Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ராஜா ராணி - 12

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
காதல் 12:

தஞ்சையில் உள்ள ராஜ் பாலேஸ் திருமண அரங்கம் ஜொலித்துக் கொண்டிருந்தது. ராஜ் நந்தன் – மதுரவசனி யின் திருமண வைபவம். ஆங்காங்கே உறவினர் கூட்டம் கூடியிருக்க, வாசலிலே பன்னீர் ரோஜாவுக்கும் சந்தன கிண்ணத்துக்கும் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர் சிறார்கள்.

வருபவர்களுக்கு ‘நான் தெளிக்கிறேன் பன்னீரை’ எனப் பிரியா சொல்ல, சிறுவனான ஆயுஷோ நான் தான் என அடம்பிடித்தான். மகனை சமாதானம் செய்து குட்டி நாத்தனார் பிரியாவிடம் ,

“ப்ரீமா… ஆயுஷ் சின்னப்பாப்பா இல்லையா..? அவன் கொஞ்ச நேரம் தெளிக்கட்டும்… அப்புறமா உனக்குத் தரேன் டா.. நீ ரோஜாப்பூவை வரவங்களுக்குக் கொடும்மா” என சமரசம் பேசினாள் அந்த வீட்டின் மூத்த மருமகள் ஹரிணி.

“அண்ணி.. அவன் தான் சின்னப்பையன் இல்லல.. அவன் ஒழுங்கா செய்ய மாட்டான்… நான் பிக் கேர்ள்.. அதனால எங்கிட்ட தாங்க…. இல்ல நான் அம்மாட்ட போவேன்..” எனக் கண்ணை கசக்கத் துவங்க,

“உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… இதான் நாத்தனார் கொடுமையா சாமி… ராமா… என்னைக் காப்பாத்து… இவ கிட்டப் பேசி ஜெயிக்க எனக்குத் தெம்பில்ல…” எனப் புலம்ப , அவள் கேட்டபடி ஸ்ரீராமனே வந்தான்.

கடவுளாய் அல்ல கணவனாய்..!
“ஹனி…. என்னடி இங்க நின்னுட்டு இருக்க… உள்ள போ.. உன்னை அம்மா தேடுறாங்க… மதுவுக்கு அலங்காரம் செய்யனுமாம்..” எனச் சொல்ல

“ராம்.. இவன் அழறான்.. பன்னீர் தெளிக்கனும்னு சொல்றான்… ப்ரியா அவ தெளிக்கனும்னு சண்டை போடுறா… என்னால் முடியல..”

“அதானா விசயம்…” என்றவன் சிறிது நேரத்தில் ஒரு காற்றாடியை ஆன் செய்தான். அது சுழலும்போது பன்னீரை தானாகவே தெளிக்கும்.

மனைவியிடம் குனிந்து, “அமெரிக்காவுல படிச்ச முகத்தைப் பாரு.. இது எதுக்கு வைச்சிருக்கான்.. பன்னீர் தெளிக்கிறாளுங்களாம்…” எனத் திட்ட

“ஹும்கும்…” என நொடித்துக் கொண்டு அவள் உள்ளே செல்ல

ராஜதீபன் பட்டு வேஷ்டி சட்டையில் மிகவும் கம்பீரமாய் வந்தவன் ஸ்ரீராமிடம்,
“மச்சான்… உங்களை அண்ணாவுக்கு மாலைப் போட்டு அழைச்சிட்டு வர கூப்பிட்டாங்க…” என அழைக்க

“இதோ வரேன் தீபன்..” என அவன் பின்னால் சென்றான்.

வைரமும் கீர்த்தியும் மதுவின் அறையில் அவளோடு இருக்க, ராஜதீபனிடம் மட்டும் கொஞ்சம் பேசினான் ராஜ் நந்தன்.

இதில் மிகவும் பாதிக்கப்பட்டது சுந்தர் ராஜன் தான். அவர் தான் மகனிடம் நெருங்க முடியாமல் தவித்தார். மற்றவர்களிடமாவது ஒரிரு வார்த்தைகள் பேசுபவன் இவரிடம் வெறும் முகத்திருப்பல் மட்டுமே. ஆதலால் மிகுந்த சோர்வுக்கு ஆளானார்.

திருமணத்தின் ஒவ்வொரு விசயத்துக்கும் நந்தன் பிடிவாதம் பிடிக்க, மதுரவசனி தான் அவனைக் கெஞ்சி கெஞ்சியே சமாதானம் செய்தாள்.

“என் கல்யாணம்…. என் இஷ்டப்படி நடக்கப்போகுது.. அவங்க வந்தா என்னை சீண்டாம இருக்க சொல்லு மது… அவங்களைப் பார்த்தாலே பழைய ரணமெல்லாம் கீறி விட்டு வலி தான் எனக்கு மிச்சம்.. உனக்குப் புரிஞ்சதா…?” என அழுத்தமாய்க் கேட்க

“சரி சரி…. அவங்க உங்களை நெருங்க மாட்டாங்க.. ஆனால் என் வீட்டு ஆளுங்க முன்னாடி அவங்களுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தாதீங்க… உங்களை அவங்கப் பெத்துக்கலை ஒழிய இத்தனை வருசம் நல்லா வளர்த்துருக்காங்க.. உங்களை மாதிரி ஒரு நல்ல பையனை எனக்குத் தந்துருக்காங்க.. அதுக்காகவே நான் அவங்களை மதிக்கனும்… நீங்களும் தான்…. நம்ம இரண்டு பேரும் ரொம்ப ஆசைப்பட்டு எதிர்ப்பார்ப்போட செய்யப்போற விசயம்… எனக்கு எந்த டென்ஷனும் இருக்க கூடாதுன்னு நான் நினைக்கிறேன் நந்தன்.. அப்படியே உங்களுக்கு பழசு ஞாபகம் வந்து காயப்பட்டா கூட எனக்காகப் பொறுத்துக்கோங்க. அதுக்கு நான் வந்து மருந்து போடுறேன்…” எனப் பேசியே அவனைக் கரைத்தாள்.

