Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் மண்ணில் விழுந்த நட்சத்திரம் அத்தியாயம் 6

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 6

'நீ தான் வேண்டும்' என்று கணேஷ் சொல்லவே அதிர்ந்த ஆறுமுகம் தனக்கு காதில் சரியாக விழுந்திருக்காது என்ற நினைப்பில் 'நான் வரேனகயா' என்று மெல்ல சொல்லிக் கொண்டு நகர முயல, கணேஷின் கை அவளது கையைப் பற்றியது. ஆறுமுகத்திற்கு ஜில் என்று இருந்தது. உமாதேவியோடு டூயட் பாடி அவள் கரத்தைப் பற்றும் கணேஷின் கை அவள் கையைப் பற்றுகிறது.காலில் இருந்து தலை வரை ஒரு மின்சார அலை அடித்தது. திடீரென்று அவள் வயசுக்கு வந்ததும் ராக்காயி அக்கா காதோரமாய் சொன்ன வார்த்தைகள் நியாபகம் வரவே, கையை இழுத்துக் கொண்டாள்.
'எனக்கு ஒன்ன ரொம்பப் புடிச்சிருக்கு. ம்ம்.. ஒம் பேரென்ன?'
கணேஷின் முகத்தை மறுபடியும் பார்த்தாள் ஆறுமுகம்.
தமிழகப் பெண்களைப் பித்து பிடிக்க வைக்கும் முகம். நல்ல கலர். கவர்ந்திழுக்கும் சிரிப்பு. நாலாவது குடிசையில் பீடி சுற்றும் கண்ணம்மா அக்கா இவர் படத்தை ஜாக்கெட்டுக்குள் வைத்து அடிக்கடி எடுத்து முத்தம் கொடுப்பதை இவள் கவனித்திருக்கிறாள். அப்பேர்பட்ட ஆள் தன்னைப் பிடிப்பதாக சொல்வதா?
'ஐயா..'
'ஐயாவா? எனக்கு என்ன வயசாயிடுச்சு? இன்னும் டூயட் தான் பாடிட்டு இருக்கேன். தெரியாதா? இப்ப கூட ரிலீஸ் ஆன மாணவர் சக்தி படத்துல காலேஜ் ஸ்டூடண்டாதான் நடிச்சு அது 100 நாளத் தாண்டி ஓடுது.'
ஆறுமுகம் பேச்சை மாற்றினாள்.
'வீட்ல அஸ்வினி அம்மா நல்லா இருக்காங்களா? குழந்தைங்க சஞ்சய்காந்தும் சுபலக்ஷ்மியும் நல்லா இருக்காங்களா?' என்று கேட்டவாறே மெதுவாய் கதவை நோக்கிப் போனாள்.
'பரவாயில்லயே. என் ஃபாமிலி பத்தி தெரிஞ்சு வச்சிருக்க? எல்லாரும் நல்லா இருக்காங்க. ஆனா நான் தான் நல்லா இல்ல.'
ஓ! ஒடம்புக்கு சரி இல்லாதனால தான் 'பிடிச்சிருக்கு'ன்னு ஒளறினாரோ?
'ஒடம்புக்கு என்ன? ஏதாவது கஷாயம் போட்டு கொண்டு வரட்டுமா?'
கணேஷ் சிரித்தார். 'அதெல்லாம் வேண்டாம். எனக்கு மருந்தே நீ தான்.'
ஆறுமுகம் பதறினாள்.
கணேஷ் சட் என்று அவள் கையைப் பற்றினார். இந்த முறை பிடி இறுக்கமாய் இருந்தது.
'எனக்கு என்ன இல்லன்னு நெனக்கிறியா? எல்லாமே இருக்குது தான். சிங்க்ப்பூர்ல காபி, மலேசியால இட்லி, லண்டன்ல சாப்பாடு, ராத்திரி டிபன் அமெரிக்காலன்னு வாழ்க்கை நல்லாதான் போயிட்டுருக்கு. தேவைக்கு மேல பணம், ரசிகர்களோட பாசம், நெறய பெண்கள், சொத்து, சுகம் அப்படின்னு கெடக்காததே இல்ல. என் கால்ஷீட்டுக்கு காத்திருக்குறாங்க ப்ரடியூசர்ஸ். என்ன ஒரு தடவயாவது பாக்கணும்னு துடிக்கிறாங்க ரசிகர்கள். அதுவும் நெறய பெண் ரசிகர்க கனவுல எனக்கு கண்டிப்பா இடம் உண்டு. ஆனா என் கிட்ட வர பெண்கள் எல்லார்ட்டயும் உண்மை இல்ல. பொண்டாட்டியே அதான் சொன்னியே அஸ்வினி என்ன எந்த விதத்லயும் கவனிக்க மாட்டா. ஹாய் டார்லிங்னு கைய வீசிட்டு ஷாப்பிங் அப்புறம் அவ அம்மா ஃபாமிலியோட ஊர் ஊரா சுத்த போயிருவா. ஒரு நாள் புதுசா இப்ப வந்திருக்கிற சின்ன பையன் நடிகர் விஸ்வா கூட என் பெட் ரூம்ல சல்சா பண்ணி இருக்கா. பார்ட்டி, டூர்னு