Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மழைக்கால மேகங்கள்!-5

Advertisement

praveenraj

Well-known member
Member


பொன்வண்ணனுக்கு அடுத்தவர்களின் மனதைப் படிக்கத் தெரியாது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் அடுத்தவர்களின் இடத்திலிருந்து யோசிப்பதைப் பற்றியோ அப்படியொரு பெர்ஸ்பெக்டிவ் இருப்பதைப் பற்றியோ என்றும் யோசித்தது கூடக் கிடையாது. இதற்கு அவனது தொழிலும் ஒரு காரணம். டிசைன் என்ஜினீயராக பணிபுரிவதாலோ என்னவோ அவனுக்குள் அதிகப்படியான கிரியேட்டிவிட்டி உண்டானது. அவன் வடிவமைக்கும் பிளான் அனைத்தும் அவனது விருப்பத்தை மையமாக வைத்தே இருக்கும். அவன் வரைந்து கொடுத்த பிளானை மேலதிகாரிகள் பார்த்து விட்டு தேவைப்பட்டால் திருத்தம் சொல்வார்கள். அவனுக்குக் கட்டிடங்களைப் படிக்கத் தெரிந்த அளவிற்கு மனிதர்களைப் படிக்கத் தெரியவில்லை. அவன் அதற்கு முக்கியத்துவமும் கொடுத்ததில்லை. ஒரு வகையில் நிஹாரிகாவுடனான அவனது காதல் இன்று ஊசலாடுவதற்கு அவனது இந்தக் குணமும் ஒரு காரணம் எனலாம்.

அவன் ஒருவேளை மனிதர்களைப் படிக்கதெரிந்திருந்தால் இன்று ஏன் கிரிஜா சிரமப்படவேண்டும்? அப்படிப்பட்டவனுக்கு அடுத்தவரின் வலிகள் ஒருநாளும் புரிந்ததில்லை. அதன் வெளிப்பாடே கிரிஜாவில் தொடங்கி நிஹாரிகாவை அன்று மருத்துவமனையில் திட்டியது முதல் ஊருக்கு வந்ததும் தூரிகாவைப் பற்றிப் பேசியது என்று தொடர்ந்த அந்தக் குணம் இன்று சரிதா வரை நீண்டு கொண்டிருக்கிறது.
ஆனால் எல்லாத் தொடக்கத்திற்கும் ஒரு முடிவு இருப்பதைப்போல் இன்று அவனிடம் சரிதா பேசும் போது வெளிப்பட்ட அவளது உணர்வுகள் அவனது இந்தக் குணத்திற்கு முடிவுரையை எழுதிக்கொண்டிருந்தது. அதேபோல் எல்லா முடிவுக்கும் பிறகு நல்லதொரு தொடக்கமும் வேண்டுமல்லவா? அந்தத் தொடக்கத்திற்கான முதல் விதையை அவளையே அறியாமல் தூவிவிட்டுச் சென்றாள் சரிதா.

நம்மிடம் ஒன்று இல்லையெனில் அதை மற்றவர்களிடம் இரவல் கேட்பது என்பதே கொடுமை என்னும் போது சம்மந்தமே இல்லாத அடுத்தவர்களுக்காக இரவல் கேட்பதற்கு நிச்சயம் ஒரு குணம் வேண்டும். சுட்டுப் போட்டாலும் வண்ணனுக்கு அது வருமா என்றால் அது ஐயமே! அதே இடத்தில் எவ்வளவு நேரமென்று தெரியாமல் நின்ற வண்ணனை என்ன சொல்லித் திட்டுவது என்றோ இல்லை எப்படி அவனுக்கு இதைப் புரியவைப்பதென்றோ தெரியாமல் தவித்தார் கிரிஜா.

அன்று இரவு முழுவதும் வண்ணனுக்கு உறக்கம் வரவில்லை. கண்களை மூடினாலே சரிதா கொடுத்த அந்த முகபாவனை தான் அவன் மனதில் வந்து போனது. காலையில் விழித்த கிரிஜா வாசல் கதவு திறந்திருப்பதைக் கண்டு ஒருகணம் பதறி வெளியேற எதிர் புறம் தன் வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த தூரிகா கிரிஜாவின் அந்தப் பதற்றத்தைப் படித்தவளாக அவரை நெருங்கி என்னவென்று விசாரித்தாள்.

