Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மழைக்கால மேகங்கள்!-4

Advertisement

praveenraj

Well-known member
Member

அன்று வண்ணனை வைத்தியரிடம் அழைத்துச் சென்ற கிரிஜா மருத்துவமனையில் வண்ணன் அனுமதிக்கப்பட்டதையும் மருத்துவர் அவனது உடல்நிலையைப் பற்றிச் சொன்னதையும் கிரிஜா புலம்பலாகவே அவரிடம் முன்வைத்தார்.

"அதெல்லாம் ஒன்னும் கவலைப்படாத தாயி. உன் வூட்டுக்காரருக்கு ஆயுசு அவ்வளவு தான். ஆனா உன் மகனுக்கு நானில்லை ஜாதகம் எழுதினேன். ஒன்னும் ஆகாது. எல்லாம் நான் பார்த்துக்கறேன்..." என்று அவர் அவனது நாடி கண்கள் முதலியாவற்றைப் பார்த்து,

"சரியான நேரத்துல கூட்டிட்டு வந்திருக்க. நாடி பிடிக்கும் போதே உடம்பு சரியில்லைன்னு நல்லா விளங்குது..." என்று அவர் சொன்னதும் வண்ணன் கிரிஜாவை முறைக்க,

"நாக்கை நீட்டு தம்பி..." என்றவர் அவனது இயற்கை உபாதைகளைப் பற்றியும் வினவ வண்ணனோ அசூயையாய் உணர கிரிஜா அவனை கண்களால் மிரட்டி பதிலளிக்குமாறு வேண்ட வண்ணனோ அனைத்தையும் தெரிவித்தான்.

"மஞ்சள் காமாலை தான் தாயி. பயப்படாத பத்தியம் இருந்தாலே எல்லாம் போதும். நான் சொல்ற மாதிரி இவனுக்கு சாப்பாடு கொடு. அசைவம் கூடாது..." என்று பத்தியத்தைக் கொடுக்க வண்ணனோ தற்போதைக்கு கோவை செல்ல முடியாது என்று எண்ணி கவலையில் ஆழ்ந்தான். அங்கிருந்து செல்லும் வேளையில்,

"என்ன ஏற்கனவே போன் போட்டுச் சொல்லிட்டியா?" என்று சொன்ன வண்ணனை என்னவென்று புரியாமல் கிரிஜா விழிக்க,

"நான் ஊருக்குப் போகக்கூடாது. அதுதானே உனக்கு வேணும்? என்னமோ பண்ணித் தொலை..." என்று கோவமாக தங்கள் தோட்டத்திற்குச் சென்றான்.

அவனது வார்த்தை கிரிஜாவை மேலும் மேலும் காயப்படுத்திக்கொண்டிருக்கிறது என்று அறியாமல் அவன் பாட்டிற்குப் பேசிவிட கிரிஜா தான் அதிக சோர்வுக்கு உள்ளானார். தளர்ந்த நடையுடன் ஏதோ யோசனையில் வந்தவரை தூரிகா கண்டுகொள்ள அதற்குள் தேனும் அவர்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தார்.

"என்னாச்சு அத்தை? வைத்தியர் என்ன சொன்னாரு?" என்றதும் அங்கே அமர்ந்தவர் இங்கே வந்ததிலிருந்து வண்ணன் செய்த செயல்களை எல்லாம் புலம்பலாக அவர்களுக்கு முன் வைத்து,

"ரெண்டு நாளே இவனை என்னால சமாளிக்க முடியலை அக்கா. இதுல நான் எப்படி இவனை குணப்படுத்தி... எனக்கு இப்போவே தெம்பு எல்லாம் வடிஞ்சிடுச்சுக்கா..." என்று தேனிடம் சொல்ல,

இத்தனை நாட்களில் எத்தனையோ முறை வண்ணனைப் பற்றி கிரிஜா புலம்பியிருந்தாலும் ஒரு நாளும் அவர் கண்ணிலிருந்து நீர்த்துளிகள் வந்ததே இல்லை. ஆனால் இன்று பேசும் போதே அவரையும் அறியாமல் கண்ணீர் வழிந்தோட,

"ஐயோ அத்த? என்ன இப்படி வீதியில உக்காந்து அழுறீங்க? யாராச்சும் பார்க்கப்போறாங்க" என்று அவர் கண்ணைத் துடைக்க அரசியும் தேனுவும் ஆதரவாக அவரது கரத்தைப் பற்றிக்கொண்டனர்.