மூகூர்த்தத்துக்கு நேரம் நெருங்க மாப்பிள்ளையை ஸ்ரீராம் மைத்துனனாய் அழைத்து வந்து அமர வைக்க, ஐயர் முறைகளைச் செய்யத் துவங்கினார்.

மணமகனாய் ராஜ தோரணையில் அமர்ந்திருந்த ராஜ் நந்தனின் பார்வை ஒரு இடத்தில் தேங்கி அவனைக் கோபத்துக்கு உள்ளாக்கியது. உடனே அவன் ரகுவை முறைக்க, ரகுவோ ‘என்னாச்சுண்ணா’ எனக் கண்ணால் கேட்க

“கல்யாணத்துக்கு முன்னாடியே என்னை இம்சை பண்றாடா உங்கண்ணி… அவளுக்கு நான் வாங்கிக் கொடுத்த சேலையை யார் கட்டிருக்கா பாரு..” எனவும் அவன் காட்டிய திசையில் பார்க்க அழகான இளம்பச்சை வண்ண புடவையில் தங்க நிறத்தில் மாங்காய் பதித்த புடவையில் லட்சணமாய் இருந்தார் நந்தனின் தாய் வைரம். அதைப் பார்த்து விட்டு எதாவது சொல்லப்போய் ராஜாவின் கோபத்துக்கு ஆளாகிவிடுவோமோ எனப் பயந்து ஓடி ஓளிந்துக் கொண்டான் ரகு.

மதுரவசனி தான் திருமணத்துக்குப் புடவை எடுக்கும்போது ராஜா தேர்ந்தெடுத்தப் புடவையையே வைரத்துக்குக் கொடுக்க அவர் மனம் குளிர்ந்துப் போனார்.

மண்டபமே வண்ணமயமாய் ஜொலித்தது, வானவில் போல் ஒவ்வொரு பெண்டிரும் ஒவ்வொரு வண்ணச்சேலையில் அழகாய் வளைய வந்தனர்.

சுலோச்சனாவும் பூம்பொழிலும் மகள் புகுந்த வீடு செல்வதை எண்ணிக் கொஞ்சம் கலக்கத்துடனும் அதே சமயம் அவள் வாழ்க்கையில் அடுத்த அடி எடுத்து வைக்கப் போகும் மகிழ்வுடனும் ஒரு இரட்டை மன நிலையில் இருந்தனர்.

மோகனா அவருக்குப் பிடித்த நீல வண்ண சேலை அணிந்திருக்க, அவரைக் கண்ட ஹரிணி ,

“அத்த… இன்னிக்கு நம்ம மதுவுக்குக் கல்யாணமா இல்ல உங்களுக்கா…. அசத்துறீங்க… மாமா கண்கள் உங்களைத் தான் தேடுதே…” என ராகம் பாட

“அட டே ஹனிமா… இப்ப என்ன நானும் உன்னோட இந்த காக்ரா சோளி அழகா அம்சமா… சூப்பரா இருக்குன்னு சொல்லனும்.. சூப்பரா இருக்க.. ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரியே தெரில… கரெக்டா சொல்லிட்டேனா…” எனக் கலாய்க்க

“போங்கத்த… நான் நிஜமா தான் சொன்னேன்… மனசு விட்டுப் பாராட்டினா உங்களுக்குக் கிண்டலா..” எனச் சொல்லிக் கொண்டே வெளியே வர, அவள் கைகளைப் பிடித்து இழுத்த ஸ்ரீராம் ,

“ஹனிம்மா… சித்தி சரியாதான் டா சொல்றாங்க.. உன்னைப் பார்த்தா ஆயுஷ்க்கு அம்மா மாதிரி இல்ல… லுக்கிங் ப்ர்ட்டி கார்ஜியஸ்….” எனக் கண்ணால் கபளீகரம் செய்ய

வெட்கம் ஆட்கொள்ள, “இன்னிக்கு உங்க தொங்கச்சிக்குக் கல்யாணம்.. நமக்கில்ல…. போய் வேலையை பாருங்க…” என விரட்ட

“ நான் போக மாட்டேன்..” என அவள் கையை இன்னும் இறுகப்பற்ற ,

“எங்க அண்ணா கல்யாணத்துல அவனைத் தவிர ஆளாளுக்கு ரொமான்ஸ் படம் ஓட்டுறீங்களே… இது நியாயமா… தர்மமா…. ஒரு பச்சப்புள்ள இதெல்லாம் பார்த்தா கெட்டுப் போகாதா…?” என்றபடி அவர்களைச் சீண்டினாள் ராஜாவின் தங்கை கீர்த்தி.

“ஹா ஹா… அதுக்கு உங்கண்ணனுக்குத் திறமை இருக்கனும் மேடம்… பச்சப்புள்ளைக்கு இங்க என்ன பார்வை..?” எனத் திருப்பிக் கேட்டான் ஸ்ரீராம்.

“அக்காவைக் காணுமே அதான் தேடிட்டு வந்தேன்…”

“உங்களை.. விடுங்க…. கீர்த்தி நீ வா டா” என்றபடிக் கணவனை முறைத்துக் கொண்டே சென்றவளின் முகம் முழுக்கப் புன்னகையின் சாயலே.

திருமணத்திற்கு அமெரிக்காவில் இருந்து வந்திருந்த ஹரிணியின் அம்மா தீபாவும் அப்பா கணேஷும் மகள் மருமகனின் அன்யோன்யத்தைக் கண்டு உள்ளம் குளிர்ந்தனர்.

