Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மழைக்கால மேகங்கள்!- 7

Advertisement

praveenraj

Well-known member
Member


வண்ணன் மீது தனக்கெப்படி காதல் வந்தது என்றதை அன்று வண்ணனிடம் தெரிவித்த நிஹா அவள் மனதில் இருந்த பாரத்தை கீழே இறக்கி வைத்ததைப்போல் மென்மையாக உணர்ந்தாள். அவள் மனமென்னும் சிறகு அடைபட்டிருந்த பெட்டி திறக்கப்பட்டதும் கனமேதும் இன்றி இலகுவாக வானில் பறந்ததைப்போல் அவளும் உயர உயர பறந்துகொண்டிருந்தாள். நம் மனதுக்கு நெருக்கமானவர்கள் என்பதை நம் அறிவு உணரும் முன்னே மனம் அறிந்துகொள்ளும். அதற்குச் சிறந்த உதாரணம் பிறந்த குழந்தைகள் தான். பிறந்த குழந்தைகள் ஏதும் கண் திறந்து தாயைப் பார்ப்பதில்லை. அவைகள் கற்றுத் தேர்ந்த பண்டிதர்களும் இல்லை. ஆனால் தாயின் ஸ்பரிசத்தை அவர்களால் நன்கு கிரகித்துக்கொள்ள முடியும். பிறந்த குழந்தைக்குள்ளே அத்தனை மாயம் நிகழ்கிறதென்றால் வளர்ந்த குழந்தைகளைப் பற்றித் தெரிவிக்கவா வேண்டும்? எல்லாம் ஹார்மோன்கள் நிகழ்த்தும் மாயம்.

எல்லாவற்றுக்கும் விளக்கம் எதிர்பார்க்கக்கூடாது. காரணங்கள் கடந்தும் காரியங்கள் அரங்கேறுகிறது. தி ஜர்னல் ஆப் செக்ஸுவல் மெடிசின்(the journal of sexual medicine) என்னும் பத்திரிகை எடுத்த கருத்துக்கணிப்பில் ஒருவர் மீது காதல் வயப்பட்ட நொடியில் ஐந்தில் ஒரு பங்கு நேரமே போதுமானதாம். மேலும் காதல் என்பது அந்த க்ஷணம் நிகழ்ந்து மறைவதில்லையே? அது எப்போதும் ப்ரெசென்ட் கன்டினியூவஸ் டென்சில் இருக்க வேண்டியதாயிற்றே?(present continuous tense - அவன் வந்துகொண்டே இருக்கிறான். நான் எழுதிக்கொண்டே இருக்கிறேன்...)

அன்று முதன்முதலில் லிஃப்டில் பார்த்த கணமே அவனுள் டோபோமைன் ஆக்சிடோசின் செரடோனின் ஆகியவை சுரந்துவிட்டது என்பதை இப்போது நினைக்கையில் தான் அவனே உணர்த்துக்கொண்டான். இன்று நிஹாவுடன் பேசிய பிறகு தான் வண்ணனுக்கு எல்லாம் விளங்க ஆரமித்தது.

எல்லாக் காதலர்களைப்போல வீக் எண்ட் அவுட்டிங் இரவெல்லாம் சேட்டிங் என்று முழுநேர காதல் தீவிரவாதத்தில் அவர்கள் தங்களை அர்பணித்துக் கொண்டனர்.
அன்று அப்படித்தான் காலையில் தங்கள் அலுவலகம் வந்த வண்ணன் எதிரில் வரும் நிஹாவின் காரை கண்டு அவளுக்காகவே காத்திருந்தான்.

"என்ன திடீர் சர்ப்ரைஸ்? ஒரே இடத்துல வேலை செய்யுறோம்னு சொல்லிக்கிட்டாலும் நாம இங்க மீட் பண்ணிக்கறதே அபூர்வம். என்ன மேட்டர்?" என்று அவனை நெருங்கியவளுக்கு ஏதேனும் சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று அந்தக் கணம் தான் வண்ணனுக்கும் தோன்றியது.

எதையும் பேசாது திரும்பிய தங்கள் அலுவலகத்தின் தரைதளத்தைக் கண்டவன் அவள் கரம் பற்றி வேகமாக இழுத்துச் சென்றான்.