"நீ சொன்னது தான் சரி அரசி. நானும் அவன் கூடவே தங்கியிருந்திருக்கணும். அன்னைக்கு அவனை லூசா விட்டதுக்கெலாம் சேர்த்து இன்னைக்கு நான் அனுபவிக்கிறேன். இந்த லட்சணத்துல இவனுக்கு இந்த வருஷத்துல கல்யாணம் முடிக்கணும்னு வேற கனவு கண்டேன்..." என்றவர் மூச்சை இழுத்து விட்டார்.

"அக்கா, இன்னைக்கு பிரதோஷம். நம்ம வெள்ளிமலை ஈசனுக்கு போய் விளக்கேத்தி வேண்டுதல் வைங்க. எல்லாம் அவன் பார்த்துப்பான்..." என்று அரசி சொல்லவும் நினைவு வந்தவளாக,

"ஆமா கிரிஜா. ரெண்டு வாரமா உனக்காக தூரிகா தினமும் ஈசனுக்கு விளக்கேத்துறா. இன்னைக்கு அவனையும் ஒரு எட்டு கோவிலுக்கு நீ கூட்டிட்டுப் போ. எல்லாம் அவன் பார்த்துப்பான்..." என்று சொல்லவும் தான் தூரிகாவின் நிலை உணர்ந்து,

"யாத்தா, மாலை எல்லாம் கட்டிட்டியா?" என்று கேட்டார் தேனு.

"அதான் கட்டிட்டு இருந்தேன். இன்னும் முடியல..." என்று தூரிகா சொல்லவும் பெண்மணிகள் நால்வரும் இணைந்து பூ மாலையைத் தொடுக்க ஆரமித்தனர்.

கோவிலுக்கு பூ மாலை கட்டிக்கொடுப்பது அர்ச்சனை பொருட்கள் விற்பது முதலியவை தூரிகாவின் வேலை. ஏனெனில் அந்தக் கோவிலுக்கு வெளியே இருக்கும் கடையை அவள் தான் ஏலத்தில் எடுத்திருக்கிறாள். எப்போதும் விஷேஷ நாட்களில் அவளுக்கு உதவியாக கிரிஜா தேனு அரசி ஆகிய மூவரும் தான் உதவி செய்வார்கள். அதில் தூரிகாவிற்குத் தான் மிகுந்த வருத்தம். பின்னே அவளுக்கென்று உதவும் அவர்கள் யாரும் அதில் வரும் லாபத்தில் பங்கு கேட்கா விடினும் குறைந்த பட்சம் உழைப்புக்கான ஊதியத்தைக் கூட வாங்கிக்கொள்ள மாட்டார்கள்.

இப்போது கிரிஜாவின் அடுத்த கவலையெல்லாம் வண்ணனை மாலை கோவிலுக்கு அழைத்தால் வருவானா இல்லை வழக்கம் போல் அதற்கும் அவனிடம் வாக்குவாதம் செய்யவேண்டுமா என்றதிலே இருக்க அப்போது தான் பள்ளியிலிருந்து வந்த சூர்யா கிரிஜாவின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருக்கும் தூரிகாவைக் கண்டு ஓடிவந்தான்.

"சூர்யா, போய் குளிச்சிட்டு ஹோம் ஒர்க் எல்லாம் எடுத்து வை. அம்மா வந்து உனக்கு சாப்பிட எதாவது செஞ்சு வெக்குறேன். நான் கோவிலுக்குப் போகணும். அதனால ஏமாத்தாமா ஹோம் ஒர்க் எழுத ஆரமி..." என்று சொல்ல அவனோ அடிக்கடி கிரிஜாவையே பார்த்துக்கொண்டிருந்தான். எப்போதும் அவனிடம் ஏதாவது வம்பிழுத்து சிரித்துப் பேசும் கிரிஜா இன்று மெளனமாக அமர்ந்திருப்பதைக் கண்டு அவரையே பார்க்க,

"என்னாச்சு பாட்டி?" என்று அவர் முன் சென்றான்.

தன்னுடைய முகவாட்டத்தைக் கண்டு இந்தச் சிறுவனுக்கு விளங்கும் விஷயம் கூட வண்ணனுக்குப் புரிவதில்லையே என்று அவர் வருந்த அப்போது தான் நினைவு வந்தவராக அவனுக்காகச் செய்திருந்த முறுக்கை உள்ளே சென்று எடுத்துக்கொள்ளச் சொன்னார்.

