வரம் 24

Advertisement

Writer girl

Well-known member
Member
இங்கே ஜோசியரின் முன்னால் மிகுந்த எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தார்கள் சஹஸ்ராவின் பெற்றோர், மகிழம்பூவனின் தந்தை மற்றும் வண்ணமதியின் மாமனார், மாமியார்.

அவர்களைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு,”ஒரு நிச்சயத்துக்கு இத்தனைப் பேர் நாள் குறிக்க வந்திருக்கிறதை இப்போ தான் பார்க்கிறேன்”என்றுரைத்து விட்டு,

“மாப்பிள்ளைப், பொண்ணோட ஜாதகங்களை மேலோட்டமாகப் பார்த்தேன். ரொம்பவே பொருத்தமான ஜாதகங்கள். இவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வச்சா எப்பவுமே பிரியவே மாட்டாங்க! அப்படியும் ஏதாவது பிரிவு வந்தாலும் கூட இவங்களை யாரும் சேர்த்து வைக்கனும்னு அவசியமே இல்லாமல் இவங்களே ஒருத்தருக்கு ஒருத்தர் சமாதானம் அடைஞ்சு சேர்ந்துக்குவாங்க! அப்படிப்பட்ட பொருத்தங்கள் இருக்கிற ஜாதகங்கள் தான் இது ரெண்டும்!”என்று அவர்களிடம் கூறவும்,

அதைக் கேட்டதும் ரமணன், கஸ்தூரி மற்றும் பால்ராஜ்ஜிற்குத் தங்களது பிள்ளைகளின் கல்யாணத்தை நினைத்து இனிமேல் கவலைப்படத் தேவையே இல்லை என்று பூரிப்புடன் தாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

அதேபோல் தாங்களும் அவர்களைப் பார்த்து மகிழ்ந்து போயினர் ஆறுமுகம் மற்றும் முல்லைக்கொடி.

“ரொம்ப சந்தோஷமான சேதியைச் சொல்லி இருக்கீங்க சாமி!”என்று அவருக்கு நன்றி தெரிவித்தார் பால்ராஜ்.

“நீங்க எங்கிட்ட நாள் குறிக்கத் தான் வந்தீங்க. ஆனால் இந்த ரெண்டு ஜாதகத்தோட பொருத்தத்தைப் பார்த்ததுமே அதையும் உங்ககிட்ட சொல்லத் தோணுச்சு. அதான்,, சொல்லிட்டேன். இதோ இப்போ நிச்சயத்துக்குத் தேதி குறிச்சுத் தர்றேன்”என்று அந்த வேலையில் மூழ்கி விட்டார் ஜோசியர்.

“நாம இனிமேல் நம்ம சஹா, மகிழோட கல்யாணத்தைப் பத்தியும், அவங்களோட வாழ்க்கையைப் பத்தியும் நினைச்சுப் பயப்படவே தேவையில்லாத மாதிரி தான் அவங்க ஜாதகமும் அமைஞ்சிருக்குப் பாரும்மா”என்று தன் மனைவியிடம் ஆனந்தத்துடன் பகிர்ந்து கொண்டார் ரமணன்.

அதை ஒப்புக் கொள்ளும் விதமாக,“ஆமாங்க. இதுக்கெல்லாம் காரணம் நம்ம மல்லிகா தான்! அவளோட ஆசீர்வாதம் இவங்க ரெண்டு பேருக்கும் இருக்கிறதால் தான் ஜாதகமும் பொருந்திப் போயிருக்கு”என்று மகிழ்வுடன் கூறினார் கஸ்தூரி.

அவர்களது உரையாடலைக் கேட்டதும் தானும் தனது மனைவியை எண்ணி நெகிழ்ந்து போய் விட்டார் பால்ராஜ்.

அதைக் கவனித்து விட்டு அவரது கரங்களை ஆதரவாகப் பற்றி விடுவித்தார் ஆறுமுகம்.

சில நிமிடங்கள் கழித்து,”நாள் குறிச்சாச்சு. இந்தாங்க”என்று ஒரு தாளை அவர்களுக்குக் கொடுக்கவும்,

அதை வாங்கிப் பார்த்து விட்டு நிச்சயத்திற்கு இன்னும் ஒரு இரண்டு மாதங்கள் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டதும்,

“நன்றி சாமி”என்று கூறி அவருக்குப் பணத்தைக் கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள் பெரியவர்கள்.