"அவனைப் பார்த்தியா தூரி? சொல்லாம கொள்ளாம ஊருக்கு எங்கயாச்சும் போயிட்டானா?" என்று வினவ,

"கொல்லைப்பக்கம் போன மாதிரி தான் தெரிஞ்சது அத்த. இருங்க எதுக்கும் நான் ஒரு எட்டுப் போய் பார்த்திட்டு வரேன்..." என்று இரண்டடி வைக்கும் போதே பால் கொண்டுவரும் கருப்பன் அவள் வீட்டின் முன்பு சைக்கிளை நிறுத்தி கிரிஜாவைப் பார்த்து,

"தம்பி வந்திருக்கா க்கா. நம்ம கொல்லையில பார்த்தேன். இவ்வளவு காலையில கிணத்துல குளிச்சிட்டு இருக்கு. அதும் இந்தக் குளிர்ல? நானும் ரெண்டு முறை கூப்பிட்டேன் ஆனா தம்பி ஏதோ யோசனையிலே கிடந்தது..." என்று சொல்லி ஒரே நேரத்தில் தூரிகாவின் கடைக்கும் அவர்களின் வயிற்றுக்கும் பாலை வார்த்தார்.
(எங்க ஊர் பக்கம் விவசாய நிலத்தை கொல்லை கொல்லைப்புறம் என்பார்கள். நீங்க நினைக்குற கொல்லைப்புறம் இல்ல?)

அப்போது வெளியே வந்த சங்கர சரவணனைக் கண்ட கருப்பன்,"ஐயா பெரிய மாடு பால் நிக்க போகுது. அதும் போக மாசி வேற அடிக்குது. நம்ம டாக்டரை கூப்பிட்டுக் காட்டுங்க. இன்னைக்கு எட்டு லிட்டர் தான் கறந்திருக்கும். நான் வரேன்..." என்று அவர் சென்றுவிட அதற்குள் அவர்கள் கடைக்கு ஆட்கள் வரத் தொடங்க தூரிகா அவளது வேலையைப் பார்க்க புறப்பட்டாள்.

உணவகத்துடன் கூடிய தேநீர் கடையும் அருகே ஒரு தையற்கடையும் வைத்திருக்கிறாள் தூரிகா. உள்ளூரிலிருந்து பெரியதாக யாரும் சாப்பிட வரமாட்டார்கள் என்றாலும் அவ்வழியே செல்லும் பேருந்துகளும் லாரிகளும் இதர வாகனங்களும் தவறாமல் அங்கே நிற்கும். வீட்டுச் சுவையிலும் அதே பக்குவதிலும் கிடைக்கும் உணவுகளுக்கு அங்கே தனி மவுசு உண்டு. வெளியூரிலிருந்து வெள்ளிமலை சிவனை தரிசிக்க வரும் பக்தர்கள் சாப்பிட உகந்த இடம். சற்று பழங்கால கட்டிடம் தான் என்றாலும் குடும்பத்தோடு அமர்ந்து உண்ணும் அளவுக்கு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் அதைப் பராமரித்துக் கொண்டிருக்கிறாள் தூரிகா.