அவன் திரும்பி தூரிகாவைப் பார்க்க,"நீ போடா கண்ணா. உங்கம்மா ஒன்னும் சொல்ல மாட்டா. ஜாமுன் நாளைக்குச் செஞ்சு தரேன்..." என்று சொல்ல அவனோ துள்ளி வீட்டிற்குள் சென்றான். ஏனோ தூரிகாவிற்கு வண்ணனை நினைக்கையில் அச்சம் வந்தது. பின்னே அன்று வீட்டுச் சாவி வைத்திருந்ததற்கே அப்படிப் பேசினானே? இதுபற்றி சூர்யாவிடம் பொறுமையாகப் பேசி அவனுக்குப் புரிய வைக்க வேண்டும் என்று அவள் யோசனையில் இருக்க வண்ணன் வீடு நோக்கி வந்தான்.

நல்லவேளையாக அவன் வருவதற்குள் சூர்யா முறுக்கு டப்பாவை எடுத்துக்கொண்டு சென்றுவிட தங்கள் வீட்டின் முன் இருக்கும் கூட்டத்தை எண்ணி முறைத்தவாறே வந்தான் வண்ணன். அங்கிருந்தவர்களை ஒரு பேச்சிற்குக் கூட விசாரிக்காமல் அவன் செல்ல தேனு தான்,

"எப்படி ராசா இருக்க?" என்றார்.

"நல்லா இருக்கேன்..." என்றவன் கிரிஜாவை ஒருமாதிரி பார்த்துக்கொண்டே உள்ளே சென்றான். பூக்களை எல்லாம் கட்டி முடித்தவர்கள் கோவிலுக்குத் தயாராக அவரவர் வீட்டிற்குச் சென்றனர். கிரிஜா உள்ளே சென்று வண்ணனைத் தேட அவனோ எப்போதும் போல் காதில் ஹெட் போனுடன் இருக்க,

"போய் குளிச்சிட்டு வா. கோவிலுக்குப் போகணும்" என்று சொன்னது தான் தாமதம்,

"நான் வரல. நீங்க போயிட்டு வாங்க" என்று சொன்னான்.
இங்கே படிக்கும் வரை தினமும் காலை குளித்து தயாரானவுடன் ஜெயசீலன் அவனை கோவிலுக்குக் கூட்டிச் செல்வார். அதே போல் மாலையிலும் கிரிஜாவோடு சென்று வருவான். எல்லோரையும் போல் 'தப்பு செஞ்சா சாமி கண்ணைக் குத்தும்' என்றும் 'சாமி கிட்ட கண்ணை மூடி வேண்டிக்கோ. அவர் எல்லாம் செய்வார்' என்றும் சிறுவயதில் இருந்தே வண்ணனுக்குச் சொல்லி வளர்த்தினார் ஜெயசீலன். ஜெயசீலன் ஒரு தீவிர சிவபக்தர். குடும்பத்திற்காக உழைப்பதைப்போல் கோவிலுக்காகத் தொண்டும் செய்வார். பிரதோஷம் சிவராத்திரி போன்ற நாட்களில் கோவிலைச் சுத்தப்படுத்துவது போன்ற இறைபனிக்கு தன்னை அர்பணித்துக்கொள்வார்.

மிகவும் சிரமப்பட்டு கோவத்தைக் கட்டுப்படுத்தியவர்,"உனக்காகத்தான் வேண்டுதலே. ஒழுங்கா வந்து கலந்துக்கோ" என்று சொல்ல,

"அப்பாவும் பொழுது போய் பொழுது வந்தா அந்தக் கோவிலே தான் கதின்னு கிடந்தார். ஆனா அவரை எந்தச் சாமியும் காப்பாத்தலையே? சாமியும் இல்ல ஒரு..." என்று முடிக்கும் முன்னே இதுவரை இழுத்துப்பிடித்திருந்த கோவமெல்லாம் ஒன்றாக இணைந்து,

"என்னடா ஆச்சு உனக்கு? ஏன்டா இப்படி என் உயிரை எடுக்கற? என்ன சொன்ன சாமி இல்லைனா? உங்க அப்பா கடவுளுக்குச் செஞ்ச தொண்டால தான் இன்னைக்கு அவர் இல்லைனாலும் நாம நல்ல நிலையில இருக்கோம்..."