குட்டித் தாவணியில் ப்ரியா மதுரவசனியை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். அமுதனும் அவளருகிலேயே உட்கார்ந்திருக்க, மோகனா ,

“அமுதா…. லேடீஸ் இருக்க இடத்துல உனக்கு என்ன வேலை… போய்… அண்ணா கூட இரு…” என விரட்ட

“போம்மா… மதுக்கா இனிமே நம்ம கூட இருக்க மாட்டாள்.. இல்ல… இப்ப நான் அவ கூடவே இருக்கேன்” என்று சொல்ல, மதுவின் கண்ணில் நீர் நிறைந்து விட அதைக் கண்ட மோகனா மகனை முறைத்து விட்டு ,

“மதும்மா.. என்ன நினைச்சிட்டு இருக்க நீ.... நான் கல்யாணம் ஆனப் புதிசில போன் பேசவே கஷ்டம்…. மதுரையில இருக்க எங்க வீட்டுக்கும் அடிக்கடி போக முடியாது.. இப்ப அப்படியா.. ஐமோ, ஃபேஸ்புக், வைபர் எல்லாம் இருக்குல… அப்புறம் என்னமோ வேற கிரகத்துக்குப் போற மாதிரி சீன் போடுற.. மேக்கப் கலைஞ்சிடும் டா… அழாத…” எனச் சொல்ல

சுலோச்சானாவும் கூட ,
“அட ஆமாங்கறேன்.. நான் கட்டிக்கிட்டு வந்த காலத்துல எல்லாம் கடுதாசிப் போட்டுதான் பேசிக்கிடனும்…. போனெல்லாம் இப்ப வந்தது தானே… மதும்மா…. மாப்பிள்ளை வீட்ல எல்லாரும் ரொம்ப நல்ல ஆளுங்க.. அவங்க மனசு நோகாம நடக்கனும்.. இங்க இருக்க மாதிரி டப் டப்னு பேசிட கூடாது.. எதிர்த்தெல்லாம் பேசிடாதேம்மா…” என்று சொல்லிவிட

பூம்பொழில் பிடித்துக் கொண்டார்.

“ஆமா பெரியம்மா சொல்ற மாதிரி வாயை வைச்சிட்டு சும்மா இருக்கனும்… ராங்கா பேசாத… கொஞ்சம் பொறுமையா இரு… சின்னப்பிள்ளைத்தனமா இருக்காத..” எனத் தாயாய் தனது அதீத கவலையை வெளிப்படுத்தினார்.

மஹாலஷ்மியும் சும்மா இருக்காது அவள் பங்கிற்கு ,”ராஜா பேசிக்கா ரொம்ப ஜாலி டைப் கிடையாதுன்னு நான் படிச்சேன் டி மது… இண்டஸ்டெரில கூட எல்லார்கிட்டையும் அளவா தான் பழகுவாராம்.. பட் ரொம்ப நல்ல குணமாம்.. உன் பிடிவாதத்தெல்லாம் மூட்டைக் கட்டி வைச்சிடு… சரியா?” என அறிவுரை சொல்ல.

மதுவின் மனமோ, “பிடிவாதமா.. அவன்ட்ட நானா… அவன் முன்னாடி பேசவே கஷ்டம்… பேசவே விட மாட்டான்… இதுல பிடிவாதமா நான் பேசிட்டாலும்…” என்று நினைத்துக் கொண்டாள்.
 
அப்போது உள்ளே வந்தாள் மதுவின் தோழி ஹம்ஸகீதா.

“ஹே..! ஹம்ஸா பொண்ணே எவ்வளவு அழகா இருக்க நீ…. சூப்பர்…. அடுத்து உனக்குத் தான் பார்க்கனும் போ… உங்கம்மா கிட்ட சொல்லனும்…” என்று திருஷ்டிக் கழித்தார் சுலோச்சனா.

ஹம்ஸா அமைதியான புன்னகையை பரிசாகத் தர, தங்க நிறப் புடவையில் மின்னினாள் மது. அவள் காதில் குனிந்து ,

“மது… சும்மாவே சார் உன்னைப் பார்த்தா அவ்வளவுதான்.. இன்னிக்கு அப்படியே உன்னைத் தூக்கிட்டுப் போய்ட போறார் பாரு..” எனச் சொல்ல மதுவின் முகம் வெட்கத்தில் சிவந்து புன்னகையைப் பூசியது. மனதில் ராஜா அவளைத் தூக்கி விடுவேன் என்று சொன்னது நினைவில் வந்து தேனாய்த் தித்தித்தது.

யாரோ ஹம்சாவின் முடியை இழுக்க, யாரென பார்த்தால் குட்டி ஆயுஷ் தான்.

“என் அத்த…” என்று மதுவிடம் கொஞ்சிய ஹம்சாவை தள்ளச் சொல்லி கத்தி அழ,

“அழாதடா என் சக்கரைக்கட்டி… ஆத்தா பாரு.. ஆத்தா பாரு… நீயும் ஆத்தாவும் பாரு ஒரே கலர் ” என சுலோச்சனா தன் பிங்க் புடவையைக் காட்ட,

“ஐய்.. நானும் ஆத்தாவும் சேம் சேம்..” எனக் குதூகலித்தான். பேச்சோடு பேச்சாக அலங்காரம் முடியவும் மதுரவல்லியை உள்ளே அழைத்து வந்தார் பூம்பொழில். அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள் மதுரவசனி.

“என் பேத்தி என் பெயரை எடுக்கனும்… நம்ம வீரன் உனக்குத் துணையா இருப்பான்.. நல்லபடியா இரு ஆயீ….” என்றபடி கண்ணீல் நீர்த்துளிர்க்க வாழ்த்தினார். அதன்பின் அவர் சென்றதும் எல்லாரும் ரெடியாக,

கீர்த்தி உள்ளே வந்தவள், “அண்ணி.. உங்களை அழைச்சிட்டு வர சொன்னாங்க.. வாங்க போகலாம்..” என அழைக்க வர அனைவரும் மதுவை அழைத்துக்கொண்டு மணமேடக்குச் சென்றனர்.

தீபன் அண்ணனின் திருமணத்தில் அவனாகவே எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தான். ராஜா யாரும் வேண்டாம் என்பதற்காக யாரும் இல்லாமலா போய்விடுவர்..?

வேண்டாம் என்பது அவனோடுதான்.. மற்றவர்க்கும் பெற்றவர்க்கும் அவன் வேண்டும் எப்போதுமே.. ஆதலால் அவனின் முறைப்புகள் முகத்திருப்பல்கள் எல்லாம் அவர்களை ஒன்றும் செய்யவில்லை.

