வரம் 40

Advertisement

Writer girl

Well-known member
Member
அங்கே அவனுக்கானப் பரிசோதனைகள் துரிதமாக நடக்கத் தொடங்கி விடவும், இவ்வளவு நேரமாக அனைவரும் எதுவுமே உண்ணாமல், குடிக்காமல் இருக்கிறார்கள் என்றும், ஏதாவது சூடாக குடித்தால் நன்றாக இருக்கும் என்றும் எண்ணிக் கொண்டு,

“நான் எல்லாருக்கும் குடிக்க டீ வாங்கிட்டு வர்றேன்”எனத் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவாக கூறி விட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறிச் சென்றான் பூபாலன்.

அங்கே தனது தந்தையும், தாயும், தனது மகனைப் பார்த்துக் கொண்டு இருப்பதைக் கண்டதும், அவர்களிடம் சென்று மகிழம்பூவனுக்கு எக்ஸ்ரே எடுக்கும் விஷயத்தைப் பகிர்ந்து விட்டு,”டீ வாங்கிட்டு வர்றேன்ப்பா, ம்மா”என்று அவர்களிடம் கூறவும்,

தன்னுடைய தந்தை வெளியே செல்லப் போகிறார் என்பதை அறிந்து விட்டு,”நானு…வதேன்”என்று அவனிடம் தாவினான் செந்தில்.

உடனே,”இவனையும் கூட்டிட்டுப் போயிட்டு வா. நாங்க உள்ளே போய் அவங்களுக்குத் துணையாக இருக்கோம்”என்று குழந்தையைப் பூபாலனிடம் கொடுத்து அனுப்பி விட்டு மருத்துவமனைக்குள் சென்றார்கள் ஆறுமுகம் மற்றும் முல்லைக்கொடி.

அங்கு அனைவரும் களையிழந்த முகத்துடன், மிகவும் சோர்வுடன் காணப்பட்டதைப் பார்த்ததும் மனம் கனத்துப் போயிற்று இருவருக்கும்.

உடனே பால்ராஜ் மற்றும் ரமணனின் அருகில் சென்று மேற்படி விவரத்தைக் கேட்கத் தொடங்கினார் ஆறுமுகம்.

அதேபோல், பெண்களிடம் வந்து அமர்ந்து கொண்டு அவர்களுக்குத் தைரியமும், நம்பிக்கையும் அளிக்கும் வகையில் பேசினார் முல்லைக்கொடி.

அப்போது எக்ஸ்ரே எடுக்கும் அறையிலிருந்து வெளியே வந்தச் செவிலியரோ அங்கேயிருந்த அனைவரையும் பார்த்து விட்டு,”மகிழம்பூவனோட ஃபேமிலி மெம்பர்ஸ் யாரு?”என்றிருக்க,

“நாங்க தான் மேடம்”என்றுரைத்தார் ரமணன்.

உடனே அவரிடம் சென்று மகிழம்பூவன் அணிந்திருந்த தங்கச் செயின், மோதிரங்கள் மற்றும் கையில் போட்டிருந்த காப்பைக் கொடுத்து விட்டுப் போனார்.

“மாமா! அந்தக் காப்பை மட்டும் எங்கிட்ட தர்றீங்களா?”என்று பால்ராஜ்ஜிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டாள் சஹஸ்ரா.

அவளது வேண்டுதலுக்குச் செவிமடுத்து தனது மகனின் ஐம்பொன் காப்பை அவளிடம் சேர்ப்பித்து விட்டார் பால்ராஜ்.

அதை தனது கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டு வாய்க்குள்ளேயே எதையோ முணுமுணுக்கத் தொடங்கி விட்டிருந்தாள் சஹஸ்ரா.

அதைக் கண்ட மற்றவர்களுக்கோ அவளது வேண்டுதல் வீண் போகக் கூடாது என்ற எண்ணம் மேலோங்கியது.

அதே சமயம் மருத்துவமனையில் இருந்து சிறிது தூரம் கழித்து இருந்த தேநீர்க் கடையில் தேநீர்ப் பார்சல் மற்றும் அதற்கான பேப்பர் கப்புகளையும் வாங்கிக் கொண்டவனோ, அதில் தொட்டுச் சாப்பிட பன்கள் மற்றும் பிஸ்கட்டுகள் சிலவற்றையும் வாங்கிக் கொண்டு மகனுக்குத் தீனியும் வாங்கி விட்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான் பூபாலன்.