அவளுக்குத் துணையாக பரிமளா என்னும் பெண்ணும் அங்கு பணிபுரிகிறாள். பெரும்பாலும் காலையில் பள்ளிக்குப் போகும் குழந்தைகள் அனைவர்க்கும் அவளிடமிருந்து தான் இட்லி வாங்குவார்கள் அவர்களின் பெற்றோர்கள். வெள்ளிமலையிலிருந்து சிறிது தூரத்தில் இருக்கும் பெரிய பள்ளியில் படிக்கும் அம்மாணவர்களுக்கு காலையிலே பள்ளிப் பேருந்து வந்து விடும் என்பதால் அதற்குள் இட்லியையும் தோசையையும் தயார் செய்ய வேண்டும். குழந்தைகள் சாப்பிடுவதால் தினமும் காலை மாவு அரைத்து தான் மறுநாளுக்கு அதை பயன்படுத்துவாள். இதற்கிடையில் சூர்யாவை எழுப்பி அவனை வேறு தயார் படுத்தவேண்டும். மதியம் இருபது இருபத்தி ஐந்து சாப்பாடுக்கு மேல் போகாது என்பதால் வேலையை முடித்து துணி தைக்க ஆரமித்துவிடுவாள். மதியம் சிறிது ஓய்வு எடுப்பவள் மாலை கோவிலுக்குத் தேவையான மாலைகள் அர்ச்சனைத் தட்டுகள் ஆகியவற்றை செய்ய நேரம் ஓடிவிடும். இந்தச் சிறு வயதில் இவ்வளவு கஷ்டப்படும் தூரிகாவை நினைக்கையில் கிரிஜா தேனு அரசி ஆகியோருக்கே வருத்தமாக தான் இருக்கும். இருந்தும் என்ன செய்வது? அவரவர் வாங்கி வந்த வரம் அப்படி என்றால் அதை யாரால் மாற்ற இயலும் சொல்லுங்கள்?
குளித்து முடித்தவன் ஈரத்தோடே நடந்துவர அவனைக் கண்ட ஜெகதீசன் நலம் விசாரிக்கும் சாக்கில் அவனிடமிருந்து விஷயத்தைக் கறந்து கொண்டிருந்தார்.

"ரெண்டு மூணு நாளா இங்கயே இருக்காப்ல தெரியுது?" என்று கேட்டவரின் எண்ணம் அறியாமல்,

"மஞ்சக்காமாலை வந்திடுச்சு பெரியப்பா. அதான் அம்மா வேலையை விடச் சொல்லி என்னை இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க" என்று வேலையில்லா இயலாமையில் வண்ணன் பேச,

"என்னது வேலையை விட்டுட்டியா? நீ சும்மா வந்திருக்கிறதா தானே ஊர்ல சொன்னாங்க. இதென்ன வம்பா இருக்கு. இன்னும் கல்யாணம் கூட ஆகலை. இந்த நேரத்துல இப்படி வேலையை இழந்துட்டு வந்திருக்க? இன்னைக்கு காலகட்டத்துல வேலை கிடைக்கறது பெரிய குதிரை கொம்பா இல்ல இருக்கு? நீ என்னடானா பார்த்துட்டு இருந்த வேலையை விட்டுட்டு வந்திருக்க?" என்று வண்ணனுக்கு தூபமிட்டார் ஜெகதீசன்.

"சொன்னா எங்கம்மா எங்க கேக்குறாங்க. இருந்தாலும் அது ஒன்னும் பிரச்சனை இல்ல. மூணு மாசத்துக்குள்ள நான் திரும்ப அங்கேயே சேர்த்துக்கலாம். எப்படியும் சேர்ந்திடுவேன்" என்று நம்பிக்கையாக வண்ணன் பேச,

"உங்க அம்மை இதுக்கு விடுமா? உங்க அப்பனுக்கு முடியாம இருக்கும் போதே நான் பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போக சொன்னேன். உங்க அம்மை தான் என் பேச்சை காது கொடுத்தே கேக்கல. உங்க அம்மைக்கு எல்லாம் அது இஷ்டப்படி தான் நடக்கணும். உங்க அம்மையைச் சொல்லிக் குத்தமில்ல. எல்லாம் என் தம்பி கொடுத்த இடம். புருஷன் பேச்சுக்குத் தான் பொண்டாட்டி கட்டுப்பட்டு நான் பார்த்திருக்கேன். ஆனா உங்க அப்பனை உன் அம்மா தான் கைக்குள்ள வெச்சிருக்கும். இன்னைக்கு உன்னையும் அப்படித் தான் வெச்சிருக்கா. என்னமோ நீயாவது பார்த்துப் பொழச்சிக்கோ. அம்முட்டு தான் சொல்வேன்" என்று அவர் நகர்ந்துவிட வண்ணனுக்குமே அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை.