“இப்போ தான் ரொம்ப நிம்மதியாக இருக்கு! இனிமேல் அவங்க சண்டையில் நாம யாரும் தலையிட்டுக்க வேண்டாம். அதை அவங்களே சரி பண்ணிக்கட்டும்”என்றுரைத்து விட்டார் கஸ்தூரி.

“ஆமாம்மா. ஆனால் எல்லாரும் நான் சொல்வதைக் கேட்டுக்கோங்க. இந்த ஜாதகப் பொருத்த விஷயத்தை அவங்க யார்கிட்டேயும் சொல்லாமல் இருக்கிறது தான் எல்லாருக்குமே நல்லது!”என்றிருந்தார் முல்லைக்கொடி.

“ஏன்ங்க?”எனக் கேட்டார் ரமணன்.

“ஏன்னா, அவங்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சிட்டா ரொம்ப சுளுவாகப் போயிடும். நாம தான் எப்பவும் பிரியப் போறது இல்லையே? அப்பறம் என்ன? நீ உன் வேலையைப் பாருங்க, நான் வேலையைப் பார்க்கிறேன்னு ரெண்டும் ஆளுக்கொரு பக்கம் போயிருங்க! அதனால் தான் இப்படி சொல்றேன்”என்று அனைவருக்கும் விளக்கம் அளிக்க,

“ஆமாம். அவங்க சொல்வதும் சரி தான். நம்மப் பிள்ளைங்களுக்கு உறவோட அர்த்தமும், மதிப்பும் புரியனும்! அவங்களுக்குள்ளே எப்போ சண்டை வந்தாலும் அதை நாமப் பெரியவங்க சேர்ந்துப் பேசி சரி பண்ணுவோம்னு நினைச்சு தொட்டதுக்கு எல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போட்டு, வம்பிழுத்துக்கிட்டு இருக்காங்க! அதனால் இனிமேல் அவங்க சண்டையை அவங்களே பேசித் தீர்த்துக்கட்டும்னு விட்ருவோம்!”என்று தீர்க்கமாக உரைத்தார் பால்ராஜ்.

“அதே மாதிரி மதிக் கிட்டேயும் எதையும் சொல்லி வைக்காதீங்க! அது அப்படியே என் பையன் கிட்டே போய் அதுக்கப்புறம் அந்த விஷயம் உடனே மகிழுக் காதுக்குப் போயிடும்! அதான் சொல்றேன்”என்று அவருக்கு அறிவுறுத்தினார் ஆறுமுகம்.

“சரிங்க சம்பந்தி. உங்க சொல் படியே நாங்க நடந்துக்கிறோம்”என்றுரைத்து விட்டு மகிழம்பூவனுக்கு அழைப்பு விடுத்தார் பால்ராஜ்.

அதே நேரத்தில் தான், தங்களது இரு சக்கர வாகனத்தை மெல்ல இயக்கிச் சஹஸ்ராவிற்கு அந்த ஊர் முழுவதையும் சுற்றிக் காண்பித்து விட்டுக் கடைசியாகத் தங்களது பால் பண்ணையை அடைந்திருந்தார்கள் சிறியவர்கள்.

தனது செல்பேசி இசைப்பதைக் கேட்டதும், பண்ணையின் வெயிலில் வண்டியை நிறுத்தி விட்டு, அதை எடுத்துப் பார்த்தவனோ, தந்தையின் அழைப்பு என்றதும்,

”ஐயா தான் கூப்பிட்றார்”என்று தெரிவித்து விட்டு,

“நீங்க உள்ளே போங்க. நான் அப்பாகிட்டே பேசிட்டு வர்றேன்”என்று சஹஸ்ரா, வண்ணமதி மற்றும் பூபாலனுடன் செந்திலைப் பண்ணைக்குள் அனுப்பி வைத்து விட்டுச் செல்பேசி அழைப்பை ஏற்றுக் காதில் வைத்து,”ஹலோ”என்க,

“ஹலோ மகிழு! எல்லாரும் எங்கேப்பா இருக்கீங்க?”என்று மகனிடம் விசாரித்தார் பால்ராஜ்.

“அழகிக்கு ஊரைச் சுத்திக் காமிச்சிட்டு இப்போ தான் பண்ணைக்கு வந்திருக்கோம் ஐயா”என்று அவருக்குப் பதிலளித்தான் மகிழம்பூவன்.