பால்ராஜ்ஜிற்கு இப்போதைய நேரத்தில் ஒரு பிடிப்புத் தேவைப்படவே அவனிடமிருந்து தனது பேரனை வாங்கிக் கொண்டார்.

அதேபோல் தனது கணவனிடம் இருந்த தேநீர்ப் பார்சலை வாங்கி அதிலிருந்த தேநீரைக் கப்புகளில் ஊற்றி அவற்றை மற்றவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தாள் வண்ணமதி.

அனைவருக்கும் அது தேவைப்பட்டதாலேயே மறு பேச்சின்றி வாங்கிப் பருகத் துவங்கினர்.

ஆனால் சஹஸ்ராவோ,”எனக்கு இப்போதைக்கு எதுவும் வேண்டாம் மதி”என்று மறுக்கவும்,

“ப்ச்! குடி அழகி! அவன் கண்ணு முழிச்சதும் போய்ப் பார்க்கத் தெம்பு வேண்டாமா? இந்தா”என்று அவளைத் தேநீரைப் பருகச் செய்து விட்டு அவளும், அவளது கணவனும் தங்களுக்கும் ஒரு தேநீர்க் கோப்பையை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தார்கள்.

இடையிடையே தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குப் பன் மற்றும் பிஸ்கெட்டுகளையும் கொடுத்து உண்ண வைத்து விட்டிருந்ததால் அவர்கள் அனைவரும் கொஞ்சம் திடமாக உணர்ந்தனர்.

ஒரு மணித்தியாலங்கள் கடந்ததும் மகிழம்பூவனுக்கு எக்ஸ்ரே எடுத்து முடித்து விட்டு அதைப் பார்வையிட்டு விட்டு அவனது குடும்ப உறுப்பினரைத் தனது அறைக்கு அழைத்திருந்தார் மருத்துவர்.

உடனே அனைவருமே அவரது அறையை ஆக்கிரமித்து விடவும்,“இவ்வளவு பேர் வேண்டாம். யாராவது ரெண்டு பேர் மட்டும் இருங்க”என்றதுமே,

“நானும், சஹாவும் இருக்கோம்”என்றுரைத்து விட்டுத் தனது வருங்கால மருமகளைப் பார்த்தார் பால்ராஜ்.

அவளோ அவரது கூற்றைக் கேட்டதும் அவரை நன்றிப் பெருக்குடன் பார்த்து விட்டுத் தனது பெற்றோரைப் பார்க்க,

அவர்களும் கூட அதற்குச் சம்மதமாகத் தலையாட்டி விட்டு மற்றவர்களை அழைத்துக் கொண்டு மருத்துவரின் அறையிலிருந்து வெளியேறி விட்டார்கள்.

“உட்காருங்க”என்ற மருத்துவரின் வார்த்தைக்கு மதிப்பளிக்கும் வகையில் நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு அவரை மிகுந்த எதிர்பார்ப்புடன் நோக்கினர் பால்ராஜ் மற்றும் சஹஸ்ரா.

“மிஸ்டர். மகிழம்பூவனுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை! அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் அவரோட வயிற்றுப் பகுதியிலும், குடல் பகுதியிலும் எந்தப் பாதிப்பும், இரத்தக் கட்டியும், இரத்தக் கசிவும்ன்னு எதுவுமே இல்லை! மாட்டோட கொம்பு அவரோட மேல் வயிற்றை மட்டும் தான் கிழிச்சு இருக்கு! அதனால் ஏற்பட்ட இரத்தப் போக்குக்காகத் தான் இரத்தம் ஏத்தினோம். மத்தபடி அதனால் அவருக்கு எந்தப் பாதிப்பும் வரலை! ஆனால் கொஞ்ச நாளைக்கு இங்கே வச்சுப் பார்த்துட்டு அவர் நல்லா குணமானதும் அதுக்கப்புறம் அவரை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனீங்கன்னா நல்லது!”என்ற அவரது தெளிவான உரையைக் கேட்ட பின்னர் தான், இவர்கள் இருவருக்கும் பதட்டமும், நடுக்கமும் அடங்கி விட்டிருந்தது.