இந்நேரம் கோவையில் இருந்திருந்தால் அவன் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று யோசித்தவன் நிஜத்திற்கும் கனவிற்கு இடையில் தத்தளித்தான். இதற்கிடையில் ஜெகதீசன் சொன்னதைப் பற்றியே யோசித்தவனுக்கு ஒருவேளை நிஹாரிகா விஷயத்தில் கிரிஜா நடந்துகொண்டதற்கும் தற்போது அவன் பெரியப்பா சொன்னதற்கும் தொடர்பு இருக்குமோ என்று எண்ணத் தொடங்கினான். அதோடு கோவையில் அவனைப் பரிசோதித்த டாக்டர் அவன் பணி செய்வதற்கு எந்தத் தடையுமில்லை என்று சொன்னதையும் பொருட்படுத்தாமல் இங்கே அழைத்து வந்த கிரிஜாவின் செய்கையில் என்னவோ உள்ளர்த்தம் இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது. நிறைய குழப்பத்துடன் வீட்டிற்குள் நுழைந்தவனைத் தடுத்து நிறுத்திய கிரிஜா,

"எங்கடா போன இவ்வளவு காலையில? போறவன் என்னை எழுப்பி சொல்லிட்டுப் போக வேண்டியது தானே? என்ன நெனச்சிட்டு இருக்க நீ? என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது?" என்று ஆவேசமாக வினவ ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவன்,

"சும்மா நிறுத்துமா. நான் என்ன பண்ணாலும் உன்கிட்டச் சொல்லிட்டு உன் அனுமதி வாங்கிட்டுத் தான் செய்யணுமா என்ன? என்னை ஒரு குழந்தை மாதிரி ட்ரீட் பண்ணுற இந்த ஹேபிட்டை முதல நிறுத்து. சும்மா எதுக்கெடுத்தாலும் இதைப் பண்ணு இதைப் பண்ணாத இப்படிச் செய் அப்படிச் செய்யாதனு ஆயிரம் அட்வைஸ். ஒரு அளவுக்குத் தான் பொறுப்பேன். அப்பறோம் கிளம்பி போயிட்டே இருப்பேன். இந்த ஊரு பக்கமே தலை வெச்சு படுக்கமாட்டேன் பார்த்துக்கோ..." என்றவன் கோவமாக தன் அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டான்.

உறைமோர் வாங்குவதற்காக அங்கே வந்த தூரிகா நடந்த அனைத்தையும் கேட்டு கிரிஜாவின் நிலையை எண்ணி வருந்தினாள்.

அன்றைய தினத்திற்குப் பிறகு அல்லும் பகலும் வாட்ஸ் அப் மூலமாகவும் அலைபேசி உரையாடல் மூலமாகவும் வண்ணனும் நிஹாரிகாவும் ஒருவரை ஒருவர் இன்னும் புரிந்துகொள்ளத் தொடங்கியிருந்தனர். பரஸ்பரம் இருவரும் தங்கள் குடும்பத்தைப் பற்றித் தெரிவித்து பேசும் பொழுது தான் வண்ணன் ஒன்றைப் புரிந்துகொண்டான்.
நிஹாரிகாவுக்கு பல நாட்களாகவே அவன் மீது ஒரு மையல் இருந்திருக்கிறது என்றும் அவனுக்கே தெரியாமல் அவனை ஃபாலோ செய்து இருக்கிறாள் என்றும் அறிந்துகொண்டவன் தன்னுடைய கியூரியாசிட்டியை அப்படியே வெளிப்படுத்தியும் விட்டான்.

"என்னை எதனால உனக்குப் பிடிச்சது நிஹா?"

"ஒருத்தரோட நடவடிக்கை நம்மையே அறியாம நமக்குள்ள ஒரு உந்துதலை ஏற்படுத்தி அடிக்கடி அவங்களைப் பத்திய நினைப்பை நமக்குள்ள உண்டு படுத்திட்டே இருந்ததுனா அதுக்கு என்ன பேர் ஜே.பி?"

"வெய்ட் வெய்ட். நீ சொல்றதைப் பார்த்தா அந்த லிஃட் மீட்டிங்குக்கு முன்னாடியே நாம மீட் பண்ணியிருக்கோமா?" என்றான்.

"டிசம்பர் தர்ட்டி பர்ஸ்ட் எல்லோரும் மறுநாள் பிறக்கப்போற புது வருஷத்துக்காக ஆவலா இருப்பாங்க இல்ல? ஆனா நான் அந்த நாளை முழுசும் வெறுப்பேன் ஜே.பி..." என்று சொல்லும் போதே அவளுடைய குரல் கம்ம,

"நான் நைந்த் படிக்கும் போது என் அம்மா..." என்றவள் மேற்கொண்டு சொல்ல முடியாமல் தடுமாற அதை அவள் சொல்லாமலே வண்ணன் புரிந்துகொண்டான்.