"இப்ப நான் உன்கூட கோவிலுக்கு வந்தா நாளைக்கே நான் ஊருக்குக் கிளம்பிடுவேன். ஓகேவா?" என்றதும் கோவமாக அங்கிருந்து சென்றார் கிரிஜா. அப்போது தான் கிரிஜாவைத் தேடி வந்த அரசி இதையெல்லாம் கேட்டும் கேட்காததைப்போல் கிரிஜாவைத் தேற்றி கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.

எவ்வளவு நேரமென்று தெரியவில்லை கண்களை மூடி அமைதியாகவே பிராத்தனை செய்தார் கிரிஜா. இதை அருகிலிருந்து அரசி பார்க்க தூரத்தில் வியாபாரம் செய்தவாறே தூரிகாவும் கவனித்தாள்.

அங்கே அறையில் வண்ணன் பாடல் கேட்டுக்கொண்டிருக்க அப்போது அவனைத் தேடி அங்கே வந்த சூர்யா அந்த அறைவாயிலில் நின்று அவனையே பார்த்துக்கொண்டிருந்தான். எதேர்சையாகத் திரும்பியவன் அவனைக் கண்டு அழைக்க,

"எனக்கு இந்த மேத்ஸ்ல கொஞ்சம் டவுட். உங்களுக்கு இது தெரியுமா? அம்மா வர லேட் ஆகும்..." என்றான்.

"உனக்கு என்னைத் தெரியுமா?" என்ற வண்ணனுக்கு,

"நீங்க வண்ணன் மாமா. கிரிஜா பாட்டியோட பையன்..." என்றதும் வேறேதும் கேட்காமல் அவனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தான்.
அவனுக்குப் புரியாமல் அடுத்தடுத்து சந்தேகம் கேட்க முதலில் எரிச்சலடைந்தாலும் பின்பு நிதானமாகவே விளக்கினான். அப்போது தான் கோவிலில் இருந்து வந்த கிரிஜா அங்கே சூர்யாவுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் மகனைக் கண்டுகொள்ளாவிட்டாலும் எங்கோ மனதின் ஓரத்தில் ஒரு நிம்மதி பிறந்தது.

"சூர்யா வந்து சாப்பிட்டுப் போய் பாடம் படி" என்று கிரிஜா அழைக்க அவனோ தூரிகாவைக் கேட்டான்.

"உன் அம்மா வர நேரமாகும்னு சொன்னா. வந்து சாப்பிடு" என்று சொல்லும் போது தான் இவன் தூரிகாவின் மகனா என்று வியந்தான். பின்னே தூரிகாவிற்கு திருமணம் ஆகிவிட்டதாகவோ இல்லை இப்படியொரு மகன் இருக்கிறதாகவோ ஒருநாளும் கிரிஜா சொன்னதே இல்லையே?
இருந்தும் இதைப்பற்றி எல்லாம் அறிந்துகொள்ளும் ஆவல் அவனிடத்தில் துளியுமில்லை. அவன் எண்ணமெல்லாம் எங்கெங்கோ சென்று இறுதியில் நிஹாரிகாவிடம் தஞ்சமடைந்தது.

தன்னிடம் வாட்ஸ் அப் நம்பர் கேட்ட வேளையில் தான் வண்ணனுக்கு மூளையில் பல்ப் எரிய,

"ஆமா என் பேர் எப்படித் தெரியும்? என்னைப்பத்தி நான் எதுவுமே சொல்லலையே?" என்று விழிக்க,

சிரித்தவள்,"உங்க பேர் பொன்வண்ணன். ஆனா ஸ்கூல் காலேஜ் ஏன் இப்போ வேலை செய்யும் இடம் வரை எல்லோருக்கும் நீங்க ஜே.பி அதாவது ஜெயசீலன் பொன்வண்ணன். பிடிச்ச கலர் பிரௌன். பிடிச்ச ஹீரோ தல. சி.எஸ்.கே பேன். பிடிச்ச சாப்பாடு கொத்து பரோட்டா. அப்பா இல்ல. அம்மா மட்டும் தான். வீட்டுக்கு ஒரே பையன். இந்த நிமிஷம் வரை மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர். சஞ்சீவி கன்ஸ்டரக்சன்ஸ்ல டிசைன் என்ஜினீயரா வேலை செய்யுறீங்க. தனுசு ராசி மூல நட்சத்திரம். கோவைல இப்போ வீடெடுத்து ப்ரெண்ட்ஸ் கூடத் தங்கியிருக்கிங்க. சிகரெட் பழக்கம் கிடையாது. ஆனா..." என்று நிஹாரிகா இடைவெளி விட இதுவரை அவள் சொன்னதில் வியந்து கண்ணிமைக்காமல் இருந்தவன் இப்போது மெல்ல அதிர்ந்து நோக்க,

