வரம் 39

Advertisement

Writer girl

Well-known member
Member
அதாகப்பட்டது மக்களே!
கதை விரைவில் நிறைவடையப் போகிறது. நன்றி 🩵

வரம் 39

அவளது கேள்வியைக் கேட்டதும் அந்தக் களேபரத்திலும் அவளைப் பார்த்து வியந்து போயினர்.


தாங்கள் இன்னும் விஷயத்தையே கூறி இருக்கவில்லை அதற்குள்ளாகவே அவளவனுக்கு ஏதோ அனர்த்தம் நிகழ்ந்துள்ளது என்பதை அறிந்து கொண்டு விட்டிருக்கிறாளே? என்றெண்ணி விட்டார்கள் அனைவரும்.

“சொல்லுங்க! அவருக்கு என்னாச்சு?”என்றவளை ஆசுவாசப்படுத்தும் விதமாக,

”இங்கே பாரு அழகி! மகிழுக்கு எதுவும் ஆகலை! நீ முதல்ல நிதானமாக ஆகு. அப்போ தான் நாங்க உங்கிட்ட விஷயத்தைச் சொல்லுவோம்”என்றிருந்தார் முல்லைக்கொடி.

“சரிம்மா. நான் நிதானமாக இருக்கேன். இப்போ சொல்லுங்க”என்றவளோ தனது தாயைப் பார்க்க,

அவரின் முகமோ மிகுந்த கலக்கத்துடன் காணப்பட்டதால் தானும் அதே நிலையை அடைந்து விட்டிருந்தாள் சஹஸ்ரா.

ஆனாலும் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மற்றவர்களை ஏறிடவும்,

“மகிழோட வயித்துல காளை மாடு முட்டிடுச்சு”என்று அழுது கொண்டே அவளிடம் விஷயத்தை உரைத்து இருந்தாள் வண்ணமதி.

“என்னது? என்ன சொல்றீங்க மதி? அவர் இப்போ எங்கே இருக்கார்? நான் அவரைப் பார்க்கனும்? என்னைக் கூட்டிட்டுப் போங்க!”என்று அழுது அரற்றத் தொடங்கி விட்டாள் சஹஸ்ரா.

அதைக் காணச் சகிக்காமல்,”சஹாம்மா! அவனைச் சரியான நேரத்துக்கு ஹாஸ்பிடலில் கொண்டு போய்ச் சேர்த்துட்டாங்க! ட்ரீட்மென்ட் நடந்துட்டு இருக்கு! நாம உடனே போகலாம். வா”என்றதுமே,

அவர்கள் அனைவரும் சேர்ந்து காரில் மருத்துவமனையை நோக்கிப் பயணம் செய்தார்கள்.

அதே நேரத்தில் தாங்கள் இருவரும் மருத்துவமனைக்குள் நுழைந்து ரிசப்ஷனில் விவரம் கேட்டு விட்டு மகிழம்பூவனைப் பரிசோதித்துக் கொண்டிருக்கும் அறைக்குச் செல்லவும்,

அங்கே குறுக்கும், நெடுக்குமாக நடைபயின்று கொண்டிருந்த பூபாலனை,”மாப்பிள்ளை!”என்று அழைத்தவாறே அவனிடம் சென்று,

“இது எப்படி மாப்பிள்ளை ஆச்சு?”என்று அவனிடம் கண்ணீருடன் கேட்டார் பால்ராஜ்.

உடனே அவரிடம் தங்கள் மாட்டுப் பண்ணையில் இருக்கும் போது மகிழம்பூவனுக்கு எப்படி அடிபட்டது என்பதை விளக்கிக் கூறினான் பூபாலன்.

அதைக் கேட்டதும்,”நல்லவேளை மாட்டைக் கட்டிப் போட்டு வச்சிருந்தாங்க! இல்லைன்னா மாப்பிள்ளையோட நிலைமை என்னவாகி இருக்கும்? இப்போ டாக்டருங்க என்னச் சொல்றாங்க?”என்று அவனிடம் கலக்கமாக வினவினார் ரமணன்.

“ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்குங்க”என்று அவருக்குச் சோர்வாகப் பதிலளித்தான் பூபாலன்.

இதே வேளையில் அந்த மருத்துவமனைக்கு ஆறுமுகம், முல்லைக்கொடி, சஹஸ்ரா மற்றும் வண்ணமதியும், அவளுடன் செந்திலும் வந்து சேர்ந்து இருந்தார்கள்.

அங்கே வந்ததும், தனது தந்தையைக் கண்டதுமே,”அப்பா! அவருக்கு அடிபட்டு இருக்கு! வயித்துல…”என்று அவரது மார்பில் சாய்ந்து கொண்டு அழுது கரையத் துவங்கி விட்டாள் சஹஸ்ரா.

அவளைத் தொடர்ந்து தாங்களும் கண்ணீர் விட ஆரம்பித்து விட்டனர் அவர்களது மற்றக் குடும்ப உறுப்பினர்கள்.