"ஏய் என்னாச்சு? ஜேபி கொஞ்சம் பொறுமை... நானே..." என்று தடுமாறிய நிஹாவை துளியும் பொருட்படுத்தாது திறந்திருந்த லிஃப்டில் அவளோடு பிரவேஷித்தவன் அவள் தள எண்ணை அழுத்தி விட்டுத் திரும்ப அவளோ பயத்தில் கண்களை இறுக மூடி நின்றிருந்தாள்.

அவளை நெருங்கி அவள் கரத்தின் மீது அழுத்தம் கொடுத்து அவள் கண் திறக்கும் முன்னே அவள் இடையைப் பிடித்தவன்,

"உனக்கு கண் சொருவுற மாதிரி இருந்தா சொல்லு..." என்று முடிக்கும் முன்னே அவள் கண்கள் சொக்க அவளை மயங்கவிடாமல் தடுக்க எண்ணி அவள் இதழில் முதல் தீண்டல் செய்திருந்தான் வண்ணன். அவளுக்கு ஏற்படும் பய உணர்வைக் காட்டிலும் வண்ணனின் இச்செயலால் உண்டான அதிர்ச்சி அவளை பரவசத்தில் ஆழ்த்த தாங்கள் இறங்க வேண்டிய தளத்தில் லிஃப்டும் நின்றது. அப்போது அவளை விட்டு விலகியவன் அவளை வெளியேறுமாறு சமிக்ஞை செய்தான். அவள் தளத்தில் நின்றுகொண்டிருந்த அவள் தோழிகள் அவளை ஆச்சர்யமாகப் பார்க்க பெண்ணவளோ வண்ணன் கொடுத்த அதிர்ச்சியில் விழிவிரித்து நின்றிருந்தாள்.

"கேர்ள்ஸ் உங்க ஃப்ரண்டுக்கு ஷாக் டிரீட்மென்ட் கொடுத்திருக்கேன். சோ கைன்ட்லி டேக் கேர் ஆப் ஹர்..." என்று சொல்லி மேலே சென்றான்.

இங்கே நிஹாரியாவுக்கோ வெட்கத்துடன் கூடிய ஆச்சர்யம் மேலோங்கியது. உண்மையிலே இன்று வண்ணன் அவளை நெருங்காது இருந்திருந்தால் இன்றும் மயங்கி விழுந்திருப்பாள். ஆனாலும் இன்று தன்னை மயங்காது லிஃப்டில் அழைத்துச் செல்வதை சர்ப்ரைஸ் என்று சொன்னானா இல்லை தனக்கு முதல் முத்தம் கொடுக்கப்போவதை சர்ப்ரைஸ் என்றானா என்ற ஐயம் அவளை வாட்டிக்கொண்டிருந்தது. இருந்தும் அவன் இதழ் தந்த மயக்கத்தோடே அன்றைய பொழுது முழுவதும் வலம் வந்தாள்.
மதியம் வேளையில் அவளுக்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்து விழுந்தது.

"நிஹா ஈவ்னிங்கும் லிஃட்ல போவோமோ?" என்று குறும்பாக வினவி ஒரு எமோஜி போட்டிருக்க அதை வாசிக்கும் போதே அவளுக்குள் பரவசம் கூடியது.

இதுபோல் அவ்வபோது தன்னுடைய சீண்டல் குறும்பு ஆகியவற்றின் மூலம் நிஹாரிகாவை ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருந்தான் வண்ணன். இவர்கள் இருவரின் காதலை இவர்களின் அலுவலகங்கள் முழுவதும் அறிந்திருந்தது. அன்று மதியத்திற்கு மேல் வண்ணனுக்கு பெரியதாக வேலை ஏதும் இல்லாமல் இருக்க நிஹாவை அழைத்தவன்,

"ஃப்ரீயா பார்பி?" என்றதும் (அவளைச் செல்லமாக பார்பி என்று தான் அழைப்பான்)