"அந்த வலி என்னனு எனக்கும் நல்லாவே புரியும் நிஹாரிகா. நானும் உன்னைப்போல தான்..." என்று சொல்லவும் நொடியில் தன்னை மீட்டெடுத்தவள்,

"அதனாலேயே என்னமோ தெரியில நான் நியூ இயரை மட்டும் அவ்வளவு வெறுப்பேன். அந்த நாள்ல இந்த உலகமே சந்தோசமா இருக்கும் போது நான் என் அப்பா வரவரைக்கும் அம்மாவோட பிணத்தோட என் வீட்டு ஹால்ல உட்கார்ந்து இருந்தது தான் ஞாபகத்துக்கு வரும். உண்மையிலே எனக்கு அதை எப்படி எடுத்துக்கறதுனே தெரியில ஜே.பி. இன் பேக்ட் சின்ன வயசுலயே எனக்கு இருட்டுனா கொஞ்சம் பயம் தான். ஆனாலும் அப்போ எனக்கு க்ளாஸ்ட்ரோபோஃபியா எல்லாம் இல்ல. ஐ மீன் அன்னைக்கு மாதிரி நான் மயங்கி எல்லாம் விழ மாட்டேன். பொதுவா குழந்தைகளுக்கு இருட்டு மேல இருக்கும் பயம் தான் எனக்கும் இருக்கும். ஆனா அம்மாவோட இழப்பு என்னை ரொம்பவும் பாதிச்சிடுச்சு. அப்போ தான் ஒருநாள் லிப்ட்ல போகும் போது மயங்கிட்டேன். அன்னையில இருந்து இன்னை வரை அது அப்படியே இருக்கு. அப்பா பிசினெஸ் மேன். வீட்டுக்கு ஒரே பொண்ணு நான். அதோட எல்லாம் சரி. அவரும் அதுக்குப் பிறகு பிசினெஸ் எல்லாம் தூக்கிப் போட்டுட்டு எனக்காக என்கூடவே இன்னும் இருக்கார். சொத்துக்குப் பஞ்சமில்லை. ஆனா சொந்தத்துக்கு கண்டிப்பா பஞ்சம். போன வருஷம் நியூ இயர் அப்போ என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் என்னை ரொம்பவும் கம்பெல் பண்ணி வெளிய கூட்டிட்டுப் போனாங்க. அப்போ தான் அந்த நியூ இயர் செலிப்ரேஷன்ல உங்களை முதன்முதலாப் பார்த்தேன். அப்போ நீங்க என்ன பண்ணிட்டு இருந்திங்க தெரியுமா?" என்று கேட்டு மர்மமாகச் சிரித்தாள் நிஹாரிகா.

இப்போது வண்ணனின் முகம் கலவரமடைந்தது. பின்னே போன வருட புத்தாண்டு அன்று அவன் செய்த அலப்பறைகள் அப்படி ஆச்சே? புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகவே அன்று பிரத்தியேகமாக அந்த இடம் தயாராகியிருக்க நண்பர்களுடன் சென்ற வண்ணன் வழக்கம் போல் கொண்டாட்டங்களைக் கண்டுகளித்து கொண்டிருக்க அப்போது நிகழ்ந்த ஒரு போட்டியில் அவன் வென்றதெல்லாம் அவன் கண்ணில் வந்து போனது.
இளவட்டங்கள் ஒன்றுகூடி போட்டி என்ற பெயரில் பல கூத்துக்களை நிகழ்த்திக்கொண்டிருக்க நான் ஸ்டாப் பாட்டம் சிப் செய்யும் போட்டியில் அடுத்தடுத்து மூன்று பியர்களை உள்ளே தள்ளி அங்கு கூடியிருந்தவர்களின் கரகோஷங்களை எல்லாம் வாங்கிக்கொண்டிருந்தான் பொன்வண்ணன்.