அவ எஞ்சாய் பண்றா. குழந்தைங்க ரெண்டும் ஊட்டி கான்வெண்ட்ல. வீட்ல வெறும. சாப்பாடு, டிபன் எல்லாம் வேலக்காரிங்க தான். மடியில வந்து விழுற எல்லா நடிகைங்களும் அடுத்த படத்துக்கு ஜோடியாகணும்னு எதிர்பார்ப்புல என் மேல வந்து விழுறாங்க. போலி.. போலி.. எல்லா எடமும் போலி.. போலியா சிரிச்சு போலியா அணச்சு போலியா கூட படுத்து.. அப்புறம் தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன். எப்படியும் எல்லா பெண்களும் ஒரு எதிர்பார்ப்போட தான் என் கூட பழகுவாங்க. அதுக்கு நாமளே துட்டு குடுத்து தேர்ந்தெடுத்துட்டா அட்லீஸ்ட் ஃப்ரெஷ் பீஸா கிடைக்குமேன்னு இப்படி கை படாத ரோஜாவா முகர ஆரம்பிச்சிருக்கேன். ம்... இதோட டேஸ்ட்டே தனி.' என்ற கணேஷின் மூஞ்சியில் காரித் துப்பினாள் ஆறுமுகம்.
'சே! ஒன்ன ஜனங்க எப்படி நம்பி இருக்காங்க? நீ வர காட்சிய பாக்க தவம் கெடக்குறாங்க. நீ என்னடான்னா இவ்ளோ கெட்ட புத்தி ஆளா இருக்கியே? ஒன்ன எனக்கும் புடிக்கும் தான். ஆனா இப்ப ஒன் மூஞ்சி தான் ஒலகத்துலேயெ அசிங்கமான மூஞ்சியா எனக்குத் தெரியுது. கைய விடு. இல்ல கத்தி ஊர கூப்டுருவேன். நான் ஏழ தான். ஆனா மானம் மரியாதய உசிரா பாக்றவங்க.' இப்படி பேசி பழக்கம் இல்லாத ஆறுமுகத்திற்கு மூச்சு வாங்கியது.
'இந்த பார்ரா. நீ கோபப்படுறப்ப இன்னும் அழகா இருக்ற?' என்று சிரித்தான் கணேஷ்.
'அப்டியா. என் கையால வாங்கற அடி இன்னும் அழகா இருக்கும்' என்றபடி மற்றொரு கையை வீச முயல அதை லாவகமாய் பற்றிய கணேஷ், 'என்ன சொன்ன? கத்துவேன்னா? இங்க நீ கத்துனா பக்கத்து ரூமுக்குக் கூட கேட்காது. பக்கத்துல வீடு இருந்தாத்தானே. சுத்தியும் காடு. இருக்றது எல்லாம் என் ஆளுங்க.'
ஆறுமுகம் மிரண்டாள். நிலைமை உரைத்தது. இருந்தும் கத்தினாள். 'காப்பாத்துங்க.. விடு. விடுடா. நாயே!'
அவள் கைகளை விட்டவன் அவளை கன்னத்தில் ஓங்கி அறைந்தான். அவள் வெலவெலக்கவே அவளை அப்படியே தூக்கி பெட்டில் போட்டான். அது ஃபோம் பெட். பஞ்சு போல இருந்தது. பொத்தென்று அவள் மேல் குதித்து அவளது தாவணியை எடுத்து வீசினான்.
அவள் கைகளால் மேலே மறைத்துக் கொண்டு குப்புறப் படுத்து கத்தினாள்.
'யாராவது காப்பாத்துங்களேன். ஐயோ யாரும் இல்லயா இங்க? டேய் எங்க அண்ணனுக்குத் தெரிஞ்சுது ஒன்ன கண்டந்துண்டமா வெட்டி போட்ருவாண்டா.'
அவள் இடுப்பை வளைத்த கணேஷின் முகம் அவள் முகத்தின் அருகில் வந்தது. அவன் சூடான மூச்சு அவளின் கன்னத்தில் பட்டது.
'என்னது அண்ணனா? யாரு ஒன் கூட வந்தானே அவனா? அவன் ஒரு பொம்பள ப்ரொக்கர். ஒன்ன இங்க வந்து தள்ளி கீழ ராஜேஷ்ட்ட ஒரு லக்ஷ ரூபா வாங்கிட்டு இன்னேரம் பம்பாய் பறந்து இருப்பான்.' சொல்லி விட்டு அவளது ஜாக்கெட்டை கிழித்து வீசவே ஆறுமுகம் அதிர்ந்தாள்.
அண்ணெ..என்னது இவன் சொல்றது எல்லாம் நெஜமா? எங்கியாவது கூட பொறந்த அண்ணனே இப்படி கூட்டி குடுப்பானா? மனம் அந்த அதிர்ச்சியில் உறைய வலியில் கத்தினாள் ஆறுமுகம். மனதில் சமீபத்தில் பார்த்த கணேஷ் படத்தில் வில்லன் கற்பழிக்க முயலும் ஒரு ஏழைப் பெண்ணை கணேஷ் காப்பாற்றும் காட்சி ஏனோ நியாபகம் வந்தது.

(தொடரும்)
 
Top