"காலையில இருந்து ஒரு சின்ன டெக்கனிகள் க்ளிட்ச்(தொழில்நுட்ப கோளாறு. நிஹா வேலைசெய்வது ஒரு கேமிங் சாஃப்ட்வெர் நிறுவனம்) ஆகிடுச்சு ஜேபி. இப்போ தான் சால்வ் பண்ணோம். பயங்கர தலைவலியா இருக்கு..." என்று சலித்துக்கொண்டாள்.
அவளுடன் பழகிய இத்தனை நாட்களில் ஒரு போதும் அவளை இவ்வளவு சோர்வாக அவன் கண்டதில்லை. எப்போதும் அவளிடம் ஒரு பாசிட்டிவ் வைப் இழையோடிக்கொண்டே இருக்கும். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவளது இந்தக் குணம் தான் வண்ணனை அவளை நோக்கி ஈர்த்தது. தந்தை இறந்ததில் இருந்து எவ்வளவோ முயன்றாலும் அவனுக்குள் அவன் மட்டுமே அறிந்த ஒரு மென்சோகம் பயணித்துக்கொண்டே இருக்கிறது. தன்னை ஒரு நல்ல நிலையில் வைத்துப் பார்க்க எண்ணி அவர் கண்ட பல கனவுகளை எல்லாம் அவர் வாயாலே கேட்டு வளர்ந்தவன் ஆயிற்றே. இன்று அவர் கண்ட கனவு பலித்தாலும் அதைக் காண அவரில்லையே என்ற ஏக்கம் அவனுக்குள் நீரூற்றாய்ச் சுரந்துகொண்டே இருக்கிறதே. இதற்கொரு வடிகாலாக வந்தவள் தான் நிஹாரிகா. அவன் தந்தையோடு இருந்த நாட்களில் அவன் அனுபவித்த அந்த இதத்தை ஏதோ ஒரு ரூபத்தில் நிஹாரிகாவுடன் உணர்ந்துக்கொண்டு தான் இருக்கிறான். இல்லையேல் நொடியில் ஐந்தில் ஒரு பங்கு நேரத்தில் அவள் மீது எழுந்த காதலுணர்வு எப்படி இவ்வளவு காலம் நீடித்துக்கொண்டிருக்க முடியும்?

"பார்பி, டீ குடிச்சிட்டு வரலாமா?" என்று இவன் கேட்டதும் அதற்காகவே காத்திருந்தவள்,

"காஃபடிரியாவுக்கு வரியா ஜேபி?" என்றவளுக்கு,

"கீழ பார்க்கிங் லாட்டுக்கு ஐந்து நிமிஷத்துல வர..." என்றவன் அவள் அழைப்பதையும் பொருட்படுத்தாமல் அலைபேசியைத் துண்டித்தான்.
வேகமாக வந்தவள் பைக்கில் அமர்ந்து அவள் வருகையை எதிர்பார்த்தவனுக்கு ஒரு முறைப்பைத் தந்து,

"பேசுறத கேட்க மாட்டியா? இப்போ எங்க போறோம்?"

"வந்து வண்டியில் ஏறி உட்கார்ந்தா அடுத்த ரெண்டு மணிநேரத்துக்கு வாய் தொறக்கவே கூடாது. சரியா?" என்றவன் வண்டியை ஸ்டார்ட் செய்ய,

"ரெண்டு மணிநேரமா? ஒரு டீ குடிக்க எதுக்கு அவ்வளவு நேரம்?"

"ஏன்னா நாம டீ குடிக்க மட்டும் போகல"

"அப்பறோம்?"

"வண்டியில ஏறு, உனக்கே புரியும்" என்றவனை இதற்கு மேல் என்ன கேட்டாலும் பதில் கிடைக்காது என்று உணர்ந்தவள் வண்டியில் அமர்ந்தாள்.

சிறிது நேரம் விறைப்பாக இருப்பதாகவே இருவரும் காட்டிக்கொள்ள பிறகு தன் விரல் கொண்டு அவன் முதுகில் கோலமிட்டாள்.

"என்ன?"

"இது மேட்டுப்பாளையம் ரூட் இல்ல?" என்று போகும் வழி அறிந்து அவள் வினவ,

"கொஞ்ச நேரம் அமைதியா வாடி" என்றதும் மாலை வேளையில் மென் சாரலாய் குளிர் காற்று அவள் உடலைத் தீண்ட வண்டி குன்னூரைக் கடந்தது.