"அப்போ அன்னைக்கு?" என்றவன் அசடு வழிய,

"பியர் அடிச்சது என்னை இம்ப்ரெஸ் செய்யல. ஆனா பியர் அடிச்சும் அடுத்தடுத்து நடந்த போட்டியில நீங்க ஸ்டெடியா இருந்து வாவ் போட வெச்சீங்களே அது தான் எனக்கு உங்க மேல ஏற்பட்ட முதல் இம்ப்ரெஷன். எல்லோருக்கும் இந்த விஷயம் ஒருத்தர் மேல ஹேப்பினஸை உண்டாக்காது தான். ஆனா அதுக்கப்புறம் அங்க நடந்த எல்லா செலிப்ரேசன்லயும் உங்க புன்னகை உங்க ஏட்டிடியூட் எல்லாமே என்னை உங்களை நோக்கி ஈர்த்துச்சு. என் அம்மா இறந்ததுக்கு அப்புறோம் ஒரு நியூ இயர் நைட்ல நான் சிரிச்சு இன்னும் தெளிவாச் சொல்லனும்னா என்னை மறந்து நான் என் சோகத்தை மறந்து நான் இருந்த நாள் அது. அப்பறோம் பனிரெண்டு மணி நெருங்கும் சமயம் எல்லோரும் கத்தி கூப்பாடு போட்டதுல நான் உங்களைத் தொலைச்சிட்டேன். நம்ம வாழ்க்கையில நாம இந்த மாதிரி பல பேர்களை பல இடங்கள்ல சந்திப்போம் தான். ஆனா அவங்களோட ஞாபகங்கள் கொஞ்ச நாள்ல நம்மை விட்டுப் போகிடும். நானும் அன்னைக்கு அப்படித்தான் நெனச்சு விட்டேன். ஆனா என்னையும் அறியாம உங்களோட சிரிப்பு சந்தோசம் எப்படிச் சொல்ல? அது என்னனு என்னால தெளிவாச் சொல்ல முடியல. ஆனா திரும்ப உங்களை ஒரு தடவையாச்சும் மீட் பண்ண மாட்டோமான்னு நான் ஏங்கியிருக்கேன். அப்போ தான் ஒரு வீக் எண்ட்ல கோவை கொண்டாட்டத்துல உங்களை மீண்டும் சந்திச்சேன். உங்க ப்ரெண்ட்ஸோட நீங்க ஜாலியா சிரிச்சு விளையாடிட்டு இருந்திங்க. சரி திரும்ப உங்களை நான் மீட் பண்ணா உங்ககிட்ட நான் பேசி ஃப்ரண்ட் ஆகணும்னு நெனச்சிட்டு விட்டுட்டேன். அதுக்குப் பிறகு தான் நான் நம்ம ஆபிஸ் இருக்கும் இடத்துல ஜாயின் பண்ணேன்..." என்றதும் வண்ணன் அர்த்தமாகப் பார்க்க,

"அடடடடே! உடனே உங்களுக்காக நான் அங்க வேலை செய்ய வந்ததா எல்லாம் கற்பனை பண்ணிக்க வேண்டாம். என் ஜாப் அங்க தான். ஆனா அந்த இடைப்பட்ட நாட்கள்ல அடிக்கடி உங்களோட முகம் என் மனசுல வந்துட்டுப் போகும். அப்போ வரை உங்க பேர் கூட எனக்குத் தெரியாது. அழகான பறவைக்குப் பெயர் வேண்டுமா?" என்று பாடலாக அவள் பாட,

"ஏய் பொண்ணுங்களை தான் பசங்க சைட் அடிப்பாங்க. பொண்ணுங்களைத் தான் பறவையோட கம்பேர் பண்ணி பாட்டுப் பாடுவாங்க. நீ என்ன உல்டா பண்ணுற?"

"வை ஷுட் பாய்ஸ் ஆல்வேய்ஸ் ஹேவ் தி ஃபன்?"(அது ஏன் பசங்களுக்கு மட்டும் தான் எப்போவும் கேளிக்கை இருக்கணுமா என்ன?")

"ஏன் பொண்ணுங்களாம் சைட் அடிக்கக்கூடாதா? பொண்ணுங்க பசங்கள நெனச்சு பாட்டுப் பாடக்கூடாதா? பொண்ணுங்க பசங்களை எண்ணி கவிதை சொல்லக்கூடாதா? ஏன் ஆம்பளைங்க இவ்வளவு சாவுனிஷ்டா இருக்கீங்க?"

