Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் மண்ணில் விழுந்த நட்சத்திரம் அத்தியாயம் 4

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 4
இறைவனின் வித்தியாசமான விளையாட்டை அறிந்தவர் யார்?
காலையில் துக்கம். இரவில் சந்தோஷம். செண்பகம் இடிந்து போய் உட்கார்ந்திருந்தாள்.
விஷயம் கேள்விப்பட்ட குப்பம் மறுபடியும் 'அச்சச்சொ' என்று சூள் கொட்டி விட்டு அன்றைய பாடை பார்க்க கிளம்பி விட்டது. ராக்காயி தான் அன்று வேலைக்குப் போகாமல் ஆறுமுகத்திற்கு தலைக்கு தண்ணீர் விட்டு புதுத் துணி வாங்கி போட்டு விட்டு குடிசையின் மூலையில் உட்கார்த்தி வைத்து விட்டு தன் வீட்டிற்குச் சென்று தன் ஒரே சொத்தான ரெண்டு பவுன் செயின் ஒன்றை எடுத்து வந்து ஆறுமுகத்தின் கழுத்தில் போட்டு அழகு பார்த்தாள்.
'இதெல்லாம் எதுக்கு ராக்கு?' என்று செண்பகம் முனக, 'எனக்குத்தான் புள்ளயே இல்லயே. யாருக்கு போட்டு அழகு பாக்க?' என்று கூறிவிட்டு ஆறுமுகத்தின் முகத்தை தன் கையால் சுற்றினாள்.
'எங்கண்ணே பட்ரும்போல இருக்கு. எவ்ளோ அழகா சினிமா ஸ்டார் மாதிரி கீரா ஒன் பொண்ணு... எவன் வந்து கொத்திட்டு போப்போறானோ?'
'ம்கும் அது ஒண்ணு தான் கொறச்சல்.. இவளா பாத்து ஓடிப் போனாத்தான் உண்டு. அல்லது எவனாவது வந்து நக போட்டு கட்டிட்டு போனாத் தான் ஆவும். இனி நான் என்ன செய்யப் போறேன்..இப்படி அம்போன்னு விட்டுட்டு போயிட்டாரே.. என்ன பண்றது?..' மூக்கை சிந்தி சேலை முந்தானையில் துடைத்து விட்டு மறுபடியும் புலம்பினாள் செண்பகம்.
'இந்த வயித்துப் புள்ள எப்ப எறங்கறது? அது பய்யனோ புள்ளயோ? ஆறு மாசமாது ஆவுமே.. இவள வேலைக்கு அனுப்பலாம்னு பாத்தேன். இவளும் இப்படி உக்காந்திட்டா.. மூத்தவன் ஒரு பைசாவுக்கு ப்ரயோஜனமில்ல...எப்படி இந்த புள்ளைங்களுக்கு சோறு போட்டு காபந்து பண்ணி கல்யாணம் முடிச்சு வச்சு.. நெனக்கறப்பவே தல சுத்துதே.'
'ஏ சும்மா கெட.. அதது அப்பப்ப நடக்கும். மாரியாத்தா மனசு வெச்சா எல்லா தும்பமும் ஓடிப் போயிறாதா.. நீ தான் இனி குழந்தைங்களுக்கு எல்லாம். அதனால.. நீ இடிஞ்சு போகாம இரு. அப்பத்தான் இதுங்க பொழச்சுக்கும்.'
ராக்காயி சொன்னது உரைக்க, செண்பகம் சிறிது நேரம் அமைதியாய் இருந்தாள். ஆறுமுகம் வெறிச் என்று உட்கார்ந்திருந்தாள். கண்ணில் நேற்று கண்ட உருவம் வந்து நின்றது. அவன் எதற்கு தன்னை தூக்கினான் என்பது இப்போது புரிந்தது. நல்ல வேளை இது வந்ததால் தப்பினோம்.. இல்லாவிட்டால்... நினைக்கவே நெஞ்சு நடுங்கியது.
அதெல்லாம் மனுஷன் இல்ல... மிருகம். திடீரென்று செவ்வந்தி நியாபகம் வந்தது.
'அம்மா செவ்வந்தி எங்க?'
அவள் பக்கம் திரும்பிய செண்பகம் 'ராக்காயி வீட்டுக்கு போயிருக்கா அவளும் சிவாவும். ராஜா வேப்பமரத்துக்குக் கீழ வெளயாண்டிட்டிருக்கான். ஏண்டி?' என்றாள்.
என்ன சொல்வது என்று யோசித்த ஆறுமுகம் சட் என்று 'இல்ல சிவாவ பாக்கணும் போல இருக்கு. எப்பவும் கூடயே இருப்பான் இல்ல. கொஞ்சம் செவ்வந்திய கூட்டிட்டு வரச் சொல்றியா?' என்று சமாளித்தாள்.
உடனே ராக்காயி 'ஏ செவ்வந்தி' என்று அலறினாள்.
'ந்தா வந்துட்டென்கா' என்று கத்திக் கொண்டே ஒக்கலில் சிவாவுடன் வந்தாள் செவ்வந்தி. அவளைப் பார்த்ததும் டக் என்று பெருமூச்சு விட்டு பின்பு அவளை அழைத்தாள் ஆறுமுகம்.