முன்வரிசையில் மதுரவல்லி, ராஜாவின் பாட்டி அதாகப்பட்டது சுந்தர் ராஜனின் தாயார் வைதேகி ஆகியோர் அமர்ந்து கண்குளிர தம் பேரப்பிள்ளைகளின் திருமணக்கோலத்தை அன்பொழுகப் பார்த்தனர்.

தன் அருகில் சர்வ லட்சணம் பொருந்தியப் பெண்ணாய் வந்த மதுரவசனியின் அழகு கொஞ்சம் கூட கவரவில்லை. அவன் என்ன அவள் அழகிலா வீழ்ந்தான்..?
மாறாக அவள் செயலில் கோபம் கொளுந்து விட்டு எரியத் துவங்கியது.

பல்லைக் கடித்துக் கொண்டு மணவறையில் அவன் அமைதியாக உட்கார்ந்திருக்க, மதுரவசனியோ அவனின் கோபம் அறியாமல்,

“என்ன நீங்க… இன்னிக்கும் இப்படி உர்ர்ன்னு இருக்கனுமா…? கொஞ்சம் சிரிச்சா தேஞ்சா போவீங்க.. ப்ளீஸ் ஃபோட்டோ அப்போதான் அழகா வரும்ங்க…” எனச் சொல்ல

“அப்படியே உன்னைக் கன்னத்துல விட்டேனா அவ்வளவுதான் டி… உனக்கு வாங்கிக் கொடுத்தப் புடவையை ஏன் டி அவங்களுக்குக் கொடுத்த…?” என சீற

“கல்யாணத்துக்கு எல்லாருக்கும் டிரஸ் எடுத்துக் கொடுக்கனும்… உங்க தங்கச்சிக்கும் ஆத்தாவுக்கும் மட்டும் எடுத்துக் கொடுத்தீங்க…”

“அவ என்னை என்னைக்குமே விட்டுக்கொடுக்கல… ஆத்தா வயசானவங்க.. வயசில பெரியவங்க… அவங்களுக்கு என் மேல பாசம் ஜாஸ்தி… எனக்குப் பிடிச்சவங்க.. அதனால எடுத்துக் கொடுத்தேன்… மத்தவங்க யாரும் எனக்கு வேண்டாம்.. அதனால கொடுக்கல… போதுமா..?” என மெதுவாய் சொன்னாலும் மிளகு போல் காரம் குறையாமலே சொன்னான்.

மதுவோ அசராமல் “அந்த புடவை எனக்குக் கொடுத்திங்க… அத்தைக்குப் பிடிச்சக் கலர்… உங்களுக்குப் பிடிச்சவங்களுக்கு நீங்க கொடுத்தீங்க… எனக்குப் பிடிச்சவங்களுக்கு நான் கொடுத்தேன்” எனப் பதிலளிக்க

இப்படி இவர்கள் பேசுவதைப் பார்த்த மோகனா ஹரிணியிடம் ஏதோ சொல்ல, மேடையில் மதுவுக்கு அருகிலேயே நின்ற ஹரிணி குனிந்து ,

“மது.. இனி அண்ணா கூடத் தானே பேசப்போற நீ… இப்படி மேடையில் உட்கார்ந்து பேசக்கூடாதாம்… யாராவது எதாவது சொல்வாங்கன்னு சின்னத்த சொன்னாங்க…” எனக் கிசுகிசுக்க, மதுவும் சரியென்றாள்.

ராஜாவும் இவர்கள் பேசுவதைக் கேட்டு அமைதியாகி விட்டான். ஆனால் முகம் இன்னும் இயல்புக்கு வராமல் இறுக்கமாய் இருக்க, அதைக் கண்ட மதுவின் முகம் வாடிப்போக தீபன் இவற்றையெல்லாம் பார்த்திருந்தவன் ,

ராஜாவின் அருகில் வந்து, “பெரிய இவன் மாதிரி முறைச்சிட்டு இருக்காம கொஞ்சம் உன் ஆளைப் பாருடா அண்ணா.. எப்படி சோகமா இருக்காங்கனு… இதுக்குத்தான் நீ கல்யாணம் பண்றியா..?” எனச் சீண்டி விட

ராஜா தீபனை முறைத்து விட்டு மதுவிடம், “சிரி டி” என அதட்ட

அவள் முகம் அவன் அதட்டியதில் இன்னும் வாட, “சிரிடா மது…” என அவனுமே புன்னகையோடு சொல்ல அவள் முகம் மலர விகசிக்க, அவனுக்கும் அது நிறைவைத்தர அவன் முகமும் சீராகி சரியானது.

மேடைக்கு வந்த போதுதான் ஹம்சாவைப் பார்த்தான் தீபன். அவளை அலங்காரத்தில் பார்த்து அசந்துப் போனவன், அவளிடம் பேச நினைத்தான். ஆனால் இத்தனை பேர் இருக்கையில் பேசினால் தவறாகி விடும் என நினைத்தவன் கீர்த்தியிடம் ,
“ஏய்… கீகீ அந்த பொண்ணு அழகா இருக்கா இல்ல..” என ஹம்சாவைக் காட்டிச் சொல்ல

“ஆமா தீப்ஸ்….” என அவளும் ஆமோதிக்க

“அப்போ போய் நீங்க அழகா இருக்கீங்கன்னு சொல்லேன் டி… பொண்ணுங்களுக்குப் பாராட்டுற குணம் கிடையாதே…” எனத் தங்கையையும் சீண்டி விட,

“யாருடா எனக்கா இல்ல… இப்பப் பாரு..” என்றவள் ஹம்சாவிடம் சென்று ஏதோ சொல்லி வர, ஹம்சா தீபனை முறைத்துக் விட்டு பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

மீண்டும் அவனருகில் வந்த கீர்த்தியிடம் தீபன், “என்னடி வாலு சொன்ன.. அந்த பொண்ணு முறைக்கிறா?” எனக் கேட்க

“நான் நீங்க அழகா இருக்கீங்கன்னு எங்க அண்ணா சொன்னான்னு சொன்னேன் டா..” என நக்கலாய்ச் சொல்ல

“ஆமா அதானே உண்மை… சரியாத்தான் சொல்லியிருக்க… விடு… அவக் கிடக்குறா..” என அவன் அசராமல் அவளை அசரடித்தான்.