"பயங்கர பார்ட்டி பெர்சனாலிட்டி. வீக் எண்ட் ரிலீஸ் ஆகுற படம் எல்லாத்தையும் பார்த்துட்டு ட்ரிங்க்ஸ் பண்ணுவீங்க. கேட்டா சோஷியல் ட்ரிங்கிங்ன்னு ஒரு சமாளிப்பு. ஆனாலும் இந்த ஒரு விஷயத்துல மட்டும் எனக்கு உங்களைப் பிடிக்கல. ஆனா உங்ககிட்ட எனக்குப் பிடிச்ச விஷயம் தான் இவ்வளவு இருக்கே? அதுக்காக நீங்க ட்ரிங்க்ஸ் பண்ணுறதை அல்லோவ் பன்றேன்னு அர்த்தமில்லை. கல்யாணத்துக்கு அப்புறோம் எப்படிக் குடிக்கறீங்கன்னு நானும் பாக்குறேன்..." என்றவள் அவளையும் அறியாமல் உளறியதில் நாக்கைக் கடிக்க பொன்வண்ணனோ அவளுக்கு எப்படி இதுவெல்லாம் தெரியும் என்று யோசனையில் இருந்ததால் அவள் இறுதியாகச் சொன்னதை அவனால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை.
அவன் அதைக் கேட்கவில்லை என்று சுதாரித்த நிஹாரிகா பேச்சை மாற்றும் முனைப்புடன்,

"ஜேபி, என்ன இன்னைக்கு முழுக்க இப்படியே ஸ்டேசுவா இருக்கறதா பிளானா? உங்களைப் பத்தி இவ்வளவு சொன்னேனே முடிஞ்சா இன்னைக்கு நைட்டுக்குள்ள எனக்கு ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் பண்ணுங்க பார்ப்போம்?" என்று அதற்கேதுவாய் சாய்ந்து தலையசைக்க அவளுடைய குழல் காற்றில் அசைந்து அவன் கன்னத்தை இதமாய் வருடியது. ஒரு பெண்ணை இத்தனை நெருக்கத்திலும் அவளது வாசத்தை இவ்வளவு அருகிலும் இன்று தான் பொன்வண்ணன் உணர்கிறான். இதுவே அவனுக்குள் சொல்லமுடியாத எக்ஸைட் மெண்டை தூண்டியிருந்தது. பனிரெண்டாவது முடிவுக்காக தன்னுடைய எண்ணை பதிவிட்டு பிரௌசர் சுற்றும் நொடியில் தவிக்கும் மாணவனைப்போல் நிஹாரிகாவின் அருகாமையும் அவள் பார்வையும் கொடுத்த குறுகுறுப்பையும் எண்ணித் தவித்தான் பொன்வண்ணன்.

ஒரு தேவதை பார்க்கும் நேரமிது
மிக அருகினில் இருந்தும் தூரமிது.
இதயமே ஓ
இவளிடம் ஓ
உருகுதே ஓஹோ
இந்தக் காதல் நினைவுகள் தாங்காதே
அது தூங்கும் போதிலும் தூங்காதே...


அப்போது அவன் முதுகில் ஒன்றை வைத்தான் கிஷோர். வண்ணனுடன் பணிபுரியும் சக நண்பன். அதில் சுயம் பெற்றவன் திரும்ப,

"என்னடா இப்படி ஃப்ரீஸ் ஆகி நிக்குற? அந்தப் பொண்ணு ஏதோ உன்கிட்டப் பேசுச்சு. என்ன விஷயம்?" என்றான்.