அதன்பின் இன்னும் வேகமெடுத்தவன் ஊட்டியின் ஒரு பிரபல தேயிலைத் தோட்டத்தின் வாயிலில் வண்டியை நிறுத்தினான்.

'என்னது?' என்னும் அர்த்தத்தில் நிஹா தன் புருவம் உயர்த்த,

"எனக்குத் தெரிஞ்ச பொண்ணு ஒன்னு என்னைக்கும் இல்லாம இன்னைக்கு அவ்வளவு சோர்வா பேசுனா. அவளை உடனே ரீசார்ஜ் செய்யணும்னு யோசிச்சேன். அதான் அப்படியே ஊட்டி வரை வந்து ஒரு டீ குடிச்சிட்டுப் போலாம்னு" என்று சொன்னதும் நிஹாரிகாவுக்கு அவனது இந்தச் செய்கை அவளையும் அறியாமல் கண்ணீர் வரவழைத்து விட,

"ஏய் என்னாச்சு நிஹா?" என்று கேட்டவனின் அக்கறையில்,

"உனக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா ஜேபி?"

அவன் பதிலேதும் சொல்லாமல் நடக்க,

"ஜேபி கேக்குறேனில்ல சொல்லு?" என்று அவனை வழி மறித்தாள்.

"உன் கூட இருக்கும் போதெல்லாம் என் அப்பா என் கூட இருக்குற ஃபீல். அவரும் இப்படித்தான் என்னை என் போக்குல விட்டு என் கூடவே இருப்பார். நானும் காலேஜ் படிக்கும் போதிருந்து நிறைய லவ்வர்ஸ பார்த்திருக்கேன். பெருபாலான பொண்ணுங்க பசங்க கிட்ட நீ இப்படி இருக்கனும் இது செய்யணும் இதைச் செய்யக்கூடாதுனு அவங்க அவனை கண்ட்ரோல் பண்ணுற ரிமோட்டாவே இருப்பாங்க. எல்லாரும் அப்படியில்ல. ஆனா ஒரு தடவையாவது இதை அனுபவிச்சிருப்பாங்க. என் அப்பாக்கு அடுத்து என்னை என் போக்குல விட்டு என் கூடவே இருக்க பாரு? இது என்னை மேலும் மேலும் உன்னை நோக்கி ஈர்க்குது நிஹா..." என்றவன் தன்னையே பார்க்கும் நிஹாவை ஒரு முறை பார்த்து,

"சரி வா, நீ வேற அப்போவே தலை வலின்னு சொன்ன. நான் பாரு என்னென்னவோ பேசிட்டு இருக்கேன்" என்று அழைத்துச் சென்று ஆளுக்கொரு ஸ்பெஷல் டீ அருந்தினர்.
பிறகு வந்ததிற்கு அந்தத் தோட்டத்தில் விதவிதமான புகைப்படம் எடுத்துக்கொண்டு கோவை நோக்கிப் பயணித்தனர்.

தன்னிடம் சந்தேகம் கேட்க வந்த சூர்யாவை வம்படியாக அழைத்த தூரிகாவின் மீது கடும் சினத்துடன் அறைக்குள் சென்றான் வண்ணன். அவனுக்கு தூரிகாவை நினைக்க நினைக்க ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. தானொரு குடிகாரன் என்பதாலும் தன்னிடம் சூர்யா பழகினால் அவனையும் தான் தீவழியில் கொண்டு சென்றுவிடுவேன் என்பதாலும் தான் அவனைத் தன்னுடன் பழகவிடாமல் தூரிகா தடுக்கிறாள் என்று வண்ணனுக்கு மட்டும் புரியாமல் போகுமா என்ன? வண்ணன் குடிப்பான் தான். ஆனால் அவனுக்கு அதொரு பொழுதுபோக்கே தவிர அவனொன்றும் குடிக்காமல் இருந்தால் கைநடுக்கும் அளவிற்கு போதைப்பழக்கத்திற்கு அடிமையானவன் இல்லையே? தூரிகாவின் தற்போதைய ஒரு நிமிட பார்வையே அவனைப் பற்றி அவள் கொண்டுள்ள கற்பிதங்களை அவனுக்குப் படம் பிடித்துக் காட்டிவிட்டதே. குறுக்கும் நெடுக்கும் நடந்தவன் தன் கட்டிலில் அமர அவனையும் அறியாமல் சரிதாவின் முகம் அவன் முன்னே வந்து போனது. தூரிகாவை எண்ணி அதுவரை இருந்த கோவமெல்லாம் சரிதாவுடனான உரையாடலை நினைக்கையில் மெல்ல கரைந்தது.