“ஓஹ் சரிப்பா. நாங்க நாள் குறிச்சிட்டு வீட்டுக்கு வந்தாச்சு. நீங்க மதியச் சாப்பாட்டுக்கு இங்கே வந்திருங்கன்றதைச் சொல்லத் தான் உனக்குக் கூப்பிட்டேன்”என்றதும்,

“சரிங்க ஐயா. நாங்க வந்துட்றோம்”என்றவனிடம்,

“செந்திலைப் பத்திரமாகப் பார்த்துக் கூட்டிட்டு வாங்க”என அறிவுறுத்தி விட்டு அழைப்பை வைத்தார் பால்ராஜ்.

அவன் கூறிய விஷயத்தை அனைவருக்கும் அறிவித்து விட,

“அவங்க வர்றதுக்குள்ளே சமையல் வேலையைப் பார்த்து முடிக்கனும்”என்ற முல்லைக்கொடியிடம்,

“உங்களுக்குச் சமையலில் கூடமாட உதவி செய்றது மதி தானே? அவ இப்போ இங்கே இல்லை. அதனால் நான் உங்களுக்கு ஒத்தாசைப் பண்றேன்”என்று அவருக்கு உதவ முன் வந்தார் கஸ்தூரி.

“சரி வாங்க”என்றதும்,

“நீங்க மட்டும் ஏன் சமையலைப் பார்க்கனும்? நாங்களும் உங்களுக்கு ஏதாவது உதவி செய்யலாம்னு இருக்கோம்”என்றுரைத்தார் ஆறுமுகம்.

உடனே,”அப்போ காய் நறுக்கிக் கொடுத்துட்டு, வெங்காயத்தை எல்லாம் உரிச்சுக் கொடுங்க”என்று அவர்களுக்கும் வேலையைப் பிரித்து தந்து விட்டு அதற்குத் தேவையானவற்றையும் கொண்டு வந்து கொடுத்து விட்டு சமையல் வேலையைக் கவனிக்கப் போய் விட்டார்கள் முல்லைக்கொடி மற்றும் கஸ்தூரி.

இங்கே தங்களது பண்ணைக்குள் நுழைந்தவுடன் மகிழம்பூவனை மட்டுமின்றி, வண்ணமதி பூபாலன் மற்றும் சஹஸ்ராவை ஆரவாரத்துடன் வரவேற்றனர் அங்கேயிருந்த வேலையாட்கள் அனைவரும்.

இங்கே அவ்வப்போது வந்து சென்றாலும் கூடச் சஹஸ்ராவை நன்றாகவே அடையாளம் தெரிந்து வைத்திருந்ததால் அவளுக்கும் பவ்யமாக வணக்கம் வைத்து விட்டு அவர்களுக்குக் குடிக்கத் தேநீர் வாங்கி வந்து உபசரித்தார்கள்.

அவளோ அதைக் கண்டு மெச்சி விட்டு மற்றவர்களுடன் சேர்ந்து அங்கேயிருந்த அலுவலக அறைக்குள் பிரவேசித்தாள்.

“இவனை எவ்வளவு நேரம் தான் நீ கையில் வச்சிட்டு இருப்ப? உனக்குக் கை வலிக்கும் மதி. இவனை எங்கிட்ட கொடு”என்று மனைவியிடம் இருந்து மகனை வாங்கிக் கொண்டான் பூபாலன்.

“இவனுக்குப் பசிக்காதா? பால் பாட்டில் எடுத்துட்டு வந்திருக்கீங்களா?”என்று அவர்களிடம் செந்திலைக் காட்டி வினவினாள் சஹஸ்ரா.

“ம்ஹ்ம். எடுத்துட்டு வந்துட்டேன் அழகி. பசி வந்தால் அவனே அழுவான். அதனால் தான் என்னால் ஊருக்கு எல்லாம் போயிட்டு வர முடியுது”என்று அவளுக்குப் பதில் கூறினாள் வண்ணமதி.

இதை தான் இவ்வளவு மாதங்களாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கவில்லையே என்று முகம் கருத்துப் போய்,”ஓஹ். சரி”என்றுரைத்து விட்டு அந்த அலுவலக அறை முழுவதும் தனது கருவிழிகளைச் சுழல விட்டவாறே,

தனது இருக்கையில் இருந்து எழுந்து அங்கேயிருந்த பொருட்கள் மற்றும் கோப்புகளைப் பார்வையிடத் தொடங்கினாள் சஹஸ்ரா.

“மாமா கால் செஞ்சாங்கன்னு சொன்னியே மாப்பிள்ளை! என்ன சொன்னார்?”எனக் கேட்டான் பூபாலன்.