"டேய் கிஷோர், எனக்கு உடனே அந்தப் பொண்ணு அதாவது நிஹாரிக்காவைப் பத்தி எல்லாமே தெரியணும். அவ எங்க ஒர்க் செய்யுறா ஃபேமிலி எல்லாமே வேணும். எல்லாத்தையும் விட முக்கியமா அவ நம்பர் எனக்கு வேணும். அதும் இன்னும் மூணு மணிநேரத்துக்கு உள்ள. ப்ளீஸ் டா" என்றதும்,

"உன் எண்ணம் எனக்குப் புரியுது. ஆனா நாளைக்கு என் மாமனாருக்கு பர்த் டேவாம். என் வைஃப் என்னை ஷாப்பிங்கு கூப்பிட்டு இருக்கா. நான் போகலைனா என்னை டிவோர்ஸ் பண்ணினாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்ல. சோ சாரி..." என்று அவன் ஜெகா வாங்க வண்ணனுக்கோ எப்படியாவது அவள் எண்ணைக் கண்டுபிடித்து அவளுக்கு சர்ப்ரைஸ் செய்தே தீரவேண்டும் என்று தோன்றியது.

இந்தக் காதல் போல் ஒரு குரங்குத்தனம் வேறேதும் இல்லை. சமயங்களில் நாம் செய்யும் செயல்களையே மீண்டும் செய்து ஆச்சர்யப்படுத்தும் அக்குரங்கு திடீரென்று நமக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஓடவும் செய்யும். காதல் ஒரு மாயாவி. அதுபோல் வசியம் செய்யும் மருந்து இவ்வுலகில் வேறு இல்லை தானே?

அதன்பின் அலைந்து திரிந்து அவளது அலுவலகத்தைக் கண்டுபிடித்தான் வண்ணன். அதொரு கேம் டிசைனிங் சாப்ட்வெர் நிறுவனம். அவளது வேலையே அவனுக்கு பிடித்திருக்க அப்போது நிஹாரிகாவின் தோழியான மித்ராவைப் பார்த்தான். அவளும் இந்நேரத்தில் வண்ணனை இங்கே எதிர்பார்க்காமல் சிரிக்க பிறகு அவளது எண்ணைப் பெற்றுக்கொண்டான். வண்ணனின் நண்பர்கள் யாரேனும் வருவார்கள் என்று எண்ணியிருந்தவளுக்கு வண்ணனே வந்தது பெரும் நிறைவைத் தந்தது.
பிறகு அவளிடமே நிஹாரிகாவைப் பற்றி எல்லாம் தெரிந்துகொண்டவன்,

"யுரேக்கா! ?" என்று மெசேஜ் தட்டினான்.

அதைப் பார்த்தவள் தன்னுடைய முகத்தையே ஆச்சர்ய பாவனையோடு ஒரு செல்ஃபி எடுத்து அனுப்ப,

க்ராஸ்வோர்ட் பசில் சால்வ் செய்யும் போது ஏற்படும் உந்துதல் இப்போது அவளுடன் மெசேஜ் செய்யும் போதும் வண்ணனுக்கு ஏற்பட்டது.

*******************
ஏனோ பழைய நினைவுகள் வண்ணனைத் தாக்க அவனுடைய கையாலாகாத நிலையை எண்ணி வருந்தியவனுக்கு கிரிஜாவின் மீது கோவம் உண்டானது. நிஹாரிகா அவன் வாழ்க்கையில் இருந்திருக்க வேண்டும் என்று அவன் மனம் துடியாய்த் துடிக்க அவளுடன் பேசியே நான்கைந்து மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதே என்ற உண்மையும் அவனைச் சுட்டது. அப்போது அவன் கண்ணில் அந்த ரெசிப்ட் கிடைக்க அதை எடுத்துப் பார்த்தவன் முகத்தில் கோபம் பொங்க,

"என்னம்மா இது?" என்றதும் அவரோ அவனைக் கண்டுகொள்ளாமலே கடக்க,

"உன்கிட்டத் தான் பேசிட்டு இருக்கேன். என்னது இது?" என்றதும் நின்றார் கிரிஜா. நேற்று கோவிலுக்கு வரமாட்டேன் என்று சொன்னதில் இருந்து அவனுடன் அவர் சரிவர பேசாமல் இருந்தார்.

"படிச்சவன் தானே நீ? உனக்கு அது என்னனு புரியலையா?"