"தாயே தெரியாம சொல்லிட்டேன். அதானே வை ஷுட் பாய்ஸ் ஆல்வேஸ் ஹேவ் தி ஃபன்? லெட் தி கேர்ள்ஸ் டூ ஹேவ் இட்..." என்று வண்ணன் சொல்ல,

"அவ்வளவு தான். நீங்க பொண்ணுங்களைச் சமமா ட்ரீட் பண்ணா நாங்க எதுக்கு தேவையில்லாம ஃபெமினிசம் பேசப்போறோம்? ஆக்சுவல்லி எங்களுக்கு நீங்க சொல்ற மாதிரி ஸ்பெஷல் பிரிவிலேஜ் எல்லாம் வேண்டவே வேண்டாம். எங்களையும் சமமா ட்ரீட் பண்ணாலே போதும். வி த்ரைவ் ஃபார் ஏன் இகலெட்டெரியன் சொசைட்டி. அவ்வளவு தான்" (நாங்க கேட்பதெல்லாம் சமத்துவம் தான்)

"சரி அப்பறோம் என்ன ஆச்சு? கதையைச் சொல்லு நிஹா"

"இது கதையல்ல நிஜம்" என்று சிரித்தவள்,

"அந்த கேம்பஸ்ல பலமுறை உங்களைப் பார்த்திருக்கேன். அப்போ தான் உங்களைப் பத்தி நானும் கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் தெரிஞ்சிகிட்டேன். பல முறை உங்ககிட்டப் பேச உங்க ஆபிஸ் வாசல் வரை வந்திருக்கேன். கேன்டீன்ல கூட உங்கள மீட் பண்ண நெனச்சிருக்கேன். ஆனா எப்படி எங்க இருந்து ஆரமிக்குறதுனு எனக்குத் தெரியல. அப்போ தான் அந்த நாளும் வந்தது. அன்னைக்கு எனக்கு மட்டும் தான் ஆபீஸ்னு கடுப்புல வந்த நான் முந்தின நாள் என் ஃப்ரெண்ட்ஸ் போட்ட பெட்டை பத்தியும் யோசிச்சிட்டே வந்தேன்னா அப்போ பார்த்து திடீர்னு நீங்க கூப்பிட்டீங்களா. நானும் யாரோன்னு திரும்புனா அங்க நீங்க இருந்திங்க. அதை விட ஆச்சர்யமா எப்போவும் டௌன் பஸ் போல கூட்டமா இருக்குற லிப்ட் வேற அன்னைக்கு காலியா இருந்ததா அதான் இந்த சான்சை விடக்கூடாதுனு என் மனசாட்சி சொன்னதையும் மீறி உள்ள வந்துட்டேன். ஏற்கனவே லிப்ட் மேல இருந்த பயம் உங்ககூட தனியா ட்ராவல் பண்ணுற எக்ஸைட் மென்ட் அது கூட ப்ரெண்ட்ஸ் வெச்ச பெட்ல ஜெயிக்க போறோம்னு ஒரே கல்லுல பல மாங்கா அடிக்க நெனச்சேனா?" என்றவள் அதன் பின் நிகழ்ந்ததை எண்ணி முகத்தை வருத்தமாகக் காட்ட,

"உன் போதாத நேரம் கரெண்ட் வேற அன்னைக்கு கட் ஆகி இன்னும் சதி பண்ணிடுச்சா?" என்று சிரிக்க,
ஆமாம் என்பதைப்போல் தலையாட்டி அசடு வழிந்தாள் நிஹாரிகா.

"அதுபோக நீங்க வேற அன்னைக்கு ஹாஸ்பிடல்ல காச் மூச்னு கத்திட்டிங்களா? எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு..."