'இங்க வா. அவனத் தா.'
உடனே ராக்காயி 'இங்க பாரு ஆறு. ஒரு நாலு நாள் போட்டும். அப்புறம் அவன தொடலாம்.' என்றாள்.
'அக்கா பேச்சுத் தொணைக்கு இவங்க ரெண்டு பேரும் எங்கூடயே இருக்கட்டுமே'
'வேண்டாம். இங்க எடம் பத்தாது. நான் அவங்க ரெண்டு பேரயும் என் வீட்டுக்கு கூட்டிட்டு போயிறேன்.'
அதிர்ச்சியானாள் ஆறுமுகம்.
'வேண்டாங்கா. எனக்கு பயமா இருக்கு. ஒங்க வீட்ல இருக்றப்ப தான் கனவு வந்து யாரோ கூப்ட மாதிரி இருந்து.. காட்டுக்கு போனேன். மயங்கினது தான் தெரியும்.. செவ்வந்தி தூங்கினா எந்திருக்கவே மாட்டா. சிவா எடய்ல எடய்ல பயந்து கத்துவான். அவன் முதுக தட்டிகுடுத்தா தூங்கிருவான். இங்கயே ரெண்டு பேரும் இருக்கட்டுங்கா.' என்று கெஞ்சும் தோரணையில் கேட்டாள்.
'சரி. இங்க படுக்ற முத்தம்மா பாட்டிய என் குடிசைக்கு வரச் சொல்லிரு.' நான் நாளைக்கு வேலைக்கு போணும். ஜாக்ரதயா இருந்துக்க.. இனி நைட் எல்லாம் தனியா வெளில போகக் கூடாது. அம்மாவயோ என்னயோ கூப்டுட்டுத்தான் போணும். தெரிஞ்சுதா?'
'சரிக்கா'
'செவ்வந்தி! அக்காவ ரெண்டு நாள் தொடக் கூடாது. சிவாவயும் பக்கத்துல வுடாத. சரியா. எதுனாலும் என்ன கூப்டு.' என்று விட்டு ராக்காயி நகர, செண்பகம் அவளை கூப்பிட்டாள்.
'ராக்கு. இந்தா அந்த செயின வாங்கிட்டுப் போயிரு.'
'இருக்கட்டும் செண்பகம். ரெண்டு நாள் கழிச்சு வாங்கிக்கறென்.'
ராக்காயி கிளம்பி விட்டாள்.
பின்னர் ஒவ்வொருவராய் துக்கம் விசாரித்ததோடு ஆறுமுகத்தையும் பார்த்து விட்டு செல்ல, மூன்று நாட்கள் போனதே தெரிய வில்லை.
நாலாவது நாள் குளித்து விட்டு வந்த ஆறுமுகம் மள மள என வீட்டு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.
அடிபம்பில் நீர் அடிக்கும் சமயம் தூக்கி செருகப்பட்ட பாவாடைக்குக் கீழே அவளது சிவந்த கெண்டைக் கால்கள் தெரிய குப்பத்து இளவட்டங்கள் அதைப் பார்த்துக் கொண்டே நகர சட் என்று பாவாடையை இறக்கி விட்டு தாவணியை நன்கு இழுத்துக் கொண்டாள் ஆறுமுகம்.
தண்ணீர் குடம் நிறைவதைப் பார்த்துக் கொண்டிருந்த செவ்வந்தி, 'அக்கா! ஒனக்கு ஒண்ணு தெரியுமா? நம்ம குப்பத்து பக்கத்துல இருக்கற மாரியாத்தா கோயில்ல சினிமா சூட்டிங் எடுக்றாங்களாம். கணேஷ், உமாதேவில்லாம் வந்திருக்காங்களாம். கணேஷ் சினிமால பாக்ற மாதிரியே இருக்றாராம். அண்ணன் சொல்லிச்சி. நம்மளும் சூட்டிங் பாக்க போலாமாக்கா?' என்றாள்.
'சும்மாருடி. நானே மதிய சாப்பாட்டுக்கு கொஞ்சம் அரிசி தான இருக்கு. கஞ்சி வைக்கலாமா வேண்டாமான்னு யோசிச்சிட்டு இருக்குறேன். நீ வேற..'
ஆனாலும் மனசுக்குள் கணேஷைப் பார்க்கும் ஆசை வந்தது. சதுர முகம், நீளமான மூக்கு, கெட்டியான மீசை, பெண்களுக்கு இருக்க வேண்டிய குளம் போன்ற கண்கள். எந்தப் பெண்ணுமே மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் உருவம். மரத்தைச் சுற்றி ஹீரோயின் பின்னால் ஓடினால் பெண்கள் உள்ளம் உருகும். வில்லன்களைப் பந்தாடும்போது விசில் பறக்கும். தாய்ப் பாசத்தால் துடிக்கும் போது கிழவிகள் சீலையை எடுத்து மூக்கை சிந்திக் கொள்வர். தியேட்டரில் கணேஷைப் பார்க்கவே ரொம்ப கஷ்டம். படம் வந்தால் ஒரு பத்து நாள் கூட்டம் அலை மோதும். சின்ன டிக்கெட் கவுண்டரில் ஒரு பத்து பன்னிரண்டு கைகள் டிக்கெட்டுக்காக கத்தும். தியேட்டரின் ஸ்க்ரீன் முன்பக்க சீட் கிடைத்தால் கூட தலையை உயர்த்திப் பார்க்க கூட்டம் ரெடியாய் இருக்கும். பத்து நாளுக்குப் பிறகே கூட்டம் மெல்ல குறைய ஆரம்பிக்கும். அதுவும் கதை, பாடல்கள் நன்றாக இருந்தால் இன்னும் பத்து நாட்களுக்கு கூட்டம் குறையாது.