"புரியுது. அதனால தான் கேட்டேன். யாரோ வந்து ஆர்பனேஜ் சைல்ட் ஹோம் அது இதுனு கேட்டா நீ பாட்டுக்கு பணத்தை எடுத்துக் கொடுத்திடுவையா? இப்போல்லாம் இது மாதிரி பொய்ச் சொல்லி ஏமாத்துறது தான் பேஷன். நீ என்னடானா ஒரு வருஷத்துக்குத் தேவையான அமௌண்ட்டை கொடுத்திருக்க?" என்று வண்ணன் எரிந்து விழுந்தான்.

"டேய் அது பொய் எல்லாம் இல்ல. நான் விசாரிச்சு தான்..." என்று முடிக்கும் முன்னே,

"எங்க நீ கள்ளக்குறிச்சி போய் விசாரிச்சியா? இல்லை நேரடியா சென்னைக்கே போய் விசாரிச்சியா?" என்ற கேள்வியில் அதிகப்படியான எள்ளல் இருக்க,

"இங்க ஒரு பொண்ணு இருக்கு. நம்ம ஊர் பள்ளிக்கூடத்துல டீச்சரா இருக்கு. அது தான் இந்த மாதிரி குழந்தைகளுக்கு பணம் வேணும்னு கேட்டுச்சு..." என்று முடிக்கும் முன்னே,

"ஓ! அவ கேட்டா நீ பாட்டுக்கு எடுத்துக் கொடுத்திடுவயா? என்ன நெனச்சிட்டு இருக்க நீ? எப்போப்பாரு என்னை மட்டும் பொறுப்பா இரு, கவனமா இரு அப்படி இப்படினு அட்வைஸ் மழையாப் பொழிவ. சரி இந்தப்பணம் உண்மையாவே அந்த ஆர்பனேஜ்க்கு தான் போகுதுனு உனக்கு எப்படித் தெரியும்?"

"அதான் சொன்னேனே. அந்தப் பொண்ணு இங்க தான் வேலை செய்யுதுனு. அது கூட ஏதோ என்.ஜி.ஓல..."

"சும்மா நிறுத்துமா. உன் இஷ்டத்துக்கு நீ என்ன வேணுனாலும் செய்யலாம்னு இருக்காத. யாரோ பொண்ணு வந்துச்சாம் அது கேட்டுச்சினு நீயும் பணத்தை எடுத்துக் கொடுத்திருக்க..." என்று முடிக்கும் முன்னே கிரிஜா வண்ணனை அமைதியாக இருக்குமாறு சமிக்ஞை செய்ய அவனோ
அப்போது தான் இன்னும் ஆவேஷமாகப் பேசினான்.
நிலையைச் சமாளிக்க முடியாமல் கிரிஜா திணற அப்போது,

"என்னை மன்னிச்சுடுங்க அம்மா. நீங்க பணம் கொடுத்து ஒரு மாசம் ஆகியும் உங்களைப் பார்க்க முடியாத சூழ்நிலை. நான் இடையில ரெண்டு முறை உங்களைத் தேடி வந்தேன். ஆனா நீங்க கோவைக்குப் போயிட்டதா எதிர்ல இருக்குற தூரிகா சொன்னாங்க. அதான் என்னால உங்களைப் பார்க்க முடியல..." என்றவள் கையில் ஒரு ஸ்வீட் பாக்சுடன் நின்றாள்.
குரல் வந்த திசையில் திரும்பிய வண்ணனுக்கு தேர்ந்த மடிப்பில் சேலை உடுத்தி கையில் ஒரு ஹேண்ட் பேக்குடன் சில கோப்புகளையும் கொண்டவாறு காட்சியளித்தாள் சரிதா.

இப்போது கனத்த மௌனம் நீடிக்க அதை உடைக்கும் பொருட்டு கிரிஜா அவளை உள்ளே அழைக்க,

"பரவாயில்ல அம்மா. நானும் எல்லாம் கேட்டேன்..." என்றதும் கிரிஜா முகம் அவஸ்தையில் சுருங்க,

