதாரிக்கும் முன்னே அவனை ஒட்டி நின்றவள் அவள் கரத்தை அவன் கரம் மீது வைத்து,

"ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க. எனக்கு க்ளாஸ்ட்ரோபோபியா(மூடப்பட்ட அல்லது குறுகிய இடத்தின் மீது இருக்கும் பய உணர்வு. இதொரு மனநோய். claustrophobia. கூகுள் செய்யுங்கள்) இருக்கு..." என்று சொன்னவளுக்கு சிறிது நேரத்திற்குள் வியர்வை அருவியாக வழிந்தோடியது. மூச்சை இழுத்து இழுத்து விட்டவள் அவன் கரத்தை இன்னும் வலுவாகப் பிடித்துக்கொண்டாள். அவள் இதயம் தாறுமாறாக துடிக்க அவள் முகத்தில் தெரியும் அசௌகரியத்தை அப்போது தான் உணர்ந்தான் வண்ணன். அவர்களின் போதாத நேரம் ஐந்தாவது மாடியை நெருங்கும் வேளையில் கரெண்ட் கட் ஆக அதுவரை எரிந்துகொண்டிருந்த விளக்குகளும் ஏசியும் அணைந்துவிட நொடியில் அவள் மயங்கிச் சரிந்தாள். இருட்டில் அவள் கீழே விழுந்ததை உணர்ந்தவன் தன்னுடைய செல் போனை எடுத்து பிளாஷ் லைட் ஆன் செய்ய அவன் காலுக்குக் கீழே மயங்கியிருந்தவளைக் கண்டவன் பதறியடித்து அலாரம் பொத்தானை அழுத்தினான்.

"எக்ஸ்கியூஸ்மீ? என்னாச்சுங்க?" என்று அவள் கன்னம் தொட்டுப் பார்க்க அவள் உடலோ சில்லென்று ஆகிவிட பயந்தவன் மின்தூக்கியைப் பார்க்க அதுவோ இரண்டு தளத்திற்கு இடையில் இருந்தது. தன்னுடைய பலம் கொண்டு அதைத் திறக்கவும் ஆறாவது மாடியின் பாதியில் தரை தெரிய அங்கே நின்றிருந்த சிலர் அவனுக்கு உதவ சிறிது களேபரங்களுக்குப் பிறகு அவளையும் வெளியே எடுத்தனர். அவளைக் கண்ட அவள் தோழிகள்,
"ஹே நிஹா!" என்று பதற பின் அவளை உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். எப்போதும் லிப்டில் வராமல் படிக்கட்டுகளையே பயன்படுத்தும் தோழியை கிண்டல் செய்ததால் இன்று லிப்டில் வருவதாக பெட் கட்டியிருந்தாள் நிஹாரிகா. ஆயினும் அவளுக்குள் பயவுணர்வு எட்டிப்பார்க்கும் வேளையில் தான் வண்ணன் அவளை உள்ளே அழைத்தான். அவளும் முயற்சித்துப் பார்க்கலாம் என்று எடுத்த முடிவு அவளை ஹாஸ்பிடலில் சேர்த்துவிட்டது. சிறிது நேரத்தில் அவள் கண்விழிக்க அவள் தோழிகள் எல்லோரும் உள்ளே சென்று அவளுக்கு ஆறுதல் சொல்லும் வேளையில் நுழைந்த வண்ணன்,

"அறிவில்லையா உங்களுக்கு? எதெதுல பெட் வெக்கணும்னு விவஸ்தை வேண்டாமா? ஏங்க நான் உங்களைக் கூப்பிடும் போதே இதைச் சொல்லியிருக்கலாம் தானே? திடீர்னு மயங்கி விழுந்ததும் நான் எப்படித் தவிச்சேன்னு எனக்குத் தான் தெரியும். ஏதாவது ஏடாகூடமா ஆகியிருந்தா யார் பொறுப்பேத்துக்கறது?" என்று சொல்லவும் நிஹாரிகாவுக்கும் அவன் நிலை புரிய கண்களால் மன்னிப்பு வேண்டினாள்.