அதைக் கேட்டவுடனேயே தானும் தனது கவனத்தை அவர்கள் புறம் திருப்பினாள் சஹஸ்ரா.

“அதுவா மாமா? எங்க நிச்சயத்துக்குத் தேதி குறிச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டாங்களாம். மதியச் சாப்பாட்டுக்கு நாம மூனு பேரையும் வீட்டுக்கு வரச் சொன்னார். அப்பறம், செந்திலைப் பத்தி விசாரிச்சார்”என்றுரைத்தான் மகிழம்பூவன்.

அதில் ஆர்வம் மேலிட,”எந்த தேதின்னு ஏதாவது சொன்னாரா அப்பா?”என்று தம்பியிடம் வினவினாள் வண்ணமதி.

“இல்லக்கா. வீட்டுக்குப் போனால் தான் தெரியும்”என்று கூறி விடவும்,

அவளது ஆர்வம் முழுவதும் அப்படியே அடங்கிப் போய் விட்டது.

“ப்பா! ப்பா!”என்று தன்னைக் கீழே இறக்கி விடுமாறு தரையைக் காட்டிச் சைகை செய்தான் செந்தில்.

உடனே,”என்னப்பா கீழே இறங்கி விளையாட்றியா? சரி”என அவனைக் கொஞ்சி முத்தமிட்டு விட்டுக் கீழே இறக்கி விட்டான் பூபாலன்.

உடனே தனது பிஞ்சுக் கால்களை வைத்து அந்த அறையில் மெல்ல நடை போடத் தொடங்கினான் குட்டிப் பையன்.

அவனது தளிர் நடையைக் கண்டு மனம் இலேசாகிப் போனது அங்கே இருந்த நால்வருக்கும்.

அதேபோல்,”நான் கொஞ்ச நேரம் வெளியே போய்ப் பாலை விநியோகத்துக்கு எப்படி தயாராக்குறாங்கன்னுப் பார்த்துட்டு வர்றேன்”எனப் பொதுவாக கூறி விட்டு வெளியேறினாள் சஹஸ்ரா.

“என்ன இவ கிட்ட நிச்சயத் தேதி குறிச்ச சந்தோஷத்தையே காணோம்?”என்று கூறிப் பொருமினாள் வண்ணமதி.

“ஆரம்பிச்சிட்டியா?”என்று சலித்துக் கொண்டான் அவனது கணவன்.

உடனே,”ஐயோ சாமி! நான் எதுவும் பேசலைப்பா. விடுங்க”என்று அவனிடம் பொரிந்து விட்டு அமைதியாகிப் போன தமக்கையைக் கண்டுப் புன்னகைத்து விட்டு,

“நாம வந்து ரொம்ப நேரமாச்சு. மோர் இல்லைன்னா, வேற ஏதாவது குடிக்கிறீங்களா?”என்று அவர்கள் இருவரிடமும் கேட்டான் மகிழம்பூவன்.

“ம்ஹூம். வேண்டாம் மாப்பிள்ளை. அப்பறம் சாப்பாடு சாப்பிட முடியாது”என மறுத்து விட்டான் பூபாலன்.

உடனே,“எனக்கு மோர் வேணும்”என்றிருந்தாள் வண்ணமதி.

“சரிக்கா”என்றவனோ,

அங்கே எடுபிடி வேலை செய்யும் இளைஞனை அழைத்து ஒரு தம்ளரில் மோரைக் குடிக்கும் பதத்தில் கொண்டு வரச் சொல்லி அனுப்பினான் மகிழம்பூவன்.

இங்கே பண்ணையின் அனைத்து இடங்களையும் வலம் வந்து கொண்டே தனக்கும், மகிழம்பூவனுக்கும் நிச்சயத் தேதி குறித்து விட்டதை நினைத்து வேறொரு கோணத்தில் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தாள் சஹஸ்ரா.

ஆம்! தாங்கள் இருவருக்கும் திருமணத்திற்கான அனைத்து சடங்குகளும் விரைவாகவே நடக்கப் போவது அவளைப் பொறுத்தவரையில் அவளுக்கு மிகவும் சாதகமான ஒன்றாகும்!

அதனாலேயே, அதை எண்ணி மகிழ்ச்சி அடைந்து விட்டு, அங்கே பாலை அளந்து ஊற்றிக் கொண்டிருந்த வேலையாட்களின் ஒவ்வொரு செயல்களையும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாள் சஹஸ்ரா.

- தொடரும்
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top