வண்ணன் வெள்ளிமலைக்கு வந்து ஒருமாதம் கடந்து விட்டது. இந்த ஒருமாதம் அவன் வாழ்க்கையில் பலவிதமான மாறுதல்களையும் புரிதல்களையும் அவனுக்குள் ஏற்படுத்தியது என்றால் அதில் துளியும் ஐயமில்லை. ஆரம்பத்தில் ஒரு நாளைக் கடத்தவே அவன் மிகவும் சிரமப்பட்டான் தான். ஆனால் இப்போதெல்லாம் அதை எவ்வாறு கடந்து வருவதென்று தெரிந்துக்கொண்டான். அன்று தன்னிடம் பேசும் போதே வண்ணன் அதிருப்தியில் இருக்கிறான் என்றும் தன்னைக் கோவித்துக்கொண்டான் என்றும் அறிந்த சுதாகரன் அடுத்த பத்து நாட்கள் காத்திருந்து பதினோராம் நாளன்று வண்ணனை அழைத்தும் விட்டான்.

"என்னடா வேன் ஒரு போன் கூட இல்ல?" என்று இலகுவாகவே ஆரம்பித்த சுதாவுக்கு,

"மச்சான் நீங்க எல்லாம் ப்ராஜெக்ட் வொர்க்ல ரொம்ப பிசியா இருப்பிங்க. அதான் ஒண்ணுக்கு ரெண்டு புது ப்ராஜெக்ட் வேலையெல்லாம் போகுதே? இதுல நான் வேற தேவையில்லாம உங்களுக்கு போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு தான் கால் பண்ணவே இல்ல" என்று தெரிந்தே அவனைக் குத்திக் காட்டுவதைப் போல் பேசினான் வண்ணன்.

வண்ணன் இதுபோல் தான் ஏதேனும் கடுப்படிப்பான் என்று அறிந்த சுதா தங்கள் டீம்மேட்ஸ் ஆகிய மதுபாலா ஈஸ்வர் சத்யமூர்த்தி ஆகியோருடன் ஸ்பீக்கர் போனில் பேசினான். அவர்கள் நால்வரும் ஒருவரை ஒருவர் அர்த்தமாகப் பார்த்துக்கொண்டனர்.

"ஹே ஜே.பி என்னடா இப்படிப் பேசுற?" என்ற மதுவின் குரல் கேட்டவன்,

"ஓ நம்ம ஆர்கிடெக்ட் மேடமும் லைன்ல தான் இருக்கீங்களா? சொல்லவே இல்லையே... ஓ என் பேரெல்லாம் கூட உங்களுக்கு ஞாபகம் இருக்கா? ஆச்சர்யம் தான்..." என்றவனின் குரலில் அவ்வளவு ஆதங்கமும் வெறுமையும் கலந்திருந்தது. மது அவனுக்கு அந்த நிறுவனத்தில் ஜூனியர். சஞ்சீவி கன்ஸ்ட்ரெக்சன் நிறுவனத்தின் முதன்மை ஆர்கிடெக்ட்டாக பணியில் இருப்பவள் தான் மதுபாலா.

ஒரு கட்டிடத்தின் வெளிப்புற அமைப்புகளில் ஈடுபடுபவர்கள் சிவில் இன்ஜினியர்கள். அதே கட்டிடத்தின் உட்புற அமைப்புகளில் ஈடுபடுபவர்கள் ஆர்கிடெக்ட்ஸ்(பிளம்பிங் எலெக்ட்ரிக்கல் முதலியவற்றுக்கு லே அவுட் போடுபவர்கள்).

அவளுக்கு அந்நிறுவனத்தில் கிடைத்த முதல் நண்பனும் முதல் சீனியர் ஆஃபீசரும் வண்ணன் தான்.

"டேய் எங்கமேல ஏன்டா இவ்வளவு காண்டகுற? நாங்க தானே உன்கூட ஹாஸ்பிடல்ல எல்லாம் இருந்தோம். ஏன் மச்சான்?" என்றான் சத்யா.