‘இவன் அந்த பொண்ணுக்கு ரூட் விடுறானோ…. பெரியண்ணா வீட்டை விட்டு போனப் பின்னாடி இவன் ரொம்ப மாறிட்டானே.. சிடுமூஞ்சி சினிச்சாமியா தானே இருந்தான்.. என்னன்னு கண்டுபிடிக்கனும் கீர்த்தி..’ எனத் தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
ரவிச்சந்திரன், சிவசந்திரன், கார்த்திக்கேயன் மூவருக்கும் சின்ன மகளின் திருமணம் சிறப்பாய் நடைப்பெறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. அவர்களுக்கு வேலையே வைக்காமல் தங்கையின் திருமணத்தின் முழுப்பொறுப்பையும் ஸ்ரீராமும் ஸ்ரீசரணுமே ஏற்றுக்கொண்டனர்.

இவர்கள் பொறுப்பாய் வேலை செய்வது கண்ட பெரியவர்கள் அத்தனை பேருக்கும் மகிழ்ச்சியே. கூடவே பெருமையும். இவர்கள் மட்டும் தான் வேலை செய்வார்களா என ஸ்ரீவத்சனும் திருவமுதனும் கூட அவர்களுக்கு ஒத்தாசையாய் இருந்தனர்.

வைரம், சுந்தர் ராஜன், ரவி, சிவா, கார்த்திக், சுலோச்சனா, மோகனா, பூம்பொழில் என அனைவரும் ஒன்றாய் ஒரே மேடையில் மணமக்களை சுற்றி நிற்க மங்கலமான சுப நாழிகையில் தாலிக் கட்டி மதுரவசனியை தன் மனைவியாக்கிக் கொண்டான் ராஜ் நந்தன்.

தாலிக் கட்டி முடித்தவுடன் மனைவியைக் கையை இறுகப்பற்றியவனின் மனதில் சொல்லவொண்ணாப் பெரும் நிம்மதி சுழ்ந்தது.

‘இனி தனக்காய் ஒருத்தி, தனிமையைப் போக்கவென, தாரமென வந்த நிம்மதி அவனுள் ப்ரவாகமாய் ஓடியது. அது அவனது முகத்தை அத்தனை நிர்மலமாய் நிம்மதியாய்க் காட்டியது.

மதுரவசனியின் கையை இறுகப்பற்றியவன் நேரே மேடையை விட்டு இறங்க, அனைவரும் அதிர்ந்துப் பார்க்க அவனோ கீழிறிங்கி வைதேகியின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க, சுந்தருக்கும் வைரத்துக்கும் மன நிறைவு என்றால் வைதேகிக்குப் பெருத்த சந்தோசமும் பெருமையும்.

அவர் பேரனை ஆரத்தழுவி ஆசிர்வாதம் செய்து மதுரவசனியிடம் ,
“நீ ரொம்ப கொடுத்து வைச்சவ ராசாத்தி.. இது மாதிரி புள்ள கிடைக்க நீ புண்ணியம் பண்ணிருக்கனும்.. என் பேரனைக் கண்கலங்காம வைச்சிருக்கனும்.. சீக்கிரமா எங்கக் குடும்பத்துக்கு ஒரு வாரிசைப் பெத்துத் தரனும்…” என்று வாழ்த்த அங்கே சிரிப்பொலி எழுந்தது.

ராஜாவுக்கும் கூட சிரிப்பு வர, அவனோ அதை இதழ்க்கடையில் தேக்கினான். அளவாக ஆழமாக ஒரு குறு நகை அவ்வளவே.. அதுவே அத்தனை வசீகரம்..!!

அவனது முகத்தில் உள்ள அமைதியும் அந்த வசிகர சிரிப்பும் வைரத்தின் மனதில் குளிர் பரப்பி அவர் முகம் பிரகாசித்தது.அவரது கண்களும் கலங்கி விட்டன. மகனின் திருமணம் அதுவும் அவன் விரும்பியே பெண்ணே மணமகளாய் வந்த மகிழ்ச்சி அவர்களுக்கு.

ஸ்ரீசரணோ, “என்ன ஆத்தா எங்க வீட்டுப் பொண்ணைக் கண்கலங்காம வைச்சிக்கச் சொல்லி உங்கப் பேரன் கிட்டச் சொல்லாம என் தங்கச்சிட்ட சொல்றீங்க..” எனக் குறைபட

உடனே கீர்த்தியோ அண்ணனுக்கு ஏதுவாக ,
“எங்க அண்ணா ரொம்ப ஸ்வீட்... அதான் எங்க ஆத்தா அப்படி சொல்றாவோ…” எனச் சொல்ல
 
ஸ்ரீசரண் ஏதோ சொல்ல வருவதற்குள், மதுரவல்லியிடம் ஆசிர்வாதம் வாங்க குனிந்தான் ராஜா. அப்போது மதுரவசனி மெதுவே ராஜாவின் காதில் கிசுகிசுப்பாய், “நீங்க மைசூர் பான்னு உங்க தங்கச்சி நினைக்கிறா நீங்க மிளகாய்ப் பஜ்ஜின்னு எனக்குத் தானே தெரியும்..” எனக் கிண்டலடிக்க

“என்னமோ என்னை டேஸ்ட் பண்ணவ மாதிரி சொல்ற… டேஸ்ட் பண்ணிட்டு அப்புறம் பேசுடி..” எனப் பதில் கொடுக்க ,

இவர்கள் வெகு நேரம் கீழே குனிவதைக் கண்ட ப்ரியா ,
“அக்கா… தூங்காம எந்திரிக்கா… மாமாவும் தூங்கியாச்சா..” எனச் சொல்ல அங்கே எல்லோர் முகத்திலும் புன்னகைப் பூவாய்ப் பூத்து மணம் வீசியது.