அவர்களது அழுகைச் சத்தத்தைக் கேட்டதும்,”இங்கே பாருங்க. நீங்க எல்லாரும் இப்படி இங்கே நின்னு அழுது, சத்தம் போடக் கூடாது! உங்க வீட்டு ஆளைத் தவிர இங்கே மத்தப் பேஷண்ட்ஸூம் இருக்காங்க! அதனால் அழுகாமல் அமைதியாக இருங்க! இல்லைன்னா யாராவது இரண்டு பேர் மட்டும் இங்கே இருந்துட்டு மத்தவங்க எல்லாரும் வீட்டுக்குப் போங்க!”என்று அவர்களுக்கு அறிவுறுத்தி விட்டுச் சென்றார் செவிலியர்.

உடனே அனைவரும் தங்களது அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு அங்கேயிருந்த நாற்காலிகளில் அமர்ந்து கொண்டனர்.

தனது அழுத முகத்தைச் சுடிதார் துப்பட்டாவில் துடைத்துக் கொண்டு, மகிழம்பூவனுக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் அறையையே வெறித்துப் பார்க்கலானாள் சஹஸ்ரா.

உடனே அவளது அருகில் உட்கார்ந்து கொண்டு,”மாப்பிள்ளைக்கு எதுவும் ஆகாதும்மா. நம்பிக்கையோட இரு!”என்று அவளது கரத்தைப் பற்றி ஆறுதல் வார்த்தைகளை மொழிந்தார் கஸ்தூரி.

“ஆமாம்மா. அவருக்கு எதுவும் ஆகாது! ஆகவும் கூடாது! என்கிட்ட அவர் வந்து தான் ஆகனும்! நான் அவரைக் கல்யாணம் செய்துட்டு ரொம்ப வருஷம் நல்லா வாழனும்! நாங்க கண்டிப்பாக வாழுவோம்!”என்று அவரிடம் உறுதியாக உரைத்து விட்டுத் தெம்பாக நிமிர்ந்து அமர்ந்தவளைக் கண்டு அங்கேயிருந்த மற்றவர்களுக்கோ மிகவும் பிரம்மிப்பாக இருந்தது!

அவளது காதலைக் கண்டு அவளது குடும்ப உறுப்பினர்களுக்குப் புல்லரித்துப் போயிற்று.

இவளுக்காகவே மகிழம்பூவனுக்கு எதுவும் ஆகாமல் அவன் மீண்டு வந்து விட வேண்டும் என்று அனைவரும் மனமுருகிக் கடவுளிடம் பிரார்த்தனை வைத்துக் கொண்டார்கள்.

சில மணி நேரங்கள் கடந்ததும் மகிழம்பூவனை வைத்திருக்கும் அறையில் இருந்து வெளியேறிய மருத்துவரிடம் சூழ்ந்து கொண்டனர் அவனது குடும்பத்தினர்.

உடனே அவரும்,”அவரை நாங்கப் பரிசோதித்துப் பார்த்ததில் அவருக்கு வயித்துல சதைக் கிழிஞ்சு இருக்கு! அவ்வளவு தான்! ஆனால் நல்ல வேளையாக வயித்துக்குள்ளே குடல் பகுதியில் எந்தப் பாதிப்பும் ஆகலை! அதே மாதிரி, அதிகப்படியான ரத்தம் வெளியேறி இருக்கு. அதுக்குத் தேவையான இரத்தப் பிரிவு எங்ககிட்டேயே இருந்ததால் அதையே நாங்க அவருக்கு ஏத்திட்டோம். மத்தபடி வேறெந்தப் பாதிப்பும் இல்லைன்றதை உறுதி செஞ்சி சொல்லனும்ன்னா அவரோட வயித்தை எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கனும்”என்றிருந்தார்.

“சரிங்க டாக்டர். அதுக்கு இப்போவே ஏற்பாடு பண்ணுங்க. நாங்க எவ்வளவு பணம் வேணும்னாலும் கட்டிட்றோம்!”என்றுரைத்து இருந்தார் பால்ராஜ்.

“சரி. நர்ஸ் உங்களுக்கு மேற்படித் தகவல்களைச் சொல்லுவாங்க”என்று கூறி விட்டுச் சென்று விடவும்,

எக்ஸ்ரே பற்றிய தகவல்களையும், அதற்கு எவ்வளவு பணம் செலவாகும் என்பதையும் அவர்களிடம் விவரித்து முடித்தார் செவிலியர்.

உடனே அந்தப் பொறுப்பைத் தன்னகத்தே எடுத்துக் கொண்டுத் தானே பணத்தையும் கட்டி விட்டிருந்தார் ரமணன்.

மருத்துவரின் வார்த்தைகள் மேலும் தெம்பைக் கொடுத்து இருந்ததால் தன்னுடைய கைகளை இறுக்கமாக மூடிக் கொண்டு அமர்ந்து கொண்டாள் சஹஸ்ரா.