அதற்கு வண்ணன் பதிலளிக்கும் முன்னே,"டேய் சத்யா என்ன பேசுற நீ?" என்று அவனைக் கடிந்தவன் வண்ணனிடம்,

"எல்லாத்தையும் விடு. எப்போ வந்து ஜாயின் பண்ணுற? இங்க நீ இல்லாம உண்மையில செம போர் தெரியுமா? நீ நம்பினாலும் நம்பாட்டிலும் வி ரியலி மிஸ்ட் யூ சோ மச்..." என்றான் ஈஸ்வர்.

"மச்சான் எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு. அதெல்லாம் முடிக்காம நான் கோவைக்கு வரதா சாரி சாரி வெள்ளிமலையை விட்டு வரதா ஐடியாவே இல்ல" என்றவனின் பதில் உண்மையிலே அங்கிருந்த எல்லோருக்கும் பேரதிர்ச்சியைக் கொடுத்தது. பின்னே பொங்கல் தீபாவளி விடுமுறையில் கூட இரண்டு மூன்று தினங்களுக்கு மேல் அங்கு தங்க உடன்பாடில்லாதவனின் இந்தப் பதில் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்காவிட்டால் தான் ஆச்சர்யம்.

அன்று சுதாகரனிடம் பேசிய பிறகு தன்னையே சுயபரிசோதனைக்கு உட்படுத்தியவன் கிரிஜாவின் மனதை மாற்றி அவரின் சம்மதத்துடன் தான் மீண்டும் பணிக்குச் செல்வதென்று முடிவெடுத்தான். அது போக இனியும் சஞ்சீவி கன்ஸ்ட்ரெக்சனில் பணிபுரியும் எண்ணம் அவனுக்குத் துளியும் இல்லை. அவன் மற்ற விஷயங்களில் எப்படியோ அவனது வேலை விஷயத்தில் அவன் ஒரு தேர்ந்த சாமர்த்தியசாலி தான். அவனது திறமைக்கு அவன் வெளியே சென்றால் பல நிறுவனங்கள் அவனைத் தங்கத்தட்டில் வைத்துத் தாங்கவும் கூடத் தயாராக இருக்கிறார்கள் என்பதே மாற்றுக்கருத்து இல்லாத உண்மை. வண்ணனின் நண்பர்களின் தற்போதைய பணிச்சுமை கூட வண்ணன் இல்லாததால் ஏற்பட்டது தான். இது சஞ்சீவி கன்ஸ்ட்ரெக்சன்ஸ் என்னும் கட்டிடத் துறையின் திமிங்கலத்திற்கும் பொருந்தும். அவர்களுக்கும் ஒரு வண்ணன் போனால் நூறு வண்ணன்கள் கிடைப்பார்கள் தான். ஆனால் அந்த நூறு வண்ணங்களிலும் இந்தப் 'பொன்வண்ணன்' நிச்சயம் தனித்துக் கவர்ந்திழுக்கும் என்பதை அவர்கள் அறிய தவறிவிட்டனர்.

"டேய் என்ன சொல்ற? நேத்துகூட மேனேஜர் உன்னைக் கேட்டார். நாங்க தான் நீ எப்படியும் வந்து ஜாயின் பண்ணிடுவனு சொல்லியிருக்கோம். நீ சொல்றதைப் பார்த்தா?" என்று வண்ணனின் மனதைப் படித்தவனாக சுதா கேள்வியுடன் நிறுத்த,

"மச்சி எனக்கான ரீப்பிளேஸ்மென்ட் போடச் சொல்லிடுங்க. முடிஞ்சா நானே மேனேஜருக்கு ஒரு மெயில் போட்டுடுறேன்..."

"என்ன விளையாடுறயா வண்ணா? நீ இங்க இருந்த டெசிக்னேஷன் என்ன தெரியுமா? ஆர் யூ மேட்? இந்த சஞ்சீவி கன்ஸ்ட்ரெக்சன்ல வேலை கிடைக்காதான்னு எத்தனை பேர் வெளிய தவமிருக்கான் தெரியுமா? சவுத் இந்தியாவுல இருந்து இப்போ நாம பேன் இந்தியா(இந்தியா முழுவதும்) நோக்கிப் போயிட்டு இருக்கோம். ஒழுங்கு மரியாதையா நாளைக்குள்ள கிளம்பி வர வழியைப்பாரு" என்று ஆத்திரத்தில் ஈஸ்வர் பேச,

"........"
"எதாவது பேசு டா" என்று மதுவும் சத்யாவும் ஒருசேர கேட்டனர்.