"அவர் கேட்டதுல எந்தத் தப்பும் இல்லையே அம்மா. இன்னைக்கு ஒரு அசல் இருந்தா அதுக்கு நூறு போலி இருக்கு. நாங்க இப்போ சந்திக்கிற முக்கியமானப் பிரச்சனையே எங்களோட க்ரிடிபிலிட்டி(நம்பகத்தன்மை) தான். நானும் நீங்க கொடுத்த பணத்தை எங்க ஹெட் ஆபிஸ்ல சொன்னேன். அவங்க ரொம்பவும் சந்தோஷப்பட்டாங்க. அதும் போக உங்களுக்கு எங்க ஆர்கனைசேஷன் மூலமா நன்றி சொல்லவும் அனுப்பி அடுத்த வாரம் நடக்கவிருக்க ஒரு விழாவுக்கு அழைக்கவும் சொல்லியிருந்தாங்க. இன்விடேஷன் அடிக்க லேட் ஆகிடுச்சு. அதான் உங்களை இன்விடேஷனோட வந்து பார்க்கலாம்னு வெய்ட் பண்ணிட்டேன்..." என்றவள் இன்னமும் வாசலிலே தான் இருந்தாள். கிரிஜாவுக்கு அவளை எண்ணி வருத்தமும் வண்ணனை எண்ணி ஆத்திரமும் வந்தது.

இப்போது உள்ளே வந்தவள் கிரிஜாவின் கையில் அழைப்பிதழைக் கொடுத்து தன்னுடைய ஹேண்ட் பேக்கில் இருந்து ஒரு சிறிய விநாயகர் சிலையை எடுத்துக் கொடுத்தவள் அந்த அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டிருந்த அவரது பெயரையும் தொகையையும் எடுத்துக் காட்டி விழாவுக்கு அழைத்தாள்.

"மஞ்சுளா மேடம் உங்களை ரொம்பவும் விசாரிச்சாங்க. ஆக்சுவல்லி உங்களை நேர்ல பார்த்து இந்த இன்விடேஷனை கொடுக்கணும்னு ஆசை பட்டாங்க. ஆனா அதுக்குள்ள ஒரு அவசர வேலை. ஆனா நீங்க அந்த விழா நாளுக்கு காலையிலே அங்க வந்திடனும். உங்களை மாதிரி டொனேட் பண்ண எல்லோருக்கும் ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லி ஒரு லன்ச் அரேஞ் பண்ணியிருக்காங்க. கட்டாயம் நீங்க வரணும்."

இப்போது வண்ணனின் புறம் திரும்பியவள்,"நீங்களும் கண்டிப்பா வரணும் சார். உங்களோட சந்தேகம் நியாயமானது. அண்ட் உங்க சந்தேகத்தை நிவர்த்தி செய்யவேண்டிய கடமையும் எங்களுக்கு இருக்கு. ஆனா ஒரே ஒரு ரெக்வஸ்ட் சார். இனிமேல் இதுமாதிரி அவசரப்பட்டு யாரையும் தப்பா பேசிடாதிங்க சார். எங்களை மாதிரியான ஆளுங்க இப்படி பணம் கொடுக்க முடியலையேங்கற குறையைப் போக்கிக்க தான் இப்படி வாலண்டீர்(தன்னார்வலர்) ஜாப் செய்யுறோம். ஒருத்தவங்க தப்பா இருப்பாங்கன்னு அவங்ககிட்ட பழகிப் பார்க்கும் முன்னாடியே யோசிக்குற உங்களைப் போன்றோர் ஏன் ஒரு வாட்டி கூட இவங்க நல்லவங்களா இருக்க மாட்டாங்கன்னு யோசிக்க முயற்சிக்கிறதில்ல? உங்கள ஹர்ட் பண்ணனும்னு நான் பேசல. நீங்கனு இல்லை சார் டொனேஷன் கேட்டுப் போற அநேக நபர்கள் அப்படித்தான் எங்களை அப்ரோச் பண்ணுறாங்க. அப்போல்லாம் எங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா சார்?" என்றவள் ஒருகணம் கொடுத்த முகபாவனை ஏனோ வண்ணனையே சுட்டது.

"நீங்க எங்களுடைய ரொம்ப முக்கியமான கெஸ்ட். கண்டிப்பா நீங்க வரணும். நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா என்னை மன்னிச்சிடுங்க சார்..." என்றவள் அங்கிருந்து அகல, கிரிஜாவுக்கோ வண்ணன் மீதான பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாய் சிதைந்துகொண்டிருந்தது. (மேகம் கூடும்...)
 
ரொம்ப ஓவரா தான் போறான் கடைசில யார் கால்ல தொபூக்கடீர்னு விழப்போறானோ ??
 
ரொம்ப ஓவரா தான் போறான் கடைசில யார் கால்ல தொபூக்கடீர்னு விழப்போறானோ ??
அவன் ' விழா நாயகன்' ??
 
Top