அதன் மூலமாகத் தனக்கு மன தைரியத்தை வரவழைத்துக் கொள்ள முயற்சித்தாள்.

அதைக் கண்டு கொண்டு அவளுக்கு மறுபுறம் வந்து அமர்ந்து, அவளது தோளில் தனது கரத்தை ஆதூரமாகப் படிய விட்டாள் வண்ணமதி.

அந்த மருத்துவமனையின் சூழல் பிடிக்காமல் அழுகையில் உதட்டைப் பிதுக்கத் தொடங்கிய பேரனைத் தூக்கிக் கொண்டு வெளியே சென்று விட்டார்கள் ஆறுமுகம் மற்றும் முல்லைக்கொடி.

இன்னும் சில நாட்களில் நிச்சயத்தார்த்தம் நடக்கப் போகிறது அதற்குள்ளாக மகிழம்பூவனுக்கு இப்படி ஆகி விட்டதே! நேரம், காலம் அல்லது பெண்ணின் ராசி என்றெல்லாம் பிற்போக்குத்தனமாக அங்கேயிருந்த யாருமே ஒரு வார்த்தைப் பேசி இருக்கவில்லை!

ஏனென்றால் இந்த விபத்துகள் எல்லாம் நடப்பது இயல்பான விஷயம். இதற்கு யாரும் காரணமாக இருக்கவும் முடியாது! யாரையும் குற்றம் சாட்டவும் கூடாது என்பதை மகிழம்பூவன் மற்றும் சஹஸ்ராவின் குடும்ப உறுப்பினர்கள் நன்றாகவே அறிந்திருந்தார்கள்.

அதனாலேயே அனைவரும் தாங்கள் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருந்தார்களே தவிர்த்து யாரையும் குற்றம், குறை சொல்லவில்லை!

“நான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து இருக்கனும்ல மாமா? நான் அவனை மாட்டுக்குப் பக்கத்தில் போக விடாமல் தடுத்து இருக்கனும்! நான் அவனை நல்லா பார்த்துப்பேன்னு நினைச்சுத் தானே நீங்க என்னை நம்பி அவனை எங்கூட இருக்க விட்டீங்க! ஆனால் என்னால் அதைச் சரியாகச் செய்ய முடியலை மாமா! என்னை மன்னிச்சிருங்க மாமா”என்று பால்ராஜ்ஜிடம் வருந்திக் கண்களில் கண்ணீர்த் துளிர்க்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டான் பூபாலன்.

“அட மருமகனே! விடுங்க! உங்களால் எதுவும் ஆகலை! இதுக்கு நீங்கன்னு இல்லை யாருமே காரணமாக முடியாது! ஏதோ கெட்ட நேரம்! அதான்! இது ஒரு திருஷ்டியாக இருந்துட்டுப் போகட்டும்! அவன் நல்லா எழுந்து வந்ததும் அவனும் இதையே தான் சொல்லுவான் பாருங்க!என்று அந்த நேரத்திலும் தனது மகனிற்கு நேர்ந்த இந்த விபத்திற்குத் தன் மருமகனைக் காரணம் காட்டிக் குற்றம் சுமத்தி அவன் மீது பழி போடாமல் நியாயவானாக நடந்து கொண்டார் பால்ராஜ்.

ஆனாலும் அவனது மனம் அமைதியடையவில்லை போலும்!

உடனே,”அண்ணி, நீங்க அண்ணன் கூடப் போய் இருங்க”என்று வண்ணமதியிடம் கூறி அவளை அவளது கணவனிடம் அனுப்பி வைத்தாள் சஹஸ்ரா.

இந்த நேரத்திலும் தங்களது குடும்பத்து இளையவர்கள் தாங்கள் ஒருவருக்கு ஒருவர் துணையாக நிற்பதைக் கண்டு நிம்மதியுற்றார்கள் அவர்களைப் பெற்றவர்கள்.

இங்கே தனது கணவனிடம்,”நீங்க எதையும் நினைச்சு வெசனப்படாதீங்க! உங்களால் எதுவும் நடக்கலை! ஏதோ பெருசா வர இருந்தது சின்னதாக வந்துடுச்சுன்னு நினைச்சுக்கலாம்! அது தான் எக்ஸ்ரே எடுக்கிறாங்கள்ல? அதில் எல்லாம் தெரிஞ்சிடும்! அவனுக்கு எல்லாம் ஒன்னும் ஆகாதுங்க!”என்று அவனுக்கு நம்பிக்கை அளித்தாள் வண்ணமதி.

உடனே அவளது கரத்தை எடுத்து தனது கண்களில் ஒற்றிக் கொண்டு விடுவித்தான் பூபாலன்.

இவர்களது அனைத்து உணர்வுப்பிரவாகங்களையும், தனக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் அறியாமல் எக்ஸ்ரே எடுக்கும் அறைக்குக் கொண்டுச் செல்லப்பட்டிருந்தான் மகிழம்பூவன்.


- தொடரும்
 

Advertisement

Advertisement

Back
Top