"மச்சி இது தான் என் முடிவு. இந்த கான்வெர்சேஷன் இன்னும் ஒருமணி நேரம் போனாலும் என் முடிவுல இருந்து நான் பின்வாங்கப் போறதில்லை. அண்ட் இது ஒன்னும் அவசரத்துலயோ ஆத்திரத்துலயோ எடுத்த முடிவில்லை. நல்லா யோசிச்சு நிதானமா நான் எடுத்த முடிவு. இந்த பத்து நாளா என் மூளைக்குள்ள ஓடிட்டு இருந்த ஒரே விஷயம் இது தான். சோ வேற எதாவது பேசலாமே?" என்ற வண்ணன் அந்நால்வருக்கும் புதியதாகவே தெரிந்தான். ஏனெனில் எப்போதும் போல் அல்லாமல் நிறுத்தி நிதானமாக அதே நேரம் அவன் பேசிய வார்த்தைகளை எல்லாம் அழுத்தமாகவே உரைத்தான்.

இப்போது மௌனம் அவர்கள் வசமாக,

"ஓகே காய்ஸ். நான் எப்படியும் இன்னும் கொஞ்ச நாள் இங்க தான் இருக்க போறேன். அடுத்த மாசத்துல ஒரு நாள் வந்து என் சர்டிபிகேட்ஸ் எல்லாம் வாங்கிக்கிறேன். சுதா எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணு. நான் கோவையில் காட்டுன டாக்டர் கிட்ட எனக்கு லாங் ரெஸ்ட் தேவைப்படணும்னும் இப்போதைக்கு வேலை செய்யுற நிலையில் என் ஹெல்த் இல்லைனும் நான் கேட்டதா ஒரு ரிப்போர்ட் வாங்கிடு. இல்லைனா என் சர்டிபிகேட் வாங்குறதுல ஏதாவது எடக்குமடக்கு செஞ்சிடப்போறானுங்க...." என்று சொன்னவன் அழைப்பைத் துண்டித்தான்.

தன் வீட்டின் பின்புறத்தில் இருக்கும் தோட்டத்தில் இருந்து இதையெல்லாம் வண்ணன் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் முற்றத்தில் அன்றைய பிரதோஷத்திற்காக தேனு கிரிஜா தூரிகா ஆகியோர் மாலைத் தொடுத்துக்கொண்டிருந்தனர். பூ கட்டுவதற்குத் தேவையான வாழைநார்களை எடுக்க உள்ளே வந்த தூரிகாவின் செவிகளில் இறுதியாக வண்ணன் பேசிக்கொண்டிருந்தது எல்லாம் விழுந்தது. அவளுக்கே அவள் செவிகளை நம்ப முடியவில்லை. கிரிஜாவின் எண்ணமும் அது தானே. ஆனாலும் கிரிஜாவிற்காக அவன் மனம் மாறியிருக்கிறான் என்றெல்லாம் அவள் நம்பத் தயாராக இல்லை. கிரிஜாவும் அவனும் பேசியே பல நாட்களாகிறது என்று அவளும் அறிவாள் தான். அதும் போக இப்போதெல்லாம் அவனை அடிக்கடி சரிதாவுடன் தான் பார்க்கிறாள். அன்று போல் தினமும் மாலை அவளுடன் பேசியவாறு தான் அவன் வருகிறான் என்று அந்தத் தெருவில் இருக்கும் எல்லோருக்கும் தெரியுமே!