“ரொம்ப நன்றிங்க டாக்டர்!”எனக் கண்களில் நீர் நிறைய அவரிடம் நன்றி தெரிவித்தார் பால்ராஜ்.

“பரவாயில்லைங்க ஐயா. ஒரு மணி நேரம் கழிச்சு அவரை நார்மல் வார்டுக்கு மாத்திடுவோம். அதுக்கப்புறம் அவரைப் போய்ப் பார்க்கலாம். ஆனால் எல்லாரும் ஒரே நேரத்தில் போய்ப் பார்க்காதீங்க! ரெண்டு, ரெண்டுப் பேராகப் போய்ப் பாருங்க”என்று கூறி இருவரையும் அனுப்பி வைத்தார் மருத்துவர்.

அவர் கூறியவற்றைக் கேட்ட பின்னரும் கூட எந்தப் பிரதிபலிப்பும் காட்டாமல் அமைதியாகவே இருந்தாள் சஹஸ்ரா.

அதை விசித்திரமாகப் பார்த்து விட்டு,”அது தான் அவனுக்கு எதுவும் ஆகலையேம்மா? நீ ஏன் இப்படி இருக்கிற?”என்று அவளிடம் அக்கறையுடன் விசாரித்தார் பால்ராஜ்.

“அதைப் பத்தி டாக்டர் சொன்னதைக் கேட்டதுமே எனக்கு ரொம்பவே நிம்மதியாக இருந்துச்சு மாமா! ஆனால் நான் அவரை என் கண்ணால் பார்க்கிற வரைக்கும் எனக்கு மனசு நிலையாக இருக்காது மாமா! அதனால் தான் இப்படி இருக்கேன்! என்னைத் தப்பாக எடுத்துக்காதீங்க மாமா!”என்றவள் தனது மகனின் மேல் வைத்திருக்கும் நேசத்தைக் கண்டு நெகிழ்ந்து போய்,

“சரிடாம்மா. நான் உன்னை எப்பவும் தப்பாக நினைக்கவே மாட்டேன்!”என்று அவளை உச்சி முகர்ந்து விட்டுத் தங்களது குடும்ப உறுப்பினர்களிடம் மருத்துவர் கூறியதை தெரிவித்தார் பால்ராஜ்.

மகிழம்பூவனுக்கு இனிமேல் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதைக் கேட்டவுடன் தான் அவர்களுக்குமே மனம் ஆசுவாசம் அடைந்தது!

“நம்மளோட குல தெய்வம் தான் காப்பாத்தி இருக்கு!”என்றுரைத்துக் கொண்டுத் தனது கைகளைச் சேர்த்துக் குமித்து வானத்தைப் பார்த்து நன்றி கூறிக் கொண்டார் கஸ்தூரி.

“ஹப்பாடா! என் தம்பிக்கு ஒன்னும் ஆகலை! அவனுக்கு எப்படி ஏதாவது அசம்பாவிதம் ஆகும்? அவன் நல்ல மனசுக்கு நூறாயிசுக்கு நல்லா இருப்பான்!”என்று மனதாரச் சொன்னாள் வண்ணமதி.

அதேபோல் தன்னுடைய கவனக் குறைவால் தான், தனது மாப்பிள்ளைக்கு இப்படியொரு அசம்பாவிதம் நடந்து விட்டிருக்கிறது என்றக் குற்ற உணர்வில் ஆட்கொண்டு இருந்த பூபாலனுக்கும் மனம் இப்போது தான் இலேசாகிப் போனது.

“இவங்க ரெண்டு பேரோட ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து ஊரே கண்ணுப் போட்ருச்சு! அதேன் இப்படி திருஷ்டி ஆகிடுச்சுப் போல! மகிழு வீட்டுக்கு வந்ததும் இரண்டுப் பேருக்கும் உப்பையும், வர மிளகாயையும் வச்சுத் திருஷ்டி சுத்திப் போடனும்”என்று திட்டவட்டமாக உரைத்த இருந்தார் முல்லைக்கொடி.