உடனே அவர்கள் எழுந்து கொள்ள, ராஜாவின் தலையில் கை வைத்து ,

“தம்பி… என் பேத்தி கொஞ்சம் கோவப்படுவா… சட்டுன்னு எதாவது பேசிட்டா மனசுல வைச்சிக்காதப்பா.. சின்னப் பொண்ணு.. பிடிவாதம் பிடிப்பா.. நீ பார்த்து சுதானமா வைச்சிக்கப்பா..” எனக் கரகரப்போடு சொல்ல

ஹரிணியோ ஸ்ரீராமிடம் மெதுவாய், “ஆத்தா என்ன வைச்சிக்க சொல்றாங்க..?” எனச் சொல்ல

“அப்படியே அர்த்தம் எடுக்காதடி ஹனி… எப்படி வைச்சிக்கிறது நான் நைட் சொல்றேன் “ எனக் கண்ணடித்தான்.

அதன்பின் மதுரவல்லியே, “உங்கப்பா அம்மா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குங்க தம்பி…” எனச் சொல்ல அவர் சொன்னபடியே செய்தனர். பின்னர் ரவிச்சந்திரன் – சுலோச்சனா, சிவச்சந்திரன் – பூம்பொழில், கார்த்திக்கேயன் – மோகனா தம்பதியர் அனைவரிடமும் விழுந்து ஆசிப்பெற்றனர்.

ஹரிணி மதுவிடம் கைக்குலுக்க, ஸ்ரீராம் ராஜாவைக் கட்டியணைத்து தன் வாழ்த்தைத் தெரிவித்தான். அப்படியே வீட்டின் அனைத்துக் குட்டீஸ்களும் வாழ்த்துத் தெரிவிக்க திருமண நிகழ்வுகள் இனிதே நடைப்பெற்றன.

அதன்பின்னர் மணமக்கள் மதுரவசனியின் வீட்டிற்குச் செல்ல, அங்கே பால் பழம் கொடுத்தப் பின்னர் இருவரையும் ஓய்வெடுக்க அனுப்பினர். அறைக்குள் சென்றதுமே மனைவியை அமரச் செய்து அவள் மடியில் தலை சாய்த்து வயிற்றில் ஆழப்புதைந்தான் ராஜா.

கணவனின் செயலில் கனிந்தவள், என்ன மாதிரி அதற்குப் பிரதிபலிப்பது என்று அறியாமல் யோசனையில் ஆழ, ராஜாவே வாய் திறந்தான்.

“நான் இப்போ எவ்வளவோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா மதும்மா… எனக்காக நீ.. என்னோட நீ.. எனக்கே எனக்கு மட்டுமா நீ.. இருக்க இந்த நிமிடம் அப்படியே செத்தா கூடப் பரவாயில்லன்னு தோணுது…” என்றவனிடம்,

“என்ன பேச்சு… இப்படி பேசின எனக்குக் கஷ்டமா இருக்கு…எழுந்திருங்க..” எனச் சொல்ல

“ப்ச்.. நான் அப்படித்தான் பேசுவேன்” என்றான் பிடிவாதமாய்.

அழுத்தம் அவனுள் பிறந்ததாயிற்றே வேறு வழியின்றி மதுரவசனி அமைதியாக இருக்க, ராஜா தொடர்ந்து பேசினான்.

“சொன்னா என்ன எல்லாம் ஒரு நாள் நடக்கப்போகறது தானே.. நம்ம சாதாரண மனுசங்க தானே… என்றும் பதினாறா இருக்க மார்க்கண்டேயனா.. ம்ம்…” என்று எதார்த்தமாகப் பேசுவதாய் நினைத்து மதுவின் மனதைப் பற்றிக் கவலைப்படாமல் பேச,

மதுரவசனிக்கு தாளாமல் கண்ணீர் வர, அதன் துளி தீண்டி எழுந்தவன் அவள் முகம் பார்த்து “அழாத மது” என்றான்.

அவளோ தேம்பித் தேம்பி அழ,

“அழாத மது… இத்தனை நாள் நீ எதுக்காக வேணும்னாலும் அழுதிருக்கலாம்.. ஆனால் என் மனைவி அழுதா அது எனக்கு அவமானம்.. எனக்கு நீ அதைத் தேடித் தர மாட்டேன்னு நினைக்கிறேன்” என்றான் அழுத்தமாய்.

அதில் அவளது அழுகை குறைந்தாலும் ‘என் மனம் நோகுமே என்று நினைக்காமல் அவனது கௌரவத்தைப் பற்றி தான் கவலைக் கொள்கிறான்..ப்ச்.’ என மனம் வலிக்கவே செய்தது.

அவளது கலங்கிய தோற்றம் கண்டவன், அவளை மெதுவாய் அணைத்து,

“மது நீ எனக்காக என் கூடவே இருக்கறது எனக்கு அவ்வளவு சந்தோஷம் தருது.. அதை நான் வெளிப்படுத்தினால் நீ சந்தோசப்படனும்.. இப்படி அழக்கூடாது… என்னோட சந்தோசத்தோட உட்சத்தை எப்படி வெளிக்காட்டனும்னு தெரியாம சொன்ன வார்த்தை.. இப்படி தொட்டாற்சிணுங்கியா இருக்காதே…” என்று சொல்ல அவள் சிணுங்க

“ நான் ஒன்னும் தொட்டாற் சிணுங்கி இல்ல..”

“இதோ தொட்டால் சிணுங்கிறியே மதும்மா…” என்றான் குழைவாய்.

அதில் அவள் மனக்கிலேசம் கொஞ்சம் குறைந்து விட, அவன் தோளில் ஆதரவாய் சாய்ந்தாள்.

அவளை அணைத்தவன், “நீ வாழ்க்கையில எனக்குக் கிடைச்ச கிஃப்ட் இல்ல மது.. வாழ்க்கையை நீதான்.. நீ அழுதா நான் அழற மாதிரி… இனி அழாவே கூடாது….” எனச் சொல்ல

“மாட்டேன்” என்றாள் அவள்.