கடந்த சில மாதங்களாகத் தான் சரிதா வெள்ளிமலையில் வசிக்கிறாள். அவளைப் பற்றி அவ்வூரில் யாருக்கும் பெரியதாகத் தெரியாது. அவளுடன் அவள் தந்தையும் தம்பியும் தான் இருக்கிறார்கள் என்றும் இங்குள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் அவள் பகுதிநேரமாக வாரயிறுதி நாட்களில் டியூசனுக்கு எடுக்கிறாள். ஒருமுறை சூர்யா கூட அவளிடம் டியூசன் செல்லவா என்று தூரியிடம் கேட்டான் தான். அவன் படிப்பதற்காகக் கேட்கவில்லை என்றும் அவனுடன் படிக்கும் தோழர்கள் அங்கே டியூசன் செல்வதால் அவர்களுடன் நேரம் செலவழிக்கவே கேட்கிறான் என்றும் தூரிகா மட்டும் அறியமாட்டாளா என்ன? அது போக டியூசனிற்கு என்று மாதம் ஒரு தொகையை ஒதுக்கும் அளவிற்கு அவள் பொருளாதார சூழ்நிலை ஒன்றும் அவ்வளவு வலுவில்லையே!

பொருளாதாரத்திற்காக டியூசன் நடத்தும் சரிதாவும் டியூசனுக்கு அனுப்பும் அளவிற்கு பொருளாதாரம் இல்லாத தூரிகாவும் தான் வண்ணனின் எதிர்கால செயல்களுக்கும் முடிவுகளுக்கும் மாற்றங்களுக்கும் விதையிட்டவர்கள் என்பதை சம்மந்தப்பட்ட அம்மூவருமே அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.

சூர்யாவுக்கு கணக்கின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வதில் அதீத சிக்கல் இருந்தது. கணக்கைத் தவிர்த்து மற்ற அனைத்துப் பாடத்திலும் அவன் நல்ல மதிப்பெண்களையே வாங்கினான். அன்று வண்ணனிடம் கற்றுக்கொள்ள இருந்தவனை வம்படியாக அழைத்த தூரிகா இனிமேல் வண்ணனிடம் அதிகம் பழகக்கூடாது என்பதை அவனைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று நாசூக்காகச் சொல்லியிருந்தாள். அவனும் தூரிகா கோவில் கடை மூடி வீடு திரும்பும் வரை காத்திருந்து சந்தேகங்களைக் கேட்டு இரவு தூங்குவதற்கு பத்து மணியைக் கடத்திவிடுவான். வண்ணனுக்கும் தூரிகாவுக்கும் இடையில் நடக்கும் இந்தப் பனிப்போரை அறியாத கிரிஜாவுக்கு சரவணனும் அன்று மாலை தூரிக்காகக் காத்திருந்தவனைக் கேள்வி கேட்க அவனோ தூரிகா சொன்னதை அப்படியே ஒப்பித்தான். இதில் என்னவோ ஒளிந்திருக்கிறது என்று கிரிஜா மற்றும் சரவணனிற்கும் புரிந்தது. அப்போது வெளியே வந்த வண்ணனின் செவிகளிலும் சூர்யாவின் வார்த்தைகள் விழ இன்று இதற்கொரு தீர்வு காண எண்ணியவன்,

"சூர்யா, இங்க வா. நான் சும்மா தான் இருக்கேன். நானே சொல்லித்தரேன்" என்று அழைக்க சரவணனும் அவனை அனுப்பிவைத்தார். இரவு வந்த தூரியின் கண்களில் வண்ணனுடன் இருக்கும் சூர்யா படவும் அவளுக்குக் கோவம் கொப்பளிக்க,

"டேய் சூர்யா, நான் அன்னைக்கு என்னடா சொன்னேன்? நான் வந்து சொல்லித்தரேனு தானே சொன்னேன்? அதுவரை உன்னால பொறுமையா இருக்க முடியாதா?" என்று ஆவேசமாகவே பேசினாள். அவளது இந்தப் பேச்சு கிரிஜா மற்றும் சரவணனிற்கு இருந்த சந்தேகத்தைத் தெளிவு படுத்தியது.

"என் மேல இருக்கும் கோவத்தை எதுக்கு நீ இந்தச் சின்னப்பையன் மேல காட்டுற தூரிகா? அவன் மேல எந்த தப்பும் இல்ல. நான் தான் அவனைக் கூப்பிட்டேன்" என்ற வண்ணனின் பதில் அவர்களை இன்னும் அதிர்ச்சியூட்டியது.

(மழை வருமோ?)

 
Top