"இதை லவ்னு என்னால பின் பாயிண்ட் பண்ணிச் சொல்ல முடியல ஜேபி. ஆனா உங்க கூட இருந்தாலோ இல்லை உங்களை நெனைச்சாலோ என்னையே அறியாம எனக்குள்ள ஒரு ஹேப்பினஸ் தொத்திக்குது. பெரிய ஆத்துக்கு மேல இருக்கும் ஒத்தையடி கயித்துப்பாலத்தைக் கடக்கும் போது ஒரு எக்ஸைட் மென்ட் கலந்த த்ரில் இருக்கும் தெரியுமா? அத நான் உங்களைப் பார்த்தபோதெலாம் ஃபீல் பண்ணியிருக்கேன். இவ்வளவு தான் ஜே.பி என் பக்கத்துக் கதை..." என்று முடித்த நிஹாரிகாவையே இமைகொட்டாமல் பார்த்தான் வண்ணன்.


நிஹாரிகா என்றால் பனித்துளி என்றும் நட்சத்திரக்கூட்டம் என்றும் கவர்ந்திழுக்கும் என்றும் பொருள். நம்முடைய பால்வெளி அண்டத்துக்கும் நிஹாரிகா என்று ஒரு பெயர் இருக்கிறது. நிஹாரிகா பெயரில் மட்டுமல்ல பார்க்கவும் அப்படிப்பட்டவன் தான். இப்போது வண்ணனுடைய ரசனை மிகுந்த பார்வையே அவளுக்கு வேண்டிய பதிலைச் சொல்லாமல் சொன்னது.

நிகழ்காலத்தில் வெள்ளிமலையில் தன்னுடைய அறையைப் பூட்டிக்கொண்டவனுக்கு கலவையான உணர்வுகள் தோன்றி மறைந்தது. அவனால் அவன் பெரியப்பா சொன்னதை ஜஸ்ட் லைக் தட்டாக கடந்து செல்ல முடியவில்லை. ஒருவேளை இன்று அவன் வாழ்வில் நிஹாரிகா இல்லாமல் போனதில் கிரிஜாவுக்கு பங்கு இருக்குமோ என்று விபரீதமாய் யோசிக்க ஆரமித்தான் பொன்வண்ணன்.

அங்கே அமிலமென வண்ணன் வீசிச் சென்ற வார்த்தைகள் கிரிஜாவின் உயிரின் ஆழம் வரை சென்று பதம் பார்த்தது. 'இந்த ஊரு பக்கமே தலைவெச்சு படுக்கமாட்டேன் பார்த்துக்கோ' என்று வண்ணன் சொன்ன வார்த்தைகள் எங்கே வண்ணன் தன்னை விட்டு நிரந்தரமாகவே பிரிந்து விடுவானோ என்ற அச்சத்தை அவருள் ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை. யோசிக்கையில் அவருக்கென்று இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒரே உறவே அவன் தானே? அவனும் இல்லையெனில் தன்னுடைய நிலை என்ன என்று யோசிக்க கூட முடியாமல் திக் பிரமை பிடித்து நின்ற கிரிஜாவின் கோலம் தூரிகாவுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது.

"அத்தை... அத்த... என்னாச்சு அத்தை?" என்று கூவியவாறே சென்றவள் அவரைத் தொட்டும் கூட அதை உணராமல் இருந்த கிரிஜாவை எண்ணி மனம் படபடக்க அவரை அருகிலிருந்த மேஜையில் அமரவைத்து தண்ணீர் கொடுத்ததும் அதுவரை அடங்கியிருந்த அழுகையையெல்லாம் மொத்தமாக தூரிகாவிடம் கொட்டித் தீர்த்தார் கிரிஜா.

"என்னைத் தனியா விட்டுட்டு அவன் மட்டும் போயிடுவானா தூரி? அவனுக்கு இனிமேல் நான் தேவையில்லையா தூரி? நான் அவனுக்கு பாரமா இருக்கேன்னு நினைக்கறானா தூரி?" என்று அவர் கேவ, அவரை எப்படிச் சமாதானம் செய்வதென்றே தெரியாமல் தவித்தாள் தூரிகா. (மேகம் கூடும்...)
 
கேப்பார் பேச்சக் கேக்குற கிறுக்குப் பயலா இருப்பான் போலவே ??
 
கேப்பார் பேச்சக் கேக்குற கிறுக்குப் பயலா இருப்பான் போலவே ??
அவன் இப்போ தவறான புரிதலில் இருக்கிறான். விரைவில் தெளிவான்?
 
Top