அதன்பின் அவள் அலங்காரத்தைக் கலைக்கவென செல்ல, அவன் படுத்து உறங்கினான். அப்படி ஒரு உறக்கம்.

ஆழ்மனது அமைதியாக விட, ஆழ்ந்த உறக்கம் அவனுக்கு நிம்மதி மட்டுமே அவனுள். நிர்மலமான மனதோடு நித்திரையில் ஆழ்ந்தான் ராஜ்நந்தன்.

இரவும் வந்து சேர மிதமான அலங்காரத்தோடு அறையினுள் நுழைந்தாள் மதுரவசனி.

அவளைப் பார்த்து விட்டு ,

“மதும்மா.. ரொம்ப அழகா இருக்க நீ…” என்றான் அவள் அழகை ரசித்தபடி.

அவள் அமைதியாக நிற்க,

“மது சொன்னா கோச்சுக்காத… இன்னிக்கு உனக்கும் செம டயர்ட்… எனக்கும் தான்… எனக்குத் தூங்கனும் மது.. நல்லா தூங்கனும்.. உன்னைக் கட்டிப்பிடிச்சிட்டே தூங்கனும்… நிம்மதியா… எத்தனையோ நாள் எனக்காக யாருமில்லன்னு நினைச்சு நினைச்சே நான் தூங்காம இருந்திருக்கேன் மது… பட் இன்னிக்கு நான் நிம்மதியா நீ இருக்கேன்னு தூங்குவேன்” என ஆத்மார்த்தமாக சொல்ல, அவனின் நிலையுணர்ந்து ஆதரவாய் அவன் கைப்பிடித்தாள் மதுரவசனி.

“நீங்க என்ன சொல்றீங்களோ அப்படியே..” என அவள் சொல்ல அவளை அணைத்தவாறே அவன் உறங்கிப் போனான்.

இரவும் போனது. ராஜாவும் உறங்கிப் போனான். ஆனால் மதுரவசனிக்குத் தான் உறக்கம் வரவில்லை. அன்பானவன் தழுவலில் நித்திரைத் தூரப் போனது. மனதிலோ எண்ணங்கள் ஊர்வலம் போயின.

ராஜாவின் குணத்திற்கும் அவனது பிடிவாததிற்கும் அவன் இப்படி அமைதியாக உறங்குவதைக் கண்டு புதிராகத்தான் இருந்தது. அவளுக்குத் தெரியவில்லை, அவனின் காதல் சிற்றின்பத்தின் எல்லையைக் கடந்த பேரின்ப நிலையென்று..!!

உணர்ச்சிகளுக்கு மட்டுமே அடிமையாகாமல் உணர்வு பூர்வமாய் அவளை, அவள் உடல் அசதியைக் கருத்தில் கொண்டு அவன் செயல்பட்ட விதம் அவளைக் கவர்ந்தது. அது மட்டுமில்லாமல் அவளை அணைத்துக் கொண்டு படுத்தும் கூடக் கட்டுப்பாடோடு அவன் உறங்குவது கண்டு அவளுக்கு வியப்பே…!

ஆனால் அவனின் காதல் கட்டுப்பாடற்ற காற்றாற்று வெள்ளமென அதில் மூழ்கி தவித்து அவனை விட்டுப் பிரியும்போது அவள் உணர்வாள்.

அவன் காதலில் உடல் கடந்து உள்ளம் உணர்ந்து உன்னத நிலையை அடைந்தவன் என்பதை அவள் அறியவில்லை. அவன் ஆத்மார்த்தமான அவனை நேசிக்கும், அவனைப் பற்றி அக்கறைக் கொள்ளும் அவனுக்கே அவனான ஒரு உயிரைத் தான் தேடினான். வாழ்வின் அர்த்தம் தேடியவன் அது கிட்டியவுடன், அதுவும் எதிர்ப்பார்ப்பில்லா அன்பு செய்ய அவள் இருக்கும்போது அவனுக்கு நிம்மதியான நித்திரை சாத்தியமே. அதெல்லாம் அவள் உணரும் காலம் எப்போது…???

அவனோ கட்டுப்பாடோடு உறங்கி விட, இவள் மனமும் உடலும் கட்டவிழ்ந்த நிலையில் தவித்தாள். அவன் அருகாமை அவஸ்தையைத் தர அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. அவனை விலக்கி விட்டு தூங்கவும் மனம் வரவில்லை. அதனால் அப்படியே அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தவள் வெகு நேரம் கழித்தே உறங்கினாள்.

அடுத்த நாள் விடியலில் ராஜா எழுந்து குளித்து விட்டு ரெடியாகி இருக்க, மதுரவசனியோ ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். சூரியனின் ப்ளாஷ்லைட் மேலே பட்டு கண்கள் கூச எழுந்தவள் ஜம்மென்று ரெடியாகி இருந்த கணவனைக் கண்டு அவசரமாய் எழுந்தாள்.
“சீக்கிரமே எழுந்திட்டீங்களா…?”

“நீ லேட் மது” என்றான் இடக்காய். அவன் மீது ஒரு வார்த்தை சொன்னால் ஒப்புக்கொள்வான என்ன..??

அவள் அவனுக்குப் பழிப்புக்காட்ட, அவள் கைகளைப் பிடித்து இழுத்தவன், அவள் கன்னம் கிள்ளி

“நைட் நல்லா தூங்கியே இவ்வளவு நேரம் காலையில மேடம் தூங்குற.. நான் தினமும் திருப்பள்ளியெழுச்சி பாடனும் போலயே….ம்ம்..” எனக் கேட்க

“ப்ச்..போங்க.. இப்ப இரண்டு நாளா சரியா தூக்கமே இல்ல.. அதான்… இல்லன்னா நான் சீக்கிரமே எழுந்திருப்பேன்.. ஆமா நீங்க ஏன் வெளியே போகாம வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க..?”