“அது தான் இன்னும் கொஞ்ச நேரத்தில் மாப்பிள்ளையை வேற அறைக்கு மாத்திடுவாங்கள்ல? அதுக்குள்ள நீங்க எல்லாரும் வீட்டுக்குப் போய் முகத்தைக் கழுவிக் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துட்டு வாங்க”என்று பெண்களிடம் அறிவுறுத்தினார் ஆறுமுகம்.

“எல்லாருமே போயிட்டு வரலாம். இங்கே இருக்கிற ரிசப்ஷன் நம்பரை வாங்கிட்டேன். மகிழுக் கண்ணு முழிச்சதும் அவுகளை எனக்குக் கூப்பிடச் சொல்லி இருக்கேன்! அதனால் நாம எல்லாரும் வீட்டுக்குப் போயிட்டுத் துணியை மாத்திட்டு, முகத்தைக் கழுவிட்டு வந்துடலாம். வாங்க”என்று அனைவரிடமும் வலியுறுத்தினான் பூபாலன்.

உடனே தான் எங்கேயும் வரவில்லை என்று அடம் பிடித்த சஹஸ்ராவையும் அதட்டித் தங்களுடன் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஓய்வெடுக்க வைத்து விட்டுத் தான் மீண்டும் மருத்துவமனையை அடைந்திருந்தார்கள்.

அங்கே சில நிமிடங்களுக்கு முன்னர் தான், மகிழம்பூவனை நார்மல் வார்டுக்கு மாற்றி இருந்தனர்.

அதனால் ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து அவனைச் சென்றுப் பார்க்குமாறு அறிவுறுத்தி விட்டுப் போயிருந்தார் செவிலியர்.

அதனாலேயே அந்த அறையின் கதவையே எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் மகிழம்பூவனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும்.

அதிலேயும் தனது கரத்தில் இருந்த தன்னவனின் காப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அவனை வைத்திருந்த அறையின் கதவையே ஏக்கத்துடன் ஏறிட்டுக் கொண்டிருந்தாள் சஹஸ்ரா.

நொடிகள் நிமிடங்களாக கரைந்து போக, ஒருவழியாக அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு வந்து,”நீங்க எல்லாரும் இப்போ இரண்டு, இரண்டுப் பேராக உள்ளே போய் அவரைப் பார்க்கலாம்”என்று அவர்களுக்கு அனுமதி வழங்கி விட்டுச் சென்று விட்டார் செவிலியர்.

உடனே தாங்கள் அனைவரும் ஒரு சேர பால்ராஜ் மற்றும் சஹஸ்ராவைப் பார்க்க,

ஆனால் அவளோ,“நான் அவரைக் கடைசியாகப் பார்க்கப் போறேன்! நீங்க எல்லாரும் முதல்ல போய்ப் பார்த்துட்டு வாங்க”என்று கூறி அவர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தாள்.

“நீ என்னச் சொல்ற சஹா? நீ தானே முதல்ல போய்ப் பார்க்கனும்னு ஆசைப்படுவ?”என்று அவளிடம் வினவினார் ரமணன்.

“இருக்கட்டும்ப்பா. டாக்டர் பேசக் கூப்பிடும் போது நீங்க எல்லாரும் என்னை அனுப்பி வச்சீங்க! அதுவே போதும்! அவரைப் பார்க்க நீங்க எல்லாரும் கூட ரொம்ப நேரமாக காத்திருக்கீங்க! அதனால் நீங்க எல்லாரும் போய்ப் பார்த்துட்டு வாங்க. நான் வெயிட் பண்றேன்”என்றுரைத்து விட்டவளுக்குத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள நேரம் தேவைப்பட்டது அதனால் தான் தனது குடும்பத்திடம் இப்படிக் கூறி விட்டிருந்தாள் சஹஸ்ரா.

அவளது வார்த்தைகளை மதிக்கும் விதத்தில் மகிழம்பூவனைப் பார்ப்பதற்கு அவனை அனுமதித்து இருக்கும் அறையின் கதவைத் திறந்து கொண்டு முதலில் உள்ளே நுழைந்தார்கள் பால்ராஜ் மற்றும் வண்ணமதி.

அறையின் கதவைத் திறந்து யாரோ உள்ளே வரும் அரவத்தைக் கேட்டதுமே தனது விழிகளை மெல்லத் திறந்து கொண்டான் மகிழம்பூவன்.


- தொடரும்
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top