அப்பா ஓரிரு படங்கள் கூட்டிப் போயிருக்கிறார்.
சிவாவை ஒக்கலில் இடுக்கிக் கொண்டு முழுப்படமும் நின்று கொண்டே கூட பார்த்திருக்கிறாள் ஆறுமுகம்.
அப்படித் திரையில் பார்த்த கணேஷை நேரில் தூரத்தில் இருந்து பார்த்தால் கூட நன்றாய் இருக்கும் தான். ஆனால் வீட்டு வேலை?
'ஆறுமுகம்!'
அண்ணனின் சப்தம் கேட்க திரும்பினாள்.
'ஒரு நல்ல ட்ரெஸ் போட்டுட்டு கெளம்பு. நம்ம ஊர்ல சூட்டிங் நடக்குதுல்ல. இன்னும் ஒரு மாசம் சூட்டிங்காம். எல்லாரும் பக்கத்து ஊருல வீடு பாத்து தங்கிருக்காங்களாம். அங்க கழுவ, பொறுக்கன்னு ஆளு தேவப்படுதாம். அதான் ஒன்ன அனுப்பலாமேன்னு பாத்தேன். அம்மாட்ட கேட்டேன். இன்னும் ஒரு பத்து நாள் போயி வேலக்குப் போலாமேன்னு சொல்லிச்சு. நான் தான் அத்தன பேரும் சாப்டணுமேன்னு சொன்னென். நீ என்ன சொல்ற ஆறுமுகம்?'
ஆறுமுகத்திற்கு சந்தோஷம் வந்தது. ஆஹா! ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்! எப்படியும் கணேஷ் கண்ணில் படுவார். பக்கத்தில் இருந்தே பாக்கலாம். சம்பளமும் கிடைக்கும். வீட்டில் அடுப்பில் பூனை உறங்காது. எல்லாரும் ரெண்டு வேளை சாப்டலாம்.
உடனே தலை ஆட்டினாள்.
'டக்னு கெளம்பி வா. ஒன்ன அவங்களுக்கு அறிமுகப்படுத்திட்டு நான் பாம்பே போணும். அங்க அஞ்சு மாசம் வேல. அப்பா விசேசத்துக்கு தான் அப்புறம் வருவேன். நீனே பஸ் ஏறி பக்கத்து ஊருக்குப் போயிருவேல்ல?'
'போயிருவேன்னே.'
'அப்டின்னா அஞ்சு நிமிஷத்துல ரெடி ஆயி முக்குல இருக்ற டீக்கட கிட்ட வந்துரு.' என்று சொல்லி விட்டு அவன் நகர, அவள் அடிபம்ப் வேலயை செவ்வந்தியிடம் கொடுத்து விட்டு வந்தாள்.
கண்ணாடி முன் நின்று போட்டிருந்த தாவணியை உருவி விட்டு பாவடை ஜாக்கெட்டிற்கு மேச்சாக ராக்காயி அக்கா தந்திருந்த இன்னொரு தாவணியை எடுத்து போட்டுக் கொண்டாள்.
முகத்திற்கு பவுடர் போடுவதை அவள் விரும்புவதில்லை. துண்டால் நங்கு முகத்தை துடைத்து விட்டு சாந்துப் பொட்டை சின்னதாய் வைத்துக் கொண்டு ரெட்டை ஜடையில் ஒன்றை முன் பக்கமாய் விட்டு மற்றொன்றை பின்பக்கம் தொங்க விட்டாள். கண்ணாடியின் முன் நின்று அப்படி ஒரு முறை இப்படி ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டு அம்மாவிடம் சொல்லி விட்டு டீக்கடை நோக்கி விரைந்தாள். மனம் சந்தோஷத்தில் மிதந்தது.
ஆனால் அன்று தன் வாழ்வே வேறு திசை நோக்கி போவப் போவதை பாவம் அவள் அறிந்திருக்க வில்லை.

(தொடரும்)
 
Nice epi.
Who is tht culprit??
so this small girl is going to be an actress???
Nice story but make feel very sad.
 
அண்ணன் சினிமாகாரர்களிடம் வேலைக்கு விடறான் அங்கு என்ன ஆகுமோ
Very interesting update
 
அண்ணங்காரன் என்ன
கந்தர கோலம் பண்ண
கூப்புட்டு போறான்
 
Top