“மங்குனி மனைவியே…. நீ இல்லாம எப்படி போறது.. உன்னைத் தூங்க வைச்சிட்டு நான் போனால் உனக்குத் தான் திட்டு விழும்…” என்று சொன்னவனைக் கண்டு அவள் புன்னகைத்து அவன் கன்னத்தில் கிள்ளி ,

“சூப்பருங்க நீங்க..” எனச் சொல்ல அப்போதும் அடக்கப்பட்ட புன்னகையைக் கொடுத்தவன் ,

“முதல்ல போய் குளிச்சுட்டு வா.. நான் வெயிட் பண்றேன்.. தனியாவெல்லாம் நான் போக மாட்டேன்.. நீ இல்லாம எனக்கு மத்தவங்க கூட ஒட்டுறது கஷ்டம்” எனச் சொல்ல அவளும் குளித்து விட்டு வந்தாள்.

அதன்பின் மறுவீட்டுக்கு இன்னும் இரண்டு நாள் கழித்து நல்ல நாள் இருப்பதால் மணமக்களை வரச் சொல்ல, ராஜாவுக்கு ரெகார்டிங் இருப்பதால் அவனால் அலைய முடியாது என்பது பொருட்டே இந்த ஏற்பாடு.

சுந்தரத்தின் குடும்பத்தினர் அனைவரும் கும்பகோணத்தில் உள்ள அவர்கள் பூர்வீக வீட்டில் தங்கியிருந்தனர். இவர்களும் அங்குதான் செல்வார்கள் என நினைத்த மதுவின் குடும்பத்தினர் ஸ்ரீராமையும் ஹரிணியையும் அவர்களைக் கொண்டு போய் விட்டு வரச் சொல்ல,

ராஜாவோ “எதுக்கு மாமா இதெல்லாம்.. அலைச்சல் தானே… நாங்களே போய்க்கிறோம்.. நாளைனைக்கு வந்துட போறோம்..” என மறுத்து விட்டான். ஆனால் அவர்கள் விடாமல் ஸ்ரீராமையும் ஹரிணியையும் அனுப்பி வைக்க. கும்பகோணம் வரை சென்றவன் வீட்டிற்குச் செல்லாமல் ஸ்ரீராமிடம் ,

“ராம்.. நானும் மதுவும் அப்படியே கொஞ்சம் வெளியே போகலாம்னு ப்ளான் பண்ணிருக்கோம்… சோ நீங்க உங்க கார்ல கிளம்பிடுங்க..” எனச் சொல்ல

“இல்ல…” என ஸ்ரீராம் மறுக்க

ஹரிணி தான், “ராம்.. அவங்க எங்காவது சுத்த நினைப்பாங்க.. சும்மா நச்சுப் பண்ணாதீங்க.. நீங்க தான் எங்கேயும் கூட்டிட்டுப் போக மாட்டீங்க.. புதுசா கல்யாணமானவங்க ஆசைப்படுறாங்க விடுங்களேன்..” என மெதுவாய் சொல்ல,

அவளை முறைத்து விட்டு, “சரிங்க மாப்பிள்ளை…” என்றபடி அவர்கள் சென்றனர். போகும் வழியில் ஸ்ரீராம் ஹரிணியை ,
“உன்னை… வீட்டுக்குப் போனா என்னை தாண்டி திட்டுவாங்க.. என்னமோ நான் வெட்டியா இருந்து உன்னை வெளியே அழைச்சிட்டுப் போகாத மாதிரி பேசுற… இப்ப இரண்டு பேரும் படத்துக்குப் போறோம்… ஆனால் வீட்டுல போய் அந்த படம் நான் பார்த்தேன் அப்படி இப்படினு உளறி வைச்ச உப்புக்கண்டம் போட்டு மொட்டை மாடியில காய வைச்சிடுவேன் உன்னை…” என்று மிரட்டி விட்டு படம் பார்க்க அழைத்துச் சென்றான்

ராஜா முதலில் மதுரவசனியை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றவன் பின்னர் கும்பகோணத்தில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் அறையெடுத்து அதுவும் ஹனிமூன் சூட் புக் செய்து தங்கினான்.

அறைக்குள் நுழையும் வரை அமைதிக்காத்த மங்கையர் திலகம் அதன் பின் ,

“அப்படி என்ன உங்களுக்கு…. நம்ம வீட்டுக்குப் போகாம இங்க ஏன் வந்தோம்..?” எனக் கத்த

“அது நம்ம வீடு இல்ல. மது நம்ம வீடு சென்னையில இருக்கு… இப்ப கூட நான் உண்மையை சொல்லியிருக்கலாம்.. ஆனால் உங்க வீட்டு ஆளுங்க கஷ்டப்படக்கூடாதுன்னு தான் நான் சொல்லல… அதே மாதிரி நீயும் என்னைக் கஷ்டப்படுத்தக் கூடாது.. இரண்டு பேரும் ஜாலியா ஊரைப் பார்க்கிறோம்.. மறுவீடு போறோம்… தென் சென்னை தான்.. அங்கே போய் நான் வாங்கின நம்ம வீட்ல நம்ம லைஃபை நெக்ஸ்ட் ஸ்டேஜ்க்குக் கொண்டு போகலாம்..சரியா..?”

அவனிடம் வாதாட மதுவுக்கு விருப்பமில்லை.. மீறி வாதாடினால் இணக்கமாக இருக்கும் இந்நிலை நீடிக்காது என அவளுக்குத் தெரியும். எதாவது பேசப்போய் அவன் அவள் வீட்டினரிடம் கோவப்பட்டால்.. அதனால் சரி என்று அமைதியாக விட்டாள். அவனிடம் சொல்லி விட்டு வைரத்திடம் போன் செய்து தாங்கள் வரவில்லை என்று சொன்னாள்.

அதன்பின் நிமிடத்தில் சென்ற இரு நாட்களும் ராஜா மதுவை ராணி போல் பார்த்துக் கொண்டான்.

அடுத்த நாள் மறுவீடு சென்ற இட த்தில் தான் யாரும் எதிர்ப்பாரா வண்ணம் அந்த அசம்பாவிதம் நடந்தது.

ஆட்டம் தொடரும்..!!!
 
Top