"டேக் கேர். இனிமேல் இந்த மாதிரி பெட் வெக்குற வேலையெல்லாம் வேண்டாம். யூஸ்லெஸ் இடியட்ஸ்..." என்று அவன் சென்றுவிட,

"பொண்ணுங்க கிட்ட எப்படிப் பேசணும்னு கூடத் தெரியில. லூசு..." என்று ஒரு தோழி சொல்ல,

"ஏய் என் நல்லதுக்கு தானே திட்டுனாரு..." என்ற நிஹாரிகாவை,

"ஓ, அப்படிப்போகுதா ரூட்... ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்..." என்று ராகமாக இழுத்தார்கள் அவள் தோழிகள்.


பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவர்கள் தங்கள் வீடு நோக்கிச் செல்ல தங்கள் வீட்டின் முன் கதவு திறந்திருப்பதைக் கண்டவன்,

"அம்மா கேட் தொறந்திருக்கு"

"தூரிகா வீடு க்ளீன் பண்ணியிருப்பா டா. நாம வரோம்னு தெரிஞ்சதால கதவைப் பூட்டியிருக்க மாட்டா"

வேகமாகச் சென்றவன் அன்னை மெதுவாக வருவதை அறிந்து,

"வீட்டுச் சாவி கொடுங்க. நான் முன்ன போறேன்"

"அது தூரிகா கிட்டத்தான் இருக்கும். இரு நான் வாங்கிட்டு வரேன்" என்றதும் சினம் கொண்டவன்,

"என்கிட்ட மட்டும் பொறுப்பா இரு பருப்பா இருனு பக்கம் பக்கமா வசனம் பேசுவ? வீட்டுச் சாவியை இப்படி யார்யார்கிட்டயோ கொடுத்து வச்சிருக்க? உனக்கு அறிவில்லையா?" என்று வண்ணன் எகிற கிரிஜாவோ அசௌகரியமாக உணர்ந்தார்.

"அத்தை இந்தாங்க வீட்டுச் சாவி. காலையில தான் வீட்டை க்ளீன் பண்ணேன். மாப்பும் போட்டுட்டேன். வேறெதுவும் நான் தொடல. எதுக்கும் ஒருமுறை செக் பண்ணிக்கோங்க. நான் தண்ணீ கொண்டு வரேன்..." என்றவள் அவர் கையில் சாவியைத் திணித்துவிட்டு வேகமாக நடந்தாள். அவள் இறுதியாகச் சொன்ன வார்த்தை கிரிஜாவைச் சுட்டது. அதை அப்படியே வண்ணனிடம் பார்வையில் காட்டியவர் அவனைவிட வேகமாக உள்ளே சென்றார். தன்னுடைய வார்த்தை இருவரின் உள்ளத்தையும் கிழித்துவிட்டது என்று கூட உணராமல் உள்ளே சென்றான் பொன்வண்ணன். (மழை வருமோ?)
 
நீங்க கதை போடுவீங்கன்னு எதிர்பார்த்து இருந்தேன் நேத்து வரைக்கும் ஆனா இன்னைக்கு நானே எதிர்பார்க்காத வேலைகள் வந்ததால் இதை எதிர்பார்த்து இருந்ததை மறந்து விட்டேன்???
 
நீங்க கதை போடுவீங்கன்னு எதிர்பார்த்து இருந்தேன் நேத்து வரைக்கும் ஆனா இன்னைக்கு நானே எதிர்பார்க்காத வேலைகள் வந்ததால் இதை எதிர்பார்த்து இருந்ததை மறந்து விட்டேன்???
எதிர்பார்ப்பது நடந்தாலும் எதிர்பாராததும் நடக்கும் வேளையில் தான் எதிர்பாராததை எதிர்பார் என்னும் தத்துவத்தை நாம் பூரணமாக உணர்கிறோம் ???
 
Top